ஸ்ரீமான் sriman sriman வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
இப்போது எழுதுவது —
skype ல் காலக்ஷேபமாகச் சொல்லியது, ஆடியோவில் உள்ளதான —
எழுத்து வடிவம்
உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்
முதலில், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில், ஸ்வாமி தேசிகன் ” ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”
அருளி உள்ளதை , விரிவான வ்யாக்யானமாக ,அடியேன் எடுத்துரைத்தேன்
அடுத்து முதல் அதிகாரமான , உபோத்காதாதிகாரம் என்பதை பார்க்கும் முன்பு,
அவதாரிகை அல்லது (சிறிய) முன்னுரையைப் பார்ப்போம் —–
பகவானுடைய ச்ருஷ்டியில், கணக்கில்லாத ஜீவாத்மாக்கள், உலகில் ஜனித்தும் ,
மரணித்தும் , உழன்று கொண்டிருக்கின்றன—
ஓரறிவு —மரம், செடி, கொடி
2 வது அறிவு —-நத்தை, சங்கு, ஆமை போன்றவை
3 வது அறிவு—எறும்பு, கரையான் போன்றவை
4 வது அறிவு —நண்டு, வண்டு , பறவை போன்றவை
5 வது அறிவு —ஆடு, மாடு, போன்ற விலங்கினங்கள்
6 வது அறிவு—மனிதன் –ஜீவாத்மாக்கள்
7 வது அறிவு —மஹரிஷிகள், முனிவர்கள்
8 வது அறிவு–தேவர்கள், நவக்ரஹங்கள், பஞ்சபூதங்கள்
9 வது அறிவு —ப்ரஹ்மா, சிவன், விநாயகர், தேவதாந்த்ரங்கள்
இப்படி இருக்கிற அறிவுகளில், 1, 2, 3, 4, 5, அறிவுகளைத் தாண்டி,
6 வது அறிவை உடைய மனுஷ்யப் பிறவி கிடைத்து இருக்கிறது.
”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ” என்பது தமிழ் மூதுரை.
இப்படிப்பட்ட மனுஷ்யப் பிறவி கிடைப்பது அரிது; இதிலும், கூன், குருடு
செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது. இந்த மனுஷ்ய ஜென்மத்திலும் ,
இந்த ஜீவாத்மா , ப்ராம்மணனாக— ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பது அரிது.
இந்தப் பிறப்பு, பூர்வத்தில் பற்பல ஜன்மங்களில் செய்த புண்யத்தால்
கிடைத்து இருக்கிறபோது, இப்பிறவியைக் ”கண்டதே காக்ஷி ,கொண்டதே கோலம் ”
என்று வீணாக்கி, சாஸ்த்ர விரோதமான கார்யங்களைச் செய்து,
பாபத்தைப் பெருக்கி ,மறுபடியும் பிறவிச் சுழலில், ஓரறிவு, இரண்டறிவு
என்று பிறந்து அல்லல்படலாமா ?
இந்த அல்லல்களைத் தவிர்க்கவேண்டாமா ?
இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பிறவியைக் கொண்டு
பகவத், பாகவத கைங்கர்யங்களைச் செய்து, மறுபடியும் பிறப்பே இல்லாமல்,
நல்ல கதியை— பகவானின் திருவடியை அடைய வேண்டாமா ?
அடைய வேண்டும் , அடைய வேண்டும் என்கிற தாபத்தினால்தான்
”ஸமாச்ரயணம் ” செய்து கொள்கிறோம்; ”ப்ரபத்தி ” செய்து கொள்கிறோம்.
ஸமாச்ரயணம் ஆனபிறகு, ”க்ரந்த சதுஷ்டயம் ” என்கிற நான்கு க்ரந்தங்களை,
ஆசார்யனிடம் , ”காலக்ஷேப ” மாகக் கேட்கவேண்டும் என்று ஆசார்யர்கள்
கட்டளையிட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ரீ வ்யாஸரின் ”ப்ரஹ்ம ஸுத்ர”த்துக்குஸ்ரீ உடையவரின்
வ்யாக்யானம் —உரை
2. ஸ்ரீ கீதா பாஷ்யம்—ஸ்ரீமத் பகவத் கீதைக்கு, ஸ்ரீ ராமானுஜர் அருளிய உரை
அதற்கு, ஸ்வாமி தேசிகன் ஸாதித்த ”தாத்பர்ய சந்த்ரிகை ”
3. பகவத் விஷயம் –ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு , ஸ்ரீ ராமானுஜர்
கட்டளைப்படி, அவருடைய ஞான புத்ரர் ”திருக்குருகைப் பிரான் பிள்ளான் ”
அருளிய வ்யாக்யானம் –ஆறாயிரப்படி –மணிப்ரவாள நடையில்
4. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் —ஸ்வாமி தேசிகன், நாமெல்லோரும் நல்ல கதியை
அடையவேண்டுமென்று விரும்பி , தனது அந்திம காலத்தில்,அருளிச் செய்த
க்ரந்தம்
இந்த நான்கும், மாறுபட்ட கருத்து ஏதுமில்லாமல், ஒரே குரலில், நமது ஸம்ப்ரதாயக்
கொள்கைகளைச் சொல்கின்றன. இதை ”உபய வேதாந்த ஐக கண்ட்யம் ”
என்று சொல்வார்கள்.
