மற்றவை நேரில் —1 to 4

23840-krishna2bon2bshoulder

ஹே, ஜகத்ப்ரபோ ,நாராயணா, வாசுதேவா, கிருஷ்ணா , பத்மநாபா ,முகுந்தா, கோவிந்தா ,மாதவா , ஜனார்தனா , க்ஷீரசாகரசயநா , வைகுந்தவாசா ,

ஆயிரம்பெயர் உடையாய் ,

அடியேன் இதுவரை எடுத்துள்ள பிறவிகள் ——-இவற்றுக்கு கணக்கே இல்லை

உனக்கு உள்ள பெயர்களுக்கும் கணக்கே இல்லை

ஒருவிதத்தில் நான் உன்னை மிஞ்சிவிட்டேன் —எப்படி என்கிறாயா ? உனக்கு உள்ள பெயர்களைவிட , நான் எடுத்த பிறவிகள் அதிகம், மிக அதிகம் , ஆனால்

அடியேனின் பிறவி இத்துடன் முடிகிறது — அகலகில்லேன் என்று உன் திருமார்பில் உறையும் ஸ்ரீ மகாலக்ஷ்மியின் திருவடிகளையும் வேதங்களும் தேடும் உன் திருவடிகளையும் சரணம் என்று அடைந்துவிட்டேன் அல்லவா —ஆசார்யன் மூலமாக அடைந்துவிட்டேன் அல்லவா

இந்த பிறவியின் மீதியுள்ள காலம் சுமையாக வருத்துகிறது

உன்னை அடையும்வரை இப்படி எழுதிக்கொண்டே இருக்கிறேன்

மற்றவை நேரில்

மற்றவை நேரில் —2

ஹே, ரங்கநாத திவ்ய மஹிஷி

ஹே, ரங்கநாத ப்ரிய மஹிஷி

ஹே, ஸ்ரீ வத்ஸகுல கல்பவல்லி

ஹே , ஸ்ரீ ரங்கநாயகி

ஹே, ப்ருகுவம்ஸ ப்ரீயே

ஹே, பார்கவி

ஹே, ஸ்ரீ தேவநாத திவ்ய மஹிஷி

ஹே –ஹேமாப்ஜ வல்லீ

ஹே, வரதராஜ திவ்ய மஹிஷி

ஹே, பெருந்தேவி பிராட்டியே

ஹே, ஸ்ரீ வேங்கட நாயகி

ஹே, ஸ்ரீ பத்மாவதி

ஹே , இன்னமுத்த்திருமகளே

சாம வேதம் ” ஹா ……..உஹா …..” என்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது

ருக் வேதம் உங்கள் புகழைப்பாடிக்கொண்டே இருக்கிறது

யஜூர் வேதம் கம்பீரமாகக் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது

அதர்வண வேதம் அருமையாகச்சொல்லப் படுகிறது

திவ்ய பிரபந்தங்கள் இனிமையாக ஓதப்படுகின்றன

ஸ்வாமி தேசிகனின் ப்ரபந்தம் கம்பீரமாகச் சேவிக்கப்படுகிறது

சங்கீத ராகங்கள் , வீணையின் ஒலிகள் , பிற வாத்யங்களின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன

இவற்றின் நடுவே அடியேனின் கொச்சை வார்த்தைகளையும் கேட்கக் கூடாதா ?

ஹே, கருணா ஸமுத்ரமே ,

கணக்கிலாத ஜீவன்களை உன் கடைக்கண்ணால் தேற்றி , எம்பெருமானிடம் சிபாரிசு செய்கிறாயே

அடியேன் … உன் வம்சத்தைச் சேர்ந்தவன் அல்லவா

அடியேனை ஒதுக்கலாமா

உன்னை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை அடைய முற்படுகிறேன்

அடியேன் செய்துள்ள பாவங்கள் சொல்லி மாளாது

அடியேன் ஏழை , காப்பார் இல்லை , கடைத்தேற்றுவார் இல்லை

திவ்ய தம்பதிகளாகிய உங்களையே நம்பிச்சரண் புகுகிறேன்

நீ பகவானிடம் சிபாரிசு செய்வாய் என்று நம்பி

பகவானின் திருவடிகளை பற்றுகிறேன்

மற்றவை நேரில்

மற்றவை நேரில்—3-

ஹே , ஸ்ரீயபதே ,

உன்னுடைய சந்நிதியில்

குத்து விளக்கு இருக்கிறது

உயரமான குத்து விளக்கு, திரி இடப்பட்டு , நெய் சேர்க்கப்பட்டு , ஏற்றப்பட்டால்

குத்துவிளக்கு ஒளியில் , உன்னை , பக்திப் பரவசத்துடன் தரிசிக்க முடிகிறது

இந்தத்தரிசனம் , அடியேனுடைய “சக்ஷுஸ் “( கண் ) பார்வை சரியாக இருக்கும் வரைதான் .

