Vedobasana–6

Posted on Nov 7 2016 - 11:16am by srikainkaryasriadmin

6 வது பாகம்

7. தைத்திரீயோபநிஷத்து

கிருஷ்ண யஜூர்வேதம் – தைத்திரீய சாகை –
ஆரண்யகத்தில் ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னம் என்பதாக
தைத்திரீயோபநிஷத்து உள்ளது.

ஐந்தாவது (முதல் ப்ரச்னம்) – சீக்ஷா வல்லி,
ஆனந்த வல்லி என்கிற ப்ரஹ்ம வல்லி,
ப்ருகு வல்லி என்றுமூன்று பிhpவுகள்.

ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னங்கள், ஸாம்ஹிதி உபநிஷத்,
வாருணீ உபநிஷத் , யாஜ்ஞிகீ உபநிஷத் என்றும் மூன்றாகப் பிரிப்பர்.

சீக்ஷாவல்லிக்கு ஸாம்ஹிதீ உபநிஷத் என்றும், ஆனந்த வல்லியும்,
ப்ருகுவல்லியும் – ஆனந்தமயமான ப்ரஹ்ம வித்தையைச்
சொல்வதால் ஸைஷா , பார்கவீ, வாருணீ வித்யா என்று
சொல்லப்பட்டதற்கு இணங்க வாருணீ உபநிஷத் என்றும்
நாராயண உபநிஷத் – யாஜ்ஞகீ உபநிஷத் என்றும்
சொல்லப்படுகிறது .

வேதாங்கங்களில் கூறப்படும் சிக்ஷையைச் சொல்வதால்,
சீக்ஷாவல்லி என்றும், ஆநந்தமய வித்யையைச் சொல்வதால்
ஆனந்த வல்லி என்றும், ”ப்ரஹ்மவித் ஆப்நோதிபரம்…..” என்ற
ப்ரஹ்மசப்தத் தொடக்கத்தாலே ”ப்ரஹ்மவல்லி” என்றும்
சொல்வர். இது வாருணீ உபநிஷத்தின் முன் பகுதி. பின்
பகுதியானது ப்ருகுவுக்கு அவர் பிதாவான வருணன்
உபதேசித்தது”ப்ருகுவல்லி.”

யக்ஞன் என்கிற நாராயணன் என்கிற மஹரிஷியால்
ஸக்ஷாத்கரிக்கப்பட்டிருப்பதால், ”யாஜ்ஞகீ” என்றும், நாராயண
உபநிஷத் என்றும் சொல்வர்.
நாராயணாநுவாகம் நடுநாயகமாக இதில் உள்ளது.
பகவான் நாராயணனையும், அவனை
ஆராதிக்கும் முறையையும் சொல்கிறது. இது முக்யமானது.

சீக்ஷாவல்லி

வேதத்திற்கு அங்கமானவை ஆறு. அவற்றில் ஒன்று சிக்ஷை.
இதில் வர்ணம், ஸ்வரம், ஹ்ரஸ்வதீர்க்காதி மாத்ரை. உச்சரிப்புக்கு
வேண்டிய ப்ரயத்ன பலம் (வலிமை) ஸாமஸம்ஹி தை எனப்படும்
ஸந்தானம் – இவைகள் இதில் உள்ளன.
ஸம்ஹிதை என்பதுஇணைப்பு,
இணைப்பதற்கு இரண்டு வேண்டும்.
பூர்வ ரூபம்,உத்தரரூபம், ஸந்தி, ஸந்தானம் என்ற நான்கு வஸ்துக்களில்
லோகம், ஜோதி, வித்யா, ப்ரஜை , சாரீரம் இவை ஸம்பந்தமாகச்
சொல்லி இவற்றைச் சொல்பவருக்கு மக்கள், பசுக்கள்,
வேதார்த்தஜ்ஞானம், அன்னம், ஸ்வர்க்கம் போன்ற பலன்கள்
சொல்லப்பட்டது. ப்ரணவத்தைச் சொல்லி, அதனால் அறிவு,
ஆரோக்யம், பேசும் ஆற்றல், காதுக்கு வன்மை
வேண்டப்பட்டது.
பூ:, புவ:, ஸுவ: என்றமூ_ன்று வ்யாஹ்ருதிகள்.
அத்துடன் ”மஹ ” சேர்த்து நான்கு உபாஸனங்கள்
சொல்லப்பட்டது.
உபாஸன பலனாக, பகவானைத் தியானித்து
ஹ்ருதய நாடி மூலம் சிரசில் கபாலத்தை பிளந்து அக்னிலோகம்,
வாயுலோகம், ஸுர்ய லோகம் இவற்றில் தங்கி ப்ரஹ்மத்திடம்
சேர்ந்து பேரானந்தத்தை அனுபவிப்பது சொல்லப்பட்டது.
பிறகு பங்க்தி, ஐந்து ஐந்தாக சொல்லப்பட்டது. துர்க்குணங்களை
ஒழித்து ஸத்வ குணத்தை வளர்த்து தபஸ் செய்தல் – ”ந்யாஸம்”
என்கிற தபஸ் சொல்லப்பட்டது. முக்யமாக வேதரஹஸ்யம்
சொல்லப்பட்டது.

