உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்–தொகுத்து எழுதியது
”ஸ்ரீவத்ஸ கோத்ரம் ” என்கிற அடியேன் எழுதிய புத்தகத்தில்
முன்னுரையாகச் சொல்லியிருப்பதாவது——
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய வம்சத்துக்கு ”மூல புருஷர் ”
யார் என்பதைத் தெரிந்துகொள்ளல் அவச்யம். நம்முடைய அப்பா யார்,
அம்மா யார் என்று தெரிந்துகொள்வதில் உள்ள ஆர்வமும் , பற்றும் ,
வம்சத்து மூல புருஷரைத் தெரிந்துகொள்வதிலும் இருக்க வேண்டும்.
முக்கியமாக,ப்ராஹ்மணனுக்கு அவன் அத்வைதியாக ( ஸ்மார்த்தர் ) இருந்தாலும்,
விசிஷ்டாத்வைதியாக ( வைஷ்ணவர் ) இருந்தாலும், த்வைதியாக ( மாத்வர் )
இருந்தாலும் ,இப்படிப்பட்ட வம்ச பரம்பரையையும் ,வம்சத்து ஆதி புருஷரையும்
தெரிந்துகொள்வது மிக மிக அவச்யம். இந்த வம்ச பரம்பரைதான் ”கோத்ரம் ”
என்று சொல்லப்படுகிறது.
ப்ராஹ்மணனுக்கு முதன்மையான கடன்கள் மூன்று . அவை, ரிஷிக்கடன் ,
தேவர்க்கடன் ,பித்ருக் கடன் என்பன .
வேதாத்யயனம் செய்வதால் ரிஷிகளின் கடனும்,
யாகங்கள் செய்வதால் தேவர்களின் கடனும்
மக்களைப் பெறுவதால் பித்ருக்களின் கடனும்
தீருகிறது.
பித்ருக்களின் கடன், ச்ராத்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு கார்யம் மூலமாகவும்
தீருகிறது. தினந்தோறும் ஸ்நானம் பண்ணியவுடன் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்
அனுஷ்டிக்கப்படுவது இதனால்தான்.
அபிவாதனம் —ரிஷிகள்
ஒருவனுக்கு ”உபநயனம் ”ஆனபின், ஆசார்யனையும் , பெரியவர்களையும் ஸேவிக்கும்போது
அவன் ”அபிவாதனம் ” செய்கிறான்.
த்ரிகால ஸந்த்யாவந்தனத்திலும் இதைச் சொல்கிறான். பெரியவர்களைச்
ஸேவிக்கும்போதும் அபிவாதனம் செய்து கோத்ர ரிஷி , ப்ரவர ரிஷிகளைச் சொல்கிறான்.
அப்போது, தன் கோத்ர ரிஷி ப்ரவர ரிஷிகளைச் சொல்லி, அந்த ஸந்ததியில்
வந்தவன் என்று தன பெயரையும் சொல்கிறான். விவாஹம், பஞ்சகவ்யம் சேர்த்தல்,
புண்ய ஸ்நானம் இவைகளிலும் கோத்ரம் அநுஸந்திக்கப்படுகிறது . இப்படிப்பட்ட
நம் முன்னோர்கள் யார், எந்த ரிஷியின் வம்சத்தில் வந்திருக்கிறோம் ,அவர்களுடைய
பெருமைகள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா ?
கோத்ர ப்ரவரங்கள்—-ஆண் சந்ததியில் மட்டும் தொடர்ந்து வரும். பெண் சந்ததியில்
தொடராது. பெண் கல்யாணமாகி, கணவனுடன் செல்லும்போது கணவனின் கோத்ரம்தான்
இவளுக்கும். இது , ஏன் என்றால் ஒரு சிசுவின் உடலுக்கு உள்ள முக்கியப் பகுதி
அப்பாவிடமிருந்து ( ஆணிடமிருந்து ) வருகிறது.ஒரு சிசுவின் உடல் ஆறு பொருள்களால்
ஆனது.
1. எலும்பு |பிதாவின் உடலிலிருந்து
2. ஸ்நாயு ( நரம்பு ) | சிசுவின் உடலில்
3. மஜ்ஜா (எலும்பின் உள்ளே உள்ள ஒருவகையான த்ரவம் ) |கலக்கிறது ( 1 to 3 )
4. தோல் | மாதாவின் உடலிலிருந்து
5.மாம்ஸம் | சிசுவின் உடலில்
6. ரத்தம் | கலக்கிறது (4 to 6 )
உடலுக்கு வேண்டிய முக்கியமான பகுதி ஆணிடமிருந்தே வருகிறது. இது
ஒரு காரணம். இதைப்போலப் பற்பலக் காரணங்கள் பெரியோர் சொல்வர் .
அப்படிப்பட்ட நம் முன்னோர்கள் யார், எந்த ரிஷியின் வம்சத்தில் வந்திருக்கிறோம்
அவர்களுடைய பெருமைகள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா ?
அப்படிப்பட்ட வம்சத்தில் பிறந்து அவர்களுடைய பெருமைகளுக்கு மாசு
ஏற்படாமல் நடந்துகொள்கிறோமா என்பதையும் யோசிக்கவேண்டாமா ?
ரிஷிகள் நமக்குச் செய்திருக்கும் உபகாரங்கள் அளவிட்டு உரைக்க இயலாது.
