Dhasamaskantham–naveena paaniyil-adyayam 9

Posted on Sep 1 2016 - 9:41am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் —-9  வது அத்யாயம்
————–
ஸ்ரீ கிருஷ்ணனின்  பால்ய  லீலை   —–தொடருகிறது…….
———-
ஒரு சமயம், யசோதை, தயிர்ப் பானையின் எதிரே உட்கார்ந்து,
தயிரைக்  கடைந்து கொண்டிருந்தாள். வெண்ணெய்க்காகக்   கடைந்து  கொண்டிருந்தாள்.
பகவானுடைய  லீலைகளை, இந்தமாதிரி , வெண்ணெய்க்காகத்  தயிர் கடையும்
சமயங்களில், ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே , தயிரைக் கடைவார்கள்.
யசோதையும் அப்படியே , பக்தி பரவசமாகப் பாடிக் கொண்டே ,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.

உத்தமமான பட்டு வஸ்த்ரம் அணிந்து இருந்தாள்.
இடுப்பில் ஒட்டியாணம்; கைகளில் வளை யல்கள்.மோர்த் திவலைகள் மேலே பட்டு
மேல்துணி  நனைந்தது.காதுகளில் உள்ள குண்டலங்கள் ஆட,
கைவளையல்கள் யசோதையின் பக்தி ததும்பும் பாட்டுக்குக்குத்
தாளம் போடுவது போல சப்திக்க,
உடம்பு வியர்த்துக் களைத்துப் போனாள்.

அப்போது, நீ அம்மாவிடம் ஓடிவந்து, “பசிக்கிறது ” என்று சொல்லி,
யசோதை தயிர் கடைய முடியாதபடி, மடியில் உட்கார்ந்து, ஸ்தன்யபானம்செய்தாய்.
அப்போது, நீ, உன் தாயைப் பார்த்த அனுக்ரஹப் பார்வை, கருணைப் பார்வை ,
ஹே, கிருஷ்ணா, யசோதை என்ன பாக்யம் செய்தாளோ!

அந்தச் சமயம் ,
யசோதையான உன் அம்மா  எழுந்திருந்தாள். உன்னை மடியிலிருந்து
இறக்கி விட்டு விட்டு , அடுப்புக்கு அருகில் ஓடினாள்.
அடுப்பில், பாத்ரத்தில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.
உடனே, உனக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது.
கோப நடிப்பு; உன் இளஞ்சிவப்பு உதடுகள் துடிக்க, மத்தினால்,
தயிர்ப் பானையை உடைத்தாய்; உன் கண்களில் ஏமாற்றம்;
கோபம்; வீட்டின் உள்ளே, “அரங்கு ” என்று சொல்வார்களே,
அங்கே போய் , அங்கு ஒளித்து வைத்திருந்த வெண்ணெயை ,
பசிக்காக சாப்பிட்டாய்;
(ஹே, கிருஷ்ணா…….ஆழ்வார்கள், .கோதைப் பிராட்டி,  சீர்தாஸ், மீராபாய்,
 இவர்கள்  வெண்ணெய் உண்ட வாயனான உன் அதரச் சிரிப்பில்
மனசைப் பறி கொடுத்ததைப் போல,
அடியேனும் பறி கொடுத்துவிட்டுத் தவிக்கிறேன் )

யசோதை , பால் பாத்ரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு,
தயிர் கடையும் இடத்துக்குப் பழையபடியும் வந்தாள்.
உன் விஷமத்தனம் தெரிந்தது. உன்னை அங்கு காணவில்லை.
நீ, ஒரு மரக்கட்டிலின்மேல் ஏறிக்கொண்டு,  நீ சாப்பிட்ட வெண்ணையின் மீதியை,
அனுமனைப் போலுள்ள ஒரு குரங்குக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாய்
. உன்னை, யசோதா பார்த்து விட்டாள்.  கண்களுக்குப்
பூசப்பட்டிருந்த அஞ்சனம் ( கண்மை ) கலைந்து, உன் கன்னங்களில்  வழிந்து இருந்தது.
கூடவே, நீ வெண்ணெய் சாப்பிட்ட அடையாளமாககன்னங்களில் வெண்ணையின்
சிதறல்கள். யசோதை, உன்னுடைய பின்புறமாக வந்து,
கைகளால் உன்னைப் பிடித்துக் கொண்டாள்.
(ஹே, கிருஷ்ணா……இது என்ன லீலை !யோகிகளின் கடுமையான தபஸ்சுக்குக் கூட
அகப்படாத, வேதங்களால் தேடப்படும்  நீ, யசோதையிடம் ,
சிறைக்கைதியைப்போல அகப்பட்டு, அடங்கிப் போனாயே !இது என்ன லீலை !  )

