Dhamaskantham—naveena paaniyil–Adyayam 14

Posted on Sep 6 2016 - 4:36am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்—-நவீன பாணியில்images--3 ———————————————————————-
அத்யாயம் —-14
—————————-
ப்ருஹ்மாவின் ஸ்துதி
———–
சதுர் முக ப்ருஹ்மா , தலைகளைக் குனிந்து கொண்டு, கூப்பிய கைகளுடன், உன்னை ஸ்தோத்தரிக்கத் தொடங்கினார்.
( ஹே….கிருஷ்ணா……அந்த ஸ்துதியை அடியேன் இப்போது உனக்கு நினைவுபடுத்துகிறேன் . இதை அளித்த சுகப்ரம்மத்துக்கும், பரீக்ஷித் ராஜனுக்கும் நமஸ்காரங்கள் )

ஹே…. பிரபோ……உம்மைப் பல தடவைகள் துதிக்கிறேன். உமது திருமேனி, ஆகாயத்தைப்போல நீல நிறத்தோடும் மின்னும் மேகத்தைப் போலும் ஜ்வலிக்கிறது.
காதுகளில் காட்டுப் புஷ்பங்களை அணிந்துகொண்டு, மயில் இறகுகளைத் தலையில் அணிந்து, கைகளில் ஒரு கவளம் சோற்றையும், ஊறுகாயையும்
வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் செருகிக் கொண்டு, பசுக்களை மேய்க்க கம்பை வைத்துக் கொண்டு, பசுக்களை அழைக்கக் கொம்பு வாத்தியத்தையும்
வைத்துக் கொண்டு, ஒரு கோபாலகன் எந்த அடையாளத்துடன் இருப்பானோ, அப்படி உம்மைக் காண்கிறேன். உமது கோமளமான திருவடிகளைக் காண்கிறேன்.
உமது மகிமைகள் அநந்தம். இந்த, அப்ராக்ருதமான உம்முடைய சரீரம், உமது சங்கல்பத்தால், நீரே படைத்துக் கொண்டது. உமக்கு சமமானவர், மேலானவர் ஒருவருமில்லை. மனத்தால் உம்மைப் பார்ப்பதற்கு, உம்முடைய அநுக்ரஹம் இருந்தால்தான் முடியும். அதுவும், ஆத்ம சுகம் விரும்புகிறவர்கள் , யோக முறையால்தான் பார்க்க முடியும். உமது ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில் தரித்து, உமது கதா விசேஷங்களைக் கேட்டு, திருநாமங்களைச் சொல்லி, அதையே
வாழ்க்கையாகக் கொண்ட மகான்கள், பாகவத ஸ்ரேஷ்டர்கள் உமக்காகவே வாழ்கிறார்கள். உமது ஆத்ம ஸ்வரூபத்தை, உமது திருவருளால்தான் அறிகிறார்கள்.
பக்தி மார்க்கத்தால் உம்மை அறிபவர்கள், க்ஜான மார்க்கத்தாலோ, நிஷ்டையாலோ எவ்வளவு ஸ்ரமப் பட்டாலும் அந்த பாக்யத்தை அடைவதில்லை. அவர்கள், உமியைக் குத்துபவர்கள்.
பல யோகிகள் , தங்கள் கர்மாவை, உமது பாத சரோஜங்களில் ஸமர்ப்பித்து, அதிலேயே பற்று வைத்து, ஸதா ஸர்வ காலமும் உமது புண்ய சரிதங்களையே கேட்டு,
உமது வாஸமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறார்கள். உமது குணமஹிமையைச் சொல்லிச் சொல்லி, உமது திவ்ய ஸ்வரூபத்தைத் த்யானித்து, நீர் ,
பல அவதாரம் எடுத்ததை நினைத்து, வாழ்கிற பக்தர்கள், காலக்ரமத்தில் , உமது கிருபையால் உம்மை வந்து அடைகிறார்கள். உலகில் உள்ள தூசுகள் அநந்தம்;
உமது குண சேஷ்டிதங்களும், மகிமைகளும் அநந்தம். இருந்தும் கோபாலகர்கள் , உமது கிருபையால் உம்மை அடைந்துள்ளார்கள். அதைப்போல, அடியேனுக்கும் கருணை காட்ட வேண்டும். உமது க்ருபை இருந்தால், உமது திருவடிகளை அடைந்து விடலாம்.

