Sri Nrusimham—

Posted on Jun 16 2016 - 8:19am by srikainkaryasriadmin
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —13  
 
இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது—
ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸஹஸ்ர  நாமத்தை 12 வது பாகத்தில் 
எழுதிய பிறகு—–
ஒரு நாள் —பின்னிரவு—   
மட்டபல்லியில் ,ஸ்ரீ க்ருஷ்ணா நதியில் விடியற்காலையில் 
தீர்த்தமாடிவிட்டு, ப்ராதஸ் சந்த்யையை  முடித்துவிட்டு 
படிகளில் ஏறுகிறேன்—
எதிரே —முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் –படிகளில் 
இறங்கி வருகிறார் 
 
அடியேனைப் பார்க்கிறார். 
   
ந்ருஸிம்ஹ பகவானைப் பற்றி ,  நான் சொல்லி இருப்பதையும் 
உமது நடையிலேயே எழுதும் —-மட்டபல்லியின் மறைபொருள் 
உம்முடன் இருக்கிறான் ——————   
 
விடியற்காலைக் கனவு கலைகிறது—-எழுந்து உட்கார்ந்து 
மட்டபல்லி நாதனை மனதார ஜபிக்கிறேன்—– 
 
——————————————————————
 
அடியேன் ,மட்டபல்லி மஹா க்ஷேத்ரத்துக்கு, முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாசார்யர்
அங்கு எழுந்தருளி இருந்தபோது , தர்மபத்னி சஹிதமாகவும் ,தனியாகவும் சென்றிருக்கிறேன்
அதற்கு முன்பு ,மதுராவில் யஜ்ஞம் நடந்தபோதும் சென்றிருக்கிறேன்.
ஸ்வாமியிடம் , ஸ்ரீ பரத்வாஜ மஹரிஷி ஆவிர்ப்பவித்து, ஸ்லோகங்களைச் சரமழையாகக்
கொட்டுவாரே  அந்தச் சமயத்தில் , டேப்பில் ரெகார்டு செய்து, ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து
இருக்கிறேன்.
ஒருதரம் , மட்டபல்லியில் ஸேவித்தபோது, யாகத்துக்கு ஆவாஹனம் செய்த தீர்த்த
கும்பத்திலிருந்து , யாகமெல்லாம் நிறைவான பிறகு,  ,வஸ்த்ரத்தை எடுத்து ,உடுத்திக்
கொள்ளச் சொன்னார். ஒரு சமயம்  ஒரு ரூபாய் நாணயங்களாகக் கொடுத்தார்.
ஒரு சமயம் மட்டபல்லி நாதன் ராஜ்யலக்ஷ்மி டாலர்கள் கொடுத்தார். ஒரு சமயம்
புஸ்தகங்களைக் கொடுத்தார். ஒரு சமயம் ,உபதேசமாகச் சில—-அஹோ பாக்கியம்–
இவை எல்லாவற்றிலும், மிக மஹோன்னதமானது   , ஸ்வாமி , 45ம் பட்டம் அழகியசிங்கரிடம்
பரஸமர்ப்பணம் செய்துகொண்ட நாளில் அடியேன் அங்கு இருந்ததாகும். அடியேன் பாக்யம் —
ஆஹா , என்ன கோலாகலம் ! வார்த்தைகளால் எடுத்துரைக்க இயலாதவை —-
ஸ்ரீமத் அழகியசிங்கரை வழியனுப்பும் உபசாரமாக, நெடுந்தூரம் போய்விட்டு,இரவுதான்
மட்டபல்லிக்குத் திரும்பினார் . எந்த நகரம்வரை போய்வந்தார் என்பது இப்போது நினைவில்லை–

(வயது மிகவும் அதிகமாகிவிட்டது—ஞாபகம் வருவதில்லை )