யசோதை, ஒருகையால் உன்னைப் பிடித்து, இன்னொரு கையால் மாடுகளை மேய்க்கும்
கோலை எடுத்து,  உன்னை அடிப்பது போல  பாசாங்குடன் கையை ஒங்க ,
உடனே நீ, யசோதையைப் பார்த்து, கண்களைக் கசக்கிக்கொண்டு,
கைகளைக் கூப்பிக் கொண்டு, “அம்மா… இனி தவறு செய்யமாட்டேன் ”
என்று சொன்னாய்.
(ஹே, கிருஷ்ணா…. இது என்ன  ஜாலம் ? )

 யசோதை, உண்மையிலேயே , நீ பயப்படுவதாக நினைத்து , ஓங்கிய கையைத்
தாழ்த்தி , கோலைத்தூர எறிந்து,  உன்னை வாரி அணைத்து,
உன் முகத்தில் முத்தமிட்டாள்.
தலைகேசம்  அவிழ்ந்து புரளுவதைக் கூட லக்ஷ்யம்
செய்யவில்லை.
( ஹே, கிருஷ்ணா….யசோதையின் பாக்யத்தை,
ராதையும் ஆண்டாளும் கொண்டாடியதைப் போல
அடியேனும் கொண்டாடுகிறேன் )

யசோதைக்கு, நீ செய்த விஷமத்தனம் நினைவுக்கு வர,
உன்னைக் “கண்ணிநுண்  சிறுத்தாம்பினால் ( கயிற்றால் ) கட்டி, “உன்னை வெளியே
ஓடாதபடி செய்கிறேன் பார் ” என்றாள்.
(கண்ணா….நீ சர்வ வியாபி; நீ இல்லாத இடமே இல்லை; எல்லாப் பிரபஞ்சங்களுக்குள்ளும் ,
எல்லா வஸ்துக்களுக்குள்ளும்  இருக்கிறாய்;
கேவலம், ஒரு கயிற்றால் உன்னைக் கட்ட முடியுமா
ஆனால், தாயாரின் செய்கைக்கு உன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டாய் )

உன்னைக் கயிற்றால் கட்டி, பக்கத்தில் இருந்த  மரத்தால் ஆன உரலில்  இணைக்க ,
யசோதை முயற்சித்தாள்.கயிற்றின் அளவு குறைந்தது;
இன்னொரு கயிற்றை எடுத்து , முடிச்சுப் போட்டு, மறுபடியும் கட்டினாள்;
மறுபடியும் இரண்டு அங்குல அளவு கயிறு குறைந்தது; கயிற்றை
எடுத்து முடிச்சுப் போட்டு, முடிச்சுப் போட்டு  உன்னை கட்ட எத்தனித்தபோதெல்லாம்
கயிறு இரண்டு அங்குல அளவு குறைந்தது.
யசோதைக்கு ஆச்சர்யம் ! முகத்தில் , முத்துக்கள் போல வியர்வைத் துளிகள்;
யசோதை படுகின்ற கஷ்டத்தைப் பார்த்த  நீ,
உன் லீலையைக் குறைத்துக் கொண்டு , கட்டுண்டாய்.
( கண்ணிநுண்  சிறுத்தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய  பெருமாயனே !
என் அப்பனே ! ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரை, மனத்தால், பலமுறை நமஸ்கரிக்கிறேன்.
உன்னைக்கட்டிய  கயிற்றுக்கு  அடியேனின் நமஸ்காரம்.
அந்தக் கயிறு என்ன புண்யம் செய்ததோ !
உன் இடுப்பில், தழும்பு  ஏறப் பண்ணிய , கயிறு அல்லவா !
அந்தக் கயிற்றுக்கும், இடுப்புத் தழும்புக்கும்,
நப்பின்னைப் பிராட்டிக்கும் நமஸ்காரங்களைச் செய்கிறேன் )

