Dhasamaskantham-naveena paaniyil–adyayam –11

Posted on Sep 5 2016 - 5:56am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் –நவீன பாணியில்——–அத்யாயம் —– 11
———————-
பழக்கூடையில் ரத்னங்கள்—–கோகுலத்திலிருந்து, பிருந்தாவனம்—இங்கு வத்ஸாசுரன், பகாசுரன் வதம்
——————————————————————————-

பெருத்த சப்தத்தைக் கேட்டு, நந்தகோபனும், மற்ற யாதவர்களும் ( கோபர்களும் ) ஓடி வந்தனர்.
பெரிய இரண்டு மரங்கள், கீழே விழுந்து கிடந்தன. எப்படி இவை இரண்டும் கீழே விழுந்தது என்று,
அவர்களுக்குத் தெரியவில்லை. அருகில் வந்து பார்த்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்.
கயிற்றால் கட்டப்பட்டு இருந்த உன்னை, கயிற்றை அவிழ்த்து, பயந்து கொண்டே ,
இது என்ன ஆச்சர்யம் என்று பேசினார்கள். அருகில் விளையாடிக்கொண்டிருந்த கோபர்கள்
ஆகிய கோபாலகர்கள், ( சிறுவர்கள் ) ” நாங்கள் பார்த்தோம்; இதற்குக் கிருஷ்ணன்தான் காரணம்;
இரண்டு மரங்களுக்கு நடுவே தவழ்ந்து சென்று, உரலை இழுத்தான்; மரங்கள் முறிந்து விழுந்தன;
இரண்டு புருஷர்கள் வெளியே வந்து, கிருஷ்ணனுடன் பேசினார்கள்;
நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் ” என்றார்கள்.
நந்தகோபர் உன் அருகே வந்து, உன்னை கயிற்றின் பிடியிலிருந்து வெளியே தூக்கினார்.

(கிருஷ்ணா….எல்லாரையும் சம்சாரக் கட்டிலிருந்து விடுவிக்கும் உன்னை,
நந்தகோபன் கயிற்றின் பிடியிலிருந்து விடுவித்தான் ….இது என்ன லீலை ! )

ஒரு சமயம், கோபிகைகள், உன்னைக் கொஞ்சி சீராட்டினார்கள்.
நீ, அவர்களுக்குக் ” குடக்கூத்து ” நடனம் ஆடிக் காண்பித்தாயாமே !
பாட்டுப் பாடினாயாமே !
அவர்கள், சந்தோஷப்பட்டு, மரப் பொம்மையுடன் விளையாடுவதைப் போல,
உன்னிடம் விளையாடினார்களாமே ! அவர்கள் இட்ட கட்டளையை
நிறைவேற்றி னாயாமே ?
அதாவது, முக்காலியைக்கொண்டுவந்து கொடுப்பது;
படியைக் கொண்டுவந்து கொடுப்பது என்று செய்தாயாமே ? இப்படிப் பல
சேஷ்டிதங்களால், கோபிகைகளுக்கு, ஆனந்தத்தை அளித்தாயாமே !
(அந்த பால சேஷ்டிதங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன் )

ஒரு நாள் , நீ வாஸம் செய்யும் வீதியில், ஒரு கிழவி “பழம் வாங்கலையோ ….. பழம்….. ”
என்று கூவிக்கொண்டு வந்தபோது, நீ, அவளிடம் சென்று,
“எனக்குப் பழம் கொடு ” என்று, உன் சின்னஞ்சிறு கைகளை நீட்டி வேண்ட,
அதற்கு அந்தக் கிழவி, “அரிசியைக் கொடு ” என்று கேட்க,
நீ, வீட்டின் உள்ளே போய், இரண்டி உள்ளங்கைகளிலும் அரிசியை எடுத்துக் கொண்டு ,
அரிசி தரையில் சிந்தாமல் இருக்க, ஜாக்ரதையாக நடந்து வர ,
அப்படியும் பல அரிசிகள் கீழே சிந்த,
இது தெரியாதவனைப்போல நடித்த நீ,
கையில் உள்ள அரிசியைக் கிழவியிடம் கொடுக்க,
அந்தக் கிழவி உன்னைத் தடவிக்கொடுத்து,
உன் சின்னஞ்சிறு கைகள் நிறையப் பழங்களைக் கொடுக்க,
நீ, அவளை அனுக்ரஹித்த உடன் , பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிரம்ப,
அது கண்டு ஆச்சர்யப்பட்ட அந்தக் கிழவி,
கண்களில் நீர் வழிய, உன் திருக்கைகளைப் பிடித்து முத்தமிட்டாளாமே !

