Dhasamaskantham–naveena paaniyil–4

Posted on Aug 26 2016 - 9:25am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் –நவீன பாணியில்–அத்யாயம் -4
——————————————————————
அத்யாயம் –4
—————-
யோக மாயையான பகவதி, கம்ஸனை எச்சரிப்பது
—————————————————————-
-(ஹே …பகவானே….வசுதேவர் சிறைக்குத் திரும்பியதும், வெளிக் கதவுகள், உள்கதவுகள் எல்லாம், தாழிட்டுக் கொண்டது உன் சங்கல்பத்தால் அல்லவா !
காவலர்கள் தூங்கியதும், பின்பு இப்போது கண் விழித்ததும் உன் சங்கல்பத்தால் தானே நடந்தது )

, — ஹே, பிரபோ… காராக்ருஹத்தில், , யோகமாயை வீரிட்டுக் கத்தியதும், எட்டாவது குழந்தை பிறந்ததைக் காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட கம்ஸன் ,
தலைவிரி கோலத்துடன் , தள்ளாடும் நடையுடன், கர்ரக்ருஹத்துக்கு வந்தான். தேவகி, அவனிடம் மன்றாடினாள்.” இந்தப் பெண் குழந்தையை,
உனக்கு மருமகள் போல இருப்பவளை, நீ கொல்லாதே. விட்டு விடு” என்று கதறினாள்.
மார்போடு குழந்தையை அனைத்துக் கொண்டிருந்த அவளைத் தள்ளி விட்டு,குழந்தையை அவள் கையிலிருந்து பிடுங்கி, யோகமாயையின் இரண்டு பிஞ்சுத் திருவடிகளையும் தன்னுடைய இரு கரங்களால் பிடித்து,ஆத்திரமும் கோபமும் இணைய , கல்லின் மீது வீசினான்.

ஆனால், ஹே பிரபோ, உன் கிருபையால் , யோகமாயை , கம்சனின் பிடியிலிருந்து விலகி,ஆகாசத்தில் கிளம்பினாள். என்ன ஆச்சர்யம் ! உன் தங்கை அல்லவா ?

( எட்டுத் திருக்கரங்களுடன் திவ்யமான வஸ்த்ரத்துடன் ,
தேவலோக மாலைகளுடன், ரத்ன ஆபரணங்கள் அணிந்து,எட்டுத் திருக்கரங்களிலும் தனுசு, சூலம், அம்பு, கேடயம், கத்தி, சங்கு, சக்ரம், கதை என்று
எட்டு ஆயுதங்கள் ஏந்தியவளாக , சித்த, சாரண, கந்தர்வ, கின்னர, அப்சரஸ்கள் சமர்ப்பித்த பூஜைகளை ஏற்று, பகவதி—துர்க்கை —என்று போற்றப்படும் உன் தங்கையை ,தேவியை, பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

அந்த யோகமாயை, கம்ஸனைக் கோபத்துடன் பார்த்து,
” ஹே, முட்டாளே……என்னைக் கொல்வதால் ஒரு பயனும் இல்லை; உன்னைக் கொல்வதற்கு உன் விரோதி பிறந்து விட்டான்; இனிமேலாவது, குழந்தைகளைக் கொள்வதை நிறுத்து; என்று கர்ஜித்தது .
(பூமியில் பல கோவில்களில் துர்க்கை என்றும் , பகவதி என்றும் , குடிகொண்டு இப்போதும் அநுக்ரஹம் செய்து கொண்டிருக்கும் , விஷ்ணுவாகிய உனக்குத் தங்கையாகிய , அந்தத் துர்க்கையை நமஸ்கரிக்கிறேன். )