ஹே….பிரபோ……..உமது மஹிமையை அறியாமல், முட்டாள் தனத்துடன், உம்மோடு போட்டிபோட்டு, என் மாயையைத் துஷ் பிரயோகம் செய்தேன். நீர், பரமாத்மா. உமது, மஹாமாயையின் முன்பு நான் எம்மாத்ரம் ? ஹே….அச்யுதா……என்னை ரக்ஷிக்க வேண்டும். உமது ரஜோ குணத்தால் உண்டான நான், உமது மகிமையைப்
புரியாது, நானே ஸ்வதந்திர னாக நினைத்துக் கொண்டு, மனம் கலங்கி, அக்ஜானத்தால் குருடாகி, மோஹத்துக்கு வசப்பட்டு, உம்மை சாதாரணக் குழந்தையைப் போல எண்ணி, சோதித்து விட்டேன். என்மீது, கருணை காட்டுவீராக.

என் சரீரம் எட்டு சாண்; இந்த உலகம் அண்ட வடிவம் ; நான் அண்டத்துக்கு அதிபதியாகி , உமது அனுக்ரஹத்தால், சமஷ்டி புருஷனாக இருக்கிறேன். மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்—–ஐந்து தன் மாத்ரைகள் —ஐந்து க்ஜான, ஐந்து கர்மேந்த்ர்யங்கள் இவை சேர்ந்து, 24 வது தத்வமாகிய பிரக்ருதியின்
பரிணாமங்கள் ஆனாலும், நீர், ஒவ்வொரு தத்வத்திலும் அந்தர்யாமியாக இருந்து, எல்லாவற்றையும் செயற்படுத்தி, அந்த ப்ரக்ருதிக்கு மேலே ஜீவாத்மா, அங்கும் அந்தர்யாமியாக இருந்து, அதற்கு மேலே 26 வது தத்வமாக, பரமாத்மாவாக விளங்குகிறீர். இந்த ப்ரும்மாண்டத்தைப் போலப் பல ப்ரும்மாண்டங்கள் உள்ளன.
அவைகளில் நானும் ஒருவன். ஒவ்வொரு பிரும்மாண்டமும் காரண ஜலத்தில் மிதந்து கொண்டு, ——அணு அளவாக இருப்பதால், —-உம்முடைய நிஜ ஸ்வரூபத்தை
அற்ப சக்தியுள்ள அடியேனால் அறிய இயலாது. என்னை மன்னியும். வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்யும் குழந்தை கால்களால், உதைத்தால், தாயார் கோபிப்பதில்லை.;
வருத்தமடைவதில்லை. அதைப் போல என் குற்றத்தையும் பொறுத்தருள்க

