இனி ஒவ்வொரு உபநிஷத்தாக மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்–
—————————————————————————————————————
இதற்கு முன்பு எழுதிய 3 வது பாகத்தில் ,கீழ்க்கண்டவாறு திருத்தம்
செய்து கொள்க
3. மீமாம்ஸம் (பூர்வ மீமாம்ஸம்) – ஜைமினி முனிவர் அருளியது.
12 காண்டங்கள் 60 அத்யாயங்கள் வேதத்தில் உள்ள தத்வ
விசாரணைகள் இதில் உள்ளன.
4. மீமாம்ஸம் (உத்தர மீமாம்ஸம்) – இது வேதாந்தம் எனப்படும்.
ஸ்ரீ வியாஸ முனிவர் அருளியது. இது வேதங்களின் ஸாரம்.
இது ”ப்ருஹ்ம ஸுத்ரம் ” என்றும் சொல்லப்படும். 4
அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்யாயத்துக்கும் 4
பாதங்கள். 545 ஸுத்ரங்கள். ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள்
இதற்கு பாஷ்யம் (உரை) எழுதியுள்ளார். இது ”சாரீரக
மீமாம்ஸை” எனப்படுகிறது. பகவத்ஸ்ரீ ராமனுஜரின் உரை
”ஸ்ரீ பாஷ்யம்” எனப்படுகிறது. ஸ்ரீ மத்வாச்சாரியாரும் உரை
எழுதியிருக்கிறார்.
4
1 – ஈசாவாஸ்ய உபநிஷத்
இது குரு, சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதைப் போல
அமைந்துள்ளது. 18 மந்த்ரங்கள் இந்த உபநிஷத்தில்
இருக்கின்றன. இதன் சுருக்கம் –
குரு, சிஷ்யனுக்கு உபதேசம்
பகவான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். வெளிப்புறக்
காட்சிகளைக் கண்டு மயங்காமல், உள்ளே இருக்கும் பகவானை
த்யானம் செய்வதில் வைராக்யம் இருக்க வேண்டும். அதே சமயம்,
கர்மாக்களையும் செய்தல் வேண்டும். எல்லாவற்றிலும்
வ்யாபித்து, எல்லாவற்றையும் நியமித்து, எல்லாவற்றிற்கும்
ஆத்மாவாக பகவான் இருக்கிறான். ஆதலால் எல்லாமே
பகவானுக்குச் சரீரம். எல்லாக் கல்யாண குணங்களும்
நிறைந்தவன் பகவான். பகவானை அடைய தனியான கர்மமோ,
தனியான ஞானமோ போதாது. ஸத்கர்மாக்களைச் செய்து
கொண்டே இருந்து, வினைகளைப் போக்கிக் கொண்டு, நல்ல
ஞானம் வரப்பெற்று மோக்ஷம் அடைய வேண்டும்.
இதற்கு பக்திஅல்லது ப்ரபத்தி வழி.
இதில் 18 மந்த்ரங்கள் உள்ளன. இந்த 18மந்த்ரங்களின்
விசேஷத்தை விவரிப்பதுதான் ஸ்ரீமத் பகவத்கீதையின்
18 அத்யாயங்கள். ஈசன் வாஸம் பண்ணுகிற
விஷயத்தைச் சொல்வதால் ”ஈசாவாஸ்யம்” எனப்பட்டது.
2 – கேநோபநிஷத்து
இது சிஷ்யன் கேள்வி கேட்கும் ரூபமாய் அமைந்துள்ளது.
சிஷ்யன் – மனது தன் இஷ்டப்படி சஞ்ரிக்கிறது. இப்படியே கண்,
காது, வாக்கு தம்தம் கார்யங்களைச் செய்கிறது. இது யாருடைய
கட்டளையால்?
ஆசார்யன் – ப்ராணனுக்கும் ப்ராணனாய், நீ சொன்ன
எல்லாவற்றிற்கும் சக்தியை அளித்து, பகவான் இயக்குகிறான்.
அவன் அனுக்ரஹத்தாலே ஒவ்வொரு அவயவமும், வேலை
செய்கிறது. எவ்வளவு தெளிவாக பகவானின் செயலை நீ அறிய
முயன்றாலும், ஒரு ”திவலை” அளவுதான் தெரிந்து கொண்டவன்
ஆவாய். பகவானை நான் நன்கு அறியேன் என்று
வணக்கத்துடன் சொல்பவனே, பகவானை அறிந்தவன் ஆவான்.
தேவர்களேகூட பகவானை முழுமையாக அறிந்தவரில்லை.
இதற்கு ஒரு உபாக்யானம் (கதை) உள்ளது.
பகவான் தன்னுடைய பக்தர்களான தேவர்கள் மீதுள்ள
அன்பினால் அஸுராதிகளை ஜெயிக்கிறான். ஆனால் தேவர்கள்,
தாங்களே அஸுராதிகளை ஜெயிப்பதாக கர்வம் கொண்டனர்.
இந்தக் கர்வத்தை அழிக்க, பகவான் திருவுள்ளம் கொண்டான்.
