மற்றவை நேரில் –15

Posted on Dec 9 2018 - 12:05pm by srikainkaryasriadmin
Categorized as
1262

மற்றவை நேரில் –15

புருஷோத்தமா ! பங்கயச் செல்வியே !

ராஜாக்கள் அரசாண்ட காலம் அது.

பிரசித்தி பெற்ற ஒரு கோவில் . மூலவர் அனந்தன் மீது பள்ளிகொண்டு இருக்கிறார்
உத்ஸவர் நின்ற திருக்கோலம்
மந்தஹாசத்துடன் , சங்கு சக்ர தாரியாக அபய ஹஸ்தத்துடன் ஸேவை ஸாதிக்கிறார்
அந்தக் கோவிலில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்கள் வித்வத்வம் நிறைந்தவர்கள்.
ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் கோவில்.
அவ்வப்போது அரசர் வந்து பகவானை வழிபடும் கோவில்.

ஏதோ ஒரு விசேஷ நாள்.
அரசர் கோவிலுக்கு வருகிறார். ஆர்ப்பாட்டம் இன்றி , படாடோபம் இன்றி வருகிறார்.
அரசரே வந்து இருப்பதால் , தலைமை அர்ச்சகர் , கர்பக்க்ரஹத்தில் இருந்து ,
வெளியே வந்து மன்னரை வரவேற்று , பகவானுக்கு தீபாராதனை செய்து
அரசருக்குத தங்க வட்டில் தீர்த்தம் சாதிக்கிறார்.

பிறகு , மன்னரின் தலையில் பரிவட்டம் கட்டி, தங்கத்தாலான சடாரி சாதிக்கிறார்.
அரசன் தலை குனிந்து , கரங்களைக் கூப்பி மிக, மிகமிக பவ்யமாக ஏற்றுக் கொள்கிறார்

இந்த க்ஷணத்தில் , ஆமாம், இந்த சமயத்தில்,
தலைமை அர்ச்சகர் மனத்தில் ஒரு சிந்தனை ஓட்டம் —

அது என்ன தெரியுமா —?
நாட்டை ஆளுகின்ற , அதிகாரம், புகழ் என்று எல்லாம் நிறைந்த அரசன் ,
என்னிடம் குனிகிறார். நானே அரசனைவிட உயர்ந்தவன்
இந்த செருக்குதலைமை அர்ச்சகரின் மனத்திலும், கண்களிலும் மிதக்கிறது

சில நாட்கள் செல்கின்றன.
ஒருநாள். காலைவேளை . தலைமை அர்ச்சகர் பெருமாள் சன்னதிக்கு வருகிறார்.
ஆராதந தங்க வட்டில்கள் போன்ற பாத்ரங்கள் இருக்கின்றன.
ஆபரணங்கள் யாவும் இருக்கின்றன
ஆனால், ஆனால், என்ன, இது,
தங்க சடாரி எங்கே?
அர்ச்சகர் திடுக்கிடுகிறார்
மீதி அர்ச்சகர்களைக் கேட்கிறார் .
கோவில் சிப்பந்திகளைக்கேட்கிறார்
ஒருவருக்கும் தங்க சடாரி எப்படி மாயமாக ,
எங்கு மறைந்தது என்று தெரியவில்லை
தங்க சடாரி காணவில்லை என்கிற செய்தி அரசனுக்கு எட்டுகிறது
அரசனுக்கு, கோபமான கோபம்.
அரசனின் ஆணை ;
அரண்மனைக்காவலர்கள் தலைமை அர்ச்சகரை இழுத்துவந்து ,
அரசனின் சபாமண்டபத்தில் அரசனின் முன்பாக நிறுத்துகிறார்கள்.
அமைச்சர்கள், சேனாதிபதி, அரசனின் பிற அதிகாரிகள், ஆயுதம் தாங்கிய வீரர்கள்
சபாமண்டபத்தில் இருக்க,
அர்ச்சகர் குற்றவாளியாக
தலை குனிந்து அரசர் முன்பாக நிற்கிறார்
அரசன் ” பகவானின் சன்னதியில் இருந்த தங்க சடாரி எங்கே ? ” என்று மிகவும் கோபமாக கேட்கிறார்
தலைமை அர்ச்சகரால் , பதில் சொல்ல முடியவில்லை .
அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்

தலைமை அர்ச்சகருக்கு ஏன் இந்த நிலை?

