திருமங்கை ஆழ்வார் கூறும் தன் பெருமைகள்

Posted on Apr 8 2016 - 7:06am by srikainkaryasriadmin

ஸ்ரீமான் உபேந்த்ரன்  ,தொலைபேசியில் அடியேனை அழைத்து,

           ஸ்ரீமத் பரகால இராமானுஜ கூடம் ,திருவாலி திருநகரியில் 100வது ஆண்டு
           தொடக்கத்தை ஒரு உத்ஸவமாக நடத்த நியமனம் ஆகியுள்ளதாயும் ,
           அச்சமயத்தில் வெளியிடப்படும் “சிறப்பு மலரில்” அடியேனுடைய
           லிகித கைங்கர்யமும் இடம்பெறவேண்டும் என்றும் , திருச்சித்ரகூடம்
           ஸ்ரீ உ.வே. டாக்டர் ரங்காசார்யர் ஸ்வாமி நியமனம் இது என்றும்
           சொன்னபோது, “அஹோ பாக்யம் ” என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்
           “திருமங்கை ஆழ்வார் கூறும் தன் பெருமைகள் ” என்கிற இந்த வ்யாஸத்தில்
             யதாமதி விஜ்ஞாபித்து இருக்கிறேன். பாசுரங்களை அப்படியே சொல்லி
              அதற்கு அர்த்தம் என்று சொல்லப் புகுந்தால், இது ஒரு “பாசுரங்களும் பொழிப்புரையும்”
             என்று ஆகிவிடும். . ஆனால், இப்போது இதைப் படிப்பவர்கள், மேலும் மேலும்
             தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் விதமாக அமையவேண்டும்
              என்கிற நோக்கத்தில், விண்ணப்பித்து இருக்கிறேன்.
               குற்றங்களை ஒதுக்கி, குணம் நாட  வேண்டுகிறேன்
                ஸர்வம்  ஸ்ரீ ஹயக்ரீவ ப்ரீயதாம்
                அடியேன்

உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்

       thirumangaimannan-603407_503254576413701_1108499279_n
        ————————————————————————-
      பூ மன்னு  மாது பொருந்திய மார்பன் ,புகழ் மலிந்த
      பா மன்னு  மாறன் அடிபணிந்  துய்ந்தவன் ,பல் கலையோர்
      தாம் மன்ன வந்த இராமாநுசன்  சரணாரவிந்தம்
      நாம் மன்னி வாழ ,நெஞ்சே !சொல்லுவோம் அவன் நாமங்களே
                        ———————————–
      வாழி பரகாலன் வாழி கலிகன்றி ,
      வாழி குறையலோர் வாழ் வேந்தன்,——வாழியரோ
      மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
      தூயோன் சுடர்மான வேல் !
                   ———————————–
   
      நாமெல்லாம் சம்ஸாரிகள் . உணவே ——உடையே —என்று நித்யமும்
      சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு இருப்பவர்கள். இப்படி உழல்வது சரியா ?
      இல்லை,இல்லவே இல்லை. பிறகு, என்ன செய்ய ?
       ஆலம்பனம் செய்ய வேண்டும். ஆலம்பனம் என்றால் பிடிப்பு .உடலுக்கு
       எங்கெங்கோ பிடிப்பு வருகிறது. அது, வாயுப் பிடிப்பு. நமக்கு வேண்டியது
       மனஸ்ஸுக்குப் பிடிப்பு. இந்த மனஸ்ஸுக்கு ,ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.
       அது எப்போது வரும் ? மனஸ்ஸுக்குப் பிடித்து இருந்தால் ,பிடிப்பு ஏற்படும்.
       இந்தப் பிடிப்பு ,எதற்கு வேண்டும் ?எம்பெருமானைத் தியானம் செய்ய
       இந்தப் பிடிப்பு வேண்டும். எடுத்த எடுப்பிலேயே “த்யானம் ” செய்ய வந்துவிடுமா?
       வராது; வரவே வராது.
       அதற்காகத்தான், மனஸ்ஸுக்கு ஒரு பிடிப்பு வேண்டும் என்று நம் முன்னோர்
        சொல்லியிருக்கிறார்கள். இதுவே ஆலம்பனம் . பகவானின் திவ்யமங்கள
         விக்ரஹத்தைத் த்யானம் செய்வது, “ஸாலம்பன மஹா யோகம்” என்று
         பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.
