pillai anthathi

Posted on Apr 6 2016 - 4:03am by srikainkaryasriadmin
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்

பிள்ளையந்தாதி

சீரார் தூப்புல் பிள்ளை அந்தாதி என்று செழுந்தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தான்
ஏரார் மறைபொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீரா கிய வரதாரியன் பாதம் துணை நமக்கே

பொருள்:—இந்த உலகு உய்ய, சிறப்பான வேதங்களின் சாரமாகிய அர்த்தம் முழுவதையும் ஆய்ந்தெடுத்து, செழுமையான தமிழால் ஸ்வாமி வேதாந்த தேசிகன் திருவடிகளின் கீழ், பெருமைஉள்ள

” தூப்புல் பிள்ளையந்தாதி ”
என்னும் பிரபந்தத்தை, நேர்மையாக அருளிய கல்யாண குண பூர்ணரான “வரதாசார்யரெ”ன்றுதிருநாமம் பூண்ட நயினாசார்யருடைய திருவடிகளே நமக்குத் துணை

ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் , தன்னுடைய ஆசார்யனும், பிதாவுமான ,ஸ்வாமியைப் பற்றி அருளியது “பிள்ளையந்தாதி ”
இதில், ஒவ்வொரு பாசுரத்திலும்,
இராமாநுசமுனி வண்மைபோற்றும் (ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஔதார்யத்தைப் போற்றும் உயர்ந்த குணமுள்ள)
உத்தர வேதியுள்வந்துதித்த செய்யவள் மேவிய சீர் அருளாளரை சிந்தை செய்யும் மெய்யவன் எந்தை இராமானுசன் (பிரம்மா செய்த யாகத்தில் அவதரித்தவரும், பிராட்டி நித்யவாசம் செய்யப்பெற்றவருமானபேரருளாளனை எப்போதும் சிந்திக்கும்ஸ்ரீ பாஷ்யகாரருடைய )
இராமாநுச முனி இன் உரை சேரும் (உடையவருடைய இனிய ஸ்ரீ சூக்திகள் நிரம்பிய )
குணக்குலம் ஓங்கும் இராமானுசன் குணம் கூறும் (நல்ல குணங்கள் கூட்டமாக வளரும் உடையவருடைய கல்யாண குணங்களைச் சொல்கிற)
என்று , உடையவரைச் சொல்லி, அதன்பிறகு ,ஸ்வாமி தேசிகனைச் சொல்கிறார்.
ஸ்ரீ ஆண்டாள், நாச்சியார் திருமொழியில், தன் திருத் தகப்பனாரைச் சொல்லி, பிறகு தன்னைச் சொல்வாள். அந்த
ஸம்ப்ரதாய பத்ததி , இங்கு தெரிகிறது. இவையெல்லாம் ஆசார்ய பக்திக்கு உதாரணம்.

அடியேன், பழமொழிகளும், புதிய விளக்கங்களும் என்கிற புத்தகத்தில்,
33 வது பழமொழியான” கடைத் தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததைப் போல” என்கிற பழமொழிக்கு ,விளக்கம் சொல்கையில், பிள்ளையார் என்பதற்கு” யார் பிள்ளை “ன்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டு, இந்தப் பிள்ளை,
தூப்புல் வள்ளல் ,
தூப்புல் குலமணி,
தூப்புல் தேவு,
தூப்புல் குலத்தரசு
தூப்புல்காவலன்
தூப்புல் குலவிளக்கு,
தூப்புல் எந்தாய்,
தூப்புல் மால் ,
தூப்புல் அற்புதன்,
தூப்புல் ஐயன்,
தூப்புல் அணுக்கன் ,
தூப்புல் மாபுருஷன்,
தூப்புல் புனிதன்,
தூப்புல் மெய்த்தவன்,
தூப்புல் குரு,
தூப்புல் அம்மான்,
தூப்புல் துரந்தரன்,
தூப்புல் பிள்ளை

என்றெல்லாம் சொல்லி இவரே வழிப் பிள்ளையார் என்று எழுதி இருக்கிறேன்
இந்தச் சொற்றொடர் யாவும், ஸ்வாமி தேசிகனின் குமாரர் குமார வரதாசார்யர் என்கிற நயினாசார்யர் ,
அவர் அருளியுள்ள ” பிள்ளையந்தாதி”யில் புகழ்ந்து சொன்ன சொற்றொடர்கள்.

பிள்ளையந்தாதி

,ஸ்வாமி தேசிகனின் பெருமையை/ புகழை/ ஸ்வாமி நயினாசார்யர் ,தாம் அனுபவித்ததை, 20 பாசுரங்கள் உள்ள ப்ரபந்தமாக நமக்குக் கொடுத்திருக்கிறார்.
புரட்டாசி ச்ரவணம்—ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்ரம் , . அன்று, விடியற்காலையில் ,
ஸ்வாமி தேசிகன் ,ரத்னாங்கி ஸேவையில், ஆஸ்தானத்திளிருந்து ஸ்ரீ ஹேமாப்ஜவல்லித் தாயார் சந்நிதிக்கு வந்து, பிரதக்ஷணமாக , நேரே கருட நதியைக் கடாட்சித்து, அங்கு வேதபாராயணம் தொடக்கமாகி, மாட வீதி வழியாக,
சத்ரசாமரங்களுடன், இரண்டு பெரிய குடைகளை கைங்கர்யபரர் பிடித்து வர, நாதஸ்வர வித்வான்கள் மல்லாரியும், பிற ராகங்களும் வாசிக்க, ஔஷத கிரிக்கு 74 படிகள் ஏறி , ஸ்ரீ ஹயக்ரீவனைப் பிரதக்ஷணம் செய்து, அடியேனும் அடியேனின் ஆப்தர்களும் சேர்ந்து நிர்மாணித்துள்ள “மஹா மண்டபத்தில்”, நடுவில் உள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார் .ஸ்ரீ ஹயக்ரீவனை மங்களாசாசனம் செய்கிறார்.

