Dhasamaskantham–naveena paaniyil-adyayam 7

Posted on Aug 30 2016 - 9:26am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் –நவீன பாணியில்–
அத்யாயம் —–7
—————————
சகடாசுரன் ,த்ருணாவர்த்தன் வதம்—-அதாவது மோக்ஷம்.மற்றும் யசோதை, கண்ணனின் திருவாயில் உலகங்கள் என்று யாவற்றையும் பார்ப்பது
————————————————————————————

ே, பிரபோ, உத்தரையின் புத்ரன் ராஜாவாகிய பரீக்ஷித்,

, சுக ப்ரஹ்மரிஷியைக் கேட்டதை இப்போது சொல்கிறேன்
ஹே, ப்ரஹ்மன், பகவானின் லீலைகளைக் கேட்கக் கேட்க,மனம் அதிலேயே லயிக்கிறது. விபரீதமான எண்ணங்கள் அழிகின்றன.
அவரிடம் பக்தி மேலும் மேலும் அதிகரிக்கிறது.
அவருடைய பால்ய லீலைகளைச் சொல்வீராக என்று
பரீக்ஷித் கேட்டவுடன், ஸ்ரீ சுகர் மேலும் சொல்ல ஆரம்பித்தார்.
அவர் சொன்னதை, அடியேனே , உனக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன்
நீ மூன்று மாதக் குழந்தை; உன்னுடைய மாச திருநக்ஷத்ரம்( ரோஹிணி )
மூன்றாவது தடவையாக வந்த தினம். . யசோதை, உன்னை நன்கு குளிப்பாட்டி,
வஸ்த்ரம் அணிவித்து, உன்னைத் தொட்டிலில் விட்டு,
வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். உனக்குப் பசி வந்து, பாலுக்காகக் கத்தினாய்; உன்னுடைய இந்தக் கத்தல் யசோதைக்கு கேட்கவில்லை;

நீ, பசியால், கையையும் காலையும் ஆட்டி, உதைத்துக் கொண்டு அழுதாய்; உன்னுடைய உதையால், பக்கத்திலிருந்த பால் பாத்ரம்,தயிர் பாத்ரம் எல்லாம் சப்தத்துடன் கீழே விழுந்தன;
பக்கத்தில் இருந்த ஒரு வண்டியின் சக்ரம் , நுகத்தடி, உன் திருவடிகளால் உதை பட்டு, நசுங்கின; ஒடிந்தன;விழுந்தன. அருகில் இருந்த ஆய்ச்சியர்கள்,
இதென்ன, ஆச்சர்யம் என அதிசயித்தனர். யசோதையும், நந்தகோபனும் சப்தம் கேட்டு,
ஓடிவந்து பார்த்து, குழந்தையின் காலுக்கு இவ்வளவு பலமா என்று ஆச்சர்யப் பட்டனர்.
இது கோகுலம் முழுவதும் பரவியது. சகடாசுரன் என்கிற அசுரன், வண்டி, சக்ரம் என்று ரூப மெடுத்து , உன்னை அழிக்க, உன் அருகில் ஒளிந்திருக்கும்
விஷயமானது உனக்குத் தெரிந்து, உன் சிறிய திருவடியால் உதைத்து,அதை உடைத்து, அவனையும் அழித்தாய்.
(ஹே….பிரபோ….அந்தச் சின்னஞ்சிறு திருவடிகளை , அடியேன் என் சிரஸ்ஸில் தாங்கி, உன்னை நமஸ்கரிக்கிறேன் )
யசோதை, கெட்ட பிசாசு செய்த வேலையே என்று பயந்து,உன்னைத் தூக்கி வைத்துக்கொண்டு , ஸ்தன்ய பானம் கொடுத்து,உன்னைத் தூங்க வைத்தாள்.
இப்போது, நீ, ஒரு வயது பாலகன்; இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டுகொஞ்சும் பருவம்; யசோதை, ஒருநாள், உன்னை இப்படியே இடுப்பில்
தூக்கி வைத்துக் கொஞ்சி , மடியில் அமர்த்திக்கொண்டாள்;

