தனியன் –தெரிவோம் —தெளிவோம்–2
———————————————————————————————————-
2. ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
—————————————–————————————————————————————-
கலியுகம் பிறந்து, 4440 ம் ஆண்டில் பஹூதான்ய வருஷம்….(இப்போது கலியுகம்
5117ம் வருஷம்—– ஆங்கிலம் 2017 )
இந்தத் தனியனை, ஆவணி மாஸ ஹஸ்த நக்ஷத்ரத்தில் அநுக்ரஹித்தவர் ,
ஸ்ரீபேரருளாள ஜீயர்.
இவர் இந்தத் திருநாமத்துடன், பிறகு, ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்தரர் என்று
ஸ்வாமி தேசிகனாலே பஹூ மானிக்கப்பட்டு, ஸ்ரீ பரகால மடத்தை மைசூரில்
ஸ்தாபித்து, ஸ்வாமி தேசிகன் ஆராதித்து, பிறகு அநுக்ரஹித்துக் கொடுத்த
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராத்ய தெய்வமாகப் பெற்று, அநேகமாயிரம் சிஷ்ய
வர்க்கங்களுடன் அடுத்தடுத்த ஆசார்ய பரம்பரையுடன் அங்கங்கு மடத்தின்
கிளைகளை நிறுவி, பராமரித்து, தேசிக ஸம்ப்ரதாயத்தைப் பரப்பி வரும்
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்.
———————————
இப்போது, குரு பரம்பரையைக் கொஞ்சமாவது
தெரிந்துகொள்வது/ நினைவு படுத்திக் கொள்வது அவச்யம்
ஸ்ரீ இராமாநுஜர்
|
|
இவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் —முக்யமானவர்கள் 74
சிம்ஹாசனாதிபதிகள்
இவற்றில் முக்யமானவர் —–பட்டர்
பிறகு,
திருக் குருகைப்பிரான் பிள்ளான்
இவருக்கு ” குருகேசர் ” என்றும் திருநாமம்.
இவர் பெரியநம்பிகளுடைய இரண்டாவது குமாரர்
ஸ்ரீ உடையவர் நியமனப்படி,
திருவாய் மொழிக்கு ” திருவாறாயிரப்படி ” என்று
வ்யாக்யானம் செய்து, உடையவரால் மிகவும் உகக்கப்பட்டு,
“பகவத் விஷயம் ” என்று இன்றளவும் கொண்டாடப் படுகிறது.
இவருக்குப்பிறகு —-ஸ்ரீ விஷ்ணு சித்தர் என்கிற ”
எங்களாழ்வான் ” இவர் , திருவெள்ளறையில் அவதரித்தவர்
. பிறகு….நடாதூர் அம்மாள்
பிறகு நம்பிள்ளை
அடுத்து, அப்புள்ளார்
அவருக்கு அடுத்து, ஸ்வாமி வேதாந்த தேசிகன் —–
தூப்புல் திவ்ய தேசத்தில் அவதாரம் .
————————————————————————————————————————-
ஆசார்ய பரம்பரை—–இருவகை
ஒன்று—-அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்ய பரம்பரை
மற்றொன்று —க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய பரம்பரை
ஸ்ரீ உடையவருக்கு முற்பட்ட—–அதாவது, பின்னருளால்
பெரும்பூதூர் வந்த வள்ளல், பெரியநம்பி,
ஆளவந்தார் , மணக்கால் நம்பி என்று சொல்கிறோமே, அப்படி
ஸ்ரீ உடையவருக்கு முற்பட்ட ஆசார்யர்கள்,
ரஹஸ் யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு
முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப்
பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம்
நோகாதவண்ணம் , அதேசமயம், தங்கள் மனம்
உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி
செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள்.
இதை “அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்ய ” பரம்பரை என்று
சொல்வர் .இப்படிப்பட்ட பரம்பரை, திருக்கோஷ்டியூர்
நம்பி என்கிற மஹாசார்யனுடன் முடிந்தது.
ஸ்ரீ பாஷ்யகாரர் அவதரித்து, ஸம்ஸாரிகளிடம் கருணைகொண்டு,
அந்த சிஷ்யர்கள் ஸம்ஸாரபந்தத்திலிருந்து
விடுபடவேண்டும் என்கிற வாத்ஸல்யத்துடன், அவர்களைத்
திருத்தி, உபதேசங்கள் செய்யலானார்.
ஸ்ரீ உடையவர் வழிவந்த ஆசார்யர்களும், இதே முறையை
அனுசரித்து, சிஷ்யர்களிடம் கருணைகொண்டு
அவர்களை உய்விக்க உபதேசங்கள் செய்யத் தொடங்கினார்கள்.
ஆதலால், இது, “க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ”
பரம்பரை என்று சொல்லப்படுகிறது. இதுவே ஸ்ரீ ராமாநுஜ
தர்ஸனம் ; ஸித்தாந்தம்;ஸம்ப்ரதாயம்
(பார்க்க–அடியேனின்–கேட்பதும்,சொல்வதும் –ஜூன் 2009,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் மாதப் பத்ரிகை)-
ராமாநுஜ ஸித்தாந்தம்
,ராமாநுஜ ஸித்தாந்தம் என்ன என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து, கொள்வோம்
அப்போது, ஸ்வாமி தேசிகனை “ராமாநுஜ தயா பாத்ரம்” என்று கொண்டாடுவது
கொஞ்சம் புரியும்.
ஸித்தாந்தங்கள்,(ஸம்பிரதாயங்கள்) இரண்டு வகை.
ஒன்று—-வேதத்தைத் தழுவிய ஸித்தாந்தங்களும்ஸம்பிரதாயங்களும் ——-இது வைதிகம்
மற்றொன்று —-வேதங்களை ஆதாரமாகக் கொள்ளாதவை —-இது அவைதிகம்
ராமாநுஜருடைய ஸித்தாந்தமும், ஸம்ப்ரதாயமும், வேதங்களைத் தழுவியவை
—அதனால் வைதிகம்.
ராமாநுஜருடையஸித்தாந்தம் என்பது, ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை.