சிறிது நாட்களுக்கு முன்பு, “ராமானுஜ தயா பாத்ரம் ” —ஸ்வாமி தேசிகன் சம்பந்தமான தனியனை –அர்த்த
விசேஷங்களுடன் அனுபவித்தோம். இவற்றைப் படித்த ஒரு மஹானுபாவர், அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்கி, “ராமானுஜ தயா பாத்ர ” அர்த்த விசேஷங்களைப் புத்தகமாக ஆக்கி, ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்ரத்தன்று, இலவவசமாக விநியோகிக்க முன்வந்தார். ஆனால் அது அப்படியே நின்றுவிட்டது—

இப்போது, ஸ்வாமி தேசிகன் விஷயமாக, அவரது திருக்குமாரர் அருளிய “பிள்ளையந்தாதி” என்கிற
ப்ரபந்தச் சுருக்கைப் பார்க்கலாம்.(brief summary )—

1.ஸ்வாமிதேசிகனின் திருவடி என் தலையில் இருக்க
2.அத்திருவடிகளை வணங்கி ,அந்த மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகி, நரகம் நீங்கி மோக்ஷத்தைப் பெற, அத் திருவடிகள் ,நம் தலையில் நித்ய வாசம் செய்யும் பாக்யம்( பெற்று )
3.நித்ய வாசம் செய்யும்போது, தேசிகனின் கீர்த்தியை வாயாரப் புகழ்ந்து,
4.அவர் அருளிய ஸ்ரீ சூக்திகளின் அர்த்த விசேஷங்களே நமக்கு ஸாரம்,உஜ்ஜீவிக்க ஸாதனம் என்று (மகிழ்ந்து )
5.அவரதுஅவதாரமான, திருவேங்கடமுடையானே, தூப்புல் பிள்ளையாக அவதரித்து ,உலகை நல்வழிப்படுத்த,
6.ஸர்வதந்தர ஸ்வதந்த்ரர் போன்ற அவருடைய கல்யாண குணங்களை, திருநாமங்களை அநுஸந்தித்து ,பாபங்கள் ஓடி மறைய
7..ஸ்வாமி தேசிகன் ,ஹ்ருதயத்தில் நித்யமாக வசிப்பதால், பாபங்கள் இனியும் வந்து துன்புறுத்தாது என்று
8..அற்பர்களை, தூப்புல் பிள்ளையின் திருவடிகளை பக்தியுடன் வணங்குமாறு பணித்து
9.அப்படிப் பணிந்தால், நல்ல குணங்கள் பெருகி கெட்ட குணங்கள் விலகும் ;ஆதலால் தேசிகனைச் சரண் அடையுங்கள் என்று சொல்லி
10..அப்படிச் சரணம் அடைபவர்கள், “கற்பகம்போல் வேண்டிய பலனைத் தரவல்ல ஆசார்யனே ! ஸம்சாரத்தில் மூழ்கித் தவிக்கும் எனக்கு, அதை அடியோடு வேரறுத்து, உங்கள் திருவடிகளை எப்போதும் சேவிக்கவேண்டும் …” என்று பிரார்த்தித்து
11அற்ப மானிடரிடம், வேறு பலனைக் கோரிப் புகழாமல்,ஸ்வர்க்கம் இவற்றை விரும்பாமல் மோக்ஷத்தை விரும்புகிற எனக்கு, அதைச் செய்ய வல்லவர் தேசிகனே என்று, அதை அடையுமாறு அருளவேண்டும் என்று கோரி
12.”அஜ்ஞாநியாகிய நான், எதையும் அநுஷ்டிக்கத் தெரியாதவன்”, ஆதலால், ஸ்வாமி தேசிகனின் க்ருபையைத்தவிர வேறு சாதனம் இல்லாத நிலையில் உள்ள எனக்கு அருள் புரிந்து,
13.கர்ம,க்ஜான,பக்தி யோகம் தெரியாத, மற்ற பலன்களில் ஆசையில்லாத ,வைராக்யமும் இல்லாத, ப்ரபத்திக்கு உள்ள மஹா விஸ்வாஸமும் ஏற்படாத என்னை, ஸ்வாமி தேசிகனின் திருவடிகளைத் த்யானிக்கும் நிலையை, நீயே அருளி
14.ஸ்வாமி தேசிகன் திருவடிகளில் நேராகப் பக்தி இல்லாதவன், அப்படிப் பக்தி இருக்கும் பெரியோர்களிடம் பக்தி இல்லாத நீசன்—-இருந்தாலும், என்னைப் புறக்கணிக்காமல், ஸ்வாமி தேசிகனின் கருணை வெள்ளத்தில் சிறிதாவது வேணுமென்று ப்ரார்த்தித்து
15.ஸ்வாமி தேசிகனின் க்ருபயைத்தவிர வேறு கதியில்லை; ஹிதத்தை எனக்குச் சொல்லி, பாப கர்மாக்களைப் போக்கி ஸ்வரூப,உபாய , புருஷார்த்த நிஷ்டைகளை அருளி உய்யுமாறு செய்து,
16.திருவேங்கடமுடையான் விஷயத்திலும், ஸ்வாமி தேசிகன் அடியார்கள் விஷயத்திலும் பரிசுத்த எண்ணத்துடன் கபடமற்றபக்தி ஏற்பட அருளி
17.தூப்புல் குலத் தலைவரான அப்புள்ளார் திருவடிகளை ஆச்ரயித்தவருமான ஸ்வாமி தேசிகன் காத்தருள வேண்டுமென்று ப்ரார்த்தித்து
18.இருகைகளைக் கூப்பி விண்ணப்பிக்கும் ,எனது விண்ணப்பத்துக்குச் செவி சாய்த்து, ஸ்வாமி தேசிகனின்
திருவடிகளை ச் சரணடைந்த பெரியோர்களிடம்என் மனம் ஈடுபடவேண்டும் என்கிற வரத்தை அருளி
19.ஸ்வாமி தேசிகனின் திருவடிகளும், புன்சிரிப்புடன் கூடிய திருமுக மண்டலமும் வ்யாக்யா முத்ரையைக் காட்டும் திருக்கரமும் ,துளசி மாலை, தாமரைமணி மாலை, யஜ்ஜோபவீதம் மிளிரும் திவ்ய மங்கள விக்ரஹம் என் மனதில் பதிந்து ,அகலாது வாழவேண்டும்

