Dhasamaskantham–Adyayam–44 & 45

Posted on Sep 16 2016 - 9:47am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் —– அத்யாயம்….44
————————————–
கம்ஸ வதம்

ஹே கிருஷ்ணா…..ஸ்ரீ சுகப்ப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்கு ,
உன்னால் கம்ஸன் வதம் செய்யப்பட்டதை யும், அதற்கு முன்பு, சாணூரன் முஷ்டிகன்
வதம் செய்யப்பட்டதையும் கூறியதை, இப்போது உனக்குச் சொல்கிறேன்.
நீ, சாணூரன் என்கிற மல்யுத்த வீரனுடனும், பலராமன், முஷ்டிகன் என்கிற
மல்யுத்த வீரனுடனும் மல்யுத்தம் செய்தீர்கள். ஒருவருக்கு ஒருவர்
மோதிக்கொண்டீர்கள்; கையும் கையும் மோதின; காலும் காலும் மோதின;
ஒருவர் பிடியில் இருந்து மற்ற ஒருவர் தப்பிப்பது, பிடிபடாமல் காத்துக் கொள்வது,
ஒருவரைப் பிடித்து இன்னொருவர் மேலே தூக்குவது, இப்படியாக மல்யுத்த விதிகளின்படி
யுத்தம் செய்தீர்கள்; இதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் , “இது என்ன
அநியாயம் ? சரிசமம்மான பலமுள்ளவர்கள் மல்யுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறோம்;
இங்கு, இளம் பாலகர்களுடன் வஜ்ராத்தைப்போலத் தேக பலம் கொண்ட மலைகளைப்போல
இருக்கிற பெரிய பலவான்கள் மோதுகிறார்களே ?
இது அதர்மம்; இதை நாம் பார்க்கக் கூடாது;எழுந்து செல்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.
உன்னுடைய முகத்தில் வியர்வை அரும்பி இருப்பதைப் பார்த்து துக்கித்தார்கள்.
சாணூரன் பிடிக்கு அகப்படாமல் , சமாளித்து நீ, அவனைத்தாக்கும்போது
சந்தோஷித்தார்கள். ஆஹா….வ்ரஜாபூமிவாசிகள் புண்ய சாலிகள் …….
.கிருஷ்ணனின் அழகையும் லீலைகளையும் அனுபவித்தவர்கள் அல்லவா என்று
உன்னை ஸ்லாகித்தார்கள். ,
மதுராபுரி ஸ்திரீகள், உன்னையே பார்த்து, உன்னையே நினைத்து,
உனக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று பிரார்த் தித்தாகள் ஆனால், அவர்கள் மனசு
அடுத்து என்னநடக்குமோ என்று பயந்தது.
உன்னுடைய தாயாரான தேவகியும் ,தந்தையான வசுதேவரும் இந்த மல்யுத்தத்தைப் பார்த்து,
உன்னை சாதாரண பாலகனாக எண்ணி மிகவும் பயந்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டிருக்கும்போது,
நீ மிக வேகமாக, சாணூரனுடைய , கை கால்களைப் பிடித்து அவனை மேலேதூக்கி,
பலதடவைகள் சுழற்றி , ஓங்கி பூமியில் அடித்தாய். அந்தக்ஷணமே அவன் செத்து மடிந்து
,அவன் உயிர் பிரிந்தது. அதே சமயம், பலராமனின் தாக்குதலைத் தாங்கமுடியாமல்,
பலராம னின் முஷ்டியால் அடிபட்டு, முஷ்டிகனும் மடிந்தான்.
இவைகளைப் பொறுக்க முடியாமல் ,சாணூரன் முஷ்டிகனின் சகாக்கள்,
உங்களைத் தாக்க ஓடிவர, அவர்களும் உங்களால் மடிந்தார்கள்.
இவைகளைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிற மல்லர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடினர்.
ஜனங்கள் ஜெயகோஷம் செய்ய, நீங்கள் இருவரும் விஜய சீலர்களாக விளங்கினீர்கள்.

கம்ஸனுக்குக் கோபமான கோபம்;
“வாத்தியங்களை நிறுத்துங்கள்; இறந்துபோன மல்லர்களின் தேகங்களை அகற்றுங்கள்;
இந்த இரண்டு பாலகர்களையும் ஊரை விட்டு விரட்டுங்கள்;
நந்தகோபரைக் கைது செய்யுங்கள்; வசுதேவரைப் பிடித்துக் கொல்லுங்கள்
; உக்ரசேனரையும் கொல்லுங்கள்; கோபாலகர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள் ……”
என்று அடுக்கடுக்காகக் கட்டளையிடத் தொடங்கினான்.