நமது ஸம்ப்ரதாயத்தில், அடிப்படை விஷயங்களை அறிந்து தெளிவதற்கு,
ஆசார்யனின் —ஸ்வாமி தேசிகனின் —ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் சிறந்தது–
இது ”ஸார சாஸ்த்ரம் ”—மூன்று ரஹஸ்ய மந்த்ரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை
விளக்கி, ப்ரபத்திக்கு அழைத்துச் செல்கிறது.
க்ரந்த சதுஷ்டயத்தில் , முதல் மூன்றையும் காலக்ஷேபம் செய்ய இயலாவிட்டாலும்,
ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்கிற இந்தக் கிரந்தத்தை
காலக்ஷேபம் மூலமாக அறிந்துகொண்டாலே ,ஸ்ரீ பாஷ்யம் , கீதா பாஷ்யம்
மற்றும் பகவத் விஷயம் காலக்ஷேபம் செய்வதற்குச் சமம்..
அதனால்தான், நமது பூர்வர்கள் அநேக தரம் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தை
காலக்ஷேபமாகச் சாதித்து இருக்கிறார்கள்.
மோக்ஷம் அடைவதற்குச் ”சரணாகதி ” அதாவது ”ப்ரபத்தி ” முக்கியம்.
அது எனக்கு ஆகிவிட்டது– மேற்கொண்டு எதுவும் தெரியவேண்டியதில்லை —
என்று ப்ரபத்தி செய்துகொண்டவர்கள், சொல்லலாம்.
ஆனாலும், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தைக் காலக்ஷேபமாகக் கேட்கும்போது,
பல ஸுக்ஷ்ம விஷயங்களை, அறிவு க்ரஹிக்கிறது–
ப்ரபத்திக்குப் பிறகு, ப்ரபன்னன் , ஜீவித பர்யந்தம் எப்படி வாழவேண்டும்
ப்ரபத்திக்குப் பிறகு, தெரிந்து செய்யும் பாவங்கள், அறியாமல்
செய்யும் பாவங்கள் எப்படி அழிகிறது—
அஷ்டாக்ஷரம், த்வயம், சரமச்லோகம் இவற்றுக்கான அர்த்தங்கள்,
அவற்றைத் தொடர்ந்து ஜபிக்கவேண்டிய காரணம்,
விசிஷ்டாத்வைத சித்தாந்தம்,
முமுக்ஷு என்றால் யார்,
அவன் அறிய வேண்டியது என்ன,
அர்த்த பஞ்சகம் என்கிறார்களே அது என்ன ,
மூன்று தத்வம் ,
தர்மபூத ஜ்ஞானம் ,
பகவானின் பர , வ்யூஹ , விபவ, அர்ச்சை ,
அந்தர்யாமி விவரம்,
பரதேவதை யார்,
ப்ரவ்ருத்தி மார்க்கம் எது,
நிவ்ருத்தி மார்க்கம் எது,
மோக்ஷத்துக்கு எது உபாயம் ,
பகவான் ப்ரபன்னனுக்குச் செய்யும் உபகாரம்,
ப்ரபத்தி செய்துகொள்ள என்ன யோக்யதை,
ப்ரபத்தியின் அங்கங்கள் ,
ப்ரபத்திக்குப் பிறகு ப்ரபன்னனின் கடமைகள்,
இப்படிப்பலப்பல
ரஹஸ்யங்களை ஸ்வாமி தேசிகன் ,
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்
அருளியிருக்கிறார்.
ஸ்வாமி தேசிகன் கணக்கிலடங்காத க்ரந்தங்களை
அருளியிருக்கிறார்.
அப்படி அருளி இருந்தபோதும், அவருக்கு ஒரு குறை இருந்தது.