உமது வயிற்றிலே நாங்கள் , பிரளய காலத்தில் காப்பற்றப்பட்டு, ஸ்ருஷ்டி காலத்திலும் கருணையால் படைக்கப்பட்டு, லய காலத்திலே உம்மை வந்து அடைவதால்,
உமது வயிற்றைத் தவிர எங்களுக்கு வேறு வாசஸ்தானம் இல்லை. உலகங்கள் யாவும், பிரளய காலத்தில் உமது வயிற்றில் ஒடுங்குகிறது. ஸ்ருஷ்டி காலத்தில்,
நான், உமது நாபீ கமலத்திலிருந்து படைக்கப்பட்டேன். நான் தான் , உமது முதல் ஸ்ருஷ்டி. நீர் எனக்கு ஈஸ்வரன். ஆதியில் நான், உம்மைக் காணவில்லை.
எவ்வளவு காலம் நான் எங்கு இருந்தேன்; எங்கிருந்து வந்தேன் என்று அறியாமல் விழித்தேன். தாமரைத் தண்டின் வழியே உள் நுழைந்து, உம்மைக் காணமுடியாமல்
தவித்தேன்.பிற்பாடு , நீரே , என் ஹ்ருதயத்தில் தோன்றினீர். அது , ஏன் இப்போது தோன்றவில்லை ? உமது சங்கல்பத்தால்தான் உம்மை அறியமுடியும் என்பதைத்
தெரிந்துகொண்டேன். இந்த கிருஷ்ணாவதாரத்தில் , பிரபஞ்சம் அனைத்தும் உமது திருவயிற்றில் இருக்கிறது என்பதை, உமது வாயைத் திறந்து , நீரே
உமது தாயாரான யசோதைக்குக் காட்டினீர். கன்றுகள், பசுக்கள், கோபாலகர்கள், நீர், …………மற்றும் நீர் அவர்களுடன் பேசிக்கொண்டு விளையாடுவது எல்லாம்,
உமது லீலை. விஷ்ணு மாயை. கோபாலகர்கள், பசுக்கள் யாவும், விஷ்ணு ரூபமாகக் காக்ஷி அளித்தது, அபிமான தேவதைகள் ,உம்மையும் அவர்களையும் துதித்ததும்,
எனக்குப் புத்தி ஏற்படும்படி …..இரண்டு ப்ருஹ்மாக்கள் தோன்றியதும் உமது விளையாட்டாகும், லீலையாகும்.

உமது ஸ்வரூபத்தை அறியாதவர்கள், தேஹத்தையே ஆத்மாவாக நினைத்துத் தாங்கள் பிரகாசிப்ப தாகச் சொல்கிறார்கள். அதாவது, உமது உதவியின்றி, பிரகாசிப்ப தாகச் சொல்கிறார்கள். ஆனால் நீரே படைத்து, காப்பாற்றுவதில் விஷ்ணுவாகவும், அழியும் நேரத்தில் த்ரிநேத்ரனாகவும் இருக்கிறீர். ஒவ்வொருவருக்கும் நீர் அந்தர்யாமி. சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அவதாரம் எடுக்கிறீர். ஹே….பரமாத்மன்……இது உம்முடைய மாயையின் விளையாட்டு. எப்போது அவதரிக்கிறீர் ? எப்போது மறைகிறீர் / யாருக்குத் தெரியும் ? ஆயினும் நீர் சத்யம். உமக்கு மேலானவர் யாருமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் நீரே ஆத்மா. அஹங்கார புத்தியை உண்டாக்கி, மாயையினால் மயங்கச் செய்கிறீர். குருவின் உபதேசத்தாலே ஒளியான க்ஜானத்தை அடைந்தவர்கள் , அந்த க்ஜானக் கண்ணாலே மாயையைத் தாண்டி , “ஸர்ப்ப க்ஜானம் ” ஏற்பட்டு, அதாவது இது பாம்பு இல்லை; கயிறுதான் என்று தெளிந்து, உமது ஸ்வரூபத்தையும், தாங்கள், உமக்கு
சேஷபூதர்கள் என்கிற சேஷத்வ க்ஜானத்தைப் பெற்று, ஸம்சாரத்தை ஜெயித்து உம்மையே வழிபடுகிறார்கள். அக்ஜானத்தால் பவபந்தமும், க்ஜானத்தால் பவமோக்ஷமும் ஏற்படுகிறது. நான், அக்ஜானத்தால், உமது ஸ்வரூபத்தை அறியாமல், இதைச் செய்துவிட்டேன்.ஸத்யம் எது என்று தெரியாத படியாலே ஏற்பட்டது.
உம்மை விட்டுத் தனியாக பந்தமோ, மோக்ஷமோ இருக்காது. எல்லாம் உம்மால்தான் இயங்குகிறது. மனிதர்கள், தேகாத்ம அபிமானத்தால் ஸ்வதந்திர ஆத்ம ப்ரமம்
கொள்கிறார்கள். தங்கள் ஆத்மாவை வெளியே தேடுகிறார்கள். உம்மைப் பரமாத்மா என்று கருதாமல், தங்களையே பெரிதாக எண்ணி ஏமாந்து போகிறார்கள்.
சாதுக்கள், உம்மையே பஜித்து உம்மையே வந்து அடைகிறார்கள்.