——————————————————————————————————————

யாருமோர் நிலைமையனென அறிவரிய எம்பெருமான்

யாருமோர் நிலைமையனென அறிவெளிய எம்பெருமான்

 ( தாமஸ , ராஜஸ ,ஸாத்விகங்களில்,  ஸாத்விக கர்வம் இருக்கலாம்–
நம்பெருமான் –நம்முடைய பெருமான் –எம்முடைய பெருமான் )
எம் –எம்முடைய பெருமான் இருக்கிறாரே ,இவர் இப்படிப்பட்டவர் என்று
யாராலும் அறிந்துகொள்ள முடியாதவர்
இந்த எம் –எம்முடைய பெருமானே இவர் இப்படிப்பட்டவர் என்று சிலரால்
அறிந்துகொள்ளக் கூடியவர்.
அவரிடத்திலே பக்தி இல்லையேல் அறிந்துகொள்ள முடியாது.
அவரிடத்தில் பக்தி இருந்தால்–பக்தி முற்றித்  திருவடியைப் பற்றியவர்களால்,
அவரை அறிய இயலும். பற்றற்றான் பற்றினைப் பற்றவேண்டும்
இதுவே ந்ருஸிம்ஹாவதாரம் —
ஹிரண்யனுக்கு,அறிவரியன்
ப்ரஹ்லாதனுக்கு, அறிவெளியவன்
ஹிரண்யன் , அவரை இல்லை என்றான். ஆனாலும் ,அவனுக்குள்ளேயும்
பகவான்;
ஹரியே சரணம் என்று த்யாநிக்கிற,சொல்கிற குழந்தை
ப்ரஹ்லாதனிடத்திலும் பகவான்.
சமஸ்த ஜீவன்களுக்கும் அந்தர்யாமி —

சிம்ஹாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.

கோவில்களில் ,வேதபாராயணம் செய்யச்செய்ய ,அர்ச்சாமூர்த்திக்கு
அநுக்ரஹம் பண்ணும்படியான சக்தி  கூடுகிறது.
உங்களுக்கு என்ன துன்பம்?

இந்த அர்ச்சாமூர்த்தியை ஸேவியுங்கள்—துன்பம் தூளாகி விடும் என்கிறார்கள்.

பரத்வாஜ மஹ ரிஷிக்கு அப்படிப்பட்ட  பரமானந்த அனுபவம் –கொண்டாடுகிறார்—
யாரை?  –மட்டபல்லி  லக்ஷ்மி ந்ருஸிம்ஹனை  —
இவருக்கு, சக்தி என்றால் சாமான்ய சக்தி இல்லை–மட்டபல்லி நாதனின் தீர்க்கமான
நாசிகை ;விசால நேத்ரம்; புடை படர்ந்து, மிளிர்ந்து , செவ்வரியோடிய அப்பெரியவாய
கண்கள்; அந்தப் புருவங்கள்; உயர்ந்ததான ச்ரோத்ரம் ;கர்ண பத்ரம்; அதர பல்லவம்;
உயர்ந்து இருக்கும் முகவாய்க்கட்டை ;கம்பு சுந்தரம் என்கிற திருக் கழுத்து;
அதிலே மூன்று வரிகள் (கோடுகள்); அப்படி இருப்பது மிக உயர்ந்த ஸாமுத்ரிகா
லக்ஷணம் ; விபவ அவதாரத்தில் ஸ்ரீ ரகுவீரன் ஸேவை இப்படி இருக்குமாம்.
மட்டபல்லி நாதனுக்கும் அதே லக்ஷணங்கள் —ந்ருஸிம்ஹனும், ராமபிரானும்
ஒருவரே! இது மட்டபல்லியில் –கிருஷ்ணா நதி தீரத்தில் துள்ளிக் குதித்து
விளையாடும் வானரங்களுக்குத் தெரிந்திருக்கிறது .ந்ருஸிம்ஹ க்ஷேத்ரத்தில்

வானரங்கள் !

எம்பெருமானிடத்திலே பரிபூர்ண விச்வாஸம் இருக்க வேண்டும்.

ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ : ,  அயமேவ ரக்ஷக :—–அவன்தான் ரக்ஷகன் ;

நாம் எல்லாரும் ரக்ஷிக்கப்படுபவர்கள்.ஹிரண்யனின் ஒரு கையில் கத்தி;

இன்னொரு கையால் ப்ரஹ்லாதனைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
ப்ரஹ்லாதனைக் கேட்கிறான்—
நீ சொல்கிற நாராயணன், இந்தக் கத்திக்குள்ளே தெரிகிறானா ,சொல் —
என்று அதட்டுகிறான் . இந்தக் கத்தியாலே உன் தலையை வெட்டுகிறேன்–
அப்போது,  நீ சொல்கிற நாராயணன் , கீழே இறங்கி வந்து, தலையையும் உடம்பையும்
வைத்துத் தைத்து, உனக்குப் ப்ராணனைக் கொடுப்பானா —கூச்சலோடு
கேட்கிறான்.
ப்ரஹ்லாதன் அமைதியுடன்  பவ்யமாகச் சொல்கிறான்— நீ சொல்கிற மாதிரியெல்லாம்
அவன் பண்ணமாட்டான்
அப்போது அவனை ஏன் நம்புகிறாய் ? என்னை நம்பு–நான் ரக்ஷகன்–உன் பிதா –என்கிறான்
ஹிரண்யன்.
அந்தக் குழந்தை  தலையில், தலையில் அடித்துக்கொள்கிறது —”நான் சொல்வது
உனக்குப் புரியவில்லையா—”  என்று கேட்கிறது.
”கத்தியைக் கழுத்துக்கு அருகே கொண்டுவர விட்டு விடுவானா—” என்று கேட்கிறது–
இந்த மஹா விச்வாஸத்தை, சின்னஞ்சிறு பாலகன் ப்ரஹ்லாதன் நமக்குக் கற்றுக்

கொடுக்கிறான்.

நாராயண பட்டத்ரி ,குருவாயூரப்பனைப் பார்த்து, ”ப்ரஹ்லாத ப்ரியா—ஹே–குருவாயூரப்பா –”

என்கிறார்.

ராமாயணம் முழுவதும் ந்ருஸிம்ஹனையே சொல்கிறது. ந்ருஸிம்ஹ வைபவம்தான்

ராமாயணம்–அனுஷ்டுப் சந்தஸ்

ந்ருஸிம்ஹ மந்த்ரம் –அனுஷ்டுப் சந்தஸ்
”ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்” இந்த மந்த்ரத்தை மிக விசேஷமாகச் சொல்கிறது.
ஆதிசங்கரர், இதற்கு மிக அழகான பாஷ்யம் இயற்றி இருக்கிறார். அவர் சொல்கிறார்–
”பத்ரேண  ந்ருஸிம்ஹ : உச்யதே —”   அதாவது ‘பத்ர ” என்கிற சப்தத்தினால், ந்ருஸிம்ஹன்
சொல்லப்படுகிறான். ”பத்ரா” என்றால் மஹாலக்ஷ்மி ,மஹாலக்ஷ்மியோடு சேர்ந்து
இருக்கும் ந்ருஸிம்ஹனுக்கு ”பத்ரன்”என்று திருநாமம்.
யஜ்ஞங்களுக்கும் , பத்ரம் என்று பெயர். யஜ்ஞகர்ம ஸமாராத்யன் ந்ருஸிம்ஹன் —
அவனே யஜ்ஞபலனைக் கொடுக்கிறான்.
32 அக்ஷரங்களை உடைய ந்ருஸிம்ஹ மந்த்ரமே ராமாயணத்தில் 24000ச்லோகங்கள்–
”ஸர்வதோ பத்ரன் ” ந்ருஸிம்ஹன் —ராமன், பஞ்சவடியில் எழுந்தருளி இருந்தபோது,
ஸர்வதோ பத்ரன் என்கிற  ஆசனத்தில் அமர்ந்து இருந்தான். கோதாவரி தீரத்தில்
இருக்கும் பத்ராசலம் –இங்கு எழுந்தருளியுள்ள ராமச்சந்த்ர மூர்த்தியை, ந்ருஸிம்ஹ

ரூபியாகவே மஹான்கள் உபாஸித்திருக்கிறார்கள்.

