ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல ? PART I
——————————————————————————
ஸ்ரீமதே ராமாநுஜாய நம ;
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம :
—————————————————————
திருக்கோளூர் திவ்யதேசம் , ஸ்ரீ மதுரகவிகள் அவதரித்த மதுரமான தலம் .
எம்பெருமான் ”வைத்தமாநிதி ” என்கிற திருநாமம் உடையோன்
எம்பெருமானின் திருவடியை அடிவருடும், எந்நாளும் வற்றாத தாமிரவருணி
பாயும் புண்யபூமி .வான்பொய்த்தாலும்,தான்பொய்யாத் தாமிரவருணி .
2.இங்கு ஸ்ரீ உடையவர் இந்நிலவுலகில் அவதரித்து வைணவ சித்தாந்தத்தை நிறுவிப்பரப்பி ,
உன்னதமான நிலைக்குக் கொணர்ந்த சமயத்தில், அவருடைய சமகாலத்தில், திருக்கோளூரில் ஒரு பெண்பிள்ளையும்வசித்தாள் .வாழ்ந்தாள் ;இவள் ஒரு பாமரப்பெண்பிள்ளை.
அக்காலத்தில்,தென்தமிழ்நாட்டில், பெண்களை பெண்பிள்ளை என்றும்,
ஆண்களை ஆண்பிள்ளை என்றும் சீருடன் அழைப்பது சிறப்பான வழக்கம்.
திருக்கோளூரில் இந்தப்பெண்பிள்ளை !ஆம் ! பெண்பிள்ளைதான் !
பெயர் ? யாருக்குத் தெரியும் ?
3.இவள் திருக்கோளூரை விட்டு, வெளியேற முற்பட்ட சமயத்தில் ,ஊருக்கு வெளியே ,அப்போதுதான் திருக்கோளூர் எம்பெருமான் வைத்தமாநிதியைத் தரிசிக்க ஊருக்குள் வந்த எம்பெருமானார் , பெண்பிள்ளை என்று இவளை அழைத்து, திருக்கோளூரை விட்டு வெளியேறும் காரணத்தைக்கேட்டார் .
இவள், 81 ரஹஸ்யங்களை அடுக்கிச் சொன்னதும் , இவள் பாமரப்பெண்ணா ?, பண்டிதப் பெண்ணா ? என்று வியந்தார்.
இப்படி ஸ்ரீ உடையவராலேயே போற்றப்பட்ட திருக்கோளூர் பெண்பிள்ளை,
இப்போது அடியேனைக் கேட்டாள் !
திருக்கோளூர் பெண்பிள்ளை :–
4.”ஏன், உமக்கு இந்தச் சலிப்பு ? “‘
திருக்கோளூர் பெண்பிள்ளையைத் தெண்டனிட்டு
”தாயே! என் சொல்ல ? என் சொல்ல ?” என்று விதும்பி , நெகிழ்ந்தேன் .
தாயினும் சாலப்பரிந்து , முடிபிடித்துத் தூக்கி , அமரவைத்து, உன் துக்கத்தைச்
சொல்வாயாக ! ” என்றாள் .
5.அடியேன் சொல்ல ஆரம்பித்தேன் .
”தாயே ! நீங்கள் திருக்கோளூரை விட்டு வெளியேறும்போது ஸ்ரீ இராமாநுசர்
உங்களைச் சந்தித்து,நீங்கள் சொன்ன 81 ரஹஸ்யங்களையும் அதன் அர்த்தங்களையும் கேட்டு உணர்ந்து வியந்தாரல்லவா ?நீங்கள், ஏன் , ”யதிராசர் போல வைணவம் வளர்த்தேனா”
என்று அதை ஒரு ரஹஸ்யமாகச் சொல்லவில்லை ? ” என்று கேட்டேன்
திருக்கோளூர் பெண்பிள்ளை :–
6.”அசடாக இருக்கிறாயே !இந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளையின் காலத்தில்தான்
ஸ்ரீ உடையவரும் வாழ்ந்தார்.அவரால்தான் வைணவம் வேரூன்றி வளர்ந்து வந்தது.