ஆநந்தவல்லி

பகவானிடமிருந்து பஞ்சபூதங்களும் ஓஷதிகளும்,
அன்னமும், அன்னத்தின் மூலம் உடலும் பிறக்கின்றன.
எல்லாரும் அன்னத்தால் போஷிக்கப்படுகிறார்கள். அன்னம்
உயர்ந்தது.
அன்னமய உடலில், ப்ராணமய ஆத்மா.
இதற்கு ப்ராணன் தலை; வ்யானன் வலப்பக்கம்; அபானன் இடப்பக்கம்;
வாயு நடுவுடல்; பூமி ஆதாரம்; ப்ராணனே ப்ரஹ்மம்.

இதற்கு மேல் மனோமயம். யஜூர்வேத சிந்தனம் தலை;
ருக்வேத சிந்தனம் வலப்பக்கம்; ஸாமவேத சிந்தனம் இடப்பக்கம்;
ஆசார்யர்களின் ஆக்ஞை நடுவுடல்; அதர்வ வேத சிந்தனம்
ஆதாரம்.
இப்படி உபாஸிப்பதால் மனதிற்கு எட்டாத பேரானந்தம்
கிடைக்கும். இதற்கு மேல் விஞ்ஞானமயம். ஜீவன் இதற்கு
(அறிவுகள் சக்தி – அவயவங்கள். ச்ரத்தை. அநித்ய வஸ்துவின்
அநுபவம், நித்ய வஸ்துவின் அநுபவம். யோகம், சக்தி –
அவயவங்கள்) இப்படி உபாஸித்தால் உடலிலிருந்து வெளியே
வரும்போது எல்லா பாபங்களையும் போக்கி எல்லாவற்றையும்
அடையலாம்.

இதற்கு மேல் ஆனந்தமயம்.
ப்ரியம் – தலை; மோதம் -வலப்பக்கம்; ப்ரமோதம் – இடப்பக்கம் ;
ஆனந்தம் – நடுவுடல் ;ப்ரஹ்மம் – ஆதாரம்.
சிறந்த ஸுகஅனுபவம்.
இதை இப்படி உபாஸிப்பவன் பெறும் ஆனந்தம் அளவிட இயலாதது .

மானுஷ ஆனந்தம் – நல்ல ஆரோக்யத்துடன், யுவாவாய்
இருக்கும்போது சிஷ்யர்களுக்கு நன்கு உபதேசித்துச்
செல்வத்துடன் இருக்கும்போது பெறும் ஆனந்தம்.

இதைப் போல் நூறு மடங்கு – மனுஷ்ய கந்தர்வர்களின்
ஆனந்தம். தேவகந்தர்வர்கள், பித்ருக்கள், தேவலோக வாசிகள்,
இந்த்ரன், ப்ருஹஸ்பதி, ப்ரஹ்மா வரை ஆனந்தத்தை நூறு
நூறாகப் பெருக்கி சதுர்முகாநந்தம் நூறு கொண்டது,
பரப்ரஹ்மத்தின் ஆனந்தம் என்று சொல்கிறது.
இவ்வளவாகமோக்ஷம் அடைந்து, பரப்ரஹ்மத்தை அடைவது
சொல்லப்படுகிறது.

ப்ருகுவல்லீ

வருணர் – தன் குமாரனான ப்ருகுவுக்கு சொன்னது.

ப்ரஹ்மம் என்பது அன்னம், ப்ராணன், கண், மூக்கு, மனஸ்,
வாக்கு, பிறகு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இப்படி உபாஸிப்பது –
இதுதான் ப்ரஹ்மம் என்றார்.
கடைசியில் பிதாவின் உபதேசப்படி தபஸ் செய்து ஆனந்தமயமே
ப்ரஹ்மம் என்று ப்ருகு தெளிந்தான்.
இதில் ”விசிஷ்டாத்வைத”ப்படி மோக்ஷம் விளக்கப்படுகிறது (இது
இங்கு விரிக்கின் பெருகும்).

இரண்டாம் ப்ரச்னம் – நாராயணோபநிஷத்

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும்
உள்ளவன்.
ஸர்வந்தர்யாமி.
எல்லாவற்றையும் படைத்து, காத்து,அழிப்பவன்.
எல்லாவற்றிலும் ஆராதிக்கப்படுபவன் என்று
பலவாறாக துதிக்கிறது நாராயணோபநிஷத்து.

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும்
உள்ள ஸர்வந்தர்யாமி
இதில் அக்னி, ருத்ரன், விநாயகர், கருடன், துர்க்கை,
நாராயணன் இவர்களைப் பற்றிய மந்த்ரங்கள் உள்ளன.
அகமர்ஷ ண ஸுக்தம் – ஸ்நானம் செய்யும் முறை,
அபிகமன காலம் வரை செய்பவை சொல்லப்படுகின்றன.
ப்ரம்மோபாஸனம் சொல்லப்படுகிறது.