ஆச்சர்யமான சக்தியுள்ள அவர்களுடைய வம்சத்தில் பிறந்ததால்தான் , அவர்களுடைய
உதிரம் கொஞ்சமாவது நமது உடலில் இருப்பதால்தான் எத்தனையோ
இடையூறுகளையும் ஆபத்துக்களையும் கஷ்டங்களையும் தாங்கிச் சகித்து
நம்மால் அவைகளிலிருந்து மீள முடிகிறது. தவிரவும் கெட்ட செயல்களைச்
செய்யாமலும் , நல்ல செயல்களைச் செய்யவும் முன்னோர்கள் ,நமக்கு
ஆதர்ச புருஷர்களாக இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஆச்சர்யமான சக்தியுள்ள நமது குல முன்னோர்களான
ரிஷிகள் யார் என்பதை நாம் யாவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரிஷி :—
”ரிஷி ” என்ற சொல்லுக்கு , ”பார்ப்பவர் ” என்று பொருள். ”ரிஷிர் தர்சநாத் ”
என்பது நிருத்தகாரரான ஸாங்க்யருடைய விவரணம். சாதாரணமானவர்கள்
பார்க்க முடியாத அதீந்த்ரியமான விஷயங்களைத் தனது தவத்தின் மகிமையால்
ப்ரத்யக்ஷமாகக் காண்பவர்கள் ரிஷிகள். ”ரிஷீ காதள ”—இது பாணினி பாடம்.
எல்லைகாண முடியாத வேதங்களை , தவம் செய்து ,ப்ரத்யக்ஷமாகவும் ,
அநுமானமாகவும் கண்டு அறியமுடியாதவற்றை அறிவிக்கும் ஸப்தப்ரமாணமே
வேதம்.
நம் முன்னோர்களில் எவரெவர் எந்தெந்த வேதத்தைப் பின்பற்றித் தம் கர்மாக்களை
வகுத்துக்கொண்டார்களோ அவரவர் அந்தந்த வேதப்பிரிவைச் சேர்ந்தவர் என்று
சொல்லப்பட்டனர். ஒருவர் நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்யவேண்டும்
என்கிற விதி இருந்தாலும், நான்கு வேதங்களையும் ஒரே சமயத்தில்
அத்யயனம் செய்வது என்பது முடியாத கார்யம். யார் எந்த வேதத்தை முதலில்
அத்யயனம் செய்தார்களோ அது அவர்களுக்கு ”முதல் சாகை ” அதாவது
”ஸ்வ சாகை ”. இப்படி அத்யயனம் செய்த ரிஷி —-அதாவது—நமக்குப்
பூர்வ புருஷர் —-முன்னோர் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளல் வேண்டும்.
முதல் கோத்ரகாரர்
ஜமதக்நிர் பரத்வாஜோ விச்வாமித்ராத்ரி கௌதம |
வஸிஷ்ட காச்ய பாகஸ்த்யா : முநயோ கோத்ர காரிண : ||
ஜமதக்நி பரத்வாஜர், விச்வாமித்ரர் , அத்ரி, கௌதமர் , வஸிஷ்டர் , காச்யபர் ,
அகஸ்த்யர் ஆகிய இந்த எட்டு ரிஷிகளும் , இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்திற்கு
உரிய முதல் கோத்ரகாரர்கள்.
ஸப்த ரிஷிகள்
இவர்கள், ஸப்தரிஷிகளின் மரபினர் . அதாவது, 1. ப்ருகு , 2.அங்கிரஸ் , 3.மரீசி
4.அத்ரி, 5.புலஹர் , 6.புலஸ்த்யர் , 7. வசிஷ்டர் ஆகிய ஸப்த ரிஷிகளில் ,
1. ஜமதக்னி —- ப்ருகு மரபினராகவும்
2.பரத்வாஜர் |
3. கௌதமர் | (2 ம் 3 ம் ) அங்கிரஸ் மரபினராகவும்
4. காச்யபர் | (4 ம் 5 ம் ) மரீசி மரபினராகவும்
5. வஸிஷ்டர் |
6.அகஸ்த்யர் | ( 6 ம் 7 ம் ) அத்ரி மரபினராகவும்
7. அத்ரி
|
சொல்வர்.
அகஸ்தியரை , மரீசி மரபாகவும் சொல்வதுண்டு.
ப்ருகு , அங்கிரஸ் , மரீசி , அத்ரி , என்கிற நான்கு ரிஷிகளைத் தவிர ,
ஐந்தாமவராக , ”புலஹர் ” , ராக்ஷஸர்களையும் , ஆறாமவராகிய ”புலஸ்த்யர் ”
பிசாசர்களையும், தோற்றுவித்தவர் .
ஏழாமவராகிய ”வஸிஷ்டர் ”, இறந்து மீண்டும் மூன்றாமவராகிய ”மரீசி ”யின்
மரபில் பிறந்தார்.எட்டமவராகிய ”அகஸ்த்யர் ” மரீசியின் மரபில்
மறுபடியும் வந்தவரே.
”ஸப்தானாம் ரிஷீனாம் அகஸ்த்யாஷ்டமானாம் யத் அவத்யம் தத் கோத்ரம்
இத்யாசக்ஷதே ”—-ஸப்த ரிஷிகளும் அகஸ்த்யரும் ஆகிய எண்மரின்
சந்ததி ”கோத்ரம் ” என்பர்.
கோத்ர ப்ரவர்த்தகர்கள் ஆன ரிஷிகள் அனைவரும் மந்த்ர த்ருஷ்டாக்கள்
( மந்த்ரங்களைக் கண்டறிந்தவர்கள் )இப்படி, ப்ரவரங்களில் ரிஷிகள்
ஒருவர், மூவர்,ஐவர் , உள்ளனர். இவை, ஏகார்ஷேயம் , த்ரயார்ஷேயம் ,
பஞ்சார்ஷேயம் என்று அழைக்கப்படும். நால்வரோ , ஐவருக்கு மேற்பட்ட
ரிஷிகளை உடைய ப்ரவரங்களோ பெரும்பாலும் சாஸ்த்ரங்களில் இல்லை.