ஆனால், அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போல என்று 62 வது
ரஹஸ்யமாகச் சொல்லியிருக்கிறேனே! படிக்கவில்லையா ?
சரி ! உனக்கென்ன துக்கம் ? அதைச் சொல் ? ” என்றாள்.
அடியேன் :–
7.”தாயே ! ஸ்ரீ உடையவர் காலத்திற்குப்பிறகு அதாவது கலி பிறந்து 4118 வருடங்களுக்குப்
பிறகு,கலி 4369ல் திருவேங்கடவனின் திருமேனியின் அவதாரமாக ஸ்வாமி தேசிகன் அவதரித்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை :–
ஆமாம் ! அவரும் இப்போது என்னைப்போல வைகுண்டவாஸிதான் — இது எனக்குத் தெரியும் . மேலே சொல் !”
அடியேன் :–
8. தாயே ! ஸ்ரீ உடையவர் நிறுவிய வைணவம்–அந்தத் தர்ஸநம்—அழிந்துவிடும் நிலையில்
அவதரித்து தர்ஸநத்துக்குப் புதிய உயிர் கொடுத்தார் . அதை மேலும் வளர்த்து,
ஸம்ப்ரதாயத்துக்கு வலுவூட்டி, மெருகூட்டி , மென்மேலும் சிறப்படையச் செய்தார்.
அவர் வைகுண்டவாஸியாகி , சுமார் 650 ஆண்டுகளுக்குமேல் கடந்துவிட்டன.
பல மடாதிபதிகள், ஆசார்ய புருஷர்கள்,எவ்வளவு முயற்சி எடுத்தாலும்,
இப்போது இராமாநுச தர்ஸநம் , ஸ்வாமி தேசிக ஸம்ப்ரதாயம் இரண்டுமே உருக்குலைந்து,
உள்ளதாகத் தாபப்படுகிறேன் ஸ்வாமி தேசிக ஸம்ப்ரதாயம் தழைத்து வளர்ந்தால்,
இராமாநுச தர்ஸநமும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறேன்
9.ஸம்ப்ரதாயம் வளர்த்தது என்பதில், ஸ்வாமி தேசிகன் பலதரப்பட்ட நிலைகளில் வளர்த்தார்.
பலவிதக் கோணங்களில் வளர்த்தார்.
எப்படி எனில்,
1. ஸ்தோத்ரங்கள் அருள்வதில்,
2. ரஹஸ்ய க்ரந்தங்கள் எழுதுவதில் ,
3.காவ்யங்கள் படைப்பதில்,
4. ப்ரபந்தங்கள் செய்வதில்,
5.ஸம்ப்ரதாய அநுஷ்டான சாஸ்த்ரங்கள் கொடுப்பதில்,
6. சாஸ்த்ர ஜ்ஞானம் இருந்தாலும் அநுஷ்டானத்தில் கொண்டுவரவேண்டும்
என்று உத்தேசித்து,அதற்கான க்ரந்தங்களை எழுதி, அருள்வதில்,
7.ரஹஸ்ய க்ரந்தங்களை காலக்ஷேபமாக சிஷ்யர்களுக்குச் சொல்வதில்,
8.வாதத்துக்கு வந்த பிற மதஸ்தர்களின் வாதங்களை வென்று ஸம்ப்ரதாயத்தை
நிலை நாட்டியதில்,
9.க்ருஷ்ண மிச்ரர் என்பவனை வென்று ”ஸங்கல்ப ஸூர்யோதயம் ”
என்கிற அத்புதமான நாடகக் காவ்யம் கொடுத்ததில்,
10. டிண்டிம கவியை ஜெயித்து , ”யாதவாப்யுதயம் ” என்கிற காவ்ய ரத்னத்தைக்
கொடுத்ததில்,
11. திவ்யதேசம் தோறும் எழுந்தருளி, ஸம்ப்ரதாயம் வளர்த்ததில்,