ஆனால் , அடியேன் கண் பார்வை தீக்ஷண்யமாக இருக்கும்போது , தீயதை நோக்கித்தான் , பார்வை போகிறது.

பகட்டை நோக்கித்தான் பார்வை போகிறது . படக் காட்சிகளை நோக்கித்தான் பார்வை போகிறது

பரந்தாமா , உன்னைப் பார்க்க , உன்னைத் தரிசிக்க மனம் ஈடுபடுவதில்லை . அதனால் அடியேனின் கண்ணும்

உன்பக்கமே திரும்புவதில்லை

கண்பார்வை மங்க, மங்க, கண்ணன் எங்கே என்று தேடுகிறேன்.

கைவிளக்கு கேட்டேன் —

உன் சந்நிதியில் உன்னைத் தரிசிக்க

அர்ச்சகரைக் கேட்கிறேன் , கைவிளக்கு எங்கே என்று !

அர்ச்சகர் , கைவிளக்கை உனக்கு சமர்ப்பித்து , தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லும்போது

உன் அழகில் மெய்மறந்து போகாமல் , உன் திருவாபரணங்களைப்பார்த்து ” ஹா , என்ன அருமையான ஆபரணங்கள் ” என்று

மெய்சிலிர்க்கிறேன்.

தீவட்டி கேட்டேன்

அடியேனின் கூடவே பிறந்த கண், காது, கை போன்ற அவயவங்கள்

அடியேனின் சொல்படி கேட்காமல் , முரண்டு செய்யும்போது

உன் சந்நிதியில் நின்றுகொண்டு , அர்ச்சகரைக் கேட்கிறேன்

தீவட்டி எங்கே என்று !

நீ சந்நிதிக்கு வெளியே எழுந்து அருளும்போதுதான் தீவட்டி சமர்ப்பிக்கப்படும் என்கிறார்

நீ சந்நிதிக்கு வெளியே எழுந்து அருளும்போது

உன்னைத் தரிசிக்கக் காத்திருக்கிறேன் .

நீயும் ஒருநாள் எழுந்து அருளுகிறாய்

ஆனால்

பக்தர்கள் கூட்டம் அடியேனைத் தள்ளுகிறது ; அடியேன் கீழே விழுகிறேன்

பக்தர்களின் பாதங்கள் அடியேனின் முதுகில் பதிகிறது

தலையைத் தூக்கி , உன்னை ஏக்கத்துடன் பார்க்கிறேன், தரிசனம் செய்ய

ஆஹா, உன் அர்ச்சாவதார சேவையை என்னவென்று சொல்ல !

உன்னைத் துதிக்கத் தெரியவில்லை —

ஆழ்வார்களின் பாசுரங்களும் தெரியாது

ஆசார்யர்களின் ஸ்ரீசூக்திகளும் தெரியாது

ஆனாலும் உன்னைத் துதிக்கிறேன்

ஆயிரமாயிரம் திருநாமமுள்ள உன்னைத் துதிக்க

உந்தன் ஒரு நாமம் போதாதா ?

அச்யுதா ! அடியவர்க்கு மெய்யனே !

மற்றவை நேரில்

மற்றவை நேரில் –4

ஹே , மஹா தேவி , மஹா பிரபோ —–!

அரிதாக மானிடப் பிறவியைக் கொடுத்து இருக்கிறாய் !

கூன் குருடு செவிடு இன்றிப் படைத்து இருக்கிறாய் !

ஹிந்து தர்மத்தில் ஈடுபட வைத்து இருக்கிறாய் !

வைணவத்தில் திளைக்க வைத்து இருக்கிறாய் !

ஆழ்வார்களையும் , ஆசார்யர்களையும் காட்டி இருக்கிறாய் !

முக்யமாக ,ஸ்வாமி தேசிகனைக் காட்டித் தந்து இருக்கிறாய் !

ஆனால்

சுடுமொழி பேசி பாவம் செய்யலாமா —-?

அடுத்த பிறவி , பறவை ஆகப் பிறக்கலாமா —-?

மனத்தால் கெடுதல் நினைக்கலாமா —-?

அடுத்த பிறவி மிருகமாகப் பிறக்கலாமா —–?

அவயவங்களால் கெடுதல் செய்யலாமா —-?

மரங்களாகப் பிறக்கலாமா —–?

இப்படி மரமாகவும் மிருகமாகவும் பறவை ஆகவும் பிறக்கவா

இந்தப் பிறவியை எடுத்தேன் —-?

இல்லை, இல்லவே இல்லை ———-!

ஹே திவ்ய தம்பதியரே

இந்த உலகில்

வாயாலும் மனத்தாலும் உடலாலும் , உன்னையே பேசி நினைத்து

உன்னைத்தேடிக் காற்களால் நடந்து உன் கோவிலுக்கு வந்து

உனக்கு தெண்டனிட்டு உன்னை வணங்கி உனக்கே கைங்கர்யம் செய்ய அருள் செய் –!

சகல கைங்கர்யங்களும் செய்ய அருள்வாயாக —–!

மற்றவை நேரில்