ஹே….பிரபோ…..உமது “பாதாம் புஜ த்வய ” ஸேவை எவனுக்கு, லவலேசமானும் கிடைக்கிறதோ , அவன் மஹா பாக்யவான். அதனால், அவர்கள் பலகாலம் உம்மையே த்யானிக்கிறார்கள். எனக்கு அந்த பாக்யம் கிடைக்கட்டும். உமது பக்தனாக, இப்போதே, இங்கேயே, ஆவேன். இந்த பிருந்தாவன வாசிகள் ரொம்ப பாக்யம் செய்தவர்கள். பசுக்களும் கன்றுகளும் பாக்யம் செய்தவை. அந்த பசுக்களின் பால், உமது அன்பின் ப்ரஸாதம். இந்த ப்ரசாதத்துக்குச் சமமாக, யாக, யக்ஜ பலன் கூட இருக்காது. நந்தகோபன், கோபாலகர்கள் அடையும் ஆனந்தத்துக்கு இணை இல்லை. நீரே அவர்களுக்கு ஆனந்தம்.

ஹே….அச்யுதா……இந்தக் கோபாலகர்களின் பதினோரு இந்த்ரியங்களும் , அவற்றின் அபிமான தேவதைகளும் பாக்யம் படைத்தவை. நாங்கள், அபிமான தேவதைகளாக இருந்தாலும், அந்தந்த அபிமான தேவதை மூலம் அடையப்படுவதால்—-பரிமிதம்—-அளவுக்கு உட்பட்டது. ஆனால், இந்தக் கோபாலகர்களே எல்லா இந்த்ரியங்களின் ஆனந்தத்தை , உன்னைப் பார்த்துக் கொண்டும் உன்னுடன் பேசிக்கொண்டும், உன்னோடு விளையாடிக் கொண்டும், எங்களை விட மிக அதிகமாக பேரானந் தத்தை அடைகிறார்கள். அதனால், பாக்யமற்ற எங்களுக்கு, ஒரே வழி, இந்த பிருந்தாவனக் காட்டில் ஏதாவது ஒரு ஜன்மம் எடுப்பதுதான். எந்தப் பிறவியானாலும் பரவாயில்லை. புல்லானாலும், மரம், கல், புழுவானாலும் பக்ஷியானாலும் , எதுவானாலும் பரவாயில்லை . உம்முடைய பாத ரஜஸ் ஸின் ஸ்பர்சம் கிடைத்தால் போதும். நீர் ச்யாமசுந்தரன்; பிருந்தாவனக் காட்டில், கரிய திருமேனி வாட, சஞ்சாரம் செய்ததாலே, உம்முடைய திருவடி ஸ்பர்சம் பட்ட புல் பூண்டு எல்லாமே பாக்யம் அடைந்தது. எந்த திவ்ய பாத ரஜஸ் களை . ஸ்ருதிகளோ, ரிஷிகளோ, மிகவும் முயற்சி செய்து , த்யானம் செய்து, அடைவார்களோ , அந்தப் பாத தூளியை இந்த வ்ரஜபூமியில் வசிப்பவர்கள் அடைந்து, ஸகல புருஷார்த்த சாரமாகிய உம்மையே அடைந்து, பெரும் பாக்யம் செய்திருக்கிறார்கள். பூதனை போன்ற ராக்ஷஸிகள்,கபட வேஷம் தரித்த தன் இனத்தாருடன், , உன்னால் அழிக்கப்பட்டு, எந்த வைகுண்ட பதத்தை அடைந்தார்களோ, அதற்கு மாறாக, வ்ரஜபூமி வாசிகளான இவர்கள், உமக்குப் பிடித்தமான சுஹ்ருத்துகள்—-ப்ராண சஹாக்கள் —-அவர்களுக்கு எதுதான் கிடைக்காது ! விரோதி களுக்கே, உன் பாத ஸ்பர்சம் பட்டு வைகுண்ட வாஸம் கிடைக்கும்போது, இந்த சுஹ்ருத்துக்களுக்கு இகசுகம், வைகுண்ட வாஸம் இவைகளெல்லாம் கிடைப்பதற்குக் கேட்பானேன் ! உம்மையே சரணமடைந்து வாழும் ,இந்த சாது ஜனங்களின் ஆனந்தத்தை நீர் வ்ருத்தி செய்கிறீர்.