மந்த்ர த்ருஷ்டாக்கள்
ரிஷிகளில் எவர் அநேக ஜன்மங்களில் இடைவிடாது வேதாத்யயனம் செய்ததாலும்
மந்த்ர அர்த்தங்களை அநுஸந்தித்ததாலும் , அநுஷ்டானத்திலும் தன்மயமான
மனம் உடையவராக இருந்ததாலும் அவர்களுக்கு இந்த ஜன்மத்தில்
ஆசார்ய முகமாக அத்யயனம் செய்யாமலேயே ,முந்தைய ஜன்மங்களில்
அத்யயனம் செய்த மந்த்ரங்களும் , ப்ரமாணங்களும் நினைவிற்கு வந்ததோ
அப்படிப்பட்ட மஹநீயர்கள் —மந்த்ர த்ருஷ்டாக்கள். —-அதாவது,
கோத்ர ப்ரவர ரிஷிகள்
———————————————-
இப்போது, சடமர்ஷண கோத்ரம் பற்றிய பெருமைகளைப் பார்ப்போம்.
ப்ரஹ்மா செய்த யாகத்தில் உதித்தவர்கள் —இவர்கள் ப்ரஹ்மாவின் சிஷ்யர்கள்—
கோத்ர ரிஷிகள்—ப்ரவர ரிஷிகள் என்றும் ஏழு பேர்களைச் சொல்கிறார்கள்
1. ப்ருகு
2.அங்கிரஸ்
3.மரீசி
4.அத்ரி
5.புலஹர்
6.புலஸ்த்யர்
7. வஸிஷ்டர்
இந்த எழுவரும் ஸப்த ரிஷிகள் என்றும், புலஹர் –ராக்ஷர்களைத் தோற்றுவித்தார்
என்றும், புலஸ்த்யர் –பிசாசர்களைத் தோற்றுவித்தார் என்றும், வஸிஷ்டர்
இறந்துபோய் மீண்டும் மரீசி (3 ) மரபில் பிறந்தார் என்றும், சொல்வர்.
எட்டாவதாக ”அகஸ்த்யர் ”மரீசி மரபில் வந்தார் என்றும், ஆக , இந்த எட்டு
ரிஷிகளும் கோத்ர ரிஷிகளே என்றும் சொல்வர்.
மேலும், பத்து முக்ய கோத்ரகாரர்கள் க்ஷத்ரியர்களாக இருந்து ,ப்ராஹ்மணர்களாக
ஆனவர்கள்
1.வைதஹவ்யர் | இந்த நால்வரும் ”ப்ருகு ” மரபு
2. மித்ரயு |
3. ஸுநகர் |
4.யவநர் |
5.ரதீதரர் | 5 முதல் 10 முடிய
6.முத்கலர் |
7. விஷ்ணுவ்ருத்தர் | அங்கிரஸ் மரபு
8. ஹரிதர் |
9. கண்வர் |
10. ஸங்க்ருதி |
இப்படி, 18 பிரிவுகள்—18 பெரிய குடும்பங்கள்
இந்த 18 பெரிய குடும்பங்களில் ,முதல் எட்டை விட்டுவிட்டு,
அடுத்த 10ல் 7 வதாக உள்ள ”விஷ்ணு வ்ருத்தர் ” என்கிற அங்கிரஸ் மரபில்
சடமர்ஷண” கோத்ரம் வருகிறது.
சடமர்ஷண கோத்ரம்
சடமர்ஷண கோத்ரத்திற்கு மூன்று ”ப்ரவர ” ரிஷிகள்
1.அங்கிரஸ்
2.புருகுத்ஸர்
3.த்ரஸ்தஸ்யு
இதை, ஆங்கிரஸ —— பௌருகுத்ஸ்ய —–த்ராஸதஸ்யவ —-
என்று விரித்துச் சொல்வர் —த்ரயார்ஷேயம்
மிக உன்னதமான ரிஷிகள் இந்த கோத்ரத்தில் தோன்றியிருந்தாலும் ,
ப்ரவரத்தில் இந்த மூன்று ரிஷிகளையே உச்சரிக்கிறோம்.
ஏன்,”சடமர்ஷண மஹரிஷியே ” ப்ரவரத்தில் சேர்க்கப்படவில்லை. இருந்தாலும்,
இது, சடமர்ஷண ” கோத்ரம் என்று மிகப் பிரபலமாக இருக்கிறது.
ஸ்ரீவத்ஸ கோத்ரத்திலும் இப்படித்தான். பஞ்சார்ஷேய ப்ரவரம்.
பார்கவ, ச்யாவன ,ஆப்நுவாநு , ஒளர்வ , ஜாமதக்ந்ய ———
ஸ்ரீவத்ஸ மஹரிஷியின் பெயர் இல்லையல்லவா !
சடமர்ஷண கோத்ரத்திலும் இப்படித்தான்.அவருடைய திருநாமம் இல்லை.
இந்த சடமர்ஷண கோத்ரம் , விஷ்ணு வ்ருத்த —ஹரீத வம்ச பரம்பரையில் வருகிறது .
மரீசி
|
கச்யபர்
|
விவஸ்வான்
|
மநு
|
இக்ஷ்வாகு
|
————————
|
யுவநாச்வர்
|
மாந்தாதா
|
——————————————————–
| |
புருகுத்ஸர் அம்பரீஷர்
| |
த்ரஸதஸ்யர் யுவநாச்வர்
| |
ஸம்பூதர் ஹரீதர்
|
விஷ்ணுவ்ருத்தர்
விஷ்ணு வ்ருத்தர் பரம்பரையின் ப்ரவரத்தில் —இந்த சடமர்ஷண கோத்ர ப்ரவரம்
ஒன்றுதான். வேறு கோத்ரப்ரவரம் இல்லை. அதாவது, ஆங்கிரஸ —பெளருகுத்ஸ —-
த்ராஸதஸ்யவ —-என்கிற த்ரயார்ஷேயம்
இப்படிப் ப்ரஸித்தமான கோத்ரங்களில்,மூன்றாவதாகத் த்ரயார்ஷேயப்
ப்ரவரமாகப் பெருமையுடன் பேசப்படும் கோத்ரம் —சடமர்ஷண கோத்ரம்.
