யதிராஜ ஸப்ததி–5 ( 51 to 74 )
– —————————— —————————-
51. விகல்பாடோபேந ச்ருதிபதம் அசேஷம் விகடயன்
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தேவிரமதி |
விதண்டாஹங்குர்வத் ப்ரதிகதக வேதண்ட ப்ருதநா
வியாத வியாபார வ்யதிமதன ஸம்ரம்ப கலஹ : ||
ஒன்றைப் ப்ரணாமாக ஏற்று, அதனால் தெளிவு ஏற்படுபவற்றில்
சிலவற்றை அங்கீகரித்தும் சிலவற்றை நிராகரித்தும் செய்வது,
நேர்மையல்ல. காட்டு யானைகள், மதம்பிடித்து அருகிலுள்ள
கிராமங்களில் புகுந்து, பயிர்களை அழித்து, மக்களைத்
துன்புறுத்தும்போது ,அந்தநாட்டு அரசன் ஓடிவந்து வில்லில்
நாண் ஏற்றி சப்தத்தை எழுப்பினால், யானைகள் பயந்து ,திரும்பவும்
காட்டுக்குள் சென்றுவிடும். அதைப்போல, பிறமதஸ்தர்களின்
விதண்டாவாதங்கள் என்கிற பேரிரைச்சல் கேட்டாலும், அங்கு,
எம்பெருமானார் என்கிற திருநாமத்தைக் கேட்டவுடன் , அவர்கள்
நடுங்கி வாய்மூடி மௌனியாவர்
52. ப்ரதிஷ்டா தர்க்காணாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜூஷாம்
பரிஷ்காரஸ்ஸாம்நாம் பரிபணம் அதர்வாங்கிரஸயோ : |
ப்ரதீபஸ்தத்வானாம் ப்ரதிக்ருதிரஸள தாபஸகிராம்
ப்ரஸத்திம் ஸம்வித்தே ப்ரதிசதி யதீசான பணிதி : ||
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,நான்கு வேதங்களுக்கு விளக்கம் ;
தத்வங்களுக்கு இருப்பிடம்; ரிஷிகளின் வாக்யங்களுக்குப்
ப்ரதிபிம்பம் ; இப்படிப்பட்ட ஸ்ரீஸுக்திகள் தெளிவான தத்வ ஞானத்தை
அளிக்கின்றன
53. ஹதாவத்யே ஹ்ருத்யே ஹரிசரண பங்கேருஹ யுகே
நிபத்நந்தீ ஐகாந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய : |
சுநாஸீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹுதபுக்
பிரபேசாதி க்ஷூத்ர ப்ரணதி பரிஹார ப்ரதிபுவ : ||
ஸ்கந்தன், இந்த்ரன் , ப்ரஹ்மா , ருத்ரன் , அக்நி , ஸுர்யன்
முதலான பரிவார தேவதைகளை வணங்கியவர்களுக்குப்
ப்ராயச்சித்தமாக , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் , தன்னைக்
கற்றவர்களை, பரமைகாந்திகளாக ஆக்குகின்றன .இதற்கு,
தானே ஜாமீனாக இருப்பதாக ஸ்வாமி தேசிகன் உறுதி அளிக்கிறார்.
54. யதாபூத ஸ்வார்த்தா யதிந்ருபதி ஸுக்தி : விஜயதே
சுதாஸந்தோஹாப்தி : ஸுசரித விபக்தி :ச்ருதிமதாம் |
கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலாஹலஹத
த்ரிவேதீ நிர்வேத ப்ரசமந விநோத ப்ரணயிநீ ||
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,அமுதக்கடல்; நாயகியாக இருக்கும்
மூன்று வேதங்களின் உயிர்த்தோழி .சேதநாசேதநங்களை
சரீரமாக உடையவன் பகவான் என்கிற ஐக்யத்தைச் சொல்கிறது.
