Soundararajan Desikan
5 years ago
Soundararajan Desikan
November 26, 2014 at 11:18 AM · Chennai, Tamil Nadu ·
கிளிக்கண்ணி —16
——————————-
1.நீங்களே என்வழிகாட்டி
நீங்களல்லால் யாமில்லை
தாங்களே இதைச் சொல்லிக் –கிளியே
தலையில் பூ சுற்றுவார்கள்
2.சொன்னவற்றை நம்பி
சொக்கிப்போய் இருந்தக்கால்
மறைவாய்ச் சிரிப்பார்கள் —கிளியே
மாமேதை மனிதர்கள்
3.நாட்கள் பல செல்ல
நம்பிக்கை பொய்த்து விழ
ஏமாற்றம் தலையெடுக்கும் –கிளியே
ஏமாந்த விதம் புரியும்
4.புகழ்ச்சி சேர் வார்த்தைகள்
புல்லரிக்கும் என்றாலும்
இகழ்ச்சியின் மறைமுகமே –கிளியே
ஏமாந்து இருக்காதே
5.காரியம் ஆகுமென்றால்
கர்ணன்தான் என்பார்கள்
காரியம் முடிந்தவுடன் —கிளியே
காணாமல் போவார்கள்
6.இத்தனை வயதுக்கும்
இதுகூடத் தெரியாதப்
பித்தனை,வெகுளியைக் –கிளியே
பேசிக் கேட்டதுண்டா ?
7.நேரில் பார்த்ததுண்டா ?
நேசிக்கக் கண்டதுண்டா?
பாரில் இதுபோன்றக் –கிளியே
பித்தனைப் பார்த்ததுண்டா ?
8.வேடிக்கை மனிதர்கள்
வேடத்தில் வரும்போது
வேடமிலா இவனைக் –கிளியே
தேடித் பார்த்ததுண்டா ?
9.தற்போது நானுள்ளேன்
தனித்திருக்கும் ஏமாளி
இப்போது பார்த்துக்கொள் –கிளியே
எப்போதும் ஏமாளி