நம்முடைய ந்ருஸிம்ஹாவதாரத்தில், உலகத்தோருக்கு ஒன்றும் சொல்லவில்லை

என்கிற குறை இருந்ததாம். அதை ராமாவதாரத்தில் தீர்த்துக் கொண்டதாகச் சொல்வர்.

ப்ரஹ்ம ஞானத்தைக் கொடுப்பவர் ,நாரதர். அப்படிஎன்றால், ந்ருஸிம்ஹ ஞானத்தைக்
கொடுப்பவர் என்று பொருள். வால்மீகி அவருடைய சிஷ்யர். ப்ரஹ்மம்

என்றாலே, ந்ருஸிம்ஹன் . ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுபவன் ந்ருஸிம்ஹன் .

ப்ரஹ்லாதனுக்கு  எதிரில் ந்ருஸிம்ஹன்  தோன்றுகிறான். உடனே, ப்ரஹ்லாதன்,
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மணஹிதாயச |

ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம :  ||

ப்ரஹ்லாதன், ”ப்ரஹ்மண்ய தேவாய நம :—–”’ என்கிறான். ப்ரம்மம் என்று

சொல்லப்படுகிற உனக்கு நமஸ்காரம் என்கிறான்.

ப்ரஹ்ம ஸுத்ரம்  சொல்கிறது—-
” அதாதோ  ப்ரஹ்மஜிஜ்ஞாஸா  ” ப்ரம்ம ஸுத்ர ப்ரதிபாத்ய தேவதை ந்ருஸிம்ஹனே
    ஆரண்ய காண்டத்தில்,
ராமபிரான்   வனத்தில் பிரவேசிக்கிறான்.  ஸிம்ஹம் , காட்டில் சஞ்சாரம் செய்கிறதாம்.
ஸிம்ஹம் ,காட்டில் இருந்தால், அந்தக் காட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பு !அடர்ந்த வனமாக
இருந்தால்,  ஸிம்ஹத்துக்கும் பாதுகாப்பு. இதை, ”சிம்ஹ வன புத்தி ந்யாயம்” என்பார்கள் .
கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவன் ,ஸ்ரீ ராமனைப் பரீக்ஷை செய்கிறான். வாலியைக்
கொல்வதற்கான சக்தி இருக்கிறதா என்கிற பரீக்ஷை—த்ருப்தி அடைந்தான்–எப்படி ?
”தவ ப்ரஸாதாத் நரசிம்ஹ ராகவா ” என்கிறான். ரகு வம்சத்தில் வந்த ராகவன் இல்லை நீ —
வெறும் ராகவனுக்கு இவ்வளவு சக்தி இருக்காது–-நீ,   ந்ருஸிம்ஹ அவதாரம் பண்ணிய

ராகவன்  என்கிறான்.