இப்படி, வேதமாதாவுக்கு, ஏற்பட்ட வருத்தத்தை , யதிராஜரின்
ஸ்ரீஸுக்திகள் போக்குகின்றனவாம்
55. ச்ருதிச்ரேணி சூடாபத பஹூமதே லக்ஷ்மணமதே
ஸ்வபக்ஷஸ்த்தாந் தோஷாந் விததமதி : ஆரோபயதி ய : |
ஸ்வஹஸ்தேந உத்க்ஷிப்தை ஸகலு நிஜ காத்ரேஷு பஹூளம்
களத்பி: ஜம்பாலை : ககநதலம் ஆலிம்பதி ஜட : ||
விசிஷ்டாத்வைதம் எல்லோராலும் போற்றப்படுவதைப்பொறுக்காத
பிறமதவாதிகள் , தங்கள் மதங்களில் இருக்கிற தோஷங்களை (குற்றங்கள்)
எல்லாம் யதிராஜரின் மதத்தில் இருப்பதாகச் சொல்லி, தங்கள் அறிவின்மையைக்
காட்டுகிறார்களாம். ஒரு முட்டாள் குளக்கரையில் நின்றுகொண்டு, குளிக்க
வந்தவர்களைப் பார்த்து, இதோ மேலே ஆகாயத்தைப் பாருங்கள், இந்த
வெளுப்பான ஆகாயத்தைக் கருப்பாக ஆக்குகிறேன் பாருங்கள் ,என்று சொல்லி,
குளத்துசேற்றை இருகைகளாலும் எடுத்து, உயரே ஆகாயத்தில் வீசி,வீசி
எறிந்தான். மேலேசென்ற சேறு பலவகையாகச் சிதறி, இந்த முட்டாளின்
தலை, உடல், கை, கால் இவற்றில் விழுந்து, இவனையே கருப்பாக்கியது .
ஆனால், வானம் அப்படியே வெளுப்பாகவே இருந்தது. பிற மதஸ்தர்கள்
கூறும் அபத்த வாதங்கள் , யதிராஜரின் விசிஷ்டாத்வைதத்துக்குப் பொருந்தாமல்
அந்த மதஸ்தர்களுக்கே பொருந்தும் என்கிறார், ஸ்வாமி தேசிகன்.
56.நிராலோகே லோகே நிருபதி பரஸ்நேஹ பரித :
யதிக்ஷமாப்ருத்தீப : யதி நிகில ஜாஜ்வல்யத இஹ |
அஹங்காரத்வாந்தம் விஜஹதி கதம்காரம் அநகா :
குதர்க்க வ்யாலௌகம் குமதிமத பாதால குஹரம் ||
கருணை யதிராஜர் அவதரிக்காமல் இருந்தாலோ, முதலாழ்வார்கள் ஏற்றிய
தத்வ ஞான விளக்கு ,எல்லோருடைய இதயத்திலும் ஆத்மஞானஒளியைப்
பிரகாசிக்கும்படி செய்யாதிருந்தாலோ ,அறிஞர்களும் ,அனுஷ்டானபரர்களும்,
பிறமத மாயாவாதம் என்கிற படுகுழியில், விழாமல் இருந்திருக்கமுடியாது.
அதாவது, வித்வான்களும், அனுஷ்டானபரர்களும், கஷ்டப்பட்டு இருப்பர்
என்கிறார், ஸ்வாமி தேசிகன்.
57. யதி க்ஷமாப்ருத் த்ருஷ்டம் மதமிஹ நவீனம் ததபி கிம்
தத : ப்ராகேவ அந்யத்வத ததபி கிம் வர்ண நிகஷே |
நிசாம்யந்தாம் யத்வா நிஜமதி திரஸ்கார விகமாத்
நிராதங்கா : டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதய : ||
யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது. சங்கரரின்
அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது
என்றனர், பிறமதத்தினர். மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ
புதுமையோ காரணமல்ல. விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது
என்பது, அதன் குறையல்ல ! உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே
தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர்
முதலிய பூர்வாசார்யர்கள் , சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள்
தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான
நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்
58. ஸுதாஸாரம் ஸ்ரீமத்யதி வரபுவ : ச்ரோத்ரகுஹரே
நிஷிஞ்சந்தி ந்யஞ்சந்திகமகரிமாண : பணிதய: |
யதாஸ்வாதாப்யாஸ ப்ரசய மஹிமோல்லாஸிததியாம்
ஸதாஸ்வாத்யம் காலே ததம்ருதமநந்தம் ஸுமநஸாம் ||
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,வேதங்களைவிட ,மேன்மையாகக்
கேட்பவர் காதுகளில் அமுதமாகப் பொழிகின்றன. அதனால்தான்,
இந்த ஸ்ரீஸுக்திகளை நன்கு க்ரஹித்தவர்களுக்கு ,ஆராத அமுதனாகிய
எம்பெருமான் போக்யனாக ஆகிறான்.
