ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம் –உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
இப்போது எழுதுவது —
skype ல் காலக்ஷேபமாகச் சொல்லியது, ஆடியோவில் உள்ளதான —
எழுத்து வடிவம் , விரிவாகவே
வழி தவறிய ராஜகுமாரன் —உதாரணம்
இதற்கு முந்தைய லிகிதத்தில்,
ப்ரக்ருதியாகிற பாழிலே விழுந்து ஓடியோடிப்
பல பிறப்பும் பிறந்து தட்டித்தாவற்று அழுக்கடைந்து, ஒளி அழிந்தபடியாலே
தத்வஹித விஷயமாய் யதாவத் ப்ரகாசா ரஹிதனாய் நிற்க—-
என்பதுவரை பார்த்தோம்
அதன் தொடர்ச்சி—-
அதிகாரத்திலிருந்து——
ஒரு ராஜா அந்தப்புரத்துடனே வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே ஸக்தனான அளவிலே
வார்த்தை அறிவதற்கு முன்பே வழிதப்பின ராஜகுமாரன் எடுத்தார்கையிற் பிள்ளையாய்
ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர , அவன் தனக்கில்லாத சபரத்வாதிஜாதிகளை ஏறிட்டுக்கொண்டு ,
மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |
என்கிறபடியே வேடுவச் சேரியிலே கிளிபோலே அவர்கள் பழக்கிவைத்த பாசுரமே
தனக்குப் பாசுரமாய் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே
அவர்கள் ஊணும் வ்ருத்தியுமே தனக்கு ஊணும் வ்ருத்தியுமாய் ,தன் பிறவிக்கு உரிய
போகங்களில் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியது உண்ணாதே ராஜபோக
விருத்தங்களான ஜூகுப்ஸித விஷயங்களிலே தனக்குப் பேறுமிழவும்
ஹர்ஷசோகங்களுமாய் , ராஜகுமாரனென்று தன்னடி அறிவார் சில ரிஷிப்ராயர்
உண்டானாலும் அவர்களுக்குக் கிட்டவொண்ணாத அவஸ்தையையுடையவனாய்
இப்படி ப்ராந்திஸித்த சபரத்வாத்யவஸ்தையோடே யாவஜ்ஜீவனம் நடக்கில்
உத்தர ஜன்மங்களிலும் ஒரு யோக்யதை பெற விரகில்லாதபடியாய்த் தட்டுப்பட்டு
நிற்குமாப்போலே , இவனும் தேஹாத்மாபிமானாதிகளாலே தன்னுருக்கொடுத்து
வேற்றுருக்கொண்டு நிற்க —
வ்யாக்யானம் : —
ஒரு அரசன் , தனது அந்தப்புரத்திலுள்ள எல்லோருடனும் வேட்டையாடக்
காட்டுக்குச் சென்று, அந்த வேட்டையிலேயே ஆழ்ந்திருக்க , அப்போது அந்த அரசனின்,
சிறுபிள்ளை— அறியாச் சிறுபிள்ளை– பேச்சு வராத சிறுபிள்ளை–
தன்னுடன் ஒருவரும் இல்லாத நிலையில், காட்டில் வழியைத் தவறவிட்டு ,
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க , அப்போது அந்தக் காட்டில் இருந்த
வேடர்கள் இச் சிறுபிள்ளையைப் பார்த்து, இக்குழந்தையை அழைத்துச்
சென்று தங்கள் இருப்பிடத்தில் வைத்து வளர்த்தார்கள்.
இச் சிறுபிள்ளையும், தான் யார் என்று அறியாத நிலையில், தனக்குப்
பொருந்தாத, வேடுவர்கள் வாழ்க்கை வாழலானான் .
விஷ்ணு புராணம் கூறுகிறது—-
மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |
விஷ்ணு புராண ச்லோகத்தின் மூலமாக,
தாய் தகப்பனாக கிளிகளின் பெற்றோருக்குப் பிறந்த இரண்டு கிளிகள்
பற்றிய சம்பவத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துரைக்கிறார்—
கிளி, ஒரு முனிபுங்கவரிடம் சொல்கிறது——-
எனக்கும் இன்னொரு கிளிக்கும் தாயும் ஒருத்தி; தகப்பனும் ஒருவனே !