நீ சர்வ ஸ்வதந்த்ரன்; சர்வேஸ்வரன் ; எல்லோரும், ஈரேழு உலகங்களும்,
அவற்றில் உள்ள , சித்,  அசித்  யாவும் உனக்குக் கட்டுப்பட்டது;
அப்படிப்பட்ட நீ,  யசோதையின்  தாய்ப் பாசத்துக்குக்
கயிற்றால் கட்டுண்டாய்; பிற்பாடு, சஹாதேவன் உன்னைக் கட்டப் போகிறான்;
ப்ரஹ்ம , ருத்ராதிகளுக்கு,  ஏன்,  அகலகில்லேன் என்று உன் வக்ஷஸ்தலத்தில்
நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டிக்குக் கூட,
இந்த பாக்யம் கிட்டவில்லை.
நீ, தாமத்தால் கட்டப்பட்டாய்; தாமோதரன் ஆனாய் ! )

யசோதை, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு இருக்கும்போது,
நீ, உரலையும் இழுத்துக் கொண்டு  , முன்னாலே இருந்த இரண்டு மருத மரங்களை
நோக்கித் தவழ்ந்தாய். இரண்டு மருத மரங்களும் , முன் ஜன்மத்தில் ,
குபேரனுடைய பிள்ளைகள். நளகூபரன்,  மணிக்க்ரீவன் என்று பெயர்.
பிராம்மணரான ஸ்ரீ நாரதர் வரும்போது, காமத்தினால் இனிப்பான
கள்ளைச்சாப்பிட்டுக்கொண்டு, தேவஸ்த்ரீகளுடன்    மயங்கி, நாரதர்
அந்த வழியாக வருவதைப் பார்த்தும், அவரை லக்ஷ்யம் செய்யாமல்,
நிர்வாணமாக இருந்தனர். அதனால், நாரதர்  சாபமிட, மருத மரங்களாக,
இந்த வ்ரஜபூமியில்  முளைத்து, வளர்ந்து, சாப விமோசனத்துக்கு,
ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தை எதிர்பார்த்து  இருப்பவர்கள். இந்த இரண்டு
மருத மரங்களுக்கு நடுவில் , உரலையும் இழுத்துக் கொண்டு, நீ தவழ்ந்து சென்றாய்

10   வது  அத்யாயம்   முற்றிற்று .   ஸுபம் .
——————————————————————————–
பின் குறிப்பு :–கண்ணிநுண் சிறுத்தாம்பு, நினைத்த பயனை அளிக்கும் மந்த்ரம்.
ஸ்ரீ மதுரகவிகள்  அருளியது. ஸ்ரீமன் நாதமுநிகள் , இந்தப் பிரபந்தத்தில் உள்ள
11  பாசுரங்களையும் பன்னீராயிரம்  முறை ஆவ்ருத்தி செய்து,
ஸ்ரீ நம்மாழ்வாரை சாக்ஷாத்கரித்து, திவ்ய பிரபந்தங்களான
நாலாயிரத்தையும் உலகுக்குக் கொடுத்து  ,
நாலாயிரமும் எங்கள் வாழ்வே  என்று பெருமைப் படக் காரணமானவர்

கண்ணி =  முப்பிரியாய், உறுத்துகைக்கு அழுத்தமாய்
நுண் =  கட்டு அழுந்ததலுக்கு மெல்லிசாய்/ மெலியதாய்
சிறு= சரீரத்தை சுருக்கிக் கொண்டு, ( வயிற்றை எக்கி )
கயிற்றை நழுவும்படி செய்தலுக்கும்,    கயிற்றை நீக்கித் தளரும்படி செய்தலுக்கும்
யோக்யமில்லாத, —அருகதை இல்லாத
தாம்பினால்= கயிற்றினால்
கட்டுண்ணப் பண்ணிய = யசோதைப் பிராட்டியால் கட்டப்படுவதற்கு அனுசரணையாய்
பெருமாயன்=  ஆச்சர்ய குண சேஷ்டிதன்;
உரலோடுகூடக் கட்டிவைத்தவுடன்  விக்கி, விக்கி அழுதது;
அதற்கு , யசோதை  “வாய், வாய் ” என்றவுடன்
அஞ்சுவதுபோல நடித்து, முகத்தில் பேதைத் தனத்தைத்  தேக்கி,
அவளையே  பார்த்தது; அந்தப் பார்வையில் அவளை கடாக்ஷித்து,
அவளைத் தொழுதது
பந்தத்துக்கும், மோக்ஷத்துக்கும் சர்வ சக்தி  உடையவனான கண்ணன் ,
அவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு, யசோதை கட்டிய
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு ,
அந்தத் தழும்பு ( வடு ) இடுப்பில் ஏறியிருக்க,
கோபர்களையும், கோபியர்களையும், நப்பின்னையையும் ஆழ்வார்களையும்
ஆசார்யர்களையும் மோஹிக்கச் செய்யும் ” பெருமாயன் ”
அவனை, இந்த அத்யாய நிறைவில் நாமும் மோஹிப்போம்;
ஆழ்வாரைப்போல மோஹித்துக் கிடப்போம் . ஹே, தாமோதரா …. ஹே, பெருமாயா……..

