Dhasamaskatham–Adyayam 38 & 39

Posted on Sep 16 2016 - 4:54am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்—அத்யாயம் –38ம் 39ம்


தசமஸ்கந்தம்———–அத்யாயம் ………38
——————————————————-

அக்ரூரர் கோகுலத்துக்கு வருதல்
———————————————————-
ஹே…..கிருஷ்ணா…. ஸ்ரீ சுகர் , பரீக்ஷித் ராஜனுக்கு
அக்ரூரரின் பக்தியைப் பற்றிச் சொல்கிறார்.
அக்ரூரர் அன்று ராத்திரி மதுராவில் இருந்துவிட்டு, மறுநாள்,
கம்ஸனின் கட்டளையை நிறைவேற்ற—-அதாவது உன்னையும் , பலராமனையும்
மதுராவுக்கு அழைத்துவர—கோகுலத்துக்குப் புறப்பட்டார்
ரதத்தில் ஏறி அமர்ந்தார் உன்நினைவுதான் அவருக்கு!
அவர் மனம் சொல்கிறது;–
யோகிகளும், ரிஷிகளும், தேவர்களும், இந்திரனும், பிரும்மனும், ருத்ரனும்
உன்னுடைய தர்சனத்துக்காக ஏங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்;
அந்த ஸ்ரீ கிருஷ்ண தர்சநம் இப்போது எனக்குக் கிடைக்கப் போகிறது
; ஸுகபோல நாசிகம்—-அழகான மூக்கு, புருவம்
கன்னம்—-மந்தஸ்மிதம்,
பீதாம்பரம்,
தலையில் மயில் பீலி,
கையில் புல்லாங்குழல் இப்படியாக அவரை தரிசிக்கப் போகிறேன்.
எவரைப் பார்த்தால் அக்ஜானம் அகலுமோ, அகன்று, பாபம் முழுவதும் அழியுமோ
,அழிந்து பக்திப் பரவசம் ஏற்படுமோ அவரை தரிசிக்கப் போகிறேன்.
அவரைத் தரிசிப்பதால், என் கண்கள் , பாக்யம் அடையப் போகின்றன.
ஹே…கிருஷ்ணா…உன்னைத் தோத்தரிக்க வார்த்தைகள் போதவில்லையே ,
உன்னை ஸ்மரிப்பதால் பாவங்கள் அகன்று பாவனமாக்கப்படுகிறேன்.
நீ, மஹதாம் கதிம்—– எல்லாராலும் அடையப்படவேண்டிய
உத்தமமாம் உத்தம கதி.நீயே
அனைவர்க்கும் ஆசார்யன்.
த்ரைலோக்ய காந்தன். ஸ்ரீ வத்ஸ சின்ன ஸ்ரீ.
கோகுலத்தை அடைந்ததும், தேரை நிறுத்தச் சொல்லி, கால்நடையாகச் செல்வேன்.
பலராமனையும், கிருஷ்ணனையும் பார்த்ததும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன்.
என் பிரபு என்னைத் தொட்டு, உயரத்தூக்கி, கைகளை என் தலையில் வைத்து
ஆசீர்வாதம் செய்வார். நிஜஹஸ்த பங்கஜம் . —அநுக்ரஹம் செய்வார்.
கால புஜங்களாகிற தீவினைகளிளிருந்து விடுவிப்பார்.
ஆனால், கம்ஸனின் தூதன் என்று உபேக்ஷை செய்வாரோ ?இருக்காது
என்னிடம் அனுதாபம் காட்டுவார். அக்ரூரரே, எப்படி இருக்கிறீர் என்று கேட்பார்
. ஒருவேளை, என்னைத் தொட்டு ஆசீர்வதிக்காவிட்டாலும், மந்த
ஸ்மித பார்வையால் என்னைப் பார்த்தாலே போதும்.
குளிர்ந்த பார்வை ,அதுவே போதும்.
என் பாபங்கள் உடனே நாசமாகி, பிறவிகள் ஒழிந்து,
புருஷார்த்தத்தை அடைந்து விடுவேன்.
பலராமன் யதுக்களுள் உத்தமர். என் கைகளைப் பிடித்துத்
தன் கிருஹத்துக்கு அழைத்துச் செல்வார். என்னைக் குசலப்ரச்னம் செய்வார்.
நானும் எல்லாவற்றையும் சொல்வேன். கம்ஸனின் செய்கைகளைச் சொல்வேன்