இப்போது , ப்ரவர மஹரிஷிகளான —மூன்று மஹரிஷிகளின் —-அதாவது,
ஆங்கிரஸ —பெளருகுத்ஸ —-த்ராஸதஸ்யவ —-மஹரிஷிகளின்
சரிதத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்
அங்கிரஸ மஹரிஷி
இவரது பிரிவில் மூன்று கோத்ரங்கள் . இந்த மூன்றும் இருப்பது வகையாகப்
பிரிகின்றன. யாவும், ”ஆத்ரேய கணம் ” என்று சொல்வர்.
இவர், ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர். அவருடைய முகத்திலிருந்து தோன்றியவர் என்பர்.
கர்த்தம ப்ரஜாபதியின் பெண்ணான ”ச்ரத்தா ” தேவியை ஸஹதர்மசாரிணியாக
ஏற்றார் . இவருடைய குமாரர்கள் தேவகுருவான ”ப்ருஹஸ்பதியும் ”, மற்றும்
அவருக்கு மூத்தவரான ”உத்சயரும் ” என்பர்.
இவருடைய வழித் தோன்றல்களே புருகுத்ஸர் மற்றும் த்ரஸதஸ்யு –கோத்ரப் ப்ரவர
ரிஷிகள்
ப்ரஹ்மாவின் முகத்திலிருந்துதான் ”அக்னி ” தோன்றியது. ஆதலால், இருவரும் ப்ராதாக்கள் .
ஐதரேய ப்ராஹ்மணம் ( 3–34 ) கூறுகிறது—-
அங்காரம் என்றால் அக்னியின் தணல்கள் ( நெருப்புத் தணல் ).
அவையே ”அங்கிரஸ் ” . ப்ரஹ்ம தேஜஸ் வெள்ளமிட்டுப் ப்ரகாசிக்கும் முகம் என்பர்.
சாந்தோக்யம் ( 1–2–10 )சொல்கிறது—-ஸாமவேதத்தில் முக்கியமானது ”உத்கீதம் என்கிற
ஸாமகானம் .இதை முக்யப் ப்ராணனாக அங்கிரஸ் உபாஸனம் செய்தாராம்.
இந்த முக்யப் ப்ராணனே , ”அங்கிரஸ் ” என்று இதில் சொல்லப்படுகிறது.
அங்கங்களுக்கு , ”ரஸம் ” –உயிராக இருப்பது –உடலுறுப்புக்களுக்கு ஸாரமான /
ஆதாரமான முக்யமானது –ப்ராணன் –இந்தப் ப்ராணனையே மூச்சுக்காற்றையே
அங்கிரஸ் என்கிறது இந்த உபநிஷத்.
ப்ரஹ்மா ,யஜ்ஞங்களையும் கூடவே உண்டாக்கி,இவைகளை அநுஷ்டித்து
விரும்பிய பலன்களை அடையுமாறு க்ருபைசெய்தபோது, அங்கிரஸ் மஹரிஷி
இந்த யஜ்ஞாநுஷ்டானத்தைத் திறமையாகச் செய்து உலகுய்யக் காரணமானார்.
அக்னிசயனம் ( ஹோமகுண்டம் ) மிக அழகாகச் செய்து , ”இஷ்டிகைகளை ”
( அக்னிசயனத்துக்கு உபயோகிக்கும் மண்கட்டிகள் ) சரியாகப் பொருத்தி
சரியாமல் நிற்குமாறு செய்வாராம். வேதம் ,இவரையே உதாரணமாக எடுத்துச்
சொல்கிறது. அக்னிசயனம் செய்பவர்கள் யாவரும், இவரை உதாரணமாகச் சொல்லி,
”அவ்வாறே இஷ்டிகைகள் இப்போதும் சரியாமல் நிற்கவேண்டும் ” என்று
பிரார்த்திக்கிறார்கள்.
உபநயன மந்த்ரம்
மந்த்ர ப்ரச்னத்தில் ( 2–4–6 ) உபநயனம் செய்துகொள்ளும் பாலகன் ,
”எனக்கு நல்ல மேதை வேண்டும்; அங்கிரஸ்ஸுக்கள் ,ஸப்தரிஷிகள் , ப்ரஜாபதி ,
அக்னி இவர்கள் இதனை எனக்குக் கொடுக்கவேண்டும் ” என்று ப்ரார்த்தித்து
அக்னியில் ஹோமம் செய்கிறான். இந்த மந்த்ரத்தில் , முதலில்
சொல்லப்படுவது , ”அங்கிரஸ் ” .
இந்த மேதை ,அங்கிரஸ்ஸுக்கு பிறவியிலேயே ஏற்பட்டது என்பர்.
ரகுவம்ஸ மூல புருஷர்
ரகுவம்ஸத்தில் உதித்தவர், ஸ்ரீ ராமன். ஸ்ரீ ராமனுடைய கோத்ர ப்ரவரம்
”ஆங்கிரஸ —-ஆம்பரீஷ –யெளவநாச்ய —” என்பது.
ஆதலால், ரகுவம்சத்தின் மூல புருஷராகிறார் இவர். ரகுவம்சம் ,
ஸூர்ய வம்சம், இக்ஷ்வாகு வம்சம் என்றுதானே சொல்கிறார்கள், அங்கிரஸ்
வம்சம் என்று சொல்லவில்லையே என்று எண்ணவேண்டாம்.
இவர் ப்ரஹ்மாவின் முகத்திலிருந்து தோன்றி, ஸூர்யனையும் ,மநுவையும்
உண்டுபண்ணினார் என்பர் . ”தபஸச் ச மநும் புத்ரம்பாநும் சாப்யங்கிரா : ஸ்ருஜத் ”
என்கிறது மஹாபாரதம்.
புரோடாசம்
தர்சபூர்ணமாஸம் என்கிற யாகத்தில், அரிசிமாவினால் ஆமையின் வடிவம்போலச்
செய்து, அக்னியில் சேர்ப்பார்கள். இப்படித் செய்யப்படும் பொருள் புரோடாசம்
எனப்படும். இம்மாதிரி ஹோமம்செய்ய வழிவகுத்தவர் அங்கிரஸர் .