—————————————————————————————————————

தசமஸ்கந்த   பாராயணம்—-  தொடர்ச்சி
————————————————
   அத்யாயம்   9  —பின் குறிப்பு தொடர்கிறது
    ——————————————–

————————-
அடியேன், தசமஸ்கந்த விவரப்படி, நளகூபரன்,  மணிக்ரீவன் , இவர்களைப் பற்றிச்
சொல்லி விட்டாலும்,  மனஸ், ஒரே இடத்தில் சுற்றிச் சுழன்று
கொண்டிருக்கிறது. அதுதான், மாமாயன் , தாம்பால் கட்டுண்ட நிலை
இதை இன்னும் விவரிக்க , மனஸ் கட்டளை இடுகிறது;
புத்தியும் ஆமோதிக்கிறது.
ஸ்ரீ நம்மாழ்வார், இந்த மாயக் கண்ணன் , கயிற்றால் கட்டுண்டதை நினைத்து,
ஆறு மாச காலம் மோஹித்துக் கிடந்தார் என்பர்.
ஸ்ரீ குலசேகரர் , ஸ்ரீ முகுந்தமாலையில்  தன்னை
“த்வத்  ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரிக –ப்ருத்ய–ப்ருத்ய –ப்ருத்யஸ்ய  ப்ருத்ய
இதி “————– ஹே, லோகநாதா, ,அடியேனை—–அடியார்க்கு, அடியாரின்
அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியன் ——ஏழாவது அடியானாக ,
நினைத்துக் கொள்ளுமாறு பிரார்த்திக்கிறார்.
ஆழ்வாரே இப்படி என்றால்,  , இப்படி எத்தனை ஏழாவது அடியேன் என்று ,
அடியேன்  சொல்லிக் கொள்வது?
ஏழேழு பிறவி எடுத்தாலும் , எந்த ஏழுக்குள்ளும் அடங்காதவன் அடியேன் !
எனினும், அந்தக் கண்ணனைத் தாம்பால் கட்டியதால்,
“ஹர்த்தும்  கும்பே  விநிஹித  கர:  ஸ்வாது   ஹையங்க வீநம்
த்ருஷ்ட்வா  தாம  க்ரஹண  சடுலாம் மாதரம்  ஜாத   ரோஷாம் |
பாயாதீஷத் ப்ரசலீத   பதோ   நாப கச்சந்   ந  திஷ்டந்
மித்யா கோப:  ஸபதி  நயநே  மீலயந்  விஸ்வ  கோப்தா ||

ஸ்வாமி தேசிகன் ‘ஸ்ரீ கோபால விம்சதியில் ” சொல்லியதைப் போல,
” பாயா தீஷத்  ப்ரசலீத  பதோ   நாப கச்சந்  ந திஷ்டந்   மித்யா கோப: ”
ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் , அடியேன் ஹ்ருதயத்தில் புகுந்து கட்டுண்ட ,
அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் சரணார விந்தங்களை, ஆயிரக் கணக்கான
முறை, தொட்டுத் தொட்டு, நமஸ்கரித்து, தாம்பால் கட்டுண்ட நிலையைச் சொல்கிறேன்.