மதுஸுக்தம், க்ருதஸுக்தம் உள்ளது.
ஸாத்விக த்யாகம் சொல்லப்படுகிறது.
தஹர வித்யை, மோக்ஷ வித்யை, பர வித்யைகளாலே
உபாசிக்கப்படுபவன் என்கிறது.
ஸுர்ய மண்டலத்திலே பகவானை உபாசிக்கும் விதம்
சொல்லப்படுகிறது.

உபாதான கால விவரம், ஆராதனம் இவைகள்
கோடி காட்டுகிறது.
ஹிரண்ய கர்ப்ப ஸுக்தம், மேதா ஸுக்தம்,
த்ரி ஸுபர்ண ப்ரஹ்ம ஸுக்தம் இதில் உள்ளன.

ஸன்யாஸ,ஹோம மந்த்ரங்கள் சொல்லப்படுகின்றன
. ஸத்யம், தபஸ், தமம்,சமம், தானம், தர்மம், பிரஜநனம், அக்னி,
அக்னிஹோத்ரம்,யஜ்ஞம், மாநஸம் இவைகளைச் சொல்லிக்
கடைசியாக ”ந்யாஸத்தை”ச் சொல்கிறது.
இதுவே ப்ரபத்தி.

ப்ரபத்தி செய்து கொள்பவன் மீண்டும் பிறப்பதில்லை.
ப்ரணவத்தைக் கொண்டு ஜீவனை , பகவானிடம் சமர்ப்பிக்கும்
தேவ ரஹஸ்யம் என்பது சொல்லப்படுகிறது.

தைத்திரியோபநிஷத்தில் உள்ள மஹா நாராயணோபநிஷத்”
பர தத்துவத்தைச் சொல்கிறது.

பொது –
இதற்கு இரண்டு ப்ரச்னங்கள்.
முதல் ப்ரச்னத்தில் சீக்ஷாவல்லி, ப்ருகுவல்லி, ஆனந்தவல்லி.
இரண்டாவது ப்ரச்னத்தில் ”யாஜ்ஞிகி உபநிஷத்”.

தைத்திரியோபநிஷத்

இது மூன்றாக உள்ளது.
(1) ஸாம்ஹிதி உபநிஷத் (சீக்ஷாவல்லி),
(2) வாருணி உபநிஷத் (ப்ருஹ்ம வல்லி, ஆனந்த வல்லி)
(3) யாஜ்ஞிகி உபநிஷத் (ப்ருகுவல்லி)

பரவித்யாவின் அங்கம் – பூர், புவஸ், ஸுவ: என்கிற
வ்யாஹ்ருதி த்ரயம் (பூர், புவ:, ஸுவ:மூன்று)
நாலாவது வ்யாஹ்ருதி – மஹ

இந்த நாலாவது வ்யாஹ்ருதி – முதல் மூன்று வ்யாஹ்ருதிக்கு சரீரம்.
இந்த சரீரத்திற்கு ஆத்மா பரப்ருஹ்மம்.
இதற்கு ”வ்யாஹ்ருத் உபாசனை” என்று பெயர்.
இதைச் செய்பவனுக்கு ”ப்ரஹ்ம வித்யை” ஸித்திக்கிறது.

உபாஸனா | பூ | புவ: | ஸுவ: | மஹ :

1. லோகோபாஸனா | உலகம் | அந்தரிக்ஷம் | ஸ்வர்க்கம் | ஆதித்யன்
2. தேவதோபாஸனா | அக்னி | வாயு | ஆதித்யன் | சந்த்ரன்
3. வேதோபாஸனா | ருக் | ஸாமம் | யஜூர் | ப்ரஹ்ம
| (ப்ரணவம்)
4. ப்ராணோபஸனா | ப்ராணன் |அபானன் |வ்யானன் | அன்னம்

இப்படி ப்ரஹ்ம வித்யை ஸித்திக்கும் உபாஸகன் தனது
ஹ்ருதயாகாசத்தில் உள்ள அழகிய, அழிவற்ற ஒரு புருஷனை
உபாசித்து வாயினுள், அடி நாக்கின் மேலே” தாலுகை” எனப்படும்.
நடுவில், பசுவின் காம்பு போல் தொங்கும் ஒருவகை மாமிச
பிண்டத்தின் உள் வழியாகச் சென்று, தலையின் ரோம வேர்களை
அடைந்து, பின் மண்டையோட்டை விலக்கிக் கொண்டுச்
செல்லும்” ஸுஷும்னா” என்கிற நாடியின் வழியாக
அக்னி, வாயு,மற்றும் ஆதித்ய லோகங்களை அடைந்து,
ப்ரஹ்மத்தை அடைந்து, கர்ம பந்தஹீனன் ஆகையாலே
அப்ராக்ருத சரீர இந்த்ரியங்களை தன் விருப்பப்படி பெற்று,
நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் எல்லையில்லாப்
பேரானந்தத்தை அனுபவிக்கிறான்.