யோகமாயையின் வார்த்தைகளைக் கேட்ட கம்ஸன் , அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.
வசுதேவர், தேவகியை சிறையிலிருந்து விடுவித்தான்.
அவர்களை நோக்கி, ” என்னை மன்னியுங்கள்; குழந்தைகளைக் கொன்ற பாபி நான்;சிசுஹத்தி பாபத்தினால், எந்த நரகத்தை அடைவேனோ தெரியாது; தெய்வமே பொய் பேசுகிறது;
( எட்டாவது குழந்தையாக ஆணுக்குப்பதில் பெண் குழந்தை பிறந்து,, எட்டாவது குழந்தை ஆணாக எங்கு உள்ளதோ என்கிற சந்தேகத்தில் ) ;
குழந்தைகளை இழந்ததால் அழாதீர்கள்; பிறக்கும் யாவும் ஒரு நாள், இறக்க வேண்டியதே; இது விதியின் செயல்; தேகம்தான் நாசமடைகிறது; ஆத்மா நாசமடைவதில்லை
மரித்தபின் புதுப் புதுத் திரேகம் அதற்குக் கிடைக்கிறது; ” இப்படிப் பலவாறாகப் பேசி,அவர்களின் மன்னிப்பை வேண்டினான்.
வசுதேவர் ” நீ சொல்லியவை சத்யம்; ஜீவன்கள், அக்ஜானத்தாலே புத்தி பேதலித்து, ஒருத்தரை ஒருத்தர் கொன்றுகொண்டு அழிகிறார்கள்; ” என்றார்.
கம்ஸன் அரண்மனையை அடைந்தான்.. மறுநாள் காலை, மந்த்ரிகளை அழைத்து,யோகமாயை சொன்னதை அவர்களிடம் சொன்னான்.
அவர்கள் தேவ சத்ருக்கள். அசுரர்கள். கோபத்துடன் கம்ஸனிடம் பேசினார்கள்.
” எல்லா இடங்களிலும் பத்து நாட்களுக்குள், எந்தக் குழந்தை பிறந்திருந்தாலும்,அதைக் கொல்வோம்; விரோதிகளிடம் கருணை காட்டாதீர்கள்; ஹரியோ, சிவனோ, ப்ரும்மாவோ, நம்மை ஒன்றும் செய்ய முடியாது; ஆனாலும், விரோதிகளிடம்
அலக்ஷ்யமாக இருக்கக்கூடாது; அவர்களுக்கு விஷ்ணு தான் மூலபலம்; அவரை அழிக்க வேண்டும்; குழந்தையாக எங்காவது பிறந்திருக்க வேண்டும்;
கால தாமதம் கூடாது; எங்கே சனாதன தர்மம் தழைத்து இருக்கிறதோ,எங்கே பிராம்மணர்கள் பசுக்களுடன் தபஸ், யக்ஜம் என்று செய்துகொண்டு
இருக்கிறார்களோ , அவர்களைத் தேடித் தேடி அழிப்போம்; இவர்களை ஒழிப்பது, விஷ்ணுவை ஒழிக்கச் சிறந்த உபாயம் ” என்று கர்ஜித்தனர்.
கம்ஸன் காலபாசத்தினால் தூண்டப்பட்டு , “சரி ” என்று அனுமதி கொடுத்தான்
.
(ஹே, பிரபோ … கம்ஸனுடைய மந்த்ரிகள், உன்னைப் பற்றிய ஆழ்ந்த அறிவுடன் இருந்தும்,
அஹம்பாவம், அஹங்காரத்தால், அவர்களும் அழிந்து, அரசனையும் அழித்தார்கள்.
இது உன் லீலை; கிருஷ்ணாவதார லீலை; அந்த லீலைக்கு அடியேனின் நமஸ்காரங்கள் )

4 வது அத்யாயம் முற்றிற்று —ஸுபம்

குறிப்பு;—அடைப்புக் குறிக்குள் உள்ளவை அடியேன் சொல்பவை .
முதல் மூன்று அத்யாயங்களிலும் , அடியேன் சொல்லி இருக்கிறேன்;
ஆனால் , அடைப்புக்குறி போடவில்லை.
அடியேனின் வார்த்தைகள் மட்டில் இனி அடைப்புக் குறிக்குள் சொல்லப்படும்
lord-krishna

About the Author

Leave A Response