யசோதை, இடைநோக, தயிரைக் கடைந்தாள்; வெண்ணெய் திரண்டது;
கீழே எங்கேனும் வைத்தால், கண்ணன் சாப்பிட்டு விடுவான் என்று நினைத்து,
உறியில்  ஏற்றி வைத்தாள்;  மறைத்து வைத்தாள்.
உறங்குவது போலப் பாசாங்கு செய்யும் கண்ணன்,
( இவன் திருப்பாற்கடலிலேயே உறங்குவதுபோல, உறங்காது இருப்பவ னாயிற்றே ).
யசோதை, அந்தண்டை போனதும், “சிவுக்” கென்று எழுந்தான்;
ஒரே இருட்டு; வெண்ணையைத் தேட வேண்டுமே ?
தன் திருமார்பில் அணிந்திருக்கும் “கௌஸ்துபம்” என்கிற ப்ரகாசமான  ரத்னத்தின் ஒளியில் ,
அதைக் கண்டு பிடித்தான்; கண்ணன் கருநிறம்; இருட்டு கருநிறம்;
கௌஸ்துபம், இவனுக்கு , கருநிற இருட்டில், வெள்ளை நிற வெண்ணையைத்
தன் பிரகாசத்தால், காட்டிக் கொடுத்தது; வெண்ணையை எடுத்து, ஆசை யுடன்  சாப்பிடுவான்;
யாராவது வருவதைப் போன்ற ஓசை கேட்டால், மேல் வஸ்த்ரத்தால்,  கௌஸ்துபத்தை
மறைத்து விடுவான்;
இப்படியே, வெண்ணெய் சாப்பிட்டு, சாப்பிட்டு, யார் கண்ணிலும் படாமல் தப்பித்து வந்தான்;

ஆனால், பிள்ளையின் சாமர்த்யம், தாயாருக்குத் தெரியாதா, என்ன !
யசோதை, ஒருநாள், இந்தத் திருட்டைக் கண்டு பிடித்து விட்டாள்.
கண்ணனை, உரலோடு சேர்த்துக் கட்டத் தொடங்கினாள்.
தாம்பை ( கயிறு ) எடுத்து, கண்ணனின் இடையையும், உரலின் இடையையும்
( நடுப்பாகம்–உடுக்கை இடைபோலச் சிறுத்து இருக்கும் ) சேர்த்து, சுற்றிக் கட்டப் பார்த்தாள்.
அவளுக்கு ஆச்சர்யம் ! கயிறு, இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது.
இன்னொரு கயிற்றை எடுத்து, இந்தக் கயிற்றுடன் சேர்த்து முடிச்சுப் போட்டு, இணைத்து,
மறுபடியும் கட்ட முயற்சித்தாள். மறுபடியும், கயிறு குறைந்தது.
இரண்டு அங்குலம் குறைந்தது.இவளுக்கு, நாம் ஏன்  கட்டுப்பட வேண்டும் என்று வளர்ந்தானாம்.
யசோதையின் நெற்றியில் வியர்வைத்  துளிகள்;
ஓய்ந்துபோன சிவந்த உள்ளங்கைகள்;

கண்ணன், கருணை கொண்டான். நம்மிடம் அன்பைப் பொழியும், யசோதையிடம் ,
நம் பலத்தைக் காட்டவேண்டாம் என்று நினைத்தான்.

இப்போது, யசோதை, கண்ணனையும் , உரலையும் , கயிற்றால் சேர்த்துக் கட்டிவிட்டாள்.
கருத்த திருமேனி; தயிரையும் , வெண்ணையையும் ( இரண்டும் வெண்மை நிறம் )  உண்ட திருமேனி;
கருத்த யானையைப் போலக் கண்ணன் இருந்தான்;
உருவத்தில் பெருத்த யானை, ஒரு சிறிய பாகனுக்கு; அவன் கையில் உள்ள குச்சிக்கு
அடங்குவது  போல  அடங்கிப் போனான்.
கட்டுண்ட யானை, கண்ணீர் சிந்தி அழுவதைப் போல அழுதான்.
யசோதை, கண்ணனின் கண்களுக்குத் தீட்டியிருந்த “மை “, கண்ணீரால் கரைந்தது.

