தனியன்–7

Posted on May 4 2019 - 10:27am by srikainkaryasriadmin
Categorized as
1018

தனியன்—தெரிவோம்—தெளிவோம்– —7
—————————— —————————— ——————-
தனியன் என்கிற இந்தத் தலைப்பில்,
இதுவரை அடியேன் எழுதியுள்ளத்தைப் படித்துப் பாராட்டுகின்ற சில
அன்பர்கள்,

ஆசார்ய பரம்பரையையும் தெரிவித்தால், எந்த ஆசார்யருக்குப் பிறகு
எந்த ஆசார்யர் என்பதை மனத்தில் நிறுத்தி —
இன்னும் மிக ஆழமுடன் ,தனியனை அருளியவர்களையும்
அந்தத் தனியனின் அர்த்தத்தையும் ,நன்கு அனுபவிக்கலாம் என்று
தெரிவித்தார்கள்.

அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, குரு பரம்பரையை
இங்கு கொடுத்துள்ளேன் —–ஸ்வாமி தேசிகன் வரை——

—————————— —————————— —————————— —————————

இப்போது அடுத்த தனியன்

குருமுக மநதீத்ய ப்ராஹவேதாந சேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாதுகாம : |
ஸ்வஸுர மாமரவந்த்யம் ரங்கநாதஸ்யஸாக்ஷாத்
த்விஜகுல திலகந்தம் விஷ்ணு சித்தம் நமாமி ||

பெரியாழ்வார் திருமொழியை (பெரிய திருமொழி) ஸேவிக்கும் முன்பாக
இந்தத் தனியன் சொல்லப்படுகிறது……..இதற்கு ப் பின்பு
”மின்னார் தடமதிள் சூழ் ——”
”பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று —-”
சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு,
”பல்லாண்டு, பல்லாண்டு , பல்லாயிரத்தாண்டு—–” முதல் பத்து,1ம் திருமொழி —
அனுசந்திக்கப்படுகிறது.

இந்தத் தனியன், ஸ்ரீமந்நாதமுநிகள் அருளியது—–

இவரது சரிதக் குறிப்பு, தனியன் 3வதில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை இங்கு மறுபடியும் கொடுக்கப்பட்டுள்ளது——-

ஸ்ரீமந் நாதமுநிகள்—வீரநாராயணபுரம் என்கிற காட்டுமன்னார்கோவிலில்
சொட்டைக்குலத்திலகரான ஈச்வர முனிகளுக்கு, கலி 3985ல் ஸோபக்ருத் வருஷம்
ஆனி ,அநுஷத்தில் அவதாரம். வேதவேதாந்த விற்பன்னர் ;யோகரஹஸ்யம்
நன்கு அறிந்தவர்.மறைந்துபோயிருந்த ”திருவாய்மொழி ”முழுவதையும் மற்றும்
மற்ற ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களையும், ஆழ்வார் திருநகரிக்குச் சென்று,
அங்கிருந்தவர் நியமனப்படி, ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”பாசுரங்களை,
ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில் பன்னீராயிரம் தடவை அநுஸந்தித்து ,
தம்முடைய யோகதசையில் ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து , அவரிடமிருந்து,
திருவாய்மொழியும் மற்ற எல்லாப் பிரபந்தங்களும் உட்பொருளுடன் அறிந்து,
ரஹஸ்ய மந்த்ரங்களையும் உபதேசிக்கப் பெற்றார்.
பிரபந்தங்களை, இயலும் இசையுமாகத் தொகுத்தார். முதலாயிரம், பெரிய திருமொழி ,
இயற்பா , திருவாய்மொழி என்று பிரித்து தன்னுடைய மருமான்களான
கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் இவர்களுக்கு, தேவகானமாகப்
பாடும்பாடி , பழக்கினார் ஆதலால், இவர் , தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்.
இவருடைய பேரன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீமந் நாதமுநிகள் அருளிய நூல்கள்—ந்யாய தத்வம், யோகரஹஸ்யம்
இவருடைய சிஷ்யர்களில் ,உருப்பட்டூர் ஆச்சான் முக்கியமானவர்–இந்த உருப்பட்டூர்
ஆச்சான் வம்சமே அடியேனின் பாக்யம்

ஸ்வாமி தேசிகன் அதிகார ஸங்க்ரஹத்தில் ———

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசைதந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே

என்கிறார்

யதிராஜ ஸப்ததியில் —

நாதேந முநிநாதேந பவேயம் நாத வாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||

வேதங்களில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை ஆய்ந்து எடுத்து, உள்ளங்கை
நெல்லிக்கனிபோலக் காட்டிய ,நாதமுனிகளை ,நமக்கு நாதனாகப் போற்றுவோம்.

முநித்ரயம்
நாதமுநி
யாமுனமுநி
ராமாநுஜ முநி

இந்த த்ரயத்துக்கு ,ப்ரதம முநி இவரே—–
கி.பி. 917ல் தாது வருஷம் மாசி மாதத்தில் சுக்லபக்ஷ ஏகாதசியில் ,
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே ”சம்போடை”என்கிற சொர்க்கப் பள்ளத்தில்
திருநாடு அலங்கரித்தார்.

