Posted on Jul 13 2017 - 9:58am by srikainkaryasriadmin
Categorized as
89

நீ ——-நீ——நீ —–!
————————————-

1.கண்ணிமைக்கும் நேரத்தில் சிங்கப்பிரானாய் அவதரித்த அற்புதன் நீ !
கூந்தல் முடியப் பாஞ்சாலிக்குத் துகில் வளரக் கொடுத்தவன் நீ !
எண்ணிலா லீலைகளை எங்களுக்கு எங்ஙணுமே அளித்தவன் நீ !
எப்போதும் எங்கள் உளத்து ஆசனத்தில் ஈடற்று இருப்பவன் நீ !
பண்ணிசையில் உறைபவன் நீ !பாரதப் போர் முடிக்கத் தேரோட்டி வந்தவன் நீ !
புலவர்களும் மற்றவரும் போற்றிவரும் மகத்துவன் நீ !
விண்மிசைத் தேவர்க்கும் தேவன் நீ !எண் திசைக்கும் அதிபன் நீ !
வைதோரைத் திருத்தி அவர்களையும் அடிபணிய வைத்தவன் நீ !

வேறு சந்தம்
——————————————————

2. உயிர்க்கெல்லாம் காரணன் நீ !
உடலழியக் காரணன் நீ! உய்விக்க வந்தவன் நீ !
துயர் துடைக்க வந்தவன் நீ !
தொய்வில்லா அருள் பொழியும் அச்சுதன் நீ !
மயர்வற மதிநலன் நீ !
மேதினி,வானுலகம் யாவும் அளந்தவன் நீ !
அயர்விலா அனந்தன் நீ !
அடியவரெல்லாம் உண்ணும் அமுதம் நீ !

3.கற்போர்க்குக் கற்பகம் நீ !
கனவுக்கும், நினைவுக்கும் காரணன் நீ !
குற்றேவல் கொள்பவன் நீ !
குணக்குன்றாய் உயர்த்தி வளர்ப்பவன் நீ !
பற்றறுத்துப் பார்ப்பவன் நீ !
பரசுராமன் கர்வத்தை அழித்தவன் நீ !
சுற்றத்தின் சுற்றம் நீ !
சொக்கத் தங்கத்தின் முழுத் தங்கமே நீ !

4.இருந்தவன் நீ ! நின்றவன் நீ !
எங்கள் இதயத்தை என்றும் வென்றவன் நீ !
பொருந்தக் கிடந்தவன் நீ !
புகலில்லா எங்களுக்குப் புகலிடம் நீ !
விருந்தாய் வருபவன் நீ !
வீணரையும் அரக்கரையும் அழிப்பவன் நீ !
மருந்துக்கும் மருந்து நீ !
மருத்துக்கள் தேவதைக்குத் தெய்வம் நீ !

5.தீயும் நீ ! தீயின் வெப்பம் நீ !
தீயோரைத் துடைத்தொழித்தழிக்கும் வல்லாய் நீ !
பாயும் நீரும் நீ !பரவும் காற்றும் நீ !
பரந்து விரிந்த எல்லையிலா வானும் நீ !
சேயும் நீ ! சேயின் தாயும் நீ !
சேவடியைப் பணிந்தோரின் பரமன் நீ !
சீயம் நீ !செங்கட் சீயம் நீ !
சேயாம் பிரகலாதன் வணங்கும் தெய்வம் நீ !

6. நீயும் நீ ! நானும் நீ !
நானின்றி நீயில்லை,உணரவைத்தவன் நீ !
காயும் நீ ! கனியும் நீ !
கண்டோரை மயக்குகின்ற காகுத்தன் நீ !
வெய்யில் நீ ! நிலவும் நீ !
வியப்பூட்டி ஒளிர்கின்ற எல்லா வர்ணமும் நீ !
மையல் நீ ! மயக்கம் நீ !
மேதினியில் யாவர்க்கும் மாதவன் நீ !

7.கோபியரின் கள்வன் நீ !
கண்ணுக்குள் இட்டாலும் காணாமல் போவாய் நீ !
கோபத்தின் குணமும் நீ !
குலவையிடும் ஆய்ச்சியரின் சேர்த்தியும் நீ !
தாபத்தைத் தீர்ப்பவன் நீ !
தேவனும் நீ ! நாதனும் நீ ! தேவநாதனும் நீ !
சாபத்தை அழிப்பவன் நீ !
சகலரும் போற்றிப் பணியும் சரண்யனும் நீ !

8.எங்களுக்கு அபயம் நீ !
எப்போதும் ஓடிவந்து கருணையுடன் காப்பவன் நீ !
எங்களுக்கு வேதம் நீ !
எண்திசையும் அதிர ஒலிக்கும் ஒலியும் நீ !
எங்களுக்குப் பாக்கியம் நீ !
இனி எதற்குப் பிற என்ற இன்ப நினைப்பும் நீ !
எங்களுக்குப் பொக்கிஷம் நீ !
எவராலும் வெலப்படாத வெற்றியின் சிகரம் நீ !

9. நொடியில் வந்தவன் நீ !
நீசன் இரணியனை நொடியில் வதைத்தவன் நீ !
படியில் அமர்ந்தாய் நீ !
பாவி இரணியனை மடியிட்டு அழித்தாய் நீ !
இடியின் பொருளும் நீ !
இடியோடு வரும் மின்னலுக்கு மின்னல் நீ !
நொடியில் மறைந்தாய் நீ !
நரசிம்மனாய் வந்து நொடியில் மறைந்தாய் நீ !

10. அகத்தின் நிதியும் நீ !
அலைசூழ் பாற்கடலில் துயின்றவன் நீ !
சுகத்தின் சுகம் நீ !
சுற்றாருக்கெல்லாம் சுற்றமாய் இருப்பவன் நீ !
இகத்தின் நாதம் நீ !
இச்சுவை,பற்சுவைக்கெல்லாம் காரணன் நீ !
அகத்தை ஆள்பவன் நீ !
அடியேன் உனைப் பணிய அருள வந்தவன் நீ !
13529084_970402049749846_7060442467245930128_n

About the Author

Leave A Response