அங்கிரஸாம் த்விராத்ரம்
இரண்டு நாட்களில் செய்துமுடிக்கவேண்டிய யாகம் ”த்விராத்ரம் ”
முதல் நாளில் ஸாமகானத்தின் முடிவில் ”ஹவிஷ்மான்” என்கிற பதமும்,
இரண்டாம் நாள் ஸாமகானத்தின் முடிவில் ”ஹவிஷ்க்ருத் ” என்கிற பதமும் வரும்.
இவ்விருவரும் அங்கிரஸ்ஸுக்களின் கணத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கண்டுபிடித்த யாகம், ”த்விராத்ரம்.இந்த யாகத்தை இப்போதும் செய்பவர்கள்,
”அங்கிரஸாம் த்விராத்ரேண யக்ஷ்யே —–” என்றுதான் சங்கல்பித்துக்கொள்ளவேண்டும்.
ஸ்நாநாங்க தர்ப்பணத்தில் அங்கிரஸ்
ஸ்நானம், திதி வார நக்ஷத்ரங்களைச் சொல்லி ஸங்கல்பம் செய்துகொண்டு
தீர்த்தமாடவேண்டும் . ஸ்நானம் முடிந்தவுடன், செய்யப்படும் தர்ப்பணத்தில்
மூன்றாவதான பித்ரு கணத்தில் அங்கிரஸ் மஹரிஷியின் பெயரைச் சொல்லித்
தர்ப்பணம் செய்கிறோம்
அமாவாஸ்யை, மாசப்பிறப்பு, வருஷப்பிறப்பு போன்ற புண்யகாலங்களில்
செய்யும் தர்ப்பணங்களில்அங்கிரஸ் முக்கிய இடம் பெறுகிறார். தைத்திரீய ஸம்ஹிதை
இதைச் சொல்கிறது.
ரிஷிகளின் கணத்தில் இருந்து பூஜிக்கப்படுபவரைப்போல ,பித்ரு கணத்திலும்
பூஜிக்கப்படுகிறார்.
அங்கிரஸரின் குமாரர் ப்ருஹஸ்பதி .இவர் தேவர்களின் குரு . இவருடைய குமாரன் ”கசன் ”.
தேவர்களின் காரியத்துக்காக சுக்ராசார்யாரிடம் சென்று, ஸஞ்ஜீவினி வித்யையைக்
கற்றான்
ரிஷேங்கிரஸ : பௌத்ரம் ,புத்ரம் ஸாக்ஷாத் ப்ருஹஸ்பதே |
நாம்நா கச இதி க்யாதம் சிஷ்யம் க்ருஹ்ணாது மாம் பவாந் ||
—————-ஸ்ரீ மஹாபாரதம் 1–71– 17
நான் அங்கிரஸ் மஹரிஷியின் பேரன் ;; ப்ருஹஸ்பதியின் புத்ரன்; என்று சுக்ராசார்யரிடம்
அறிமுகப்படுத்திக்கொள்கிறான் .
அக்ந்யாதாநம்
அக்னியில் சில ஹோமங்களைச் செய்து, லௌகீக அக்னியை வைதீகமாக்குவது—
இப்படி அக்னியை வைத்திருப்பவர் ,” ஆஹிதாக்னி ” எனப்படுவர் .இந்த ஆதாநத்தில்
அங்கிரஸ் –ப்ருகு இருவருமே மேதாவிலாசம் மிக்கவர்கள் .
இப்படி அக்ந்யாதாநம் பண்ணக்கூடியவர்களில் , ப்ருகு —அங்கிரஸ் குலத்தில்
உதித்தவர்கள் ஒருவகை என்றும் மற்ற ப்ராஹ்மணர்கள் ஒருவகையென்றும்
தைத்திரீய ப்ராஹ்மணம் கூறுகிறது.
ப்ருகு —அங்கிரஸ் —-சகோதரர்கள்
ப்ருகு மஹரிஷி அக்னி ஜ்வாலையிலிருந்து தோன்றினார் என்றும் அதாவது அக்னி
ஜ்வாலையே ப்ருகு மஹரிஷி ஆயிற்று என்றும், அந்த நெருப்புத் தணலிலிருந்து
அங்கிரஸ மகரிஷி தோன்றினார் என்றும் அதாவது,நெருப்புத் தணலே ,
அங்கிரஸ மஹரிஷி ஆயிற்று என்றும் ஐதரேய ப்ராஹ்மணம் விளக்குகிறது.
( அத்ரி மஹரிஷி ,விகநஸர் இருவரும் மூன்றாவதாக ,நான்காவதாகத் தோன்றினார்கள்
சந்தர்ப்பத்தில் விளக்கப்படும் )
இவர் க்ருஷ்ண பக்தர்
ப்ரபஞ்ச ச்ருஷ்டியின் ஆரம்பத்திலேயே , தோன்றியவர் அங்கிரஸர் . இவருக்கும்
இவரது வம்சத்தவருக்கும் க்ருஷ்ணனிடம் அதீத பக்தி. அதைப்போலவே, க்ருஷ்ணனுக்கும்
இவரது வம்சத்தாரிடம் அபிமானம். சாந்தோக்யம் ( ஸாமவேதம் ) புருஷ வித்யையைச்
சொல்கிறது. அங்கிரஸ்ஸின் குமாரர் கோரர் இந்த வித்யையை அப்சயித்தது
மட்டுமல்லாமல் இந்த யோக மார்க்கத்தை க்ருஷ்ணனுக்கும் சொன்னாராம்.
இவர் க்ருஷ்ண பக்தர்.
செத்த பிள்ளையைப் பிழைக்க வைத்தார்
சூரசேன ராஜ்யத்து அரசனான சித்திர கேதுவின் பிள்ளை ,செத்துவிட்டது.
அப்போது அங்கிரஸ் , நாரதருடன் அங்கு வந்து பிள்ளையைப் பிழைக்கவைத்தார்.
ஆனால், மறுபடியும் அக்குழந்தை செத்துவிட்டது. அக்குழந்தைக்குப்
பிழைத்து எழுந்து வாழ விருப்பமில்லை. அரசனுக்கு மஹா துக்கம்.