நீ, திடீரென்று அவளுக்குக் கனத்தாய்—-கனமாக ஆனாய்;
அவள் பயந்து , உன்னைத் தரையில் விட்டுவிட்டு ,
பகவானை வேண்டிக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்;
இந்தச் சமயத்தில், “தைத்யன் ” என்கிற அசுரன்,
“த்ருணாவர்த்தன் ” என்கிற பெயருடன், கம்ஸனால் அனுப்பப்பட்டு ,வேகமாக வீசும் காற்று உருவத்தில் வந்தான்; எல்லாப் பொருள்களையும்,
தூசியினால் மறைத்து, உன்னையும் தூக்கிக் கொண்டான்;உஷ்ணக் காற்றாக வீசி, திக்குகளை மறைத்தான்;கோகுலத்தை மறைத்தான்; கோர சப்தத்துடன் , ஊழிக்காற்று போல வீசினான்;
யசோதை பயந்தாள்; உன்னைத் தரையில் விட்ட இடம் தெரியவில்லை;தேடினாள் ; அழுதாள் ; பகவானை ஸ்மரித்துக் கொண்டே மூர்ச்சையானாள்;
கோபியர்களும் அழுதார்கள்.

திருணாவர்த்தன் , உன்னைத் தூக்கிக் கொண்டு, ஆகாயத்தில் கிளம்ப முயற்சித்தான்.
ஆனால், உன்னுடைய பாரத்தை, அவனால் தாங்க முடியவில்லை.சுய உருவம் எடுத்துக்கொண்டான். கற்பாறையைப் போன்று , நீ, அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாய். அதனால், அவன் தொண்டை ,
இறுக்கப்பட்டது. அவன் கண்கள் பிதுங்கின; ” ஹா ” என்கிற பெரிய சப்தத்துடன்,திருணாவர்த்தன், கீழே விழுந்து உயிரை விட்டான்.பயங்கரமான சப்தம் வந்த திசையை நோக்கி, கோபர்கள், கோபியர்கள் ஓடினார்கள்;
த்ருணாவர்த்தனின் உயிரற்ற சடலத்தில், ஒரு வயதுக் குழந்தையான நீ ,எவ்விதப் பயமும் இல்லாமல், விளையாடிக் கொண்டிருந்தாய்.
கோபிகைகள், உன்னை வாரி எடுத்து, யசோதையிடம் கொடுத்தனர்.
யசோதை, உன்னை, உச்சி முகர்ந்து, சந்தோஷப்பட்டாள்.
பெரிய காற்றின் பிடியிலிருந்து, குழந்தை காப்பாற்றப் பட்டிருக்கிறான்;
ராக்ஷசன் இறந்து கிடக்கிறான்; பெரிய ஆபத்திலிருந்து, காப்பாற்றப்பட்டது,புண்ய கர்மாவின் பலன் என்று, நந்தகோபனும், பந்துக்களும், நினைத்தார்கள்.

வேறொரு சமயம், யசோதை, உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.பாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த நீ, தூங்குவதற்கு நினைத்தவன் போல, வாயைத் திறந்து கொட்டாவி விட்டாய்.
அப்போது, ஆகாயம், நக்ஷத்ரக் கூட்டங்கள், எல்லாத் திசைகள், சந்திரன், சூர்யன்,நெருப்பு, காற்று, சமுத்ரங்கள், ஏழு த்வீபங்கள், மலைகள், காடுகள்,
அவற்றில் ப்ரவஹிக்கும் ஆறுகள், நடமாடும் எல்லாப் பிராணிகள், —-
இப்படி விஸ்வம் முழுவதையும் , யசோதை, உன் வாயில் பார்த்தாள்.பயம் கலந்த ஆச்சர்யத்துடன், கண்களை மூடிக்கொண்டாள்.
அவளுக்கு, இது ஸ்வப்னமா, நிஜமா என்று சந்தேகம் வந்து விட்டது.
உன்னை “பரமாத்மா, இவன்; மானிடக் குழந்தை அல்ல ” என்று யசோதை எண்ணியதாக, ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார்.
( ஹே, பிரபோ…..யசோதை என்ன பாக்யம் செய்தாளோ !
அந்தத் தாயைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன் )
7 வது அத்யாயம் முற்றிற்று —-ஸுபம்

narththana krishna-11219423_529306363886983_7187546714078619689_n

About the Author

Leave A Response