20.இப்படி, அடியார்கள் அநுசந்திக்க இருபது பாசுரங்களைப் பாடி, இதைத் தினந்தோறும் சொல்பவர்கள், பாக்யசாலிகள்; அவர்கள் சிரஸ்ஸில் ,ஸ்வாமி தேசிகனின் திருவடித் தாமரைகள் குடிபுகுந்து, எந்நாளும் விலகாது இருக்கும் ,இதைக்காட்டிலும், சிறந்த புருஷார்த்தம் வேறு இல்லை

மேலே சொன்னவை , சுருக்கமான பொருள்—அர்த்தம்

இப்போது,

 

1..மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதேபெரிய பிராட்டியான ஸ்ரீ மஹாலக்ஷ்மி —தாமரை புஷ்பத்தில் வீற்றிருப்பவள் —-அவள், மகிழ்ச்சியுடன் நித்ய வாஸம்
செய்கிற திருமார்பை உடைய எம்பெருமானின் ,பரிசுத்தமான திருவடித் தாமரைகளைத் தன் தலையில் அணிந்து, எல்லா ஜீவர்களும் உஜ்ஜீவிக்க வேண்டுமென்று நீண்ட நெடுங்காலமாகக் கருணையைப் பொழிந்து நிற்கும்
ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருவடிகளையே உபாயமாகவும் ,அந்த உபாயத்துக்குப் பலனாகவும் நாடிப் பெருமை பெற்ற ,ஸ்ரீ பாஷ்யம் முதலிய ஸ்ரீசூக்திகளை அளித்து, உலகத்துக்கு க்ஷேமத்தை நல்கிய ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஔதார்ய குணத்தை வாயாரப் புகழ்ந்து பேசும் ஸ்வாமி தேசிகனின் திருவடிகள் ,என் தலையை அலங்கரிக்கின்றனமுதலில் தாமரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி —-பெரிய பிராட்டி
பெரிய பிராட்டி, அகலகில்லேன்——-என்று நித்ய வாஸம் செய்யும் திருமார்பினனான எம்பெருமான்
எம்பெருமானின் திருவடிகளைத் தலைமேற் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வார்
நம்மாழ்வார் திருவடிகளையே உபாயமாகவும் ,பலனாகவும் கொண்ட எம்பெருமானார்—ஸ்ரீ இராமானுசர்
இராமானுசரின் ஔதார்ய குணத்தைப் போற்றுகிற ஸ்வாமி தேசிகன்
இத்தகு, ஸ்வாமி தேசிகனின் திருவடிகள் என் தலையில் இருப்பதால், இதுவே அலங்காரம்
இத் திருவடிகள் என் தலைமேல் நிற்கிறது என்கிறார்
பார்த்தல் என்பது , பொதுவாக, முகத்தைப் பார்த்தல் எனப் பொருள்படும். அப்படிப் பார்க்கும்போது, முதலில் தலை—-
தலையில் திருவடிகள்
யாருடைய திருவடிகள் ?
ஆசார்யன், ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்
இவர் எப்படிப்பட்டவர்—-?
இவர், இராமானுசரின் ஔதார்ய குணத்தைப் போற்றுபவர் –இவர் ராமானுஜ தயா பாத்ரம்
இந்த இராமானுசர், நம்மாழ்வாரின் திருவடிகளே கதி என்று இருப்பவர்
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரோ, எம்பெருமானின் திருவடிகளைத்தன் தலையில் தாங்கி நிற்பவர்
எம்பெருமானோ, பிராட்டியைப் பிரியாத எம்பெருமான்
திவ்ய தம்பதி
ராமானுஜ தயாபாத்ரமான ஸ்வாமி தேசிகனின் திருவடிகளைத் தலையில் சுமப்பதால்,
இராமானுசர்,
ஸ்ரீ நம்மாழ்வார்
திவ்ய தம்பதிகள்
ஆகிய ஆசார்ய பரம்பரையின் அநுக்ரஹம்
இது—இந்தப் பெரும் பாக்யம்–ஸ்வாமி தேசிகனின் திருவடிகளைத் தலையில் சுமப்பதால், கிடைத்து விடுகிறது.2.சென்னி வணங்கச் சிறு பனி சோர என் கண்ணினைகள்
வெந்நரகங்களும் வீய வியன்கதி இன்பம் மேவ
துன்னு புகழுடை தூப்புல் துரந்தரன் தூமலர்த்தாள்
மன்னிய நாள்களும் ஆகுங்கொல் மாநிலத்தீர் நமக்கே

