Nrusimham

Posted on May 27 2016 - 5:38am by srikainkaryasriadmin

 

11131760_900239133373777_65870949_n

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —பாகம் -7

தசாவதார ஸ்தோத்ரத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
——————————————————————

பகவான், விபவ அவதாரத்திலிருந்து அர்ச்சை நிலையை அடைகிறான்; ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்(தத்வத்ரய சிந்தநாதிகாரத்தில் )சொல்கிறார்—-
பத்மநாபாதிகளான முப்பத்துச் சின்ன ரூபங்கள் . இவற்றில் மத்ஸ்ய கூர்மாதிகளான அவதாரங்கள் ஒரு ப்ரயோஜன வசத்தாலே விசேஷித்துச் சொல்லப்பட்டன. இவ்வைபவங்களில் ஈச்வரன் ஒவ்வோர் கார்ய விசேஷங்களுக்கீடாகத்தான் வேண்டிய குணங்களை
வேண்டியபோது மறைத்தும், வேண்டினபோது ப்ரகாசிப்பித்தும் நடத்தும் இவற்றில் அவாந்தர பேதங்கள் க்ருஷ்ணரூபாண்யஸங்க்யாநி இத்யாதிகளின்படியே அனந்தகங்கள் .இங்கு ஒரு ப்ரயோஜனத்தாலே —என்பதை ஆராய்ந்தால், தயைதான் முன் நிற்கிறது. பகவானின் தயை—

ஸேவா ஸ்வாமி சொல்வார்—-திருவஷ்டாக்ஷரத்தில், மத்யம பாகம்”நம ” என்கிற இரண்டு எழுத்துக்கள். அஹங்கார ,மமகாரங்களை நிவ்ருத்தி
பண்ணும் எழுத்துக்கள். தானே ஈச்வரன் என்கிற ஹிரண்யகசிபுவின்அஹங்காரத்தையும் மமகாரத்தையும் நிவ்ருத்தி பண்ணியதைக்
குறிக்கிறது என்பார். நரஸிம்ஹன் !இது 4வது அவதாரம்–
ப்ரணவம் —மூன்று எழுத்து–முதல் மூன்று அவதாரங்களைக்
குறிக்கிறது, என்பார். இப்படியே பத்து அவதாரங்களையும் திருவஷ்டாக்ஷரத்தில் பொருத்திச் சொல்லி இருக்கிறார். அடியேனிடம்
வாத்ஸல்யத்துடன், அநேக நுணுக்கமான விஷயங்களைச் சாதித்தாகும்.

நரஸிம்ஹாவதாரம்
————————————–

ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம : க்ஷணம் பாணிஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : |
யத் ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா யாதிருச்சிகா த்வேதஸாம்
யாகாசித்ஸஹஸா மஹாஸுர க்ருஹஸ் தூணாபிதாமஹ்யபூத் ||

திடீரென்று மிக வேகமாகத் தோன்றினான் ந்ருஸிம்ஹன் . ஹிரண்யகசிபுவின்அரண்மனையிலிருந்த –தூணும்—கம்பமும்—பெருமாளைப் பெற்றதாயினுடைய பெருமையைப் பெற்றது. பகவானை எப்போதும் பிரியாமல்இருக்கும் சக்ரம் முதலிய திவ்ய ஆயுதங்களும் அவரால் விடப்பட்டன.
திவ்ய ஆயுதங்களைவிட,திருக்கைகளின் நகங்கள் ஏற்றமும், சிறப்பும்பெற்றன . அப்படிப்பட்ட, வைகுண்ட சிங்கப்பிரான் மூவுலகங்களையும் காத்து அருள வேண்டும்.
ஸ்தூணா —தூண் அதாவது கம்பம்
அவந்த்ய —மலடு இல்லாத
ஜடரா—-வயிற்றைப் பெற்று
வேதஸாம் பிதாமஹீ அபூத்—-ப்ரும்மாக்களுக்குத் தகப்பனைப் பெற்ற தாயாக ஆயிற்று—
( இந்த மணி வயிற்றால் ந்ருஸிம்ஹனைப் பெற்ற தூணும் மோக்ஷம் அடைந்ததோ ! )

