dhasamaskantham-naveena paaniyil-adyayam 8

Posted on Aug 31 2016 - 5:59am by srikainkaryasriadmin
krishna -butter

தசமஸ்கந்த பாராயணம்— அத்யாயம்– 8
——————————————-

—————-
பெயர் சூட்டுதல்—பால்ய லீலைகள் —மண்ணைத் தின்ற மாமாயன்
——————————————————-

ஸ்ரீ சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.
மதுராவில் ஒருநாள், யதுக்கள் எனப்படும் இடையர்களுக்கு ( கோபர்கள், கோபிகைகள் )
ப்ரோஹிதரான “கர்க்கர் ” என்கிற ரிஷியை, வசுதேவன் ரஹஸ்யமாக அழைத்து,
” ஹே, முனிபுங்கவரே ! கோகுலத்துக்குச் சென்று, அடியேனுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள் ”
என்று கேட்டுக்கொண்டார். கர்க்கரும் சம்மதித்து, கோகுலத்துக்கு வந்தார்.
நந்தகோபன் அவரை வரவேற்று , நமஸ்கரித்து, ஆசனம் கொடுத்து அவரிடம் பேசினான்.
“ஹே, ப்ரஹ்மந்….உங்கள் விஜயம் எங்களுக்குப் பாக்யத்தைக் கொடுக்கிறது
; நீர் ஜ்யோதிஷ சாஸ்த்ரத்துக்குப் பொக்கிஷம்; முக்காலமும் உணர்ந்தவர்;ஆத்ம வித்யைகளை அறிந்த ப்ரஹ்ம வித்து; எனக்குக் குழந்தை இருக்கிறான்;
வசுதேவருக்கு ரோஹிணி மூலம் குழந்தை இருக்கிறான்;
என்னென்ன ஸம்ஸ் காரங்கள் செய்ய வேண்டுமோ , அவற்றை, ப்ராம்மணராயும், . குருவாயும் இருந்து செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் ” என்றான்.
அதற்கு, கர்க்கர், ” நந்தகோபா, நான் யது குல மக்களுக்கு எல்லாம் ஆசார்யன்; அதனாலேயே, குழந்தைக்கு ஸம்ஸ் காரம் செய்துவைக்க வேண்டும்;
ஆனால், இந்தக் குழந்தை, வசுதேவர்—-தேவகியின் எட்டாவது குழந்தை;பாப எண்ணம் கொண்ட கம்ஸன், தேவகியின் எட்டாவது குழந்தை ஆண் குழந்தை என்று
உறுதியாக இருக்கிறான்; அதுவும், வசுதேவருக்கும், உனக்கும் உள்ள உறவை
நன்கு அறிவான்; ஆகவே, இந்தக் குழந்தைக்குச் செய்யும்
ஸம்ஸ் காரம் , அவனுக்குத் தெரிந்தால் உடனே இக்குழந்தையைக் கொல்லத் துணிவான்;
இதற்காகக் கலங்குகிறேன் ” என்றார்.
அதற்கு, நந்தகோபன், ” ஆசார்யரே, என் பந்துக்களுக்குக்கூடத் தெரிய வேண்டாம்;இந்தக் குழந்தைக்கு, ரஹஸ்யமாக, பசுத் தொழுவத்தில்
( மாட்டுக் கொட்டிலில் ) ஸம்ஸ் காரம் ,
ஸ்வஸ்திவாசனம், இவற்றைச் செய்யுங்கள் ” என்றான்.
ஸ்ரீ கர்க்காசார்யர், சரி என்று சம்மதித்து, “முதலில், ரோஹிணியின் பிள்ளைக்கு ஸம்ஸ்காரம் செய்கிறேன் ; இக்குழந்தை பலம் மிகுந்தவன்; உன்னையும் வசுதேவரையும் போல இரண்டு வம்சத்தைச் சேர்த்து வைப்பதால், “சங்கர்ஷணன் ” ஆகிறான்; ஆதலால்,
இவனுக்கு , ” ராம ” , “பல ” என்கிற இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து, “பலராமன் ”
என்கிற பெயரை , இக்குழந்தைக்குச் சூட்டுகிறேன். ” என்றார்.
பிறகு, ” நந்தகோபா …..உன்னுடைய குழந்தைக்குஸம்ஸ்காரம் செய்கிறேன்;
இந்தக் குழந்தை, இதற்கு முன்பு, மூன்று வர்ணங்களில் பிறந்திருக்கிறான்; வெள்ளை, சிகப்பு, மஞ்சள் அவை; இப்போது இவனுடைய நிறம் கறுப்பு ;
இவனுக்குப் பலப்பல ரூபங்கள், பலப்பலத் திருநாமங்கள், இவைகளை நான் அறிவேன்;
உனக்கும், உன் யது குலத்துக்கும், கோகுலத்துக்கும்புகழைத் தருபவன்; பெருமையைத் தருபவன்; சந்தோஷத்தைத் தருபவன்; எவன், இக்குழந்தையிடம் அன்புடன் இருக்கிறானோ
அவனுக்குப் பயமே இல்லை; இவன் நாராயணனுக்குச் சமம்; இவனே வாசுதேவன்,இவனே விஷ்ணு, இவனே நாராயணன் , இவனுக்குக் “க்ருஷ்ணன் ” என்று
திருநாமமிடுகிறேன் என்று சொல்லி, மேலும் சில திருநாமங்களை இட்டு,குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள் , கவனமாக வளர்த்து வருவாயாக ” என்று சொல்லி,விடைபெற்றுக் கொண்டு மதுரா திரும்பினார்.

