krushna—–

Posted on May 30 2016 - 9:19am by srikainkaryasriadmin

கண்ணா —-கருணை செய்

                 ————————————————–
1.மாடு மேய்த்த கண்ணனை, மந்தஹாஸ முகத்தானை
   தேடிக் கொடுத்துவிட்டால் தெம்மாங்கு பாடிடுவேன்
   பாடியபோதும்,  அவர்க்குப் பரிசு கொடுத்திடுவேன் 
   வாடிய பயிர் நானே, வாட்டத்தைப் போக்கிடுங்கள் !
2. நந்தகோபன் குமரனை நந்தா அருள் விளக்கை
   இந்தா எனக் கொடுத்தால் இன்பத்தில் துள்ளிடுவேன்
   கொடுப்போர் அவருக்குக் கோடி கோடி நமஸ்காரம்
   கொடும்  பாவியானேனே ,கேட்டதைக் கொடுத்திடுங்கள்
3. நவநீதசோரனை  நாட்டியம் செய்தானை
   இவனே எனச் சொன்னால், இறும்பூது எய்திடுவேன்
   சொன்னவர்க்குப் பாமாலை சூட்டி மகிழ்ந்திடுவேன்
   என்னவரே, கிரிதாரி ! எங்கேதான் இருக்கின்றீர் !
4. பூதனையைக் கொன்றவன், பூவிலும் மென்மையினன்
வேதங்கள் தேடுபவன் இவனென்று காண்பித்தால்
​​   சாதகப் பறவைபோல் சென்றங்குக் களித்திடுவேன்
   வேதனையின் உச்சத்தை வெட்டியே போட்டிடுவேன்
5. சகடமுதைத்தவனை, சராசரம் காத்தவனை
   அகடிதடினா விளையாட்டு அனைத்தும் செய்பவனை
   பார்த்தீரோ    எங்கேனும் ,பரிதவித்துக் கேட்கின்றேன்
  வேர்த்துமது வேதனையில் விழுந்துமே சாகின்றேன்
6. ராதையின் மணாளனை பேதைமை செய்தானை
   வீதியில் கண்டீரோ !வீட்டினில் கண்டீரோ !
   ததிபாண்டன் பாணியிலும் ,தேடித் பார்த்தீரோ ?
  கதி அவனே, கதி அவனே ,கதறுவது கேட்டிலையோ ?
7. தாம்பினால் கட்டுண்டாய் ! தாய் யசோதை செய்தாலும்
    வீம்பு எதற்கு? ஏங்கும் எனையும் நீ கட்டுதற்கு ?
    தயிரும் நானே தான் !வெண்ணெயும் நானேதான் !
    உயிர்  எனக்கு இனி எதற்கு ?இப்போதே எடுத்துவிடு
8. தசமஸ்கந்தத்தில்  தண்ணீராய் உருகிவிட்டேன்
   தசமஸ்கந்தத்தை  எழுதியும்  அர்ப்பணித்தேன்
   இன்னும் நீ  என்னை என்னப் பணி  கேட்கிறாய் ?
   இதுவரை போதாதோ ? எதுவரை உன் உள்ளம் ?
9. புள்ளினங்காள் !மேகங்காள் !கண்டீரோ, கண்டீரோ ?
    துள்ளிவிழும் மான்களே  குழலோசை கேட்டீரோ ?
    கண்ணனைக் கண்டுவிடில் நயமாகச்   சொல்லுங்கள்,
    கண்ணன் நினைவில் ஏங்கும் என் கதியைச் சொல்லுங்கள் !
10. பசி இல்லை, உறக்கமிலை , வாசி அறியவில்லை
     ஊசிமுனை அளவும் அவனில்லா நானில்லை
     கண்ணன் வருவான் காத்திருப்பேன் என்றென்றும்
     திண்ணமிது திண்ணம் !தெவிட்டாத எண்ணம் !
           கண்ணா ,கருணை செய்
=============================================கண்ணா, நீ வரவேண்டும் !
————————————

1.அன்றங்குக் கோபியரை , அலைக்கழித்து வென்றாய்
சென்றங்குக் கஞ்சனையே, சிதைத்தொழித்து நின்றாய்
கரைந்துருகும் எங்களையே, கரைசேர்த்து வைப்பாய்
உரையிடுவோம், துதிப்போம், உடனே வரவேண்டும்.

2.எங்களுக்குக் கதியெல்லாம் ,எவ்வுலகமெல்லாம்,
பங்கமிலாப் பேரின்பம் பக்தி இவையெல்லாம் ,
செங்கண்மால்!உன் திருவடியே ,மலரடியே காப்பு!
எங்கும் நிறைந்தவனே!இங்கும் வரவேண்டும்.

3.உயிரும் நீ! துயர் தீர்க்கும் உயர்வும் நீ!உள்ளத்தில்,
துயிலும் நீ: எங்கள் துயர் நீக்கி அருளும் நீ ,எல்லா
ஆற்றலும் நீ !ஆதவன் நீ!ஆகாயச் சந்திரன் நீ ! உன்னைப்
போற்றுகிறேன், புகழ் மிக்காய்! போகாதே வரவேண்டும் .

4.கண்ணும் நீ! கண்ணுக்குக் கண்ணும் நீ!காணும்,
விண்ணும் நீ!விண்ணுக்குக் காரணம் நீ!விண்ணில்
தாரகை நீ!தாரகைக்குத் தாரகம் நீ!தாரகையின் ,
ஒளியும் நீ!ஒளிக்கெல்லாம் ஒளியே நீ!கண்ணா!
எளியேன் நான் ;ஏதிலன் நான்; இனிதே வரவேண்டும் .
——————————————————————————————–இனிது  , இனிது

  ———————–
இனியது கேட்பின் நவநீதக் கண்ணா ,
இனிது இனிது வேணுவின்  கானம் !
கானத்தில் இனியது கோபியர் கீதம் !
கீதத்தில் இனியது எதுவெனக் கேட்பின்,
இனிது இனிது மழலை இனியது !
அதனினும் இனிது குழந்தையின் மழலை !
மழலை என்பது மயக்கும் ஒலிகள் !
ஒலிகளோ காற்றின் உருவகம் !
உருவகம் என்பதோ உயர்வுறு கற்பனை !
உயர்வுறு என்பதோ அயர்விலாக் கிளர்ச்சி !
அயர்விலாக் கிளர்ச்சி அவனே கண்ணன் !
கண்ணனின் நாமம் இனியனில் இனியது !
இனியனில் இனியது நீயே கண்ணா !!Mannargudi-Rajagopalaswami-Temple-brahmotsavam-2015-19
About the Author

Leave A Response