அங்கிரஸ் மஹரிஷியும் நாரதரும் இதை அரசனுக்கு எடுத்துச் சொல்லியும்,
அரசன் சமாதானம் அடையவில்லை.
நாரதரும் , அங்கிரஸ்ஸும் , செத்த அக்குழந்தையின் சரீரத்தைப் பார்த்துக்
கூப்பிட்டவுடன், அச் சரீரத்தில் ஜீவாத்மா புகுந்து,
வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லிற்று. இதை ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
( இது ஒரு பெருங்கதை .இங்கு விரிக்கின் பெருகும் )
ததீசி மஹரிஷி
இவருடைய முதுகெலும்பை எடுத்துத்தான் ,இந்திரன் ,வ்ருத்தாசுர யுத்தத்தில்
அவனை அழித்தான்.
உலக க்ஷேமத்துக்காக,உயிரை இழந்து இன்றும் ப்ரஸித்தமாக இருக்கும்
ததீசி ரிஷி அங்கிரஸ்ஸின் குமாரர். அங்கிரஸ் மகரிஷிக்கு, ”அதர்வா ” என்கிற
பெயரும் உண்டு.
அக்னி ஹோத்ரம்
அக்னியில் ஹோமம் செய்வதைத் தோற்றுவித்தவர் ,அங்கிரஸ மஹரிஷி.
அக்னியைக் கண்டுபிடித்து அக்னியில் ஹோமம் செய்யும் விதத்தை ஏற்படுத்தி
”அக்னி ஹோத்ரம் ”என்பதான ஹோமச் சடங்கைத் தோற்றுவித்தவர் இவரே.
உலக க்ஷேமார்த்தமாகத் தொடங்கப்பட்ட இந்த ஹோமம் ,
இன்றும் சிலருடைய திருமாளிகைகளிலும் , மஹரிஷியின் வம்சத்தார் சிலராலும்
தொடர்ந்து இந்த ஹோமம் நடைபெறுகிறது.
யாக தக்ஷிணை
யாகங்களில், கர்த்தாவுக்கு ஸஹாயமாக இருந்து யாக கார்யங்களைச் செய்பவர்கள்
”ரித்விக்குகள் ”. யாகம் முடிந்தவுடன் அவர்களுக்கு, எஜமானன் கொடுப்பது ”தக்ஷிணை ”
தர்மசாஸ்த்ரப்படி , ஒருவரிடம் ஒரு பொருளைத் தானமாகப் பெறுவது ,இழிவு.
யாகவிதிகளின்படி, தக்ஷிணை கொடுத்தால்தான் யாகம் பூர்த்தியாகும்.
இதற்கு ஒரு வழி ஏற்படுத்தினார் அங்கிரஸர் . ”தக்ஷிணையே –உன்னைக் கையேந்தி
வாங்கிக் கொள்பவர் அங்கிரஸ் — என்கிற மந்த்ரத்தைச் சொல்லி தக்ஷிணையை
வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அவர் பெயரைச் சொல்லி தக்ஷிணை
வாங்கிக்கொண்டால் ,இழிவோ, குறைவோ நம்மை அணுகாது ; அவை அங்கிரஸ
மஹரிஷியிடம் போய்ச் சேர்வதற்குள் அவை உருக்குலைந்து இடம் தெரியாமல்
மறைந்துவிடும் . நெருப்புத் தணல்தானே அங்கிரஸ மஹரிஷி , அவரை அண்ட முடியுமா !
ப்ராணாயாமம்
ப்ராணாயாமம் செய்யும்போது ஓங்காரத்துடன் ஏழு வ்யாஹ்ருதிகளைச்
சொல்லவேண்டும்.
இதில் உள்ள ஏழு வ்யாஹ்ருதிகளில் , ஏழாவதான ”ஸத்யம் ” என்கிற வ்யாஹ்ருதிக்கு
ரிஷி அங்கிரஸ் .
அக்னிக்கு ஏழு நாக்குகள்
தைத்திரீய ஸம்ஹிதை சொல்கிறது—
அக்னியே —உனக்கு எல்லாம் ஏழுதான் . ஸமித்துக்கள் , நாக்குகள்,ரிஷிகள்,
இருப்பிடங்கள், ஹோதாக்கள் அவர்கள் உன்னைத் துதிக்கும் முறைகள் ,
பிறப்பிடங்கள் எல்லாமே உனக்கு ஏழுதான்.
இதில், அக்னிக்கு ஏழுநாக்குகள் இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்
அங்கிரஸ மஹரிஷி .
அங்கிரஸர் அருளிய தர்ம சாஸ்த்ரம்
இவர் உலக நன்மைக்காக யாகங்களைச் செய்து அனுஷ்டித்தது மட்டுமல்லாமல்
”அங்கிரஸ் ஸ்ம்ருதி ”என்கிற சாஸ்த்ரா நூலையும் வழங்கியிருக்கிறார்.
அங்கிரஸ மஹரிஷியைப் பற்றி, ரிக்வேதம் ,முண்டகோபநிஷத் , ஐதரேய ப்ராஹ்மணம் ,
தைத்திரீய ஸம்ஹிதை ,மந்த்ர ப்ரச்னம் , தைத்திரீய ஆரண்யகம் , தைத்திரீய ப்ராஹ்மணம்
மஹாபாரதம் ,சாந்தோக்யம் , பாகவதம், இவற்றிலெல்லாம் பரக்கப்
பேசப்பட்டுள்ளன. விரிவுக்கு அஞ்சி,இத்துடன் அங்கிரஸ் மஹரிஷியின் சரிதத்தைச்
சொல்லி அவரை நமஸ்கரித்து, அவருக்கு அடுத்ததாக உள்ள ”புருகுத்ஸர்”
சரிதத்தைப் பார்ப்போம்.
