Dhasamaskantham–Naveena paaniyil–6

Posted on Aug 28 2016 - 11:45am by srikainkaryasriadmin

தசமஸ்கந்த பாராயணம்  நவீன  பாணியில்–6
—————————————-
அத்யாயம்   6.
————-
பூதனை   மோக்ஷம்
————

நந்தகோபன் , கோகுலத்துக்குத்திரும்பும்  வழியில்,

வசுதேவர்  சொன்னதை  நினைத்துக்கொண்டே வந்தான் .

எதுவாக இருந்தாலும், பகவான்தான் ரக்ஷணம் என்று மனத்தால்,

பகவானைச் சரணமடைந்தான்
வசுதேவர் சொன்னபடியே, கோகுலத்தில்

கெட்டவை நடப்பதற்கான, சூசகங்கள் தோன்ற  ஆரம்பித்து விட்டன.

பூதனை என்கிற ராக்ஷஸி —-கோர ரூபமுள்ளவள்—கம்ஸனால் ஏவப்பட்டவள்—

கோகுலத்துக்குள் புகுந்து, வீடு வீடாகச் சென்றாள்.

உருவத்தை, அழகான, அதிரூபசுந்தரியாக  மாற்றிக்கொண்டு, சென்றாள்.

கோபிகைகள், இவளைப் பார்த்ததும், மயங்கினார்கள்.

தேவலோகத்து சுந்தரியோ என்று அதிசயித்தார்கள்.

இந்த  பூதனை,,   யதேச்சையாக நந்தகோபன்  மாளிகைக்குள் நுழைந்தாள்.

கிருஷ்ணன், படுக்கையில் தனியாக இருப்பதைப் பார்த்தாள்.
கிருஷ்ணன், தன் தேஜஸ்சை  முற்றிலும்  மறைத்துக் கொண்டு,

சாம்பலால் மூடியிருக்கும் அக்நியைப் போல இருந்தான்.

இந்தக் குழந்தையை, தன்னுடைய நிஜ ராக்ஷஸ ஸ்வரூபத்தை

முற்றிலும் மறைத்துக்கொண்டு, தேவலோகத்து சுந்தரியைப் போல

மிளிரும் பூதனை பார்த்தாள்
.
(ஹே, கிருஷ்ணா….நீ உன்நிஜமான  தேஜஸ்சை மறைத்துக்கொண்டிருக்கிறாய்

ஆனால், பூதனையோ, தன் நிஜமான ராக்ஷஸ ஸ்வரூபத்தை முற்றிலும்

மறைத்துக் கொண்டிருக்கிறாள்.  இது என்ன, விளையாட்டு   ! )
ஹே, பிரபோ…..நீ ஓரக்கண்ணால், அவளைப்பார்த்து, கண்களை மூடிக்கொண்டாய்.

தூங்கும் சர்ப்பத்தை, கயிறு என்று எண்ணி, மடியில் எடுத்துப் போட்டுக்கொள்ளும்

மனிதரைப் போல, வெளிப் பார்வைக்கு மிகவும் அன்புள்ளவளாக ,

யசோதை, ரோஹிணீ  இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

அவர்கள், இவள் தளுக்கிலும் மினுக்கிலும்  ப்ரமை பிடித்து ,

அவளைத் தடுக்காமல் இருக்க,

பூதனை, உன்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.

உனக்கு, ஸ்தன்ய  பானம் கொடுக்கத் தொடங்கினாள்.

நீ, ஸ்தன்யத்துப்பாலை உறிஞ்ச ஆரம்பித்ததும், அவளுக்கு வலி பொறுக்கவில்லை.

“என்னை விட்டு விடு,  என்னை விட்டு விடு  ”  என்று கதறினாள்.

ஆனால் அதற்குள் , எல்லா அங்கங்களும் உலர்ந்து,

ஜீவனும் வறண்டு, கண்கள் பிதுங்கி, கால் கைகளை உதறிக்கொண்டு,

உடலெல்லாம் வியர்க்க, பெரிதாக ஓலமிட்டாள்.