நான், ஆஸ்ரமவாசிகளான ரிஷிகளாலும், இன்னொரு கிளி பசுமாம்ஸம்
தின்பவர்களாலும் வளர்க்கப்பட்டோம்.
நான், தினந்தோறும் முனிவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன்; அந்தக் கிளியோ
மாட்டிறைச்சி உண்பவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறது.
நான் பேசும் பேச்சுக்களின் தன்மையையும், அந்தக்கிளி பேசும் பேச்சுக்களின்
தன்மையையும் கேட்டு, இவற்றிலுள்ள வேறுபாட்டை நீ தெரிந்துகொண்டு
இருக்கலாம். இவற்றிலிருந்து, குணங்களும் குற்றங்களும் —-
நல்ல பண்புகளும், தீய பண்புகளும் , சேர்க்கையால் ஏற்படுகின்றன
என்று சொல்லிற்று
வேட்டுவர்களால் வளர்க்கப்பட்ட கிளியைப் போன்றே , இந்த ராஜகுமாரனும்
வேடர்கள் மொழியே தன் மொழியாகவும், அவர்கள் எப்படிப் பேசுகிறார்களோ
அப்படியே பேசியும் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப்போல
அவர்கள் உண்ணும் உணவையே உண்டும் வாழலானான்
அரசனுக்கு உரிய ஆசாரங்கள், ஸம்ப்ரதாயம், போகங்கள் –இவற்றை
அறவே அறியாமல், ஒரு ராஜகுமாரன் எப்படி நடந்துகொள்வானோ
அதற்கு நேர் எதிரிடையாக , வாழ்ந்தான். அந்த வனத்தில் வசித்த
சில ரிஷிகளுக்கு, இவன் ஒரு ராஜகுமாரன் என்று தெரிந்து, இவனைத்
திருத்த முயற்சி செய்தபோதும், இவன் அவர்கள் பக்கலிலேகூடப்
போகாமலிருந்தான். இன்னொரு ஜன்மம் எடுக்கும்போதாவது,
உன்னதமான பிறவி எடுக்கவேணும் என்கிற எண்ணமோ ,
முயற்சியோ இல்லாதவனாக இருந்தான்.
தனது நிஜ ஸ்வபாவத்தை இழந்து, வேறு ஸ்வபாவம் எடுத்த
ராஜகுமாரனைப் போன்றே —ஜீவாத்மா—தானும் ,தான் உள்ள உடலும்
ஒன்றே என்கிற மயக்கத்தில், தன்னுடைய நிஜ ஸ்வபாவத்தை இழக்கிறான்.
அதிகாரத்திலிருந்து—–
அந்த ராஜகுமாரனுடைய லக்ஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார்
சில தார்மிகர் . ஒரு விரகாலே இவனை மீட்கப்பெற்று அபிமானிக்க
இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தராபிமானத்தை வழிவிலக்கி
த்ருஷ்டாத்ருஷ்ட ஸம்ஸ்காராதிகளாலே உத்தரோத்தர போக
ததுபாயங்களுக்கு யோக்யநாம்படி விரகு செய்து , இவனுக்கு
ஸ்வஜாத்யனுரூபமான குணவ்ருத்தங்களைத் தங்கள் உபதேச
அநுஷ்டானங்களாலே குடிபுகரவிட்டு இவனுக்கு அநேக தோஷ
த்ருஷ்டங்களான சபராதி போக்ய க்ஷுத்ர விஷயங்களை
அருவருப்பித்து ராஜாதி போக்யங்களான அதிசயித புருஷார்த்தங்களை
ஆய்ந்து எடுக்கவல்ல அளவுடைமையை உண்டாக்கி நிறுத்துமாப்போலே
இவ்வாத்மாவுக்குச் சில தார்மிகர் பித்ராதி முகேந நொடித்து,
புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :
என்கிறபடியே உரு வியந்தவிந்நிலைமையை உணர்த்தி ,அதுக்கு
அநுரூபமான புருஷார்த்த ததுபாயங்களிலே அந்வயிக்கிலாம்படி
விரகு செய்து உடம்புதின்றார்படியன்றிக்கே ஒரு வெளிச்சிறப்புடையார்க்கு
வரும் குணவ்ருத்தங்களை உண்டாக்கி ஹேயோபாதேய விபாகக்ஷமனுமாக்கி
நிறுத்தினவளவிலே ,
இவனுடைய அடியுடமையையும் சில தார்மிகரடியாக வந்த யோக்யதையும்
அளவுடைமையையும் நேராகக் கண்டு பரமகாருணிகனான பரம
சேஷியாலே ப்ரேரிகராய்த் தாங்களும் காருணிகோத்தமராயிருப்பார்
சில தேசிகர் .
ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :
என்கிறபடியே நேர்பட்டு ——
வ்யாக்யானம் :—இச்சிறுபிள்ளையின் தேஜஸ் போன்ற முக விலக்ஷணங்களாலே
இவன் ராஜகுமாரன் என்று உணர்ந்த சில தார்மிகர்—மஹான்கள்—
இவனை ஏதேனும் ஓர் உபாயத்தால், மீட்க எண்ணி முதலில் அவன் ஒரு வேடன்
என்கிற மதி மயக்கத்தைப் போக்கடித்தனர் .
த்ருஷ்ட ஸம்ஸ்காரம்—-ஸ்நானம், வஸ்திரம் இவை
அத்ருஷ்ட ஸம்ஸ்காரம் — செளள , உபநயனங்கள் இவை
ஸாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்தல், வஸ்திரம் உடுத்தல், ,பிற ஆசாரங்களை
அறியும்படி செய்தனர். இதன்மூலமாக ராஜகுமாரன் ஒருவன் ,அனுபவிக்கத்தக்க
விஷயங்களை அனுபவிக்கும் தகுதியை இந்த ராஜகுமாரன் அடைந்தான்.
அரசகுமாரனுக்கு ஏற்றதான குணங்கள், உருவம் முதலியவற்றை
உபதேசம் மூலமாகவும், எடுத்துக்காட்டுக்கள் மூலமாகவும் அறியச் செய்தார்கள்.
இதனால், இவன் இதுவரை கொண்டிருந்த தாழ்வான வாழ்க்கையை
வெறுக்கும்படி செய்தனர் . புருஷார்த்தங்களை ஆராய்ந்து தெளியவும்
தேவையான அறிவையும் அளித்தனர்
இந்த ஜீவாத்மாவுக்கு , தந்தை முதலான பித்ருக்கள் மூலமாக, சில தார்மிகர்களின்
தொடர்பு ஏற்படுகிறது அந்த நல்லவர்கள்—மஹான்கள், இந்த ஜீவாத்மாவுக்கு
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் உள்ள நல்லதைச் சொல்கிறார்கள்
புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :
ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை;
மரமும் இல்லை— ஒவ்வொருவருக்கும் சரீர அமைப்பில் ஏற்பட்ட வேறுபாடானது,
அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உண்டானவை—
இப்படிப் பலப் ப்ரமாணங்களைச் சொல்லி, ஜீவன் உடலைக்காட்டிலும் வேறுபட்டவன்;
ஜீவனின்ஸ்வரூபத்துக்கு ஏற்றதாக உள்ள புருஷார்த்தங்கள் எவை ,
அவற்றை அடையும் உபாயம், இவற்றையெல்லாம் உபதேசிக்கின்றனர்
(ஆத்மா, சரீரத்தைக்காட்டிலும் வேறு என்கிற ஞானம் இல்லாதார் –உடம்பு தின்றார் )
இப்படி உயர்ந்த குணங்களை உண்டாக்கி, எவற்றை ஏற்கவேண்டும் எவற்றை
விலக்க வேண்டும் என்கிற விவேகம் வளரும்படி செய்கின்றனர்.