(ஹே, கிருஷ்ணா…. அந்த மாட்டுக் கொட்டில் என்ன பாக்யம் செய்ததோ !
வசுதேவரையும் , பலராமனையும் முன்னிட்டு, ஸ்ரீ கர்க்க மகரிஷியை பலமுறை நமஸ்கரிக்கிறேன்.
எண்ண இயலாத, திருநாமங்களை உடைய உனக்கு, சகல ஜீவராசிகளின் உள்ளங்களிலும்,முனிவர்களின் தபஸ்சிலும் ராதையின் ஹ்ருதயத்திலும், கோபிகைகளின் வாக்கிலும் மனசிலும் ,
ஆழ்வார்கள்,கோதை நாச்சியார், மஹாசார்யர்கள்,ஸ்வாமி தேசிகன் , கவிகள், வாக்கேயக்காரர்கள் வழக்கில் இருக்கும் எல்லா பாஷைகளிலும், என்று , கற்பனைக்கும் எட்டாத அளவில் உன் திருநாமமான ” கிருஷ்ண ” நாமம், “கிருஷ்ண” சங்கீதம் ,” கிருஷ்ண ” லீலாம்ருதம் பரவிப் பெருகி,அடியோங்கள் , இந்தப் பெயரைக் கேட்டதும் நெக்குருகி நிற்க , பெயர் சூட்டிய அந்த ஸ்ரீ கர்க்க ரிஷியை திரும்பத் திரும்ப நமஸ்கரிக்கிறேன். )

சிலகாலம் சென்றது. குழந்தைகள் வளர்ந்தார்கள்.பலராமன், கிருஷ்ணன் ஆகிய
நீங்கள் இருவரும் சேர்ந்தே அலைந்து, கோகுலம் முழுவதும் திருவடி சம்பந்தம் ஏற்படுத்தியதாக
ஸ்ரீ சுகர் சொல்கிறார். கோகுலம் முழுவதும் விழுந்து புரண்டு, தூசுகள், மண்துகள்கள் உடம்பு முழுவதும் பரவி இருக்க, ஓடிவரும்போது கொலுசும், சலங்கையும் சந்தோஷத்துடன் சப்திக்க, உங்கள் தாய்மார்களின் அங்கங்களில் படுத்து நீங்கள் புரளும்போது, தூசு, மண் இவைகளைப் பாராது உங்கள் தாய்மார்கள் உங்களை அணைத்துக் கொண்டு , உங்களின் இளம் புன்னகை, சின்னஞ்சிறிய பற்கள் ,நெற்றியின் சோபிதம், இவைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களாமே !

உங்கள் இருவரின் குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் , பால லீலைகள், இப்படி நந்தகோபனுக்கும்,
யசோதைக்கும், ரோஹிணிக்கும், கோபர்களுக்கும், கோபியர்களுக்கும் அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்ததாமே !

