thasamaskantham–naveena paaniyil-athyaayam–10

Posted on Sep 4 2016 - 6:31am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்——-நவீன பாணியில்———-அத்யாயம்—10
——————
நளகூபரன், மணிக்ரீவன் சாப விமோசனம்,, ஸ்துதி
——————————————————————
பரீக்ஷித் , ஸ்ரீ சுக பிரம்மத்திடம், ” ஹே, ரிஷியே……நளகூபரன், , மணிக்ரீவன் செய்த
நிந்திக்க வேண்டிய கார்யம் மற்றும் தேவரிஷி நாரதர், ஏன் சாபம் கொடுத்தார் என்பதை
விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்க, ஸ்ரீ சுகர் சொன்னார்.
இந்த இருவரும், ருத்ர பகவானுடைய தாஸ்யர்கள்; குபேரனின் புத்ரர்கள்;
தனத்தினால் கர்வம் அடைந்தவர்கள்; மிகப் பெரிய பதவியில் இருப்பதாக
செருக்கு உடையவர்கள்; ஒரு சமயம் மந்தாகினி நதி ஓடும் பிரதேசத்தில்,
“வாருணீ ” என்கிற கள்ளைக் குடித்து, புஷ்பங்கள் பூத்திருந்த காட்டுக்குள் நுழைந்து,
தேவ ஸ்திரீகளுடன் ஜலக்ரீடையில் இருந்தனர்.
அப்போது, தேவரிஷி நாரதர், யதேச்சையாக அந்த வழியாக வந்தார்.

அவரைக் கண்டதும், தேவ ஸ்திரீகள், வஸ்த்ரமில்லாமல் இருந்ததால்,
நாரதரின் சாபத்துக்குப் பயந்து, அவசரம் அவசரமாக வஸ்த்ரங்களை எடுத்து
அணிந்து கொண்டனர். ஆனால், குபேரனுடைய பிள்ளைகளான இந்த இரண்டு பேரும்,
கள்மயக்கத்தில், கர்வத்துடன் வெட்கமின்றி, நிர்வாணமாக இருந்தனர்.

நாரதர், அவர்களைத் திருத்த எண்ணம் கொண்டார். இவர்கள், தனச் செருக்கினாலும்,
குபேரனுடைய பிள்ளைகள் என்கிற கர்வத்தினாலும், தாங்கள் சாஸ்வதம் என்று
எண்ணுகிறார்கள்; தேவர்களாக இருந்தாலும், இறந்துவிட்டால் அந்தத் த்ரேகம்
எரிக்கப்பட்டோ , கிருமிகள், பக்ஷி, மிருகங்களால் சாப்பிடப்பட்டோ அழிகிறது;
ஒன்றுக்கும் உதவாத இந்தத் த்ரேகத்தை சாஸ்வதம் என்றும்
தங்களைக் கிழத்தனம் அண்டாது என்றும், எண்ணுகிறார்கள்;

த்ரேகம், அநித்தியம் என்று அறியாத அஸத்துக்கள்;
தனமில்லாத வறியவனுக்குக்கர்வமில்லை; அஹங்காரமில்லை;
அவன் பகவத் சிந்தனையுடன் வாழ்கிறான்; தாரித்யனுக்குப் பசி இருப்பதால்,
இளைத்துப் போய், இந்த்ரியங்கள் அவன் சொல்படி கேட்கின்றன;

இப்படியெல்லாம் நினைத்த நாரதர், இவர்களின் கர்வத்தைப் போக்க வேண்டும்
என்கிற எண்ணமுடை யவராய், இவர்களுக்குத் தண்டனையும்
கொடுத்து திருந்தவும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று யோசித்து,
இவர்கள், நூறு தேவ வர்ஷங்கள் பூமியில் மரமாகப் பிறந்து, வாழ்ந்து,
பகவானின் திவ்ய சரணார விந்தங்களில் பக்தி ஏற்பட்டு, அந்த பக்தியினால்,
சாப நிவ்ருத்தி ஆகி, மறுபடியும் தேவப் பிறப்பை அடையட்டும் என்று சாபமிட்டார்.