இப்படி இந்த ராஜகுமாரன், அவனுடைய ஸ்வரூபத்துக்கு மாறியிருப்பதையும்,
சில தார்மிகர்கள் செய்த நல்லுபதேசங்களையும் அவற்றால் அவனது அறிவு பிரகாசிப்பதையும்,
பகவானின் கருணையால் சில ஆசார்யர்கள் காண்கிறார்கள்
இப்படிப்பட்ட ஆசார்யர்களின் தொடர்பு எப்படி ஏற்படுமென்றால்
ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :
ஜீவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென்று ஈச்வரன் எண்ணுவது
ஜீவனுக்குத் தற்செயலாக வரும் புண்ய கர்ம பலன்
ஜீவனுக்கு எம்பெருமானின் கடாக்ஷம்
ஜீவனுக்கு, எம்பெருமானிடத்தில் இருந்த த்வேஷம் போவது
ஜீவனுக்கு, எம்பெருமானின் கல்யாணகுணங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்
ஜீவனுக்கு, ஸத்வ குணம் உள்ளவர்களுடன் ஸ்நேஹம் —
இந்த ஆறும், ஒருவனை, மிகவும் நல்ல ஆசார்யனிடம் சேர்த்துவிடும்
என்கிறபடி அணுகி,
ஆசார்ய உபதேசம் மூலமாக, முமுக்ஷு தெரிந்துகொள்ள வேண்டியவன
அதிகாரத்திலிருந்து——
அந்த ராஜகுமாரனுக்குச் சில ராஜாந்தரங்கர் மேற்பட்டு, பிறவியை உணர்த்தி,
மேலுள்ள ப்ரியதமங்களையும் ஹிததமங்களையும் தெளிவித்து
ஒரு விரகாலே அந்த ராஜாவுக்கும் ராஜகுமாரனுக்கும் பரஸ்பர
ஸம்ச்லேஷாகாங்க்க்ஷையை உத்தம்பிக்குமாப்போலே ,இவனுக்கும்
நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :
என்றும்,
தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :
என்றும்,
ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதுஞ்சோராமே ஆள்கின்ற
செங்கோலுடைய ஸ்ரீய:பதி நாராயணனுடனே குடல் துவக்கத்தைத் தெளிவித்து
இவனுக்கு தத்ப்ராப்த்யுபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே
தங்களுக்குப் பொன்னுலகையும் புவனி முழுவதையுமாளுகையாக உகந்து
அதடியாக அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கிச் சுரக்கும் தேநுவைப்போல
இத்தேசிகர் இவ்வாத்மாவுக்கு அஜ்ஞான ஸம்சய விபர்யயங்கள் தீரவேண்டுமென்று
மிகுந்து குறைவரச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ
இத்யாதிகளிற்படியே
ஈச்வரனுடையவும் ஈசிதவ்யங்களுடையவும் ஸ்வரூப, ஸ்வபாவ ஸம்பந்தங்களும்
இவற்றின் த்யாஜ்யோபாதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும்
இவற்றின் கதிப்ரகாரங்களும் உக்தாநுக்தங்களான மோக்ஷ விரோதிகளுமாகிற
இவ்வர்த்தங்கள் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யங்கள்
இவ்வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய ஸப்தராசியில் ஸாரதமமான
ரஹஸ்யத்திலே ப்ரதிதந்த்ர ஸாரோத்தாரேண ஸங்க்ரஹிக்கப்படுகின்றன
திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே
கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்
வ்யாக்யானம் —–
அவர்கள், இந்த ராஜகுமாரனுக்கு அவனுடைய அரச பிறப்பைக் கூறி,
அதற்கு ஏற்றதான நன்மைகள் எவை என்றும், அவற்றை அடைவதற்கான
உபாயங்கள்–வழிகள் –எவை என்றும், உணர்த்தி, அவனும் , ராஜாவும் ஒன்றுசேர்வதற்கான
எல்லா முயற்சிகளையும் செய்கின்றனர்.
இதைப்போலவே, ஜீவனுக்கும் ஆச்சார்யர்கள் மூலமாக நடைபெறுகிறது–
நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :
ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே
ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை;
மரமும் இல்லை— அவன் , ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ஸ்வரூபமாக
உடையவன். அவன் பகவானுக்கு அடிமை.பகவானையே அண்டி இருக்கிறான்.