ஹே….கிருஷ்ணா…இப்படித் தன் அந்தரங்க எண்ண அலைகளில் ,
உன்னையும், பலராமனையும் வழி நெடுக ஸ்மரித்துக் கொண்டு ,
சாயந்தர வேளையில் கோகுலம் வந்து சேர்ந்தார். ரதத்திலிருந்து இறங்கினார்.
குனிந்தார். ஆச்சர்யப்பட்டார். உன்னுடைய தூய்மையான பாதரேணுக்களைத் தரிசித்தார்.
உன்னுடைய ஒவ்வொரு திருவடியும் பூமியில் பதிந்து,
சங்கு சக்ர ரேகைகள் பொதிந்து விளங்குவதைப் பார்த்தார்.
அகிலலோகத்திலும் உள்ள பக்தர்கள், பாகவதர்கள் எந்தப் பாத தூளியை
சிரஸ்ஸில் வஹிக்கவேண்டும் என்று ஏங்குகிறார்களோ
அந்தப் பாத துளிகளைப் பார்த்துப் பரவசப்பட்டார்.
என் உடல் அடையவேண்டிய பரம புருஷார்த்தம் இதுதான் என்று,
அந்தப்பாததூளிகளில் விழுந்து புரண்டார்.
மீண்டும், மீண்டும் புரண்டார்.

அப்போது, உன் அம்புஜ நேத்ரங்களைக் கண்டார்; உன் நீல நிற பீதாம்பரத்தைக் கண்டார்;
மஞ்சள், நீலப் பீதாம்பரம் அணிந்து இருந்த பலராமனைக் கண்டார்;
ச்யாமள நிறமுள்ள உன்னையும், ஸ்வேத நிறமுள்ள பலராமனையும் பார்த்தார்;
பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் உங்கள் ஸுந்தர வதனங்களைக்கண்டார்;
உடனே உங்களை நமஸ்கரித்தார்.
கண்களிளிருருந்து நீர் தாரை தாரையாகப் பெருக,
அதனால் கண்கள் மங்க, புளகாங்கிதம் அடைந்த சித்தத்தால், குரல் தடுமாற,
நான்தான் அக்ரூரர் என்று சொல்லக்கூட முடியாதபடி, தடுமாறினார்.

உடனே, நீ, சக்ர வளையம் பதிந்த திருக் கைகளால்,
அவரை உன்பக்கம் இழுத்து, தழுவிக் கொண்டாய்.
அப்படியே, பலராமனும் தழுவிக் கொண்டார்.
பலராமர், அக்ரூரரைத் தன்னுடைய கிருஹத்துக்கு அழைத்துச் சென்று,
அதிதியை எப்படி விதிப்படி கௌரவிப்பார்களோ , அப்படி அக்ரூரரை உபசரித்தார்.
அக்ரூரர் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து சந்துஷ்டராக விளங்கினார்

அப்போது, நந்தகோபரும் அங்கு வந்து சேர்ந்தார்.
ஹே…கிருஷ்ணா…
நந்தகோபர், அக்ரூரரைப் பார்த்து, ” உம்மைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்.
கம்ஸன் ரொம்பவும் பொல்லாதவன்; க்ரூர மனம் உள்ளவன்; துஷ்டன்;
தேவகியின் குழந்தைகளைக் கொன்ற பாதகன்;
அவனிடம் எப்படி வாழ்கிறீர் ? ” என்று கேட்டார்

38 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்
———————————————————————————————————————————

தசமஸ் கந்தம் —- — அத்யாயம் ——-39
——————————————————————-
ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள், அக்ரூரருடன் , மதுரா நகருக்குச் செல்லல் —–.
—————————————————————————————————————————–

ஹே…..கிருஷ்ணா….. ஸ்ரீ சுகப்ப்ரும்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை,
உனக்குச் சொல்லி நினைவுபடுத்துகிறேன்
அக்ரூரர் உன்னைத் தரிசித்ததால் எல்லா மனோரதங்களும் அடைந்தவராக,
மிகவும் ஆனந்தமாக உங்களிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்.
இரவு வந்தது; போஜனம் முடிந்தது; நீ, அக்ரூரரைப் பார்த்து, கம்ஸனின் நடத்தைகள்,
உறவினர்களிடமும் ஸ்நேகிதர்களிடமும் எப்படி நடந்து கொள்கிறான், அவனது
எண்ணங்கள் எல்லாவற்றையும் சொல்லுமாறு, கேட்டாய்.