உறியார்ந்த    நறுவெண்ணெய்   ஒளியால் சென்று
அங்குண்டானைக்  கண்டாய்ச்சி  உரலோடார்க்க
தறியார்ந்த   கருங்களிரே   போல நின்று
தடங் கண்கள்   பனி மல்கும்  தன்மையானை
……………………………… என்று திருமங்கை ஆழ்வார்,
திருக்கோவிலூர்  ஆயனைப் பாடுகிறார்
ஹா… கரிய நிறக் கண்ணன்—-வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெய் சாக்ஷி சொல்ல,
உரலோடு கட்டுண்டு, கண்மை, கன்னங்களில் கரைய
நிற்கின்ற அற்புதக் காக்ஷி !அனைவரும் வசப்படும்போது,  அடியேன் எம்மாத்திரம் !

பின் குறிப்பு தொடர்கிறது………..

தசமஸ்கந்த பாராயணம்—–அத்யாயம்—9
—————————————————
பின் குறிப்பு  தொடர்ச்சி   — 2
————————-
வெள்ளிமலை நிறத்தை ஒத்த  வெண்ணையைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு ,
யசோதை  ஆய்ச்சியின்  கையால் , கண்ணிக் குருங்கயிறால்
கட்டுண்டு,  பொத்த உரலிடை   ஆப்புண்டு,  அழுத கண்ணோடே,
அஞ்சின நோக்கோடே,   தொழுத கையோடே,  நிற்கிறான், கண்ணன்.
ஜீவன்களை, சம்ஸாரத்தில் கட்டி ,  அழுத்தி வைத்து, அழுத கண்ணோடே
அவனை ஸ்தோத்தரிக்க    வைக்கும், கண்ணன்,
யசோதை முன்பு நிற்கும் காக்ஷி இது.
ஆய்ச்சி கையால் கட்டுண்ட காக்ஷி .
அவனைத் தாமத்தால்  கட்ட இயலாது.
பிரேமத்தால்  கட்ட இயலும்.
இங்கு, யசோதையின் பிள்ளைப் ப்ரேமம்  முன் நிற்க,
கண்ணன் அதைத் தாமமாக (கயிறு ) ஏற்றுக் கட்டுண்டான்.
யானை, தன்னைக் கட்டுவதற்காக, கயிற்றைத்
தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். கருநிறத்தான்,
யானையைப் போன்ற கருநிறத்தான்
கண்ணன், தன்னைக் கட்டுவதற்காக “பக்தி ” என்னும்
கயிற்றை எடுத்துக் கொடுப்பான்.
“பத்துடை அடியவர்க்கு , எளியவன் ” என்று ஸ்வாமி நம்மாழ்வார் கூறுகிறார்.
தாமோதரனாக, தாமோதர நாராயணனாக —–இந்தக் கண்ணன்,
திருக் கண்ணங்குடியில் , கையை , இருப்பில் வைத்துக் கொண்டு ,
கண்ணனாகவே ஸேவை சாதிக்கிறான்.

வசிஷ்ட ரிஷிக்காக, க்ருஷ்ண பக்தரான வசிஷ்ட ரிஷிக்காக,
அவன் வெண்ணெய்க் கிருஷ்ணனாக ஆனான்.
அவர் வெண்ணையாலேயே  க்ருஷ்ண விக்ரஹம்  செய்து,
பக்தியின் மஹிமையால்,அது உருகாமல் இருக்க,
விக்ரஹத்தை  நிற்க வைத்துப் பூஜை செய்வார்.
கண்ணனுக்கு இங்கும் விளையாட்டு;
அவதார காலத்திலும் விளையாட்டு; அர்ச்சாவதாரத்திலும் விளையாட்டு.
வடக்கை, இடக்கை தெரியாத ஆய்ச்சியர் களுடனும் விளையாட்டு;
வேத வேதாங்கங்கள், அனுஷ்டானங்கள் தெரிந்த முநிபுங்கவரிடமும் விளையாட்டு.

ஒருநாள், வசிஷ்டர், வெண்ணெய்க் கிருஷ்ணனுக்கு , ஆராதனம் செய்யும்போது,
சிறுவன் உருவில் வந்து, வெண்ணெய்க் கிருஷ்ணனை எடுத்து,
வாயில் போட்டுக் கொண்டு, ஓடுகிறான்;
வசிஷ்டருக்குக் கோபம் ( இருக்காதே, பின்னே? நமக்கே கடும் கோபம் வருமே )
சிறுவனைத் துரத்துகிறார்;
சிறுவன் “கிருஷ்ணாரண்யம்”ஓடி வருகிறான்;
அங்கு, தபஸ் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், இச்சிறுவன்  யாரென்று தெரிந்து,
“பக்தியால்” கட்டுகிறார்கள். அடியார்களுக்கு, அடங்கினான்,
இங்கு. அதாவது திருக்கண்ணங்குடியில்.
அவதார காலத்தில் அன்னைக்கு அடங்கி, கயிற்றால் உரலில் கட்டுண்டு,
அழுத கண்ணோடு, அஞ்சின நோக்கோடு, தொழுத கையேடு நின்றான்.