அதிகமாகப் பேசுவதால் என்ன லாபம் ?ஹே….பிரபோ…..உனது பெருமைகள் மனசுக்கும், வாக்குக்கும், தேகத்தின் அவயவங்களுக்கும் அதீதம்.—-அவை அகோசரமானவை நீர் எல்லாவற்றையும் நன்கு அறிவீர். நீரே எல்லா ஜகத்துக்கும் நாதர். எனக்கும் நாதர்.

ஹே…க்ருஷ்ணகுல புஷ்கர ஜோஷதாயிந் ——–வ்ருஷ்ணீ குல தீபமே……உம்முடையப் பெருமைகள் அதீதப் பிரகாசம் உள்ளவை. அப்படிப்பட்ட உம்மை, ப்ரும்ம தேவனாகிய நான், கல்பம் முடியும் காலம் வரை நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறேன். —–ஸதா ப்ரணாமம் செய்கிறேன்.
( ஹே….கிருஷ்ணா…. ப்ருஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்ததை திரும்பச் திரும்பச் சொல்லி உன்னை நமஸ்கரிக்கிறேன்.பிருந்தாவனக் காட்டில், ஒரு புல்லாகவாவது, ஒரு புழுவாகவாவது,பிறந்து, உன் திருவடித்தூள் அடியேன் மேலே பட பாக்யம் செய்தேனா என்பது தெரியாது. . ஆனால், இந்த ஸ்தோத்ரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பாக்யம் கிடைத்ததற்காக , உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

ஹே, கிருஷ்ணா, சுகப்ப்ரம்மம், பரீக்ஷித்துக்கு, மேலும் சொன்னார். ப்ருஹ்மா உன்னை மூன்று தரம் ப்ரதக்ஷிணம் வந்து, உன் திருவடியில் பணிந்து , நமஸ்கரித்து,
தன்னுடைய இருப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். ப்ருஹ்மாவை அனுப்பிய பிறகு, நீ, பசுக்களையும் கன்றுகளையும் மீட்டுக் கொண்டு, கோபாலகர்கள் முன்னே இருந்த இடத்துக்கு வந்தாய். கோபாலகர்கள், தங்களுடைய பிராணனும், அந்தராத்மாவுமான உன்னை, ஒரு வருஷ காலத்துக்கு மேலாகப் பிரிந்து இருந்தாலும்,
உன் மாயையால், அது, ஒரு க்ஷண கால நேரமாக அவர்களுக்குத் தெரிந்ததாம். அவர்கள், உன்னை ” இங்கே வா…..இந்தக் கவளச் சோற்றை சாப்பிடு…..நீ வரும்வரை நாங்கள் உன் நினைவாகவே ஒன்றும் சாப்பிடாமல் காத்துக் கிடக்கிறோம் ….” என்று சொல்லி அழைத்தார்களாம். சிரித்துக் கொண்டே, நீ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வனத்தைவிட்டுப் புறப்பட்டு, ஊருக்கு வந்தாயாம். எப்படி வந்தாய் தெரியுமா ?
உடலில் புஷ்பங்களைத் தரித்துக் கொண்டு, தலையின் உச்சியில் மயில் இறகுகளால் அலங்கரித்துக் கொண்டு, புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு, கன்றுகளை அன்புடன் தடவி விரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தாயாம்.