ஹே….தாத…..கம்ஸன் ,க்ஜாதிகளிடத்தில், சிநேகமாக இருக்கிறானா
அல்லது கொடுமை செய்கிறானா ? சொந்த மாமாவாக இருந்தாலும்,
பொல்லாதவன் என்பதைச் சொல்லியாக வேண்டும்.
என் தாயையும் , தந்தையையும் மிகவும் கொடுமைப் படுத்தியவன்
. அவர்களின் புத்ரர்களைக் கொன்றவன்.
என் பெற்றோர்களைக் காராக்ருஹத்தில் அடைத்தவன்.
எங்களால், இங்குள்ளவர்களுக்குத் தீமையைச் செய்பவன்.
அவைகள் இருக்கட்டும், இங்கு தாங்கள் வந்த காரணம் என்னவோ என்று கேட்டாய்.

அதற்கு அக்ரூரர், உன்னிடம் எல்லா விவரத்தையும் சொன்னார்.
தவிரவும், நாரதர், கம்ஸனை சந்தித்தது, அவனின்
பூர்வ ஜன்ம ரஹஸ்யங்களைச் சொன்னது,
இப்போது உன்னையும், பலராமனையும் , ஒரு சாக்கை வைத்து
மதுரைக்கு அழைத்து வரச் சொன்னது என்ற விஷயங்களையும்
உன்னிடமும் பலராமனிடமும், நந்தகோபனிடமும் சொன்னார்.

இவைகளைக் கேட்டு, நீயும் பலராமனும் உரக்கச் சிரித்தீர்கள்;
ராஜாவின் கட்டளை என்று நந்தகோபரிடம் சொன்னீர்கள்.
நாளை காலையே புறப்படுவோம் என்று சொன்னாய்.
நந்தகோபரும், பால், தயிர் வெண்ணெய் இவை வண்டி, வண்டியாக சித்தமாகட்டும்
யாதவர்களுடன் நானும் வருகிறேன் என்றார்.
இப்படி நடந்த சம்பாஷணைகள், கோபிகைகளுக்குத் தெரிந்தது.
கிருஷ்ணன் நம்மை விட்டு, மதுரைக்குப் போகிறான் என்று கேள்விப்பட்டதும்
பிராணனை இழந்தவர்களைப் போலத் தவித்தார்கள்.
சில கோபிகைகளுக்கு, கைவளைகள் நழுவி விழுந்தன;
சிலருக்கு மேகலைகள் கலைந்தன;
சிலருக்கு அழகு குன்றி உடல் வெளுத்துப் போயிற்று;
பேச வார்த்தைகள் வெளிவரவில்லை; கண்கள் செருகிக் கொண்டன;
உன்னுடைய பிரிவான விரஹதாபம், பிரிவதற்கு முன்பே,
அந்த எண்ணத்திலேயே அவர்களை வாட்டியது;
உன்னை நினைக்க, நினைக்க, அவர்களது கண்களிலிருந்து ஜலதாரை பொழிந்தது;
ஹே…கிருஷ்ணா ஹே கிருஷ்ணா என்று கதறினார்கள்

(கிருஷ்ணா , அடியேன் இந்தக் கோபிகைகளைப்பலதடவை சேவிக்கிறேன்;
பக்தியின் உச்சத்தை அடியேனுக்கு உணர்த்திய பரம ஆசார்யர்கள் அல்லவா,அவர்கள் ! )

ஹே… ப்ரும்மனே…எங்களுடன் பிரேமையையும் ஏன் சேர்த்துப் படைத்தாய் ?
நாங்கள் உன்னுடைய பொம்மைகளா ?
மல்லிகை மொக்கு குவிந்து மலராதபடி இருக்கும் —அதைப் போல,
அந்த முகுந்த வக்த்ரம்—அழகான கன்னங்கள்—-தீர்க்கமான நாசி—
சோகங்களைப் போக்கும் ஸ்மிதிலேத சுந்தரன்—
அந்த ஸுந்தர கிருஷ்ணனை எங்களிடம் காட்டி விட்டு
, இப்போது மறைக்கிறீரே, இது அநியாயம் அல்லவா ?
இது நீர் செய்யும் நல்ல செய்கையா ?