மாநிலத்தீர் —–பூமியில் வசிப்பவர்களே—–என்று அழைத்துச் சொல்கிறார்

நம்முடைய தலை, ஸ்வாமி தேசிகனின் திருவடிகளைவணங்கிக் கொண்டே இருக்கவேண்டும் .கண் இணைகள் –இரண்டு கண்களிலிருந்தும் மகிழ்ச்சி –நீர்த்துளியாக –பனி சோர–பனியின் குளிர்ச்சியைப் போல அரும்பவேண்டும்.
( சந்தோஷத்தில் ,கண்களிருந்து நீர் பனி போலச் சில்லென்றும், துக்கத்தில் இதே கண்ணீர் சூடாகவும் இருக்குமாம் )
இப்படி இருந்தால், கொடிய நரகம் இல்லை. வியன்கதி இன்பம்—அற்புதமான மோக்ஷம் நிச்சயம். இப்படி, புகழ்மிகஉள்ள, தூப்புல் ஸ்வாமி தேசிகனின்—- தூமலர்த்தாள் —பரிசுத்தமான மலரடிகள்—, நமது தலையில் ஸ்திரமாகப் பொருந்தி விளங்கும் நாளும் நமக்கு வாய்க்குமோ ?
ஸ்வாமி தேசிகனின் திருவடி ஸம்பந்தமே உயர்ந்த புருஷார்த்தம் என்று இப் பாசுரத்தில் சொல்லப்படுகிறது.

3.மாநிலத்து ஓதிய மாமறை மன்னிய நற்கலைகள்
ஆனவை செய்யும் அரும்பொருள் அத்தனையே அருளும்
தூநெறி காட்டும் இராமானுச முனித் தோத்திரம் செய்
ஊனம் இல் தூப்புல் அம்மான் ஓர் புகழ் இன்றி உய்விலையே

வேதங்கள், சகல ஜீவராசிகளுக்கும் ஹிதமானவற்றைச் சொல்கின்றன. வேதத்தைத் தழுவி, சாஸ்த்ரங்கள் இவற்றின் உண்மைப் பொருளை உலகுக்கு வெளியிடுகின்றன —அதுதான் ப்ரபத்தி மார்க்கம். இந்தப் ப்ரபத்தி மார்க்கத்தை விளக்கி, இதுதான் உய்வதற்கு வழி என்று வழிகாட்டிய பரம ஆசார்யரான ஸ்ரீ ராமானுஜரின் புகழை எப்போதும் ஸ்தோத்ரம் செய்கிற ,புகழ்ந்து பேசுகிற தூப்புல் அம்மானை —ஸ்வாமி தேசிகன் கீர்த்தியை ,வாயாரப் புகழ்ந்து வாழ்வதைத் தவிர, நமக்கு உய்வதற்கு வேறு வழி இல்லை. நாம் உய்ய வேண்டுமென்றால் ஸ்வாமி தேசிகனின் கீர்த்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

4. உய்யும் வகை இல்லை உத்தர வேதியுள் வந்து உதித்த
செய்யவள் மேவிய சீர் அருளாளரைச் சிந்தை செய்யும்
மெய்யவன் எந்தை இராமானுசன் அருள் மேவி வாழும்
ஐயன் இலங்கு தூப்புல் பிள்ளை ஆய்ந்த பொருள் அன்றியே

ப்ரம்மனின் அஸ்வமேத யாகவேதியில் வந்து உதித்த ,பெருந்தேவியின் நாயகனான பேரருளாளனையே எப்போதும் வணங்குகிற , மெய்யவன்—சத்யசீலன் . எந்தை—எமக்கு ஸ்வாமி. இப்படியாக உள்ள இராமானுசரின் க்ருபையையே
,பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்கின்றவரும் . ப்ராம்மண ச்ரேஷ்டரும் ஆன, தூப்புல் ஸ்வாமி தேசிகன் தன்சூக்திகளில் ஆராய்ந்து அருளிய அர்த்த விசேஷங்களைத் தவிர, நாம் உஜ்ஜீவிக்க வேறு வழி இல்லை.
3 வது பாசுரத்தில் —ஸ்வாமி தேசிகனின் கீர்த்தியைச் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் உய்வதற்கு வழி என்றார்
4 வது பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ சூக்திகளில் ஆராய்ந்து சொல்லப்பட்ட அர்த்த விசேஷங்களே ,உய்வதற்கு வழி என்கிறார்

 

 

5.அன்று இவ்வுலகினை ஆக்கி அரும் பொருள் நூல் விரித்து
நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவியும் பின்
வென்றிப் புகழ்த் திருவேங்கடநாதன் எனும் குருவாய்
நின்று நிகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே

பகவான், ஸ்ருஷ்டிக்கும்போது இப்பிரபஞ்சத்தைப் படைத்து ,அருமையான அர்த்த விசேஷங்களைச் சொல்லும் சாஸ்திரங்களையும் கொடுத்து ,அதனாலும் அக்ஜானம் நீங்காத சேதனர்கள் ,தங்கள் ஊனக் கண்களாலே தரிசித்து உய்யுமாறு திருவேங்கட மாமலையில் அர்ச்சா ரூபியாய் எழுந்தருளி இருக்கிறான் இந்தச் சமயத்திலும், சேதனர்கள்,திருந்தாமல் ஸம்சாரத்தில் உழல்வதைப் பார்த்து, கருணையுடன் தூப்புலில் திருவேங்கடமுடையானாக —ஆச்சர்யனாக அவதரித்து நின்று, தன் ஸ்ரீ சூக்திகளாலும் ,உபதேசங்களாலும் இப்பூமியில் உள்ள சேதனர்களின் ஸம்சார தாபத்தைப் போக்கி அருளினான். இவன் அவதரிக்கும் வரை, ஸ்திரமாக இருந்த ஸம்சார நோய்களை ஒழித்து அருளினான்