ராமாநுஜருடைய ஸம்ப்ரதாயம் என்பது, ராமாநுஜரால் ஏற்கப்பட்ட
குருபரம்பரையில், ஆசார்யன்,சிஷ்யனுக்கு உபதேசிப்பது அவன், தன்னுடைய
சிஷ்யனுக்கு உபதேசிப்பது என்கிற க்ரமத்தில், பரம்பரையாகத் தொடர்ந்து
வரும் உபதேசங்கள்/ அனுஷ்டானங்கள்
மாதா, பிதா, குரு , தெய்வம்
என்று சொல்கிறோம். நமக்கு முதலில், மாதா—மாதாவைத் தெரிந்துகொள்ளாத
மகவு—குழந்தை, இல்லை. இந்த மாதா தான், இவர்தான் பிதா என்று அடையாளம்
காட்டுகிறாள். அந்தப் பிதா, இவர்தான் ஆசார்யன் என்று , குருவை அடையாளம்
காண்பிக்கிறார் .ஆசார்யன், இவர்தான் தெய்வம்–பகவான் என்று நமக்குச்
சொல்லி, பகவானைப் பற்றி, பல புராணங்கள், இதி ஹாஸங்கள் இவைகளைச் சொல்லி,
ரஹஸ்ய க்ரந்தங்களை உபதேசித்து, பகவானின் திருவடியை ,இந்த ஜீவன்
அடைவதற்கு, பரிச்ரமப்படுகிறார்/ படாதபாடு படுகிறார் ஆதலால், மாதா, பிதா,
குரு , தெய்வம் இந்த நால்வரில் —நால்வரும் முக்யமாக இருந்தாலும்,
ஆசார்யனின் பங்கு மிக முக்கிமானது.
———————————————————————————————————————————————————–
இனி,” ராமாநுஜ தயா பாத்ர……தனியன்—அர்த்த விசேஷம்
———————————————————————————-
ஸ்வாமியின் ,ப்ரபந்தார்த்த நிர்வாகத்தில் ஈடுபட்டு யாதவாத்ரியில்
—மேல்கோட்டையில், இத் தனியன் ஸமர்ப்பிக்கப்பட்டது என்று குரு
பரம்பரையில் கூறப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமியின் எழுபதாவது திரு நக்ஷத்ரத்தில் இது
ஸமர்ப்பிக்கப்பட்டது என்று தேறுகிறது
————————————————————–
ஸ்ரீ பேரருளாள ஜீயர்—-
ஸ்வாமி தேசிகனின் அத்யந்த சிஷ்யர். அவரும், ஸ்வாமி தேசிகனும்
ஸ்ரீரங்கத்தில் ஒருசமயம் எழுந்தருளி இருக்கும்போது , ஒரு வித்வான் ,
ஸ்வாமி தேசிகனிடம் வந்து , வேதாந்தவாக்யார்த்தம் சொல்ல வந்திருப்பதாகச்
சொன்னார். ஸ்வாமி தேசிகன் , பேரருளாள ஜீயரை அழைத்து, இந்த வித்வானிடம்,
“சததூஷணி” முதலிய க்ரந்தங்களைக் கொண்டு, வாதம் புரியுமாறு நியமித்தார்.
பேரருளாள ஜீயர், அப்படியே மூன்று நாட்கள் வாதம் பண்ணி , அந்த வித்வானை
வாதத்தில் ஜெயித்து, ஸ்வாமி தேசிகனிடம் வந்து, விவரங்களை
விண்ணப்பித்தார். ஸ்வாமி தேசிகன் மிகவும் சந்தோஷித்து, ” இன்றுமுதல்
நீர்,” ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் ” என்று அழைக்கப்படுவீர் என்று சொல்லி, கௌரவித்தார்.
கொஞ்ச காலம் கழித்து, ஸ்வாமி தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர் , ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர்
மற்றும் சிஷ்யர்கள் சூழ திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார் .
அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் “பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார்.
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர் , ஸ்வாமி தேசிகனின் அனுமதியைப் பெற்று,
காலக்ஷேப கோஷ்டியில் அமர்ந்து
ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே ||
(ஸ்ரீ நயினாசார்யருக்கான தனியன் )
பிறகு, ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும், ஸ்ரீ அப்புள்ளாரின்
பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான
ஸ்வாமி தேசிகன் விஷயமாக,
ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு குரு பரம்பரையைச் சொல்லி, பகவத் விஷய
காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.
இந்த விஷயம், ஸ்வாமி தேசிகனுக்குத் தெரிந்தது.
ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய :——-” என்கிற
தனியன், நம்முடைய பெருமையைச் சொல்கிறது.
” ராமாநுஜ தயாபாத்ரம் —-” என்கிற இந்தத் தனியன், நமக்கு
ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது …..என்று
சந்தோஷப்பட்டு,
” ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: …..” என்கிற தனியன் ஸ்ரீ
பாஷ்ய காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும் படியும்
” ராமாநுஜ தயா பாத்ரம் …” என்கிற இந்தத் தனியன் “பகவத் விஷய ”
காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும்
நியமித்தார்.
இப்படியாக, “ராமாநுஜ தயா பாத்ரம் ……” தனியன் அவதாரம் எடுத்ததாக
, பூர்வாசார்யர்களும், பெரியோர்களும் சொல்வர் .
இப்போது, ” ராமாநுஜ தயா பாத்ரத்” தனியனின் அர்த்தம் (வ்யாக்யானம் )
ராமாநுஜ தயா பாத்ரம்
—————
ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்—-ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம்
என்று பெருமையுடன் சொல்லப்படும்,ஸித்தாந்தத்துக்கு அதிபதி,
ஸாக்ஷாத் பரம ஆசார்யன் –ஸ்ரீ உடையவர்
—இவருடைய தயை –கருணைக்கு–
பாத்ரம் —பாத்ரமானவர் –இலக்கானவர்
ஸ்ரீராமாநுஜரின் கருணைக்குப் பாத்ரமானவர்–இந்த ஸ்ரீ ராமானுஜர், நமது
விசிஷ்டாத்வைத தர்ஸன ஸ்தாபகர்.
இவருடைய தயைக்கு இலக்கானவர்
இன்னொரு அர்த்தம்——-
ராமாநுஜ தயா பாத்ரம்–2
————————————–
ஸ்வாமி தேசிகன் ,ஸ்ரீ ராமாநுஜரின் கருணைக்குப் பாத்ரமானவர்
—என்று பார்த்தோம்
இன்னொன்று….இராமாநுஜர் என்பது, ஸ்வாமி தேசிகனின்
ஆசார்யன் ஸ்ரீ அப்புள்ளாரைக் குறிக்கிறது என்பர் .
இவருக்கு “ராமாநுஜப்பிள்ளான்” என்றும் திருநாமம் உண்டு.
——கிடாம்பி ராமாநுஜாசார்யர் என்றும் திருநாமம்.
இவருடைய தனியன் :–
நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே |
ஆத்ரேய பத்மநாபார்ய ஸூதாய குணசாலிநே ||
இவருடைய சகோதரிதான், தோதாரம்மா —-ஸ்வாமி தேசிகனின் தாயார்.