புருகுத்ஸர்
இவருடைய சரிதம் ”குத்ஸர்” என்றே அழைக்கப்பட்டு , ரிக்வேதங்களில் நாற்பது —
ஐம்பது —இடங்களில் பரக்கப் பேசப்படுகிறது. ஆனால், இதிஹாச புராணங்களில்
அதிகமாகக் காணக் கிடைக்கவில்லை.
அங்கிரஸ மஹரிஷியைப் போலவே , இவரும் வேதங்களில் ப்ரஸித்தமானவர் .
பல ரிக்வேத மந்த்ரங்களைக் கண்டவர். அவைகளை அருளி அவற்றுக்கு ரிஷியாக இருப்பவர்.
இந்தப் பெயரின் அர்த்தம் , ”நிந்திப்பவர் ” , ”வைகிறவர் ” , ”இழிவுபடுத்துகிறவர் ” ,
என்று இருந்தாலும், துர்மார்க்கத்தில் செல்பவர்களை சதாசர்வகாலமும்
நிந்தித்துக்கொண்டே இருப்பவர், வைதுகொண்டே இருப்பவர் , என்றும் பொருள்கொள்ளலாம் .
அயோக்கியர்கள் இவரை எப்போதும் நிந்தித்துக்கொண்டே இருந்திருக்கலாம்.
அதுவே இவரின் பெயராக ஆகியிருக்கலாம்.
ஆனாலும், இவருடைய தூய்மை , தவ வலிமை , அநுஷ்டானம் முதலியவை
எள்ளளவும் குறையாது.
ருரு என்கிற ராஜரிஷியின் குமாரர் என்றும், அவருடைய காலத்தில் ,பகைவர்களை
வெல்ல இயலாமல் இந்திரனின் நட்பைப் பெற்று, விரோதிகளை வென்றார் என்றும்
இந்திரனோடு வடிவழகிலும் மனப்போக்கில் ஸ்நேஹம் என்றும் ரிக்வேதம் வர்ணிக்கிறது
( 4–16–10 )
ரிக்வேதத்தில் பல ரிக்குகளுக்கு இவரே ரிஷி
இவர் வரதந்து என்கிற மஹரிஷியிடம் வேத சாஸ்த்ரங்களை முறைப்படிக் கற்று,
அவரிடம் கற்றுத் தேர்ந்து, குரு , தனக்குத் தக்ஷிணை வேண்டாமென்று
மறுத்தபோதிலும் , இறுதியில் அவரது கட்டளைக்கு இணங்க , பதினான்கு கோடிப் பொன்
குரு தக்ஷிணை கொடுக்க, ரகு மஹாராஜனிடம் யாசித்து, அவன் ப்ரம்மாண்டமான
பொற்குவியலைக் கொடுக்க, அதிலிருந்து பதினான்கு கோடிப் பொன் மட்டில்
பிரித்து எடுத்துக்கொண்டு, மிகுதியைத் திருப்பிக் கொடுக்க ரகுமஹாராஜன்
மீதியை வாங்க மறுக்கக் கடைசியில், இருவரும் வந்து, குருவான வரதந்து மஹரிஷியிடமே
ஸமர்ப்பித்து , ரகுமஹாராஜன் வம்சம் வ்ருத்தியடையவேண்டும்
என்று ப்ரார்த்தித்து ஆசீர்வாதம் பெற ,அப்போது அவரது ஆசீர்வாதத்தில்
ரகுமஹாராஜனுக்குப் பிறந்தவர், அஜன் ;பிறகு இவ்வம்சத்தில் ,தசரதர் ,
ஸ்ரீ ராமன் அவதரித்தது தெரிந்த செய்தியே. இப்படி ரகுவம்சம் மறைந்துபோகாமல்
தழைக்கச் செய்த பெருமை கௌத்ஸருக்குக் கிடைத்தது.
இவர் க்ஷத்ரிய அரசராகச் சொல்லப்பட்டாலும் , அக்காலத்தில் பற்பல ரிஷிகள்
இப்படி ராஜரிஷிகளாக இருந்திருக்கிறார்கள் .
ப்ரோக்ஷண மந்த்ரம்
வேதபாராயணம் செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் , கையில் சிறிதளவு
தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு , உத்தேசிக்கப்பட்ட ஒரு பொருள் சுத்தியடைய
தீர்த்தத்தைத் தெளிப்பதே ”ப்ரோக்ஷணம் ”.
”ஓம் பூர் புவஸ்ஸுவ : ” என்பதே ப்ரோக்ஷண மந்த்ரம். இதை, ஓம் , பூர் , புவஸ் ,
ஸுவ : என்று நான்காகப் பிரித்தால் நான்காவதான , ”ஸுவ : ” என்கிற மந்த்ரம்
இவர் கண்டுபிடித்தது. இந்த வ்யாஹ்ருதிக்கு ( வார்த்தை ) இவர்தான் ரிஷி.
( ஓம் பூ ;= கண்டு பிடித்தவர் அத்ரி மகரிஷி. ஓம் புவ : =கண்டுபிடித்தவர் ப்ருகு
மகரிஷி )
இவரைப்பற்றிய விவரங்கள் இவ்வளவே கிடைத்தாலும், இவரது ஜ்ஞானம்
அநுஷ்டானம் , மஹிமை , தவவலிமை முதலியவற்றுக்குத் தலைவணங்கி
இவரை நமஸ்கரித்து , அடுத்து, மூன்றாவது ப்ரவர்த்தகரான ”த்ரஸதஸ்யு ”
மஹரிஷியின் சரிதத்தைப் பார்ப்போம்.
”த்ரஸதஸ்யு ”
இவர் த்ரயார்ஷேய ப்ரவரத்தில் மூன்றாவது மஹரிஷி . ப்ரவரத்தில் மூன்றுபேரையே
உச்சரிக்கும் வழக்கத்தை அனுசரித்து , சடமர்ஷண மஹரிஷியின் திருநாமம்
சேர்க்கப்படாவிட்டாலும், இவரது பெயர் கோத்ரத்துக்கே இடப்பட்டுள்ளது.