6.வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் எங்கள் தூப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கடநாதன் வியன் கலைகள்
மொய்த்திடும் நாவின் முழக்கொடு வாதியர் மூலம் அற
கைத்தவன் என்று உரைத்தேன் கண்டிலேன் என் கடுவினையே

ஸமர்த்தன் ,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரன் –என்று புகழப்படும் ஸமர்த்தன் . ஸகல வேத வேதாந்த அர்த்தங்களையும் நன்கு அறிந்தவன்.வேதாந்த சாஸ்த்ரத்துக்கு ஆசார்யன் (வேதாந்த தேசிகன்). எங்களுடைய நெடுநாள் தவத்தின் பயனாக , தூப்புலில் அவதரித்தவன். அனைவரிலும் சிறந்தவன். வேங்கடநாதன் என்கிற திருநாமம் உடையவன். விசித்ரமான வித்யைகள் யாவும் போட்டிபோட்டுக்கொண்டு ,கூட்டங்கூட்டமாக வந்து நாவில், கர்ஜிக்க, அந்த வாதங்களால், வாதிகளின் மூலத்தையே அறுத்தவன்—-என்று ,அவருடைய திவ்ய கல்யாண குணங்களையும் திருநாமங்களையும் அனுசந்தித்தேன் . உடனே, என் கடுவினை —என்னுடைய பாபங்கள்—ஒன்றைக்கூட நான் காணவில்லை. ( சென்றவிடம் தெரியாமல் மறைந்து விட்டன )

7வினைகாள் உமக்கு இனி வேறு ஓர் இடம் தேடவேண்டும் ,எனைச்
சினமேவி முன்போல் சிதைக்கும் வகை இங்கு அரிது கண்டீர்
என்எனில் இராமாநுசமுனி இன் உரை சேரும் தூப்புல்
புனிதர் என் புந்தி புகுந்து திகழ்ந்து பொருந்தினரே

பாபங்களே—-(வினைகாள் என்று கூப்பிடுகிறார் ). முன்போல நீங்கள் கோபங்கொண்டு என்னைத் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து, வசிக்க வேறு இடம் தேடிச் செல்லுங்கள். ஏன் என்றால், ராமானுஜரின் இனிய சூக்திகள் குடிகொண்ட ,தூப்புலில் அவதரித்த புனிதரான ஸ்வாமி தேசிகன் ,என் நெஞ்சில் புகுந்து ,ப்ரகாசித்து, ஸ்திரமாய் அமர்ந்துள்ளார் .
பாசுரங்கள் ஆறும், ஏழும், ஸ்வாமி தேசிகனை ஹ்ருதயத்தில் நிறுத்தினால் அவர் புகழைப் பேசும் திறம் உடையவராக இருந்து அவற்றை அனுசந்தித்தால் ,அவர்களுக்குப் பாபங்கள் சேராது என்பைதச் சொல்கின்றன.

8.பொருந்திப் புவிதனில் பொய்வாழ்க்கை பூண்கின்ற பூரியர்காள்
இருந்து நரகின் இடர் கெடும் ஆற்றை அறிகின்றிலீர்
பொருந்தும் பொருள் ஒன்று கேளீர் பொங்கும் இவ் இடர் கடற்கு
வருந்தாது தூப்புல் மாபுருடன் பாதம் வணங்குமினே

இவ்வுலகில், இவ்வுலகுக்கே உண்டாக்கப்பட்டது போலப் பொருந்தி—அமர்ந்து, பொய்யான வாழ்க்கையை, நிலையில்லாத வாழ்க்கையை, விருப்பத்துடன் பூணுகின்ற —அடைகின்ற, பூரியர்காள்—- அற்பர்களே !
இவ்வுலகில் இருந்துகொண்டே ,நரக வேதனையை ஒழிக்கும் உபாயத்தை அறியாமல் இருக்கிறீர்களே !உங்கள் ஸ்வரூபத்துக்கு ஏற்றதான வழியைக் கூறுகிறேன் —கேட்பீராக! மேன்மேலும் வளர்கிற ஸம்சார துக்கத்தில், வருந்த வேண்டாதபடி தூப்புலில் அவதரித்த மஹாபுருஷன் ஸ்வாமி தேசிகனின் திருவடிகளை வணங்குங்கள் ……

 

 

 

 

 

9.வணக்கம் ஒடுக்கம் வழக்கம் ஒழுக்கம் இரக்கம் சேரும்
இணக்கம் உறக்கம் இழுக்கும் அழுக்கும் இகந்து நிற்கும்
குணக்குலம் ஓங்கும் இராமாநுசன் குணம் கூறும் தூப்புல்
அணுக்கனைப் பிள்ளைதனை அரணாக அடைபவர்க்கே

பெரியோர்களிடம் பணிவு, அடக்கம், நல்ல பழக்க வழக்கங்கள் ஸதாசாரம் (ஒழுக்கம் ) இரக்கம் ஆகிய குணங்கள் சேரும்—வந்து அடையும் . துஷ்ட ஸஹவாசமும் , அஞ்ஜா னம் என்கிற தூக்கமும், குற்றம், அசுத்தம் போன்ற தீய குணங்களும் விலகி நிற்கும்—-எப்போது,,,,? நல்ல குணங்கள் கூட்டமாக வளருகிற ஸ்ரீ பாஷ்யகாரரின் திருக் கல்யாண குணங்களைப் பேசுகிற, தூப்புலில் அவதரித்த ,பாகவத ஸ்ரேஷ்டரான , பிள்ளை என்று புகழப்படும் ஸ்வாமி தேசிகனை சரணாக அடைந்தால் …..

