Posted on Jul 2 2019 - 6:34am by srikainkaryasriadmin

வாச்யனைக்காட்டிலும் வாசகத்துக்கு ஏற்றம்  ‘

எப்போதும் நாராயண ஸ்மரணம் பண்ணும் நாரதருக்கு ,ஒரு சமயம் சந்தேகம் வந்து விட்டது.நாராயணா –நாராயணா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோமே –அவன் திருநாமத்தை எப்போதும் சொல்கிறோமே –இதனால் நமக்கு என்ன பலன் கிடைத்தது என்கிற சந்தேகம். நாராயண —நாராயண  என்று உரக்கச் சொல்லிக்கொண்டே  வைகுண்டத்துக்குச் சென்றார். 

பகவான் கேட்டார் —” என்ன நாரதா ? கலகத்துக்கு ஒருவரும் அகப்படவில்லையா ? இங்கு வந்திருக்கிறாயே என்ன விசேஷம் ? ” என்று கேட்டார். பகவானுக்குத் தெரியாததா, நாரதர் எதற்கு வந்திருக்கிறார் என்று ! அவர் வாயாலே சொல்லட்டுமே என்று இப்படிக்கு கேட்டார் .

 வைகுண்டபதே  ! ஸ்ரீமந்  நாராயணா !  அடியேன் எப்போதும் உமது திருநாமத்தையே உரக்கச் சொல்லிக்கொண்டு உலகங்கள் எல்லாம் சுற்றுகிறேன் !நாராயணா என்று சொல்வதால் என்ன  லாபம் ? தேவரீரின் திருவாக்கால் அறிய விரும்புகிறேன் ” என்றார். 

நாரதா –இதெல்லாம் இருக்கட்டும் —பூலோகத்தில் பாரத தேசத்தில்  நைமிசாரண்யம் கேள்விப்பட்டு இருக்கிறாயா ? ” என்று கேட்டார் 

நாரதர்  உடனே, ஸ்வாமி ! தேவரீர் அங்கு அரண்ய ரூபியாக அல்லவோ ஸேவை ஸாதிக்கிறீர் !வேத வ்யாஸர்நைமிசாரண்யத்தில்தானே  வேதங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்;18 புராணங்களையும் இங்குதான் இயற்றினார் ;மகாபாரதத்தையும் இங்குதானே  இயற்றினார் ;துருவன் இங்குதானே தபஸ் செய்து தேவரீரின் க்ருபையைப் பெற்றான் ;  –” என்றார் 

பகவான் புன்சிரிப்புடன் ,நீ உடனே அங்கே–நைமிசாரண்யத்துக்குப் போவாயாக –அங்கு சக்ர தீர்த்தத்தில் ஒரு பூச்சி இப்போதுதான் பிறந்திருக்கிறது . அந்தப் பூச்சியிடம் உன் சந்தேகத்தைக் கேள் !” என்றார்.

நாரதருக்குப் பரம சந்தோஷம் . உடனே நைமிசாரண்யம் வந்தார். சக்ர தீர்த்தக்கரைக்கு வந்து , படிக்கட்டில் நின்றுகொண்டே வலதுகையால், சக்ர தீர்த்தத்தை எடுத்துப் ப்ரோக்ஷித்துக்கொண்டு ,இவருடைய வருகைக்காகவே காத்திருப்பதைப்போல இருந்த இப்போதுதான் பிறந்த பூச்சியிடம் ”நாராயணா , நாராயணா என்கிற நாமத்தைச் சொல்வதால், என்ன லாபம் ? ” என்று கேட்டார். 

இதைக்கேட்ட அந்தப் பூச்சி அடுத்த க்ஷணமே ,உயிரை விட்டு விட்டது .

நாரதருக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. நாராயண —நாராயணா –என்று சொல்லிக்கொண்டே ,வீணையை மீட்டிக்கொண்டு வைகுண்டத்துக்கு வந்தார்.  

ஹே ,ப்ரபோ –இதென்ன சோதனை !  நைமிசாரண்யத்தில் சக்ர தீர்த்தத்தில் அந்தப் பூச்சியை அண்டி அடியேன்  சந்தேகத்தைக் கேட்டதும், அந்தப் பூச்சி உயிரை விட்டு விட்டதே –” என்றார். 

 பகவான் ”பரவாயில்லை—இப்போது நீ பூலோகத்தில் கச்யபர் ஆச்ரமத்துக்குப்போ –அந்த ஆச்ரமத்தில் காராம்பசு இருக்கிறது–அதற்குப் பிறந்துள்ள கன்றுவிடம் உன் சந்தேகத்தைக் கேள் –” என்றார்.

நாரதர் மறுபடியும் இவ்வுலகம் வந்தார். அவருக்குக் ”கச்யபர் ”ஆச்ரமம் கண்டுபிடிப்பதில்கஷ்டமா என்ன ! கச்யபர் ஆச்ரமத்தில் தோட்டத்தில் காராம்பசுவின் பக்கத்தில் ,கன்றுக்குட்டியைக் கண்டார். அருகில் சென்று, ”நாராயணா , நாராயணா என்கிற நாமத்தைச் சொல்வதால், என்ன லாபம் ? ” என்று கேட்டார். 

அந்தக் கன்றுக்குட்டி இருகாதுகளையும் நன்கு விரித்து ,நாரதர் சொன்னதைக் கேட்டதும், கன்றுக்குட்டி உயிர் இழந்தது. 

நாரதருக்கு மஹா சோகம். காராம்பசுவின் கன்றுக்குட்டி ,நம்மால்தான் இப்படி உயிரை விட்டதோ என்கிற மஹா துக்கம். 

மறுபடியும் வைகுண்டத்துக்கு இந்தமுறை ஓடோடி வந்தார். ”நாராயணா –அடியேன் என்ன பாவம் செய்தேன் ? பசுமாட்டின் கன்று அடியேனால் உயிரை விட்டுவிட்டதே ,,,அடியேனைத் தேவரீர் இப்படி சோதிக்கலாமா ? ”என்று துக்கம் மேலிட்டு விம்மினார்.

 பகவான் ”துக்கப்படாதே ! அதன் ஆயுசு முடிந்துவிட்டது;உன்  சந்தேகம் தீர்க்கப்படவேண்டுமல்லவா !பூலோகத்தில் ,காசி க்ஷேத்ரத்தில் அதன் ராஜா அரசாண்டுகொண்டிருக்கிறான் ;அவனுக்கு ஒரு புத்ரன் இப்போது பிறந்திருக்கிறான்; அந்தக் குழந்தை  உன் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும் — போ , போய் அந்தக் குழந்தையிடம் கேள் –” என்றார்.

நாரதருக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை. நாராயணா –ஏற்கெனெவே ஒரு பூச்சியையும் ஒரு காராம்பசுவின் கன்றையும் கொன்ற மஹாபாவத்துக்கு ஆளாகி நிற்கிறேன் ; இப்போது சிசு ஹத்தியும் அல்லவா  அடியேனுக்கு வந்து சேரும் — அடியேனை க்ஷமிக்கவேண்டும் –” என்றார் 

உடனே பகவான்,  ”நாரதா –இப்படியெல்லாம் சஞ்சலப்படாதே–இந்தமுறை உனது சந்தேகம் தீர்ந்து விடும் –தைர்யமாகப் போய் உன் சந்தேகத்தைக் கேள் ” என்றார்.

நாரதர் , அரைமனத்துடன் அங்கிருந்து கிளம்பி காசி ராஜாவின் அரண்மனைக்கு வந்தார்.சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்தார்..அந்தக் குழந்தை இருகரமும் நீட்டி இவரை வரவேற்பதைப்போல உணர்ந்தார்.