அடியேன், ஸ்ரீ கோவிந்தன் துணையிருக்கக் கோள் என் செயும் ? என்று ஓர் புத்தகம் வெளியிட்டு இருக்கிறேன். அதில் சொல்லி இருப்பதாவது—-
ஜாதகக் கட்டத்தில் 12 ராசிகள் இருக்கின்றன. அவற்றில், முதல் கட்டமானமேஷராசிக்கும்,8வது கட்டமான வ்ருச்சிக ராசிக்கும் செவ்வாய் க்ரஹம் சொந்தம்.
இது ந்ருஸிம்ஹாவதாரம் சம்பந்தப்பட்ட க்ரஹங்கள் .செவ்வாய் க்ரஹத்தால்பாதிக்கப்படுபவர்கள், ஸுந்தர பாஹுஸ்த்வம் —97வது ச்லோகம் , பன்னிருநாமம்
பாசுரங்கள் யாவும், ந்ருஸிம்ஹனைப்
பற்றிய,ஸ்தோத்ரம் –தசாவதாரத்தில்–
தயா சாதகம் –84வது ச்லோகம் மற்றும் பாதுகா சஹஸ்ரத்தில் காஞ்சந பத்ததி.
இவைகளில் ஏதாவது ஒன்றைப் பாராயணம் செய்யலாம் அல்லது அவகாசம்இருப்பவர்கள், எல்லாவற்றையும் சொல்லலாம், அதனால், ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
பூரணமாக அனுக்ரஹிப்பான் — என்று சொல்லி இருக்கிறேன் .

திருவேளுக்கை

வேகவதி ஆற்றங்கரையில்,( சின்ன காஞ்சீபுரம்—ஸ்ரீ தேவாதி ராஜன்கோவிலிலிருந்து சுமார் 3 கி.மீ. இத்தலத்தைப் பற்றி, அடியேன் ,”திவ்ய தேச வைபவம்” மூன்றாம் பாகத்தில் விரிவாகச் சொல்லி
இருக்கிறேன் ) திருவேளுக்கை என்கிற திவ்ய தேசத்தில் ந்ருஸிம்ஹன்தானே விரும்பி எழுந்தருளி இருக்கிறான். இவன் ”ஆள் அரி ”—
லீலா விபூதி, நித்ய விபூதி என்கிற இரண்டு வகை உலகங்களையும்ஆள்பவன்.இப்பெருமானிடம், வீரத்தைக் காட்டிலும் அழகே முதன்மையாகக்
காக்ஷி அளிக்கிறதாம்.—ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்.

ஸ்வாமி தேசிகன் , காஞ்சீபுரம் அருகே உள்ள திருவேளுக்கை என்கிற இந்தத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை,
காமாஸிகாஷ்டகம் என்கிற ஸ்துதியில் ஸ்தோத்ரம் செய்கிறார்.
எட்டு ச்லோகங்கள்—-ஒன்றையும் சேர்த்து இருக்கிறார் ஸ்வாமி தேசிகன்.ஆக , ஒன்பது ச்லோகங்கள்—–

ஸேவா ஸ்வாமி சொல்வார்—–எண்ணிக்கையில் எட்டாக இருந்தாலும்,எட்ட முடியாத ந்ருஸிம்ஹாநுபவத்தை சுவாமி தேசிகன் நமக்கெல்லாம்
எட்டும்படி செய்திருக்கிறார்—தவிரவும் வேகவதி நதியின் வடகரையில்ஒரு சிங்கம்; தென் கரையில் ஒரு சிங்கம்; ஒன்று காமனைப்போல்(மன்மதன் ) அழகிய சிங்கம்; மற்றொன்று கவிதார்க்கிக சிம்ஹம்

காமாஸிகாஷ்டகம்

1.ஸ்ருதீநாமுத்தரம் பாகம் வேகவத்யாஸ்ச தக்ஷிணம் |
காமாததிவஸந் ஜீயாத் கஸ்சிதத்புத கேஸரீ ||

2. தபநேந்த்வக்நி நயந : தாபாநபசிநோது ந : |
தாபநீய ரஹஸ்யாநாம் ஸார : காமாஸிகா ஹரி : ||

3. ஆகண்டமாதி புருஷம் கண்டீரவமுபரி குண்டிதாராதிம் |
வேகோபகண்ட ஸங்காத் விமுக்த வைகுண்ட பஹூமதிமுபாஸே ||

4. பந்துமகிலஸ்ய ஜந்தோ பந்துர பர்யங்க பந்த ரமணீயம் |
விஷம விலோசநமீடே வேகவதீ புளிந கேளி நரஸிம்ஹம் ||

5. ஸ்வஸ்தாநேஷுமருத்கணான் நியமயந் ஸ்வாதீன ஸர்வேந்த்ரிய :
பர்யங்க ஸ்திர தாரணா ப்ரகடித ப்ரத்யங்முகாவஸ்திதி : |
ப்ராயேணப்ரணிபேதுஷாம் ப்ரபுரஸௌ யோகம் நிஜம் சிக்ஷயந்
காமாநாத நுதாதஸேஷ ஜகதாம் காமாஸிகா கேஸரீ ||