தைத்திரிய நாராயண உபநிஷத்

இப்போது நடப்பது, ஸ்வேதவராஹ கல்பம்.
இது முடிந்ததும் நைமித்திக ப்ரளயம்.
அப்போது ஸுர்ய மண்டலம் நாசம்.
ஒரு வஸ்துவை அறிய வேண்டிய ஜ்ஞானம் – தர்ம பூத
ஜ்ஞானம் எனப்படும். நித்ய முக்தர்களுக்கு இது அளவில்லாதது.
பாபத்தை போக்கக்கூடிய வருணனுக்கு ”அகமர்ஷணன்” என்று
பெயர். அகமர்ஷண ஸுக்தம் என்றால் எல்லா பாபங்களையும்
போக்குவதற்காக ஜபிக்கப்படும் மந்த்ரம் என்று அர்த்தம்.

பரமாத்மாவிடமிருந்து உண்டான வஸ்துக்கள்.

(1) ஏழு இந்த்ரியங்கள் (மனஸ், புத்தி, ஐந்து
ஜ்ஞானேந்த்ரியங்களான கண், காது, மூக்கு, தோல்,
நாக்கு)
(2) ஏழு அக்னிகள் – ஆவஹனீயம், கார்ஹ பத்யம்,
தக்ஷிணாக்னி, ஸப்ய, ஆவஸத்ய, ப்ராஜஹித,அக்னிர்த்ராஹா ::

(3) ஏழு ஸமித்துக்கள் (மரங்கள் – அச்வத்த, உதும்பல, பலாச,
ஸமீ, விகங்கத, அசனீ, புஷ்கரபர்ன)

(4) அக்னிக்கு ஏழு நாக்குகள் (காயீ, கராலீ, மனோஜவ,
சுநீசுதா, சுதாம்பரவர்ணா, ஸ்ப்ரிலிங்கிணீ, விஸ்வரூபி)

(5) ஏழு லோகங்கள் – பூலோக, புவர், ஸுவர், மஹர், ஜனோ,
தபோ, ஸத்ய லோகம்

நாராயண உபநிஷத்தில்
64வது மந்த்ரம் – ஜ்ஞானத்தைப் பெற, ஜபிக்கப்பட வேண்டும்.
65வது மந்த்ரம் – கெட்ட கனவுகள், பயத்தைப் போக்க
ஜபிக்கப்படவேண்டும்.
66வது மந்த்ரம் – மதுஸுக்தம் (அமாவாஸ்யை, ச்ராத்த
காலங்களில் சொல்லப்படுகிறது)

8. ஐதரேயோபநிஷத்து

இது ”ருக்” வேதத்தைச் சேர்ந்தது. ”ஐதரேயர்” என்கிற
மஹரிஷி தவம் புரிந்து கண்ட ப்ராஹ்மணம். ஐதரேய
ஆரண்யகமும் உள்ளது.
(ஐந்து ஆரண்யகங்கள் – இரண்டாவதுமற்றும் மூன்றாவது
ஆரண்யகத்திற்கு ஐதரேயோபநிஷத்து என்றுபெயர்).

ப்ராணன் சிறந்தது. இது உடலை விட்டு கிளம்பினால்
எல்லா அவயவங்களும் செயல்படாது.
ஸத்யம் – இதை ”ஸத்” ,”தி”, ”யம்” என்று மூன்றாகப் பிரித்தால்
”ப்ராணன்”, ”அன்னம்”,”ஆதித்யன்” என்று பொருள்படும்
. வாக்கு – இதில் அடங்கிய சந்தஸ்களுக்கு,
ப்ருஹதி சந்தஸ் என்பது ப்ராணன்.

தண்ணீரால் ப்ராணனுக்கு புஷ்டி ஏற்படுகிறது.
விஸ்வாமித்ரர், இந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
இந்த்ரன் சொன்னதாவது:-
நான் ப்ராணன், எல்லா பூதங்களும்
ப்ராணனே, ஆதித்யன் ப்ராணனே.
எனக்கு அன்னம் இதுவே.
இது வைச்வாமித்ரம் ஆகும். (கௌஷீதகி உபநிஷத்தில்” ப்ரதர்தந
வித்யை” முதலியவற்றில் உள்ளது).