நாரதர் அந்தக் குழந்தையைப் பார்த்து, ”ஹே –குழந்தாய்—”நாராயணா , நாராயணா என்கிற நாமத்தைச் சொல்வதால், என்ன லாபம் ? ” என்று கேட்டார். நாரதரை உற்றுப்பார்த்த  அந்தக்  குழந்தை பதில் சொல்லிற்று.ஹே நாரத முனிவரே –ஸ்வாகதம் ஸ்வாகதம் –உங்களுடைய சந்தேகத்துக்குப் பதில் சொல்கிறேன்  கேளுங்கள்;  எண்ண  இயலாத  ஜன்மங்களில் ,கணக்கில்லாப் பாபங்களைச்  செய்து  பூச்சியாகப் பிறந்தேன்;  ஏதோ கொஞ்சம் புண்யம் இருந்ததால், என்னுடைய  பாக்யத்தால்  , நீர் என் அருகே  நைமிசாரண்யத்துக்கு வந்து நாராயண சப்தத்தைச் சொன்னீர்கள்; அந்த நாராயண நாமத்தைக் கேட்டதும் அந்தப் பூச்சி ஜன்மம்  நசித்து,  ஒரு மஹரிஷியின் காராம்பசுவுக்குக் கன்றாகப் பிறந்தேன் ;அந்தச் சமயத்திலும் நீர் என்னைத் தேடிவந்து பகவான் ஸ்ரீமந் நாராயணனின் நாமாவை என் காதுகளில் படும்படி சொன்னீர்கள்.உடனே அந்தக் கன்றுக்குட்டியின் ஜென்மம் முடிந்து ,இப்போது காசிராஜனின் குமாரனாகப் பிறந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் அந்த நாராயண நாமத்தைஎப்போதும்  உச்சரித்து ,அந்த ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை அடைந்துவிடுவேன் –”நாராயணா , நாராயணா என்கிற நாமத்தைச் சொல்வதால், என்ன லாபம் ? ” என்றுகேட்டீர்களே –இதைவிட என்ன லாபம் ? என்ன பயன் வேண்டும் !–”என்று அந்தக் குழந்தை பதில் சொல்லிற்று.

நாரதர்  அகமகிழ்ந்தார் . வீணையை மீட்டிக்கொண்டே  ஆனந்தத்துடன் வழக்கம்போல , நாராயண , நாராயண என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் சென்றார் 

பகவான், நாரதரைப் பார்த்து புன்முறுவலுடன் ,”உமது சந்தேகம் தீர்ந்ததா ?” என்று கேட்டார். 

நாரதர் , வீணையை மீட்டிக்கொண்டே அங்குமிங்கும் ஓடினார்; குதித்தார் ”ஹே –நாராயணா —வாச்யனைக்காட்டிலும் வாசகத்துக்கு ஏற்றம்  ” என்று தெரிந்துகொண்டேன்  என்று பதில் சொன்னார். 

உண்மைதானே ! பகவானைவிட பகவானின் திருநாமத்துக்கு ஏற்றம் அதிகம்தானே ! 

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழிப் பாசுரத்தில் அருள்கிறார் பத்துப்பாசுரங்களில் அருள்கிறார்—வாசகத்துக்கு ஏற்றம் அதிகம் என்பதைஅருமையாக உணர்த்துகிறார்  பத்துப்பாசுரங்களில் இதோ ஒரு பாசுரம்—- 

குலம் தரும்; செல்வம் தந்திடும் ;அடியார் படுதுயர்  ஆயின எல்லாம் 

நிலம் தரம் செய்யும் ;நீள் விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் ;

வலந்தரும்  மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் ;

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் .

, உத்தமமான குலத்தைக்கொடுக்கும் ; ஜ்ஞான சம்பத்தைக்கொடுக்கும்; எல்லாத் துயர்களையும் அழிக்கும்;திருநாடு என்கிற வைகுந்தத்தைக் கொடுக்கும்;

பகவத் க்ருபையைப் பெற்று அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் பேற்றைத் தரும்;பெற்றெடுத்த தாயார்  செய்கின்ற நன்மைகளைவிட அளப்பரிய நன்மைகளைச்

செ ய்யும்;இப்படிப்பட்ட எல்லா நன்மைகளையும் செய்கின்ற ”நாராயணன் ”என்கிற ,பகவானுடைய திருநாமத்தைஅடையப்பெற்றேன்  

— 
Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response