ஸ்ரீ யதிராஜ ஸப்ததி
——————————
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரி |
வேதாந்தாசார்யவர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
————————————————–
அடியேன் , இண்டர்நெட்டில் எழுதிய “இராமாநுச நூற்றந்தாதியை”ப் பற்றிய
“எங்கள் கதியே, இராமாநுச முநியே” –என்பதைப் படித்தவர்கள், அவைகளைப் ,
படித்துப் படித்துப் பிடித்த சில அன்பர்கள், இதை வரவேற்றும், பாராட்டியும்
ஈ -மெயில் அனுப்பி, ஸ்ரீ யதிராஜ ஸப்ததிக்கு சுருக்கமாக விளக்கம்
எழுதுமாறு அடியேனைப் பணித்தார்கள்.
2. மிகச் சிறிய வயதில், ஸ்தோத்ரபாட கோஷ்டியில், சேவித்திருக்கிறேன்.
இருந்தாலும், அடியேன் தயங்கினேன். இது, ஸ்வாமி தேசிகன் அருளிய அருமையான
க்ரந்தம். பல மகான்கள், பல்வேறு காலங்களில், வ்யாக்யானம் அருளி
இருக்கிறார்கள். விரிவாகவும் அருளி இருக்கிறார்கள்; ரத்னச் சுருக்கமாகவும்
அருளி இருக்கிறார்கள். அடியேன், எழுதுவதா, வேண்டாமா ? வேண்டாம்
என்றால், வேண்டுகோள் விடுத்த அன்பர்கள் என்ன நினைப்பார்கள்;
எழுதலாம் என்றால், அதற்கான தகுதி, ஆற்றல், அறிவு துளியாவது
இருக்கிறதா ? என்றெல்லாம் யோசித்தேன்.
3. முதலில், ஸ்வாமி தேசிகன் அருளிய க்ரந்தத்தைப் படிக்கலாம் என்று
படிக்கத் துவங்கினேன் . ஒவ்வொரு ச்லோகமாகப் படிக்கத் துவங்கியதும்,
சிறிது நாட்கள், ச்லோக அர்த்தங்களிலேயே ஆழ்ந்தேன். ஒரே, ப்ரமிப்பு !
ஸ்வாமி தேசிகனுக்கு, ஸ்ரீ உடையவர்மீது, எவ்வளவு அளவு கடந்த அத்யந்த
பக்தி என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன். ஸ்ரீ ராமானுஜரை, ஸ்வாமி தேசிகனின் ,
யதிராஜ ஸப்ததி மூலமாகத் தர்சித்தேன்; தெண்டனிட்டேன் ;புந ; புந
தெண்டனிட்டேன். விசிஷ்டாத்வைதபரமாக, எவ்வளவு விவரங்கள்,
எவ்வளவு ரஹஸ்யங்கள் , எவ்வளவு பிறமத கண்டனங்கள்,காலத்தால்
அசைக்க முடியாத, காலத்தால் அழிக்க இயலாத விசிஷ்டாத்வைதக்
கொள்கைகளின் ஸ்தாபிதம்————-
இவற்றையெல்லாம் , இன்னும் பிறவற்றையெல்லாம் –இக்கட்டான ஒரு
காலகட்டத்தில் —பிற மதங்களின் நெருக்குதலில், ஆக்ரமிப்புகளில் ,
வேதமார்க்கத்தை ஒப்புக்கொள்ளும் அத்வைதம்போன்ற பிரிவுகளின்
தாக்குதலில், அவைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளி, வெகு லாகவமாக
கேட்போர் மனம் பிணைக்கும் வண்ணம், வேதங்களிலிருந்தே
ஆதாரங்களை எடுத்துச் சொல்லி, ஸ்ரீ விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்த,
ஸ்ரீ யதிராஜரை , மனக் கண்ணால் தர்ஸித்து,அவரது திருவுருவம் ,
மனத்தில் அழியாமல் நிலைகொள்ளவும், அவரது செயற்கரிய செயல்களை
உலகத்தார் உணர்ந்து போற்றவும், “ஸப்ததி” யை நமக்கு அளித்துப்
பேருபகாரம் செய்துள்ள பரம ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் மலரடிகளைத்
த்யானித்து, போற்றி, வணங்கி, அர்ச்சித்து, தெண்டனிட்டேன்.
4. இச்சமயத்தில், ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய “ஸப்ததி ரத்ன
மாலிகா’வில் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவன் கிருபையால், ஒரு ச்லோகம் ஸ்புரித்தது.
ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிகசிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : ||
ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,
பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம்
நிலைபெறவேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும்
உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
5. ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின்
திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில்
புகழ்கிறார்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் ||
ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி
தேசிகனைத் தரிசிப்போர் பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி
தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்
6. அடுத்த ச்லோகத்தில்,
ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் ||
உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத
சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும்
வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்
இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி
தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.
7.கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-
லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : ||
வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்
( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த
ஸம்வாதம் , முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை
நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார். ( பங்குனி உத்ர நந்நாளில்
யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதிசெய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )
8. ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்
பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் ||
ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும்
திருவடி சம்பந்தத்தாலும் ,பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற
ஆசார்யர்களை நமஸ்கரித்து , பாதராயணராகிய ஸ்ரீ வேத வ்யாஸரை
சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார்
என்கிறார்.
9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் ;–
காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் ||
யதிராஜர், வேதங்களாகிற பத்ரவேதியை அடைந்தபோது,
புத்த மதம் நழுவுகிறது ; கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும்
மணம் அற்றதாகிறது; குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு
வெகு தொலைவில் எறியப்படுகிறது. இப்படியிருக்க, சங்கரர்
முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?
10. ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு
வந்ததாகச் சொல்கிறார்.
உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||
பெருமைமிகு திருவரங்கச்செல்வனே ! அர்ஜுனனுக்குச்
சொன்ன சரம ஸ்லோகத்தையும் , விபீஷணணுக்குச் சொன்ன
சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து, ஸ்ரீ பாஷ்யகாரருக்கு
உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து, அவரது
ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து
அருள்வாயாக ! ( வரம் யாதெனில் ) ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ
அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ , ப்ரபத்தியாகிய
பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )
11. சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார் ;–
யதி , சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்
ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ்த்ரைவித்யமாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் ||
நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில்
அனுக்ரஹித்த ச்லோகம் . ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத்
தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சிவாய்த்தான்
மண்டபத்துக்குப் போனபோது, நடாதூரம்மாள், குழந்தையான
ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக்
கடாக்ஷித்து , அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,
ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் ) ஆசீர்வாதமாகச்
சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார். இது, ஸ்வாமி
தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.
