Pasurams 21 to 30
21 வது பாசுரம்
———————-
நந்தகோபன் குலவிளக்கே !
நாடிவந்த எங்களுக்கு,
தோற்றுகின்ற சுடரே–கிளியே
துயிலெழுந்து வருவாயே !
பகைவர் வலி தொலைந்து
பாதம் பணிவதுபோல்,
போற்றவே வந்துள்ளோம்—கிளியே
புகழவே வந்துள்ளோம் !
22வது பாசுரம்
———————
மன்னாதி மன்னர்களும்
மதிப்பு மிக இழந்து
எம் ஆவி எனக் கருதிக்—கிளியே
உன்பாதம் பணிவதுபோல்,
உன் சயனம் மிக அருகே
உளமுருகி நிற்கின்றோம்
செங்கண் மலர்ந்தவிழக் —கிளியே
எங்களுக்கு அருள்வாயே !
தொடருகிறது—–
23வது பாசுரம்
———————
குகைச் சிங்கம் தீவிழித்து
குதூகலமாய் வருமாற்போல்
வந்தமர்ந்து நாங்கள் —கிளியே
வந்த காரணம் கேளாய்
24வது பாசுரம்
———————-
உலகமளந்த அடிபோற்றி !
இலங்கை வென்ற திறல் போற்றி !
சகடமுதைத்த புகழ் போற்றி !—கிளியே
அகம் மயக்கும் கழல் போற்றி !
குடையெடுத்த குணம் போற்றி !
விடையிறுக்கும் வேல் போற்றி !
போற்றியே கோவிந்தா–கிளியே
ஏற்றிவிடு உன் பதத்தில் !
25 வது பாசுரம்
—————————-
பிறந்தது ஒருத்தி மகன்,
சிறந்தது ஒருத்தி மகன்
நெருப்பென இருப்பானே –கிளியே
அருத்தி வந்தோம் நெடுமாலை
26வது பாசுரம்
————————-
உன்னிடம் கேட்பதெல்லாம்
உன்னிடம் உள்ளவையே
விளக்கு ,கொடி ,விதானமும்–கிளியே
விண்மீதும் முழங்குகிற
சங்கங்கள்,சக்கரமும்
செவ்விய நல் பெரும்பறையும்
ஆலின் இலையோனே –கிளியே
அருளுடன் கொடுத்திடுக
27வது பாசுரம்
—————————
கோவிந்தன் தனைப்பாடி
கோபியர் நாம் கொண்டாடி
சம்மானம் பெற்றிடுவோம் –கிளியே
சம்மானம் எதுவென்றால்
தோடும் ,செவிப்பூவும்,தோள்வளையும்
நாடும் புகழ்கின்ற சூடகமும், பாடகமும்
அணிகலன்கள் யாமணிந்து –கிளியே
ஆடையும் மிக உடுத்து,
ஆற்றுப் பெருக்கைப்போல்
பாற்சோறு சாப்பிட்டு
கோவிந்தன் தனைக்கூடிக் –கிளியே
குளிர்ந்தே இன்புறுவோம்
28வது பாசுரம்
—————————
மாடுகள் மேய்க்கின்ற
மாமாயன் கண்ணன் குலம்
நாங்கள் பிறந்துள்ளோம் –கிளியே
எங்களின் புண்ணியத்தால்
அன்பினால் உரிமையுடன்
அறியாது அழைத்திருப்போம்
சீறி அருளாக் கண்ணன்–கிளியே
பூரிக்கப் பறை தருவான்
29வது பாசுரம்
———————
பொழுது புலரா வேளையிலே
பொற்றாமரை அடிபோற்றி
போற்றுகிறோம் கண்ணனைக்–கிளியே
குற்றேவல் கொள்வதற்கு
எற்றைக்குமே நாங்கள்
உற்றோமே கண்ணனுக்கு
அவனுக்கே ஆட்செய்வோம் –கிளியே
அகற்றுவோம் மற்றவைகள்
30வது பாசுரம்
—————————-
கோகுலத்துச் செல்வன் பாலகன்
கோதையின் மாதவன்,கேசவன்
கோதை சொல் பாவையைக் –கிளியே
குணத்துடன் செப்பிடுவர் யார்யாரோ
திருமகள் கேள்வன் திருவருளால்
இருநிலமும் பெற்று இன்புற்று
திருவருள் தொடர்ந்திடக்–கிளியே
பெருவாழ்வு வாழ்ந்திடுவார்
——————————————————————-
திருப்பாவைக் கிளிக்கண்ணி
இருக்கிறதா இலக்கணங்கள்
தவறுக்குக் கண்டணங்கள் –கிளியே
தவறாமல் தராதீர்கள்
ஆண்டாளின் அவதாரம்
அவளளித்த திருப்பாவை
அன்றாடம் சொல்லுங்கள்–கிளியே
அல்லல் அகன்று விடும்
தொல்லை தொலைந்து விடும்
துயரங்கள் மறைந்து விடும்
அச்சுதன் அவனருளால் –கிளியே
அனைத்தின்பம் வந்து விடும்
ஆன்றோரின் வாக்கு இது
சான்றோரின் சான்று இது
ஆதலால் உரைத்திட்டேன் –கிளியே
அடியேனின் வாக்குமிது
———————————————————–
ஸுபம்
—
Sarvam Sree Hayagreeva preeyathaam