(ஹா…..திருக் கண்ணங்குடிக் கண்ணா….
தாமோதரா —-
தாமத்தால் உரலில் கட்டுண்டு, நீ நின்றாயே….
அந்த அழுத கண்களும், அஞ்சின நோக்கும், தொழுத கைகளும்
நினைக்கும் போதெல்லாம், அடியேனைப் பேதமை கொள்ளச் செய்கின்றன )

                                பின் குறிப்பு தொடர்கிறது————

krushnaஅத்யாயம்—9                      பின் குறிப்பு—–3
———————–               ———————–
வைகுண்டவாசி  உபய வே.    கே.ரங்கஸ்வாமி ஐயங்கார் ,
மிகச் சிறந்த ஆன்மீகத் தொண்டராகச் செய்திருக்கும் “பாசுரப்படி, பாகவதத்தில் ”
திருவாய்ப்பாடியைப் பற்றிச்  சொல்லும்போது, இப்படி சொல்லியிருக்கிறார்.

”      வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்  பெரும்பசுக்கள் ,
நீங்காத செல்வம் நிறைக்க,
வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணையைத் தாயர் மனங்கள் தடிப்ப
, உளம் குளிர  அமுது செய்து ,
விரலோடு வாய் தோய்ந்த  வெண்ணெய் கண்டு ,
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று,
உரலோடு ஆய்ச்சி ,  ஒண்கயிற்றால் , விளியா ஆர்க்க
,  ஆப்புண்டு, விம்மி அழுது, பொத்த உரலைக் கவிழ்ந்து,
அதன் மேலேறித் தித்தித்த பாலும்
தடாவினில் வெண்ணையும் ,
மெத்தத் திரு வயிறு  ஆரவிழுங்கி,
சீரால் யசோதை அன்புற்று நோக்கி,
அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்ட,
ஊரார்கள் எல்லாரும் காணக்
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு,
பெருமா உரலில் , பிணிப்புண்டு   இருந்து,
விண்  எல்லாம் கேட்க அழுது,
எழில் கொள்  தாம்பு கொண்டு  அடிப்பதற்கு எள்கி …………………………….. ”

ஆயர்பாடிப் பசுக்கள், வள்ளல்கள்;
கறக்கக்கறக்க, குடம் குடமாகப் பால் சொரியும் பசுக்கள்;
இதனால், ஆய்ப்பாடியில் எல்லாச் செல்வமும் நீங்காது நிறைந்து இருக்க,
(கண்ணனே செல்வம் தானே! அவனிருக்குமிடத்தில் செல்வங்கள் யாவும்
நிறைந்து நீங்காது இருக்கக் கேட்பானேன் ? )

வெள்ளியைப் போல மினுமினுத்து ,
மலையை ஒத்த வெண்ணையை,
தாயான யசோதை யின்  மனம் , மற்றும் தாயை ஒத்தவர்களின் மனங்கள் கனக்க,
( தாயான  யசோதையின் அகமனம், புற மனம் ஆகிய மனங்கள் கனக்க ),
கண்ணன் தன்னுடைய உள்ளம் (மனஸ் ) குளிர,
வெண்ணையை அமுது செய்து , போக்யமாகச் சாப்பிட்டு,
அந்த வெண்ணெய் எப்படி காக்ஷி அளிக்கிறது தெரியுமா,
விரலோடு வாய் தோய்ந்து —கண்ணனின் கைவிரல்களிலும்  வெண்ணெய் இருக்கிறது;
கண்ணனின்  வாயிலும் வெண்ணெய் இருக்கிறது—-
அல்லது , விரல்களில் இருக்கும் வெண்ணெய் ,
கண்ணன், விரல்களைத்தன் வாயில் வைத்திருப்பதால் , விரலோடு வாய் தோய்ந்த
வெண்ணெய் —தோய்வது என்பது இடையர்கள் குலத்துக்கே உரித்தான சொல்—
-பாலைத் தோய்ப்பது—-பக்குவமான சூட்டில் உள்ள பாலை, கொஞ்சமாக மோர் சேர்த்து,
அது , தயிர் ஆவதற்காகச் செய்யும் செயல்;