தனது மாமாவிடம், மருமானான ஸ்வாமி தேசிகன்,
சப்தம் ,தர்க்கம், மீமாம்ஸம் முதலிய ஸாமாந்ய சாஸ்த்ரங்களைக் க்ரஹித்தார் .
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம், முதலான வேதாந்த க்ரந்தங்களையும்
விசேஷ அர்த்தங்களுடன் உபதேசிக்கக் கேட்டார்.
அப்புள்ளார், வைநதேய மந்த்ரத்தை உபதேசித்தார்.
தனது திருமேனியில் நோவு சாத்திக்கொண்டிருந்தபோது, தனக்கு
ஸ்ரீ நடாதூர் அம்மாள் மூலமாகக் கிடைத்த , தான் ஆராதனம் செய்துவந்த
ஸ்ரீ உடையவர் பாதுகைகளையும் கொடுத்தார்.
ஸ்வாமி தேசிகன் அவைகளைப் பக்தியுடன் பெற்று,
தன்னுடைய திருவாராதனத்தில், சேர்த்துக் கொண்டார்.
ஸ்வாமி தேசிகன் மங்களத்தில் ,…..
ராமாநுஜார்யாத் ஆத்ரேயாத் மாதுலாத் ஸகலா: கலா : |
அவாப விம்ஸத்யப்தே ய :தஸ்மை ப்ராக்ஞாய மங்களம் ||
என்று மங்களா சாஸனம்—- ஸ்தோத்ரம் சொல்கிறோம்.
ராமாநுஜ தயா பாத்ர வ்யாக்யானத்தில்,
” ராமாநுஜ சப்தத்தாலே, ராமாநுஜ அப்புள்ளார் முகமாய், இதி
எதிராஜ மாகானஸ எதிவரனார் மடப்பள்ளி வந்த மணம் என்னும் இத்யாதியாலும்,
உடையவருடைய கடாக்ஷபரீவாஹமாக வந்து ஸர்வார்த்தங்களும் நிரம்பின “
என்று உள்ளது .
இதனாலும், அப்புள்ளார் என்கிற ஆசார்யரின் தயைக்குப் பாத்ரமானவர்
என்றும் அர்த்தம் சொல்வர்.
எப்படி, தயைக்குப் பாத்ரமாகிறார் என்றால்,
அவருடைய திருவுள்ளத்தை நிறைவேற்றுவது —அதன்மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
2. அவர் விட்டுச் சென்ற ,ஸம்ப்ரதாய விஷயங்களை நிறைவேற்றுவது —அதன் மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
இந்த இரண்டுமே, ஸ்வாமி தேசிகனிடம் இருந்தன.
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் —ஸ்ரீ பாஷ்யகாரர் உகந்த கைங்கர்யம்.
இன்னொன்று—திவ்ய ப்ரபந்த ஸம்ரக்ஷணம்—ஸ்ரீ உடையவர் உகந்த இந்தக்
கைங்கர்யங்களை தாமும் செய்து, தானே ப்ரபந்தங்களை அருளி,
திவ்ய ப்ரபந்த ரக்ஷணம் செய்தார்.
3. “ராமாநுஜ ” என்பது, இளைய பெருமாளைக் குறிக்கும்.
“லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்த : ” என்கிறார், வால்மீகி.
பெருமாளாகிய ஸ்ரீ ராமனையே காப்பாற்றியவர் லக்ஷ்மணன்
அத்தகைய இளைய பெருமாளின் அருள் கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.
4. ராம அநுஜ தயா பாத்ரம் —-
பரதனுக்கும், ராமாநுஜன் என்கிற திருநாமம் உண்டு.
“ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜஞ்ச ……..”இந்த ராமாநுஜனான
பரதன், பதினான்கு ஆண்டுகள், ராமனின் பாதுகைகளை ஆராதித்தவர்.
ஸ்வாமி தேசிகன், பாதுகைகளுக்காகவே ,“சஹஸ்ரம் “—பாதுகா சஹஸ்ரம் –பாடியவர்.
ஆக , ராம அநுஜ தயா பாத்ரம்.
5. சத்ருக்னனும் ராமனுக்கு, அநுஜன். பரதனை , ராமனுக்கு அனுஜன் என்று பார்த்தோம்.
அந்தப் பரதனுக்கும் அநுஜன் சத்ருக்னன்.இவன் பரம பாகவதன். நித்ய சத்ருக்களை வென்றவன்
“ராமாநுஜ —சத்ருக்ன தயா பாத்ரம் “என்று சொல்வார்.
6. “ராமாநுஜ ” என்பது ஸ்ரீ க்ருஷ்ணனைக் குறிக்கும்.
ராமாவதாரத்துக்குப் பிந்தைய அவதாரம்.—-க்ருஷ்ணாவதாரம் .
ஆக , க்ருஷ்ணனும் —ராமாநுஜன்
ராமாநுஜ தயா பாத்ரம்—-க்ருஷ்ணனுடைய கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.
யாதவாப்யுதயம் ஒன்று போதும்; கோபால விம்சதி ஒன்று போதும்
ஸ்வாமி தேசிகன், திருவேங்கட முடையானையும், தேவப் பெருமாளையும்
அரங்கனையும்—-கண்ணனாகவே கண்டவர்.
வைஷ்ணவ சித்தாந்த ஸ்தாபகரான , ஸ்ரீ ராமாநுஜரின் திருநாமத்துடன் தொடங்கும் தனியன்,
ஸ்வாமி தேசிகனுக்கு மட்டிலுமே உண்டு என்பது ஒரு ஏற்றம்.
ராமாநுஜ சித்தாந்தத்தை த் தன்னுடைய க்ரந்தங்களால் ஆழமாக வேரூன்றச் செய்து,
ஆல் போல் தழைக்கச் செய்தவர் ஸ்வாமி தேசிகன்.
ராமாநுஜ தர்சனத்துக்கு –ரக்ஷை கட்டியவர்—–. ஐந்து ரக்ஷைகள் —ரக்ஷை—காப்பு.
ஸ்ரீ ஆளவந்தாரின் “கீதார்த்த ஸங்க்ரஹம்”என்கிற க்ரந்தத்துக்கு ,ஸ்ரீ உடையவர், “கீதா பாஷ்யம்” செய்தார். இரண்டையும் சேர்த்து, ” கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ” செய்தார்.
2. “கத்யத்ரயத்து”க்கு ரஹஸ்ய ரக்ஷை செய்தார்.
3. சரணாகதி சித்தாந்தத்தை ஸ்தாபிக்க, “நிக்ஷேப ரக்ஷை” செய்தார்.
4. ஸ்ரீ பாஞ்சராத்ரம் பரஸ்பர முரண்பாடுகளாலே மறைந்துவிடுமோ என்கிற நிலையில் இருந்ததை மாற்றி,
“ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷை ” செய்தார்.