ஸ்வாமி தேசிகன், பற்பல முப்பது வருஷங்கள், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம்
ஸாதித்து , அந்தப் பரம ஆனந்தத்தை வெளியிடுகிறார்
59. யதிக்ஷோணி பர்து : யதிதம் அநிதம் போக ஜநதா
சிரச்ச்ரேணி ஜூஷ்டம் மநஸி த்ருடபந்தம் ப்ரபவது |
அவித்யாரண்யாநி குஹர விஹரந்மாமக மந :
ப்ரமாத்யந்மாதங்க ப்ரதம நிகளம் பாதயுகளம் ||
அஞ்ஞானம் என்பது, காடு. இதில் மதம்பிடித்துத் திரியும் யானை
என்பது “மனஸ் “. இதை முறையாகக் கட்ட, பரமைகாந்திகளும்,
ஸார்வபௌமர்களும், ஸிரஸ்ஸால் வணங்கும் எம்பெருமானின்
திருவடித் தாமரைகள்தான் தகுந்த இடம். (காலுக்கு விலங்கு ).
இதைப்போல, யதிராஜரின் திருவடி சம்பந்தம் , மதம்பிடித்த யானை
போன்ற மனஸ் உள்ளவர்களுக்கு, த்ருடமான உறுதியைக் காட்டும்
என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்.
60. ஸவித்ரீ முக்தாநாம் சகல ஜகத் ஏந : ப்ரசமநீ
கரீயோபி: தீரத்தை :உபசிதரஸா யாமுநமுகை : |
ந்ருச்சேதர நிம்நேதரமபி ஸமாப்லாவயதி மாம்
யத்ருச்சா விக்ஷேபாத் யதிபதி தயா திவ்ய தடிநீ ||
பரம ஆசார்யரான யதிராஜரின் கிருபையை, கங்கைக்கு ஒப்பிடுகிறார்.
இத்தோடு, ஆளவந்தார், நாதமுனிகள், நம்மாழ்வார்களின் கருணையும்
சேர்ந்திருப்பதால் , யதிராஜரின் கருணைவெள்ளம் –த்ரிவேணி சங்கமமாக
ஆகிறதாம். இந்தக் கருணையை , மழையாக என்மீது பொழிந்து, என்னை
ஆட்கொண்டீர் என்கிறார்.இவை,எனக்குத் தாரகம், போஷகம் , போக்யம்
என்கிறார் .உன் கருணையே கருணை என்று உருகுகிறார் ஸ்வாமி தேசிகன்.