இதற்குப் பிறகு, உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயது ஆனவுடன்,உங்கள் வயதை ஒத்த ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து, கன்றுக்குட்டிகளுடனும், பசுக்களுடனும், விளையாடியதாக , ஸ்ரீ சுக ப்ரஹ்ம ரிஷி, பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் , அவைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு, அவைகளின் பின்னாலே ஓடுவீர்களாம்;
துடுக்குத் தனம், அதிகமாகி விட்டதாம்.; மாடுகளின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு விளையாடுதல் என்று இப்படி கோகுலத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பீர்களாமே !
பிறகு, கோகுலத்தில் வீடுகளுக்குள் புகுந்து, மற்ற கோபர்களையும் சேர்த்துக் கொண்டு, அவர்கள் வீடுகளில் பாலைத் திருடி சாப்பிடுதல் போன்ற விஷமங்களைச் செயதீர்களாமே !
கோபிகைகள், யசோதையிடம் வந்து, உங்களைப்பற்றி, புகார் சொல்வார்களாமே !
யசோதைக்கு, ஒரே சமயத்தில் , அன்பும் கோபமும் வந்து ,அடிப்பதா, வைவதா என்று விழிப்பாளாமே !
கன்றுக் குட்டியை, வேண்டாத சமயத்தில் அவிழ்த்து விட்டு, தாய்ப் பசுவிடம் , பால் நிறைய சாப்பிடும்படி செய்வதால், ஆய்ச்சியர்கள் கறப்பதற்கு , பசுவிடம் பால் இருக்காதாமே !
அங்கு வீடுகளில் உள்ள, வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி , மற்ற கோபர்களுடன் சேர்ந்து
சாப்பிடுவீர்களாமே ! பூனை, குரங்கு இவைகளுக்குக் கொடுத்து, காலிப் பானைகளைக் கீழே போட்டு உடைப்பீர்களாமே !
பாலோ, வெண்ணெயோ , கைக்கு எட்டாத உயரத்தில் உறியில், பாத்ரங்களில் வைத்து இருந்தால்,
ஏணி போட்டுக் கொண்டு ஏறி, மற்ற கோபர்களைக் குனியச் சொல்லி, அவர்கள் முதுகின் மேல் ஏறி ,
பால், வெண்ணெய் இவைகளைத் திருடி எல்லாரும் சாப்பிடுவீர் களாமே !
சில சமயம், பாத்ரங்களை, அடித்து , உடைத்து விடுவீர்களாமே !
இருட்டு அறைகளின் உள்ளே உள்ள, பாத்ரங்களில் இருக்கும் பால், வெண்ணெய் இவைகளை ,
நீங்கள் அணிந்திருக்கும் ரத்ன ஆபரணங்களின் பிரகாசத்தினால், இடம் அறிந்து, எடுத்து உண்பீர்களாமே !
கோபிகைகளின் ஜீவனத்துக்கு , பாலும் வெண்ணையும் இல்லாமல் செய்து விடுவீர்களாமே !
அவர்கள், கோபம் தாங்காது, யசோதையிடம் புகார் சொல்லும்போது,
ஹே, கிருஷ்ணா ……நீ ஒன்றும் தெரியாதவன் போல ,ரொம்ப அடங்கியவன் போல,ஒன்றுமே செய்யாதவன் போல , கால்களைக் கட்டிக் கொண்டு,
அப்பாவிப் பையன் போல உட்கார்ந்து இருப்பாயாமே ! அப்போது, உன்னைப் பார்க்க பரம சோபிதமாக ” இருக்கும் என்று, சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.

இவ்விதமாக, விளையாடி, கோபஸ்த்ரீகளின் மனங்களை அன்பினால் திருடினாய்;
இந்த விஷமச் செய்கைகள் செய்யும் சமயத்தில், கோப ஸ்திரீகள் உன்னைப் பார்த்து விட்டால், நீ அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தும்,பயத்தால் அழுவதாகப் பாசாங்கு செய்தும், கண்ணீர் வழிந்து, உன் கண் மைகள்
கலைய விழிப்பதாலும், உன்னை அடிக்க இயலாமல் , பிரமையுடன் / பிரேமையுடன்
உன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்களாமே !