வால்மீகி  வாக்கியம்—
மம  ப்ருஷ்டகதௌ  தௌ ச சந்த்ரஸுர்யாவிவோதிதௌ  |

த்வக்ஸகாசம்  மஹாபாகே ந்ருஸிம்ஹௌ ஆகமிஷ்யத ||

வர்ஷ ருது முடிந்து .குகையிலிருந்து , ஸ்ரீ ராமன் வெளியே வருகிறான்–

அப்போது ந்ருஸிம்ஹன் வருவதாகவே இருந்தது என்கிறார் மஹரிஷி வால்மீகி

சுந்தர காண்டம் —அசோகா வனத்தில் ,ஆஞ்சநேயன் ,சீதாப்பிராட்டியைப் பார்த்துச்
சொல்கிறான் ” ஏன் முதுகில் ந்ருஸிம்ஹன் வரப்போகிறான் ”. ராமன் என்பதற்குப் பதிலாக
ந்ருஸிம்ஹன்  என்கிறான். ஆஞ்சநேயன் ந்ருஸிம்ஹ பக்தன். பலப் புராதனமான
கோவில்களில், ந்ருஸிம்ஹனை ஸேவித்தபடி ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும். நாமக்கல்,
சோளிங்கபுரம், மட்டபல்லி , வாடபல்லி  இங்கெல்லாம்  யாத்ரிகர்கள் இதனை
ஸேவித்திருக்கலாம்.
ஒரு சமயம் முக்கூர் புண்ய பூமியில் நிலத்தை உழுதபோது, பூமியிலிருந்து ரத்தம் வந்தது;
தோண்டிப் பார்த்தபோது, ஆஞ்சநேயன் விக்ரஹம் கிடைத்தது; எப்படிப்பட்ட ஆஞ்சநேயன் ?
சஞ்சீவை மலையைத் தூக்கிக் கொண்டு செல்வதைப் போல ஆஞ்சநேயன் !  அவரைப் பிரதிஷ்டை
செய்து சந்நிதி கட்டினார்கள் .ஸ்ரீ அஹோபிலமடத்து ஆராத்ய மூர்த்தி, ஸ்ரீ மாலோலன்
பல வருஷங்கள் முக்கூரில் எழுந்தருளி இருந்தான். பக்தனான அனுமனுக்கு, அருள் புரிய

அவனும் அங்கே கொலுவிருந்தான்.

விபீஷண சரணாகதியில்
ஸ்ரீ ராமன், எல்லாரையும் அபிப்ராயம் கேட்கிறான், விபீஷணனை நம்மிடம் சேர்த்துக்
கொள்ளலாமா, வேண்டாமா —என்று. ஆஞ்சநேயன் ,தன்னுடைய அபிப்ராயத்தைச்
சொன்னவுடன், போன ஸ்வாசம் ,ராமனுக்குத் திரும்பி வந்ததாம். வாயுவின் பிள்ளை
பேசியவுடன், போன ஸ்வாசம் திரும்பி வந்தது—என்று வ்யாக்யானமிடுகிறார்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. அப்போது, தன்னுடைய அபிப்ராயமாக, ரகுவீரன்
சொன்னானாம்—-
பிசாசாந் தாநவாந் யக்ஷாந் ப்ருதிவ்யாம்ஸ்சைவ ராக்ஷஸாந் |

அங்குள்யக்ரேண  தாந் ஹந்யாம்  இச்சந் ஹரிகணேச்வர ||

இங்கு ”அங்குள்யே ” என்று பதப் ப்ரயோகம். அதாவது, விரல் நகங்கள்
ப்ரேத, பிசாச, பூத ,ராக்ஷஸ —யாராக இருந்தாலும், விரல் நகத்தினாலேயே நசுக்கி விடுவேன்—
என்கிறான்—ந்ருஸிம்ஹ அவதாரத்திலே, பஞ்சாயுதங்களும் நகங்களாக மாறிற்று.
அதனாலேயே ஸ்ரீ ராமன், இந்த இடத்தில், தன்னை ந்ருஸிம்ஹனாகவே சொல்கிறான்.
அபய ப்ரதான ஸாரத்திலே, ஸ்வாமி தேசிகன், ”பஞ்சாயுதங்களிலே ,ந்ருஸிம்ஹ தக்ஷீயாம்

நகங்கள்””என்கிறார். ந்ருஸிம்ஹனுடைய ,திருநகங்களுக்கு, அவ்வளவு மஹத்தான சக்தி.