5. அநுஷ்டானங்கள், நலிவு அடையாதபடி, பொலிவு அடைய, “ஸச்சரித்த ரக்ஷை ” செய்தார்.
இப்படி ஐந்து ரக்ஷைகளை, ராமாநுஜ சித்தாந்தத்துக்குக் கட்டி, ராமாநுஜ சித்தாந்தத்தை ,நிலை நிறுத்தியவர் .
ஆதலால், ராமாநுஜ தயாபாத்ரம்.
ஸ்ரீ இராமாநுஜர் பெருமையை, உலகுக்குக் பறை சாற்றியவர், ஸ்வாமி தேசிகனைப்போல வேறு ஆசார்யன் இல்லை.
“யதிராஜ ஸப்ததி ” ஒன்றே போதும்,இதைச் சொல்ல!
ராமாநுஜர் பெருமையை இப்படி உலகறியச் செய்ததால் “ராமாநுஜ தயா பாத்ரம்”
இராமாநுச நூற்றந்தாதியை, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தோடு சேர்த்து, அநுசந்தானம் செய்வித்து,
இன்றளவும் வழங்கும்படியாகச் செய்தவர், ஸ்வாமி தேசிகன், ஆதலால், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.
இன்னொன்று……
ரமந்த இதி ராமா :தேஷாம் —–அதாவது, ஆழ்வார்களின் அநுஜ:—ராமாநுஜர் —-உடையவர்.
ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைக் காத்து, வளர்த்து, உடையவருக்கு உகப்பாக இருப்பதால்,
ராமாநுஜ தயா பாத்ரம்.
ஸ்வாமி தேசிகன் ,” ப்ரபந்த ஸாரம் ” என்று அருளி இருக்கிறார். இதற்குத் தனியனே,
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
இந்தப் ப்ரபந்த ஸாரத்தில், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்,
நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், கோதைப் பிராட்டியான ஸ்ரீ ஆண்டாள்,
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ….என்கிற 12 ஆழ்வார்களையும்
சொல்லி, அவர்கள் அவதரித்த நாள், ஊர், திருநாமங்கள், திருமொழிகள், அவற்றுள் பாட்டின்
வகையான இலக்கம், மற்றுமெல்லாம் சொல்லி, 14 வது பாசுரமாக, ஸ்ரீ உடையவர்—ராமாநுஜரைப் பற்றி,
தேசம் எலாம் உகந்திடவே பெரும்பூதூரில் , சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி
காசினிமேல் வாதியரை வென்று, அரங்கர் , கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா, முன்
பூசுரர்கோன் திருவரங்கத் தமுதனார் ,உன் , பொன் அடி மேல் அந்தாதி ஆகப் போற்றிப்
பேசிய நல் கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே .
——————-என்கிறார்.
தேசம் எல்லாம் போற்றும் ஸ்ரீ பெரும்பூதூரில், சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்ரத்தில்,
அவதரித்து, இவ்வுலகில் குதர்க்க வாதம் செய்பவர்களை வென்று,
அரங்கனே—-பெரிய பெருமாளே– கதி என்று வாழ்ந்து, அருளும்—அருள்புரிந்து கொண்டிருக்கிற—
இப்போதும் , அருள் புரிந்து கொண்டிருக்கிற —யதிராஜா—–யதீச்வரர்களுக்கு
எல்லாம் ராஜனே—- என்கிறார்.
இப்படி, எதிராசரான ஸ்ரீ ராமாநுஜரையும் , ஆழ்வார்களோடு, ப்ரபந்த கோஷ்டியில் சேர்த்தவர் ,
ஸ்வாமி தேசிகன்—-ஆதலாலும், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.
எப்படி என்கிறீர்களா ? இதோ, ஆழ்வார்களின் கோஷ்டிப் பாசுரம் …..
வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார் , மழிசையர் கோன் மகிழ் மாறன் மதுர கவிகள்
பொய்யில் புகழ் கோழியர் கோன் விட்டு சித்தன் , பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
ஐயன் அருள் கலியன் எதிராசர் தம்மோடு, ஆறிருவர் ஓரொருவர் அவர்தாம் செய்த
துய்ய தமிழ் இருபத்து நான்கிற் பாட்டின், தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே .
ஆறிருவர் —பன்னிரண்டு ஆழ்வார்கள்…..அவர்களோடு, ஓரொருவர் –ஒரே ஒருவர் —எதிராசர் தம்மோடு—-
ஆறு இருவர்களும், ஒரே ஒருவரும் சேர்கிறார்கள். அதன் பலன், பாட்டின் தொகை, நாலாயிரமும்—
“உம் ” என்பது முக்கியம்.
அடியோங்கள் வாழ்வே—–பன்னிரு ஆழ்வார்களுக்கும் எதிராசருக்கும் அடியவர்களான ,எங்களுடைய வாழ்வே —
உய்வதே—-உய்து அவனடி அடைவதே வாழ்வு—-வாழ்வு.— வாழ்வதன் பயன் என்கிறார். ஸ்வாமி தேசிகன்
இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.
இன்னொன்று—–“ராமா” —என்றால், கோதைப் பிராட்டியைக் குறிக்கும்
( அடியேன் , திருப்பாவை உபன்யாசத்தில் சொல்லி இருக்கிறேன் )
“அநுஜ” என்றால், கோதைக்குப் பின்னால் தோன்றிய வள்ளல்—உடையவர்.
அந்த உடையவரின் கருணைக்குப் பாத்ரமானவர் ,ஸ்வாமி தேசிகன்—ராமாநுஜ தயா பாத்ரம்.
ஸ்வாமி தேசிகனின் திருக் குமாரர் —குமார வரதாசார்யர் —-தன்னுடைய பிள்ளை அந்தாதியில்,
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம்என் சென்னியதே .
இராமாநுசனின் வண்மையைப் போற்றும், சீர்மையன்—
என்று ஸ்ரீ நயினாசார்யர் சொல்கிறார்.
எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—
என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–
என்று, ஸ்ரீ நயினாசார்யர் ,பாசுரமிடுகிறார் .
இராமாநுச முனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால்,
ராமாநுஜ தயா பாத்ரம்.
இனி….. ஜ்ஞான வைராக்ய பூஷணம்——–
பூஷணம், என்றால் ஆபரணம் . ஸ்வாமி தேசிகனுக்கு, எது ஆபரணம் என்றால் ,
ஜ்நானமும் , வைராக்யமும்
ஜ்ஞானப் பிரான்—-ஸ்ரீ வராஹப் பெருமான்
ஜ்ஞாநானந்த மாயன்—-ஸ்ரீ ஹயக்ரீவன்
1. ஸ்ரீ வராஹப் பெருமான் ,பூமிப் பிராட்டிக்கு, வராஹ சரம ஸ்லோகம் சொல்ல,
பூமிப்பிராட்டி, கோதையாக அவதரித்துவராஹ, சரம ஸ்லோகத்தை ,
” திருப்பாவை ” பாசுரங்களாக , நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள், உஜ்ஜீவிக்க
அநுக்ரஹித்தாள் .
ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களில் உருகி, “திருப்பாவை ஜீயரா”க ஆனார்.
இவை எல்லாவற்றையும் சேர்த்து, சிந்தித்து , ஸ்வாமி தேசிகன்,
“கோதா ஸ்துதி ” அருளினார்.
இந்த ஸ்துதி மூலமாக, ஞானப் பிரானையே வயப்படுத்தினார்.
ஸ்ரீ வராஹ அவதாரம், பகவானின் அவதாரங்களில்
முக்யமாகச் சொல்லப்படும் பத்து அவதாரங்களில் மூன்றாவது.
ஸ்வாமி தேசிகன் , தான் அருளிய ” தசாவதார ஸ்தோத்” ரத்தில்
கோபாயே தநிஸம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத –
ப்ரஹ்மாண்ட : ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோணா ரவைர் குர்குரை 😐
யத்தம் ஷ்ட்ராங்குர கோடி காட கடநா நிஷ்கம்ப நித்ய ஸ்திதி :
ப்ரஹ்ம ஸ்தம்ப ஸௌதஸௌ பகவதீ முஸ்தேவ விஸ் வர் பரா ||
அதாவது…..பகவான், மஹா வராஹமாக அவதரித்து, கடல்களின் ஓசையைவிட
பெரிய உறுமல்களால், உலகங்களை உய்வித்து தம்முடைய இரு அழகிய பற்களினால்,
மூழ்கிய பூமியைத் தூக்கி நிலை நிறுத்தினார்.
இது, பற்களிடையே சிக்கிய கோரைக்கிழங்கு போலக் காட்சி அளித்தது.
மேலும், ப்ரஹ் மாதி, ஸ்தாவர ,பிராணிகள், மற்ற எல்லாவற்றையும்
– ஈன்றது. அத்தகைய வராஹப் பெருமான் லோகத்தை ரட்சிக்க வேண்டும் …….
.( இந்த ச்லோகம் –நவ க்ரஹங்களில்ராகு , க்ரஹப் ப்ரீதிக்கு ஏற்றது என்றும் சொல்வர் )
2. வைனதேய மந்த்ரத்தைப் பலமுறை ஆவ்ருத்தி செய்து, ஸ்ரீ கருடன் ப்ரஸன்னமாகி,
ஸ்ரீ ஹயக்ரீவரை விக்ரஹ ரூபமாகக் கொடுத்து ஆராதிக்கச் சொல்ல,
அந்த ஞானானந்த மயனுக்கு
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
என்று தொடங்கி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அருளினார்.
ஸ்ரீ ஹயக்ரீவனின் பரிபூர்ண கடாக்ஷத்தால், எல்லா வித்யைகளும் ,
போட்டி போட்டுக் கொண்டு, ஸ்வாமிதேசிகனிடம்வந்து ப்ரார்த்தித்தபோது,
ஸ்வாமி தேசிகன், ஞானமும், வைராக்யமும், சம்பந்தப்பட்ட வித்யைகளை மட்டில்
பிரார்த்தித்து, மீதி வித்யைகளை ,எப்போதெல்லாம் ப்ரார்த்தனை செய்யப்படுகிறதோ,
அப்போது வந்து அநுக்ரஹிக்க
வேண்டினார்.
ஜ்ஞான பூஷணம் —- இதற்கு அவர் அருளிய க்ரந்தங்கள் ஒன்றா இரண்டா ? பலப் பல !
32 ரஹஸ்ய க்ரந்தங்கள்—-யாவும் ஜ்ஞானத்தின் சிகரங்கள்–
32 ஸ்தோத்ரங்கள் , 24 ப்ரபந்தங்கள் , 24 அநுஷ்டான சாஸ்திரங்கள் , 8 காவ்யங்கள் ,
1 பகவத் விஷயம் —ஆக மொத்தம் 121 என்று,வைகுண்ட வாஸி மதுராந்தகம்
திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ வீரராகாவாசார்ய மஹா தேசிகன் சொல்லியாகும்.
( இவைகளின் விவரங்களை இங்கு உரைப்பின் , பெருகும் )
இவைகள் மாத்ரமல்ல, ஸ்வாமி தேசிகன் காலக்ஷேபங்கள் ஸாதித்த பாங்கு,
சிஷ்யர்களுக்கு ஏற்பட்டசாஸ்த்ர சந்தேக நிவ்ருத்தி —–இப்படிப் பல ,
ஸ்வாமி தேசிகன் ஜ்ஞான பூஷணம் என்பதைச் சொல்கிறது.
இனி, வைராக்ய பூஷணம் —-
ஸ்வாமி தேசிகன் க்ரஹஸ்தாஸ்ரமத்தில், தினந்தோறும் ,
உஞ்சவ்ருத்தி செய்து, உஞ்சவ்ருத்தியில் கிடைக்கும்
அமுந்த்ரியை (அரிசி) பத்நியிடம் கொடுத்து, அந்த அரிசியைத் தளிகை செய்து,
திருவாராதனத்தில் தளிகைஅமுது பண்ணுவிப்பது வழக்கம்.
( உஞ்சவ்ருத்தில் பல நியமங்கள் உண்டு —இங்கு அவற்றை விரிக்கின் வளரும்–
இப்படி, ஒரு சமயம், ஸ்வாமி தேசிகன் உஞ்சவ்ருத்தி எடுக்கும்போது,
ஒரு தனிகரின் (பணக்காரர் ) பத்னி, ஸ்வாமி தேசிகனின் ஆசார்ய விலக்ஷண ,
பரம காருண்ய , பரம தேஜஸ்ஸால் ஈர்க்கப்பட்டு, அன்றைய தினத்தில்,
அரிசியுடன் கூட சில தங்கக் காசுகளையும் சேர்த்து ,
உஞ்சவ்ருத்தி பாத்ரத்தில் சேர்த்து விட்டாள் . ஸ்வாமி தேசிகன் இதைக் கவனிக்கவில்லை.
க்ருஹத்துக்கு வந்தார்——அரிசியை ஸஹதர்மிணியிடம் கொடுத்துவிட்டு,
இவருடைய நித்யஅநுஷ்டானத்தைத்தொடங்கி விட்டார்.