இப்படிச் சபித்தவர், தான் சாபமிட்டதற்குப் பரிகாரம் தேட,
நாராயண ஆஸ்ரமமாகிற பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்றுவிட்டார்.
அந்த சாபப்படி, நளகூபரனும், மணிக்ரீவனும் வ்ரஜபூமியில்
( கோகுலத்தில் ) மரங்களாக முளைத்து , வளர்ந்து இருந்தனர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாகிய நீ, இதை நினைத்துப் பார்த்து,
ரிஷியின் சாபம் சத்தியமாக இருக்கவேண்டுமென்று எண்ணி அந்த மரங்கள்
இருந்த இடத்துக்கு உடலுடன் கட்டியிருந்த உரலையும் உருட்டிக் கொண்டு,
அந்த இரண்டு மரங்களின் அடித் தண்டின் இடைவெளி நடுவே தவழ்ந்து சென்று ,
உரலை, உன் பலத்தால் இழுத்தாய்.
அந்த வேகம் தாங்காமல்,கப்பும் கிளையுமாக நன்கு கொழுத்து வளர்ந்து இருந்த
இரண்டு மரங்களும் பெரும்சப்தத்துடன் கீழே விழுந்தன.
உடனே , இரண்டு தேவ குமாரர்கள், ஜ்வலித்து, நான்கு திக்குகளிலும்
ப்ரகாசத்தை ஏற்படுத்திக்கொண்டு, கர்வம் நீங்கியவர்களாக,
கிருஷ்ணனாகிய உன்னிடம் பக்தி மேலோங்க , உன்னை நமஸ்காரம் செய்து,
உன் திருவடிகளில் சிரஸ்ஸை வைத்து, உன்னை ஸ்துதித்தார்கள்.

நளகூபர—–மணிக்ரீவ ஸ்துதி
——————————
(ஹே……கிருஷ்ணா…..அந்த இரண்டு தேவர்களும்—-குபேரனின் குமாரர்களும் ,
உன்னைத் துதித்ததை , இப்போது அடியேன் சொல்லி, உனக்கு நினைவுபடுத்துகிறேன்
இதுவும் ஒருவித படுத்தல்தான் )

ஹே,,,,கிருஷ்ண…..கிருஷ்ண ….மஹாயோகி….. நீர் பரம புருஷன்;
அவ்யக்தமான ப்ரக்ருதியிலிருந்து, சிருஷ்டித்து, வ்யக்தமாக (வெளிப்படையாக)
விஸ்வம் இதம், ஜகத் இதம் என்று ரூபம் கொண்டதாக,
நீர் பிரபஞ்சமாக இருக்கிறீர்.
நீர், பார்ப்பதற்கு, அத்வீதீய ஏகர் —சமமோ, மேல்பட்டவரோ, குணத்திலோ,
சேஷ்டிதங்களிலோ, ஐஸ்வர்ய விபவங்களிலோ—எவரும் இல்லாதவர் .

நீர்தான், எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் மேலானவர்;
நீர், அனைவர்க்கும் அந்தர்யாமி; உமது விருப்பப்படி நியமிக்கிறீர்;
உடல், ஆத்மா இவைகளை செயல்படுத்தும் பகவான் நீரே ;
அந்த ஜீவாத்மாவின் , ஸ்வரூபஸ்திதி, ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி —
எல்லாம் உமது அதீனம். சூக்ஷ்ம ஆத்மாவாக இருந்து,
ரஜஸ், தமோ, ஸத்வ பூதமாக இருக்கும் ப்ரக்ருதியை ,
நீர், சரீரமாகக் கொண்டுள்ளீர்.

நீரே, எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஈஸ்வரன்;
பரமாத்மா; ஜீவன்களின் பாப, புண்யங்களுக்கு ஏற்ப, அவைகளுக்கு,
நாமம், ரூபம் இவைகளை உண்டாக்குபவர்; ஆனால், உம்மை,
இந்த மாம்ஸக்கண்களால் பார்க்க இயலாது;உமது மஹிமையை யாராலும்
முழுமையாக அறியமுடியாது; ஆகவே, உம்மைப் பக்தி செய்து நமஸ்கரிப்பதே சிறந்தது;

பகவதே…………வாஸுதேவாய……..நமஸ்காரங்கள் உமக்கே உரியது;
உமக்கு என்று ஒரு ரூபமில்லை; ஆனால், பலப் பல ரூபங்களில் ப்ரகாசிக்கிறீர்;
அவதாரம் ஏற்படும் போதெல்லாம், உமது ரூபம் வெளிப்படுகிறது;
நீர், சரீரங்கள் படைத்தவர்களில், அசரீரி; அவதார காலங்களில்,
அப்ராக்ருத சரீரம்; த்ரியக், ம்ருக, மனுஷ்ய அவதாரங்களில், அது அதற்குத் தக்கபடி
அதிசய வீர்யமுள்ள சரீரம்; அப்போதும், எவ்விதத் தோஷமும் உம்மிடம் இல்லை;
அப்பேர்ப்பட்ட, பற்பலப் பெருமைகளைப் பெற்ற நீர், எல்லா உலகங்களின்
க்ஷேமத்துக்காகவும், எங்களைப் போன்ற மந்த மதியர்களை உஜ்ஜீவிக்கவும்
உத்தேசித்து, அவதாரம் எடுக்கிறீர்; எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