அவர், அந்தக் க்ரூரர், அக்ரூரர் என்கிற பெயருடன், அவரை இந்தக் குரூரமான
செயலைச் செய்ய அனுப்பி இருக்கிறீரே , இது உமக்கு நல்லதல்ல.
கண்களைக் கொடுத்து க்ருஷ்ணானுபவம் செய்யச் சொல்லி,
நாங்களும் கிருஷ்ணனை , கண்கள் பெற்ற பாக்யம் என்று கண்டு கண்டு
அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது இப்படிக் கண்களைப் பறிப்பது போல
நடந்து கொள்கிறீரே இது நியாயமா ?

நாங்கள், கிருஷ்ணனுக்காக, ஸ்வஜனங்களை விட்டோம்;
புத்ரர்களை விட்டோம்; வீடுகளை விட்டோம்
வேறு பலனில் ஆசையே இல்லாதபடி,
” அனந்யகதி, ஆனந்யார்ஹ சேஷத்வம் அனன்ய போக்யத்வம் —
இவைகளைச் செலுத்தியதற்குப் பலன் இது தானா ?

மதுராபுரி ஸ்திரீகள் கொடுத்து வைத்தவர்கள்;
கிருஷ்ணனின் அபாங்க, உத்கலித, ( கடாக்ஷ வீக்ஷண்யங்கள் ) பார்வைகள்,
அவர்கள்மீது படும்; மனோவச்யமான பேச்சுக்களைக் காது குளிரக் கேட்பார்கள் ;
மதுபஞ்சு பாஷிதம் —அவர்கள் மனோரதங்களை நிறைவேற்றும்;
கிருஷ்ணன், ஒரே வ்ரதமுள்ளவராகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி இருந்தாலும்,
மதுராபுரி ஸ்திரீகள் அவரை விடமாட்டார்கள்;
அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவரை வசப்படுத்தி விடுவார்கள்;
அந்த நிலையில், அவர் எங்கே திரும்பவும் இங்கு வரப் போகிறார்;
நாங்கள் அபலைகள்; க்ராம்யர்கள்; லஜ்ஜை, வெட்கம் உள்ளவர்கள்
ஆனால் அவைகளை இப்போது இழந்து, பிரமை பிடித்தவர்கள் போல ஆனோம்;
அவர் மதுராபுரி ஸ்திரீகளுக்கு வசியம் ஆவார்;
எங்கள் சொத்து, அவர்களிடம் பறிபோகிறது;
என்று பலபடியாகப் புலம்பி அழுதார்கள்

(ஹே….கிருஷ்ணா…..இந்தப் பக்திபெருக்கு அடியேனுக்கும் வரவேண்டுமென்று ,
ராதையை முன்னிட்டுக் கோபிகைகளைப்பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

இந்த அக்ரூரர் , துக்க சாகரத்தில் உள்ள எங்களிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல்,
எந்த ஆறுதலும் சொல்லாமல் எப்படி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு போகலாம்?
நெஞ்சில் துளிக்கூட ஈரமில்லாத , அன்பில்லாத பிரபு கிருஷ்ணன் ,
நம்மைக் கொஞ்சம் கூட லக்ஷ்யம் செய்யாமல்
ரதத்தில் நன்கு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். பலராமனும் இருக்கிறார்.
பல கோபர்கள் வண்டிகளைப் பூட்டிக் கூடவே பயணம் செய்யச் சித்தமாக இருக்கிறார்கள்.
நமது குல பந்துக்கள், வயோவ்ருத்தர்கள், கிருஷ்ணனிடம் ” நீ போகக்கூடாது ” என்று
ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள் ? நம்முடைய மனம் அவரிடம் பதிந்துபோய் விட்டதே !
அந்த அழகான முகம், புன்சிரிப்பு, பிறர் கேளாதபடி பேசுதல், கண்ஜாடைகள்,
எங்களைத் தழுவிக் கொண்டு ராச லீலை செய்தது,
எல்லாமே பேதைமை கொள்ளச் செய்கிறதே .
பெரிய நிதியை அல்லவா இழக்கப் போகிறோம். இந்தப் பிரிவை எப்படி சகிப்போம்
இந்த முகத்தையும் புன்சிரிப்பையும் எப்போது மீண்டும் காண்போம் என்று ப்ரலாபித்தார்கள்.