இனி தனியனின் சுருக்கமான அர்த்தம்

ஸ்ரீமந் நாதமுநிகள் அருளிய , முதலாயிரம் (பெரிய திருமொழி ), திருவாய்மொழி ,
இயற்பா என்கிற க்ரமத்தில் ,முதல் ஆயிரத்தில் முதல் ப்ரபந்தமான
பெரியாழ்வார் திருமொழித் தனியன் வ்யாக்யானம் செய்யப்படுகிறது—-

இந்தத் தனியனும், ”மின்னார் தடமதிள்சூழ் —-” இந்த இரண்டு தனியன்களும்,
நாதமுநிகள் யோகதசையில் ஆழ்வாரை (நம்மாழ்வார்) ப்ரத்யக்ஷீகரித்து ,
நாலாயிரத்தையும் அதிகரித்தபின்பு
கோயிலிலே (ஸ்ரீரங்கத்திலே ) 21 நாட்களிலே திருவத்யயன உத்ஸவத்தை
நடப்பிக்கத் திருவுள்ளமாய் , முதலாயிரம் முதலானவற்றை ஸேவிக்கும்போது
பெரியாழ்வார் அருளிய பாசுர அர்த்தங்களில் ஆழ்ந்து,அருளிச் செய்த தனியன் .—

இதை, பிள்ளான் ( திருக்குருகைப் பிரான் பிள்ளான் ), பெரியாழ்வார் திருமொழியை
ஸேவிக்கும் முன்பாக , அநுஸந்திக்கவேண்டுமென்று நியமித்தார்.

”நரபதி பரிக்லுப்தம் ஆதாதுகாம :—-”
பாண்டிய தேசத்து அரசனான வல்லபதேவனாலே , பரதத்வ நிர்ணயம் செய்யக்கட்டப்பட்ட
வித்யா சுல்கமான தனத்தை, அப்படியே நிர்ணயம் செய்து, அந்தத் தனத்தைப் பெற்று,
கோயில் திருமதிள் முதலான திருப்பணிகளுக்குச் செலவழிக்க விருப்பம் அடைந்த
பெரியாழ்வார் —

”குருமுகமந தீத்ய ப்ராஹ வேதாந ———–”
பரதத்வ நிர்ணயம் செய்ய சமயம் வந்தபோது ”கருடாம்ஸர் ”என்பதைச்
சொல்பவராய், நிர்ணயம் செய்தார்.
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விஷ்ணு சித்தர் விரித்துரைத்தார்
என்பர் .

”ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் ————–”

திருத்துழாய்ப் பாத்தியில் ஆவிர்ப்பவித்து கோதையாகி ,விஷ்ணுசித்தரால்
தூய திருமகளாக வளர்க்கப்பட்டு ,சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகி,பெரியாழ்வாருக் கு ,
அழகியமணவாளன் ஸ்வப்னத்தில் சொல்லியபடி ,அவளை ஸர்வாபரணபூஷிதையாய்
பல்லக்கில் அமர்த்தி , அழைத்துச் சென்று திருவரங்கச் செல்வனின் திருக்கோயில் செல்ல ,
திருமணத்தூண் அருகே அவள் ,மணவாளன் திருமேனியில் ஆவிர்ப்பவித்தாள் .
அப்போது, அழகிய மணவாளன் ”நமக்கு ச்வசுரரான பெரியாழ்வாருக்கு அருளப்பாடு ”
என்று நியமிக்க அதனால், பகவானாலேயே ” ஸாக்ஷாத் ச்வசுரர் ” என்று விசேஷ
கடாக்ஷம் பெற்றவர். என்று விவரிக்கப்படுகிறது.

”அமரவந்த்யம்——”
நித்ய ஸூரிகளாலே வணங்கப்படுபவர் —

”த்விஜகுல திலகம்—-”
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணன் –இதை வெளிப்படுத்தி, மறை நான்கும்
போற்றும் பட்டனுக்கே , திருமகளைக் கொடுத்து மகிழ்ந்ததால் –இவர் பெரிய அந்தணர்.
பட்டநாதர்–”த்விஜகுல திலகம்—-”

”விஷ்ணு சித்தர்–”
எப்போதும் விஷ்ணுவையே சித்தத்தில் கொண்டவர் —உன்னைக்கொண்டு
என்னுள் வைத்தேன்; என்னையும் உன்னில் இட்டேன் —-” என்று எப்போதும்
விஷ்ணுவையே சிந்திப்பவர் .
பெரியபிராட்டியாரோடும் அடியாரோடும் ”பல்லாண்டு பல்லாண்டு —”என்று
மங்களாசாஸனம் செய்த ஆழ்வாரை ” நமாமி” என்பது.

இப்படி, இந்தத் தனியனாலே ஆழ்வாரைச் சரணம் என்று அடைந்து , ஆழ்வார்
அடியார்களையும் சரணம் அடையும் விதத்தை இந்தத் தனியன் சொல்கிறது.
.


Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response