தனியன்–தெரிவோம் –தெளிவோம்——1
தனியன்
—————–
தனியன் என்கிற வார்த்தைக்கு,வணக்கத்துடன் வழிபாடு செய்து,
பெருமைகளைப் புகழ்வது என்று பொருள் கொள்ளலாம்
ஆழ்வார் அல்லது வைணவப் பெரியவர் ஒருவரின் பாடல்களைக் கூறும் முன்னர்
அவரைப் போற்றித் துதிக்கும் பாடல் என்றும், தனிமனிதனைப் போற்றும் பாடல்
என்பதால், இப்பாடல் ”தனியன்” எனப்பட்டது என்றும் பொருள் கூறுவர்.
தனித்து நிற்கும் ஓரிரு பாடல் என்பதால், ”தனியன்” எனப்பட்டது என்றும்
மற்றொரு பொருள் கூறுவர் . இவை, பொதுவாக, ”வெண்பா”, ”கட்டளைக் கலித்துறை ”
யாப்பில் அமைவது வழக்கம் என்றும், இவை 10ம் நூற்றாண்டில் பாடி இணைக்கப்பட்டவை
என்றும் சொல்லப்படுகிறது .
பகவான் சந்தோஷப்படுகிறான்
அவன் ஸர்வ சக்தன்;க்ருபாஸமுத்ரன் .
பொய்கை ஆழ்வார் முதலாக, திருமங்கை ஆழ்வார் வரை ,இந்நிலவுலகில்
அவதரிக்கச் செய்து, அவர்கள், திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகத் தன்னைத்
துதித்ததைக் கேட்டு, சந்தோஷப்பட்டான்.
ஆழ்வார்கள் ,மங்களாசாஸனம் செய்த திவ்ய தேசங்களில், ”அர்ச்சா”ரூபியாக நின்றும்,
இருந்தும் ,கிடந்தும் திவ்ய ப்ரபந்தங்களைச் செவிசாய்த்தும் ,நம்மைப் போன்ற
சேதனர்களை ”வா —-வா —” என்று அழைத்தும் அநுக்ரஹித்துச் சந்தோஷப்படுகிறான்.
ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ மதுரகவிகள், ஸ்ரீமந் நாதமுனிகள், நடுநாயகமாக நம் இராமாநுசன் —
நம் வேதாந்தாசார்யன் ஸ்வாமி தேசிகன் ,பிறகு பற்பல ஆசார்யர்களை அவதரிக்கச் செய்து,
அவர்கள் மூலமாக, கடினமான க்ரந்தங்களுக்கு சுலபமாகப் புரிந்து கொள்ளும்படியான
வ்யாக்யானங்களைக் கொடுத்து , நம்போன்ற சேதனர்களுக்கு ஹிதோபதேசங்களை
அருளச் செய்து சந்தோஷப்படுகிறான் .
அத்தகு ஆசார்யர்களின் உபதேசங்களாலே ,பிராட்டியும் தாமும் ஆன ”ஈச்வரத்வம் ”
அவர்களுக்கு, சேதனர்களாகிய நாம் அடிமை என்கிற ”ஜீவதத்வம் ”, இவற்றை
அறியவொட்டாமல் தடுக்கிற ”ப்ரக்ருதி தத்வம்”—இவைகளைச் சேதனர்கள் அறிந்து,
தெளிந்து, ”ப்ரபத்தி” என்பதாலே, ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நீக்கி, திவ்ய தம்பதிகள்—
சேஷீ தம்பதிகள்—–சரண்ய தம்பதிகள்—-என்றெல்லாம் புகழப்படும் தங்களுக்குக்
கைங்கர்யம் ஆகிற புருஷார்த்தத்தை அடைவித்து, உஜ்ஜீவிக்கும்படி செய்து
சந்தோஷப்படுகிறான் .
