Dhasamaskantham–naveena paaniyil-adyaayam-12

Posted on Sep 5 2016 - 10:21am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் —நவீன பாணியில்—–அத்யாயம் ——12
——————–
அகாசுரன் மோக்ஷம்
———

ஹே, கிருஷ்ணா….. இதற்குப்பின் நடந்ததை, ஸ்ரீ சுக ப்ரம்ம ரிஷி ,
பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை , இப்போது உன்னிடம் சொல்கிறேன்.
பிறகு ஒரு நாள், நீ, மத்யான வேளையில் “வனபோஜனம் ” செய்யத் திட்டமிட்டாய்.
அதற்காகக் காலையிலேயே, கோபாலகர்கள், பசுக்கூட்டங்கள் இவற்றுடன்
யமுனா நதி தீரத்தில் உள்ள வனத்துக்குப் புறப்பட்டாய். கோபாலகர்கள்,
ஆயிரக்கணக்கான பசுக்கள், கன்றுகளுடன் , வாத்தியங்களை இசைத்துக் கொண்டு,
முன்னாலே சென்றார்கள். வனத்தை அடைந்து, உல்லாசமாக விளையாடினார்கள்.
அங்கு பூத்திருந்த புஷ்பங்களைப் பறித்து, தலையில் சூடிக் கொண்டார்கள்.
வனத்தின் வனப்பை ரசித்தபடி, கிருஷ்ணனாகிய உன்னை விட்டு,
வெகு தூரம் சென்று விட்டார்கள். அப்படிப் போகும்போது, விளையாடுதல்,
பந்து போன்ற பொருளைத் தூர எறிதல், வாத்தியங்களை முழக்குதல்,
நதியில் இறங்கி ஹம்சம் போல் நீந்துதல், தவளையைப்போலத் தத்தித்தத்தி ஓடுதல்,
குரங்குகளின் வாலைப் பிடித்து விளையாடுதல்,பட்சிகளைப் போலக் கூவுதல்,
இப்படிப் பலவிதமாக, விளைடிக் கொண்டே சென்றார்கள். முன் ஜென்மங்களின்
புண்ய பலத்தினாலே , இந்த ஜன்மத்திலே உன்னுடைய ஸ்நேஹம் —உன் அனுபவம் ,
அதன் சுகம்— இவைகள் ஏற்பட்டன. ஆனால், பார்ப்பதற்கு ,
நீ, மனுஷ்யக் குழந்தையைப் போல இருந்தாய். இந்த பாக்யம், –பெரும் பாக்யம் —
கோபாலகர்களுக்குக் கிடைத்தது.
இச்சமயத்தில், அங்கு, “அகன் ” என்கிற அசுரன் வந்தான்.
இவன் பகாசுரனின் ஒன்று விட்ட தம்பி. பூதனையின் சஹோதரன்.
இந்தக் கிருஷ்ணனை (உன்னை ) எப்படியும் கொல்ல வேண்டும் என்கிற
திட சித்தத்துடன் , தன்னுடைய உடம்பைப் பெரிதாக ஆக்கிக்கொண்டு,
மிகவும் நீளமான மலைப்பாம்பு உருவத்தை எடுத்துக்கொண்டு,
இந்தக் கோபாலகர்களும், நீயும் வரும் வழியில் , வாயை நன்கு பிளந்து கொண்டு,
மலையின் குகையைப் போலத் தோற்றம் அளிக்குமாறு செய்து ,
உங்கள் வருகையை எதிர்பார்த்து இருந்தான்.
கோபாலகர்கள் விளையாடிக்கொண்டே அங்கு வந்தனர்.
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே , அதைப் போலிப் பாம்பாக நினைத்து,
கிருஷ்ணனை ஹ்ருதயத்தில் நிறுத்தி, அந்த அசுரனின் வாய்க்குள் புகுந்தனர்.
பசுக்கள் கூட்டம், கன்றுகள் கூட்டம் யாவும் உள்ளே சென்றன. அந்த அசுரன்,
கிருஷ்ணனும் உள்ளே வரட்டும் என்று, உனக்காக, வாயைத் திறந்தே இருந்தான்.
நீ, அவர்களைத் தடுக்க முயற்சிப்பதற்குள் , அவர்கள் யாவரும் மலைப் பாம்பாக
உள்ள அசுரனின் வாய்க்குள் சென்று விட்டனர். நீ, அவர்கள்அனைவரையும்
காப்பாற்ற சங்கல்பித்தாய். நீயும் மலைப் பாம்பின் வாய்க்குள் நுழைந்து,
அதன் வயிற்றை அடைந்து, உன் திருமேனியைப் பெரியதாகச் செய்தாய்.
நீ, அந்தப் பாம்பின் வயிற்றுக்குள் , பெரிய ரூபமாக வளர, வளர அந்த அசுரனின்
வயிறு பிளந்தது. கண்களின் விழிகள் பிதுங்க; வாய் ரத்தத்தைக் கக்க,
எல்லா இந்த்ரியங்களும் நாசமடைய, , நீ , உன் ஸ்பர்சத்தாலும், த்ருஷ்டியாலும்
கோபர்களையும் கோக்களையும் கன்றுகளையும் காப்பாற்றி அவர்களுடன்
வெளியே வந்தாய். நீ வெளியே வந்ததும், ஒரு ஜோதி பத்து திக்குகளிலும்
பிரகாசித்துக் கொண்டு, இறந்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்து,
உன் திருமேனியில் சேர்ந்தது. பாபிக்கு மோக்ஷம்; தேவர்களுக்கு
இது அற்புதக் காக்ஷி; ப்ரஹ்மா , சத்ய லோகத்திலிருந்து வந்து இந்த அற்புதத்தைப்
பார்த்து, ஆச்சர்யமடைந்தார்.
ஹே, கிருஷ்ணா ……பரீக்ஷித்துக்கு, சுக ப்ரஹ்மம்
என்ன சொன்னார் தெரியுமா ?அந்தப் பாம்பின் தோலை உலர்த்தி,
அதை விளையாடுவதற்காக கோபர்கள் எடுத்துச் சென்றார்களாம்.
இது, உன்னுடைய ஐந்தாவது வயதில் நடந்த லீலை என்றும் சொன்னார்.
பரீக்ஷித் மகாராஜன், முநிபுங்கவரை நோக்கி, பகவான் ஹரியின்
லீலா வினோத சரிதங்களைக் கேட்கக் கேட்க, மெய்மறந்து போகிறது;
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மேலும் சொல்வீராக …. என்றான்

(ஹே கிருஷ்ணா…. பசுக்களும் , கன்றுகளும் செய்த பாக்யம்தான் என்னே ! )

12 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

Srirangapatnam-Temple-rathasapthami-Purappadu-2015-08

About the Author

Leave A Response