( ஹே, கண்ணா …அந்த, பயம்கலந்த பசப்புப் பார்வையால், அடியேனை ஒரு க்ஷணம் கடாக்ஷிக்க மாட்டாயா )

ஒரு சமயம், கோபர்கள் பலராமனையும் அழைத்துக் கொண்டு, யசோதையிடம் ஓடி வந்தார்கள்.
” கிருஷ்ணன், மண்ணைத் தின்கிறான், வந்து பாருங்கள் ” என்று புகார் செய்தார்கள்.
யசோதை ஓடிப் போய், கிருஷ்ணனைப் பிடித்துக் கொண்டு, அடிப்பதற்காகக் கையை ஓங்கினாள்.
அப்போது, நீ, பயந்தமாதிரி அழுதுகொண்டு, கண்களிருந்து நீர் ,கங்கையெனப் பெருக ” நான் சாப்பிடவில்லை; இவர்கள் வீணாகப் புகார் சொல்கிறார்கள் ;பொய் சொல்கிறார்கள்; என் வாயைப் பார் ” என்று, வாயைத் திறந்து, யசோதை உன் வாயைப்
பார்க்கும்படி செய்தாயாமே !

ஸ்ரீ சுகர், பரீக்ஷித்துக்குச் சொன்னதை, கிருஷ்ணா, அப்படியே உன்னிடம் இப்போது சொல்கிறேன்.

யசோதை, கண்ணனின் வாய்க்குள் , எல்லா உலகங்களையும், ஆகாசம், மலைகள், திசைகள்,
வனங்கள், நக்ஷத்ரங்கள், சந்த்ரன் , காற்று, அக்நி, மின்னல், இந்த்ரியங்களின் அபிமான தேவதைகள்,
ஜ்யோதிஸ் சக்ரம், மனஸ், தன்மாத்ரைகள், சத்வ, ரஜஸ், தாமஸ குணங்கள் கொண்ட அஹங்காரம்,
மஹத், ப்ரகிருதி, இவற்றைஎல்லாம் பார்த்தாள்.
ஜீவன், அதன் அபிமான தேவதை, வ்ரஜ பூமியான கோகுலம், அதில் வசிக்கும் கோபாலகர்கள்
கோபியர்கள், பசுக்கள், அங்கு நந்தகோபன், யசோதையாகிய தான்
எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
( பிற்பாடு ஏற்படப் போகும் கீதா உபதேசத்தில் அர்ஜுனன் உன்னை வணங்கியதைப் போல )யசோதை, தனக்குள்ளாகவேஉன்னை ஸ்தோத்தரித்தாள். அதை “கீதமாக” இசைத்தாள்
(ஹே, கிருஷ்ணா….. யசோதை செய்த பாக்யம் —-இந்த அரும் பெரும் பாக்யத்தை என்னவென்று சொல்ல ! அந்தப் பெருமை மிகுந்த உன் தாயாரைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

யசோதை ஸ்துதி கீதத்தை, ஸ்ரீ சுகர் , பரீக்ஷுத்துக்குச் சொன்னதை , ஹே கிருஷ்ணா,
இப்போது சொல்லி உனக்கு நினைவு படுத்துகிறேன்.

” இதென்ன, ஸ்வப்னமா ? தேவ மாயையா ? என் புத்தி பேதலித்து விட்டதா ?
புத்தி, மோஹம் அடைந்து விட்டதா ? என் மடியில் விளையாடும் சிறு குழந்தை,ஆத்ம யோகம் செய்பவனா ? இவைகளை, அவன் எப்படி உற்பத்தி செய்ய முடியும் ?
இக்குழந்தை என் பிள்ளை அல்ல! சாக்ஷாத் நாராயணன் ! எந்தப் பகவானை, எல்லாக்காலங்களிலும் ,
எல்லா ஜீவன்களும் ஆச்ரயிக்கிரார்களோ, எவரால், எந்தக் காரணத்தால்,என் கண்முன்னே, வாய் புதைத்து, கைகளைக் கட்டிக் கொண்டு, மிகவும் அடக்கமான
பிள்ளையாகக் காக்ஷி தருகிறாரோ, அவரைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;நானும், என் பதியான நந்தகோபரும் அப்படியே நினைத்து, நமஸ்கரிக்கிறோம்;
இந்தப் பிள்ளை, உலகங்களின் பதி; கோகுலத்துக்கு
( வ்ரஜ பூமி ) ஈஸ்வரன்; எல்லா ஐஸ்வர்யங்களையும் உடையவர்; கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கூட்டங்கள், கன்றுகள், —-இவைகளை என் அல்ப புத்தியால், எங்களுடைய சொத்து என்று நினைக்கிறேன்;
நான் யசோதை, நந்தகோபரின் மனைவி, இந்த ஐஸ்வர்யங்களுக்கு எஜமானி,இக்குழந்தை என் புத்ரன், இவையெல்லாம் எங்களுடையது என்று தவறாக நினைக்கிறோம் .
இது முட்டாள்தனம் அல்லவா ? எல்லாமே, பகவானாகிய அவனுடையது;
அவன் கொடுத்ததை, எங்களுடையது என்று நினைத்து, அவனுக்கும் கொடுக்கிறோம்;அந்தப் பிரபுவே தஞ்சம்; ”

