![]() |
·
தமஸ்கந்த பாராயணம்—–நவீன பாணியில்
—————————————————-
அத்யாயம் –2–
பகவான், தேவகியின் கர்ப்பத்தை அடைவது, ப்ராஹ்மாவின் ஸ்துதி
—————————————-
கம்ஸனுக்கு யாதவ குலத்தின் மீதே அசூயை ஏற்பட்டது.
அந்தக் குலத்தையே அழிக்க முற்பட்டான்.
இவனுடன், ப்ரலம்பகன், சாணூரன், த்ருணாவர்த்தன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விதன், பூதனை,
கேசி, தேனுகன், பாணன், பௌமன், மகத தேசத்து அரசனும் மாமனாருமான ஜராஸந்தன்
என்பவர்களும் சேர்ந்து கொண்டனர். அஸுரர்கள் பலம் இப்படி வளர்ந்தது. தேவகியின் கர்ப்பத்தில் ஏற்பட்ட
ஆறு குழந்தைகளையும் , கம்ஸன், ஒருவர் பின் ஒருவராகப் பிறக்கப் பிறக்கக் கொன்றான்.
ஏழாவது கர்ப்பம் —-ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக அனந்தன் என்கிற ஆதிசேஷன் ஆவிர்ப்பவித்தார்.
இப்போது, கம்ஸனுக்கு , மரண பயம் மிகவும் அதிகரித்தது.
பகவானே ! பயத்தை நீதானே உண்டாக்கினாய் !இப்போது, நீ தானே யோகமாயையை அழைத்து,
“ஹே, யோக மாயை ! வசுதேவருடைய இன்னொரு பத்னி —ரோஹிணீ—-, கோகுலத்தில்
, நந்தகோபன் பாதுகாப்பில் வசிக்கிறாள்
( வசுதேவருக்கு ஏழு மனைவிகள் . தேவகி கடைசி மனைவி )தேவகியின் வயிற்றில் , என் அம்சமாக அனந்தன் இருக்கிறான்;அந்த கர்ப்பத்தை இழுத்து, , ரோஹிணீயின் வயிற்றில் வைத்து விடு;
நான் , தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதரிப்பேன்; நீ, நந்தகோபனுடைய மனைவி யசோதையின் கர்ப்பத்தில் அவதரிப்பாயாக; நான் பூமியில் அவதரித்ததும், வசுதேவர் என்னை , நந்தகோபன் வீட்டில் யசோதைக்குப்பக்கத்தில் வைத்துவிட்டு, யசோதை வயிற்றில் பிறக்கும் உன்னை, வசுதேவர் தன்னுடைய இருப்பிடமானகாரக்ருஹத்துக்குக் கொண்டு வந்து விடுவார்; நீ, இடம் மாறி தேவகியிடம் வந்து சேர்; உன்னை, உலக மக்கள் துர்க்கை, காளி, விஜயா,
வைஷ்ணவீ , குமுதா, சண்டிகா, கிருஷ்ணை, மாதவி, கன்யகா, மாயா, நாராயணீ, ஈசானீ ,
சாரதா, அம்பிகா, என்று பலப் பலப் பெயர்களில் பூஜை செய்வர் ” என்று ஆஜ்ஜை இட்டாய்.
உன் கட்டளைப்படிதானே,யோகமாயை என்கிற யோக நித்ரை “சரி ” என்று சொல்லி,
உன்னைப் பிரதக்ஷணம் செய்து, தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை, ரோஹிணிக்கு மாற்றினாள்; நீ செய்த மாயையால் தானே, தேவகியின் ஏழாவது கர்ப்பம் அழிந்து விட்டதாக நம்பி ஜனங்கள் ுக்கப்பட்டனர்
பகவானாகிய நீ, தேவகியின் கர்ப்ப வாசத்துக்காக, முதலில் வசுதேவர் மனஸ்சில் புகுந்தாய்;
அதனால், அவர், ஜகஜ்ஜோதியாகக் காக்ஷி அளித்தார் ; ஆசார்யன் , தன் கடாக்ஷத்தினால்சிஷ்யனை அனுக்ரஹிப்பதைப்போல, வசுதேவரால் , தேவகி அனுக்ரஹிக் கப்பட்டாள்.
இதுவும் உன் மாயையால், நடந்தது தானே . நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய்.
தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடி தோன்றினாள் கம்ஸனின் பயம் மிக மிக
அதிகமாக ஆகிவிட்டது. தன்னை அழிப்பவன் , எட்டாவது கர்ப்பமாக, தேவகியின் வயிற்றில் இருக்கிறான்; அவன் பிறந்ததும் அந்தக் குழந்தையைக்கொன்றுவிட வேண்டும் என்று , சதா சர்வ காலமும்
உன் நினைவாகவே இருந்தானல்லவா
ஹே, ஸத்ய வ்ரதரே! நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும், நீயே ப்ரமாணம்.
அதை,ஸத்யமாக ஆக்குவதும் நீயே.”” ஆகாயம் சரிந்தாலும், கடல் வற்றினாலும்,
நான் சொல்வது எப்போதும் பொய்யாகாது ,ஸத்யமே ” என்று,த்ரௌபதிக்கு வாக்களித்த கண்ணனே ! ஸத்யனே ! , நித்யனே! சநாதனனே ! சரணாகத ரக்ஷகனே ! நீ தேவகி கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் கூடியிருக்க, ப்ரஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்துசரணமடைந்ததைப் போல, பிரபன்னனாகிய அடியேனும்,அந்த ஸ்தோத்ரத்தையே சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.
பிரும்மாவின் ஸ்துதி
————-
ஓ… …. ஆதி வ்ருக்ஷமான பகவானே !
இந்த சம்ஸாரம் ஓர் அஸ்வத்த வ்ருக்ஷம் ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; அநாதி; மேலே ஆகாயத்தை நோக்கி வேர்களும், கீழே பூமியில் கப்பும் , கிளையும் ,இலையுமாக மண்டிக் கிடக்கிறது; இதற்கு, ஸுகம் , துக்கம் என்கிற இரண்டு பழங்கள்;
மூன்று ஆணி வேர்கள்—- இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்என்கிற காலமான மூன்று ஆணி வேர்கள்;
முக்குணங்கள் —-ரஜஸ், தமஸ்,ஸத்வம் என்கிற மூன்று குணங்கள்;
நான்கு விதமான புருஷார்த்தங்கள் , இந்த வ்ருக்ஷத்துக்கு, மரப்பட்டை;
ஐந்து இந்த்ரியங்கள் –கரணங்கள் ;
ஆறு அவஸ்தைகள் —அதாவது, ஆறு நிலைகள் ..பிறப்பு, ஸ்திதி, வளர்ச்சி,முதுமை, மரணம், அறிவு .
மற்றும் , பசி, தாகம், வருத்தம், மோஹம் , முதுமை, மரணம் .
ஏழு தாதுக்கள் —கபம், ரத்தம், வியர்வை( பருமன் ),மாம்சம், மஜ்ஜை, எலும்பு, ரேதஸ் என்கிற ஏழு தாதுக்கள்;
எட்டு கிளைகள்—-ஐந்து இந்த்ரியங்கள், மனஸ், புத்தி, அஹங்காரம் என்கிற எட்டு கிளைகள்;
ஒன்பது கண்கள், அதாவது த்வாரங்கள்— இரண்டு கண்களின் பொந்துகள், இரண்டு காதுகளின்
த்வாரங்கள், மூக்கின் இரண்டு த்வாரங்கள், வாய், குறி, ஆசன வாய்—என்கிற ஒன்பது த்வாரங்கள்;
பத்துப் ப்ராண ப்ரவ்ருத்திகள்— பிராணன், அபானன், வ்யானன், ஸமானன், உதானன்,நாகன், கூர்மன், க்ருகசன், தேவதத்தன், தநஞ்ஜயன்—ஆகிய பத்துப் பிராணன்கள்
இரண்டு பக்ஷிகள்—-ஜீவாத்மா, பரமாத்மா
இப்படிப்பட்ட ஆதி வ்ருக்ஷமான உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணம் அடைந்ததைப் போல,பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி -உன்னைச் சரணம் அடைகிறேன்.
