
ஸ்ரீமத் ராமாயணமும் , நாமும்
—————————————————-
ஸ்ரீமத் ராமாயணமும், நாமும் என்கிற தலைப்பில், ஸ்கைப்பில் , 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தில்
உபந்யாஸம் செய்திருக்கிறேன். இது அடியேனுடைய வெப்–சைட்டிலும் , யூ –ட்யூப்பிலும் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, அடியேனைத் தேடி வந்த ஆப்தர்கள், அடியேனின் உபன்யாஸம் வித்யாசமான முறையில் உள்ளது என்றும், ஸ்ரீமத் ராமாயணத்தை —கதா ப்ரஸங்கமாகச் சொல்லாமல், நவீன உத்தியில் சொல்லி இருப்பதாயும் , இது எழுத்து வடிவில் , வெளியிட்டால், மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும்,
குறைந்த பக்ஷம், இண்டர் –நெட்டிலாவது எழுதுமாறும் வேண்டினார்கள்.
28–03– 2015 — சனிக்கிழமை —ஸ்ரீ ராம நவமி.
இதை உத்தேசித்து, உபன்யாசத்தில் இருப்பதைப்போலவே இல்லாமல்( உபன்யாசத்தில் பேசுகிறோம் ) , எழுத்து வடிவில் எப்படிக் கொடுக்க வேண்டுமோ அந்த முறையில் , கொஞ்சம் கொஞ்சமாகப் பல பகுதிகளாக எழுதத் தொடங்குகிறேன்
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்கிதாம் வரம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்
புநர்வஸு என்றாலே, இரட்டை—இரண்டு—ஸ்ரீமத் ராமாயணத்தையும், வால்மீகி மஹ ரிஷியையும் பிரிக்க முடியாது. அதனால், திவ்ய தம்பதிகளான ஸ்ரீ சீதா ராமனுக்கும், ஸ்ரீமத் ராமாயணத்தை இயற்றிய அந்த வால்மீகி மஹரிஷிக்கும் நமஸ்காரம்.
இந்தத் தலைப்பு , மிக முக்கிமானது. இது மூன்று பிரிவுகளாகப் பிரித்து எழுதப்படுகிறது.
முதல் பிரிவு—–ஸ்ரீமத் ராமாயணத்தின் பெருமைகள் —இது அளவிட இயலாதது. நாள்பூராகச் சொல்லிக்கொண்டே இருந்தாலும், சிறு வயசு முதலே சொல்ல ஆரம்பித்தாலும் –சொல்வதற்கு ஒரு ஜன்மம் போதாது. ஆதலால் முடிந்தவரை சொல்லி,
இரண்டாவது பிரிவு—நாமும்—–என்பதில் , நம்மைப் பற்றிய விஷயங்கள்—-பெரும்பாலும் சிறுமைகள் இவற்றைச் சொல்லி,
மூன்றாவது பிரிவில், சிறுமைகள் மறைய, பெருமைகள் வளர, நாம் செய்யவேண்டியவை எவை; இராமாயண கதாபாத்ரங்களில் யாரைப் பின்பற்றவேண்டும், யாரைப் பின்பற்றக்கூடாது என்பன போன்ற விவரங்களைச்
சொல்ல உத்தேசிக்கப் பட்டுள்ளது.
முதலில் யுகங்கள், அவை எத்தனை மனுஷ்ய வருஷங்கள், ஒவ்வொரு யுகத்திலும், பகவானின் பத்து அவதாரங்களின் விவரம் இவற்றைப் பார்ப்போம்.
1.க்ருத யுகம்—- 17, 28,000 வருஷங்கள்—- இதில் பகவானின் மச்ச , கூர்ம , வராஹ , ந்ருஸிம்ஹ , வாமன அவதாரங்கள். ( மனுஷ்ய ஆயுள்—லக்ஷம் வருஷம் )
2.த்ரேதா யுகம் —-12, 96,000 வருஷங்கள்—–பரசுராம, ஸ்ரீ ராமாவதாரங்கள் ( மனுஷ்ய ஆயுள்–பத்தாயிரம் வருஷம் )
3.த்வாபர யுகம்—-8,64,000 வருஷங்கள்–பலராம, ஸ்ரீ க்ருஷ்ண அவதாரங்கள் ( மனுஷ்ய ஆயுள்–ஆயிரம் வருஷம் )
4.கலி யுகம்—– 4,32,000 வருஷங்கள் –ஸ்ரீ கல்கி அவதாரம் ( மனுஷ்ய ஆயுள்— நூறு வருஷம் )
ஸ்ரீ ராமாவதாரம் , த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது ; ஸ்ரீமத் ராமாயணம் அவதரித்தது.
இந்த ஸ்ரீமத் ராமாயணத்தில் , இரண்டு முக்ய தர்மங்கள் சொல்லப்படுகின்றன.
