Stone vigrahas

Posted on Apr 11 2016 - 6:40am by srikainkaryasriadmin

பகவான், அர்ச்சா மூர்த்தியாக, கோவில்களில் எழுந்தருளி , அருள் பாலிக்கிறான்

அர்ச்சா மூர்த்திகள்—-சாளக்ராம, சுதை வடிவ, மர (அத்தி மரம் ) வடிவ , கருங்கல் சிற்ப, பஞ்சலோக விக்ரஹ
மூர்த்திகளாக சேவை சாதிப்பது தெரிந்ததே—

சாளக்ராமச் சிலைகள் மிக விசேஷத் தன்மை உள்ளவை–சில திவ்ய தேசங்களில், மூலவர் எம்பெருமான் ,சாளக்ராம

எம்பெருமானாக எழுந்தருளி இருப்பார். இவருக்கு சாந்நித்யம், அனுக்ரஹ பலம் மிக மிக அதிகம் ( ஆகம விதிப்படி பூஜை நடைபெற்றால்)

கருங்கல்லில் உருவாக்கப்படும் சிலைகள்—

ஸ்தபதிகள், அந்தந்த தெய்வச் சிலைகளுக்கு ஏற்ப, காடு, மலை என்று அலைந்து கருங்கல்லைத் தேடி, அதற்கு உரிய கருங்கல்லைத்  தேர்வு செய்வார்கள். தேர்வு செய்த கருங்கல்லை, வண்டி முதலியவற்றில் ஏற்றித் தாங்கள் அமைத்துள்ள சிற்பக் கூடத்துக்கு எடுத்து வருவார்கள்.

ஆகமவிதிப்படி ,அக்கருங்கல்லுக்குப்  பூஜை செய்து, நல்லநாள் தேர்ந்தெடுத்து, தெய்வச் சிலையை வடிக்கத் தொடங்குவார்கள்.

முதலாம் பராந்தக சோழன், முதலாம் ராஜராஜன் —இவர்கள் சோழ சாம்ராஜ்யத்து சக்ரவர்த்திகள்–இவர்கள் காலத்திலும், நரசிம்ம பல்லவன் காலத்திலும் கருங்கல்லால் உருவாக்கப்பட்ட  தெய்வத் திருவுருவங்கள் ,கோவில்களில் ஆகம சாஸ்த்ரப்படி  ப்ரதிஷ்டை  செய்யப்பட்டு, சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது.

இந்த நிலைக்கு முற்பட்ட காலத்தில், மரத்தைத் தேர்ந்தெடுத்து, தெய்வச் சிலைகளைச் செய்தார்கள். அத்திமரம் விசேஷமாக ,எடுத்துக் கொல்லப்பட்டது.  சுதைச் சிற்பங்களிலும் தெய்வச் சிலைகளைச் செய்தார்கள் ( முழுவதும் சுண்ணாம்பு—அதற்கென ப்ரத்யேகமாக  பூமியிலிருந்து எடுக்கப்பட்டது )
இவைகளை எல்லாம் , தேவைப்படில், வேறு ஒரு சமயத்தில் சொல்கிறேன்

இப்போது, கருங்கல்லில் உருவாக்கப்படும் தெய்வத் திருவுருவங்கள் பற்றி——–

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்கள்  நமது நாட்டில் நிறைய உள்ளன.இக்கோவில்களில்  சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும் .இங்கெல்லாம், தெய்வ உருவங்களை, கருங்கல் சிலையாகப்  ப்ரதிஷ்டை செய்திருப்பார்கள். தினமும் முறையாக பூஜை நடைபெற்றுவரும்  கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் சமயத்தில்,நம் உடலில் ஓர்  அமாநுஷ்ய சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக  உணரலாம்.

ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைத்தார்கள் . பஞ்ச லோகங்களில்,   தெய்வச் சிலைளை விக்ரஹமாகச் செய்து , உத்ஸவ மூர்த்திகளாக  ப்ரதிஷ்டை  செய்து, வீதிகளில் எழுந்தருளச் செய்து, கோவிலுக்கு வர இயலாதவர்கள், வயோதிகர்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரும் சேவிக்க  பற்பல வாகனங்களில் எழுந்தருளப் பண்ணினார்கள். பஞ்சலோக விக்ரஹங்களில்  சாந்நித்யம், ஆற்றல்  நிறைய உண்டு.  ஆனாலும் , கருங்கல்லால் தெய்வத் திருவுருவங்களைச செய்து, ப்ரதிஷ்டை  செய்யப்பட்டுள்ள மூர்த்திகளுக்கும்  சாந்நித்யம், மகிமை,  அனுக்ரஹ பலம்  அதிகம் உண்டு. அதனால்தான், எந்தக் கோவிலாக இருந்தாலும் , மூலவரை சேவிக்க  பக்தர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