61. சிந்தாசேஷ துரர்த்த தந்துர வச : கந்தாசத க்ரந்திலா :
ஸித்தாந்தா : ந ஸமிந்ததே யதிவரக்ரந்தாநுஸந்தாயிநி |
முக்தா சுக்தி விசுத்த ஸித்த தடிநீ சூடால சூடாபத :
கிம் குல்யாம் கலயேத கண்டபரசு : மண்டூக மம்ஜூஷிகாம் ||
தைப்பதற்கே முடியாத நிலையில், வஸ்த்ரங்கள் கிழிந்தால்
அதை அங்கங்கு சேர்த்து முடிச்சுப்போட்டு, உபயோகிக்க முயற்சித்தாலும்,
எப்படி அந்தக் கந்தல் துணி எதற்கும் பயன்படாதோ அதைப்போல அடிப்படைப்
ப்ரமாணங்கள் எதுவும் இல்லாமல் சாஸ்த்ர மரியாதையை மீறிய
பிற மதங்கள் ஒருவருக்கும் பயன்படாது. சிவன், கங்கையைத் தலையில்
தாங்குகிறான்; அவனை, நிறையத் தவளைகள் வசிக்கும் வாய்க்காலைத்
தலையில் தாங்கு என்று அவன் பக்தர்கள் வேண்டினால், சிவன் சரி
என்பானா ? மாட்டான். அதைப்போல, ஸ்ரீபாஷ்யாதிகளை ஆழ்ந்து
கற்றவர்கள் , விபரீதக் கருத்துக்களைச் சொல்லும் பிற மதங்களின்
கருத்துக்களை ஒப்புக்கொள்ளார். அபார்த்தம் என்று ஒதுக்குவர் என்கிறார்
62. வந்தே தம் யமிநாம் துரந்தரம் அஹம் மாநாந்தகார த்ருஹா
பந்த்தாநாம் பரிபந்திநாம் நிஜத்ருசா ருந்தாநமிந்தாநயா |
தத்தம் யேந தயாஸுதாம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய :
காலே ந : கரிசைல க்ருஷ்ண ஜலதி : காங்க்ஷாதிகம் வர்ஷதி ||
யதிராஜர் சாலைக் கிணற்றிலிருந்து கொண்டுவந்து சமர்ப்பித்த
சுத்த நீரைப் பருகி, கரிகிரிமேல் நிற்கும் பேரருளாளன் ,எம்பெருமானாருக்கு
அருள் மழை பொழிந்தான். பிற மதங்களை நிரஸிக்கும் அத்தகைய கீர்த்தி
உள்ள எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன் —-என்கிறார்
63. காஷாயேணக்ருஹீதபீத வஸநா தண்டை : த்ரிபி : மண்டிதா
ஸா மூர்த்தி: முரமர்த நஸ்ய ஜயதி த்ரய்யந்த சம்ரக்ஷிணி
யத்ப்ரக்யாபித தீர்த்த வர்தித தியாம் அப்யஸ்திதாம் யத்குணாந்
ஆஸிந்தோ : அநிதம் ப்ரதேசநியதா கீர்த்தி : ப்ரஜாகர்த்தி ந : ||
பகவான் , பட்டடையைக் களைந்து சிவந்த காஷாயத்தைத் தரித்து,
த்ரிதண்டத்தை ஏந்தி சிகை, கமண்டலு இவற்றுடன் தத்தாத்ரேயராக
வந்து, வேத, வேதாந்த அர்த்தங்களை நிலை நிறுத்தினார். யதிராஜரும்
அப்படியே அநுசரித்து விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்தினார்.
அறிவாளிகள் ஒப்புக்கொண்டு பாராட்டுவார்களாம் . அதனால்,
பிள்ளான், கிடாம்பி ஆச்சான் போன்ற சிஷ்யர்களின் (அறிவாளிகளின் )
புகழ் நாடு முழுவதும் பரவியது.