10.அடைபவர் தீவினை மாற்றி அருள்தரும் தூப்புல் ஐய
இடர்தரும் இப்பிறவிக்கடல் தன்னில் அமிழ்ந்த என்னைக்
கடை அறக் கழற்றி நின்தாள் இணைக் காணும் வண்ணம்
உடையவனே அருளாய் உணர்ந்தார் தங்கள் கற்பகமே

தன்னைச் சரணமாக அடைபவர்களின் பாபங்களை ஒழித்து, கருணையை வழங்குகிற தூப்புலில் அவதரித்த— உடையவனே= எங்கள் நாதனே உன் பெருமையை உணர்ந்தவருக்கு கற்பகமாய் நின்று அருள்பவரே ,,,,துன்பங்களைக் கொடுக்கிற இந்த சம்சார சமுத்ரத்தில் மூழ்கி இருக்கும் அடியேனுக்கு ,அந்த சம்சார பந்தத்தை அகற்றி —-வேரோடு சாய்த்து—, உன் திருவடி இணையை சேவிக்கும் பாக்யத்தை அருள்வாயாக——
இப்பாசுரம் முதல், அடுத்த பத்துப் பாசுரங்களில் ஸ்வாமி தேசிகனிடம் விண்ணப்பிக்கிறார்
இப்பாசுரத்தில், ஸ்வாமி தேசிகனின் திருவடிகளில் பற்றும் ,பக்தியும் உண்டாக ,அவரையே ப்ரார்த்திக்கிறார்

11.கற்பகமே என்று காசினியோரைக் கதிக்கமாட்டேன்
வெற்பிடையே நின்று வெந்தவத்தீயிலும் வேவமாட்டேன்
பற்பல கலைவல்ல பாவலனே பத்தர் ஏத்தும் தூப்புல்
அற்புதனே அருளாய் அடியேனுக்கு அருள் பொருளே

பற்பல வித்யைகளில் தேர்ந்த கவித்வம் உள்ளவனே! பக்தர்களால் புகழப்படும் தூப்புல் அற்புதனே—தூப்புலில் அவதரித்த அற்புத ஆசார்யனே —இவ்வுலக மானிடரை, அற்ப பலன்களை விரும்பி கற்பகமே என்று புகழமாட்டேன். ஸ்வர்க்கம் இவையெல்லாம் வேண்டி, மலையில் நின்று கடுந்தவம் செய்யமாட்டேன். நான் விரும்புவது மோக்ஷம் ஒன்றே—-அதை , நான் பெறும்படி செய்ய வல்லவர் தேவரீரே ! ஆதலால், அடியவனான எனக்கு, பெறற்கு அரிய பலனாகிய மோக்ஷத்தைப் பெறும்படி அருள்வீராக !

12.பொருளானது ஒன்றும் என்னில் பொருந்தாது அதுமன்றி அந்தோ
மருளே மிகுத்து மறையவர் நல்வழி மாற்றி நின்றேன்
தெருள் ஆர் மறைமுடித் தேசிகனே !எங்கள் தூப்புல் தேவே!
அருளாய், இனி எனக்கு உன்னருளே அன்றி ஆறிலையே

ஞானம் மிகுந்த—நிறைந்த ஸ்ரீ வேதாந்த தேசிகனே ! எங்கள் பாக்யத்தால், தூப்புலில் அவதரித்த எங்கள் குல தெய்வமே!
அடியேன் உயர்ந்த கதியை அடைவதற்கு ஸாதனமான உபாயங்கள் எதையும் அனுஷ்டிக்காதவன். அஞ்ஜானம் நிறைந்து வைதீக அனுஷ்டானம் எதையும் செய்து, மனத்தில் தோன்றியபடி திரிகின்றேன். இனி, அடியேன் உஜ்ஜீவிக்க, தேவரீரின் க்ருபையைத் தவிர வேறு சாதனம் இல்லை. இத்தகைய அடியேனுடைய நிலையை தேவரீர் நினைந்து, உணர்ந்து, அருள்புரிய வேண்டும் ( இது ஆகிஞ்சந்யம் )

 

 

 

 

13.ஆறாக எண்ணும் அரும் கருமம் அஞ் ஞானங் காதல்கொண்டு
வேறாக நிற்கும் விரகு எனக்கு இல்லை விரக்தி இலை
தேறாது திண்மதி சீர் ஆர் கதியிலும் செம்பொன்மேனி
மாறாத தூப்புல் மாலே ! மறவேன் இனி நின்பதமே

ஒருபோதும் நிறம் மாறாமல் உள்ள திருமேனியுடன் விளங்கும் எங்கள் தூப்புல் மாலே !—-தூப்புல் எம்பெருமானே —தூப்புல் தெய்வமே —-மோக்ஷத்துக்குச் சாதகமாக சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ள அருமையான கர்மயோகம், ஞான யோகம், பக்தியோகம் இவைகளைக் கைக்கொண்டு, வேறு உதவி வேண்டாத —சஹாயம் வேண்டாத , ஸாமர்த்யம் எனக்கு இல்லை. அதே சமயம், வைராக்யமும் கிடையாது. பலவகைகளிலும் சிறப்பான, ப்ரபத்தி உபாயத்திலும் திடமான பக்தி (மஹா விச்வாஸம் ) சித்திக்கவில்லை (ஏற்படவில்லை) பின்பு,
நான் என்ன செய்வேன் ? உன் திருவடிகளை மறவேன்—மறக்க மாட்டேன் (மறவேன் நின் பதமே)

14.
நின் பதம் தன்னிலும் நேரே எனக்கில்லை அன்பு கண்டாய்
நின் பதம் ஒன்றிய அன்பரிலும் நேசமில்லை ! அந்தோ !
என்படி கண்டு இனி என் பயன் ஏதமில் தூப்புல் எந்தாய்
உன் படியே அருளாய் ! உதவாய்! எனக்கு உன் அருளே

