தனியன்—தெரிவோம்—தெளிவோம்—-22

Posted on Mar 7 2017 - 1:34pm by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்—தெளிவோம்—-22
————————————————————————

ஆபாதசூட மநுபூயஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா —
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிஸ்சிகாய மநவை முநிவாஹநந்தம்

இது திருப்பாணாழ்வார் அருளிய ”அமலனாதிபிரான்”
பாசுரங்களுக்கான தனியன் .
பெரியநம்பிகள் அருளிய தனியன்.
இவரை ”மஹாபூர்ணர்” என்றும் சொல்வர்.

இவர், கலி 4099, கி.பி. 988, ஒரு ஹேவிளம்பி வருட
மார்கழி கேட்டையில் ஸ்ரீரங்கத்தில் அவதாரம்.
ஸ்ரீ ஆளவந்தாரின் ப்ரதான சிஷ்யர்.காஞ்சிக்குச்
சென்று ,ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்ன ச்லோகங்களை
ஸ்ரீ உடையவர் கேட்குமாறு இசையுடன் சொல்லி,
அவரைத் திருவரங்கம் அழைத்துவந்தார்.
கச்சித் தேவப்பெருமாள் சொன்ன ஆறு வார்த்தைகளில்
ஒன்றான, ”பெரிய நம்பிகளை ஆச்ரயிப்பது–” என்பதற்கு
ஏற்ப ஸ்ரீ உடையவரின் ஆசார்யனாக ஆகி, அவருக்கு
பஞ்சஸம்ஸ்காரம் செய்வித்தவர்.
அவருக்கு, வ்யாஸ ஸூத்ரங்கள் ,திருவாய்மொழியைத்
தவிர, மீதி நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் –இவைகளின்
உள்ளார்ந்த அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும்
உபதேசித்தவர்.
உடையவரின் திருப்பாவைப் பாசுரங்களின் ஈடுபாட்டை
அனுபவித்து, அவருக்கு ”திருப்பாவை ஜீயர்” என்று
திருநாமமிட்டவர்.திருப்பதிக் கோவை அருளியவர்.
உடையவருக்கு, திருக்கோட்டியூர் நம்பிகள் மூலமாக
ரஹஸ்யார்த்தங்கள் கிடைக்க அருளியவர்.
திருவரங்கப் பெருமாள் அரையர் மூலமாக ,உடையவரை ,
”ஆசார்ய நிஷ்டை”, ”சரமோபாய நிஷ்டை” கிரந்தங்கள்
அருள நியமித்தவர்.
இவருக்கு, உடையவர் வேறு இல்லை;
தனது ஆசார்யன் ஆளவந்தார் வேறு இல்லை, இங்ஙனம்
அனுபவித்தவர்.
தனது குமாரன் ”புண்டரீகாக்ஷனை”யும்.
குமாரத்தி ,”அத்துழாய்” என்பவளை உடையவரின்
சிஷ்யர்களாக்கி மகிழ்ந்தவர்.
தனது ஆசார்யரான ஆளவந்தாருக்கு ,ராஜபிளவை முதுகில்
வந்து நோயுற்றபோது,அந்த நோயை ஆசார்ய ப்ரஸாதமாக
கீழ்க் குலத்தைச் சேர்ந்த ”மாறநேரி நம்பி”ஏற்றார் .பெரிய நம்பிகள்,
அவரை, நீராட்டி, புண்ணுக்கு மருந்து இட்டு, உணவு ஊட்டி
சிச்ருக்ஷை செய்தார்.
அவர் திருநாடு அலங்கரித்தபோது,அவருக்கு ”ப்ருஹ்மமேத
ஸம்ஸ்காரம் –”முதலியன செய்து, சாதி அந்தணர்களால்
விலக்கிவைக்கப்பட்டார். இவர் செய்த ச்ராத்தத்தில் ,
அந்தணர்கள், ச்ராத்த போக்தாக்களாக வரமறுத்தபோது,
முதலாழ்வார்களே ச்ராத்த போக்தாக்களாக வந்து ,
ச்ராத்தம் பூர்த்தியாகும் பேறு பெற்றவர்.