பரீக்ஷித் , மெய்மறந்து , சரிதத்தைக் கேட்டான். அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. முனிவரைக்கேட்டான். கிருஷ்ணனுடைய பெற்றோர் வசுதேவர், தேவகி ,
அப்படியிருக்க, நந்தகோபன், யசோதையிடம் இவ்வளவு பிரேமை ஏன் ஏற்பட்டது? அதைப்போல, கோபாலகர்களின் பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளிடம்
ஏன் ப்ரேமம் ஏற்பட்டது ? அதைவிட, கிருஷ்ணனிடம் அதீத ப்ரேமம் ஏற்பட்டது எதனால் ? என்று கேட்டான்.
ஸ்ரீ சுகர் பதில் சொன்னார். ஹே….ராஜன்…..ஒவ்வொருவருக்கும் ஆத்மா பிரியமானது குழந்தைகளும் ப்ரியமானவையே. அதைப்போல, செல்வம், வீடு இவைகளும்
மனத்துக்குப் பிடித்தமாக ஆகிறது. ஆனாலும், ஆத்மாவைப் போலப் ப்ரியமாவதில்லை. இந்தப் ப்ரியம் , தேகத்தையே ஆத்மாவாக எண்ணுபவர் களிடமும் காணப்படும்.
ஆனால், ஸ்ரீ கிருஷ்ணன் விஷயத்தில், அவனே அகில உலகங்களுக்கும் ஆத்மா——-அந்தராத்மா. மாயையினால், அதை மறைத்துக் கொண்டு, மனுஷ்யனைப் போல , இவர்களுடன் விளையாடுகிறான். அதனால், பிரேமை மிக அதிகமாகிறது. ஆனால், எவர்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணனே ஜகத் காரணன், அண்டசராசரங்களுக்கும்
அவனே அந்தராத்மா என்கிற உறுதி இருக்கிறதோ, அவர்களுக்கு, எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணன்தான். அதனாலே, அவனை ஆச்ரயித்து, அவன் பாத பல்லவங்களைத்
தெப்பமாக வைத்து, வைகுண்ட பதத்தை அடைகிறார்கள். அவன் திருவடிகளை நம்பியவர்களுக்கு, இந்தஸம்சாரமாகிய ஸமுத்ரம், “வத்ஸ பதம் ” (மாட்டின் குளம்படியில் உள்ள தேங்கிய நீரைப் போல ). அதனால், இந்த சமுத்ரத்தை, சுலபமாகத் தாண்டி, வைகுண்டத்தை அடைகிறார்கள். ஹே….ராஜன்…….பகவான், தன்னுடைய பால்யத்தில், இளம் சகாக்களுடன் அத்புத விளையாட்டுகளைச் செய்தார். இவற்றை எவர்கள் கேட்கிறார்களோ, எவர்கள் படிக்கிறார்களோ, அவர்கள், எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறப் பெறுவார்கள். ப்ருஹ்மாவின் ஸ்துதியைக் கேட்பதாலும், படிப்பதாலும் , எல்லாப் பாபங்களும் விலகி, எல்லா அபீஷ்டங்களும் கைகூடும் என்று சொன்னார்.
( ஹே …..கிருஷ்ணா…..அடியேனை ஒரு கருவியாக வைத்து, .இந்த உன்னுடைய பால்ய லீலைகளைக் கேட்டும் , படித்தும், சொல்லியும், எழுதியும், அடியேனை ஆட்படுத்திய , அடியேனின் ஜென்மத்தை சாபல்யமாக்கிய, கோபாலகர்களுக்கும், பசுக்கள் கன்றுகளுக்கும், ப்ருஹ்மாவுக்கும், பலராமனுக்கும், முக்யமாக
உனக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள் )

About the Author

Leave A Response