(ஹே…..கண்ணா… அந்தக் கிழவியைப்போல , உனக்கு சமர்ப்பிக்க, அடியேனிடம் ஏதுமில்லை
அடியேனுடைய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். ஸ்வாமி தேசிகன்
அருளியுள்ள அஞ்சலி வைபவத்தை , ஹ்ருதயத்தில் நிறுத்தி, உனக்கு அஞ்சலி செய்கிறேன் )

ஒருநாள், நீயும் பலராமனும் , தாய்மார்கள் பின்தொடர, யமுனா தீரத்துக்குச் சென்று,
கோபர்களுடன் விளையாடினீர்கள். நேரம் மிகவும் ஆகியது; ரோஹிணி
பலராமனை ” விளையாடியது போதும், வீட்டுக்குப் போகலாம் வா … ” என்று கூப்பிட்டாள்.
பலராமனும் வரவில்லை; நீயும் வரவில்லை. தொடர்ந்து விளையாடிக்கொன்டிருந்தீர்கள்.
யசோதை வந்து, உன்னைக் கூப்பிட்டாள். புத்திர வாத்சல்யத்துடன் கூப்பிட்டாள்.
“விடியற்காலம் சாப்பிட்டீர்கள்; வெகு நேரம் ஆகிவிட்டது; உங்களுக்குப் பசிக்கும்;
வ்ரஜபூமியின் அதிபரான நந்தகோபன், உங்களை எதிர் பார்த்துக் காத்திருப்பார்;
ஹே….கிருஷ்ணா… இன்று உன் பிறந்த நாள்; பிறந்த நக்ஷத்ரம் ரோஹிணீ ” என்று சொல்லி
உங்களைக் கூப்பிட்டாள். இருவரும் திரும்பி வர, உங்களை அழைத்துக் கொண்டு
வீட்டுக்கு வந்த யசோதை, உங்களை நன்கு ஸ்நானம் செய்துவைத்து,
புது வஸ்த்ரங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, நீங்கள் க்ஷேமமாக இருக்க ,
மங்கள கார்யங்களைச் செய்தாள்.

ஒருசமயம், கோகுலத்தில் , உத்பாதங்கள் ஏற்பட்டன. விருத்தர்கள் மிகவும் பயந்து,
ஒன்று கூடி, என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள். அப்போது, மிகவும் வயதான
க்ஜான வ்ருத்தன் “உபநந்தன் ” பேசினான் .
” பெரிய உத்பாதங்கள் ஏற்படுகின்றன; குழந்தைகளுக்கு நாசம் ஏற்படும்படி நடக்கின்றன;
பூதனையிலி ருந்து விடுபட்டது, சகடாசுரன் அழிந்தது, தைத்யன் அழிந்தது,
மரங்கள் முறிந்து குழந்தையின் மேல் விழாமல் இருந்தது, என்று, இப்படிப்
பல கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும்,கஷ்டங்கள் ஏற்படுவதற்குள் ,
நாம் யாவரும் கோகுலத்தை விட்டு, பிருந்தாவனம் சென்று விடுவோம்;
அது, பசுமை நிறைந்த காடு; பசுக்களுக்கு நன்கு ஆகாரம் உள்ளது;
நாமும் அங்கே செல்லலாம் ; உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைச் செய்யுங்கள் ” என்றான்.