ஒரு விஷயம், தெரியுமா ?
திருவனந்தபுரத்தில், அனந்தபத்மநாபன் கோவிலில், ந்ருஸிம்ஹன் எழுந்தருளி இருக்கிறான்.
அவனுக்குப் பூஜை என்பது, மிகுந்த ஆசாரத்துடன் இருக்கவேண்டும். நம்பூத்ரிகள், மிக மிக
ஆசாரம் உள்ளவர்கள். அவர்களாலேயே , ந்ருஸிம்ஹனின் உக்ரத்தைத் தாங்க இயலாமல்,
பல நம்பூத்ரிகள் மாண்டனர். அங்கு பூஜை–தாந்த்ரிக  முறை. இந்த முறையால், ந்ருஸிம்ஹ
விக்ரஹ அதிமானுஷ சக்தியை, கலச ஸ்தாபனம் பண்ணி,கலசத்தில் மாற்றி வைத்துவிட்டு,
அதை நன்கு மூடி வைத்து விட்டு, ந்ருஸிம்ஹ விக்ரஹத்தின் வலது திருக்கரத்தில் உள்ள
கட்டை விரல் நகத்தை—-உன்னிப்பாகப் பார்க்கவும்—நகத்தை-—உளியால் தட்டிப் பின்னப்படுத்தி,
பிறகு, கலசத்தில் ஆவாஹித்த சக்தியைத் திரும்பவும் தாந்த்ரிக முறைப்படி, விக்ரஹத்தில்,
ஆவாஹனம் பண்ணினார்கள். ந்ருஸிம்ஹனின் உக்ரம்  குறைந்து விட்டதாம்.
ஒரு ந்ருஸிம்ஹ அர்ச்சா திருமேனிக்கே  இவ்வளவு உகரம் என்றால், ந்ருஸிம்ஹன் ,
தன்னுடைய அவதார சமயத்திலே எவ்வளவு உக்ரத்துடன் இருந்திருப்பான்–!

மனுஷ்ய, தேவ, இந்த்ராதி தேவர்களின் கற்பனைக்கும் எட்டாத உக்ரம் !

ஆரண்ய காண்டத்திலே, மாரீசன் , ராவணனுக்குச் சொல்கிறான்—-
ஹே—ராவணா—சீதை எங்கே அமர்ந்து இருக்கிறாள் தெரியுமா ?ந்ருஸிம்ஹனின்
மடியில் உட்கார்ந்து இருக்கிறாள் —-”தஸ்ய ஸா நரஸிம்ஹஸ்ய  ஸிம்ஹோரஸ்கஸ்ய பாமிநி ”
என்கிறான். அவனை நான் எல்லா இடத்திலும் பார்க்கிறேன்; எல்லா பதார்த்தங்களிலும்
பார்க்கிறேன்; அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்; ”உபசாரயோக்தியாக ,ராமனை,
ந்ருஸிம்ஹன் ” என்று சொல்வதாக நினைக்காதே; அன்று, ஹிரண்யனை ,ஸம்ஹரிக்கத்

தோன்றிய அதே ந்ருஸிம்ஹனின் ,திருத் தொடையில், சீதை அமர்ந்து இருக்கிறாள் ;

ந்ருஸிம்ஹனிடத்தில் ,கெட்ட எண்ணம் உள்ளவர்கள், நெருங்க முடியுமா !   ஆசார ஹீனர்கள்,
துஷ்டர்கள் அருகே போய்விட முடியுமா !உன்னால், அவளை நெருங்க முடியாது;
மாரீசன்—மாயையில் ,ராவணனை விட மிக வல்லவன்—ராமனை, ந்ருஸிம்ஹ னாகவே
காட்டி இருக்கிறான்.
ந்ருஸிம்ஹ மந்த்ரம்—32 அக்ஷரங்கள்

ராமாயணத்தின் மங்கள ச்லோகம்—32 அக்ஷரங்கள்

                  ————————-இன்னும்  தொடரும்——————-
 narasimha-21
About the Author

Leave A Response