உடனே பரப்ரம்மம் (பகவான்) யக்ஷரூபமெடுத்து அவர்கள் எதிhpல்
நின்றது. அவர்களுக்கு இது யாரென்று தெரியவில்லை.
தேவர்கள், அக்னி தேவனைப் பார்த்து இந்த ”யக்ஷன்” யாரென்று
தெரிந்து கொண்டு வா என்றார்கள், அக்னி தேவன் யக்ஷனிடம்
வந்தான். யக்ஷன் நீர் யாரென்று கேட்க அக்னிதேவன் தன்
பெருமை எல்லாவற்றையும் சொன்னான். உன்னுடைய வீர்யம்
எப்படிப்பட்டது என்று யக்ஷன் கேட்க எல்லாவற்றையும் ஒரு
நொடியில் எரித்து விடுவேன் என்று அக்னி தேவன் சொன்னான்.
பரப்ரம்மம் ஒரு புல்லை எடுத்து எதிரில் வைத்து அக்னியைப்
பார்த்து இதை எரித்து விடு என்றது. அக்னி, வெகு துரிதமாகவும்,
முழு ஆற்றலோடும் முயன்றும் அந்தப் புல்லை எரிக்க
முடியவில்லை. இவன் யாரென்று தெரியவில்லை என்று
அக்னிதேவன் திரும்பி விட்டான்.
தேவர்கள் வாயு தேவனையக்ஷனிடம் அனுப்பினார்கள்.
யக்ஷன், உன் பலம் எப்படிப்பட்டதுஎன்று கேட்க, வாயுதேவன்,
நான் எல்லாவற்றையும் என்ஆற்றலால் தூக்கி எறிந்து விடுவேன் என்றான்.
பரப்ரம்மம்இந்தப் புல்லை எடுத்துச் செல் என்றது. வாயுதேவன் தன்னுடைய
சக்தியை எல்லாம் ப்ரயோகித்தும் புல்லை அசைக்க
முடியவில்லை. வாயுதேவனும் திரும்பி விட்டான்.
இவர்கள்இருவரும் பூமி, அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் என்ற மூன்று
உலகங்களுக்கும் ப்ரதான தேவதைகள் இவர்களால்
முடியவில்லை.
மூன்றாவது ப்ரதான தேவதையான இந்த்ரனை
தேவர்கள் அனுப்பினார்கள். இப்போது பரப்ரம்மம் மறைந்து
விட்டது. இந்திரன் திகைத்து நின்றான். அச்சமயம் ஆகாயத்தில்
ஸர்வாபரண பூஷிதையாய் ஒரு ஸ்த்ரி தோன்றினாள். அவள்
பார்வதி தேவி.
இந்த்ரன் அவளிடம் , ”யார் அந்த யக்ஷன்” என்றுகேட்டான்.
”இந்திரனே, அது யக்ஷனல்ல! பரப்ரம்மம்.
பரப்ரம்மத்தின் அனுக்ரஹம் இல்லாவிடில் உங்களால் ஒரு
அணுவைக் கூட அகற்ற முடியாது. உங்கள் கர்வத்தை விட்டு
பரப்ரம்மத்தின் பெருமையை உணருங்கள்! என்று பார்வதி
சொன்னாள்.
இந்திரன், இந்த உண்மையை எல்லாத்தேவர்களுக்கும்
எடுத்துச்சொல்லி கர்வத்தை ஒழித்தான்.
பரப்ரம்மம் அனந்த கல்யாண குணங்களை உடையது. வேத,
வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ஸத்யஸந்தர்களாக
இருப்பவர்களுக்கு ப்ரஹ்மஜ்ஞானம் கூடி வரும். நல்ல ஒழுக்கம்,
இந்த்ரியநிக்ரஹம், தபஸ் உள்ளவர்களுக்கு, ப்ரம்மவித்யை
நிலையாக நி;ற்கும். இந்த வித்யையைப் பெற்றவர்கள், பகவான்
வீற்றிருக்கும் உலகிற்குச்சென்று உயர்ந்த புருஷார்த்தத்தை
அடைவர் என்று சொன்னார். இதில் நான்கு காண்டம். ”கேந”
என்கிற சொல்லைக்கொண்டு தொடங்குவதால் இது
”கேநோபநிஷத்து” எனப்பட்டது.
3 – கடோபநிஷத்து
இது க்ருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ளது.
”கடசாகை”யைச் சேர்ந்த உபநிஷத். ”கடா” என்பவரைச் சார்ந்த
சாகை கடசாகை. இதில் நசிகேதஸ் உபாக்யானம் உள்ளது. இது
தைத்திரீய ப்ராம்மணத்திலும் (3-11-8) உள்ளது. மஹா பாரதத்தில்
உள்ளது சிறிது வேறுபடும். இந்த உபநிஷத்தில் ”வல்லி” என்கிற
பிரிவுகள் ஆறு உள்ளன. மும்மூன்றாக இரண்டுஅத்யாயங்கள்
உள்ளன.