இதைக்கேட்ட கோபர்கள் யாவரும் , சரியான யோசனை என்று ஆமோதித்து,
கோக்களையும் கன்றுக் குட்டிகளையும் முன்பாகப் போக விட்டு, சாமான்கள்,
மூட்டை முடிச்சுகளை வண்டிகளில் ஏற்றி, வாத்தியங்களை வாசித்துக் கொண்டு
புரோஹிதர்கள் கூடவே வர, ப்ருந்தாவனம் புறப்பட்டனர்.
யசோதை, நீ, பலராமன், ரோஹிணி ஒரு வண்டியில் ஏறி அமர்ந்து, எல்லாருமாக
ப்ருந்தாவனம் வந்து சேர்ந்தீர்கள். இங்கு, வசிக்கும் இடங்களை
கோபர்கள் நன்கு ஏற்பாடு செய்தார்கள்.
அருகிலேயே யமுனை நதி; கோவர்த்தன கிரி ; பச்சைபசேல் என்று பூமி;
அடர்த்தியான காடு; உங்களுக்கு, சந்தோஷத்துக்குக் கேட்பானேன் !
இங்கு நீங்கள், மற்ற கோபர்களுடன் நன்கு வளர்ந்து, வனத்தில் பசு கன்றுகளுடன்
சுற்றித் திரிந்தீர்கள்; விளையாடினீர்கள். இந்த மாதிரியாக, நீங்கள் , யமுனா தீரத்தில்
கன்றுகளுடன் விளையாடும்போது, உங்களை அழிக்க, வத்ஸாசுரன் , கன்றுக்குட்டி
வேஷத்தில் வந்தான். அதை, பலராமன், உன்னிடம் கையைக் காட்டிச் சொல்ல,
நீ, அதன் பின்னாலே சப்தமில்லாமல் சென்று, பின்னங்கால்களைப் பிடித்து
மேலே தூக்கி சுழற்றி எறிய , அந்த அசுரன் எதிரே இருந்த விளாம்பழ மரத்தில் மோதி,
அழிந்தான். விளாம்பழங்கள் உதிர்ந்தன. அசுரனின் கோர ஸ்வரூப உடலும் கீழே விழுந்தது.
இதைப் பார்த்த கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் .

( நீங்கள், கோக்களை ரக்ஷிக்கும் வத்ஸ பாலகர்கள்; கோபாலர்கள்; வத்ஸர்கள் )

சில காலம் கழிந்தது. ஒருநாள் நீர் நிரம்பிய தடாகத்தில், நீங்களும், கோபாலகர்களும்,
கோக்களும் தாகத்துக்கு நீர் அருந்தினீர்கள் . அச்சமயம், எதிரே ஒரு மலைச் சிகரத்தைக்
கோபாலகர்கள் கண்டனர். அந்தச் சிகரத்தில், கொக்கு உருவில் ஒரு அசுரன் , உன்னைக் கண்டான்.
உடனே, பறந்து வந்தான்; உன்னை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தான் ,
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பலராமனும் கோபாலகர்களும் என்ன செய்வது
என்று கலங்கினார்கள். அப்போது, அந்த கொக்கு வடிவில் வந்த அசுரன் உன்னை முழுங்க முடியாமல்,
அவஸ்தைப்பட்டான். நீ உலகத்துக்கு எல்லாம் காரணன்;
நீ, அவன் வாயிலிருந்து வெளியே வந்தாய்; ஆனால், அசுரன் உன்னை விடவில்லை;
உன்னைக் கொத்துவதற்காக உன்னை நெருங்கினான்;
நீ, அவன் இரண்டு அலகுகளையும் , வாயின் இரண்டு பக்கத்தையும்
இரண்டு கைகளால் பிடித்து, பிளந்து, அறுத்து எறிவதைப்போல த் தூர எறிந்தாய்.
கொக்கு உருவில் உன்னைக் கொல்ல வந்த அசுரனைக் கொன்றாய்.
இதைப் பார்த்த கோபர்கள், ஆச்சர்யமடைந்தனர்.
இப்படியாக, அந்த அசுரனை அழித்து, பலராமனும் கோபர்களும் இருந்த இடத்துக்குத்
திரும்பி வந்தாய் பிறகு, நீங்கள் எல்லாரும், கோக்களுடன் ப்ருந்தாவனம்
திரும்பினீர்கள். கோபர்களும், கோபியர்களும் இந்தச் செயல்களைக் கேட்டு,
அதிசயமும் ஆச்சரியமும் அடைந்தனர். கிருஷ்ணனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள்;
அவர்கள், அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்;ஆனால், அவர்களை, கிருஷ்ணன் அழிக்கிறான்;
கர்க்கர் மகரிஷி சொன்னது நடக்கிறதே என்று பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், பலராமனுடன் சேர்ந்து நீ, பிருந்தாவனத்தில் திரிந்து, கோபர்களுடன் விளையாடி, எல்லாரையும் மகிழ்வித்தாய்.

(இப்படிப்பட்ட விளையாட்டுக்களை விளையாடிய, உனக்கும், பலராமனுக்கும் கோபாலகர்களுக்கும் அநேக நமஸ்காரங்கள் )

11 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
——————————————————————————————————————————————————————————

radhe krushna

About the Author

Leave A Response