பகவானைப் பற்றி, பரம க்ஜானிகளுக்கும் கிடைக்க அரியதான அறிவை,தாயான யசோதை அடைந்தாள்.

(ஹே, கிருஷ்ணா, உன் தாயான யசோதைப் பிராட்டி சொன்னதைத் திருப்பிக் சொல்லி,
உன்னைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன் ).

அடுத்த க்ஷணம், பகவான், தன்னுடைய பிரபலமான வைஷ்ணவ மாயையை ஏற்படுத்தி,
யசோதையின் நினைவுகளை ,அறிவு தீக்ஷண்யத்தை மாற்றிவிட்டான்.
” அம்மா……அம்மா …. ” என்று கூப்பிட்டு, புடவைத் தலைப்பைப் பிடித்து இழுக்க, யசோதை, பிள்ளைப் பாசம் பெருக, கண்ணனாகிய உன்னை ,
இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள்.
எந்தப் பிரபுவை, தேவகி, சதுர் புஜத்துடன் , மந்தஹாச வதனத்துடன், பீதாம்பரதாரியாக காராக்ருஹத்தில் சேவித்தாளோ , எந்த பிரபுவைவேதங்களும் உபநிஷத்துக்களும் சாங்க்யயோக சாஸ்திரங்களும் , பாஞ்சரார்த்ர சாத்வ தந்த்ர சாஸ்திரமும் தேடி களைத்துப் போயிற்றோ,அந்த பர ப்ரஹ்மத்தை, பாக்யசாலியான யசோதை , மீண்டும் தன் புத்ரன் என்கிற நினைவோடு பார்த்தாள்.

பரீக்ஷித், சுகப்ரம்ம ரிஷியைக் கேட்டான்
” ஹே, ப்ரஹ்மந் , நந்தகோபனும், யசோதையும், என்ன உத்தமமான கார்யத்தைச்செய்து, எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடியதான பால்ய லீலைகளைப் பார்த்துஅனுபவித்தார்கள் ? காரணமென்ன ? ”

ஸ்ரீ சுகப்ரம்மம் பதில் சொன்னார் ” ஹே ராஜன் ……கிருஷ்ணனின் இந்த மாதிரியான
பால்ய லீலைகளை உனக்குச் சொல்லும்போது, சந்தோஷத்தால்நான் , ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.
உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.
அஷ்ட வசுக்களில் ஒருவன் த்ரோணன்; இவன் நந்தகோபனாகவும்,”தரா ” என்கிற அவனுடைய மனைவி யசோதையாகவும் பிறந்தார்கள்;
இது, அவர்களுக்கு ப்ரஹ்மாவின் கட்டளை; அப்போது, இவர்கள் இருவரும்ப்ரஹ்மாவிடம், “எங்களுக்குப் பகவானிடம் பக்தி தொடர்ந்து இருக்க வேண்டும்; ”
என்று பிரார்த்தித்து, அப்படியே அநுக்ரஹம் பெற்றவர்கள்;
அந்த அனுக்ரஹத்தாலே, நந்தகோபன்–யசோதைக்கு, பகவான் குமாரனாக—–
கிருஷ்ணனாக அவதரித்து, பலராமனுடன் பால்ய லீலைகளை,கோகுலத்தில் செய்து, சந்தோஷத்தைக் கொடுத்தார்;

( அந்த சுகப்ரம்ம ரிஷியையும், நந்தகோபன் யசோதை பாக்யசாலிகளையும் முன்னிட்டு, ஹே….கிருஷ்ணா…..உன்னையும் , பலராமனையும்
பலதடவை நமஸ்கரிக்கிறேன் )
8 வது அத்யாயம் முற்றிற்று. ஸுபம்
—————————————————————————————————

About the Author

Leave A Response