இருந்தும், கிடந்தும், நின்றும்—6
ஜீவாத்மாக்களாகிய நாம் எல்லோரும் ,பகவானுடைய சொத்து .
பகவான் தன்னுடைய சொத்தைவிட்டுப் பிரிந்திருக்கிறான்.
இந்த ஜீவாத்மாக்கள், உலகில் அடிமைத் தொழில் செய்கின்றனர்–
யார் யாருக்கோ அடிமைத் தொழில் செய்கின்றனர்
இந்த அடிமைத் தளையிலிருந்து விடுவித்துத்
தன்னடிச் சோதிக்கு அழைக்க, பகவான் அர்ச்சாவதாரமாகி,
இதுவரை 104 திவ்ய தேசங்களில் கிடந்தும் இருந்தும், நின்றும்
படாதபாடு பட்டான்
ஆனால், அவன் சொத்தாகிய ஜீவாத்மாக்கள் இந்த சம்ஸாரச்
சாக்கடையிலேயே –இதிலேயே —–உழல்கின்றனர்.
விடிவு காலம் தெரியாமல் உழலுகின்றனர்.
பகவான், இந்தக் குழந்தைகளை எப்படி மடக்குவது என்று யோசித்தான்.
காவிரி பாயும் ,
கன்னலும், செந்நெல்லும் சூழும் ,
திவ்ய தேசமே தகும் என்று திருவுள்ளம் பற்றி,
105. திருவெள்ளறை வந்தான்.
புண்டரீகாக்ஷனாக நின்றான்.கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
செண்பகவல்லி என்கிற பங்கஜவல்லி ஸமேதனாக நின்றான்
ஏழு தீர்த்தங்கள் அருகிருக்க நின்றான்
விமலாக்ருதி விமானத்தின் அடியில் நின்றான்
உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் இருக்க ,அவற்றின் மூலம் ஸேவை
ஸாதித்து நின்றான்
உய்யக்கொண்டார் , இங்கு அவதரிக்க நின்றான்
எங்களாழ்வான் இங்கு அவதரிக்க, நின்றான்
ஸ்ரீ உடையவர், பலகாலம் இங்கு வசித்துப் போற்ற, நின்றான்
பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்யப் பூரித்து நின்றான்.
திவ்ய பிரபந்தங்களுக்கு , அர்த்த விசேஷங்களைத் தினவடங்கச் சொல்லும் சோழியர்கள்
பக்கலில் இருக்க நின்றான்
ஆனால், சேதனர்களோ , காவிரியைக் கடந்து, வடக்கே வந்தாரில்லை
106. உத்தமர்கோயிலில் கிடந்தான்
திருக்கரம்பனூர் என்கிற திவ்ய தேசத்தில், புஜங்க சயனனாகக் கிடந்தான்
திருவெள்ளறையில் நின்று பார்த்தவன் ,இங்கு வந்து ”படுத்தான்”
புருஷோத்தமனாகக் கிடந்தான்
பூர்ணவல்லித் தாயாருடன் கிடந்தான்
கதம்ப தீர்த்தக் கரையிலே கிடந்தான்
உத்யோக விமானத்தின் அடியிலே கிடந்தான்
ருத்ரனின் ப்ரஹ்மஹத்தி தோஷம் நீங்க, தாயாரை அவருக்குக் கைக் கபாலத்தில்
பிக்ஷை இடச் செய்து , அநுக்ரஹம் செய்து, இங்கே கிடந்தான்
திருமங்கை ஆழ்வார் ,ஒரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்யக் கிடந்தான்
சேதனர்கள் யோசித்தார்கள்–பன்னிரு ஆழ்வார்களில், எல்லாத் திவ்யதேசங்களையும்
பாசுரமிட்டுப் பாடிய திருமங்கை ஆழ்வார் மட்டில்தான் ,இந்த எம்பெருமானைப் பாடியிருக்கிறார்
என்று பொருந்தாக் காரணம் சொல்லிப் போந்தனர்
பகவானுக்குப் பொறுக்கவில்லை —காவிரியைத் தாண்டித் தெற்கே போவோம் என்று
எண்ணி, திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலமான
107 உறையூர் வந்தான்
சோழமன்னனின் திருமகள்–கமலவல்லி, இங்கு விரதமிருந்து , விவாஹம் செய்துகொள்ள,
அழகிய மணவாளப் பெருமாளாக நின்றான்
இவன்தான் ஸ்ரீ ரங்கநாதன்—ஒவ்வொரு வருடமும் ”பங்குனி உத்ரத்துக்கு” முன்பாக , 6ம் திருநாளில்,
நம்பெருமாளாக இங்கு எழுந்தருளி, கமலவல்லி நாச்சியாரை விவாஹம் செய்து கொண்டான்
குலசேகரரும், திருமங்கைமன்னனும் மொத்தமே இரண்டு பாசுரமிட நின்றான்
இந்த விவாஹ வைபவத்தைத் தரிசிக்க வந்தவர்கள் ஸ்ரீரங்கம் செல்லவே ,அவர்களுடன் கூடவே
8ம் திருநாளில்,
108. ஸ்ரீரங்கம் வந்தான்
* 9ம் திருநாளில், பெரிய பிராட்டியாரின் ஊடலால் ஏற்பட்ட ”பிரணயக் கலகம்”
நம்மாழ்வாரால் ,தீர்க்கப்பட மகிழ்ந்து நின்றான்.