ஆய்ச்சியர் செய்யும் செயல். இங்கு விரலோடு வாய் தோய்ந்தது
( இதை, ரஹஸ்யார்த்தமாக, காலக்ஷேபமாகச்  சொல்வதுதான் நல்லது )
யசோதை இதைக் கண்டு, ஒளித்துவைத்திருக்கும் வெண்ணையை உண்டுவிட்டானே என்று,
அங்கிருந்த உரலுடன் , பொருத்தமான கயிற்றால்  கட்டிவிடுவேன் என்று  சினத்துடன் பேச,
அகப்பட்டுக்கொண்ட( பொது அர்த்தம் ),  கண்ணன், விம்மி விம்மி
( வயிறு எக்கி, அடிக்கடி  மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு , பாசாங்குடன் )
அழுது, கேவிக் கேவி அழுது, உரலின் பள்ளமான பாகத்தை கீழே கவிழ்த்து,
உரலின்  மேல் ஏறி நின்று , தித்திப்பாக இருக்கிற ( சுவையுடன் கூடிய  ) பாலையும்,
அண்டாவில் உள்ள  வெண்ணையையும் , மென்மையான “திரு வயிறு ”  அனுபவிக்க
நிறைய விழுங்கினான்;
அன்பும் , பாசமும் கொண்ட யசோதை, அவனைப் பார்த்தும், அடித்தும், அவனைப் பிடித்தும் ,
அங்கு திரண்டிருந்த அனைவர்க்கும், கண்ணனின் லீலையைக் காட்ட  , ஊர் கோபர்கள்,
கோபிகைகள், ( ஊரார்கள் என்பது, பசுக்கூட்டம், கன்றுகள், மரங்கள் யாவும் )
எல்லாரும் பார்க்க, மெலிதான , சிறிய கயிற்றினால் கட்டப்பட்டு,
உரலில் பிணைக்கப்பட்டு  இருந்து, ஆகாயத்தில் உள்ளவர்கள் கூட கேட்கும்படி ,
“ஓ” வென அழுது, பசுக்களைக் கட்டுவதற்காகவே உள்ள கயிற்றால்,
யசோதை , அடிப்பதுபோல் பாவனை செய்து, வீட்டுக்குள்ளே போக ….
( இது பொதுவான அர்த்தம் . பதம் பதமான விளக்கமோ, வ்யாக்யானமோ அல்ல )
பாசுரப்படி பாகவதம்  , இப்படிப் போகிறது.
————–
(பாலையும், தயிரையும், வெண்ணையையும் கொடுத்து,
குடும்பத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்கி,
இல்லறம் நடத்தும் கோகுலத்து மங்கையர்
அவைகளை, யாரும் காணா வண்ணம்  எடுத்துச் சாப்பிட்டு
, ( கோபர்கள், குரங்கு, பூனை இவர்களுக்கும் கொடுத்து )
கோபியர்களின் கோபத்துக்கு ஆளாகும் கண்ணன்.
வீட்டில், யசோதை, ஒளித்து வைத்த  வெண்ணையைச் சாப்பிடும் கண்ணன்
அதைக்கண்டு, பாசத்துக்கும், கோபத்துக்கும் நடுவில் திண்டாடும் யசோதை;
கண்ணனின் பொல்லாத்தனம் , விம்முதல், பொய் அழுகை, விண் எலாம் கேட்க அழுகை.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ,உரலோடு கட்டுண்ட எளிமை
அசோதையை அஞ்சி நோக்கல், அழுகை, தொழுகை
ஆரணமும் தேடும் காரணா ! பூரணா !  கண்ணா ! உன் லீலைகளைக் கேட்பதே அடியோங்கள் வாழ்வு
உன்  திருவடிகளே , அடியோங்களுக்குப் புகல் )

———————-பின் குறிப்பு நிறைகிறது.

இனி அடுத்த அத்யாயம் .10  வது அத்யாயம்——தொடரும்

About the Author

Leave A Response