ஏதமில் தூப்புல் எந்தாய்—-எவ்விதத் தோஷமும் இல்லாத (குற்றமும் இல்லாத) தூப்புல் ஸ்வாமியே ! அடியேனுக்கு , உன் திருவடிகளிலும் நேராக பக்தி இல்லை. உன் திருவடிகளைச் சேர்ந்த அடியார்களிடத்திலும் நேசமில்லாத ,நீசன் ,அடியேன். அந்தோ—ஐயோ. இனிமேல் என்னுடைய இத்தகையத் தன்மையை நினைத்து என்ன பயன் ?(என்னிடம் ,எந்த நல்ல குணம் இருப்பதாக நினைத்து நீர் அருள்புரிவீர்—அப்படி ஒன்றுமே இல்லை—என்று பொருள் )
இதனால், அடியேனை, உதாசீனம் செய்யாதீர்கள்—-புறக்கணிக்காதீர்கள் . உங்கள் கருணை வெள்ளம் ,மேட்டிலும்
ஏறிப் பாயவல்ல கருணை! அடியேன் மீது, கொஞ்சமாவது, அக்கருணையைச் செலுத்தி ,அடியேன் உஜ்ஜீவிக்க அருள்வீராக

15.உன்னருள் அன்றி . .எனக்கு ஒரு நல் துணை இன்மையினால்
என் இரு வல்வினை நீயே விலக்கி இதம் கருதி
மன்னிய நல் திருமந்திரம் ஓதும் பொருள் நிலையே
பொன் அருளால் அருளாய் !புகழ் தூப்புல் குல விளக்கே !

உலகமே புகழும் தூப்புல் குலத்திற்கு தீபமாகப் ப்ரகாசிக்கும் ஸ்வாமியே —-உம்முடைய க்ருபையைத்தவிர வேறு நல்ல ஸஹாயம் எனக்கு இல்லை. எனக்கு ஹிதம் எது என்பதை நீரே சிந்தித்து, அடியேனுடைய புண்ய,பாப —இரண்டு வலிமையான கர்மங்களை விலக்கி, ஸ்திரமான உயர்ந்த மூல மந்த்ரமான திருவஷ்டாக்ஷரம் தெரிவிக்கும் மூன்று நிலைகளையும் ( ஸ்வரூப நிஷ்டை, உபாய நிஷ்டை, புருஷார்த்த நிஷ்டை ) அடியேன் பெற்று உய்யுமாறு அருள் புரிய வேண்டுகிறேன்
(ஸ்வரூப நிஷ்டை—–1.-பிறர் தன்னை அவமானப்படுத்தினாலும், அது ஆத்மாவுக்கு அல்ல, என்று வருத்தமில்லாமல், இருப்பது 2. தன்னை அவமதிப்பதால், தன்னுடைய பாபத்தை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்களே என்று அவர்களிடம் தயையுடன் இருப்பது. 3. தான் , நினைத்து நினைத்து வருத்தப்பட வேண்டிய தன்னுடைய குற்றங்களை ,அவர்கள் எடுத்துச் சொல்லி நினைவுபடுத்தினார்களே என்று, அப்படிப்பட்டவர்களிடம் நன்றியுடன் இருப்பது. 4. அப்படி அவமதிப்பவர்கள், பகவானால் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்து, அவர்களிடம் மனம் மாறுபடாமல் இருப்பது. தன் குற்றத்தை அவர்கள் சொல்வதால், தன் பாபம் கழிகிறது என்று மகிழ்ச்சி

உபாய நிஷ்டை—1.-பகவானே கதி என்று இருப்பது . 2. மரணம் வந்தாலும் சந்தோஷத்துடன் வரவேற்பது. 3. பகவான் ரக்ஷகன் ; அவன் எப்படியும் காப்பாற்றுவான் என்று மனம் தேறி இருப்பது. 4. பரண்யாஸம் ஆன பிறகு , அதே பலனுக்கு
வேறு ப்ரயத்னம் செய்யாமல் இருப்பது5. அநிஷ்ட நிவ்ருத்தி, இஷ்டப்ராப்தி —பகவானுடைய பொறுப்பு என்று இருப்பது.

புருஷார்த்த நிஷ்டை—1. சரீர சம்ரக்ஷணத்தில் நோக்கம் தவிர்த்து, கவலை இல்லாமல் சாஸ்த்ரங்கள்அனுமதித்த போகங்கள் , தன்னுடைய ப்ரயாசை இல்லாமல் தாமே வந்து அடைந்தால் , கர்மம் கழிவதாக எண்ணி , விலக்காமல் அனுபவிப்பது. 2. இன்ப, துன்பம் —சமமாகப் பாவித்து (இன்ப மகிழ்ச்சி ,துன்ப சோகம் ) பகவத் கைங்கர்யத்தைச் செய்து வருவது.3. பகவத் அனுபவமான பரமபதத்தைப் பெற, மிகவும் ஆவலுடன் இருப்பது )

16.
விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக்காதல் கொண்டு உறைமார்பன் திறத்தும் உனதடியார்
துளக்கு ஆதல் இல்லவர் தங்கள் திறத்திலும்தூய்மை எண்ணி
களக்காதல் செய்யும் நிலை கடியாய் !தூப்புல் காவலனே

தூப்புலில் அவதாரம் செய்து ,உலகத்தார்கள் உஜ்ஜீவிக்க வழி செய்யும் காவலனே—ஸ்வாமி தேசிகனே —
திருவேங்கடமாமலையில் ,தீபம் போலப் ப்ரகாசிப்பவன், மணம்மிக்க தாமரை மலரில் எழுந்தருளி உள்ள பெரிய பிராட்டி, மிகவும் ஆசையுடன் நித்ய வாஸம் செய்யும் திருமார்பை உடையவன், —-இப்படிப்பட்ட திருவேங்கடமுடையானுடைய விஷயத்திலும் , எப்போதும் பரிசுத்தமான எண்ணத்துடன் ,கொஞ்சமும் கபடமில்லாத பக்தியைச் செய்யுமாறு தேவரீர், அடியேனுக்கு அருள் புரிவீராக

 

 

17.
காவலர் எங்கள் கடாம்பிக் குலபதி அப்புளார்தம்
தேமலர்ச் சேவடி சேர்ந்து பணிந்து அவர்தம் அருளால்
நா அலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்ற நம்பி
காவல ! தூப்புல் குலத்தரசே ! எமைக் காத்தருளே !