மரம், செடி இவற்றில் ஆத்மா சிறிது விரிந்திருக்கும்.
பிராணிகளிடத்தில் கொஞ்சம் அதிகம்.
மனித உடலில் இந்த விரிவு அதிகம். (ஜீவாத்மா)

மனித உடலில் வாயு ஐந்து விதமாக இருக்கிறது.
இவைகளுக்கு கட்டுப்பட்டது கண், காது,மூக்கு,மனம், சொல் (வாக்கு).
வாக்கினால் செய்யப்படும் யஜ்ஞம் ஐந்து விதம் (ஸோம யாகமும் சேர்த்து)

உக்தி (அல்லது) உக்த்தம் மிக முக்கியமானது.
நிஷ்கேவல்யம் என்பது உக்த்த சாஸ்த்ரம்.
இது ஒரு விதமான மந்த்ர பாடம்.
பல த்ருஷ்டி விதிகள் இதில் சொல்லப்படுகின்றன (த்ருஷ்டி என்பது,
ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது)
ப்ருஹதீயை (ஆயிரமாக) பாவித்து, இந்த்ரனாக பாவித்து,
அதனால் இந்த்ர லோகத்தை அடையலாம்.
ஆனால்,மீண்டும் பிறப்பு உண்டு.
ஆதித்ய, அக்னியின் (இரண்டின்) அம்சங்கள் சுக்ல சோணிதங்கள்.
இவை ஒன்று சேர்வதால் ஆத்மா இவ்வுலகை அடைகிறது.
ஆத்மாவுக்கு ஆண்,பெண் என்கிற வித்யாஸம் இல்லை.
மனுஷ்ய ஆயுள் நூறு வயது.
அதாவது முப்பதாயிரம் நாட்கள்தான். நூறு என்பதை 365ல்
பெருக்காதீர்கள். மொத்தத்தில் நூறு வயது;( நூறு வருஷம்
அல்ல)
ப்ருஹதிசந்தஸ் ஆயிரம் என்று சொன்னதைப் போல,
இந்த எண்ணிக்கையும் முடிவடையும் போது, தேவ ரதத்தில்
(ஐந்து உரு) சென்று பரமாத்மாவை அடையலாம்.
ஐந்து உரு என்பது – 1) வாக்கு – ரதத்தின் ஏர்க்கால்,
2) காதுகள் -சக்கரங்கள்,
3) கண்கள் – குதிரைகள்,
4) மனம் – தேர் பாகன் அல்லது கடிவாளம்,
5) ப்ராணன் – முதலாளி (ஆத்மா)

இதில் (ஐதரேயோபநிஷத்தில்) ஆத்ம ஷட்கம்

உலகெல்லாம் ச்ருஷ்டிப்பதற்கு முன்பு ஆத்மா ஒன்றே.
(அதாவது பரமாத்மா ; பரமபுருஷன்)
இது ஸங்கல்பித்துக் கொண்டு ச்ருஷ்டி செய்யத் தொடங்கியது.
அம்பஸ் (ஸ்வர்க்கம்)
,மரீசி (அந்தரிக்ஷ லோகம்),
மரம் (பூலோகம்),
அப்பு (பாதாளம்).
லோக பாலர்கள், இவைகளை முதலில் ச்ருஷ்டித்தது.
பிறகு,ஜலத்தினின்று ஒரு புருஷ வடிவத்தை உண்டாக்கியது.
இதற்கு, அண்டம் போல் வாய் இருந்தது. வாக்கு, மூக்கு, கண், காது
இந்த்ரியங்களையும் அவைகளுக்கான தேவதைகளையும்
பிறகு,
ஹ்ருதயம், ப்ராணன், மனஸ், சந்த்ரன், நாபி, அபானம், ம்ருத்யு
தேவதை, ஆண் குறி, வீர்யேந்த்ரியம், இப்படி
உண்டாக்கப்பட்டது.
இவைகளுக்கு பசி,தாகத்தை பரமாத்மா, உண்டாக்கியது.
அவைகள் ”நாங்கள் வசிப்பது எங்கே?” என்று கேட்க,
பரமாத்மா முதலில் பசுவைக் கொடுத்தது.
பிறகு குதிரையைக் கொடுத்தது.
மனித உடலை உண்டாக்கிக் கொடுத்தது.
பசி, தாகம் இரண்டும் எங்கள் இடம் எது என்று
மறுபடியும் கேட்க ”ஹவிஸின்” பாகம் என்று பரமாத்மா
சொல்லிற்று.

பிறகு ஜலத்திலிருந்து அன்னத்தை உண்டாக்கியது.
வாய்,அபானம் என்கிற வாயுவினாலே அன்னத்தை உண்ணத்
தெரிந்து கொண்டது. ப்ராணன் என்கிற ஜீவாத்மா’ ஸீமா” என்கிற
தலையின் உச்சியைப் பிளந்து கொண்டு உள்ளே புகுந்தது. இது
”வித்ருதி” எனப்படும்.
இந்த ஜீவாத்மாவுக்கு விழிப்பு (ஜாக்ரம்),சொப்பனம் (ஸ்வப்னம்)
ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற மூன்று நிலைகள் உண்டு.
இவை யாவும் அழியக் கூடியது.
எங்கும் ப்ரம்மம் (பரமாத்மா) வ்யாபித்துள்ளது.