1. சாமான்ய தர்மம் —-பித்ரு வாக்ய பரிபாலனம்
2. விசேஷ தர்மம் —ஆரண்யத்தில் அவரவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, சரணாகத ரக்ஷணம் செய்தது.
தபஸ்வி வேஷத்தில், ஆயுதம் தாங்கி, பக்தர்களை—சரணாகதர்களைக் காப்பாற்ற, ஸ்ரீ ராமன் நடந்து வருகிறான்.
ஆச்ரிதபரதந்த்ரன். தபஸ்வி வேஷம் தரித்தாலும், கையில் ஆயுதம்.
இந்த இதிஹாசம் , ப்ரஹ்மாவால் அனுக்ரஹிக்கப்பட்டு, ஸ்ரீ வால்மீகி மஹரிஷிக்கு உபதேசிக்கப்பட்டது.
தர்ம உபதேசத்தை இதிஹாசமாகச் சொல்வது. க்ரந்த வடிவில் சொல்வது. இது இதிஹாசம்—
நடந்ததை, நடந்தபடியே, எதையும் மறைக்காமல் அப்படியே சொல்வது. இது, நம்முடைய பாரத தேசம், தாய்லாந்து, இலங்கை,மலேஷியா ,இந்தோனேஷியா ரகுவம்சம், சிங்கப்பூர், நேபாளம். மற்றும் பல தேசங்களில் பல வடிவங்களில் பரவி இருக்கிறது.
ஸ்ரீ குலசேகராழ்வார் , இராமாயண சாரத்தை, இரண்டு திருமொழிகளில் பாசுரங்களாகக் கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் அதிமானுஷஸ்தவம் என்று ஸ்தோத்ர மிட்டிருக்கிறார்.
ஸ்வாமி தேசிகன், மஹா வீர வைபவம், அபயப்ரதான ஸாரம் என்று அருளி இருக்கிறார்.
கம்பநாட்டாழ்வார், இராம காதை என்றே ராமாயணத்தை எழுதி அரங்கேற்றி இருக்கிறார்.
பல மொழிகளில், ஸ்ரீமத் ராமாயணம் உள்ளது. துளசிதாசரின் ராமாயணம் ப்ரசித்தி பெற்றது. ராம நாடகக் கீர்த்தனைகள், ரகுவம்சம், ராமகர்ணாம்ருதம்,ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம் இப்படிப்பலப்பல —விரிக்கின் பெருகும்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பிகள்—-இவர் ஸ்ரீ ஆளவந்தாரின் சிஷ்யர். ஸ்ரீ சைலபூர்ணர் என்கிற திருநாமம் உண்டு. இவர் ஸ்ரீ உடையவருக்கு , ஒரு வருட காலம் ஸ்ரீமத் இராமாயண அர்த்த விசேஷங்களைச் சொன்னார். காலக்ஷேபமாகக் கேட்டு, ரஹஸ்யார்த்தங்களைத் தெரிந்து கொண்டார். அதனால்தான்,
“படிகொண்ட கீர்த்தி இராமாயணமென்னும் பக்தி வெள்ளம், குடிகொண்ட கோயில் இராமாநுசன் ”
என்று இராமானுச நூற்றந்தாதியில், திருவரங்கத்தமுதனார் , ஸ்ரீ பாஷ்யகாரரைப் போற்றுகிறார். இவை பதினெட்டு என்பர்.
1. இதிஹாச புராணங்கள் என்று தனி வித்யாஸ்தானமாக ஸ்ரீமத் ராமாயணம் சொல்லப்பட்டாலும், இதில்
சிக்ஷை, வ்யாகர்ணம் , சந்தஸ் , நிருக்தம், ஜ்யோதிஷம் , கல்பம், என்கிற ஆறு அங்கங்களும், இதில் ஆங்காங்கு உணர்த்தப்படுகிறது
சிக்ஷை—-ஹநுமானைப் புகழும்போது ,அவர் பேச்சு தாமதமின்றி, விரைவான, வரம்பு மீறாத பேச்சு.
( வேதத்தின் மூக்கு ) ஸ்வரம், உச்சரிப்பு இவைகளைத் தெளிவாக உணர்த்துவது.