*அன்றே பெரிய பிராட்டியாரின் திருஅவதார தினமான பங்குனி உத்ரத்தில், சேர்த்தியில்
எழுந்தருளி இருக்கும்போது, ஸ்ரீ உடையவர் , ”கத்யத்ரயம்” சமர்ப்பித்து, சரணாகதி செய்ய,
சேதனர்கள் , இந்த ”பவிஷ்யதாசார்யரை ” அடியொற்றி, சரணாகதி செய்து , நம்வீடு வருவார் என்று
குதூகலித்தான்
*இதுவே பூலோக வைகுண்டம் என்றான்
*வைகுண்டத்தில் இருக்கும் ”வ்ரஜா” நதியே காவேரி நதி.
*வைகுண்டத்தில் இருக்கும் ஸ்ரீ வாஸுதேவனே ,ஸ்ரீரங்கநாதன் .
*விமானமே, ப்ரணவம்
*விமானத்தின் நான்கு கலசங்களே நான்கு வேதங்கள்
*விமானத்தினுள்ளே பள்ளிகொண்ட பெரிய பெருமாளே, ப்ரணவம் விவரிக்கும்”பரமாத்மா”
*காவிரியையும், கொள்ளிடத்தையும் மாலையாக்கிக் கொண்டான்
* தானே ”இக்ஷ்வாகு குலதனம்” என்றான்
, *”ஸதம்வோ அம்பா தாமானி ஸப்தச்ச —”என்று ப்ரஹ்மாவுக்குச் சொல்லி,
பரமபதத்தையும் சேர்த்து நூற்றெட்டுத் திவ்ய தேசங்களிலும் ”நானே” என்றான் ‘
*சந்த்ர புஷ்கரணி எனதே என்றான்
*படமெடுத்த ஆதிசேஷன் படுக்கையிலே படுத்திருக்கும் ”பெரிய பெருமாள்” நானே என்றான்
*.ப்ரணவாகார விமானத்தின் அடியில் சயனித்திருப்பது ”நானே” என்றான்
*விமானத்தின் மீது ”பரவாஸுதேவனாக ” இருப்பதும், நானே என்றான்
*ரங்க மண்டபத்தை , காயத்ரீ மண்டபம்” என்றும் , அங்குள்ள 24 தூண்களையும்
காயத்ரீ மந்த்ரத்தின் 24 அக்ஷரங்கள் என்றும் பூர்வாசார்யர்கள் புகழ, ஆமோதித்தான்
*ஏழு உலகங்களையும் , ஏழு ப்ராகாரங்களாக்கினான்
*வேதஸ்வரூபன் —பெரிய பெருமாள்
*வேதச்ருங்கம்— ப்ரணவாகார விமானத்தின் சிகரமாகியது
*வேதப்ரணவம் –ப்ரணவாகார விமானமாகியது
*வேதாக்ஷரமே –காயத்ரி மண்டபமாகியது
*அடியேன் , ,இத்திருத்தலத்தைக் கடைசியில் சொன்னாலும்
அர்ச்சாவதார ,முதல் அவதாரமாகினான்
*அண்டர்கோன் அணியரங்கனானான்
*திருப்பாவை முப்பதும் செப்பினாளை
உயர் அரங்கனாகிய தனக்கு,கண்ணி உகந்து அளித்தவளை
பெரியாழ்வார் பெற்றெடுத்தவளைத் ,
தன்னிடம் பேதைமை கொண்டவளை ,
மாலையிட
பெரியாழ்வார் கனவில் தோன்றி, கோதையைத் திருவரங்கம்
அழைத்துவரச் சொன்னான்
இங்கு பட்டர்,கோவில் பரிசனங்களிடம் ,அப்படியே தோன்றி,
அழகிய பூப்பல்லக்கில் ,கோதையை சந்நிதிக்கு அழைத்துவரச் சொன்னான்.
அவனின் திருவுளப்படி ஆண்டாள் திருமணத்தூண் அருகே வந்து
அரங்கனுக்கு மாலையிட,
அரங்கனும் மாலையிட.
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனனாகிய ரங்கநாதன் வந்து
ஆண்டாள் கைத்தலம்பற்றி , தீவலம் செய்து,
பொரி முகம் தட்ட , செம்மை உடைய தன்னுடைய திருக்கரத்தால்,
கோதையின் தாள் ( திருவடி )பற்றி , அம்மி மிதித்து,
வாய்நல்லார் நல்ல மறை ஓதும் மந்திரம் முழங்க ,
பெரியாழ்வார், கோதையைக் ”கன்யாதானம்” செய்ய,
நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதன், கோதாமணாளனாக ஆனான்.
*துலுக்க நாச்சியாரின் , இஷ்ட மணாளனானான்
*சேரகுலவல்லியின் , வீர மணாளனானான்
*குலசேகரன், படியாய்க் கிடக்கப் பவள வாய்க் காட்டிப் பரிவுகொண்டான்
*.பெரிய திருவடி அனவரதமும் அமர்ந்து இருந்து அஞ்சலி செய்ய , அருள் புரிந்தான்
*திருவிண்ணாழித்திருச் சுற்றில், பூமிக்கு அடியில் சாளக்ராம எம்பெருமான்கள்
ஏராளமாக வாசம் செய்ய, அங்கு பக்தர்கள் ,மண்டியிட்டு வலம் வருவதை ,வழக்கமாக்கினான்
*திருமங்கை ஆழ்வார் பிரார்த்தனையை ஏற்று, ”திருவத்யயன உத்ஸவத்தில்” , வேதங்களோடு
திருவாய்மொழியையும் திருச்செவி சாற்றத் திருவுள்ளம் கொண்டான்
*விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி
திருவர்மார்பன் கிடந்த வண்ணனானான்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும்
பாசுரங்கள் ,பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்
தொடர்ச்சி—–நாளை ( 8–01–2017 ) ஞாயிறு — வைகுண்ட ஏகாதசி ——அன்று-
—
Sarvam Sree Hayagreeva preeyathaam