அந்த சப்தத்தால் பூமியும் மலைகளும் நடுங்கின,

பூதனை, தன் சுய ரூபமான ராக்ஷ்ஸியின்  உருவத்துடன் ,

வாயைப் பிளந்துகொண்டு, கைகளும் கால்களும்  பூமியில் நீட்டிக்கொள்ள ,
12   மைல்  விஸ்தீரணத்துக்கு   செடிகொடிகள் ஒடிந்து விழ,  —–

-செம்பட்டைத் தலைமயிர் பறக்க——பூமியில் உயிரற்று விழுந்தாள்.

இதைப் பார்த்த, கோபர்களும், கோபியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுகபிரம்ம  ரிஷி, ராஜா பரீக்ஷித்துக்குக் கூறுகிறார்;-

பகவானான -நீ மட்டும் அவளுடைய  மார்பில்   பயமே இல்லாமல்

விளையாடிக்கொண்டிருந்தாய்.  பயந்த நிலையல் இருந்த  கோபியர்கள்

உடனே ஓடிவந்து, உன்னைத் தாவி எடுத்து, அணைத்துக் கொண்டார்களாம்.
யசோதையும் ரோஹிணியும்  அதிர்ச்சியிலிருந்து  விடுபட்டு, உன்னை

அவர்கள் எடுத்துக் கொண்டு, உன்னைத் தடவித் தடவிப் பார்த்து,

பசுமாட்டின் வால்மயிரால் ரக்ஷை செய்து,

அத்தால் உன்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றி, கண்  எச்சில் படாதவாறு

இருக்கவேண்டும், ஆபத்து விலகவேண்டும்  என்று வேண்டிக்கொண்டு,

அதை எறிந்தார்களாம்.  கர்ப்பூர  ஹாரத்தி எடுத்தார்களாம்.

கோமூத்ரத்தினால் உன்னை  நீராட்டினார்களாம்.

பசுவின் சாணத்தினால் , உன் அங்கங்களில்  தேய்த்து,

உன்னுடைய பன்னிரண்டு  நாமாக்களை——–

இந்த நாமாக்கள் உன்னைத்தான் குறிக்கின்றன, என்று அறியாது,
உன்னையும் பகவான் விஷ்ணு  என்று அறியாது——

அந்த த்வாதச நாமாக்களை பீஜாக்ஷரங்களினால்,

உன்னுடைய  12   அங்கங்களில் சுத்தி செய்தார்களாம்.

மேலும், பிரார்த்தித்தார்களாம்

“அஜர்” என்பவர்,    உன் பாதங்களைக் காப்பாராக;

கௌஸ்துபம் அணிந்த “மணிமான் ” உன் முழங்கால்களைக் காப்பாராக;

“யஜ்ஞர்  ” உன் தொடைகளை  ரக்ஷிப்பாராக;

“அச்யுதர் ” உன் கடிதடப் பிரதேசத்தை ரக்ஷிப்பாராக;

” ஸ்ரீ ஹயக்ரீவர்” உன் வயிற்றை ரக்ஷிப்பாராக;

” கேசவன் ” உன் ஹ்ருதயத்தைக் காப்பாற்றட்டும் ;

” ஈஸர் ”  உன் உதரத்தையும்,

“இனர்  ” கழுத்தையும்,

“விஷ்ணு ” புஜங்களையும்,

“ருக்ரமர்”  முகத்தையும்,

” ஈஸ்வரர் ” தலையையும் ரக்ஷிக்கட்டும்.

சக்ரதாரி , உன்னை  முன்புறமாகக்  காப்பாற்றட்டும்;

ஹரி, கதையுடன், உன்னைப் பின்புறமாகக் காப்பாற்றட்டும்;

மதுசூதனன்,  அஜனர் இருவரும் சார்ங்கத்தையும், கத்தியையும் தரித்து,

உன் இரண்டு பக்கங்களிலிருந்து , உன்னைக் காப்பாற்றட்டும்;

வாமனர்,உச்சந்தலைப்பாகத்தையும்,

கருடவாஹனர்  நீ இருக்கும் பூமியையும் ,

சங்கர்ஷணர் (கலப்பையை வைத்திருப்பவர் ) எல்லாப் பக்கங்களிலிருந்தும்

உன்னைக் காப்பாற்றட்டும்;