” யத்ப்ரக்யாபித தீர்த்த வர்தித தியாம் ” என்பதற்கு, இதில் “தீர்த்தம்”
என்பது , யதிராஜரின் ஸ்ரீபாததீர்த்தம் என்றும் ,இதை ஸ்வீகரிப்பதால்
சிஷ்யர்களுக்கு ,ஞான விருத்தி மிகுதியாகி, அவர்கள் புகழ் நாடெங்கும்
பரவியது என்றும் வ்யாக்யானமிடுவர்
64. லிப்ஸே லக்ஷ்மணயோகிந : பதயுகம் ரத்யாபராகச் சடா
ரக்ஷாரோபண தந்ய ஸுரி பரிஷத்ஸீமந்த ஸீமாந்திகம் |
பிக்ஷாபர்யடந க்ஷணேஷு பிபராம் சக்ரே கலத் கில்பிஷா
யத்விந்யாஸ மிஷேண பத்ரமகரீமுத்ராம் ஸமுத்ராம்பரா |\
இப்படி, சிஷ்யர்களின் புகழ் பரவக் காரணமான , உடையவரின்
திருவடிகள் தனக்கு வேண்டும் என்று ஸ்வாமி தேசிகன்
பிரார்த்திக்கிறார். யதிராஜர் ,பிக்ஷைக்கு எழுந்தருளும்போது
பூமியில் அவரது திருவடிகள் ஆழமாகவும், கோலமாகவும்
பதிந்து, இந்தத் திருவடிகள் எழுப்பிய பாததூளிகளை ,
நித்யசூரிகளும்நெற்றியில் தரித்து, தந்யராகிறார்கள்; அந்தத்
திருவடிகளே எனக்குச்சரண் என்கிறார்
65. நாநா தந்த்ர விலோபிதேந மனஸா நிர்ணீத துர்நீதிபி :
கஷ்டம் குத்ஸித த்ருஷ்டிபி :யதிபதே :ஆதேச வைதேசிகை 😐
வ்யாஸ : ஹாஸபதீக்ருத : பரிஹ்ருத :ப்ராசேதஸ : சேதஸ :
க்லுப்த : கேளிசுக : சுக :ஸச முதா பாதாய போதாயந : ||
குதர்க்கங்களையே நன்கு கற்று ,அதிலேயே மயங்கி, அதையே பேசி,
வ்யாஸ பகவானையே ஹாஸ்யப் பொருளாக்கி, வால்மீகி மகரிஷியையே
மனத்திலிருந்து விரட்டி, சுகப் ப்ரம்மத்தை விளையாட்டுக் கிளியாக ஆக்கி,
போதாயநரைப் பாதித்து, யதிராஜரின் ஸித்தாந்தத்தை ஏற்காமல், மாயாவாதம்
செய்கிறார்களே என்று வருந்துகிறார் ஸ்வாமி தேசிகன்
66. அர்த்யா திஷ்டதி மாமிகா மதிரசௌ ஆஜந்ம ராஜந்வதீ
பத்யா ஸம்யமிநாம் அநேந ஜகதாம் அத்யாஹித ச்சேதிநா |
யத்ஸாரஸ்வத துக்த ஸாகர சுதா ஸித்தௌஷதாஸ்வாதிநாம்
ப்ரஸ்வாபாய ந போபவீதி பகவந்மாயா மஹாயாமிநீ ||
காட்டில் உள்ள ரிஷிகள், வியாதி, பசி, தாகம் —இவை தபஸ் செய்ய
இடையூறாக இருப்பதால், பல மூலிகைகளால், “ஸித்தௌஷதம் “என்கிற
ஔஷதத்தைத் தயாரித்து அருந்துவர் . இதுபோன்ற ஔஷதத்தை ,
என்(ஸ்வாமி தேசிகன் ) புத்தியான ஸ்திரீயும் அருந்தி இருக்கிறாள்.
இது–இந்த ஔஷதம் பூமியில் உள்ள பாற்கடலான –யதிராஜரின்
ஸ்ரீஸுக்திகளைக் கடைந்து எடுக்கப்பட்டது.
ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்படும் அஜ்ஞானம் , என்கிற கெட்ட
புத்தியானது , யதிராஜரின் உபதேசத்தால் ஏற்படும் தத்வ ஞானத்தால்
தானாகவே அகன்று போகும் என்கிறார், ஸ்வாமி தேசிகன்
67. சுத்தாதேச வசம்வதீக்ருத யதி க்ஷோணீச வாணீசதா
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி : ச்ருதிசிர : ப்ராஸாதம் அஸீததி |
துக்தோதந்வதபத்ய ஸந்நிதி ஸதா ஸாமோத தாமோதர
ச்லக்ஷ்ணாலோகந தௌர்லலித்ய லலிதோந்மேஷா மநீஷா மம ||
வேத வேதாந்தத்தைச் சொல்லும் யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளாலே
என்னுடைய பெண்ணான புத்தி என்பவள், பிறமதவாதிகளையும்
அவர்களின் அபத்தக் கருத்துக்களையும் துரத்தி, எம்பெருமான்
வேதங்கள் என்கிற அரண்மனையில் உபநிஷத் என்கிற உப்பரிகையில்
பேரழகனாய் ,மிடுக்குடன் வீற்றிருப்பதை அறிந்து, அவனை அடையப்
படிகளில் ஏறி, ஒய்யாரமாக உப்பரிகையை அடைகிறாள்
68. ஆஸ்தாம் நாம யதீந்த்ர பத்ததிஜுஷாம் ஆஜாந சுத்தா மதி :
தச்சாவ்யாஜ விதக்த முக்த மதுரம் ஸாரஸ்வதம் சாஸ்வதம் |
கோ வா சக்ஷுருதம்சயேத் அபி புரஸ்ஸாடோப தர்க்கச்சடா
சஸ்த்ரா சஸ்திரி விஹாரஸம்ப்ருத ரணாஸ்வாதேஷு வாதேஷு ந : ||
ஸ்வாமி தேசிகன் பெருமைப்படுகிறார், இந்த ச்லோகத்தில்.
