Vedobasana—9

Posted on Nov 10 2016 - 3:07pm by srikainkaryasriadmin

9 வது பாகம் —மீதி வித்யைகள் தொடருகின்றன

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரம்மபுரம்” என்று பெயர். இதன் உள்ளே
இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப்
போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை.
இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண
குணங்களான எட்டு – இதை உபாஸிக்க வேண்டும். இதனால்
உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.
வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து
புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு
எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம்
அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன்
ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது
இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்
எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று
கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை.
இவனைஅடைவதால் ”தாபத்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும்
”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும்
அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ள
அழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய
க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே
ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை
அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக
இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு அறிந்தவனுக்கு
ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே
இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன்
விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?”
என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம்
தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள்
தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக
ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல
இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்”
பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து
சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை
இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதன
அசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே
பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம்
இல்லை.
இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு
ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை
ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல்
மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு.
அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில்
சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

19. புருஷாத்மவித்யை

(இது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது.
இருந்தாலும், வித்யைகளை வரிசையாகச் சொல்லிக் கொண்டு
இருப்பதால், இங்கு சேர்க்கப்பட்டு விவரிக்கப்படுகிறது).

முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது.
இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி
ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது
சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி
செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட
வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ
உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம்
ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது
அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம்,
நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை
உபாஸிக்க வேண்டும்
அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை
உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள்,
விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)
தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற
கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக்
கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான்
(மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால்
கண்ணில் பட்டது காணப்படாது.
காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை,
தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே.
இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக
இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16
கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை
அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு
கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும்,
காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும்
(பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து
கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம்
வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாதசத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன்
தன்னுடைய ப்ரம்மஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை
வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி
ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து,
வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு,
தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால்
அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது
எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில்
சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை
செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு,
பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி
எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப்
பெறுகிறது. (கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச்
சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு
கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.
ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.
இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா.
அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த
ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம்
பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக
வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள்.
மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.
யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம்.
நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும்.
எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும்.
இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய்
பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை
வெவ்வேறாக பார்ப்பான். எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே
எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம்
செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ
மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம்
உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச்
சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர்
சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில்
சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே
அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.
சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று,
பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன்
என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக
அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம்,
ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில்
செல்கிறான்.
ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை
தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று
சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும்
விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற
ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.
பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக்
கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு
நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம்
செய்கின்றனர்.
அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்”
என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த
மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி,
ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து
”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட,
”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி,
”அமிதௌஜஸ்” என்கிறகட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா.
அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன்
ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட
நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்”
என்று பதில் சொல்கிறான்.
பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை
உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.
( மறுபடியும் பிறவியா / பகவானின் திருவடியா ? என்கிற அடியேனின்
புத்தகத்தில் விரிவாக உள்ளது )

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும்
பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன்
இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு
அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால்
மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும்
உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து
இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.
சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு
அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய்.
இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற
ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று
ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத…..
என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..
என்று ஆரம்பித்துச்சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம்
சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம் (யஜ்ஞரூபமாகச்
செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு –
தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற
யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்”
என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள்
(தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக்
கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம் (சாந்தோக்யத்தில் 3 -16-1
சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில்
அருளியுள்ளார்.
அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை,
பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும்
அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில்
சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னிவித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

மோக்ஷம் அடைய இரண்டு வழிகள்:
முதல் வழி :
1) பக்தி யோகம் மூலமாக
(2) ப்ரபத்தி மூலமாக
பரமபதத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. முதல்
வழியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் , ஸ்ரீமத் பகவத்கீதையில் அருளிய
”கர்ம யோகம்” , ”ஞான யோகம்” இரண்டையும் நன்கு புரிந்து
கொண்டு (கசடறக் கற்று) பிறகு ”பக்தி யோகத்தில்” இழிந்து 32
உபாஸனா மார்க்கங்களில் ஏதாவது ஒன்றில் “தைலதாரை”
போன்று புத்தியைச்செலுத்தி பகவானை அடைதல்.
இப்படிச்செய்து கொண்டே வந்தால், பலப்பல ஜன்மங்கள் எடுத்து,
அந்தந்த ஜன்ம வாசனையாலே இந்த புத்தி தொடர்ந்து இருந்து,
ஏதாவது ஒரு ஜன்மத்தில் பகவானின் திருவடியை அடையலாம்.
பெரிய ஞானிகளுக்கும், மஹான்களுக்கும், மஹரிஷிகளுக்கும்
இது முடியுமோ, என்னவோ ?

நம்மைப்போன்ற பரம லௌகீகத்தில் உழலும்
சம்சாரிகளுக்கு ஏற்றது இரண்டாவது வழியான ப்ரபத்திதான்.
இராமாயணம் முழுவதும் ப்ரபத்தி தர்மத்தைச் சொல்கிறது.
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாம் பகவானை அடைவதற்கான சாதன
வித்யைகள். சத் வித்யா, பூம வித்யா, தஹர வித்யா, உபகோசல
வித்யா, சாண்டில்ய வித்யா, வைச்வா நர வித்யா, ஆனந்த மய
வித்யா, அக்ஷர வித்யா முதலிய வித்யைகள் ஒரே சாகையில்
இருப்பவைகள் மற்றும் அனேக சாகைகளில்
இருப்பவைகளுக்கான உதாரணங்கள்.
இப்படிப்பட்ட ப்ரஹ்ம வித்யையானது மரண கால பர்யந்தம்
இடைவிடாமல் தினந்தோறும் அநுஷ்டிக்கப்பட வேண்டி இருக்கிறது.
இங்கு 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெயர்களும் சில வித்யைகளின் விவரமும்
சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
விவரம் கொடுக்கப்படாத வித்யைகள் உபநிஷத்து ரூபமாகவே
இருக்கலாம்.
பரமபதவாஸி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மீந்ருஸிம்ஹாச்சார்யார் ஸ்வாமி
இந்த 32 ப்ரஹ்ம வித்யைகளை அடிக்கடிச் சொல்வார்.
அநேகர் அவருடைய உபந்யாஸத்தில் கேட்டிருக்கலாம்.
இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து
வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா
உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம்
32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள
அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர்
சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும்,
அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

இனி தொடர்ந்து, உபநிஷத்துக்களைப் பார்ப்போம்.

About the Author

Leave A Response