வாஜச்ரவஸர் (கௌதமர் என்றும் சொல்வர்) என்கிற
மஹரிஷி தன் சொத்துக்களை எல்லாம் தக்ஷிணையாக கொடுத்து
ஒரு யாகம் செய்தார்.
மிகவும் வயது முதிர்ந்த பசுக்களைத் தானம்
செய்ய முற்பட்டபோது இவர் குமாரரான நசி கேதஸ், தந்தை
இப்படித் தானம் செய்வதால் (ஒன்றும் உபயோகப்படாத
பசுக்களை) இருள் சூழ்ந்த உலகில் அல்லவோ வசிக்க நேரிடும்
என்கிற தர்ம சாஸ்த்ரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி
தந்தையிடம் தன்னையே தானம் செய்யும்படி ஒரு தரத்துக்கு
மூன்று தரம் வேண்டினான்.
தந்தைக்குக் கோபம் வந்து ”உன்னையமனுக்குத் தானம் பண்ணுகிறேன்”
என்று சொன்னார். நசிகேதஸ்,தந்தையின் வாக்கைச் சத்யமாக்க
யமலோகம் செல்லப்புறப்பட்டான்.
வாஜச்ரவஸர் வருத்தம் மேலிட்டு, யமன் தன்னுடைய க்ருஹத்தில்
இல்லாத சமயமாக பார்த்து நசிகேதஸ்என்கிற குமாரனை
யமலோகத்துக்குச் செல்ல அனுமதித்தார்.
அப்படியே யமனுடைய உலகத்தில் அவனுடைய க்ருஹத்துக்குச்
சென்ற நசிகேதஸ், யமன் க்ருஹத்தில் இல்லாததால், அவன்
வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டு வாசலிலேயே காத்திருந்தான்.
மூன்று நாட்கள் அன்ன, ஆகாரமின்றி பட்டினியுடன்
காத்திருந்தான்
யமன் வந்ததும் அதிதியான ப்ராம்மணச் சிறுவன்
பட்டினியுடன் இருப்பதை அறிந்து அதற்கு பிராயச்சித்தமாக
மூன்று வரங்களை கொடுப்பதாகவும், வரங்களை கேட்க
வேண்டும் என்றும், நசிகேதஸைக் கேட்டுக் கொண்டான்.
நசி கேதஸ் கேட்ட முதல் வரம் – தன்னுடைய தந்தை துயரம்
நீங்கி தன்னை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும், 2வது வரமாக
வயோதிகம், மரணம் இவை இல்லாத ஸ்வர்க்கமான மோக்ஷத்தை
அடைய, அக்னி விஷயமாக ஹோமத்தைச் செய்யும் விதத்தைச்
சொல்ல வேண்டும் என்று கேட்டான்.
இந்த இரண்டு வரங்களும் யமனால் அருளப்பட்டன.
மூன்றாவது வரமாக இறந்தவனுடைய உண்மை நிலையை,
ஆத்ம தத்துவத்தைச் சொல்லுமாறு கேட்டான். யமன் இந்த
விவரத்தை உடனே சொல்லாமல் பலவிதங்களில் நசிகேதஸ்ஸை,
பரீக்ஷை செய்துவிட்டு பிறகு சொன்னான்.
”ஜீவாத்மா” பிறப்பு, இறப்பு அற்றவன். உடல் அழியுமே தவிர
ஜீவாத்மா அழியாது. ஜீவாத்மா, பரமாத்மா இருவரும்
ஹ்ருதயத்தில் இருக்கின்றனர். ஜீவாத்மாவுக்கு உடம்பு-ஒரு ரதம்.
புத்தி – ஸாரதி. மனது – கடிவாளம். புலன்கள் – குதிரைகள்.
விஷயங்கள் – அவற்றின் புலங்கள். இவற்றைக் கொண்டு ஜீவன்,
சுகதுக்கங்களை அனுபவிக்கிறான். அறிவுள்ளவன் இவற்றை
தக்கவாறு பயன்படுத்தி பகவானை அடைகிறான். பரமாத்மாவை
அடைவதே ”ச்ரேயஸ்”.
ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும்.
ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும். வேர்
மேலாகவும், கிளைகள் கீழாகவும், உள்ள இந்த ஸம்சாரம்
என்கிற மரத்தில், எல்லாம் பகவானின் இஷ்டப்படி நடக்கிறது.
கண்ணால் காணமுடியாத பகவானை மனத்தினால் காண,
யோகத்தில் நிலை பெற வேண்டும். பலவகை நாடிகளும்
தலையில் உள்ள ”ஸுஷும்நா ” நாடி வழியாகச்செல்ல அப்போது
ஜீவனும் சென்று பகவானின் இருப்பிடம் சென்று விளங்குவான்.
பகவானை உபாஸித்து அவனுக்கு அடிமையாக பரமபதத்தில்
ஸுகானுபவம் பெற்று வாழ்வான் என்று யமன் சொல்லி
முடித்தான். கடோபநிமூத்தில் மிக விவரமாக இது
சொல்லப்படுகிறது.
—அடுத்தது-பிரச்னோபநிஷத்து
———————————————————————————–