ஹ்ரூஷீகேசன்    இந்த்ரியங்களையும்,

நாராயணன் பிராணன்களையும்,

வாசுதேவர், சித்தத்தையும் ( புத்தி ),

அநிருத்தர் மனசையும், ரக்ஷிக்கட்டும்;

கோவிந்தன் , உன் விளையாட்டு லீலைகளில் உன்னைக் காக்கட்டும்;

மாதவன்,  நீ படுத்திருக்கும்போதும்,

வைகுந்தர்,  நீ நடக்கும்போதும்,

ஸ்ரீயப்பதி , நீ ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போதும்,

யக்ஜபுக் , நீ சாப்பிடும்போதும்,  உன்னைக் காக்கட்டும்.;
டாகினிகள், யாதுதான்யர்கள், கூஷ்மாண்டர்கள்,

பூத,பிரேத, பிசாசர்கள், யக்ஷ, ராக்ஷசர்கள், கோடராக்கள்,

ரேவதி, ஜ்யேஷ்டா , பூதனா, பதினாறு மாத்ரிகா தெய்வங்கள்,

அபஸ்மாரங்கள்,  தேகம் இந்த்ரியம், பிராணன் இவைகளைப் பீடிக்கும்

துஷ்ட தேவதைகள், கெட்ட ஸ்வப்னங்களில்  காணப்படும் தேவதைகள்——-

யாவரும்  அழிந்து போகட்டும்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைச்  சொல்வதால்

இவை அனைத்தும் அழிந்து போகும். என்று சொல்லி வேண்டினார்களாம்.
( ஹே, பிரபோ,,,பாசத்தின் மிகுதியால், கோபிகைகள், உனக்கு இவ்வாறு ரக்ஷை செய்தார்கள் என்று ஸ்ரீ சுகப்ரம்மம்  கூறுகிறார்.அந்தக் கோபிகைகளை அடியேன் அடிக்கடி நமஸ்கரிக்கிறேன். )
யசோதை உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துத் தூங்க வைத்தாள்.

நந்தகோபன் , திரும்பி வந்து நடந்ததைக் கேட்டும்,

பூதனையின் த்ரேகத்தைப்பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.

வசுதேவர் சொன்னதை நினைத்தான்.

அங்கிருந்தவர்கள், பூதனையின் உடலைக் கோடாலியால் வெட்டி,

ஓரிடத்தில் குவித்து எரியூட்டினர்.  அப்போது எழுந்த புகை,

சந்தனம்–அகில்கட்டைவாசனையைப் போல இருந்தது என்று

ஸ்ரீ சுக பிரம்மம்  கூறுகிறார். உன்னால் அவளுடைய உயிர் மாத்ரம்

உறிஞ்சப்படவில்லை; அவளுடைய  பாபங்களும்  உறிஞ்சப்பட்டன;

அதனால், நற்கதி அடைந்தாள்.
இவளுக்கே இப்படி என்றால், உன்னிடம் பக்தி செய்து பூஜித்தால்,

பிரார்த்தித்தால், அந்த பக்தர்களுக்கு எல்லாவித நன்மைகளையும்

கொடுத்து ரக்ஷிப்பாயே !

உன்னிடத்தில் செய்யப்படும் புத்ர  ஸ்நேஹம்  யசோதை ரோஹிணீ

இருவருக்கும் பெருமை அல்லவா !சுகமஹரிஷி பரீக்ஷித்துக்குச்
சொன்னதைப்போல, நந்தகோபன் , உன்னை, கைகளில் எடுத்து,

உச்சிமுகர்ந்து  மகிழ்ந்து பரவசப்பட்டான்
(ஹே….பிரபோ….இந்த  பூதனையின் மோக்ஷத்தை, ச்ரத்தையுடன் சொல்பவர்கட்கும், கேட்பவர்கட்கும் உன்னிடம் பரமபக்தி ஏற்படுவது நிச்சயம்.)

6  வது  அத்யாயம்   முற்றிற்று.   ஸுபம்

10731104_544372359026467_4641789821636830418_n

About the Author

Leave A Response