நீயே புருஷோத்தமன்; உபாதான காரணமும் நீயே; நிமித்த காரணமும் நீயே;
நீயே எல்லா உலகங்களையும் , ஜீவன்களையும் படைக்கிறாய்; காப்பாற்றுகிறாய்;
பிரளய சமயத்தில், அழித்து, நீயே லயஸ்தானமாக இருக்கிறாய்;
உன் நியமனத்தால், எல்லாப் பிரவ்ருத்திகளும் உண்டாகின்றன;
உனது மாயையால், சேதனர்கள் அக்ஜானத்தில் மூழ்கி, நீயே யாவும்,
நீதான் ஒருவன், நீயே எல்லா உலகங்களிலும் வ்யாபித்து இருக்கிறாய் என்பதை மறந்து,
புத்தி பேதலித்து, அறிவை இழந்து, உன்னை—நானா வகைப் பட்ட —பலவைப் பட்ட பொருள்களாகப் பார்க்கிறார்கள்; ஆனால், வித்வான்கள்,
அண்டசராசரம் அனைத்துக்கும் , அவற்றின் க்ஷேமத்துக்கும், நீதான் காரணம் என்று உணர்கிறார்கள்;
உன் சுத்வ ஸத்வ அவதாரங்கள், சாதுக்களுக்கு சுகத்தையும் மங்களத்தையும் அளிக்கிறது;
அதுவே, துஷ்டர்களுக்குத் தீங்கையும் நாசத்தையும் அளிக்கிறது;
உனது, அன்றலர்ந்த தாமரைக் கண்களின் கடாக்ஷத்தால், எல்லா ஸத்வங்களுக்கும் இருப்பிடமான
உன் ரூப லாவண்யத்தை, ஸுபாஸ்ரயத்தை, ஸாதுக்கள் மனத்தில் தரித்து,
சமாதி நிலையிலும் அவற்றை அனுபவிக்கிறார்கள்;
அதனால், ஸம்சாரமாகிய, இந்தப் பெரிய ஸமுத்ரத்தை, கன்றுக் குட்டியின் கால் குளம்பில்( கோவத்ஸபதம்)
தேங்கின ஜலத்தைத் தாண்டுவதைப் போலத் தாண்டி, உனது திருவடிகளையே நம்பி, அதையே தெப்பமாக (படகு ) வைத்துக் ,கடக்கிறார்கள்;
இப்படிப்பட்ட பெருமைகள் உள்ள நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில்
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணமடைந்ததைப் போல,
பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்..
உன்னை பூஜை செய்யும் பக்தர்கள், உன் திருவடிகளை நமஸ்கரித்துப்பூஜிக்கிறார்கள்;
அதனால், கஷ்டங்கள் நிறைந்த, கடக்க முடியாத “பவார்ணவத்தை”, —பயங்கரமானதும்,
சௌஹார்த்த மில்லாததுமான அடர்ந்த பெரிய இருளை, உனது பிரகாசத்தால் கடக்கிறார்கள்;
அப்படிக் கடந்து, சம்சாரக் கடலைக் கடந்து, அக்கரையான –உனது திவ்ய வாசஸ்தலமான
பரமபதத்தை அடைந்த முக்தர்கள், உலகத்தில் உள்ளவர்களுக்கு, உதாரணமாக —ஆதர்ச புருஷர்களாக
இருக்கிறார்கள்; ஆனால், ஹே, கண்ணா! ….எவ்வளவு க்ஜானம் இருந்தும் , பண்டிதனாக இருந்தும்,
உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் , இந்த மார்க்கத்திலிருந்து நழுவி, கஷ்டப்படுகிறார்கள்;
உன்னிடத்தில் பரமபக்தி உள்ளவர்கள், உன்னையே நம்பி, பயமே இல்லாமல், எவ்வளவு
ஆபத்து வந்தாலும், அந்த ஆபத்துகளைச் சுலபமாகத் தாண்டுகிறார்கள்;
பெரிய பண்டிதர்களாக இருந்தாலும், வித்வான்களாக இருந்தாலும், பெரிய நல்ல குடும்பங்களில்
பிறந்து, அந்த நல்ல பிறவியினால் கர்வம் கொண்டவர்கள், உன்னைத் துதிக்காமல்,
பக்தி செய்யாமல், முக்தியை அடைவதில்லை; உன்னிடம் பரம பக்தி உள்ளவர்கள்,
எல்லா வகைகளிலும் உன்னால் காப்பாற்றப் பட்டு, தேவர்களின் தலைமீது
தங்கள் பாதங்களை வைத்து, பயமில்லாமல் சஞ்சரிக்கிறார்கள்;