அவனது கைங்கர்யத்துக்காகவே இருக்கிறான்.
தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :
மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சிவன் சொல்கிறார் —
எல்லா ஆத்மாக்களும், பரமாத்மாவுக்கு இயற்கையாகவே தாஸர்கள்.
ஆகையால், நானும் உனக்குத் தாஸன் என்று நினைத்து வணங்குகிறேன்
நாச்சியார் திருமொழியில் ( 11–3 )
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே
என்கிற ஸ்ரீ ஆண்டாளின் பாசுரத்தை ஸ்வாமி தேசிகன்
எடுத்துச் சொல்கிறார்
”பொங்குகிற ஸமுத்ரத்தால் சூழப்பட்ட பூமியையும்,
வைகுந்தமென்னும் உலகத்தையும் அவைகளில் ஒன்றும்
விட்டுப்போகாமல் செங்கோல் செலுத்தி ஆளுகின்ற
எம்பெருமானான ,லக்ஷ்மிகாந்தனுக்கும், ஜீவனுக்கும் உள்ள—
பிறப்பால் வந்த—-உறவை ஆசார்யர்கள் உபதேசிக்கின்றனர் .
அந்த ஜீவன், பகவானை அடைவதற்கு முயற்சிக்கின்றனர் .
இப்படி அந்த ஜீவன் பெறுகின்ற பேறு மூலமாக , தங்களுக்கே
இந்த நித்ய விபூதியும், இவ்வுலகம் முழுவதும் கிடைத்ததாக
எண்ணுவர்.
அன்று பிறந்த தன்னுடைய கன்றுக்கு ,பசுவானது , தானே
பாலைச் சுரப்பதுபோல, ஜீவனிடம் அன்பு செலுத்துகின்றனர்.
அவனுடைய அஜ்ஞானம், தவறான ஞானம் , சாஸ்த்ர சந்தேகம்
இவற்றையெல்லாம், தங்களுடைய கச்சிதமான உபதேசங்கள் மூலமாக
விலக்குகின்றனர்.
ஸ்வாமி தேசிகன் , ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து ச்லோகத்தை
இங்கு சொல்கிறார் —
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க தாதுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராணரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||
ஜீவர்கள், அசேதனம் , ஈச்வரன் என்னும் தத்வத்ரயம் , அவற்றின் ஸ்வபாவங்கள்
( குணங்கள் ) , இவ்வுலக போகங்கள், மோக்ஷம் , மோக்ஷ சாதனங்கள்,
ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம், இவைகளையெல்லாம்
உள்ளபடி விளக்கி ,எந்த உதார புருஷரான ஸ்ரீ பராசரர் , ஸ்ரீ விஷ்ணு புராணத்தை
அருளினாரோ , அந்த ருஷிச்ரேஷ்டருக்கு நமஸ்காரம்
இப்படி ஸ்ரீ பராசரர் கூறுவதை போன்று, ஆசார்யர்கள் ஜீவனுக்கு,
சேதன–அசேதனங்களை நியமிப்பவரான பகவானின் குணங்களை
உபதேசிக்கின்றனர்.
சேதன–அசேதனங்களின் தனமைகள், அவற்றின் இடையே உள்ள உறவு
இவற்றையும் சொல்கின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகம்—துக்கம்
இவற்றையும் விளக்கி, இந்தப் பிறவியிலிருந்து விடுபடும் உபாயங்கள், அடையப்படும்
மோக்ஷம், ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் வழி , அதற்கு ஏற்படும் தடைகள்,
இப்படி ”அர்த்த பஞ்சகத்தை”— விளக்குகின்றனர்.
இவை யாவுமே, மோக்ஷத்தில் ஆசை உடைய ” முமுக்ஷு ”தெரிந்துகொள்ள வேண்டியவை
இவை யாவும் ”ரஹஸ்யத்ரயத்தில் ”சொல்லப்படுகின்றன.
திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே
ஜீவாத்மாக்களாகிய நாம்,
பகவானின் திருமார்பில் இருப்பதும், திருப்பாற்கடலைக்
கடைந்தபோது, ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வெளியே வந்ததுமான
”கௌஸ்துப மணி ”போன்று , பகவானின் திருமார்பில்
இருப்பதற்குத் தகுதி உடையவர்களே —
தவிரவும், அவனது தாமரை போன்ற திருவடிகளை ,
நமது தலையில் கிரீடம் போன்று அணிந்துகொள்ளும்
தகுதியும் உள்ளவர்களே
ஆனாலும், தாயின் கர்பத்தில் , நமது கர்மங்கள் என்கிற
வெள்ளத்தில் விழுகிறோம். அந்தக் கர்மானுபவ வெள்ளத்தில்
அடித்துச் செல்லாமல் , நம்மைக்காப்பாற்றுவதற்காகவே
”அர்த்த பஞ்சக ” ஞானம் பெற்ற ஆசார்யர்கள் , அவதரித்தனர்
கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்
ஸம்ஸாரத்தில் உழலும் ஒவ்வொரு ஜீவனும் , கர்மாக்கள், அறியாமை
போன்ற வினைகளில் சிக்குண்டு , எத்தனையோ வருஷங்களாக,
அல்லல்படுகிறான்.
பூர்வ கர்மாக்கள் பலன் கொடுக்கத் தொடங்கும்போது, பகவானின்
கருணை கிடைக்கிறது–இது மிக்க குறைவான ஜீவன்களுக்கே
கிடைக்கிறது –இப்படிப் பெறும் கருணையால், இவன்
பெருத்த ஐச்வர்யத்தை அடைகிறான் –இந்த ஐச்வர்யம்
நித்யஸூரிகள் பெரும் ஐச்வர்யத்தைப் போன்றது
அதிகாரச் சுருக்கம்
———————————-
ஒவ்வொரு ஜீவனும் ( ஜீவாத்மாவாகிய நாம் ),பரமபதத்தில், பகவானை, நித்யஸூரிகளைப் போல
சதாசர்வகாலமும், முழுமையாக அனுபவிக்க உரிமை உடையவன்தான்.
ஆனால்,கர்ம சம்பந்தத்தால், தத்வ ஹிதங்கள் என்னவென்றும் அவற்றின் உண்மை என்னவென்றும்
அறியாமல், இப் ப்ரக்ருதியில் ஸம்ஸாரத்தில் உழல்கிறான்.
இவனுடைய ஸுஹ்ருதத்தாலே, ஒருசமயம் , பெரியோர்கள் சிலரின் ஸம்பந்தத்தை அடைகிறான்.
அவர்கள், இவனுக்கு நல்லொழுக்கம், நற்பண்பு இவைகளை ஏற்படுத்தி, உபதேசங்களைச்
செய்து, நல்லவை, கேட்டவை–இவற்றைப் பகுத்து அறியும் வல்லமையை ஏற்படுத்துகின்றனர்.
இதனால், இவன் ஒரு நல்ல ஆசார்யனைத் தேடி அடைகிறான்; அவர், இவனுக்கு தத்வ ஞானத்தை
உபதேசித்து, உஜ்ஜீவிக்கச் செய்கிறார்.
