!
கொள்வோர் கொள்க
இதிஹாஸ புராணங்களில், பகவானின் அவதாரங்கள் பல யுகங்களில் நடந்திருந்தாலும்,அந்த அவதாரங்கள் எல்லாம் தென்தேசத்தில் இல்லை.
இது ஒரு குறையே ! பகவானுக்கும் இந்தக் குறை இருந்ததோ !
அதனால்தானோ , எம்பெருமான், இங்கு ஆழ்வார்களை அவதரிக்கச் செய்தான்;
ஆசார்யர்களை அவதரிக்கச் செய்தான் !
இதுவும் ஒரு அவதார ரஹஸ்யமோ ?
அப்படியும் பகவானுக்கு , மனஸு த்ருப்தி அடையவில்லை !
அர்ச்சாவதாரமாக, இங்கு பல திவ்ய தேசங்களில் எழுந்தருளி இருக்கிறான்.
சோழ நாடு என்று சொல்லப்படும் தேசத்தில் 42 திவ்யதேசங்களிலும்
பாண்டிய நாடு என்று சொல்லப்படும் தேசத்தில் 18 திவ்ய தேசங்களிலும்,
சேரநாடு என்கிற மலையாள தேசத்தில் 13 திவ்ய தேசங்களிலும்,
தொண்டை நாடு எனப்படும் தேசத்தில் 22 திவ்ய தேசங்களிலும் ,
ஆக ,மொத்தம் 108 திவ்ய தேசங்களில்,
95 திவ்யதேசங்களில் ,இந்த தென் தேசத்தில் எழுந்தருளி , ஆழ்வார்களை,மங்களாசாஸனம் செய்ய வைத்து, ஆனந்தப்பட்டு ,அடியார்களின் துயர், தீர வைக்கிறான்.
அவதாரங்கள் ,வட தேசத்தில் இருந்தால் என்ன !
அர்ச்சாவதார மூர்த்தியையே, வராஹமாகவும், ந்ருஸிம்ஹமாகவும் ராமனாகவும் க்ருஷ்ணனாகவும் இன்னும் பல அவதார மூர்த்திகளாகவும்
அர்ச்சா ரூபியாக எழுந்தருளச் செய்து, ஆழ்வார்கள் , பாடியிருக்கிறார்கள்.
இது, நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகக் ொண்டாடப்படுகிறது. திவ்ய தேசங்களில்,
ஓதப்படுகிறது.
இவை மாத்திரமல்ல ! பகவான் ஸ்ரீவைகுண்டத்தில் பரவாஸுதேவரூபத்தில் ஸேவை ஸாதிப்பதை அர்ச்சாவதாரத்தில்,இங்கே எழுந்தருளி
இருப்பதை ஆழ்வார்கள், பக்தி சொட்டும் தமிழால் பாடிப் பரவியிருக்கிறார்கள்.
இது மாத்ரமல்ல !
பகவான், இந்தத் தென்தேசத்தில்தான் மாப்பிள்ளையாகி இருக்கிறான்.
பெரிய பிராட்டியின் அவதாரம் பற்பல திவ்ய தேசங்களில் இங்குதான் நடந்திருக்கின்றன.( அடியேனின் ”திவ்ய தேச வைபவம்”மூன்று பாகங்களிலும்உள்ள புராண வரலாறுகளைப் படித்தால், இவ்வுண்மை விளங்கும் )
பெரிய பிராட்டியை விவாஹம் செய்துகொள்ள, பகவான் ஓடோடி இங்கு வந்து ப்ரஸன்னமாகி ,திருக்கல்யாணம் செய்துகொண்டு ,இங்கேயே மாப்பிள்ளையாகத்
தங்கியிருக்கிறான்.பிராட்டி ”புருஷகார பூதை ”யாகி, பகவானிடம் நமக்காகச் சிபாரிசு செய்கிறாள்.
கோதை நாச்சியார் ,திருவரங்கத்தெம்பெருமானை மணந்தது, இங்கு உள்ள திவ்ய தேசமான ,ஸ்ரீ ரங்கத்தில்தான்.
இந்தத் தேசத்துக்கு ஆழ்வார்கள் அவதரித்ததால் ஏற்றம்.
ஆசார்யர்கள் அவதரித்ததால் ஏற்றம்.
இந்த ஏற்றங்களில் தானும் கலந்து பரிமாறிக்கொள்ள வேணும் என்று பகவான்—அர்ச்சா மூர்த்தியாகப் பல திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கிறான்.
அவதாரம் செய்யாவிட்டாலும், அர்ச்சாவதாரம் செய்திருக்கிறான். ஆழ்வார்கள் தன்னைப்பாட வேண்டுமென்று , இங்கு, திவ்யதேசம் தோறும்
கிடந்தும்
இருந்தும்
நின்றும்
படாத பாடு படுகிறான்.
ஆசார்யர்களை இங்கு அவதரிக்கச் செய்து,அவர்களுக்கு முன்பாகவே ,இங்கு அர்ச்சாவதார மூர்த்தியாக இங்கு எழுந்தருளி இருக்கிறான்.
கீழ்ச்சூடும் ,மேல்சூடும் தாங்காமல் அவதியுறும் ஜீவாத்மாக்களை –சேதனர்களைக் கடைத்தேற்ற ,
ஆசார்யர்கள் ,பல்வகையும் உபதேசமாகவும், க்ரந்தங்கள் மூலமாகவும் உபகரிக்க ”இதோ, இதோ ” என்று திவ்ய தேசங்களைக்காட்டி ,வாருங்கள், வாருங்கள் என்று
அழைக்கிறான்.
பகவான், இந்தத் தென்தேசத்தில் அவதரிக்காவிட்டால் என்ன ?
அர்ச்சாவதார ஸேவை போதுமே !
அனவரதமும் ஸேவிக்கலாமே !
ஆனால், அதற்கு ”மனஸ்” வேண்டும்.
அடியோங்களைப் போல உள்ளவர்களின் உபன்யாஸங்களைக் கேட்கவேண்டும்
ஆசார்யனின் உபதேசங்களைக் கேட்க வேண்டும்.
எம்பெருமானார் ,அருளி இருப்பதைப் பக்தியுடன் படிக்க வேண்டும்/பிறர்சொல்லக் கேட்கவேண்டும்.
ஸ்வாமி தேசிகனின் க்ரந்தங்களைப் படிக்கவேண்டும்
அவதாரங்கள் இந்தத் தென்தேசத்தில் இல்லையென்றாலும்,அர்ச்சாவதாரங்கள்
நிலைத்து நிற்கின்றன.
இந்த அர்ச்சாவதார எம்பெருமான்களை ஸேவித்து ,பிறகு ”முமுக்ஷூ ”வாகிப் பிறகு எம்பெருமானின் ”கலங்காப் பெருநகர்” அடைய ,ஆசார்யர்கள் வழிகாட்டுகிறார்கள்
இதைவிட, வேறு என்ன வேண்டும் ?
கொள்வோர் கொள்க !