ஜீவாத்மா, முதலில் புருஷனிடத்தில்” வீர்ய”மாக இருக்கிறது.
புருஷன் வீர்யத்தை ஒன்று சேர்த்து ஸ்திரீயிடத்தில் சேர்த்தவுடன்,
இது ஜீவாத்மாவிற்கு முதல் பிறப்பு.
பிறகு எப்போதும் போலப் பிறப்பது இரண்டாவது பிறப்பு.
ஆயுள் முடிந்து, மரித்து,மறுபடியும் பிறக்கிறான்.
இது மூன்றாவது பிறப்பு.
இப்படி எண்ண இயலாத பிறப்புகள், இறப்புகள், சங்கிலித் தொடர் போல
ஜீவாத்மாவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாமதேவர் என்கிற மஹரிஷி , கர்ப்பத்தில் இருக்கும்போதே
முன்ஜன்மங்களையெல்லாம் அறிந்து, பிறந்தவுடனேயே கர்ம
பந்தத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேர்ந்தார், என்று சொல்வர்.

இது எல்லோராலும், ரிஷிகளால் கூட இயலாத செயல்.

பரமாத்மா சர்வ சேஷி . ப்ரஹ்மா, இந்த்ரன், ப்ரஜாபதி எல்லா
தேவதைகள், பஞ்ச பூதங்கள், யோநிஜங்கள், அயோநிஜங்கள்,
முட்டையில் பிறப்பன, கர்ப்பத்தில் பிறப்பன, புழுக்கத்தில்
பிறப்பன, பூமியை பிளந்து பிறப்பன, பறக்கும் பிராணிகள், நீர்
வாழ்வன என்று இப்படி ஜீவராசிகள் எல்லாமும், பரமாத்மாவின்
ஆக்ஞைக்கு உட்பட்டு, அவனுக்கு சேஷனாக இருப்பவை.

மனித உடலில் எலும்புகள் 360. அவற்றில் கொழுப்பு 360
ஆக 720.
ஒரு வருடத்தில் பகல் 360 இரவு 360 ஆக 720.
உடல் என்கிற குடிசையி;ல் எல்லா மூங்கில்களுக்கும் ஆதாரமான
நடுமூங்கில் போல, கண், காது, மூக்கு இவற்றிற்கு ஆதாரமான
ப்ராணனை நாளுக்கு சமமாக பாவித்து பாவனை செய்தால்
ஆயுள் முதலிய பலன் கிடைக்கிறது.

அக்ஷரங்களை 360 , 360 என்று இரண்டு பாகமாக ஆக்கி,
அவற்றின் சேர்க்கையை 360ஆக ஆக்குங்கள் (எப்படி என்று
யோசியுங்கள்).
பகல், இரவு, சந்தி இவை முறையே 360 , 360 360,
ஆக மொத்தம் 1080 ஆகும்
. இப்படி ப்ருஹதி 1080 ஆகிறபடி,

இதை எலும்பு, கொழுப்பு 540, 540 ஆக பிரித்து மறுபடியும் கூட்டி
”1080” என்று சொல்லி, பாவனை செய்யும் விதமும் அதன் பலனும்
சொல்லப்படுகிறது.

சரீர புருஷனுக்கு, ரஸம், ப்ரஜ்ஞாத்மா. ஸந்தஸ்
புருஷனுக்கு,ரஸம், அகாரம். வேதங்கள் மூன்றுக்கு, ரஸம் பிரமன்.
மஹா புருஷன் என்பது ஸம்வத்ஸரம்(வருடம்).
இதன் ரஸம் ஆதித்யன்.
ஸரீர ரசமான ப்ரஜ்ஞாத்மாவையும் மஹா புருஷனான ஆதித்யனையும்
ஒன்றாக பாவனை செய்வது சொல்லப்படுகிறது.
பரமாத்மா, தன் ஆத்மாவின் அந்தராத்மா என்று தெளிய வேண்டும்
என்று ஒரு மந்த்ரம் சொல்கிறது. (அதாவது ஜீவாத்மாவுக்கும் ஆத்மா).
சரீரத்தை வீணைக்கு ஒப்பிட்டு இதை நன்கு தெளிந்தவன், பார்
புகழும் வண்ணம் இருப்பான் என்பது சொல்லப்படுகிறது.

ஸம்ஹிதையில் ”ண”காரம் பலம்.
”ஷ ”காரம் ப்ராணன்.
பரமாத்மாவே எல்லாமும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

9 – சாந்த்யோக்யோபநிஷத்

இது ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது ”தாண்டி”சாகையின்
கடைசி பாகம்.
வேதவ்யாஸர் ப்ரம்மஸுத்ரத்திற்குஎடுத்துக் கொண்ட
உபநிஷத்துக்களில் இதுவே அதிகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

ஸாம வேதத்தைச் சேர்ந்ததாகையால், உத்கீதத்தைப் பற்றி
இது (இந்த உபநிஷத்) சொல்கிறது.
ப்ரணவத்தை முதலில் சொல்லி, பலவாறு உபாஸனங்களைச் சொல்லி,
உத்கீத பதம்,ஸாம பதம், ஸாம பொது, அதன் அம்சங்கள், உட் பிரிவுகள்
இவைகளில் உபாஸனம் செய்வதைச் சொல்லி, ஐஷிகம்,
ஆமுஷ்மிகம் என்று பல பலன்களுக்கான உபாஸனங்களைச்சொல்லிப்
பிறகு மோக்ஷத்திற்கான பக்தியோகம் இவற்றைச் சொல்கிறது.

