பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக்
க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.பிராட்டி, கருணையே
வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே
நாட்டம் கொண்டவள்.சரணம் என்று அடைந்தவர்களுக்கு,
அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்மசாரிணியாக,
கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.
பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.
உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி , துன்பத்தில்
உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு
ஏற்ற,நீ தூண்டினாய். அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,
வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள்
வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை
ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.ஆனால்,
வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள்
வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள். அவர்களைத் திருத்த
திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில்சென்று ,
தத்வங்களை உபதேசித்து , அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத்
திருத்தலாமா —- என்று கேட்டாராம்.
அதற்கு, பிராட்டி, நாமே நேரில் சென்று, நாங்கள்தான் ஜகத்காரணம்,
நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவதுபோல
நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,சடகோபனுக்கு
உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத்
திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.
உடனே பகவான், பிராட்டியிடம், “நீயே விஷ்வக்ஸேனருக்கு
உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச்சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “
என்றாராம்.
இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை
உபதேசித்து, பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை
நமஸ்கரிக்கிறேன்
3. வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸுத்ரவதீ ஸகம் |
யத்வேத்ர சிகரஸ்பந்தே விச்வ மேதத் வ்யவஸ்திதம் ||
விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும்
முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில்
எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன்
இருப்பவர்கள். முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து
ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான
அண்டங்கள் உள்ளன;ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு.
யாவும், திவ்யதம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனைமுதலியாரை
விரைவாகச் சென்று, குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு
தூண்டுகிறாளாம்.அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர்
என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.
ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற்கதி பெற்று
ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய்விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனைமுதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய
நடுங்குவார்களாம். அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத
ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்
4. யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம் |
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே ||
ஸ்வாமி தேசிகன் , இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை
நமஸ்கரிக்கிறார் . நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம்
கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர். இவர் பகவானுடையவும்
ஸேனைமுதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.
அவதரித்து, 12 நாட்கள் வரை பால்கூட அருந்தாது, கண்கள்
திறக்காது இருந்ததால் பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்துநின்றபிரான்
சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர்.
குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த
புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது. இப்படியே,
16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் ,
பெரிய பிராட்டியின் கட்டளைப்படி அங்கு எழுந்தருளி
மாறனுக்கு “பஞ்சஸம்ஸ்காரங்களை”ச்செய்து, மந்த்ரங்கள்,
ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.
மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “
என்றும், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ
மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்துகொண்டதால்,
“வகுளாபரணர் ” என்றும் தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின்
மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “
என்றும் ,திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “
என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.
இவருக்கு முன்பாகவே ,த்வாபரயுகத்தின் முடிவில் ,அவதரித்த
மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,
தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக்
கண்டார். அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே
,வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில்,
யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.அவரோ,
கண்திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை
எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.
மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்ததன் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று
எங்கே கிடக்கும் ? “
அதாவது, ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான
சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால், எதை
அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று
எண்ணி இருக்கும் ?
ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”
அதாவது, சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே
கிடக்கும்.
ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக
இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை
உபதேசித்து, தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை
செய்யுமாறு நியமித்து, திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7)
பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296
பாசுரங்களைச் சொல்ல, மதுரகவிகள், இவற்றைப்
பட்டோலைப் படுத்தினார்.
பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால்,
திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும்
மகிழம்பூ மணம் —அதாவது, ப்ரஹ்ம கந்தம் —அதாவது
பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.
பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேதமாதா
களைத்துப்போய் ,ஆழ்வாரின் திருவாய்மொழியில்
ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் . ஆழ்வார், சடவாயுவை
ஜயித்ததுபோல,அல்ப அறிவாளிகளின் வீண்வாதங்களையும்
ஜயிக்கிறாராம் .இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து,
அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார். இதனால்,
ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின்
திருத்துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது .
இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .
பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,
ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,ஸ்வாமி
தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ
வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது. இது
ரஸா னுபவம்.
5. நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||
இந்த ச்லோகத்தில் ஸ்ரீமந்நாதமுநிகளை நமஸ்கரிக்கிறார் .
வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி )
ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில்
இழிந்தவர். திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
“ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !’
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,
அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட, அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று
சொல்ல, திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக
ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார். அங்கும், ஒருவருக்கும்
திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.அச்சமயத்தில்,
ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண்
சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று, (முழுவதும்
ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப்
பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ), நித்யஸுரியான
ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்துபோன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள்
ரஹஸ்யஅர்த்தங்கள்,ப்ரஹ்மஸுத்ரங்கள் எல்லாவற்றையும்
உபதேசமாக அடைந்தார்.ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!”