நீ ஸுத்த ஸத்வ ஸ்வரூபி! பக்தர்கள் ( ஜீவாத்மாக்கள் ) ஆஸ்ரம தர்மங்களை, நன்கு அனுஷ்டித்து,
அவற்றால் ஏற்படும் பலன்களைத் தள்ளி விட்டு ( உனக்கே அர்ப்பணித்து ) உன்னை ஆராதிக்கிறார்கள்;
யாகம், யஜ்ஜம், யோகம், தபஸ், தானம், புண்ய தீர்த்தாடனம், ஸமாதி இவைகளால் செய்யப்படும்
பூஜையை ஏற்றுக்கொண்டு, அவர்களை அனுக்ரஹிக்கிறாய் ;
இப்படி அனுக்ரஹிக்கும் உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் இவர்கள் முன்பாக, ப்ரஹ்மா, உன்னை ஸ்தோத்ரம் செய்துஉன்னைச் சரணம் அடைந்ததைப் போல,
அடியேனும் அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, , ஜகத் காரணா ! ….சாஸ்த்ர க்ஜானத்தாலும், அனுமானத்தினாலும்,
உனது கிருபையால் ஏற்பட்ட இந்த்ரியங்களால், ஓரளவுதான் உன்னை அறிய முடிகிறது;
உனது நாமாக்கள் , உனது ரூபங்கள், உனது சேஷ்டிதங்கள் , அனந்தம், மிக மிக அனந்தம்;
அவை அற்புதம், மிக மிக அற்புதம்; நீ எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தாலும்,, எதிலும் உனக்குப் பற்று இல்லை; ஆனால், உனது க்ருபையால், உனது கதா உபன்யாசங்களைக் கேட்டும், குண சேஷ்டிதங்களை வாயாரச்சொல்லியும்,உனது திருவடிகளை வணங்கி சரணம் அடைந்தும், இந்தப் பூமியில் ஏற்பட்ட “பந்தம் ”
அறுபடுகிறது;
மறுபடியும், பிறவித் துயர் என்பது இல்லை; இந்த பூமி , உனது திருவடி;
இந்தப் பூமியின் தாங்கொணா பாரம், உனது அவதாரத்தால் குறைகிறது;
உன்னுடைய அவதாரம் சாதுக்களுக்கு அபயம்;
நீ, இப்போது அவதரித்து, பூமியின் பாரத்தை ஒழிக்க வேண்டும்;
அடியோங்களைக்காக்க வேண்டும்; இப்படியாகப் பலதடவை,அவதாரங்களை எடுத்திருக்கிறாய்; இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
ஜீவனுக்கு, உன்னைப் பற்றிய சாஸ்த்ர க்ஜானம் இல்லாததால்,பிறப்பு, இறப்பு, சுழலில் சிக்கி, சம்ஸார பந்தத்தில் உழல்கிறது;
நீ, மத்ஸ்ய, கூர்ம, ஹயக்ரீவ, ஸுகர ( பன்றி ), ந்ருஸிம்ஹ , ஹம்ஸ ,வாமன,
பரஸுராம, ராம, இப்படிப் பல அவதாரங்களை எடுத்திருக்கிறாய்;
அப்போதெல்லாம், எல்லா உலகங்களுக்கும், நீதான் அதிபதி என்று காட்டி,
பூமியின் பாரத்தைப் போக்கி இருக்கிறாய்.;இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
இப்போதும் அவ்வாறே அவதாரம் செய்யப் போகிறாய்; உனக்கு ஜயம் உண்டாகட்டும்;
இப்படிப் பராக்ரமம் உள்ள, உன்னை
நீ , தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில், ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்துசரணமடைந்ததைப் போல பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி,
உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, பரந்தாமா….ப்ரஹ்மா, ருத்ரன், ரிஷிகள் தேவர்கள்,
எந்த ஸ்துதி வசனங்களால் உன்னுடைய நிஜ ஸ்வரூபம் காணப்படுமோ ,அவற்றால் துதித்து, அடியேனுக்கும் காட்டிக் கொடுத்து,உபகாரம் செய்தமைக்காக , அவர்களையும் நமஸ்கரிக்கிறேன்
( 2 வது அத்யாயம் முடிகிறது……. )