எட்டு பிரபாடகங்களாக உள்ளது. பிரபாடகம் என்பது
அத்யாயம். அத்யாயத்தில் அனேக காண்டங்கள் (பிரிவுகள்).
ஸாமம் – வேத கானம்.
”ருக்”குகளில் கானம் பண்ணப்படும்.
ஒவ்வொரு” ரிக்”கிலும் கானம் பண்ணும்போது அந்த கானத்தை
ஐந்து பாகமாக பிரிப்பார்கள். அவையாவன:-
1) ஹிங்காரம்,
2) ப்ரஸ்தாவம்,
3) உத்கீதம்,
4) ப்ரதிஹாரம்,
5) நிதனம்.
இதை ஏழாகவும் பிரித்துச் சொல்வார்கள்.
1) ஹிங்காரம், 2) ப்ரஸ்தாவம், 3) ஆதி, 4) உத்கீதம், 5)
ப்ரதிஹாரம், 6) உபத்ரவம், 7) நிதனம்.

ப்ரபாடகம் -1 –
ப்ரணவத்தை உத்கீதமாக உபாசிக்கச்சொல்கிறது.
உத்கீதம் உலகில் ஸாரமானது. பூமியின் ஸாரம்
எதுவென்றால் விளையும் பயிர்களுக்கு ஜலம் மூலமாக
இருப்பதால், ஜலம் – ஸாரம்.
அதில் உண்டான ஓஷதிகள் ஸாரம்.
இவற்றைச் சாப்பிட்ட மனித உடல் ஸாரம்.
இந்த உடலில் வாக்கு ஸாரம்.
வாக்குகளில் ”ருக்” ஸhரம்.
இதற்கு மேல் ஸாம கானம்.
இதில் சிறந்தது உத்கீதம்.

உபாஸனம் இல்லாமல் விதிக்கப்பட்டதைச் செய்தாலும்
பலன் உண்டு.
உபாஸனத்தோடு செய்தால், பலன் மிகவும் அதிகம்.
இந்த உத்கீதத்தை -ப்ராணவாயுவாக உபாஸிப்போருக்கு
விரோதிகள் அழிவர்.

கச்யப ப்ராஜபதிக்கு திதி, அதிதி என்று இரண்டு மனைவிகள்.
இவரின் புதல்வர்கள் தேவர்களும், அசுரர்களும் ஆவர்.

இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்களை ஜெயிக்க
தேவர்கள் முடிவெடுத்து தேவர்கள் மூக்கில் உள்ள இந்த்ரியமாக
உத்கீதத்தில் சொல்லப்பட்ட ”ப்ரணவத்தை” உபாஸித்தனர்.

அசுரர்கள் அதைக் கெடுத்தனர். இப்படி வாக்கு, கண், காது,
மனஸ் என்பதையெல்லாம் உபாஸித்தனர். அசுரர்கள்
எல்லாவற்றையும் கெடுத்தனர்.
கடைசியில் முகத்தில் உள்ள ப்ராணனான ப்ராணவாயுவை
உத்கீதமாக தேவர்கள் உபாஸித்ததும் அசுரர்கள் அதன் மீது
எறிந்த பாவங்கள் வெளியே சிதறி ஓடியது.
(ப்ராணன் பாதிக்கப்படவில்லை). இவ்வாறாக
ப்ராணனாக பாவிக்கப்பட்ட உத்கீதத்தின் பெருமை
சொல்லப்பட்டது.

உத்கீத ப்ரணவத்தை ”அமிர்தம்” எனப்படும் ப்ரம்மமாக
உபாஸிக்கச் சொல்கிறது. தேவதைகள், ம்ருத்யுவுக்குப் பயப்பட்டு
வேத வித்யைக்குள் புகுந்து வேத மந்த்ரங்களால் தங்களை
மறைத்துக் கொண்டனர்.
அப்போது ம்ருத்யு, தண்ணீரில் மீனைக்கண்டாற் போல்
தேவதையைப் பார்த்து விட்டான்.
பிறகு அவர்கள் அமிர்தமான ப்ரணவத்திலே மறைந்து கொண்டனர்.
இங்ஙனம் தங்களைக் காத்துக் கொண்டனர்.
இப்படிஉபாஸிப்பவனுக்கு ” ம்ருத்யு ” இல்லை, பயமுமில்லை.