இதை ஒரு உதாரணத்துடன் ஸ்வாமி தேசிகன் விளக்குகிறார் —
காட்டுக்கு, வேட்டைக்குச் சென்ற ஒரு அரசனின் குமாரன், காட்டில் அரசனைப் பிரிந்து வழி தடுமாறி
வேடுவர்களால் காணப்பட்டு, அவர்களின் இருப்பிடத்துக்கு அவர்களுடன் சென்று,
வேடுவர் பழக்கங்களை கைக்கொண்டு, வளரும்போது, சில உதாரர்கள்–ரிஷிகள் —
இவனை அணுகி, இவன் யார் என்பனவற்றையெல்லாம் உணர்த்தி, அவனை அங்கிருந்து மீட்டு,
அரசனுடன் சேர்த்து, அரசனுடன் ராஜபோகங்களை அனுபவிக்க , உதவுகின்றனர்
இப்படி நல்ல ஆசார்யனை அடைய ஜீவனுக்கு ஆறு காரணங்கள் சொல்லப்படுகின்றன—-
1. எம்பெருமானின் அநுகூலம்
2. தற்செயலாய் ஏற்படும் ஸுக்ருதம்
3. கருவிலே பிறக்கும்போதே பகவானின் கடாக்ஷம்
4. பகவானைப் பகைக்காது இருப்பது
5. பகவானின் கிருபையை எதிர்நோக்குதல்
6. ஸாத்விகர்களின் ஸ்நேஹம்
இந்த ராஜகுமார த்ருஷ்டாந்தத்தை பௌண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆஸ்ரம வெளியீடான
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்கிற அருமையானஸ்ரீகோசத்தில் — புத்தகத்தில்—
அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளது—அது இங்கு சுருக்கமாகத் தரப்படுகிறது—-
உபமானம் ( ராஜகுமாரன் ) உபமேயம் ( ஜீவாத்மா )
——————————————————————————————————————————–
1. தன்னுடைய பிதாவான அரசனுடன் 1. பரமபதத்தில் ,தனக்கு எல்லாமாகவுமிருக்கிற
சேர்ந்து, எல்லா ராஜபோகங்களையும் பகவானுடைய கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை
அனுபவிக்க உரிமையுள்ளவன் அடைந்து மகிழும் ஸ்வரூப யோக்யதை உள்ளவன்
2. காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற அரசனான 2. அநாதியான கர்மவினைகளால், பகவானைப்
தன்னுடைய பிதாவிடமிருந்து ,காட்டில் பிரிந்து, ஸம்ஸாரத்தில் உழல்பவன்
வழிதவறிப் பிரிந்து, வேடுவர்களுடன் வாழ்பவன்
3. தான் ராஜகுமாரன் என்பதை அறியாமல், 3. தன்னுடைய இயற்கையான ஸ்வரூபத்தை
வேடனாக எண்ணி வேடர்களின் உணவு, உடை அறியாமல், உடலையே ஆத்மா என்றும்,
மற்றும் பழக்கத்தில் திளைத்து, அவை தான் ஸ்வதந்த்ரன் என்றும் எண்ணி
கிடைக்கும்போது மகிழ்ந்தும் , இந்த்ரிய ஸுகங்களில் மூழ்கி
கிடைக்காதபோது வருந்தியும் வாழ்பவன் அவை கிடைத்தபோது மகிழ்ந்தும்
கிடைக்காதபோது வருந்தியும் வாழ்பவன்
4. தார்மிகர்களால், தான் ராஜகுமாரன் 4. ஆசார்யர்களால் சரீரம் வேறு, ஆத்மா வேறு என்பன
என்று அறிந்து, நல்லுபதேசங்களைப் பெற்று, போன்றவற்றை அறிந்து,ஆத்மாவுக்கான
வேடுவர்களின் வழிமுறைகளை வெறுத்து, உபதேசங்களைப் பெற்று, ஸாத்விக குணத்தை
ராஜபோகங்களை அடைபவன் ஏற்பவன்
5. அரசனின் அந்தரங்கர் மூலம், அரசனை அணுகி 5. தத்வம்–ஹிதம்–புருஷார்த்தம்,
அரசனுடன் ராஜபோகங்களை அனுபவிப்பவன் மோக்ஷ உபாயம், மோக்ஷத்துக்கான விரோதி, போன்ற
ரஹஸ்யங்களை ஆசார்யன் மூலம் அறிந்து
உபாயத்துடன் பரமபதம் சேர்ந்து, பகவானுக்குச்
செய்யும் கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் பெற்று
அனுபவிப்பவன்
அரும்பதவுரை
1.ஹைதுகர் ——–எதற்கும் காரணம் கேட்பவர், பிரமாணங்களை நம்பாதவர்
2.ஹ்ருதயங்கமானாய் —மனத்துக்கு இனியவனாய்
3.ப்ரேஷ்யன் —-பணியாள்
4.சேஷபூதன் , தாஸபூதன் ——-அடிமை
5. யாத்ருச்சிகம் ———தானாக நடந்தது, தன்பாட்டுக்கு நடந்தது என்கிற அர்த்தமில்லை.