நீர், பரம கல்யாண மூர்த்தி; உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர் வாஸூ தேவர் (வஸூ தேவரின் திருக்குமாரர் );
பரம ஸாந்தர்; யதுக்களுக்குப் பதி;உமக்கு எங்கள் நமஸ்காரங்கள்;
ரிஷியினுடைய பரம அனுக்ர ஹத்தாலே, உம்முடைய தர்ஸனம் கிடைத்தது;
எங்கள் மனஸ், உமது திருவடிகளில் , பற்றுடன் இருக்கட்டும்;
நாங்கள், சிவபிரானின் கிங்கரர்கள் ; நாங்கள் போக உத்தரவு கொடுங்கள்
என்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.
( ஹே, கிருஷ்ணா……அந்த தேவ குமாரர்களான நளகூபர,மணிக்ரீவர்களை
நமஸ்கரிக்கிறேன்; அவர்களால், அடியோங்களுக்கு, உன்னை ஸ்தோத்தரிக்கும்
இந்த ஸ்துதி கிடைத்தது.)

ஸ்ரீ சுகர், மேலும் சொல்கிறார். நீ, உரலில் கட்டப்பட்ட தாமோதரனாகவே
இருந்துகொண்டு, அந்தத் தேவகுமாரர்களைப் பார்த்துச் சொன்னது இதுதான்.

பரம கருணை உள்ள நாரதராலே, என்னுடைய அநுக்ரஹம் உங்களுக்குக் கிடைத்தது;
என்னிடம் திட நம்பிக்கை வைத்து, மனஸ்ஸை அர்ப்பித்து, என்னைத் தரிசித்த நீங்கள்,
திருந்திய புருஷர்களாக ஆகி, பந்தங்களில் இருந்து விடுபட்டீர்கள்;
என்னையே உபாயமாக(ஸாதனம் ) வைத்து என்னிடம் வைத்த பக்தி ,ப்ரேமையாகி,
உங்கள் அபீஷ்டங்களை அடைந்து, அனுபவித்து, மீண்டும் பிறவி இல்லாமல்,
என்னை வந்து அடைவீர்களாக !

ஹே,கிருஷ்ணா, இவ்விதம் ஆக்ஜை பெற்ற இருவரும், உன்னைப் ப்ரதக்ஷிணம் செய்து,
அடிக்கடி நமஸ்காரம் செய்து, வடதிசை நோக்கிப் புறப்பட்டு, குபேரபட்டணமாகிய
அளகாபுரிக்குப் போய்ச் சேர்ந்தனர் . இழந்த சம்பத்தை, பகவானை பஜித்து,
மீண்டும் அடைந்த அர்த்தார்த்தி களான இவர்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்

10 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
——————————————————————————————————-
(அடியேன் மூன்றாவது பின்குறிப்பில் , வைகுண்டவாசி ஸ்ரீ ரங்கஸ்வாமி அய்யங்காரின்
“பாசுரப்படி பாகவதத்தில்” திருவாய்ப் பாடியைப் பற்றி ” உளம் குளிர அமுது செய்து,
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு , ஒளியா வெண்ணெய் உண்டான்
என்று உரலோடு , ஆய்ச்சி ஒண்கயிற்றால் , விளியா ஆர்க்க
ஆப்புண்டு, விம்மி அழுது, பொத்த உரலைக் கவிழ்ந்து, அதன்மேலேறி ……….”
என்று தொகுத்துக் கொடுத்துஇருக்கிறார் என்று சொன்னேன்.
அதன் தொடர்ச்சியாக,

மருதமரம் பற்றிச் சொல்லும்போது , பாசுரப்படி பாகவதத்தில்
‘ மண மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப்போய் ,உரலோடும் ஒருங்கு ஒத்த இணைமருதம்
உன்னிய வந்தவரை,ஊரு கரத்தினோடும் உந்தி, எண்திசையோரும் வணங்க ,
இணை மருதூடு நடந்திட்டு……” என்று சொல்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம் சொல்வது என்னவென்றால், ஸ்ரீ கிருஷ்ணன் ,
உடலுடன் கட்டி இருந்த உரலையும் இழுத்துக் கொண்டு,
அந்த இரு மரங்களின் அடித்தண்டின் இடைவெளி
நடுவே பிரவேசித்து, உரலைத் தன் பலத்தால் இழுத்தார் .
இதன்படி, ஸ்ரீ கிருஷ்ணன் உரலையும் இழுத்துக் கொண்டு மரங்ககள் ஊடே தவழ்ந்து
சென்று தன் பலத்தால் இழுத்தார் என்று தெரிகிறது;
பாசுரப்படி பாகவதத்தில் “இணை மருதூடு நடந்திட்டு ” என்று உள்ளது.
இதற்குப் பொருள் என்ன? கேட்டால், மந்தபுத்திக்குத் தெரிந்தவரை சொல்கிறேன் )
அடுத்த அத்யாயம் தொடருகிறது——

krishna-10996273_761229527318442_3712351144669814985_n

About the Author

Leave A Response