அத்யாயம்—3
————-
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம்
——————————————————
பரம பவித்ரமான காலம்; ஆவணி மாசம்; ஆகாயம் நிர்மலமாக இருந்தது;
தடாகங்களில் தாமரைப் புஷ்பங்கள் நிறைந்து இருந்தன; காடுகளில் மரங்கள் புஷ்பங்களை வர்ஷித்தன;
பக்ஷிகள் குதூகலம் அடைந்தன; எங்கும் சாந்தம்; சாதுக்களின் ஹ்ருதயம் குளிர்ந்து இருந்தது;
வாயு சுத்தமான காற்றை வீசிற்று. ஆகாயத்தில் , துந்துபி, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கின;
வித்யாதரர், அப்சரஸ்கள் , கின்னரர், கந்தர்வர், சித்தர், சாரணர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்;
தேவர்கள், ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர்;
த்வாபர யுகம்; ஸ்ரீ முக வருஷம்; தக்ஷிணாயனம்; ஆவணி மாசம்;
கிருஷ்ண பக்ஷம்; அஷ்டமி திதியும் ரோஹிணி நக்ஷத்ரமும் கூடிய சுப வேளையில் ,
ப்ரஹ்மா அதி தேவதையாக உள்ள ரோஹிணி நக்ஷத்ரத்தில், சந்திரன் உச்சத்தில், சந்திரனுக்குப்
பிரியமானதும், பிரஜாபதியின் நக்ஷத்ரமுமான இந்த ரோஹிணி நக்ஷத்ரத்தில்,
நள்ளிரவு 11–30 முதல் 12-00 மணிக்குள்ளாக ,
நீ, தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதாரம் செய்தாய்.
தேவகியின் ரூபம் தேவ ரூபத்தை மிஞ்சியது.
ஹே, ப்ரபோ, உன் அவதார காலத்தில் , அடியேன் எந்தப் பிறவியில்
எங்கு இருந்தேனோ தெரியாது; ஆனால், இப்போது , உன், அவதார வேளையைச்சொல்லி,
நீ அவதரித்ததை, உடலெல்லாம் புல்லரிக்க, மனஸ் எல்லாம் மகிழ்ச்சி ததும்ப ,
தேவகி , வசுதேவர் உள்ள காராக்ருஹத்தில் , உன்னைப் பிரதக்ஷணம் வந்து, வந்து,
உன் மெல்லிய, மிக மெல்லிய , பிஞ்சுத் திருவடிகளைத் தொட்டுத் தொட்டு ,
அடியேனின் கண்களில் ஒற்றிக்கொண்டு , உன்னையே சரணம் என்று அடைகிறேன்.
நளினம் அழகு, இப்படி எல்லாம் திருமேனியில் கலந்து,
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகனே !
நீ, நீலரத்ன மணியைப் போல ஜொலிக்கிறாய்;
அலர்ந்த கேசபாசம்;
பவளத்தை மிஞ்சும் திரு உதடுகள்;
புண்டரீக நயனங்கள்; கள்ளச் சிரிப்பு ;
அதனால் கன்னத்தில் குழி;
சின்னஞ்சிறிய, மிகவும் சின்னஞ்சிறிய நான்கு திருக் கைகள்;
அவைகளில் திவ்ய ஆயுதங்கள் சக்ரம், சங்கு,
கதை, தாமரை; திருமார்பில் ஸ்ரீ வத்ஸ மரு;
திருக் கழுத்தையும் , திரு மார்பையும் அணைத்துச்
சேர்க்கும் முத்துச் சரங்கள்; கௌஸ்துபம்;
வனமாலை; இடையில் பீதாம்பரம்; வைடூர்யத்தால் இழைக்கப்பட்ட க்ரீடம்;
குண்டலங்கள்; தாமரை ஆயிரம் இதழ்களுடன் கொத்தாக இருப்பதைப் போல ,
இடையில் தங்க ஆபரணங்கள்; விரல்களில் மோதிரங்கள்;
தோள்பட்டையில் ஆபரணம்; இதுதான் சிவப்போ என்று ,
சிவந்து இருக்கும் திருவடிகள்,
சின்னஞ்சிறு, மிகச் சின்னஞ்சிறு திருவடிகள்;
அவைகளில் தண்டை, கொலுசு
ஹா, ஹா, அற்புதம் , மிக மிக அற்புதம்!