ஸ்வாமியின் பத்னி, அரிசியை முறத்தில் சேர்த்து, அதை சோதிப்பது வழக்கம்.
அதாவது—சுத்தம் செய்வது—ஏதாவது கல் மண் போன்றவை இருப்பின் அதை நீக்குவது—
அப்படி சோதிக்கும்போது, இந்தப் பொற்காசுகளைப் பார்த்தாள் .
இவை என்னவென்று தெரியாமல், ஸ்வாமி தேசிகனிடம்வந்து,
“ஸ்வாமிஇன்றைய உஞ்சவ்ருத்தியில் .., அரிசியுடன்கூட,
ஏதோ பளபளவென்று மின்னுகிறதே …இது என்ன….? ” என்று கேட்டாள்
ஸ்வாமி தேசிகன் முறத்தைப் பார்த்தார் ;அரிசியுடன்கூடப் பொற்காசுகளையும் பார்த்தார்;
“இதுபளபளவென்று இருப்பதாலேயே இது ஒரு புழு…விஷப் புழு….
.தூர வீசி எறிந்துவிடு…..” என்றார். பத்னியும் அப்படியே செய்தாள் .
வைராக்ய பூஷணத்துக்கு இது ஒரு உதாரணம்.
இன்னொரு உதாரணம்—
“வித்யாரண்யர் ” என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அக்காலத்திய விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.
இவரும், ஸ்வாமி தேசிகனும் சஹாக்கள் ( நண்பர்கள்)
வித்யைகளைப் பயிலும்போதுஆசார்யனிடம் இருவரும், , சிஷ்யர்கள்
அதாவது சஹ மாணவர்கள். வித்யைகளை எல்லாம் கற்றுத் தேறி, இருவரும் பிரிந்தார்கள்.
வித்யாரண்யர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரச குமாரியை ” ப்ரஹ்ம ராக்ஷஸ் ”
பீடித்து இருந்தபோது, அரசனின் வேண்டுகோளின்படி, ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை விரட்டி,
ராஜகுமாரியைக் காப்பாற்றினார். அது முதல், ராஜ சபையில்
அத்யக்ஷர் . ஆஸ்தான வித்வான் ஆனார்.
செல்வச் செழிப்பு; அதிகாரம்; ஏகப்பட்ட மரியாதைகள் —-இப்படி வாழ்ந்து வந்தார்.
ஸ்வாமி தேசிகன், வைராக்ய பூஷணமாக இருப்பதும், ராமாநுஜ தர்ஸனத்தைப்
பரப்பி வருவதும், தேசமெங்கும் பரவியது. வித்யாரண்யரும் இதைக் கேள்விப்பட்டார்
. தன்னுடைய சஹா ,தன்னை விடவும் ஞானத்தில் முதிர்ந்தவர், ஆசார்ய விலக்ஷணர்
இப்படி, உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு, வறுமையில் இருக்கும்போது,
தான் மாத்ரம் செல்வத்தில் புரளுவது சரியல்ல என்று எண்ணினார்.
அவரையும் விஜயநகர சாம்ராஜ்ய வித்வானாக ஆக்கினால்,
அவரது வறுமை அகன்று விடும் என்று தீர்மானித்தார்.
உடனே ஒரு தூதுவரைக் கூப்பிட்டார், ஒரு பத்ரிகையை . எழுதி,
தூதரிடம் கொடுத்து ,ஸ்வாமி தேசிகனிடம் அனுப்பினார்.
அதிகப் ப்ரஸித்தி பெற்ற தூப்புல் குலத் திலகமே —–
அடியேன் மூலமாக, தேவரீரின் புகழையும், கீர்த்தியையும் ,
விஜயநகர மஹாராஜா கேள்விப்பட்டு,
சந்தோஷப்பட்டார்; அதுமுதல், தேவரீரை ஸேவிக்க ஆசைப்பட்டு,
தேவரீரையே த்யாநித்துக்கொண்டு இருக்கிறார்;
தேவரீரைத் தன்னுடைய தனத்தால் ஆதரித்து,
தேவரீருடைய முகாரவிந்தத்திலிருந்து வரும் வாக் அம்ருதத்தில் மூழ்கித்
திளைக்க விரும்புகிறார்; தேவரீர், சிஷ்யவர்க்கங்களுடன்
இங்கு விஜயநகரத்துக்கு—ஹம்பி நகருக்கு, எழுந்தருளி,
தேவரீரின் ஆதரவு பெற்ற அடியேனையும், சந்தோஷிக்கச் செய்யவேண்டும்
என்று எழுதினார்.
இந்தப் பத்ரிகையைப் படித்த, ஸ்வாமி தேசிகன்,
க்ஷோணீ கோண சதாம்ச பாலந கலா துர்வார கர்வாநல
க்ஷூப்யத் க்ஷூத்ர நரேந்த்ர சாடு சநா தந்யாந்ந மந்யா மஹே |
தேவம் ஸேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோஸௌ தயாஜ : புரா
தாநா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தே சதாம் ||
என்று பதில் ஸ்லோகம் எழுதி அனுப்பினார்
அதாவது—-இந்தப் பூமண்டலம் மிகப் பெரியது; இதில் ஏதோ ஒரு மூலையில்,
“ஏக தேசம்” என்று சொல்லிஅரசர்கள், ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை, அடியேன் துதிக்க விரும்பவில்லை. அரசர்களைத்
துதித்து, அதனால் வரும் தனமும் ஒரு பொருட்டாக அடியேனின் மனத்தில் படவில்லை.
பகவானைத் த்யானம் செய்கிறோம். அவரே எல்லாப் பலன்களையும்,
கொடுக்க வல்லமை படைத்தவர்குசேலருக்குக் குபேர. சம்பத்தைக் கண்ணன் கொடுக்க,
நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா !
அவன் பகவான்—-கொள்ளக் குறைவிலன்; வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் மணிவண்ணன்
ஸ்ரீ நம்மாழ்வார் அருள்கிறார் —
சேரும் கொடை புகழ் எல்லையிலானை ,ஓராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால், மற்றும் யான்கிலேன்
வித்யாரண்யருக்கு இந்தப் பதில் போய்ச் சேர்ந்தது.
அவர் வருத்தப்பட்டார்.சிலகாலம் கழிந்தது.
வித்யாரண்யரால் வெறுமனே இருக்க முடியவில்லை.
இன்னொரு பத்ரிகை எழுதி, தூதுவன் மூலமாக அனுப்பினார்.
அதையும் படித்தார், ஸ்வாமி தேசிகன்.
உடனே இந்தப் பத்ரிகைக்கும்பதில் எழுதினார்.