ஹே…கிருஷ்ணா… ஸ்ரீ சுகர் மேலும் கூறுகிறார்

கோபிகைகள், இப்படி விரஹதாபத்தில் மூழ்கி, லஜ்ஜையை விட்டு
அழுது புலம்பிக்கொண்டு இருக்கும்போது,
அக்ரூரர், காலை சந்த்யாவந்தனாதிகளை முடித்து ,
ரதத்தின் மீது ஏறி, ரதத்தை ஓட்டத் தொடங்கினார்.
நந்தகோபன் முன்னே செல்ல, கோபர்கள் தயிர் பால் வெண்ணெய் இவைகளைக்
குடம் குடமாக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு நந்தகோபனைத் தொடர்ந்தார்கள்.

அபலைகளான கோபிகைகள், கிருஷ்ணன் ஏதாவது சொல்லமாட்டான
என்று ஏக்கத்துடன் ரதத்தைப் பின் தொடர்ந்தார்கள்.
அப்போது, நீ, பிரேமையுடன் ” வருந்த வேண்டாம்,
நான் உங்களிடம் கூடிய சீக்ரம் வருவேன் ” என்று கைகளைக் காட்டிக் கூறினாய்.

கோபிகைகள், நின்றார்கள் ;
பேச்சு மூச்சின்றி நின்றார்கள்;
சித்திரப் படங்களைப் போல நின்றாகள்;
ரதம் வெகுதூரம் போய், கொடி அசைவது மறையும் வரை நின்றார்கள்;
சென்ற பாதையில் தூசிகள் அடங்கும் வரை நின்றார்கள்;
இனிமேல் நீ திரும்பவும் வரமாட்டாய் என்ற எண்ணம் கொண்டவர்களாக,
உன்னுடையநினைவையே எப்போதும் மனத்தில் இருத்தினார்கள்

(ஹே கிருஷ்ணா… உன்னை மனத்தில் இருத்திய அந்தக் கோபிகைகளை
அடியேன் எப்போதும் அடியேன் மனத்தில் இருத்திக் கொள்கிறேன் )

நீயும் , பலராமனும் , வாயு வேகமாய் அக்ரூரர் ரதத்தைச்செலுத்த,
மத்யான வேளையில், யமுனைக்கரைக்கு வந்து சேர்ந்தீர்கள்.
மரங்களின் நிழலில் , அக்ரூரர் ரதத்தை நிறுத்தினார்.
நீங்கள் இருவரும் காளிந்தீ நதியில் இறங்கி, முகம் கைகால் அலம்பித்
திரும்பவும் வந்து ரதத்தில் அமர்ந்தீர்கள்.

அக்ரூரர் மாத்யான்னிக ஸ்நானம் செய்ய , யமுனையில் விதிப்படி இறங்கி ,
ஸ்நானம் செய்தார்;
ஜலத்தில் மூழ்கி காயத்ரியாகிய பிரம்மத்தை ஜெபிக்கும்போது,
நதிக்குள், தீர்த்தத்தில் உன்னையும் பலராமனையும் தரிசித்தார்.
மூழ்கிய நிலையில் உங்களைக் கண்டவர், என்ன ஆச்சர்யம் என்று நினைத்து,
தலையை ஜலத்துக்கு வெளியே தூக்கிப் பார்த்தபோது
நீங்கள் இருவரும் ரதத்தில் இருக்கக் கண்டார்.
ரதத்தில் இருப்பவர் எப்படி ஜலத்துக்குள் இருக்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டு
மறுபடியும் ஜலத்துக்குள் மூழ்கினார். ஜலத்துக்குள் மறுபடியும் இருவரையும் தர்சித்தார்.
இன்னொரு தடவை, ஜலத்துக்கு வெளியே எட்டிப் பார்த்தார்;
ரதத்தில் இருவரும் இருக்கக் கண்டார். மறுபடியும் ஜலத்தில் மூழ்கினார்.
அவர் கண்ட காக்ஷி மிக அற்புதம்….
.தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், அசுரர்கள், இப்படி எல்லோரும்
உன்னை வணங்கி, அஞ்சலி செய்து ஸ்தோத்ரங்கள் சொல்வதைக் கண்டார்.
எப்படிப்பட்டவனாக உன்னைப் பார்த்தார், தெரியுமா !