6. விகஸ்வர நக ஸ்வருக்ஷத ஹிரண்ய வக்ஷஸ்தலீ
நிரார்கல விநிர்கலத்ருதிர ஸிந்து ஸந்த்யாயிதா : |
அவந்து மதநாஸிகா மநுஜ பஞ்ச வக்த்ரஸ்ய மாம்
அஹம்ப்ரதமிகா மித : ப்ரகடிதா ஹவா பாஹவ : ||

7. ஸடா படல பீஷணே ஸரபஸாட்டஹாஸோத் படே
ஸ்புரத்க்ருதி பரிஸ்புடத் ப்ருகுடி கேபி வக்த்ரே க்ருதே |
க்ருபா கபட கேஸரிந் தநுஜ டிம்ப தத்த ஸ்தநா
ஸரோஜ ஸத்ருஸா த்ருஸா வ்யதிவிஷஜ்ய தே வ்யஜ்யதே ||

8. த்வயி ரக்ஷதி ரக்ஷகை : கிமந்யை : த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை : |
இதி நிஸ்சித தீ : ஸ்ரயாமி நித்யம் ந்ருஹரே வேகவதீ தடாஸ்ரயம் த்வாம் ||

9. இத்தம் ஸ்துத : ஸக்ருதிஹாஷ்டபிரேஷ பத்யை :
ஸ்ரீ வேங்கடேஸ ரசிதைஸ்த்ரிதஸேந்த்ர வந்த்ய : |
துர்தாந்த கோர துரித த்விரதேந்த்ர பேதீ
காமாஸிகா நரஹரிர்விதநோது காமாந் ||

சுருக்கமான அர்த்தம்—–

1. பகவான் வேதஸ்வரூபன் –உத்தர பாகம் இவனைச் சொல்கிறது. இவன்,வேகவதியின் தெற்கே ந்ருஸிம்ஹனாக எழுந்தருளி இருக்கிறான்.

2. இவனுக்கு மூன்று நேத்ரங்கள்—ஸுர்யன் ,சந்த்ரன், அக்னி . ந்ருஸிம்ஹதாபினி என்கிற உபநிஷத்தில் சொல்லப்பட்ட விவரங்களுக்கு,, உள் அர்த்தமாக
விளங்குகிற —இந்த எம்பெருமான் –ஆளரி —அடியோங்களின் தாபங்களைத் தீர்ப்பாராக

3.தன்னுடைய அவதாரத்தில், நரங்கலந்த சிங்கமாகத் தோன்றி, ஹிரண்யனை ஸம்ஹரித்து, தானே விரும்பி வைகுந்தத்தையும் விட்டு, வேகவதி நதி தீரத்தில்
வசிக்க ஆசைப்பட்டு எழுந்தருளி இருக்கும் ந்ருஸிம்ஹனை வணங்குவோம்

4. முக்கண்ணனாய், யோகப்பட்டையுடன் வேகவதி மணல் படுகையில் உலக நன்மைக்காக கோயில் கொண்டுள்ள ந்ருஸிம்ஹனைப் பூசிப்போம்

5. பிராணன்களை அடக்கிப் புலன்களை ஒடுக்கி, யோகம் எப்படிச் செய்யவேண்டும் என்று அப்யாஸத்தைத் தெரிவிப்பவன்போல யோக ந்ருஸிம்ஹனாக
அருள்புரியும் எம்பெருமான், உலக ஜனங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவானாக

6.திருக்கைகளின் நகங்களால், ஹிரண்யனின் மார்பைக் கீறி , அதனால் ஏற்பட்ட ரத்த ஆறுகளால் மிகச் சிவந்தவையும், ஹிரண்யனுடன் போரிடத் தம்முள் போட்டி போடுவையுமான எல்லாத் திருக்கைகளும் ,எங்களை ரக்ஷிக்க வேண்டும்

7. ஹே–ந்ருஸிம்ஹா—–உன் திருமுக விலாஸத்தில், பிடரிக் கேசம் பரந்து விரிகிறது.திருவாயில் அட்டஹாஸச் சிரிப்பு. புருவங்கள் நெறிகின்றன.ஒரு நேத்ரம் கோபத்தைக்கொட்டுகிறது. இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறத்தில், மற்றொரு நேத்ரம்
கருணையைப் பொழிகிறது.உன் பக்தனாகிய ப்ரஹ்லாதனுக்குப் பாலூட்டுமாப்போலே
நேத்ரம் இருக்கிறது. இப்படி, இரு உணர்ச்சிப் பிழம்பும் ஒருசேர உன் திருவதனத்தில் ஓடுகின்றன.