மறுபடியும் மறுபடியும் உன் பிஞ்சுத் திருவடிகளை ஸ்பர்சித்து,
உன்னையே சரணம் அடைகிறேன்.
ஹே, ப்ரபோ, நீதான் சாக்ஷாத் நாராயணன்;
நீயே விஷ்ணு; நீயே சர்வலோக சரண்யன்;
நீயே ப்ரகிருதி தத்வங்களுக்கு மேலான புருஷன்;
நீயே 26 வது தத்வம்;
நீயே , சர்வ புத்தியையும் தாங்கும் சமஷ்டி புத்தித்வம்;
முக்குணம் உள்ள ப்ரக்ருதியைப்படைத்து, செயல்படுத்தி,
ஆட்டுவிப்பது நீயே; இப்படியாக உன்னை ஸ்ரீ வசுதேவர் ,
உன் திரு அவதாரம் ஆனவுடன் , காரக்ருஹத்தில் ஸ்தோத்ரம் செய்ததைத்
திருப்பிச் சொல்லி ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு , அடியேனும் ஸ்தோத்தரிக்கிறேன்.
நீயே, ஒவ்வொரு தத்வத்திலும் அநுப்ரவேஸம் செய்து,
அவைகளை வஸ்துவாக ஆக்கினாய்; அவை யாவும் உனக்குச் சரீரமே;
ஆனால், அதன் குண தோஷங்கள் உன்னைப் பாதிக்காது;
இருபத்தைந்து தத்வங்களான, மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்,
ஐந்து தன் மாத்ரங்கள், ஐந்து கர்ம, க்ஜாநேந்த்ரியங்கள், , ப்ரகிருதி, ஜீவன், இவைகளைத்
தாமே செயல்படுவது போல,
நீ, தூர விலகி நிற்கிறாய்;
அதைப் போல, தேவகியின் வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்து,
பிறகு பிறந்து,
உனக்கும் ஒரு மாதா தேவை என்று, உலகத்துக்குக் காட்டினாயோ;
நீ. சிருஷ்டிக்கு முன்பு, மஹத், அஹங்கார தத்வங்கள் மாறுபாட்டை அடையாமல்,
பிறகு உன்னுடைய சங்கல்பத்தாலும், அநு ப்ரவேசத்தாலும், நியமனத்தாலும்,
பஞ்சீகரணம் செய்யப்பட்டு, பரிணமித்து, தாமே அவைகளை உண்டாக்குவது போல
ப்ரமை ஆயிற்று;
இந்த ஸ்ருஷ்டி என்பது, ஸத்கார்யவாதம்; உள்ளே இருக்கும் பொருள் ,
தானே உண்டாகும் —ஸ்ருஷ்டியாகும்;
நெல் விதைத்தால், நெல் தானே வளரும் உனக்கு எந்த மாறுதலும் இல்லை;
தேவகிக்குக் குழந்தையாக நீ பிறந்தது, ” அசந்தநீயம் ” !
( நீ, அதனுள் நுழைந்து பிறந்தாயா? அல்லது, உன் சங்கல்பத்தால் உள்நுழைந்து பிறந்தாயா ?
அவை தாமாகப் பிறந்தனவா ? எது சரி என்று தீர்மானிக்க முடியாதபடி ,
என் புத்தி கலங்குகிறது; உனக்கு, மனுஷ்யர்களைப் போல இந்த்ரியங்கள் இருந்தாலும்
அவை அப்ராக்ருதம்—–சுத்த ஸத்வத்தால் ஆனது ; சுபாஸ்ரயம்;
நீ, எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மா; அவை யாவும் உனக்குச் சரீரம்;
நீதான் அவைகளை உண்டாக்குகிறாய்;
இது, வித்வான்கள் அல்லாத அறிவிலிகளுக்குப் புரியாது;
உனது சக்தி , சங்கல்பம், வீர்யம், அளவிட இயலாதது;
இந்தப் பொருட்கள் உண்மையாகவே உள்ளனவா ?
பொய்த் தோற்றமா ? ஒன்றா, பலவா ? யாரால் எப்படிச் சொல்ல முடியும் ?
இவை உன்னிடமே லயித்து, உனது சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கப்படுகிறது;
இது உனக்கு ஒரு லீலை ! இதனால் உனக்கு ஒரு தோஷமும் இல்லை;
நீதான் ஸத்யம்;
நீதான் ஈஸ்வரன், சர்வேஸ்வரன்;
நீதான் ப்ரஹ்மம்;
…