கருங்கல்லின் ஆற்றல் .எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது

கருங்கல்—-.இதில் ஜலம் (தண்ணீர் ), பூமி (நிலம்) , அக்நி (நெருப்பு) , வாயு (காற்று),ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் சக்திகள் உள்ளன

ஜலம் :–

—–கல்லில் நீர் உள்ளது.தொட்டுப் பார்த்தாலே  குளிர்ச்சியை உணர முடியும். கல்லில் தண்ணீர் ஊற்று  இருப்பது  எல்லோருக்கும் தெரிந்ததே .

நிலம்:–

கல்லில் மறைந்திருக்கும் மண்ணினால் ,  கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:–
கல் ஒன்றோடொன்று உரசினால், நெருப்பு உண்டாகிறது.  அக்னி, கல்லில் மறைந்து இருக்கிறது என்பதை உணரலாம் .

காற்று:–:
தேரை வாழ்வது கருங்கல்லுக்குள் — சுவாசிக்கக் காற்று இல்லாமல் ஒரு உயிர் எப்படி வாழ முடியும் ?கல்லுக்குள்  காற்றும்  உண்டு..

வானம் என்கிற ஆகாயம்:—

வெளியே இருக்கும் ஒலியைத் தனக்குள்ளே இழுத்து, அதை வெளியிடும் சக்தி ஆகாயத்துக்கு உண்டு–மழைகால, கோடைகால இடி முழக்கம்  இதற்குச் சான்று.  கருங்கல்லும்,  ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்குள்ளே ஆகர்ஷித்து,  உடனே வெளிப்படுத்துகிறது. .எனவே தான் நாம் ஏதாவது பேசினாலும், பாடினாலும், கருங்கல்லால்  கட்டப்பட்டகோவில்களில் அவை எதிரொலிக்கின்றன.

நமது உடல் , பஞ்ச பூதங்களின் சேர்க்கை—

இதற்கான விவரம், அடியேனின்(—மறுபடியும் பிறவியா? பகவானின் திருவடியா? ) புத்தகத்தில் உள்ளது.

உயிர் பிரிந்த பிறகும் , உடல், பஞ்ச பூதங்களோடு சேர்ந்து விடுகிறது.

பஞ்ச பூதங்களின்  அதீத சக்தி  கருங்கல்லில்  இருப்பதால்,  கருங்கல்லில் உள்ள தெய்வத் திருவுருவங்களை , வழிபடுவோருக்கு,கோரும் பலன்கள் கிடைக்கின்றன. பாஞ்சராத்ர, வைகானச ஆகம முறைப்படி  பூஜைகள் பக்தியுடன், ச்ரத்தையுடன்  நடைபெறும் கோவில்களில்,  பஞ்சபூதங்களின் அனுக்ரஹ சக்திகள்  அதிகரிக்கின்றன.

அம்மாதிரியான கோவில்களில், கொடிமரம் அருகே தரையில்  தெண்டன் சமர்ப்பிக்கும்போதும்,  ப்ரதக்ஷணம்  செய்யும்போதும், கர்ப க்ரஹத்தில் எம்பெருமானை  நெய்/ நல்லெண்ணெய்  தீபத்தில் தரிசிக்கும்போதும் , கற்பூர ஹாரத்தியின் போதும்  , நம் உடலில்  நம்மை அறியாமலே அதிர்வுகள் உண்டாகி , மனஸ்  அதைக் க்ரஹித்து,  வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.( சாத்விக குணம் அதிகமாக இருக்கும் விடியற்காலை வேளையில்,  ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவையில் —சிற்றஞ்சிறுகாலே வந்து உன்னை சேவித்து—-என்னுமாப்போலே , காலை வேளைகளில்கோவிலுக்குப் போவது நல்லது )

மரத்தில் மறைந்தது , மாமத யானை

கல்லைக் கண்டால் , கடவுள் அகப்படார்

கடவுளைக் கண்டால், கல்லே தெரியாது.

11310901_921296281268062_1693684307_n
About the Author

Leave A Response