8. வேகவதி நதிக்கரையில் நித்ய வாஸம் செய்யும் ஹே—ஆளரியே !
நீ , அடியேனை ரக்ஷிக்க ஸங்கல்பித்து விட்டால், மற்றவரால் தடுக்க முடியாது.
( மற்ற தெய்வங்களால் பயன் இல்லை )
நீ, அடியேனை ரக்ஷிக்க சங்கல்பிக்கவில்லையாகில், அந்தச் சமயத்திலும் மற்றவர் ஏதும் செய்ய இயலாது ( அப்போதும் மற்ற தெய்வங்களால் பயன் இல்லை )
இப்படியாக, உன்னை நன்கு அறிந்து உன்னையே சரணம் அடைகிறேன்–

9. இவ்விதமாக, ஸ்ரீ வேங்கடேச கவியால், எட்டு ச்லோகங்களால் ஸ்தோத்தரிக்கப்பட்ட
வேளுக்கை ந்ருஸிம்ஹன் —தேவர்களும் துதிக்கும் எம்பெருமான்–அடியோங்களுடைய
பாபங்களை அழிக்க வல்லவன். அடியோங்களுடைய பிரார்த்தனைகளுக்கு அருள்வானாக–

ஔஷதகிரியில் ஸ்ரீ ந்ருஸிம்ஹன்

ஸ்வாமி தேசிகன், அஹீந்த்ரபுர க்ஷேத்ரத்தில், அடியவர்க்கு மெய்யன் திவ்ய தம்பதியரை
ஸேவித்து, ஔஷதகிரி ஏறி முற்றிலும் அடர்ந்த வனமாகக் காட்சி அளித்த ஸ்தலத்தில்,
ஆளரி ஸந்நிதியில் அவனையும் ஸேவித்து, மாதுலர் ஸ்ரீ அப்புள்ளாரின் நியமனப்படி ,காருட மந்த்ரந்த்தை ஜபிக்கத் தொடங்கினார். அவ்விடத்தே, ஆதியில் எழுந்தருளி இருந்தது, ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
( இவ்விவரங்களை அடியேன் கதம்ப மாலா என்கிற
பரிமுகப் பெருமான் விஷயமாக , 32 ஸ்தோத்ரங்களும், 32 அருமையான ஸ்ரீ ஹயக்ரீவர்
படங்களும், புராண வரலாறுகளும் இன்ன பிற விவரங்களும் கொடுத்துள்ள புத்தகத்தில்,
எழுதி இருக்கிறேன். ) ஸ்வாமி தேசிகனுக்கு,
ஸ்ரீ ஹயக்ரீவன் இவ்விடத்தே ப்ரத்யக்ஷமாகி
அருளியவுடன் ஸ்வாமி அனுபவித்து அருளியது
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்—ஆனால்,
இந்த ஸ்தோத்ரத்தின் இன்னொரு அர்த்தம்—
ஸ்ரீ ந்ருஸிம்ஹானைப் பற்றியது என்றும் ,
மஹான்கள் , இந்தத் தெளிய உள் பொருளை ப்ரகாசிக்கச்செய்ய வேணுமென்றும்
விண்ணப்பித்து இருந்தேன்.—ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தைச் சொன்னோமானால்,
ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் ஸ்தோத்தரிப்பதாக ஆகும். அடியேனுடைய மந்த புத்திக்குத் தெரிந்தவரையில், இப்படியான இரண்டு முக்ய அவதார வைபவத்தை, நமது மஹாசார்யன் ஸ்வாமி தேசிகனைப்போல, வேறு எந்த மத ஸ்தாபகரும், மஹாசார்யர்களும்
மஹா பண்டிதர்களும் இதுவரை ஒரே ஸ்தோத்ரத்தில் சொன்னதில்லை.
இப்போதும் ஔஷதகிரியில்ஸ்ரீ ஹயக்ரீவன் ஸந்நிதியில், ந்ருஸிம்ஹனும் மேற்கு திக்கு
நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.
இப்படிப்பட்ட, ஸந்நிவேசம்—இங்கு ஒரு புண்ய இடத்தில்தான் ஆதலால், இங்கு ஆற அமரச் ஸேவித்து, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை மனமுருகச்
சொன்னோமானால், நரசிங்கப் பெருமானின் க்ருபையும் ஒருசேரக் கிடைக்கும்.

————————இன்னும் தொடரும் ———–

About the Author

Leave A Response