         இந்த ஸாலம்பன  மஹாயோகமான ,பகவானின் திவ்ய மங்கள  ஸௌந்தர்யங்களை
         நித்ய ஸுரிகள் என்றும், ப்ரமாதாக்கள் என்றும், சொல்லப்படுகிற ஆழ்வார்கள்,
         ப்ரமேயமான எம்பெருமானை , உபாதேயமான அவன் நித்யவாஸம் செய்கிற
         திவ்யதேசங்களில் அர்ச்சாவதாரத்தில் அநுபவித்து, அநுபவித்து அங்கெல்லாம்
         சென்று த்யானித்து ,பாசுரங்களால் பாடிப்பாடி , அவற்றைத் திவ்ய தேசங்களாகப்
         பரிமளிக்கச் செய்து,  நம்மைப் போன்ற சேதனர்களைத் திருத்துவதற்காகத்
         தங்களைத் தாங்களே, ஏழை என்றும், ஏதிலன் என்றும்  தாழ இட்டுக்கொண்டுப்
         பாசுரமிட்டு  இருக்கிறார்கள். இவை திவ்யப் பிரபந்தங்கள்
         அர்ச்சையில் “குணாதிக்யம் ”  உண்டு. முக்யமாக “ஸௌலப்யம், ” என்கிற குணம்.
         இந்த  குணம், மூன்று வகைப்படும். அவையாவன:—தேச ஸௌலப்யம், வஸ்து
          ஸௌலப்யம், காலஸௌலப்யம் . இவை மூன்றும், திவ்யதேச எம்பெருமான்களுக்கு
          இருக்கின்றன. நம்மைப் போன்ற சேதனர்களுக்கு அருள்வதற்காகவே , திவ்யதேசங்களில்
         நின்றும், இருந்தும், கிடந்தும் இப்படிஸௌலப்யத்தை அருளக் காத்திருக்கிறார்.
         நாம் சென்று திருவடி தொழாத குறைதான் !
         இப்படிஸௌலப்ய குணாதிக்யத்தையும் ,திவ்யதேசங்கள் தோறும் சென்று திருவடி
         தொழுவதையும் நமக்குக் காட்டிக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள்; மற்றும் அவர்கள்
         அருளிய ஈரச் சொற்கள் நிறைந்த திவ்ய பிரபந்தங்கள்.
         எம்பெருமானை ஸேவித்தால், அவன் திருமேனி ஸௌந்தர்யம் ,  அதில் பளிச்சிடும்
         குணாதிக்யங்கள் –இவையெல்லாம் நமக்கு அனுபவ விஷயங்கள் ஆகின்றன.
         அந்தப் பகவத அனுபவம் , அவனிடம் ப்ரீதியை (அநுபவ ஜநிதப்ரீதி ) உண்டாக்கி
         வளர்க்கிறது. இந்தப் ப்ரீதி ,அவ்வெம்பெருமானுக்கே ஆட் செய்தலில் இறக்குகிறது.
        (ப்ரீதகாரித கைங்கர்யம் )
         ஆழ்வார்களில்  ஸ்ரீ நம்மாழ்வாரும் , திருமங்கை ஆழ்வாரும் ப்ரபந்த சாம்ராஜ்யத்தின்
         சக்ரவர்த்திகள் . அதனால், பராங்குச —-பரகாலாதிகள்  என்று இவர்கள் இருவரை
         மட்டுமே சொல்லி, மற்ற ஆழ்வார்களை உள்ளடக்கிப் பெரியோர்கள் கூறிப்
         பரவசப்பட்டு இருக்கிறார்கள். ஆழ்வார்களின் அவதாரம் கருணையால் ஏற்பட்டது.
         அவர்களின் ப்ராக்ருத சரீரத்தில், சகதி   அழுக்கு ஒட்டாது . சேதனர்களாகிய நாம்
         சேற்றில் விழுந்திருக்கிறோம் .சேற்றில் விழுந்து இருப்பவர்களை, சேற்றில் இறங்கித்
         தூக்கிக் கரையேற்றும் வேலையைச் செய்தவர்கள்  ஆழ்வார்கள்.
         திருமங்கை மன்னன் ,ப்ரபந்த சாம்ராஜ்யத்தின் கடைசி சக்ரவர்த்தி என்று பார்த்தோம்.
         இவர்,தன்னைப் பற்றித் தானே கூறும் தன் பெருமைகளை , நிறையவே தன்னுடைய
         பாசுரங்களில் சொல்லியிருக்கிறார்.