பிறகு, இன்னொரு காட்சி
பாரதம் , சுதந்திரம் அடைந்தபிறகு அதே கோவிலில் நடந்த சம்பவம்.
சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு நடந்தது.
அந்த மாநில முதலமைச்சர் , பகவானை தரிசிக்க கோவிலுக்கு வருவதாக, செய்தி.
உச்சிகாலம் வரை காத்து இருந்தார் , அர்ச்சகர்.
முதலமைச்சர் வரவில்லை. கோவில் உச்சிகால பூஜை முடிந்து சாத்தப்பட்டது
சாயங்காலம் , கோவில் திறக்கப்பட்டு , பூஜைகள் தொடர்ந்தன .
முதல்;அமைச்சர் எங்கு என்றே தெரியவில்லை.
இரவு அர்த்தஜாமம் முடிந்து , கோவில் சாத்தப்படும் நேரம். .
இப்போதுதான் அது நடந்தது.
போலீஸ் , மற்றும் பரிவாரங்கள் புடைசூழ ஏகப்பட்ட ஆர்ப்பட்டங்களுடன்
முதலமைச்சர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.
கோவில் அர்ச்சகர் , அர்த்தஜாமம் முடிந்தபிறகு , சன்னதி திறக்கப்படக்கூடாது என்று
மன்றாடியும் சந்நிதி வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டது.
முதலமைச்சர் உள்ளே சென்றார்; வழிபட்டார் திரும்பினார்
ஆனால், தலைமையிடம் போய்ச் சேர்வதற்குள், முதலமைச்சர் பதவி பறிபோயிற்று
முதலமைச்சருக்கு ஏன் இந்த நிலை ?

சமீபத்திய காட்சி
ஒரு மடாதிபதி , இதே கோவிலுக்குச் செல்கிறார். அர்ச்சகர்கள் எல்லாரும் இருக்கிறார்கள்.
இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால்
மடாதிபதி, தன பூர்வாஸ்ரமத்தில் , இந்த அர்ச்சகர்கள் கூடவே , பள்ளியில் படித்திருக்கிறார் ,
விளையாடி இருக்கிறார். அர்ச்சகர்களுக்கு பிரமிப்பு.
இவருக்கோ பெருமை.
ராஜாக்கள் அரசாண்ட காலத்தில் நடந்தது ,இப்போது மறுபடியும் அரங்கேறுகிறது.
கொஞ்சம் விரிவாகவே——-
.
மடாதிபதிக்கு சடாரி சாதிக்கும்போது, அர்ச்சகர் நினைத்துக்கொள்கிறார்
” எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் , சடாரி சாதிக்கும்போது , எனக்குத் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். ”
சடாரி சாதித்துக்கொளும்போது , மடாதிபதி நினைத்துக்கொள்கிறார்
” எவ்வளவு பெரிய அர்ச்சகராக இருந்தாலும் , என்னிடம் பவ்யமாக வந்து மரியாதை கொடுத்துத்தான் ஆகவேண்டும்”

மறுநாள் காலை
அர்ச்சகருக்கு வலது கை பாரிச வாயுவால் பீடிக்கப்பட்டு , கையைத் தூக்க முடியவில்லை
மடாதிபதி , நோவு சாத்திக்கொண்டு , படுத்த படுக்கையாக ஆகிவிட்டார்

இவர்களுக்கு ஏன் இந்த நிலை ?

ஹே, பரந்தாமா
உன் லீலைக்கு எல்லையே இல்லையா !

மற்றவை நேரில்

About the Author

Leave A Response