பெரியநம்பிகளின் குமாரத்தி ”அத்துழாய்”–இவள் புக்ககத்தில்
ஒருநாள் ஸ்நானம் செய்யப்போகும்போது மாமியாரைத்
துணைக்கு வரும்படி அழைக்க, மாமியார் ”உனக்கு, உன்கூடவே
”ஸ்த்ரீதன வெள்ளாட்டி” வந்திருந்தால் அழைத்துச் செல் என்றாள்.
இதனால், மிக வருத்தமுற்ற அத்துழாய், பிறந்தகத்துக்கு வந்து,
இதைச் சொன்னாள் . அதற்கு பெரிய நம்பிகள், ”இதற்கு நான்
செய்யக்கூடியது என்னவென்று தெரியவில்லை–உங்கள்
ஜீயரிடமே( ஸ்ரீ உடையவர் ) சொல்வாயாக—” என்றார்.
அத்துழாய், இவ்விவரத்தை உடையவரிடம் விண்ணப்பித்தபோது,
உடையவர், அருகிலிருந்த ”முதலியாண்டானை” அழைத்து,
”அத்துழாய்க்கு ஸ்த்ரீதனமாக நீர் அவளுடன் கூடவே ,அவளுடைய
புக்ககம் சென்று வேண்டிய வசதிகளைச் செய்யும்” என்றார் .
முதலியாண்டானும் அப்படியே போய் அங்கு கைங்கர்யம் செய்ய,
அத்துழாயின் மாமனார் மாமியார் இருவரும் இவ்விஷயமாக
உடையவரைக் கேட்டார்கள். அதற்கு உடையவர், ”என் ஆசார்யனின்
குமாரத்தி அத்துழாய்—-அவளுக்குச் சௌகர்யங்களைச் செய்து
கொடுக்கிறோம் —முதலியாண்டான் ,அங்கு இருக்க வேண்டாமென்றால்,
என்னிடத்தில் இருந்துகொண்டே சௌகர்யங்களைச்செய்வான்”என்றார் .

உடையவருக்குப் பதிலாக, கூரத்தாழ்வான் சோழ அரச சபைக்குச்
சென்றபோது, உடன் இவரும் சென்று, சோழ அரசனால் கண்களை
இழந்தார் . அப்போது அருகில் இருந்த அவரது குமாரத்தி அத்துழாய்
இருவரையும் அரச சபைக்கு வெளியே அழைத்து வந்தாள் .
வயது முதிர்ந்த பெரியநம்பிகள் வலிபொறுக்கமாட்டாமல், ஸ்ரீரங்கம்
திரும்பும் வழியில் கங்கைகொண்ட சோழபுரத்தில்
கூரத்தாழ்வான் மடியில் தலையும், அத்துழாய் மடியில் திருவடிகளும்
இருக்க கி.பி. 1097 தாது வருஷத்தில் திருநாடு அலங்கரித்தார்.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

திருவரங்கத்தெம்பெருமானை — பகவானை– திருவடி முதலாக ஸேவித்து
மிகவும் குளிர்ந்த திருவுள்ளத்தை உடையவராய் ,—-யார்–திருப்பாணாழ்வார்
”ஹரிம் ”—-கஜேந்த்ர ரக்ஷணம் செய்த –ஆனையின் துயரம் தீரப்
புள்ளூர்ந்தவன் —-கருட வாஹனத்வ குணபூர்ணன் –
சேஷசாயீ—காவிரி நடுவுபாட்டில் ஓர் கிடக்கையாய்க்
கிடப்பவன்—தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருடப்
பள்ளிகொண்டவன்—–
இவன்தான் பெரிய பெருமாள்.
நயநயோர் விஷயாந்தராணாம் —-என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணாவே —என்று தம்முடைய திருக்கண்களுக்கு
விஷயாந்தர தர்சனத்தை —
நிச்சிகாய —–நிச்சயித்தாரோ—

மநவை முநிவாஹநந்தம்—-தம் முனிவாஹனம் மநவை —
அப்படிப்பட்ட ”முநிவாஹனர் ” என்கிற திருநாமமுடைய
திருப்பாணாழ்வாரைத் த்யானம் செய்கிறேன்—–

About the Author

Leave A Response