வ்யாகர்ணம் —சிக்ஷையிலே வந்து விடுகிறது. அனுமன், நவ வ்யாகர்ண பண்டிதன்
( வாய் )
சந்தஸ் ——-தக்க இடங்களில் அழகான விருத்தங்களில் ச்லோகங்கள்
(கால்கள் )
நிருக்தம் —-அத்ய ராமஸ்ய ராமத்வம் லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந :
(காது) சத்ருக்னோ நித்ய சத்ருக்ந : …… போன்ற ச்லோகங்கள் , ராவண –கத்துபவன் , கத்தும்படி
செய்பவன் என்று பொருள். இவற்றிலிருந்து நிருக்தம்
ஜ்யோதிஷம் –தசரதர், புஷ்ய நக்ஷத்ரத்தில் ராம பட்டாபிஷேகம் செய்ய முனைதல். ஜடாயுசொல்லும்சீதாபஹார
(கண் ) நேரம் பற்றிய செய்தி. ராமன், யுத்தம் செய்ய, இலங்கைக்குப் புறப்படும் நேரம். சீதைக்கு,
ஜோஸ்யர்கள் சொல்லும் எதிர் கால விவரம்
கல்பம்—-அச்வமேத யாகம், விஸ்வாமித்ரர் செய்யும் யாகம், இந்த்ரஜித் செய்யும் யாகம்
( கைகள் )
தர்ம சாஸ்திரம் —-ராஜ தர்ம உபதேசம் , அஸ்த்ர சஸ்த்ர உபதேசம், யுத்தம் செய்யும் முறை, கபந்தன் பேச்சு,
ராவணன்—இந்த்ரஜித் சம்வாதம், இப்படிப் பல
2. சநாதந தர்மத்தில் இழிந்திருக்க வேண்டுமென்று ஜாபாலியின் பேச்சு
3.வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம், பித்ரு தர்மம், மாத்ரு தர்மம், ப்ராத்ரு தர்மம், பத்நீ தர்மம், ராஜ தர்மம்,
ப்ரஜா தர்மம், மித்ர தர்மம், —-போன்ற தர்மங்கள், எப்படிப்பட்ட ஆபத்திலும் தர்மத்தை விடலாகாது. மனிதன்,
எவ்வளவு மேன்மையான இடத்தில் பிறந்தாலும், வளர்ந்தாலும், இருந்தாலும், வ்யஸனங்கள்,துக்கங்கள் . நேர்வது இயல்பு. தர்ம மார்க்கத்தில் செல்பவனுக்கு , பக்ஷிகளும், ம்ருகங்களும் உதவும். அக்ரமம்
செய்தால், சகோதரனும் கைவிடுவான். நித்ய கர்மாநுஷ்டாதிகள் அவசியம் செய்ய வேண்டும்.
4. தத்வம்—சேதனன், அசேதனம், பகவான்
ஹிதம்—கர்ம யோகம்,ஞான யோகம், பக்தி யோகம் , சரணாகதி யோகம் (ப்ரபத்தி )
புருஷார்த்தம்—பகவான் ( ஜீவன் அடையும் பயன் ,புருஷார்த்தம் )
நாராயண உபநிஷத் சொல்கிறது—–
தத்வம்—ஸ்ரீமந் நாராயணனே தத்வம்
ஹிதம்—பகவானை அடைய ஹிதமாக இருப்பது பக்தி, ப்ரபத்தி
புருஷார்த்தம்—-தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்கள்
உறக்கம்—தமோ குணம்—கும்பகர்ணன்
காமம்–ரஜோ குணம்—ராவணன்
தர்மம்—ஸத்வ குணம்—விபீஷணன்
5. பகவானே அடைய வேண்டியவன்
ஆத்மா அடையப்பட வேண்டியது.
அடைவது—புருஷார்த்தம்
அதற்கான உபாயம்,
அதை அடைவதற்கு உள்ள விரோதி
————–அர்த்தபஞ்சகம் சொல்லப்படுகிறது.
அதாவது—ஆத்ம ஸ்வரூபம் —நாம் யார் /
பரமாத்ம ஸ்வரூபம் –பகவான் –யாரை அடைய வேண்டும் ?
உபாயம்—அடைய வேண்டிய வழி—பக்தி, ப்ரபத்தி என்கிற சரணாகதி
பலன்—பக்தி அல்லது சரணாகதியால் வரும் பலன்—பகவானின் திருவடிகளில் நித்ய கைங்கர்யம்
தடை—இவற்றைத் தடுப்பது–ப்ரக்ருதி சம்பந்தம்
6. பரத்வம்—ஸ்ரீ ராமன்—அவதாரத்துக்கு முன்பு , தேவதைகள் சொல்வது
தொடர்ந்து, ப்ரஹ்மா போன்றவர் சொல்வது
விச்வாமித்ரர் சொல்வது, பரசுராமர் சொல்வது
கானகத்தில் மஹரிஷிகள் சொல்வது
சபரீ சொல்வது, தாரை சொல்வது,
மால்யவான் சொல்வது, மந்தோதரி சொல்வது,
ராவணின் பேச்சுக்கள்
7. வசிஷ்ட , வால்மீகி ரிஷிகள் பக்தி யோகத்தில் இழிய, சரணாகதியின் பெருமை சொல்லப்படுகிறது.