ஒவ்வொரு நாக படத்திலும், முத்து வைரக் கற்கள் பளீரென பிரகாசிக்க,
ஆயிரம் தலைகள் உள்ள ஆதிசேஷன் வெள்ளை நிறத்துடன்
நீலப் பட்டாடை அணிந்தவராக,
அந்த ஆதி சேஷனின் சயனத்தில்,
பீத கௌசேய வாசத்துடன்,
நான்கு கைகளுடன்
அழகான திருமுகத்துடன்
அதில் புன் சிரிப்புடன்
தாமரை இதழ் போன்ற கொஞ்சம் சிவந்த கண் பார்வையுடன்
தீர்க்கமான நாசியுடன்
அழகான இரு காதுகளுடன்
சிவந்த உதடுகளுடன்
நீண்ட தடித்த புஜங்களுடன்,
சங்கு போன்ற க்ழுத்துடன்
அகன்ற மார்புடன்
அந்த வக்ஷஸ்தலத்தில் உறையும் ஸ்ரீதேவியுடன்
அத்திமர இலையைப்போன்ற மடிப்புடன் உள்ள திருவயிறுடன்,
பத்ம இதழ்களைப்போன்ற திருவடிகளுடன்
திருமுடியில் இலங்கும் வைரக் கிரீடத்துடன்,
ஜ்வலிக்கின்ற பற்பல திவ்ய ஆபரணங்களுடன்
இடுப்பில் கடிசூத்ரத்துடன்
திருமார்பில் பூணூலுடன் கௌஸ்துப மணியுடன்,
வனமாலையுடன்,
ஒரு பத்ம கரத்தில் உலகமாகிற காரணத் தாமரையுடன்,
மற்ற இரு கைகளில் சங்கு சக்ரத்துடன்
இன்னொரு கையில் கதாயுதத்துடன்
———அக்ரூரர் தரிசித்தார்

உன்னுடைய அனந்தமான பக்தகோடிகள், பிரகலாத, நாரத ,வசு, ப்ரும்ம, ருத்ர ,
மாக்கண்டேய, ரிஷிகணங்கள் உன்னை உத்தமமான கானத்தால் துதிக்க,
ஸ்ரீ மஹாலக்ஷ்மி உன் திருமார்பில் வாஸம் செய்ய,
புஷ்டி தேவதை, கீர்த்தி தேவதை, துஷ்டி தேவதை, இளாதேவதை ,
ஊர்ஜா, வித்யா, அவித்யா, யோகமாயா சக்தி, இவர்களும் உன்னைத் துதிக்க,
இத்தனைப் பேரழகு, பெரும் சம்பத்துக்கள் அடங்கிய மஹா உன்னத தர்சனத்தை ,
அக்ரூரர் அடைந்தார்.
( முன் ஜன்மத்தில் சுமந்திரராக இருந்து பகவானாகிய —
ஸ்ரீ ராமனாகிய பட்டாபிஷேக தர்சனத்தைப் பெற்றவர் அல்லவா ! )

பக்தியுடன், பரம ப்ரீதியுடன், உடல் புளகாங்கிதம் அடைய,
பாவனா பிரகர்ஷித்தினால் ஏற்பட்ட மனத்தையே கண்களாகக் கொண்டு,
உன்னுடைய அதி ஆச்சர்யமான வார்த்தைகளில்
அடங்காத மகோன்னத திவ்ய ரூபத்தைத் தரிசித்து,
சேவித்து சேவித்துப் பலமுறை சேவித்து,
நாத் தழு தழுக்க ஸ்தோத்ரம் செய்தார்.

ஹே கிருஷ்ணா… உன்னதமான பாக்யம்செய்த அக்ரூரரை,
கோபிகைகள், ஸ்ரீ பாஷ்யகாரர், ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் இவர்களை முன்னிட்டு
ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

39 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

அடுத்த அத்யாயம்—ஸ்ரீ அக்ரூரரின் ஸ்துதி—

———————————————————————————————————————————————————-

aviyur-pavithrothsavam-sri-navaneethakrishnan-2nd-day-141

About the Author

Leave A Response