இந்தச் சமயம், நீ கொஞ்சமும் தாமதம் செய்யாமல், கம்ஸன் அமர்ந்து இருக்கும்
ஆசனத்தின் மீது பாய்ந்தாய். அவன் உடனே வாளை உருவிக்கொண்டு,
கேடயத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, கீழே இறங்கினான்.
நீ, அவனை, எப்படி கருடன் பெரிய சர்ப்பத்தைப் பிடித்துக் கொல்வாரோ
,அப்படி, அவனைப்பற்றி,அவன் அலற அலற அவனைக் கீழே தள்ளினாய்.
கேசங்கள் அவிழ்ந்தன;
ராஜ கிரீடம் கீழே விழுந்து உருண்டு ஓடியது
அவன்மீது ஏறி உட்கார்ந்தாய்
ஹே…விஸ்வாஸ்ரய
ஹே… ஆத்ம தந்தர
அவனைச் சரசர வென்று இழுத்தாய்
பூமியில் தேய்த்தாய்
ஹே…ஹரி…
எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைக் கொன்றாய்.
ஒரு யானையை சிம்ஹம் எவ்விதம் கொல்லுமோ அப்படி அவனைக் கொன்றாய்.
கம்ஸனின் சாகும் தருணம் , அந்த க்ஷணத்தில் உன்னைப் பார்த்தான்.
எப்போதும் பயத்தினால் நடுங்கி, பகலிலும், இரவிலும் , உட்காரும்போதும்
சாப்பிடும்போதும் உன்னை எதிரியாக நினைத்து உன் நினைவாகவே இருந்தானோ
அந்தக் கம்ஸன்
உன்னை இப்போது சங்கு சக்ர கதா தாரியாக ,
யாருக்கும் கிடைக்க அரியதான நான்கு திருக் கரங்களுடன் கூடிய
விஷ்ணு ரூபியாகப் பார்த்தான்.
என்ன ஆச்சர்யம்…..உன்னால் இப்போது அநுக்ரஹிக்கப்பட்டான்.

(ஹே கிருஷ்ணா….அந்த மஹா ஸ்வரூபத்தை இப்போது
அடியேனுக்குக் காட்டி , அடியேனை அநுக்ரஹம் செய்வீராக )

கம்ஸனுக்கு எட்டு சஹோதரர்கள்;
அவனைப் போலவே பலம் உள்ளவர்கள்; கம்ஸன் இறந்தவுடன் மிகவும் கோபத்துடன்
உன்னைக்கொல்ல ஓடி வந்தார்கள். அதைக் கண்ட பலராமன், சம்மட்டியை எடுத்து,
சிம்ஹம் , மாடுகளைக் கொல்வதைப்போல அவர்களை கொன்றான்.
ஆகாயத்திலிருந்து துந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின;
பிரம்மாவும் தேவர்களும் உங்கள்மீது புஷ்பமாரி பொழிந்தனர்.

கம்ஸன் மற்றும் அவனுடைய பந்துக்கள்
கதறி அழுதனர். கம்ஸ பத்னிகள், ஹே…நாத… பிராணிகளுக்கு எல்லாம்
ஹிம்சை செய்தீர்; பரமாத்மாவை விரோதித்தீர்; அதனால் இந்தத் துர்க் கதியை
அடைந்தீர் …என்று புலம்பினார்கள்.
சர்வலோக ரக்ஷ்கனான நீ,
அவர்களை ஆசவாசப் படுத்தினாய். மாதாவும் பிதாவுமான தேவகியையும் வசுதேவரையும்
பந்தனத்திலிருந்து விடுவித்து, அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினாய். , .
( ஹே…..கிருஷ்ணா… மாதா பிதாக்களைப் பயத்திலிருந்தும், பந்தனத்திலிருந்தும் விடுவித்த
நீ, அடியேனையும் அப்படியே ரக்ஷிப்பாயாக…
உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