         இவற்றை அநுபவிப்பதற்கு முன்பாக, இவருடைய ப்ரபாவங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
         இவர், கலியைக் கெடுக்க, கலியனாக அவதரித்தவர்—அதனால், கலிகன்றி
         “கலயாமி கலித்வம்ஸம்” என்று கொண்டாடப் பெற்றவர்
         வாள் , வேல் ஏந்திய மங்கையர்கோன் இவர் ஒருவரே
         திருக்குறுங்குடி (சேர தேசத்தையும் சேர்த்து ) தொடங்கி ,திருப்பிரிதி, பத்ரிகாச்ரமம் வரை,
        அர்ச்சாமூர்த்திகளை மங்களாசாஸனம் செய்த பெருமை இவர் ஒருவருக்கே உண்டு.
        ஒவ்வொரு திவ்யதேச எம்பெருமானும் “தன்னைப் பற்றிப் பாசுரமிடமாட்டாரா ” என்று
        ஏங்கினார்கள் என்றால் ,கலியனின் பொருள் பொதிந்த பாசுரங்களுக்கு ஏற்றமல்லவா !
        அதுவே, ஆழ்வாரை, தன்னுடைய பெருமையைச் சொல்ல வைத்ததோ !
         ஆழ்வார்களில், கலியன் ஒருவரே ,பெருமாளும் பிராட்டியுமாகத் திவ்ய தம்பதியரை ,
         நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்
         குமுதவல்லி என்கிற வைணவப் பெண்ணை மணக்க வைணவர்கட்கு நித்ய ததீயாராதனம்
         செய்தவர்.
         அதற்காகப் பொருள் ஈட்ட , வழிப்பறியும் செய்தவர் ;அதையும் வழியாகக் கொண்டவர்.
         சாக்ஷாத் எம்பெருமானே ,ஆசார்யனாக நின்று திருவஷ்டாக்ஷரத்தை உபதேசிக்கும்
        பேறு பெற்றவர்
        ஸ்வாமி தேசிகன்,
        “ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம்  பண்ணி ——–” என்று இருபொருள்படப்
         பேசுகிறார்.
        இவர், “பரகாலன் “. பராந் —காலயதி  என்பது பரகாலன் ஆயிற்று. தன்னுடைய மதத்தை
        எதிர்க்கும் பிறருக்குக் காலனாக விளங்கியதால் , பரகாலன் ஆனார்.
        திவ்யதேசம் தோறும் சென்று எம்பெருமானை ஸேவிக்கும்போது ,அந்த திவ்யதேச
        எம்பெருமானின் ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு, பாசுரமிட்டவர்; அப்போது, வேறு
        திவ்யதேச எம்பெருமானும் பாசுரமிடப்படுவார்.
        ப்ரபந்த சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தியான ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய
        1. திருவாய்மொழி,
        2. பெரிய திருவந்தாதி
        3. திருவிருத்தம்
        4. திருவாசிரியம்
        என்பவை நான்கு வேதங்களின் சாரம் என்பர். திருமங்கை ஆழ்வார் அருளிய ஆறு
        ப்ரபந்தங்களும் ,ஆறு வேதாங்கங்கள் –வேதங்களின் அங்கங்கள் என்பர்.
         1. பெரிய திருமொழி
          2. திருக் குறுந்தாண்டகம்
          3. திரு நெடுந்தாண்டகம்
          4. திருவெழுகூற்றிருக்கை
          5.சிறிய திருமடல்
          6.பெரிய திருமடல்
         மற்ற ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் உப அங்கங்கள் என்பர்.
        இந்த ஆறு ப்ரபந்தங்களும் , நமக்கு ஆறு—-அதாவது—நதி
        இதுதான் பெறற்கரிய பேறு .
         பகவானின் கடைசி அவதாரம்—கல்கி அவதாரம்
         அபிநவ அவதாரமான ஆழ்வார்களில் கடைசி அவதாரம் — கலியனாக திருமங்கை
         ஆழ்வார் அவதாரம்.
         கல்கி அவதாரம்—கலியின் கொடுமையை  அழிப்பதற்கு
         கலியனின் அவதாரம் —பாசுரங்களாலும் ,நடவடிக்கைகளாலும் கலியின் கொடுமையை
          அடக்குவதற்கு
          கல்கியின் அவதாரம் –குதிரைமீது ஆரோஹணித்து
          கலியனும் அப்படியே
          கல்கியின் கரத்தில்—வாள்
          கலியனின் கரத்தில்—-வாளும் ,வேலும்
          ( அடியேன் விசிஷ்டாத்வைதம் என்கிற தலைப்பில், பகவானின் அவதாரங்களும்
             அபிநவ அவதாரமான ஆழ்வார்களின் அவதாரங்களும்—என்பதில்–இவற்றை
              விரிவாக உபந்யஸித்து, அவை யு –டியூபில் –வெப் சைட்டில் உள்ளன)
          இவர் நாலு கவிப் பெருமாள் —சதுஷ்கவி சிகாமணி
          ஆசுகவி, விஸ்தாரகவி, மதுரகவி, சித்ரகவி–இப்படி நான்கு கவியாக விளங்கிய
          பெருமை இவருக்கே உண்டு
           பெரிய திருமொழி—-இது அறிவு தரும் பெரிய திருமொழி . அறிவு என்பது,
          எம்பெருமானைப் பற்றிய அறிவு; அதாவது–ஜ்ஞானம் . பாசுரங்களின் எண்ணிக்கையால்
          பெரிதாக அமைந்ததால், (1080) இது பெரிய திருமொழி .
          திருக் குறுந் தாண்டகம் —(20 பாசுரங்கள் )—இதில், ஆழ்வார் பக்தி மேலோங்கி
          பகவானை மனத்தால் நினைத்தும், வாயினால் பாடியும், தலையால் வணங்கியும்
          தோத்தரிக்கிறார்.
          திரு நெடுந் தாண்டகம்—(30பாசுரங்கள் )—இதில் எம்பெருமான் தானேயான தன்மையையும்
          (முதல் 10 பாசுரங்கள் ), தாயார் கூறும் வார்த்தைகளாகவும் (அடுத்த 10 ), தோழியோடு
           பேசும் வார்த்தைகளாகவும் (கடைசி 10 ) அமைத்துபாசுரங்கள் இட, எம்பெருமான்
          முகம்காட்ட, மகிழ்ச்சியில் திளைக்கிறார், ஆழ்வார்.
          திருவெழுகூற்றிருக்கை —திருக்குடந்தை ஆராவமுதன் விஷயமாக, ஏழு கூறுகள் கொண்ட
          தேரின் அமைப்பாக—சித்ர கவியாக—-ஒரே பாசுரத்தாலே அருளிய ப்ரபந்தம்
          சிறிய திருமடல்—-“மடலூர்தல் ” என்கிற வகை. ஆழ்வார், பரகால நாயகியாக ஆகி,
           ( பெண்மை நிலை ஏறிட்டுக்கொண்டு ) நாயகனின் பிரிவைத் தாங்க இயலாமல்
          அவனோடு கூடுவதற்கான செயல் இது.
         பெரிய திருமடல்—-இதுவும், சிறிய திருமடல் வகையைச் சேர்ந்தது.
           இவர், மற்ற எல்லா ஆழ்வார்களையும் விட அதிக திவ்யதேச எம்பெருமான்களை
            மங்களாசாஸனம் (86) செய்தவர்.
            105 திருநக்ஷத்ரங்கள் , இந்நிலவுலகை அலங்கரித்தவர் .இதற்கு மேலும்
            ப்ரபாவங்கள்  உள்ளவர். இவர் தன் பெருமைகளைத்  தன்னுடைய பாசுரங்களில்
            சொல்கிறார்.
           ஒருவர், தன பெருமையைத் தானே சொல்லலாமா ?
           சொல்லலாம் !  எப்போது ?
           இதை சாஸ்த்ரஜ்ஞர்கள் சொல்கிறார்கள்
            அஹங்காரம் —தாமஸ ,  ராஜஸ , ஸாத்விக  அஹங்காரங்கள் என்று மூன்று வகை
             இந்த மூன்றில், தன் பெருமைகளைச் சொல்வது, அது ஸாத்விகத்தில் வந்ததென்றால்
            தகும்,  என்கிறார்கள்.
            எல்லையில்லாப் பெருமைகளைப் பெற்ற ஆழ்வார், தன்னுடைய ஒவ்வொரு பத்துப்
            பாசுரங்களிலும், பத்தாவது பாசுரமாகத் தன பெருமைகளைச் சொல்கிறார். இது
            ஸாத்விக குணத்தில் வந்ததால் மிகவும் தகும் என்று பூர்வர்கள் கொண்டாடுகிறார்கள்.
            ஆதலால், திருமங்கை ஆழ்வார் தன்னுடைய பாசுரங்களில் ,தன் பெருமையைச்
             சொல்வது,  ஏற்றமுடைத்து.
             இந்த ஆழ்வார்,
              வையமெல்லாம் மறை விளங்க வாள் வேலேந்தும் மங்கையர்கோன் .  கலியன்
              வாளும் வேலும் ஏந்தி எம்பெருமானைப் பணியவைத்து , உலகம் அனைத்தும்
                மறை விளங்குமாறு, திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தைப் பரம ஆசார்யனான
               எம்பெருமானிடமிருந்தே உபதேசமாகப் பெற்றவர்.
             ஒரு குறளாய் ————-என்கிற திருமொழியில், , தன்னுடைய பிருது நாமங்கள்
             அனைத்தையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்.
             பெருமாளுக்கு வல்லபனாயிருப்பான்  ஒரு இருளைக்குப் பிச்சன் பலரையும்
             திருமுன்பே க்ஷேபிக்கிறவளவிலே————-————இப்பாட்டை விண்ணப்பித்து,
             “நாயந்தே!——–-தேவரீரைக் கவிபாட  ———” என்று தொடங்கி,
             ” என்ன ——–அதுவும் நம்மையன்றோ சொல்லிற்று  என்று திருவுள்ளமானார் “
             என்று,  இப்பாட்டுக்கு  ஒரு ஐதிஹ்யமுண்டு .  இது, ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
             வ்யாக்யானத்தில்  விரிவாக உள்ளது.
             பெருமையெல்லாம் சேர்ந்து ,ஒருசேர இருந்து பெருமை பெற்றது, இந்த ஆழ்வாரால்.
              திருமங்கை ஆழ்வார் தன பெருமைகளைக் கூறும் சிலவற்றைச் (பாசுரங்கள் இல்லாமல் )
              சுருங்க, யதாமதி , விண்ணப்பிக்கிறேன் பாசுரங்களும், வ்யாக்யானமும் சேர்த்து,
              விரித்துரைக்கின் , ஏடுகள்  போதா !
              திருமங்கை நாட்டின் வளத்தைச் சொல்லி,  அப்படிப்பட்ட நாட்டின் தலைவன் என்று
              பல பாசுரங்களில் பெருமைப் படுகிறார்.
             * மேகங்கள் உலாவுகிற சோலைகளை உடையதும் , வண்டுகள் படிந்து ஒலிக்கின்ற
                தீர்த்தத்தை உடையதும் ஆன திருமங்கை நாட்டின் தலைவன்
              * திண்ணிய மாடங்கள்சூழ்ந்த திருமங்கையில் உள்ளவர்களுக்குத் தலைவன்
              * நிலை நின்ற பெரிய மதில்களை உடைய திருமங்கைவாசிகட்குத் தலைவன், கலிகன்றி
             * சினைகொண்ட பெரிய கழனிகளை உடைய திருமங்கைநாட்டுக்குத் தலைவன்,கலிகன்றி
             * கச்சு என்கிற வஸ்த்ரத்தால்,அழகுபெற்ற முலைகளை உடைய மாதர்கள் நிறைந்த
                  திருமங்கை நாட்டுக்குத் தலைவன்
              * கொடிமாட  மங்கையர்  கோன்
              * காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன்
              * மங்கையர் தலைவன், சுற்றார் பரவும்  மங்கையர் கோன்
              * காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்
              * கறையார்  நெடுவேல் மங்கையர்கோன் கலிகன்றி
              * வண் கனக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்
              * காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன்
              * கன்னீரமால்வரைத் தோள் கலிகன்றி மங்கையர்கோன்
              * தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன்
              * கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி
              * மங்கையர்க் குல வேந்தன்
              * காரார் வயல் மங்கைக்கிறைக் கலியன்
              * பார்மலி மங்கையர்கோன் பரகாலன்
                திருமங்கை ஆழ்வார், தன் தோள் வலிமையையும் , வேலின் வல்லமையையும்
                பறை சாற்றுகின்ற, பாசுரங்கள் பல உள்ளன —அவற்றில் சில:—-                      
             * மலைபோன்ற திரண்ட தோள்களை உடைய திருமங்கை மன்னன்
             * மதம்பிடித்த பெரிய யானையை நடத்த வல்லவரான கலியன்
             * வாள் கலியன்
             * வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன்
             * எதிரிகளின் சரீரத்தில் பொருந்தித் தைக்கும் வேற்படையை உடைய கலிகன்றி
             * கையிலங்கு வேல் கலியன்
             * காய்சின வேல் கலியன்
             * கூரார்ந்த வேல் கலியன்
             * கைந்நின்ற வேற்கைக்கலியன்
             * கூரணிந்த வேல் வலவன்
             * ஆலிநாடன்
             * குறையலாளி
             * பாரணிந்த தொல் புகழான் கலியன்
             * கல்லின்மலிதோள் கலியன்
             * கூர்கொள் நல்ல வேல் கலியன்
             * மானவேல் கலியன்
             * காரார் புயற்கைக் கலிகன்றி
             * நஞ்சுலாவிய வேல் வலவன் கலிகன்றி
             * காலவேல் பரகாலன் கலிகன்றி
             * ஆடல் மாவலவன் கலிகன்றி
             * கொடிமதிள் மாடமங்கை ,திண்டிறல் தோள் கலியன்
             * ஒளிசேர் கறை வளரும் வேல் வல்ல கலியன்
             * காமருசீர்க் கலிகன்றி
             * காரார்புயல் தடக்கைக் கலியன்
             * காமக் கதிர்வேல் வல்லான் கலியன்
             * கன்னவிலும் தோளான் கலியன்
             * திருவாலிநாடன்
             * வாமான் தேர்ப்பரகாலன் கலிகன்றி
             * அணியாலியர்கோன் மருவார் கறைதரு நெடுவேல்வலவன் கலிகன்றி
             * மறிகடல்சூழ் வயலாளி வளநாடன்
             * கண்டசீர் வென்றிக் கலியன்
             * திருமாமகளா அருள்மாரி
             * செழுநீராலி வளநாடன்
             * மருவார்புயல்கைக் கலிகன்றி
             * மலைகுலாமாட மங்கையர் தலைவன்
             * கலங்கல் இலாப் புகழான் கலியன்
             * கன்னவிலும் திண்தோள் கலியன்
             * கண்ணகத்தும் மனத்துமகலாக் கொற்றவன்
             * கலையார் பனுவல் வல்லான் கலியன்
             * கற்றநூல் கலிகன்றி
             * பொங்குமாவலவன் கலிகன்றி
             * ஏந்தெழில் தோள் கலிகன்றி
                எம்பெருமானிடம்  பக்தி மேலோங்கிய நிலையில்
             எடுத்துரைப்பது :—
             *  பெற்றாரார்  ஆயிரம் பேரானைப் பேர்பாடப் பெற்றான் கலியன்
             * கார்மேகம் போன்ற உதாரரான கலிகன்றி
             * பகவத் பக்தி அதிகரிக்கப் பெற்ற  கலியன்
             * பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்ல கலியன்
             * நித்ய ஸித்தமான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியை உடைய கலியன்
             * எம்பெருமானுடைய திருவடிகளையே த்யானிக்கிற ,பாகவதருக்குத்
                தாஸபூதரான கலிகன்றி
             * ஏழையேன்
             * அடிநாயேன்
              ஆழ்வாரின் தன்பெருமைச் சொற்களை மூன்று பகுதிகளாகப்
              பிரித்து இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவே . மற்றும்,
              சில சொற்கள் ,பாசுரங்களில் உள்ளபடி இல்லாவிடினும் அவற்றின்
              பொருளை உணர்த்துபவையே
               திருநெடுந்தாண்டகம் –3ம்  பாசுரத்தில்,
                திருவடிவில்……………..
                கட்டுரையே  யார் ஒருவர் காண்கிற்பாரே
                கருவடிவிற்  செங்கண்ண வண்ணன்
                தன்னைக் கட்டுரையே  யார் ஒருவர் காண்கிற்பாரே
                என்கிறார்.
               ” ஸ்வாபாவிகமான திருவடிவை , அதாவது, கருநிறமும் சிவந்தகண்ணும்
                கொண்ட திருமேனியையே எனக்குக் காட்டினான் .
                யார் ஒருவர்  காண்கிற்பார் !  பகவானின் அநுக்ரஹத்தாலே , நான் கண்டு
                பேசினாற்போல் , எவர்தான் கண்டு பேச வல்லார் !
               அப்படிக் கண்டு பேசியவர் யாராவது உண்டா ?  “
                என்கிறார் திருமங்கை ஆழ்வார்
                வேதங்கள்கூட , நான் பார்த்துப் பரவசத்துடன் பேசினபடி பேசவில்லை.
                அவனை நேரில் காணமலேயே  ” நீலதோயத மத்யஸ்தா —-” கருமேகத்தைத்
                தன் நடுவில் கொண்ட மின்னல் போன்றவன் எம்பெருமான் என்று
               வெகுதூரத்தில் இருந்துகொண்டே , வேதங்கள் வர்ணிக்கின்றன.
               தன்னிடத்தில் பராமுகமாய் இருக்கும் பர்த்தாவைத்தான் வசீகரிக்கவேண்டும்.
               அதற்காகப்  பத்னி —மிகைப்படுத்தி அலங்கரித்துக் கொள்ளவேண்டும்
               இந்தமாதிரி வகுப்பைச் சேர்ந்தவன் நான் என்கிறார், ஆழ்வார்
                 எனக்குப் பகவானிடம் ஈடுபாடு இல்லாமல் , இதர விஷயங்களில் ஈடுபட்டு
               இருந்தேன். இப்படிப்பட்ட என்னை வசீகரிக்க , எம்பெருமான் , தன் வடிவழகை—
                –கருத்த நிறமும் , சிவந்த கண்ணும் கொண்ட திருவடிவை விசேஷித்துக் காட்டி,
               அவனையே எப்போதும் நினைக்கும் பக்தனாக ஆக்கிவிட்டான். ஆகையால்,
               நான்தான், எம்பெருமானைப் பற்றியும் அவன் வடிவழகு ,நிறம் முதலியவற்றைப்
               பற்றியும் பேச வல்லவன் . நான் கண்டதைப் போல் , எவர் காண்பார், மனமே !
               நீ, நன்கு , ஆராய்ந்து பதில் சொல் ……கட்டுரை…..யார் ஒருவர் காண்கிற்பாரே ?
               எல்லாரும் பேசலாம்—-ஆனால் என்னைப்போல் எம்பெருமானை எவராலும்
               காணமுடியாது——என்கிறார்
                இது, திருமங்கை ஆழ்வாரின்  தன் பெருமை !
                நான் கண்ட எம்பெருமான் திருவடிவை வேதங்கள் கண்டதோ ?ஆழ்வார்கள்
               கண்டார்களோ ? என்று மார்தட்டிப் பேசி இருக்கிறார். இது, தன் பெருமை !
               ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
               ” வேதங்களும் ஈச்வரனுடைய வடிவு இருக்கும்படியை , நீல தோயத மத்யஸ்தா —
                  என்று கடக்க நின்று பேசிப்போம் —இத்தனை அல்லது கண்டதில்லை —“என்கிறார்.
                பெரிய திருமொழி (4–9–8)
                  முன்னை வண்ணம் பாலின் வண்ணம் ————–
                   இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரிலே   “
               என்று  திருமங்கை ஆழ்வார் கேட்கிறார். உமது நிறம், நீர்மொண்டு எழுந்த காளமேகம்
               போல இருப்பதை அறிவோம்; அதை நேரில் காட்டித் தரவேண்டும் என்று உரிமையோடு
               கேட்கிறார், திரு இந்தளூர் எம்பெருமானிடத்தில். ஆழ்வாரின் உரிமைக் குரல் இது.
               தன் பெருமையால் வந்த உரிமைக் குரல்!
                  ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இதற்கு உரையிடும்போது,
                 ” இவனுடைய அஸாதாரண விக்ரஹம் நீர்மொண்டு எழுந்த காளமேகம்போலே
                   இருக்குமென்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப்போந்த வடிவு தானிருக்கும்படி  இது காண்
                  என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து அவ்வடிவைக் காட்டவேண்டும்; நம்முடையார்க்கு
                  இவ்வடிவுதான் இது காணுங்கோள் —-என்று காட்டவேண்டும்; அதற்காகவன்றோ
                  திரு இந்தளூரிலே   வந்து நிற்கிறது —” என்கிறார்.
                 ஆழ்வார் திரு இந்தளூர் திவ்ய தேசத்துக்கு, மங்களாசாஸனம் செய்ய எழுந்தருளுகிறார்.
                 ஆனால், இவர் நினைத்தபோது, எம்பெருமானின் ஸேவை கிடைக்கவில்லை.
                 “வாசிவல்லீர் —இந்தளூரீர்  வாழ்ந்தே போம் நீரே….”  என்கிறார்.
                 பகவானின் அர்ச்சாவதாரத் திருமேனி ஸேவை , பக்தர்களுக்காக ஏற்பட்டது.
                 பக்தர்களுக்குப் பயன்படாதபோது, இம்மாதிரி சொல்வது உலக வழக்கு என்பது யாவரும்
                 அறிந்ததே.
                  ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
                 ” உம்முடைய திருமேனி ( திரு இந்தளூர் எம்பெருமானுடைய ) உம்மை ஆசைப்பட்டார்
                 பார்க்கக்கொண்டது என்று இருந்தோம் . அங்கண் அன்றாகில் அத்தை நீரே கட்டிக்கொண்டு
                 வாழும் …” என்று வ்யாக்யானம்  இட்டிருக்கிறார். ஆழ்வாரின்  தன் பெருமை இப்பாசுரத்திலும்
                 பளிச்சிடுகிறது, அல்லவா !
                  பெரிய திருமொழி (3—4—10 )
                  செங்கமலத் தய னனைய  மறையோர் காழிச்
                                          சீராம விண்ணகரென் செங்கண் மாலை
                   அங்கமலத் தடவயல்  சூழ்  ஆலிநாடன்
                                          அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்
                    கொங்குமலர்க் குழலியர்வேள்  மங்கை வேந்தன்
                                          கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
                     சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்
                                         தடங்கடல் சூழ் உலகுக்குத் தலைவர்தாமே
               இப்பாசுரத்தில் ஆழ்வார் கூறுவது
                     அம் கமலம் தடம் வயல் சூழ் ஆலிநாடன் ——-அழகிய தாமரைத் தடாகங்களை உடைய
                                                                              வயல்களால் சூழப்பட்ட திருவாலி நாட்டுக்குத் தலைவன்
                        அருள்மாரி—–பக்தர்களுக்கு அருளைப் பொழியும் மேகம்
                        அரட்டு அமுக்கி——தீங்கு செய்பவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் அமுங்கச் செய்பவர்
                        அடையார் சீயம்——–சத்ருக்களுக்கு ஸிம்ஹம்
                        கொங்குமலர்க் குழலியர் வேள் —-தேன்மிக்க பூக்களை அணிந்த கூந்தலை உடைய
                                                                                    மாதர்களால் விரும்பத்தக்கவர்
                         மங்கை வேந்தன்—–திருமங்கைநாட்டின் அரசன்
                         பரகாலன்—எதிரிகளுக்கு யமன்
                        கொற்றம் வேல் கலியன்—–வெற்றி பொருந்திய வேற்படையை உடைய கலியன்
               பயனைச் சொல்கிற இப்பாசுரத்தில், ஆழ்வாரின் பெருமையும், இத்திருமொழியின்
                 பெருமையுமே பெரிதாக இருக்கின்றதே , இது தகுதியோ என்று சிலர் சங்கிப்பர்.
                           “தோன்றா தோற்றித் துறை பல முடிப்பினும்
                             தான் தற்புகழ்தல் தகுதியன்றே “
                                                                         (நன்னூல் )
                  என்று சொன்னவுடனே
                            “மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
                             தன்னுடை யாற்றலுணரா  ரிடையினும்
                            மன்னிய அவையிடை  வெல்லுறு பொழுதிலும்
                            தன்னை மறுதலைப் பழித்த காலையும்
                            தன்னைப் புகழ்தலும்  தகும் புலவேற்கே  “
                  என்று சொல்லி இருப்பதனால், தன்னை மறுதலைப் பழித்த காலை
                  தன்னுடைய ஆற்றல் உணராதாரிடையே அருளிச் செய்ய நேர்ந்த பாசுரம் ,இது
                  ஆகையாலே  இத்தற்புகழ்ச்சி  குற்றத்தின்பாற் படமாட்டாது என்று உணர்க
                          இப்படி,  திருமங்கை ஆழ்வார், தன் பெருமைகளைப் பாசுரங்களில் இட்டுப்
                    பலவாறு நேர்த்தியாகப் பேசியிருப்பதில் சிலவற்றை அனுபவிக்கப்
                    ப்ராப்தமாயிற்று . “தன் பெருமைகளைத்தானே சொல்லலாமா —” என்கிற
                    அசட்டுத்தனமான கேள்விக்கும் விடை கண்டோம்
                        முனியார் துயரங்கள் முந்தினும்  இன்பங்கள் மொய்த்திடினும்
                        கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் கலைபரவும்
                        தனியானைத் தண்தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
                        இனியானை எங்கள் இராமாநுசனை  வந்து எய்தினரே
                          திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
About the Author

Leave A Response