த்ரஸதஸ்யு—-புருகுத்ஸருடைய திருக்குமாரர்.
த்ரஸ —–தஸ்யு இரண்டு சொற்கள் சேர்ந்தது. த்ரஸ =பயப்படுத்தல்—
தஸ்யு = துஷ்டர்கள் போன்ற பொருள் கொள்வர்
துஷ்டர்கள் இவரிடம் அஞ்சி ஓடிவிடுவார்களாம்.
ரிக்வேத மந்த்ரங்கள் பல இடங்களில் இவருடைய பெருமையைப் பேசுகிறது.
பல மந்த்ரங்களுக்கு இவர் ரிஷியாகவும் தேவதையாகவும் இருக்கிறார்.
ஒருசமயம் இவரது தகப்பனாரான புருகுத்ஸர் பகைவர்களால் துன்புறுத்தப்பட்டு
வருந்தி இருந்தபோது, இவரது ஸஹதர்மசாரிணியான ”புருகுத்ஸாநி ”
புத்ரஸந்தானமில்லாத தங்களது நிலைமையை நினைத்து வருந்த,
ஸப்தரிஷிகள் அங்கு வந்து, இந்திரனையும் வருணனையும் யாகத்தினால்
ஆராதிக்கச் சொல்ல, அதன்படியே யாகம் செய்து , த்ரஸதஸ்யு–வைப்
பிள்ளையாகப் பெற்றார்கள்.
ரிக்வேதம் நான்காவது மண்டலம் 42 வது ஸூக்தம் –இவரால் காணப்பட்டு
உபதேசிக்கப்பட்டது என்பர். ப்ரம்மநிஷ்டையிலிருந்து என்றும் சொல்வர்.
இந்திரன் அச்வினீ தேவர்கள்,இவர்கள் சார்பில் போரிட்டு ,இழந்த நகரங்களை
மீட்டுக் கொடுத்தார்களாம்.ரிக்வேதம் இப்படிப் பேசுகிறது.
யாகத்துக்கான தக்ஷிணைகளை அள்ளிக்கொடுப்பவர்கள், இவ்வம்சத்தினர்.
ப்ரம்மச்சாரிகளைத் தேடித் சென்று ஏராளமான கன்னிகாதானம் செய்திருக்கிறார்.
இடைவெளி இல்லாமல் யாகங்களைச் செய்துகொண்டே இருந்தவர். காம்யமாக
இல்லாமல் செய்து லோக க்ஷேமத்துக்குச் செய்து எம்பெருமான் உகப்பைப்
பெற்றவர். தன்னுடைய தகப்பனாரின் பெயரையும் சேர்த்தே வேதங்களில் செல்லப்படுகிறார்.
இவருடைய வழித்தோன்றல் , ”சடமர்ஷணர் ”.
பிறவியிலேயே ப்ரஹ்மஜ்ஞானம் பெற்றவர். பிறந்தவுடனேயே ,தன்னை
அழுத்தவந்த ”சடம் ” என்னும் வாயுவை தன்னைச் சூழ்ந்துகொள்ள முடியாதவாறு
விரட்டி அடித்தார். கர்பத்தில் ஏற்பட்ட தத்வஜ்ஞானம் , பிறந்தபின்பும் ,
ஸ்ரீ சடகோபரைப்போல, ஜடபரதரைப் போல , தொடர்ந்தது.
சடம் = ஒருவகையான காற்றுக்குப் பெயர். மர்ஷணர் = விரட்டியடிப்பவர்
விஷ்ணுபக்தர்களாகவே இவ்வம்சத்தவர்கள் இருக்கிறார்கள்.
சடமர்ஷணரைப் பற்றிய விவரங்கள் இவ்வளவே இருந்தாலும்,
கோத்ரமே இவருடைய திருநாமத்தில் இருக்கும்போது ,இதைவிட ,வேறு விவரங்கள்
எதற்கு வேண்டும் !
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ஆணிவேரான ”ஸ்ரீமந் நாதமுனிகள் ”
இதனாலேயே இவ்வம்சத்தில் அவதரித்தாரோ என பிரமிப்பர்.
இன்றுவரை,இந்த கோத்ரத்தில் மாபெரும் வித்வான்கள் தோன்றியிருக்கிறார்கள்.
தர்க்கம், வ்யாகரணம் போன்ற சாமான்ய சாஸ்த்ரங்களுடன் விசிஷ்டாத்வைத
சித்தாந்தத்துக்கு ஆதாரமாகப் பல கிரந்தங்களை இயற்றியிருக்கிறார்கள் .
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு இந்த சடமர்ஷண கோத்ரத்தில்
உதித்தவர் திருமலைநம்பிகள் என்கிற பெரிய மஹான் . திருமலையில்
அடர்ந்த காட்டில் கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸனுக்கு
தினமும் மூன்றுமைல் தூரத்திலுள்ள ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம்
கொண்டுவந்து சமர்ப்பித்துவந்தார்.கோவில் ப்ரதக்ஷணத்தில் தலையில்
தண்ணீர்க் குடம் ஏந்தி வந்த அவரிடம் எம்பெருமானே நேரில் அணுகி
”அப்பா ” என்று அழைத்து த் தீர்த்தம் கேட்டார்.திருமலைநம்பிகளின் அசஞ்சலமான
பக்தி பகவானைக் கவர்ந்து, ”தாத ” என்று அன்புடன் அழைக்கச் செய்தது.
சடமர்ஷண கோத்ரத்துக்குப் பற்பல பெருமைகள் உண்டு.
ஸ்ரீமந் நாதமுனிகள் சடமர்ஷண கோத்ரத்தில் அவதரித்ததும், சடமர்ஷண
கோத்ரத்தில் தோன்றிய ”திருமலைநம்பிகள்” திருவேங்கமுடையானாலே
”தாத ” என்று பெருமைப்படுத்தப்பட்டதும், வேறு எந்தக் கோத்ரத்துக்கும்
இல்லாத தனிப்பெருமை அல்லவா !
அடியேன்
உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்