44 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

—————————————————————————————————————————————

தசமஸ்கந்தம் —- அத்யாயம் 45
————————————————

ஆசார்ய புத்ரனை உயிருடன் மீண்டும் கொணர்தல்
————————————-

ஹே….கிருஷ்ணா…..உன்னுடைய பெற்றோர்களை , நீயும் பலராமனும் அணுகி, அவர்களிடம் பேசினாய். “பிள்ளையாகப் பெற்றதன் பலனை நீங்கள் அனுபவிக்க முடியாமல், நாங்களும் உங்களுக்குச் ஸேவை முடியாமல், நாங்கள் வேறு இடத்தில் வாழும்படி ஆகிவிட்டது. கம்ஸனால் துன்புறுத்தப்பட்டு காரக்ருஹத்தில் இருந்தீர்கள்.
உக்ரசேனரான எங்கள் பாட்டனாரே… நீர் இந்த க்ஷணம் முதல் இந்த மதுரா ராஜ்யத்துக்கு அரசர்; எங்களுக்கும்அரசர் ; …” என்று சொல்லி, அவர்களை சந்தோஷம் அடையச் செய்து, மதுரா ராஜ்ஜியம் எவ்வித சுபிக்ஷத்துக்கும் குறைவு இன்றி ,மேலும் வளர ஆவன செய்து ,அங்கேயே கொஞ்ச காலம் இருந்தீர்கள்.
பிறகு, யசோதை மற்றும் நந்தகோபரிடம் சென்று, ” நீங்கள் பரிவுடனும், வாத்சல்யத்துட னும் , உங்கள் சுகங்களை எல்லாம் துறந்து, எங்களை வளர்த்தீர்கள்; நீங்கள்தான் பிதாவும், அன்னையும்; நாங்கள் இங்கு கொஞ்ச நாட்கள் இவர்களுடன் வசித்து விட்டுத் திரும்பவும் கோகுலம் வருகிறோம்; இந்த ஆபரணங்கள், வஸ்த்ரங்கள் யாவும் உங்களுக்கே ;வ்ரஜை கிராம வாசிகளுக்கே; இவைகளுடன் கோகுலம் செல்லுங்கள் …” என்று சொன்னாய். அவர்கள் யாவரும் உன் பிரிவைத் தாங்க முடியாமல், கண்ணீர் விட்டார்கள்; பிறகு ஒருவாறு மனம் தேறி, கோகுலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
வசுதேவர் , உனக்கும், பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். பிறகு யதுகுல குருவாகிய கர்க்கரிடம் காயத்ரி வ்ரதம் இருக்க வும்,
பிறகு ஸாந்தீபினி என்கிற ஆசார்யரிடம் எல்லா சாஸ்திரங்களையும், வேதங்களையும் கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார்.
ஹே கிருஷ்ணா….யாரிடமிருந்து எல்லா வேதங்களும், சாஸ்திரங்களும் பிரக டனம் ஆயிற்றோ, எவரை நினைத்தால் எல்லா வித்யைகளும் கைகூடுமோ
அந்தப் பரப் ப்ரும்மமான நீ, பலராமனுடன் சேர்ந்து, கர்க்கரை அணுகி ப்ராஜாபத்ய வ்ரதம் அனுஷ்டித்து, பிறகு அவர் அனுமதியுடன், உஜ்ஜயினி சென்று காஸ்யப கோத்ர ஆசார்யரான ஸாந்தீபினியிடம் , ஆன்விக்ஷிகி என்கிற சப்தம், சந்தஸ், வ்யாகர்ணம், ஜ்யோதிஷம், கல்பம், நிருக்தம் ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்கள், தனுர் வேத ரகசியங்கள், தர்ம சாஸ்த்ரம், பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம் , ராஜ நீதி, 64 கலைகளான
பாட்டு
வாத்திய சங்கீதம்,
நடனம்
நாடகக் கலை ,
சித்ரம் துணியில் வரைதல்
பலவித வண்ணப்படங்களை கஸ்துரி போன்ற வாசனைப் பொருள்களால் வரைதல்,
தெய்வ ஆராதனத்துக்குக் கோலம் இடுதல்,
பூக்களால் அலங்கரித்தல்,
புஷ்பப் படுக்கை
பற்கள், உடல் அங்கங்களுக்குப் பூச்சாயம் இடுதல்,
துணிகளுக்கும் அம்மாதிரியே செய்தல்,
தரையை ரத்னங்களால் அலங்கரித்தல்,
படுக்கை தயாரித்தல்
ஜலதரங்கம் போன்ற நீர் வாத்தியம் பயிலல்,
நீர்மேல் நடத்தல்,
படுத்தல்
மாயாஜால வித்யைகள்
புஷ்பங்கள் தொடுத்தல் ,
கொண்டைகள் செய்தல்
உடலைப் பூக்களால் அலங்கரித்தல்,
காதுகளின் ஓரத்தில் சித்திரம் வரைதல்,
வாசனைப் பொருட்கள் தயாரித்தல் ,
பலவித ஆபரணங்கள் தயாரித்தல்,
இந்திர ஜாலம்
பலவித வேஷமிடுதல்,
உள்ளங்கை கோலம்
சமையல் கலை
பானங்கள் தயாரித்தல்