தேவர்களின் சரணாகதி முதலியவை
8. ஸ்ரீ ராமன் , தன்னடிசோதிக்குப் போகும்போது, எல்லாவற்றையும் பரம பதத்தில் ஏற்றுவது.
9. பகவானைப் பற்ற, சேஷத்வம் முக்கியம்–லக்ஷ்மணன் உதாரணம். குஹன், அநுமன் ஸுக்ரீவன், விபீஷணன்
மற்ற உதாரணங்கள்
10. பகவத் பாரதந்த்ரியம் —கட்டளைக்குக் கட்டுப்படுவது–பரதன் உதாரணம்
11. பாகவத சேஷத்வ பாரதந்த்ரியம்—சத்ருக்னன்
இது நாலு பிள்ளைக் கதை
ஒரு பிள்ளை பித்ரு வாக்ய பரிபாலனம் செய்தான்
இன்னொரு பிள்ளை, அவனுக்கு அங்க ரக்ஷகனாக —-உதவியாக–கூடவே சென்றான்
மற்றொரு பிள்ளை, ராஜ்யத்தை வெறுத்து , பாதுகா பட்டாபிஷேகம் செய்தான்
கடைசி பிள்ளை, பாதுகா பட்டாபிஷேகம் செய்த அண்ணனுக்கு உதவியாக இருந்தான்
12. சரணாகதி செய்பவனுக்கு—- ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் வேண்டும்
13. அர்த்த காம ஆசையுடன் மோக்ஷத்தில் விருப்பம் இல்லாவிடில்—தசரதர், சூர்ப்பனகை வாலி ,ராவணன்
இவர்களைப்போல துன்பப் பட வேண்டும்
14. ஆசார்யன் மூலமாகவே, ஜீவன் , பகவானை அடைய முடியும்–உதாரணம் , அநுமன் செயல்
15. பிராட்டிக்கு உள்ள புருஷகாரத்வம்; லக்ஷ்மண சரணாகதி; ஸுக்ரீவன், ஸீதையின் திருவாபரணங்ளைப்
பாதுகாத்து, ஸ்ரீ ராமனிடம் அளித்து, புருஷகாரப் பூர்த்தி அடைந்தான். விபீஷணன்,
அசோக வனத்தில் குடும்ப சஹிதமாகப் பிராட்டிக்குத் தொண்டு செய்தான்.சீதாப் பிராட்டி,
அசோக வனத்தில்அரக்கிகளுக்கு அபயம்
16. சரணாகதி செய்த பிறகு, ப்ரயத்னம் கூடாது; த்வரை நீடிக்கலாம்.
17. பகவத், பாகவத சந்நிதான வாஸம் சிறந்தது
18. பகவானை அடையும் வரை காம்ய நிஷித்தம்—ஸ்ரீ ஆண்டாள் “நெய்யுண்ணோம் , பாலுண்ணோம்
மலரிட்டு நாம் முடியோம் ” என்று சொல்வதைப் போல
லக்ஷ்மணன் மூலமாகக் கர்மயோகம் தெளியப்படுகிறது
பரதன் மூலமாகப் பக்தி யோகம் தெளியப்படுகிறது
சத்ருக்னன் மூலமாக ஞான யோகம் தெளியப்படுக்ளிறது
பால காண்டத்தில்–ஸீதா விவாஹம் —ஸ்ரீமத் என்கிற சப்தத்தின் பொருள்
அயோத்யா காண்டத்தில் –ஸ்ரீ ராமனின் கல்யாண குண விசேஷங்கள் விவரணம்–நாராயண சப்தார்த்தம்
ஆரண்ய காண்டத்தில்—திவ்ய மங்கள விக்ரஹ ” சரணௌ ” சப்தார்த்தம்
உத்தர காண்டத்தில்—உத்தர பாகத்தின் பொருள் ‘சரணம் ப்ரபத்யே ”
ஆக , ஸ்ரீமத் ராமாயணம், த்வய மந்த்ரத்தைச் சொல்கிறது.
ஸ்ரீமத் ராமாயணம்—மந்த்ரம்—காயத்ரி மந்த்ரம் இதில் உள்ளது. காயத்ரி மந்த்ரம்–24 அக்ஷரங்கள்
ஸ்ரீமத் ராமாயணத்தில் 24000 ச்லோகங்கள் உள்ளன ஒவ்வொரு ஆயிரமாவது ச்லோகத்துக்கும் காயத்ரியின்
முதல் எழுத்து உள்ளது. இப்படி 24000 ச்லோகங்கள் உள்ளன. ஸ்ரீமத் இராமாயண பாராயணம்/ ச்ரவணம்
காயத்ரி மந்திர ஜப பலனைக் கொடுக்கும்
அடுத்தது–ஸ்ரீமத் ராமாயணம் , வேதத்தை விடச் சிறந்தது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்