12.கலைகளில் வல்லவரென்று நிரூபிக்க திருக்கிணறு நிர்மாணித்ததில்,
13. பலமதஸ்தர்களும் திரளாக வந்து, வாதுபுரிய அவர்களையெல்லாம்
வாதத்தில் வென்று, வாதப்போக்கையும் கண்டித்து,”பரமதபங்கம் ”என்கிற
ரஹஸ்ய நூலை அருளியதில்,
14.காஞ்சீபுரத்தில் பாம்பாட்டியை ஜெயித்ததில் ,
15.விவாதத்தில் மத்யஸ்தராய் இருந்து,பக்ஷபாதம் இல்லாமல் தீர்ப்புச் சொன்னதில்,
16.திவ்யப்ரபந்தம் ஸேவிப்பது பரமவைதிகம் என்று ஸ்தாபித்து,
ஸ்ரீ பேரருளாளன் உத்ஸவத்தைத் நடத்துமாறு செய்ததில் ,
17.யாத்ரையில் , ஒரு வைச்யனுக்கு அநுக்ரஹித்ததில்
18.ஒப்புவமை இல்லாத , ”பாதுகா ஸஹஸ்ரம் ” செய்து,பெரியபெருமாளின்
திருவடிகளைக் காத்துநிற்கும் பாதுகைகளே ஸ்ரீ நம்மாழ்வார் என்றும், ஸ்ரீ நம்மாழ்வாரும்
பாதுகையும் ஒன்றே என்றும் சொல்லிச் சிறப்பித்ததில்,
19. பெரிய பிராட்டியைப் பிரார்த்தித்து ப்ரஹ்மச்சாரிக்கு அவன் விவாஹம்
செய்துகொள்ள தங்க நாணயங்களை வர்ஷிக்கச் செய்ததில்,
20.ஒரு பெரியவரின் அபசாரத்தை நீங்கச் செய்ததில்,
21. திருவரங்கச் செல்வனுக்கு நேர்ந்த ஆபத்தை அவனருளேயே நீக்கி , நம்பெருமாள்,
திரும்பவும் ஆஸ்தானம் எழுந்தருளி ஸேவை ஸாதிக்கப் பாடுபட்டதில்,
22.ச்ருதப்ரகாசிகை என்கிற க்ரந்தத்தைக் காப்பாற்றியதில்
23.திருவரங்கத்தில் நின்றுபோயிருந்த மார்கழி மாத திரு அத்யயன உத்ஸவத்தைத்
திரும்பவும் நடத்தி வைத்ததில்
24.தன் திருமேனியைப்போலவே , விக்ரஹம் வடித்ததில்,
25.ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்கிற மஹா க்ரந்தத்தை அருளி மஹோபகாரம் செய்ததில்
26.சிஷ்ய வர்க்கத்தை அபிவிருத்தி செய்ததில்
இன்னும் எவ்வளவோ இருக்கிறது;ஆனாலும் இதோடு நிறுத்துகிறேன் .
இப்படியாக பற்பல விதங்களில், தர்சனத்துக்கு உயிரூட்டி ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை :–
10. கேட்கக் கேட்க பரமானந்தமாக இருக்கிறதே ! நான் சொன்ன 81 ரஹஸ்யங்களும்
வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மஹான்கள் செய்தவை. ஆனால், ஒருவரே ,
மஹாசார்யனாக க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்துகொண்டு , இவ்வளவு மஹத்தான
கார்யங்களைச் செய்து, ஸம்ப்ரதாயத்தை வளர்த்திருக்கிறாரே !
என்ன பாக்யம் ! என்ன பாக்யம் ! ஒவ்வொன்றாக விவரமாகச் சொல் !
Contd–Part II
Sarvam Sree Hayagreeva preeyathaam
