Poems

Posted on Nov 22 2016 - 6:52am by srikainkaryasriadmin

துயர் துடைக்க வாராயோ ?

1. கானமே ! கானத்தின் ராகமே ! ராகத்தின்
வானகத்துத் தெய்வமே !வழிகாட்டும் மெய்ப்பொருளே !
உழன்றேன் ; சலித்தேன் ; உள்ளம் உருகி வந்து
தொழுதேன் உன்பாதம்,துயர் துடைக்க வாராயோ ?

2. வேதமே ! வேதத்தின் உட்பொருளே ! பொருளுக்கு
சாதனத்தின் சாதனையே !சத்தியத்தின் சத்தியமே !
சுழன்றேன்;வீழ்ந்தேன் ;சுடராழி வலம் வந்து
தொழுதேன் உன்பாதம், துயர் துடைக்க வாராயோ ?

3.சோதியே ! சோதியின் சுடரே !சுடருக்கும்
சோதிக்கும் உட்பொருளே ! உத்தமனின் உத்தமனே !
பேதித்தேன்;பிதற்றினேன்; பிழைக்கும் வழி இல்லை .
சோதனைகள் போதும் ,துயர் துடைக்க வாராயோ ?

4.வல்லவனே!வல்லனுக்கும்வல்லவனே!வல்வினைகள்
அல்லவையை அழிப்பவனே ! ஆதிக்கும் ஆதியே !
புல்லானேன் ; புழுவானேன் ;புவனத்தே பலஇடர்கள்
இல்லவையாக்கி ,என் துயர் துடைக்க வாராயோ ?

5. நல்லவனே ! நல்லோரின் நாயகனே !நல்லோர்க்கு
நல்லவை அளிப்பவனே ! அளித்துக் காப்பவனே !
வாடினேன்;வதங்கினேன் ;வாழும் நெறி துறந்தேன்;
தேடினேன்;வந்தேன் ,துயர் துடைக்க வாராயோ /

6. இதயமே ! இதயத்தின் இதயமே ! இதயத்தை
இதமாக இயக்குவனே ! இயக்கத்தின் உட்பொருளே !
துடித்தேன் ; தவித்தேன்; தவித்துனை வந்தடைந்தேன் .
கடிந்துனைப் பேசினும் , நீ, துயர் துடைக்க வாராயோ ?

7. பிராணனே ! பிராணனின் காற்றே ! காற்றுக்கும்
பிராணனாகி இருப்பவனே ! கருத்த மாமுகிலே !
மரமானேன்;விலங்கானேன் ; மாபாவியானேனே .
கரம்கூப்பி வீழ்ந்தேன் ,துயர் துடைக்க வாராயோ ?

8.அமரனே 1 அமரர்க்கும் அமரனே !அமரருள்ளும்
அமர்ந்த மெய்ப்பொருளே ! ஆதவனின் ஆதவனே !
சுமந்தேன்;அயர்ந்தேன்; சுகம் உன்திருவடியென ,
அமைந்தேன்;அச்சுதா, துயர் துடைக்க வாராயோ ?

9. தெய்வமே ! தெய்வத்தின் தெய்வமே !தேவர் ஆரும்
உய்யும் வழிக்கு வழியே ! உலகளந்த திருமாலே !
ஏற்றினேன் ; ஏக்கத்தில் சுழன்றேன்;அரற்றினேன் .
போற்றினேன் உன்பாதம், துயர் துடைக்க வாராயோ ?

10. அச்சுதா ! அமரர் ஏறே ! அமுதுக்கும் அமுதான
அச்சுதனாகி நின்ற அடியவர்க்கு மெய்யனே, நின்,
இருவடிகள் பற்றினேன்; இனி எனக்குப் புகல் நீயே .
திருவடியைப் பிடித்தேன்,துயர் துடைக்க வாராயோ ?

Image may contain: indoor

About the Author

Leave A Response