பகவானின் பிரேரேரணையால் –தூண்டுதலால் நடந்தது என்று பொருள்
6. இருப்பு அடியாக —காரணமாக
7. இட்டுப் பிறந்து வைத்து—இயற்கையான உரிமை உடையவனாக இருந்து
8. ஸுப்தன் —-அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் சுருங்கிய ஞானத்தை உடையவன்
9. பாழ் –ஒன்றும் விளையா நிலம்
10. தட்டித்தாவற்று —–கிடைக்கவேண்டியது கிடைக்காமல்இளைப்பாற இடமில்லாமல்
11. அழுக்கடைந்து—விபரீத வாஸனா ருசியை அடைந்து
12. குறிச்சி—-வேடுவச்சேரி
13. ஸபரத்வாதி ஜாதி —வேடன்
14.ஜூகுப்சித விஷயங்கள்—வெறுக்கத்தக்க விஷயங்கள்
15.யாவஜ்ஜீவம் –வாழ்நாள் முழுவதும்
16. வந்தேறி—நடுவில் வந்து தன்னிடம் சேர்ந்திருப்பவர்
17. ஜாத்யந்தர அபிமானம்—தான் வேடன் என்கிற மதிமயக்கம்
18.வழிவிலக்கி —போக்கடித்து
19. உருவியந்த—உடலைக்காட்டிலும் வேறான
20. உடம்பு தின்றார் —-ஆத்மா, சரீரத்தைக்காட்டிலும் வேறுபட்டது என அறியாதவர்
21. வெளிச்சிறப்புடையார் —அறிவின் மேன்மை உடையவர்
22. அடியுடைமை—நன்மைக்கு மூல காரணத்தை உடையவனாக இருத்தல்
23. ப்ரேரிதர் —தூண்டப்பட்டவர்
24.பரஸ்பரஸம்ஸ்லேஷாகாங்க்ஷை —-ஒருவரோடொருவர் சேரவேண்டுமென்கிற அவா
25. குடல் துவக்கு—பிறப்பால் வரும் ஸம்பந்தம்
26.போகவர்க்கம் —ஸ்வர்க்கம் , மோக்ஷம்
27.த்யாஜ்யோபாதேயம் —விடத்தக்கது, ஏற்கத்தக்கது
28. அத்யாத்ம விஷய –ஸப்த ராசி —-ஜீவாத்ம —பரமாத்மாக்களை நிரூபிக்கும் ஸப்த
ப்ரமாண சமுதாயம்
29. ஸம்சய –விபரியயங்கள் —அஜ்ஞானம் —அறியாமை; ஸம்சயம் –ஸந்தேஹம்
விபர்யயம் —தவறான ஜ்ஞானம்
அஜ்ஞானம்—ப்ரஹ்மத்தைப்பற்றி ஒன்றுமே அறியாதிருப்பது
ஸம்சயம் –பர ப்ரஹ்மம் , நாராயணனா, சிவனா , ப்ரம்மனா
என்று சந்தேகித்தல் —
விபர்யயம் —ஜீவாத்மாவே , முக்த தசையில் பரமாத்மாவாகிறான்
என்று நினைப்பது
30. உத்தம்பிக்குமாப்போலே —வளர்ப்பது போலே
————————————————————————
ஸ்வாமி தேசிகன், இவ்வதிகாரத்தில் மேற்கோள் காட்டிய நூல்கள்
————————————————————————————————————————————
1. மந்த்ரிகோபநிஷத்
2. ஸ்ரீமத் பகவத் கீதா ச்லோகம்
3. ஸ்ரீமத் ராமாயண ச்லோகம்
4லைங்க புராணம்
5. திருவாய்மொழி
6. குணரத்ன கோசம்
7. தலவகாரோபநிஷத்
8. கௌஷீதகி ப்ராம்மணம்
9. முதல் திருவந்தாதி
10. ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம்
11. ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகம்
12. ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
13. ஸ்ரீ நாச்சியார் திருமொழி
முதல் அதிகாரமான—-உபோத்கார அதிகாரம் நிறைவு
—
Sarvam Sree Hayagreeva preeyathaam
Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkarya