ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —பாகம் 2
——————————
யஸ்யாபவத் பக்தஜநார்த்தி ஹந்து :
பித்ருத்வமந்யேஷ்வவிசார்ய தூர்ணம் |
ஸ்தம்பேவதார ஸ்தமநந்யலப்யம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||
அஹோபிலே காருடசைல மத்யே
க்ருபாவசாத் கல்பித ஸந்நிதானம் |
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாமபாகம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||
——————————
பகவானுடைய அவதாரங்களில், மிக விசேஷமான அவதாரம்
தன்னிடம் அபராதம் செய்தால் கூடப் பகவான் பொறுத்துக்கொள்வான்; தன்
பக்தர்களுக்கு அபராதம் செய்தால், பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதைக்
காட்டும் அவதாரம். உக்ர அவதாரம்—அக்ரமத்தை அழிக்க பகவான் எடுத்த அவதாரம்.
ஒரு நொடிப்பொழுதில் ஏற்பட்ட அவதாரம்; பக்தனாகிய சிறுவன் ப்ரஹ்லாதனுக்காக,
எல்லாத் தூண்களிலும் எழுந்தருளி இருந்த அவதாரம்;இரணியன் எந்தத் தூணைத்
தொட்டாலும் அந்தத் தூணிலிருந்து அவதாரம் செய்யத் தயாராக இருந்த அவதாரம்;
ஒலியும் ,ஒளியும் ஒருசேர நேர்ந்த அவதாரம்;பயத்தையும் பக்தியையும் ,பக்தர்களின்
மனங்களில் ஏற்படுத்தும் அவதாரம்; நம்பியவர்களை ,க்ஷண நேரமும் கைவிடாத
ந்ருஸிம்ஹாவதாரம்;ப்ரதோஷ வேளையிலே தோன்றி, இரணியனை சம்ஹரித்து,
அர்த்த ராத்ரியிலே அந்தர்தானமான அத்யத்புத அவதாரம். இவர் நரசிம்மம் ;
இன்னொருவர் ராகவ சிம்மம்;மற்றொருவர் இளஞ்சிங்கம் ; மூன்று சிங்கங்களில்
முதலாவதான அவதாரம்; வ்யாஸ பகவான், ”ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம் ”
என்கிறார். தன்னுடைய பக்தர்களின் வார்த்தையை, ஸத்யமாக்க ஸ்தம்பத்தில் தோன்றிய
அவதாரம்;
ஆழ்வார்கள், ஆதிசங்கரர், மத்வாசார்யர், வாதிராஜர், ஸ்வாமி தேசிகன் —(காமாஸி —
–காஷ்டகம் ) ஸ்ரீமதஹோபிலமட யதீந்த்ரர்கள் –ப்ரக்ருதம் ஸ்ரீமதழகியசிங்கர் வரை—
இப்படி மாபெரும் மஹான்கள் போற்றிப் புகழ்ந்த அவதாரம்.
கம்பர் —-
கம்பநாட்டாழ்வார், தன்னுடைய இராமாயண காவ்யத்தில் , ஸ்ரீ ந்ருஸிம்ஹ
அவதாரத்துக்கு என்றே தனிப் படலம் செய்து இருக்கிறார்.
ஹிரண்யகசிபு தன் புதல்வனைக் கேட்கிறான்– தன்னுடைய புதல்வனுக்கு,
எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தாலும், கொல்ல முயற்சித்தாலும், அவனை,
பகவான் காப்பாற்றுகிறான்.கடைசியாக ,புதல்வனைக் கேட்கிறான்—
நீ சொல்லும் அந்த நாராயணன் எங்கே இருக்கிறான் ? இந்தத் தூணில்
இருக்கிறானா? என்று ,ஒரு தூணைக்காட்டிக் கேட்கிறான்
.ப்ரஹ்லாதன் , “ஆமாம்—இந்தத் தூணிலும் இருக்கிறார் —” என்கிறான்
கம்பநாட்டாழ்வார், தான் இயற்றிய “இராமாயண காவ்யத்தில் ” இரணியன் வதைப்
படலத்தில் கூறுகிறார்.
ப்ரஹ்லாதன் சொல்கிறான்:–
“என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்
என் உயிர் யானே மாய்ப்பல் ; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் ” என்றனன் அறிவின் மிக்கான் (126)
என் உயிரை உன்னால் எடுக்க முடியாது—நான் , முன்பு சொன்னேனே நாராயணன் ,
அவன், நீ தொடுகின்ற இடமெல்லாம் தோன்றாவிட்டால், என் உயிரை
நானே மாய்த்துக்கொள்வேன்;பின்னும் வாழ நேர்ந்தால், அந்த நாராயணனுக்கு
நான் அடியவன் அல்ல —என்கிறான் —சொல்பவன் யார் தெரியுமா?
அறிவின் மிக்கவன் என்கிறார் கம்பர்—-ப்ரஹ்லாதனை, அறிவின் மிக்கான்
என்கிறார்.
இரணியன் தூணை அறைகிறான் —–( கையால் ,அருகில் உள்ள
தூணை அடிக்கிறான் ) அதைச் சொல்கிறான் கம்பன்—-
நசை திறந்து இலங்கப்பொங்கி , ”நன்று, நன்று” என்ன நக்கு ,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ,ஓர் தூணின் , வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் ;எற்றலோடும் ,
திசை திறந்து ,அண்டம் கீறச் சிரித்தது ,செங் கண் சீயம் (127)
மிகவும் ”நன்று நன்று ” என்று கோபத்துடன் நகைத்து, கையை உயர்த்தி
எற்றினான் –உதைத்தான் —–(அகராதிப் பொருள் )—தூணை அறைந்தான்
அறைந்த ,அடுத்த கணம், எண்திசைகளும் திறந்து—அதாவது திசைகள்
இருப்பது தெரியவில்லை —எல்லாம் ஒன்றாகி–எதனால் ? அண்டம் கீற–
எல்லா லோகங்களும் நடுநடுங்க—செங்கட் சீயம் –சிரித்தது–
ந்ருஸிம்ஹன் சிரித்தான் —–என்கிறான் கம்பன்
ப்ரஹ்லாதன் என்ன செய்தான் தெரியுமா? கம்பன் கூறுகிறான் :–
நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும், —-நான்முகனாலேகூடக்
காண இயலாத செய்யாளுறைமார்பன் இப்படிச் சிரித்ததும்,
ப்ரஹ்லாதன், ஆடினான், அழுதான், பாடி அரற்றினான், சிரத்தில்
செங்கை சூடினான், தொழுதான், ஓடி, உலகு எலாம் துகைத்தான் துள்ளி—
பக்திப் பரவசம்–எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கம்பன் சித்திரமாகக்
காட்டுகிறான். ஆடவேண்டும் அழவேண்டும் பாடி அரற்ற வேண்டும்
தலைமீது இருகரம் கூப்பவேண்டும் தொழவேண்டும் துள்ளித் துள்ளி
பூமியைத் துகைக்கவேண்டும் —-
இரணியன், ந்ருஸிம்ஹனைப் போருக்கு அழைக்கிறான்—
அப்போது,
பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்;பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பர்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது,கீழும் மேலும் .
இது ந்ருஸிம்ஹாவதாரம் —அவதாரங்களில் உக்ர அவதாரம்.
அக்ரமங்களை அழிக்க உக்ரம் அவசியம் —
கம்பர், ஸ்ரீரங்கத்தில், தான் இயற்றிய ராமாயணத்தை ,ஸ்ரீரங்க நாச்சியார்
சந்நிதி முன்பு அரங்கேற்றியபோது, இரணியன் வதைப் படலத்தை
படித்துக்கொண்டே இருக்கும்போது, மேட்டழகிய சிங்கர் சிரித்து
ஹூங்காரம் செய்தாராம் —-இது வரலாறு.
பட்டத்ரி
ஸ்ரீ நாராயண பட்டத்ரி , நாராயணீயத்தில் ந்ருஸிம்ஹனை வேண்டுகிறார்.
அரே க்வாஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தேஸ்ம ஸ்தம்பம் சலிதகரவலோ திதி ஸுத :
அத : பஸ்சாத் விஷ்ணோ ந ஹி வதிது மீஸோஸ்மி ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வாத்மன் பவனபுர வாஸின் ! ம்ருட யமாம்
இரணியன் ,ப்ரஹ்லாதனை கேட்கிறானாம் —நீ சொல்லும் ஹரி
எங்கே இருக்கிறான் ? என்று கேட்டுக் கொண்டே ,அருகே இருந்த தூணைத் தட்ட
பகவான் ந்ருஸிம்ஹனாக ,தூணைப் பிளந்துகொண்டு அவதரித்ததை
நெஞ்சில் நிறுத்தி, பட்டத்ரி கதறுகிறார்
ஹே ஹரி—இதற்குமேல் என்னால் ஒன்றும் இப்போது சொல்ல இயலவில்லை–
ஹே—விஷ்ணு—ஹே கருணாஸமுத்ரமே —உலக முழுதும் பரவியுள்ள
தெய்வமே— குருவாயூரப்பா —என்னைக் காத்து அருள்வாயாக —–
காளிதாசன்–போஜ சம்பூ
காளிதாசன் ,தன்னுடைய போஜ சம்பூவில் சொல்கிறான்—
ப்ரஹ்லாதஸ்ய வ்யஸநமிதம் தைத்ய வர்கஸ்ய தம்பம்
ஸ்தம்பம் வக்ஷஸ்தலமபி ரிபோ : யோக பத்யேன பேத்தும் |
பத்தச்ரத்தம் புருஷ வபுஷா மிச்ரிதே விச்வ த்ருஷ்டே
தம்ஷ்ட்ரா ரோசிர் விசித புவனே ரம்ஹஸா ஸிம்ஹ வேஷே ||
பகவான் , ந்ருஸிம்ஹனாக அவதரித்து, ஒரே க்ஷணத்தில், ப்ரஹ்லாதனின் கவலை,
அசுரர்களின் ஆணவப்போக்கு, அக்ரமங்கள், தூண் ஹிரண்யனின் மார்பு
ஆக , இந்த நான்கையும் பிளந்தார் உலகம் உய்ந்தது
இப்படி மகா உக்ரமான அவதாரமாக இருந்தாலும் ,பக்தியுடன் பூஜிப்பவர்களின்
மனக் கவலை தீர்த்து, விரோதிகளை விரட்டி, அனுக்ரஹம செய்யும் உத்தமமான
அவதாரம்.
முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர்—–(
வைகுண்டவாஸி முக்கூர் ஸ்ரீ உ.வே. லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் அடிக்கடி சொல்வார்;–
எல்லாவிதமான சுற்றமும் (உறவு) ஸ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹனே —அவனே கதி– 7வது யஜ்ஞம்
முடிந்தபிறகு,இனியஜ்ஞம் வேண்டாம் என்று நினைத்த சமயத்தில்,ஸ்ரீ ந்ருஸிம்ஹ ன்
அடியேனை மறுபடியும் யஜ்ஞத்தை செய்ய வைத்தான் அப்போது அருளியது–
ஸ்ரீ மாலோல பஞ்சகம் என்பார். இதைத் தினமும் சொன்னால், சகல நலன்களும் நிச்சயம்
உண்டாகும் என்பார் ( ஜனவரி–1982—மயிலாப்பூர் யஜ்ஞத்தில் )
வாசகர்களின் ,நன்மையை வேண்டி, இந்த அருமையான பஞ்சகத்தை இங்கே
கொடுத்திருக்கிறேன்—-
1.யோகி த்யேயம் ஸதா நந்தம் பக்தாநாம் அபயங்கரம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
2. ஸர்க–ஸ்திதி –விநாசாநாம் கர்த்தா கர்த்ருபதி : ஸ்வயம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
3. நமாஸகம் தயாபூர்ணம் ஸர்வலோக -நமஸ்க்ருதம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
4. ப்ரஹ்லாத —வரதம் ச்ரேஷ்டம் கருடாத்ரி –நிவாஸிநம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
5. வேதாந்த கருணா நித்யம் ஸேவ்ய மாநம் பரம் சுபம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
6. ஸ்ரீ ரங்கயோகி க்ருபயா ப்ரோக்தம் ஸ்தோத்ரமிதம் சுபம் |
ய : படேத் ச்ரத்தயா நித்யம் ஸர்வபாபை : ப்ரமுச்யதே ||
அர்த்தம் ;—
அஷ்டாங்க ஸித்தி பெற்றவர்கள் தினமும் த்யானிக்கும் மூர்த்தி ;
எப்போதும் பரமானந்த ஸ்வரூபி ;பக்தர்களின் பயத்தைப்
போக்குபவன்; தாமரைக் கண்ணன்;சமஸ்த பாபங்களையும்
சம்ஹரிப்பவன் ; வேண்டும் வரங்களை அளிப்பவன்; இப்படிப்பட்ட
ஸ்ரீ மாலோலனைப் பற்றுகிறேன்
2.ஜென்மத்தை அழிப்பவன்;ஜீவன்கள் உஜ்ஜீவிக்க பரம கருணையுடன்
முத்தொழிலையும் செய்யும் பிரான்; தாமரைக் கண்ணன்; எல்லாப்
பாபங்களையும் போக்குபவன்;வேண்டிய வரம் தருபவன்;இப்படிப்பட்ட
ஸ்ரீ மாலோலனையே அடைகிறேன்.
3. லக்ஷ்மிலோலன்; காருண்ய நிதி;எல்லா உலகத்தாரும் ஸேவிக்கும்
ஏற்றம் உடையவன்; தாமரைக் கண்ணன்; பாபங்கள் அனைத்தையும்
போக்குபவன்; வேண்டிய வரம் அனைத்தையும் தருபவன்; ஸ்ரீ மாலோலனையே
தஞ்சம் என்று கருதி, அவனையே சரணம் அடைகிறேன்.
4. பக்தனான ப்ரஹ்லாதனைக் காத்தவன்; ஒப்பாரும் மிக்காரும் இல்லா
மேன்மையாளன்; கருடகிரி வாஸி ; தாமரைக் கண்ணன்; சிங்கமுக ஸ்வரூபி ;
கோரிய வரம் அளிக்கும் ஸ்ரீ மாலோலனைச் சரணம் அடைகிறேன்;
5. 44ம் பட்ட அழகிய சிங்கரால் தினமும் ஆராதிக்கப் பெற்றவன்; மிக மேலானவன்;
பங்கயக் கண்ணன்;பாபங்களைப் பொசுக்குபவன்; வேண்டியதெல்லாம் அருளும்
ஸ்ரீ மாலோலனையே தஞ்சமெனப் பற்றுகிறேன்
6. 42ம் பட்டம் ஸ்ரீ இஞ்சிமேட்டு அழகியசிங்கர் கிருபையால், அடியேனால்
சொல்லப்பட்ட மங்களத்தை அருளும் இந்த ஸ்தோத்ரத்தைத் தினமும் சொல்பவர்கள்
எல்லாவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஸ்ரீ மாலோலன் கிருபையைப்
பெறுவார்கள்
மிக அருமையான –சொல்வதற்குச் சௌகர்யமான ஸ்தோத்ரம் . அனுதினமும் இதை
அனுசந்திக்குமாறு பிரார்த்திக்கிறேன்
25ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர்
25ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்—ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹா தேசிகன்
ஸ்ரீநவ ந்ருஸிம்ஹ ஸ்துதி என்று–அஹோபிலத்தில் எழுந்தருளி இருக்கும்
நவ ந்ருஸிம்ஹ மூர்த்திகளையும் –அந்தந்த ஸந்நிவேசத்தோடு அருமையான
ஸ்துதியை அருளி இருக்கிறார்.மிகச் சுலபமான ஸ்துதி.
ஸ்ரீந்ருஸிம்ஹ த்வாத்ரிம்சத் பீஜமாலா —வெகு அத்புதமானது—-அனுசந்திக்க அனுசந்திக்க
ஸ்ரீ மாலோலன் ஓடோடி வந்து அநுக்ரஹிப்பான்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கவசம் —-ப்ரஹ்லாதனால் அருளப்பட்டது—பிரம்மாண்ட புராணத்தில்
உள்ள கவசம்—கடன் தொல்லையைப் போக்கும்; சத்ரு பயத்தை அழிக்கும்;எல்லாக்
கஷ்டங்களையும் பொசுக்கும் —தினமும் சொல்ல வேண்டும்.
ருண விமோசன ஸ்தோத்ரம் —–க்ரஹ பீடைகள், கஷ்டமான காலங்கள்—கடன்தொல்லை–
இவைகளை நீக்கும்
ஸ்ரீ ந்ருஸிம்ஹனை ஆராதிப்பது , மிகவும் சுலபம்—
ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனின் படத்தை வைத்து, நெய்தீபம் ஏற்றி, குறைந்தது 12 தடவையாவது
பிரதக்ஷணம் செய்து ,அடியேன் சொல்லிய–இனியும் சொல்லப்போகும் ஸ்தோத்ரங்களில்
ஏதேனும் ஒரு ஸ்தோத்ரத்தை மனமுருகச் சொல்லி, வணங்கி, ப்ரதோஷ நேரத்தில், தினமும்
பானக நைவேத்யம் செய்து அருந்தி வந்தால்—இப்படிக் குறைந்தது 48 நாட்களாவது
செய்து வந்தால், க்ரஹ தோஷங்கள் விலகும்; கடன் தொல்லை தீரும்; தீராத வ்யாதிகள்
குணமாகும்; ஏன் —எல்லாத் துன்பமும் தீயினில் தூசாகப் போய்விடும்