உடையவரின் பரிபூர்ணக் க்ருபைக்குப் பாத்ரமானவன் ஸ்ரீபாஷ்யம்
போன்றவைகளை, சதாசார்யன் மூலமாகக் கேட்டும் , பலதடவை
காலக்ஷேபம் ஸாதித்தும் , பிறமதவாதிகளை வாதம் செய்து
தோற்கடிப்பதற்குத் தான் ஒருவரே போதும் என்கிறார்
69. பர்யாப்தம் பர்யசைஷம் கணசரண கதாம் ஆக்ஷபாதம் சிசிக்ஷே
மீமாம்ஸா மாம்ஸலாத்மா ஸமஜநிஷிமுஹு ஸாங்க்ய யோகௌஸமாக்யம் |
இத்தம் தைஸ்தை : யதீந்த்ர த்ருடித பகும்ருஷா தந்த்ரகாந்தார பாந்தை :
அந்த்தர்மோஹ க்ஷபாந்தை : அஹஹ கிமிஹ ந : சிந்தநீயம் தநீய : ||
கணாதர் இயற்றிய வைசேஷிக மதத்தை விசேஷமாகப் பயின்றேன்.
ந்யாயசாஸ்த்ரம் , மீமாம்ஸம் படித்தேன். ஸாங்க்ய யோகம் கற்றேன்.
இதனால், எம்பெருமானாராலே கண்டிக்கப்பட்ட அந்தப் பொய்ப்
ப்ரசாரங்கள் உள்ள மதங்களை ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டது
( ந்யாய பரிஸுத்தி, ந்யாய ஸி த்தாஞ்ஜனம், தத்வமுக்தாகலாபம் போன்றவை )
70. காதா தாதாகதாநாம் கலதி கமநிகா காபிலீ க்வாபிலீநா
க்ஷீணா காணாதவாணீ த்ருஹிண ஹரகிர : சௌரபம் நாரபந் தே |
க்ஷாமா கௌமாரி லோக்தி : ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
கா சங்கா சங்கராதே : ஜகதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் ||
உடையவரின் ஸித்தாந்தம் உறுதி அடைந்ததால், பௌத்தம் படுத்தது;
ஸாங்க்யமதம் சிதைந்தது; வைசேஷிக மதம் மாய்ந்தது; சார்வாகம் சிதைந்தது;
குமாரிலமீமாம்ஸம் குலைந்தது; சங்கராதிகளின் சமயமும் நலிந்தது
என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
71. விஷ்வக் வ்யாபிந்யகாதே யதிந்ருபதி யச : ஸம்பதேகார்ணவேஸ்மிந்
ச்ரத்தா சுத்தாவகாஹை : சுபமதிபிரஸள வேங்கடேசோபிஷிக்த : |
ப்ரக்ஞா தௌர்ஜந்ய கர்ஜத் ப்ரதிகதகவசஸ்தூல வாதூல வ்ருத்யா
ஸப்தத்யா ஸாரவத்யா ஸமதநுத ஸதாம் ப்ரீதிமேதாம் ஸமேதாம் ||
இந்த யதிராஜ ஸப்ததியை ,பாகவதோத்தமர்களின் நியமனத்தின்பேரில்
எழுதினேன் .யதிராஜரின் ஸித்தாந்த ஸாம்ராஜ்ய கீர்த்தி என்பது
கங்கா நதி. இதில் தீர்த்தமாடினேன் . ப்ரபல பண்டிதர்களாலே ,எனக்குப்
பட்டாபிஷேகம் ஆயிற்று. எதிரிகள் துர்ப்புத்தியாலே பிதற்றப்படும்