இப்படி, பகவானின் அபரிமிதமான சந்தோஷமே , தங்கள் சந்தோஷம் என்று
ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அருளிய ஸ்தோத்ரங்களையும், பாசுரங்களையும்,
நாம் படிக்கும் முன்பு (ஸேவிக்கும் முன்பு)இவர்களின் பெருமைகளைச் சொல்லும்
”தனியன்” என்பதைப் பக்தியுடன் , அந்தரங்க சுத்தியுடன் சொல்லிவிட்டு, அதன்பிறகு,
அவர்கள் அருளியதைச் சொல்வது, தொன்றுதொட்டு,நம் பூர்வாசார்யர்கள்
வகுத்துக்கொடுத்த நெறியாகும் .
உதாரணமாக—-
திருப்பாவை சொல்வதற்கு முன்பாக, திருப்பாவையை அருளிய ஸ்ரீ ஆண்டாளைப்
பற்றி ஸ்ரீ பட்டர் அருளிய ”நீளாதுங்கஸ் —-” என்கிற ஸம்ஸ்க்ருதத் தனியனும்,
உய்யக்கொண்டார் என்கிற ஆசார்யன் அருளிய தனியனையும் சொல்வது
(அன்னவயல் புதுவையாண்டாள் மற்றும் சூடிக்கொடுத்த ) வழக்கமாக இருந்துவருகிறது.
ஆங்கிலத்தில் சொல்வதென்றால்,
”Taniyan” —an invocating and laudatory verse–is invariably recited at the beginning of the study or recitation
of tamil scriptures known as ”stotras” / Divya prabanda/Desika prabanda
ஆக , எந்த ஸ்தோத்ரங்களை /பாசுரங்களைச் சொல்கிறோமோ அவற்றை அருளியவரைப்
புகழும் ”தனியன்”என்பதைச் சொல்லிவிட்டுப் பிறகு அந்த ஸ்தோத்ரங்கள் —இவைகளைச்
சொல்லும்போது, தனியனை அருளியரின் க்ருபை, எவரைப்பற்றிய தனியனோ அவரின் க்ருபை ,
பகவானின் அநுக்ரஹம் —-இவை யாவும் கிடைக்கிறது என்பது பூர்வாசார்யர்களின் துணிபு.
இப்படிப்பட்ட தனியன்களை,
தனியன்
அதை அருளியவர்
அவருடைய காலம்
இந்தத் தனியனுக்குப் பிறகு ஸேவிக்கப்படும் ஸ்தோத்ரங்கள் /பாசுரங்கள்
என்பனபோன்றவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம் .
(கலியுகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 3069ம் வருஷத்திலிருந்து
ஆரம்பம் என்பதை நினைவில் வைத்து, கலியுகம் என்று சொல்லும்போதெல்லாம்
அவரவர்கள் உசிதப்படி ஆங்கில ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ஆங்கில வருடங்களில் சில வேறுபாடுகள் நேரலாம். ஆனால், அது முக்கியமல்ல–
தனியன்—அதைத் தொடர்ந்த விவரங்களே முக்யம் )
தனியன்
——————————
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
இது கலி சகாப்தம் 4431ல் சுக்ல வருஷம் சித்திரை மாதம் ,புனர்வஸு
நக்ஷத்ரத்தில் அருளப்பட்டது என்பர். .ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர்
வரதாசார்யர் என்கிற நயினாசார்யர் அருளியது.
இந்தத் தனியனின் அர்த்த விசேஷத்தைச் சிலாகித்த பெரியோர்கள் ,
இந்தத் தனியனை , ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீஸூக்திகளை
ஸேவிக்குமுன்பாக தனியனாக ஏற்றார்கள்.தவிரவும் ஸ்வாமி தேசிகன்
அருளிய ஸ்தோத்ரங்களை ,கோஷ்டியாகவோ , தனியாகவோ ஸேவிக்குமுன்பாக,
பக்தியுடன் சொல்வது என்பது பூர்வர்கள் காட்டிய வழியாகும். மேலும்,
எந்த ஸ்தோத்ரங்களைச் சொல்ல ஆரம்பித்தாலும், சுப கார்ய ஆரம்பத்திலும்
இந்தத் தனியனைச் சொல்வது ஆசார்யர்கள் காலந்தொட்டு நெடுநாளைய வழக்கம்.
அடுத்தது—-ராமாநுஜ தயாபாத்ரம் ———-என்கிற தனியன்
—————————————————-தொடருகிறது————————-