நெசவு,
ஊசி வேலை,
பலவித சங்கீத வாத்யங்களைத்தயாரித்தல்,
புதிர் போடுதல்,
விடுகதை சொல்லல்,
கவிதை புனைதல்,
நாவினால் பலவித ஒலிகள்
மிக வேகமாகப் படித்தல்,
கவிதை நாடகம் எழுதுவது ,
கவிதைகளைப் பூர்த்தி செய்தல்,
நூல் நூற்றல்,
தச்சு வேலை,
கட்டிட வேலை,
இவைகட்கு வரைபடம் தயாரிப்பது
ரத்னப் பரீக்ஷை
உலோகத்தைத் தங்கமாக மாற்றல்,
பூமியில் உலோகங்களின் இருப்பிடத்தை அறிதல் ,
தாவரவியல்,
விலங்குகளின் இயல்
விரோதியை மந்த்ரத்தால் கட்டல்
பார்வையில் இல்லாக் கடிதங்களைப் படித்தல்,
உள்ளங்கை பொருளை அறிந்து சொல்லல்
மிலேச்ச பாஷை
சகுனம்
மந்த்ர,
தந்த்ரங்கள்
யந்த்ரம் செய்தல்,
வஜ்ரம் போன்ற பொருட்களைப் பிளத்தல்,
எண்ண ஓட்டங்களை அறிந்து சொல்லல்,
ஒரு பொருளைப் பலபொருட்களாகக் காட்டுதல்
ஆகர்ஷணம்
வசியம்
மிருக பாஷை,
பக்ஷி பாஷை கள்
பேய் பிசாசுகளை அடக்குதல்
இப்படியாக 64 கலைகளையும் 64நாட்களில் கற்றுத் தேர்ச்சி அடைந்தீர்கள்
எல்லா வித்யைகளையும் கற்றுத் தேர்ச்சி அடைந்தவுடன் , ஆசார்யரையும் அவர் பத்நியையும் நமஸ்கரித்து, குரு தக்ஷிணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினீர்கள்
அப்போது, உங்கள் மஹிமையை நன்கு அறிந்த சாந்தீபினி, “ப்ரபாஸ தீர்த்தத்திலே என்னுடைய குமாரன் ஒருநாள் மூழ்கி இறந்து போனான்; அவனை மீட்டுக் கொடுத்து குரு தக்ஷிணை கொடுத்த பலனை அடையுங்கள் ” என்றார்
“அப்படியே ” என்று சொல்லி, நீங்கள் இருவரும் ரதத்தில் ஏறி, பிரபாஸ தீர்த்த்தத்தை அடைந்தீர்கள். அப்போது, சமுத்ர ராஜன் அங்கு வந்து வெகுமதிகளைக் கொடுத்து, பணிந்து நின்றான். நீ, அவனிடம்,”தொலைந்துபோன குரு புத்ரனை உடனே கொணர்க “என்றாய்.
சமுத்ர ராஜன் ” ஹே…கிருஷ்ண…..பஞ்சஜனன் என்கிற தைத்யன் ஜலத்தின் அடியில் சங்கு ரூபமாக வசிப்பவன், ,குருபுத்ரனைக் கொண்டு போய் இருக்கிறான் “என்று சொல்ல, நீங்கள் ஜலத்திற்குள் புகுந்து , பஞ்சஜனனைப்பார்த்து அங்கு குரு குமாரன் இல்லாமையால் அவனைக் கொன்று, அவனுடைய உடலில் இருந்து பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கினை எடுத்துக் கொண்டு, “ஸம்யமனீ ” என்கிற யம பட்டணத்தை அடைந்து, சங்கை ஊதினீர்கள்
யமதர்மன், நீ வந்திருக்கிறாய் என்பதை அறிந்து, ஓடோடி வந்து, அதிதி உபசாரம் செய்தான்.
அவனிடம், “என்னுடைய கட்டளையை சிரசா வஹித்து, சாந்தீபினியின் குமாரனை என்னிடம் உயிருடன் ஒப்புவிப்பாய் …”.என்றாய்.” அப்படியே செய்கிறேன் ”
என்று சொல்லி, யமதர்மன், குரு புத்ரனை உங்களிடம் உயிருடன் கொண்டுவந்து கொடுத்தான். நீங்கள், யமதர்மனை ஆசீர்வதித்து விட்டு,திரும்பவும்
ஆசார்யரிடம் வந்து அவருடைய குமாரனை அவரிடம் ஒப்புவித்தீர்கள்.
வேறு ஏதாவது வேண்டுமானாலும் கட்டளை இடுங்கள் என்று வேண்டிக் கொண்டீர்கள்.
அதற்கு, ஆசார்யர், உங்களால் என் மனோர தம் நிறைவேறியது; மிகவும் சந்தோஷம் ;உங்கள் கீர்த்தி உலகெங்கும் பரவும்; நீங்கள் கற்றவை உங்களுக்கு மறவாமல் இருக்கும்; நீங்கள் குருகுல வாசத்தை முடித்தீர்கள் …என்று சொன்னார்.
குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் இருவரும் அவரிடம் அனுமதி பெற்று, மதுராபுரிக்கு ரதத்தில் வேகமாக வந்து சேர்ந்தீர்கள். உங்கள் இருவரையும் பார்த்த
மதுராபுரி வாசிகள் பேரானந்தம் அடைந்தார்கள்.

45 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்

krishna-photo-images-6-2

About the Author

Leave A Response