வாதப்பேச்சு என்கிற பஞ்சு , யதிராஜ ஸப்ததி என்கிற பெரிய காற்றாலே ,
ஒதுக்கித் தள்ளப்பட்டது. இந்த ஸ்தோத்ரத்தினால் பெரியோர்களின்
உகப்பை அடைந்தேன்
72.ஆசா மதங்கஜ கணா நவிஷஹ்ய வேகாந்
பாதே யதி க்ஷிதிப்ருத : ப்ரஸபம் நிருந்தந்
கார்ய : கதாஹவ குதூஹலிபி : பரேஷாம்
கர்ணே ஸஏஷ கவிதார்க்கிக ஸிம்ஹநாத: ||
மலைகளில் உள்ள காடுகளில், மதம் பிடித்த யானைகள் மரங்களை
முட்டிக் கீழே சாய்த்து, காட்டையே சின்னாபின்னமாக்கி ,
அட்டகாசம் செய்து, தண்ணீர் குடிக்க ,மலையடிவாரத்தில்
உள்ள நீர்நிலைக்கு வரும். யானைகளின் அட்டகாச சப்தத்தினால்
கண்விழித்து சோம்பல் முறிக்கும் சிங்கம் கர்ஜிக்கும் . இந்த
கர்ஜனையைக் கேட்கும் யானைகள், மலையில் உள்ள
காட்டுக்குள் மறுபடியும் போகாமல், சிங்கத்துக்குப் பயந்து,
அடிவாரத்திலேயே தங்கிவிடும். இதைப்போல, துர்வாதிகள்
ரொம்ப வேகத்துடன் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்படாமல்
அட்டகாசமாக வாதம் செய்யும்போது, கவிதார்க்கிக ஸிம்ஹத்தின்
யதிராஜ ஸப்ததியை அவர்கள் எதிரில் படித்தால், பயந்து,
நடுங்கி, விசிஷ்டாத்வைதிகளாக மாறி விடுவர்
73. உபசமித குத்ருஷ்டி விப்லவாநாம்
உபநிஷதா முபசார தீபிகேயம் |
கபளித பகவத் விபூதி யுக்மாம்
திசது மதிம் யதிராஜ ஸப்ததிர்ந : ||
உபநிஷத்களுக்கு விபரீத அர்த்தங்கள் சொல்வதால் வந்த விபத்துக்கு
யதிராஜ ஸப்ததி , அந்த விபத்தைப் போக்குகிற தீபஹாரத்தி போன்றதாகும்.
இதை அனுசந்திப்பவர்களுக்கு பகவானிடம் பரம பக்தி ஏற்படும்
74. கரதலா மலகீக்ருத ஸத்பதா
ச்ருதிவதம்ஸித ஸுந்ருத ஸுக்தய : |
திவஸ தாரகயந்தி ஸமத்ஸராந்
யதி புரந்தர ஸப்ததி ஸாதரா : ||
இந்த யதிராஜ ஸப்ததியை அனுசந்தித்தால் பகவத் கல்யாண
குணங்கள் தெளிவாகத் தெரியும். இந்த ஸ்துதியின் பக்தர்கள் ,
பொறாமை உடைய பிறரை,நக்ஷத்ரங்கள் எப்படிப் பகலில்
ப்ரகாசிக்காதோஅந்தமாதிரி, ப்ரகாசத்தை இழக்கச் செய்வர்
ஸ்வாமி தேசிகனின் “யதிராஜ ஸப்ததி ” ஸங்க்ரஹ வ்யாக்யானம்
ஸம்பூர்ணம்
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நம :