எங்களை எப்போதும் காக்கும் , கடாம்பி வம்சத் தலைவரான அப்புள்ளாருடைய தேன் ஒழுகும் தாமரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை, ஆச்ரயித்து, வணங்கி , அவர் கடாக்ஷிக்க, தமிழ் வேதம், ஸம்ஸ்க்ருத வேதம் இவற்றினுடைய சிறந்த ஸாரார்த்தங்களைப் பெற்றுள்ள நம்பியே –பூரணனே ! காவல –அனைவரையும் காப்பவனே . தூப்புல் குலத்தரசே !எங்களைக் காத்து, ரக்ஷித்து அருள்வீராக

18.
அருள்தரும் ஆரண தேசிகனே ! எங்கள் தூப்புல் தேவே!
வரு கவிதார்க்கிக சிங்கமே ! வாதியர் வாழ்வு அறுத்தாய் !
இருகையும் கூப்பி உரைக்கும் இவ்விண்ணப்பம் ஒன்று கேளாய் !
உருவ! எனக்கு அருளாய் ! எண்ணும் உள்ளம் உன் தொண்டரையே

உலகத்தார் உஜ்ஜீவிக்க வேண்டுமென்று கருணையைப் பொழியும் ஸ்ரீ வேதாந்த தேசிகனே ! எங்கள் குடியாகிய (வம்சம்)
தூப்புல் குலத்துத் தெய்வமே !கவிதார்க்கிக ஸிம்ஹமே ! ப்ரதிவாதிகளின் வாழ்வை அழித்தவரே !அடியேன், இரண்டு கைகளையும் கூப்பி, செய்யும் விண்ணப்பத்தைக் கேட்டு ,அருள்வீராக !தேவரீரின் திருவடிகளையே தஞ்சம்–சரணம்-என்று பற்றிய அடியவர்களிடம், அடியேனின் மனம் எப்போதும் ஈடுபடும்படி, அடியேனுக்கு அருள்வீராக

19
தொண்டர் உகக்கும் துணை அடி வாழி ! நின் தூமுறுவல்
கொண்ட முகம் வாழி ! வாழி, வியாக்கியா முத்திரைக்கை
வண்திரு நாமமும் வாழி ! மணிவடம் முப்புரிநூல்
கொண்ட சீர்த் தூப்புல் குலமணியே !வாழி நின் வடிவே !

சிறப்பு வாய்ந்த தூப்புல் குல ரத்னமே !பக்தர்கள் விரும்பும் உன் இரண்டு திருவடிகளும் வாழ்க ! தூய்மையான (கள்ளங்கபடில்லாத –பரிசுத்தமான ) புன்சிரிப்புள்ள உன் திருமுக மண்டலம் வாழ்க !வ்யாக்யான முத்ரையுடன் கூடிய
உன் திருக்கை வாழ்க !அழகிய (திருமண் காப்பும் ) திருநாமமும் (புகழும் ) வாழ்க ! துளஸி மணிகளாலும், தாமரை மணிகளாலும் ஆகிய மாலைகளையும், யஜ்ஞோபவீதத்தையும் தரித்து, ப்ரஹ்ம தேஜஸ் பிரகாசிக்கும் தேவரீருடைய
திவ்ய மங்கள விக்ரஹம் , அடியேனின் மனத்தில் எப்போதும் பதிந்து, எக்காலமும் அகலாது வாழ்க !

20

வடிவு அழகு ஆர்ந்த வண் தூப்புல் வள்ளல் மெல் மலரடிமேல்
அடியவர் ஓத அந்தாதி இருபதும் , ஆய்ந்து உரைத்தேன்
திடமுடன் ஈதைத் தினந்தொறும் ஆதரித்து ஓதும் அன்பர்
முடியிடை நேர்படும் தூப்புல் அம்மான் பத மாமலரே

திருமேனி அழகு முழுதும் பொருந்திய ,ஒளியுள்ள தூப்புலில் அவதரித்த வள்ளலான ஸ்வாமி தேசிகனுடைய மெல்லிய தாமரை மலர் போன்ற திருவடிகள் விஷயமாக, அடியார்கள் அநுசந்திக்க ,இருபது அந்தாதிப் பாசுரங்களை ஆராய்ந்து, பகிர்ந்தேன். (கூறினேன்). மனத்தில் உறுதியுடன், இந்தப் பிரபந்தத்தை ஆதரித்து, ஒவ்வொரு தினமும்
அநுசந்திக்கும் அடியவர்களின் சிரஸ்ஸில் , தூப்புல் அம்மான் ஸ்வாமி தேசிகனின் திருவடிகளாகிற சிறந்த
புஷ்பங்கள், எந்நாளும் விலகாது அலங்காரமாக வீற்றிருக்கும்

ஸ்ரீ நயினாராசார்யர் திருவடிகளே சரணம்
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்

—————————————————–ஸுபம் ————————————————

 

Sarvam Sree Hayagreeva preeyathaam
yoga Hayag11150908_1597230853886318_2870767032116029131_n

About the Author

Leave A Response