என்கிற திருவாய்மொழியைச்சொல்லிக்கொடுக்கும்போது,
“கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால்,
பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார்
என்றும் சொல்வர்.
திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய
கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் )
இருவருக்கும்,தாளம் அமைத்துக் கற்பித்தார் . ஸ்ரீ நம்மாழ்வார்
அருள்செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாணகுணங்கள் ,
நித்ய விபூதி, லீலா விபூதி, அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக
விளங்கினார்.
தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து
ரஸித்து,பகவானை சரணம் அடைய மிகவும் உதவிய
ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.
( ஸ்ரீமந்நாதமுநிகளுக்கு, அந்தரங்க, முக்ய சிஷ்யர்களில்,
உருப்பட்டூர் ஆச்சானும் ஒருவர் . அவரது வம்ச பரம்பரையினர்
இன்றும் உருப்பட்டூர் என்று தங்கள் பெயருக்கு முன்னால்
சேர்த்துக்கொள்கின்றனர் )
6. நமஸ்யாமி அரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் |
சுத்த ஸத்வமயம் சௌரே : அவதாரமிவாபரம் ||
இந்த ச்லோகத்தால்,உய்யக்கொண்டாரைத் (புண்ட்ரீகாக்ஷர் )
துதிக்கிறார். திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை
திருநக்ஷத்ரத்தில் அவதாரம். ஸ்ரீமந்நாதமுநிகளிடம் ,எல்லா
மந்த்ரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் ,ரஹஸ்யங்களையும்
நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் ,விசேஷ அர்த்தங்கள் எல்லாவற்றையும்
உபதேசமாகப் பெற்றவர். ஆசார்யரான –ஸ்ரீமந்நாதமுநிகள் —போர
உகந்த சிஷ்யர்.ஸ்ரீமந்நாதமுநிகள் , தன்னுடைய பேரரான
ஆளவந்தாருக்குத் தக்க சமயத்தில் ,வேதாந்த அர்த்தங்களை
உபதேசமாக அருளும்படி, இவரை நியமித்தார். உய்யக்கொண்டார்,
ரஜோ குணம், தமோ குணம் இவற்றை அடக்கியவர் . சுத்த
ஸாத்விகர் .பகவான் கண்ணனைப் போலவே எழுந்தருளிய
புண்டரீகாக்ஷஸுரி என்கிற உய்யக்கொண்டாரின் திருவடிகளைப்
பணிகிறேன் .
7. அநுஜ்ஜித க்ஷமா யோகம் அபுண்யஜந பாதகம் |
அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே ||
இந்த ச்லோகத்தால், ஸ்வாமி தேசிகன் ,மணக்கால்நம்பியைத்
துதிக்கிறார்.லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில்
மாசிமாத மகத்தில் அவதாரம். உய்யக்கொண்டாரின் திருவடி
பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,
எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர். உய்யக்கொண்டாருக்கு
அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர். புராணங்களில்
சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக
ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.ஸ்வாமி தேசிகனுக்கு உய்யக்கொண்டார்
பகவான் கண்ணன் என்றால், மணக்கால்நம்பி 4வது ராமர்.
அஹங்காரமோ,தற்புகழ்ச்சியோ இல்லாதவர் ;ஆசார்ய
பரம்பரைக்கு உயிர் கொடுத்த உய்யக்கொண்டாரின் கட்டளையை
ஏற்று,நாதமுநிகளின் பேரரான ஆளவந்தாருக்கு, (அவர் அரசராக
இருந்த வேளையில் ) தூதுவளைக்கீரை சமர்ப்பிக்கும் வ்யாஜத்தில்
அவரை அணுகி,திருவரங்கம் அழைத்து வந்து திவ்ய தம்பதிகளை
ஸேவிக்கச் செய்து, ஸ்ரீமந்நாதமுநிகள் , உய்யக்கொண்டார் —–
ஆசார்யர்களின் கட்டளையை நிறைவேற்றி ,வேதாந்த அர்த்தங்களை
ஆளவந்தாருக்கு உபதேசித்தார். இப்படி,யாமுன முனி மூலமாக
வந்த உபதேச பரம்பரையை நீடிக்கச் செய்த ஸ்ரீ ராமமிஸ்ரரை
உபாஸிக்கிறேன்
. ஆளவந்தார் என்கிற யாமுனாசார்யர்
8. விகாஹே யாமுனம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்திதம் |
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்ஸே யத்ர க்ருஷ்ண : க்ருதாதர : ||
ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது
திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),ஆடி மாதம்
உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம்
சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .சோழநாட்டு அரச ஆஸ்தான
வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று
விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,அவர் மறுக்க இயலாது
திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல
அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.
யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன்
முழுகித் திளைத்து மகிழ்வதுபோல ,யாமுனரின் குணப்
ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை
நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது, காளியனால்
துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன்
யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும்
யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை
செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு
காட்டினான் என்றும் –“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,
ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
9. தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே |
யேந விச்வஸ்ருஜோ விஷ்ணோ : அபூர்யத மநோரத : ||
பெரிய நம்பியை (மஹாபூர்ணர் ) இந்த ச்லோகத்தில்,ஸ்தோத்ரம்
செய்கிறார்.
ஸ்ரீமச்சடகோப முநி ,ஸ்ரீமந்நாதமுநி , ஸ்ரீமத் யாமுந முநி
என்கிற மஹா ஆசார்யர்களால், ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்
வளர்ந்தது. இருந்தாலும்,வேதங்களுக்கு விரோதமான அர்த்தங்களைச்
சொல்லி, பகவானின் கல்யாணகுணங்கள் , உபய விபூதிகளை
மறைக்கும் பாஷாண்டிகளும் தலையெடுத்து , ஸம்ப்ரதாயத்துக்குக்
கெடுதல் செய்தனர். இச்சமயத்தில் ,திருவரங்கச் செல்வனான
பெரிய பெருமாளே ,ஸ்ரீ ராமானுஜரால்தான் இத்தீமைகளை
அகற்றமுடியும் என்று ஸங்கல்பித்து,பெரியநம்பியை ,ஸந்நிதிக்கு
வருமாறு அர்ச்சக முகேன நியமித்து, அவரும் எழுந்தருளி
“நாயிந்தே ” என்று வேண்ட,”நீர், ராமானுஜருக்கு ஆளவந்தார்
அருளிய வேதாந்த சாஸ்த்ரங்களை எல்லாம் உபதேசித்து
அவர் மூலமாக நமது சித்தாந்தத்தை நன்கு விளங்குமாறு செய்வீராக “
என்று கட்டளை இட்டார். பெரியநம்பிகளும், ராமானுஜர் இருக்கும்
இடமான திருக்கச்சிக்கு நாமே சென்று ,பெரிய பெருமாளின்
கட்டளையை நிறைவேற்றுவோம் என்று ஸ்ரீரங்கத்தைவிட்டுக்
காஞ்சிக்குப் புறப்பட்டார்.
காஞ்சிபுரத்திலோ , ஸ்ரீ தேவப்பெருமாள் ,திருக்கச்சி நம்பி மூலமாக,
ராமானுஜருக்கு அநுக்ரஹித்து , பெரிய நம்பிகளை ஆச்ரயிக்கும்படிக்
கட்டளையிட , ராமானுஜரும் அதை சிரசா வகித்து, காஞ்சியிலிருந்து
ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார்.
இப்படி, பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில்
ஏரிகாத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக்கொண்டனர். பெரியநம்பிகள்
ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்தவிசேஷங்கள்
எல்லாவற்றையும் சொல்லி அருளினார். இப்படியாக,பெரிய நம்பிகள்
உடையவர்மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக
ஜனங்களையும் திருத்தி, பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும்
பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள பெரியநம்பிகளை
வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்
ஸ்ரீ ராமாநுஜர் —ஸ்ரீ உடையவர்
10. ப்ரணாமம் லக்ஷ்மணமுநி :ப்ரதிக்ருஹ்ணாது மாமகம் |
ப்ரஸாதயதி யத்ஸுக்தி : ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம் ||
ச்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று
விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி ஸ்ரீ ராமானுஜரின்
ஸ்ரீஸுக்தி உள்ளது . இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா”
என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “
என்பவள் ,தன்னுடைய மயக்குப்போகங்களால் , அரசனைத் தன்
ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .இவளுக்கு ஒரு தாதி இருப்பாள்.
“சைரந்த்ரீ ” என்று பெயர். இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை
செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத்தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி ,
முடிந்து ,வாசனைப் பூக்களைச்சூட்டி , அணிகலன்களையும் சூடி
அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.
அதைப்போல , ” ச்ருதி “—உபநிஷத் நாயகி .இவளுடைய புருஷன்
புருஷோத்தமன் –பகவான். வேதவாக்யங்களுக்கு , பிற மதவாதிகள்
அர்த்தங்களை மாற்றிச் சொல்லி, பொய் என்றும் சொல்லி ,அழுக்கை
ஏற்றிவிட்டார்கள் .இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின்
ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ” மீமாம்சம் போன்ற வாசனைத்
தைலங்களைத் தடவி, சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,
உண்மையான ரூப கல்யாண குணவிசேஷங்களை உடைய பகவானையும்
வேதங்களையும் சேர்த்து கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள்
அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச்
செய்கிறேன் ; அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக
என்கிறார் ஸ்வாமி தேசிகன் .
இனி ——யதிராஜ வைபவ கல்யாண குணங்களை மிகச் சுருக்கமாக
ஒவ்வொரு ச்லோகமாகப் பார்ப்போம்