”கப்யாஸ புண்டரீகாக்ஷ த்ருஷ்டி” என்பது சொல்லப்படுகிறது.
ஆகாசமாக உத்கீதத்தைப் பார்ப்பவனுக்கு உயர்ந்த ஜீவனம் —-,
உயர்ந்த உலகங்கள் கிடைக்கும். (சௌனகர் – சாண்டில்யருக்குச்
சொன்னது).

உமூஸ்தி என்கிற மஹரிஷி , பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில்
உணவு கிடைக்காமல், ஒரு கிராமத்தில், யானைக்குக்
கொடுக்கப்படும் ”குல்மாஷம்” என்கிற உணவை, உயிர் தரிக்க
வேண்டும் என்ற காரணத்தால், யானைப் பாகனிடம் கேட்டு, ஒரு
கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
ஆனால் தொடர்ந்து யானைப் பாகன் கொடுத்த தண்ணீரை
”இது எச்சில் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்
. உயிர் தரிக்க கொஞ்சம் உணவு சாப்பிட்டால் போதும் என்கிற நியதி
இந்தத் தத்வத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு அரசன் யாகம் செய்யப் போகும் சமயத்தில் ”ப்ரஸ்தாபம்”,
”உத்கீதம்”, ”ப்ரதிஹாரம்” என்கிற ஸாமங்களுக்கு தேவதை யார்
யார் என்று ரிக் வித்குகளிடம் கேட்க (யாகத்தை நடத்திவைப்பவர்கள்),
அவர்கள் தெரியாது என்று சொல்ல,
அரசன் இவரையே (உஷஸ்தி) (அச்சமயர் உஷஸ்தி அந்த இடத்துக்கு
வந்து சேர்ந்தார்) ரிக்வித்தாக நியமித்து அவரை மேற்கண்ட
ஸாமங்களுக்கு தேவதைகளைப் பற்றிக் கேட்க
உஷஸ்தி. ”ப்ரஸ்தாபம்” என்கிற ஸாமகானத்தில்
ஸர்வ பூதங்களுக்கும் பிறவி,அழிவு இவைகளுக்கு காரணமாக உள்ள
”ப்ராண” தேவதையையும் , உத்கீதத்திலே ”ஆதித்யன்” தேவதையையும்,
ப்ரதிஹாரத்தில் ”அன்னத்தையும்” தேவதையாகப் பாவிக்க
வேண்டும் என்று சொல்லி யாகத்தை நடத்தி வைத்தார்.

அன்னத்தைப் பெறக் காரணமாக உள்ள ”சௌவோத்கீதம்”
என்கிற உத்கீதம் இதில் சொல்லப்படுகிறது. ஸாமகானத்தில்
இசையின் பொருத்தத்திற்காக புதிய அக்ஷரங்கள் இருக்கும்.
அவை” ஸ்தோபாக்ஷரங்கள்” எனப்படும்.
”ஹா உ”, ”ஹா இ ”’போன்றவை

1) ஸுர்யோதயத்திற்கு முன்பு ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு
புறப்படும் காலம்;
2) மனிதர்கள் விழித்தெழும் உதய காலம்;
3) பறவைகள் பறக்கும் ஸங்கவ காலம்;
4) தேவதைகளின் உச்சிக் காலம்;
5)அபரான்ன காலம்;
6) அஸ்தமனத்திற்கு முன்பு கால்நடைகள் திரும்பும் காலம்;
7) பித்ருக்களின் அஸ்தமன காலம்.
இப்படி ஏழு பிரிவுகளாக ஸுர்யனைப் பாவித்து ஸாமத்தை
உபாஸிப்பது சொல்லப் படுகிறது.

மேலும், ”அதிம்ருத்யூபாஸனம்” விவரிக்கப்படுகிறது.

மாதங்கள் 12,
ருதுக்கள் 5 (ஹேமந்த ருது, சிசிர ருது ஒன்றாக
கணக்கிடப்படுகிறது)
உலகங்கள் 3 . ஸுர்யன் 1
ஆக 21. ஸாம பக்திகளில் எழுத்துக்கள் 22.
இப்படி ஸுர்யோபாசனம் செய்தால் ம்ருத்யுவை ஜயித்து
மோக்ஷத்திற்கு அருகதையாவது சொல்லப்படுகிறது.
ஸோம யாகத்தில் 3 யவனங்களுக்கு அதிபதியான
வஸு , ருத்ர, ஆதித்யர்களைப் பற்றிய ஸாமங்களைச் சொன்னால்
மூவுலகும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுவரை 9 உபநிஷத்துக்கள் சொல்லப்பட்டன.

தைத்திரியோபநிஷத்தில் ”ப்ரஹ்ம வித்யையைப் ”பார்த்தோம்
இப்போது 32 வித்யைகளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

பிறகு, மறுபடியும், உபநிஷத்துக்கள் 10 லிருந்து பார்க்கலாம்

————————————————————————————————————-

About the Author

Leave A Response