அதுதான் “வைராக்ய பஞ்சகம் ”
ஸிலம் கிமநலம் பவே தநல மௌதரம் பாதிதும்
பய : ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம் |
அயத்ந மலமல்லகம் பதி படச்சரம் கச்சரம்
பஜந்தி விபுதா : முத ஹ்ய ஹஹ குக்ஷித : குக்ஷித : ||
2. ஜ்வலது ஜலதி க்ரோட கிரீடத் க்ருபீட பவ ப்ரபா
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல : |
த்ருணமபி வயம்ஸாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா
பரிமள முசாவாசா யாசா மஹே ந மஹீச் வராந் ||
3. துரீச்வா த்வார பஹிர் விதர்த்திகா துராஸி காயை ரசிதோய மஞ்ஜலி |
யதஞ்ஜநாப ம் நிரபாய மஸ்தி மே தனஞ்ஜய ஸ்யந்தந பூஷணம் தநம் ||
4. சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத்
அபிந்தந தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் |
தனஞ்ஜய விவர்தநம் தந முதூட கோவர்த்தநம்
ஸூ ஸா தந ம பாதநம் ஸூமநஸாம் ஸமாராதநம் ||
5. நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் நமயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்திமே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதா மஹம் தநம் ||
ஒருவனுக்கு, உயிர் வாழ்வதற்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர்,
மானத்தை மறைக்க வஸ்த்ரம் போதும்.
இதற்காக, ராஜாவை அணுகி, இருக்கவேண்டும் என்பதில்லை.
வயல்களில் சிந்தி இருக்கும் நெல்மணிகள்—-உணவுக்குப் போதுமானது.
ஆறு,குளம்,குட்டை இவைகளில் உள்ள தண்ணீர் தாகத்துக்குப் போதுமானது.
வீதிகளில் சிதறிப் போடப்பட்டிருக்கும் கந்தைத் துணிகள் ,
மானத்தை மறைக்கப் போதுமானது .
இப்படி, இவை எல்லாம் சுலபமாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்க,
அரசனை அண்டி , அவனை ஸ்தோத்ரம் செய்து, / துதிகள் பாடி அவனிடம்
யாசிக்கிறார்களே… பரிதாபம் !
2.ஸமுத்ரத்தில் , “வடவாக்னி ” என்கிற நெருப்பைப்போல ,
வயிற்றில் “ஜாடராக்னி ” வ்ருத்தியாகி பசி, தாகம் என்று கஷ்டப்பட்டாலும்,
சாயங்கால வேளையில், பூத்துத் தானாக மலர்கிறதே —
வாசனையுள்ள மல்லிகைப்பூ அந்த வாசனையை —– உடைய நமது வாக்கினால்,
ஒருபோதும் அரசனை யாசிக்கமாட்டோம் .
3, அர்ஜுனனின் ரதத்தை அலங்கரித்த மைவண்ணன் கண்ணனின் தனம்
நமக்கு இருக்கிறது. இந்தத் தனம் குறைவே இல்லாதது.
ஆதலால், துஷ்ட அரசர்களின் வாசலில் போய் தனத்துக்காக,
துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்–
ஹரியைத் துதித்து, உடனே கிடைக்கும் தனம் உபயோகமானது.
சனகாதி முனிவர்களாலும், த்யானம் செய்ய இயலாத பகவானின் தனம்
எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று சிலருக்குத் தோன்றும். எண்ணலாம் ;
அதற்குப் பதில் சொல்கிறேன், கேளும்—
4. ராஜாக்களை அண்டிப் பெறுகிற தனம், நிரந்தரமானதல்ல;
தற்காலிகமாகப் பசி தாகத்தைப் போக்கும்;
நம்முடைய மரண பர்யந்தம் அவர்கள் கொடுக்கும் ஸ்வல்ப த்ரவ்யத்துக்காக
அவர்கள் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கஷ்டத்தை,
அந்த அல்ப தனம் ஏற்படுத்தும். ஆதலால், அந்தத் தனம் உபயோகமில்லாதது;
நம்மால் ஆச்ரயிக்கப்பட்ட பகவான் என்கிற தனம்,
அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, மேன்மையை உண்டாக்கியது.
ஜாடராக்னியை மங்கச் செய்தது; தனவானின் தனம் அவனுக்குப் போஷகமாக இருக்கும்;
ஆனால், கோவர்த்தன கிரியைத் தூக்கி, கோக்களையும், கோபாலகர் களையும் காப்பாற்றியது,
பகவானாகிய தனம்; மேலும், தன்னை யார் ஆச்ரயிக்கிறார்களோ —
தேவர்கள் வித்வான்கள் என்று இவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தக் கூடியது.
ஆதலால், பகவான்தான் உயர்ந்த தனம்;
5. சுயார்ஜிதமோ, பிதுரார்ஜிதமோ அதன்மூலம் தனம் இருந்தால்,
அரசர்களை இவ்விதம் அலக்ஷியமாகப் பேசலாம்;
ஒன்றுமில்லாத உஞ்சிவ்ருத்தி செய்பவன், இப்படிப் பேசுதல் கூடாது என்று, நினைக்க வேண்டாம்;
ஹஸ்தி கிரியில், எழுந்தருளி இருக்கும் தேவப் பெருமாள் என்கிற தனம்
என்னிடம் இருக்கிறது; நாம் சம்பாதித்ததோ தகப்பனார் சம்பாதித்ததோ ஒன்றுமில்லை;
ஆனால், நம் பிதாமஹர் (ப்ரஹ் மா) சம்பாதித்த தனம் ஒன்று இருக்கிறது;
அத்திகிரியில் இருக்கிறது; அதை ஒருவராலும் அபகரிக்க முடியாது;
ப்ரஹ்மாவின் யாகத்தில் அவதரித்த தேவாதி ராஜனே, தேவப் பெருமாளே, நமக்குப் பெரிய தனம்
ஸ்வாமி தேசிகனின் வைராக்யத்துக்கு இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம்.
விரிவுக்கு அஞ்சி , இதை இத்துடன் நிறுத்தி, அடுத்ததான
” ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ” என்பதைப் பார்க்கலாம்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் —–
ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
இதற்கு விளக்கம் , அடியேன் “கேட்பதும், சொல்வதும் ” என்கிற தலைப்பில்
ஸ்ரீ காஞ்சி பேரரருளாளன் பத்ரிகையில்
173வதாக எழுதி இருக்கிறேன் ( மொத்தம் 1008 எழுதி இருக்கிறேன்—அடியேன் எழுதியதை
,அடியேனே சொல்லிக்கொள்ள வேண்டி இருக்கிறது—படிப்பவர்கள் க்ஷமிப்பார்களாக )
அதில், ஆசார்யன் செய்ய வேண்டுவதாகச் சொல்லப்படுவது நான்கு—
-1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—-இப்படிப்பட்ட ஆசார்யன்.
“சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார்.
இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.
அதனால்தான், உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த ஆசார்யர்களை,
” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” ,
” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .
ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப்போல,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
வ்யாக்யான கர்த்தாக்கள்,
“நித்ய யோகேதி சாயினே……” என்கிறபடியே
, நித்ய ஸம்பந்திலேயாய் , வேங்கடசா வதாரோயம்…… என்கிற க்ரமத்திலே ,
பூர்வ ஸ்வபாவத்தில் அலர்மேல் மங்கையாய் நின்று , இவ்வவதராத்தில்,
“மனுஷயத் வேச மானுஷீ ” என்கிறபடியே குத்ருஷ்டி நிரசநோபயுக்தையான
ஆத்ம வித்யா ரூபையாயும் ,பக்தி பரம்பரா ரூபையாயும், பிராட்டி நிற்கிறபடியே
சொல்லிற்றாயிற்று ”
வேதாந்தார்த்தப் ப்ரதாயினே ஸூக்தி பரம்பரா ரூபையும் என்று, இவர்,
தமக்கு, திருவேங்கட முடையான் வேதாந்த தேசிகத்வ பட்டாபிஷேகம் பண்ணின
தசையிலும், இவர், குத்ருஷ்டிகளை நிரஸித்தபின்பு
“கவிதார்கிக ஸிம்ஹம் ” என்று, அருகேயுள்ளார் ஜயகோஷணை இட்ட தசையிலும்,
அவர்கள் இருவரும் களித்து, பூர்வம் நாம் பண்ணின சித்தாந்த பட்டாபிஷேகம் ,
ஸப்ரயோஜனமாய்த்தென்று “வேதாந்த தேசிகன் ” என்றும்,
“ஸர்வதந்த்ர ஸ்வ தந்த்ரர் ” என்றும், அவர்கள், தமக்கிட்ட ப்ரஸித்த திருநாமம்
பெற்றபோதுமுண்டான “ஜய ஸ்ரீ” யை சொல்லிற்றாகவுமாம். அதாவது, பிராட்டி,
ஆத்ம வித்யா ரூபையாயும் , பக்தி பரம்பரா ரூபையாயும் இருப்பதை,
இந்த வார்த்தை சொல்கிறது.
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட, வளர்க்க,
பிராட்டி , ஆத்மா வித்யையாக இருக்கிறாள்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு முன்பாக “ச்ரியை நம : ” என்று
த்யாநித்து விட்டுத்தான் , பிறகு,
“ஸ்ரீ தராய நம : ” என்று பகவானைத் த்யாநிக்கிறோம்
.இப்படியாக, “ஸ்ரீமத்” என்பதற்கு, வ்யாக்யானம் சொல்லப்படுகிறது.
வேங்கடநாதார்யம்—-
———————-
திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான, ஸௌலப்ய
சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல், அதையே காரணமாகக் கொண்டு,
உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களை த்
திருத்திப் பணிகொள்ள ,பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு,
” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு ,
ஆசார்ய ரூபராய் அவதரித்து, நின்றபடியைச்
சொல்லிற்று. ……..
உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||
.
இதையே, திருவரங்கத் தமுதனார், தன்னுடைய இராமாநுச நூற்றந்தாதியில்,
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார்.
ச்லோகத்துக்கும்,பாசுரத்துக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள் !
ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன; வர்ணாஸ்ரம தர்மங்கள்
பழைய நிலைக்கு வந்தன; பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;
இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.
” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .
இனி—–“-வந்தே வேதாந்த தேசிகம் ”
ஸ்வாமி தான் அருளிய “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில்,
வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||
என்று அருள்கிறார்.
அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு,
சிறியனான என்னை வேதாந்ததேசிக பீடத்தில் அமர்த்தி, கைகளில் மகர யாழை
எடுத்துப் பாடச் செய்வதைப்போல, இந்த “தயா சதகம்”
என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக்கொண்டு துதிக்கச் செய்தான் ….
.என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.
இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச்
சூட்டினான். திருமலையில் உற்பத்தியானது,
திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது. அரங்கம் என்றால் “ஸபை” தானே.
வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
-தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..” என்று
பலகாலம் சொல்லி, வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..
கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில்
சென்று படுகுழியில் விழாமல் இருக்க, நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ
—-காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய ,
தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது. இவர்தான் தேசிகன் —
வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….
அவர்களை, அக்ஷர புருஷர்களாக —முக்தர்களாக– மாற்றும்
ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை
அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து
வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால்
“வந்தே” என்று, விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன்
ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன்
வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்— இந்த அருமையான தனியனை
அருளினார் என்று பார்த்தோம் வ்யாக்யானத்தை அனுபவித்தோம்
சுருக்கமாகச் சொன்னால்,
ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும்
மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி தன்னுடைய உபன்யாஸங்களில்,
கூறுவார்.கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற
நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்; அதாவது—-
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்
இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம்
என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல்கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
.இந்தத் தனியன் அவதரித்ததே அங்குதானே என்பார்.
நம்இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலாம் ( காஞ்சீபுரம் )
ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற
பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்
வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு
அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—
வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம்
ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே
என்றும் , புகழ்ந்து உரைப்பர்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —அதாவது, பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் .
பிறருக்கு இவை சேராது.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி, மேலும் சொல்வார்—–
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.
மஹான்களாலும்,ஆசார்ய ச்ரேஷ்டர் களாலும், கொண்டாடப்பட்டு, வ்யாக்யானங்கள்
செய்யப்பட்டுள்ள, ஸ்வாமி தேசிகனின் பெருமை, புகழ், தேஜஸ், கீர்த்தி, உள்ளிட்ட
யாவற்றையும் சொல்லும் , இந்தத் தனியன் அரிய பொக்கிஷம்; அருமருந்து;
மந்த புத்தியினனான ,அடியேனுக்குத் தெரிந்தவரை, பூர்வாசார்யர்கள் அருளியுள்ள
க்ரந்தங்கள் ,ஆசார்யர்களிடம் க்ரஹித்தவை—––இவைகளை ”தனியன்” இந்தத் தொடரில்
வ்யாக்யானமாக எழுதும்படியான பாக்யம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
பூர்வாசார்யர்களைத் த்யானித்து புந : புந : நமஸ்கரிக்கிறேன்.
அடுத்து , ”லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் ——” என்கிற தனியன் —பகுதி 3
இனிமேல் ,இவ்வளவு விரிவாக எழுதி , உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன்
Sarvam Sree Hayagreeva preeyathaam