அதாவது, ”தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ” இவற்றை விரிவாகச்
சொல்லி, ”திருமந்த்ரம் , த்வயம் , சரம ச்லோகம் ” மூன்று
ரஹஸ்யங்களுக்கு ஆழ்ந்த அர்த்தங்களைச் சொல்லி,
சேதநர்கள் இன்னுமறிந்துகொள்ளவேண்டிய சகல விஷயங்களையும்
போதிக்கவேண்டும் என்ற அவாவில், அவருடைய சரம தசையில்,
( உலகில் ஜீவித்த கடைசி காலத்தில் ) இந்த ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய
ஸாரத்தை அருளி பரம உபகாரம் செய்து இருக்கிறார்.
இதற்குமேல் வரும் சந்தேகங்களுக்கும் பரிஹாரம் செய்யும் விதமாக,
”விரோத பரிஹாரம் ” என்கிற ரஹஸ்யத்தையும் அருளி
தன்னுடைய மனக்குறை நீங்கப்பெற்றார்.
பகவான் , நமக்குப் பல பேருதவிகள் செய்திருக்கிறான்.
உபஹாரங்கள் செய்து இருக்கிறான். எல்லாவற்றிலும் மேம்பட்ட
உபஹாரம் ஸ்வாமி தேசிகனை நமக்கு ஆசார்யனாக அருளியதுதான்.
அதற்காகப் பகவானுக்குப் பல்லாயிரம் கோடி க்ருதக்ஜதையைத்
தெரிவிக்க வேண்டும்; தெரிவிப்போம்.
இந்த ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்கிற க்ரந்தம் ,
தமிழும் ,ஸம்ஸ்க்ருதமும் கலந்த மணிப்ரவாள நடையில் உள்ள நூல்.
இந்தக் க்ரந்தம் அவதரித்துப் பல நூற்றாண்டுகள் ஓடிவிட்டன.
ஆழ்ந்த பொருள் பதிந்த விஷயங்கள் நிறைந்த நூல்.
நமக்கு இப்போது இருக்கும் அறிவுக்கு , அவைகளை
அறிந்துகொள்ளும் திறன் கிடையாது. ஆதலால், இதற்கு
வ்யாக்யானங்கள் தேவைப்பட்டன.
திருக்குடந்தை தேசிகன் –ஸ்ரீ கோபாலார்ய மஹா தேசிகன்
அருளிய ”ஸாரஸ்வாதிநி ”
ஸ்ரீபாஷ்ய –ஸ்ரீநிவாஸாச்சார்யர் –‘ஸார தீபிகை ”
பாரத்வாஜ –ஸ்ரீநிவாஸாச்சார்ய ஸ்வாமி–”ஸார ப்ரகாஸிகை”
ஸ்ரீசைல ஸ்ரீநிவாஸாச்சார்ய ஸ்வாமி—”ஸார விவரணி ”
ஸ்ரீ பரகால ஸ்வாமி—”ஸார தீபிகா ஸங்க்ரஹம் ”
இப்படிப் பல வ்யாக்யானங்கள்–
திருவஹீந்த்ரபுரம் –சேட்லுர் ஸ்வாமி என்கிற
ஸ்ரீ ந்ருஸிம்ஹாசார்ய ஸ்வாமி –எளிய தமிழில் வ்யாக்யானம்
ஸ்ரீ இஞ்சிமேடு அழகிய சிங்கர் –”ஸாரபோதினி ”
ஸ்ரீ சின்னமு பாட்டராசார்ய ஸ்வாமி உரை ( 1928 )
தேவநாகரி லிபியை முதன்முதலில் பயன்படுத்தி உரையிட்டவர்
ஸ்ரீ வில்லிவலம் அழகிய சிங்கர் பூர்வாஸ்ரமத்தில் அருளிய உரை
ஒப்பிலியப்பன் ஸந்நிதி ஸ்ரீ ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமி —
பௌண்டரீகபுரம் ஆஸ்ரம வெளியீடு ( 1960 )
இவற்றைத் தவிர இன்னும் வ்யாக்யானங்கள் இருக்கலாம்
அடியேனுக்குத் தெரிந்த அளவில் எழுதியிருக்கிறேன்
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தைப் பற்றி இப்போது சொல்கிறேன்
இது 4 பாகம்—-32 அதிகாரங்கள்
1. அர்த்தாநு சாஸன பாகம்
2.ஸ்த்திரீகரண பாகம்
3. பதவாக்ய யோஜனா பாகம்
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம்
அர்த்தாநு சாஸன பாகத்தில் –22 அதிகாரங்கள்
ஸ்த்திரீகரண பாகத்தில் —4 ”
பதவாக்ய யோஜனா பாகத்தில் — 3 ”
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகத்தில்–3 ”
அடுத்து,முதல் அதிகாரமான ”உபோத்காதாதிகாரம் ”
என்பதைத் தொடர்ந்து எழுதுவேன்
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||
—————————————–தொடரும் ————-
—
Sarvam Sree Hayagreeva preeyathaam