Dhasamaskantham–naveena paaniyil–adyayam –13

Posted on Sep 5 2016 - 12:09pm by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்—-நவீன பாணியில்——–அத்யாயம்——–13
————————-
ப்ரஹ்மா செய்தது
———————
ஹே ….. கிருஷ்ணா……உன்னுடைய கதாம்ருதத்தைப் பருகப்பருக, ஆனந்தம் மேலிடுகிறது.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்துக்குச் சொன்னதைப் போல, சாதுக்களுக்கு ,
பகவத் கதாம்ருதம் மிகவும் பிடிக்கும். முனிபுங்குவர், ராஜனுக்கு,
மிக ரஹஸ்யமான சரிதம் ஒன்றைச் சொன்னார்.
உன்னுடைய சரிதம்தான்; உன்னுடைய லீலைதான்;
அதை இப்போது உன்னிடமே சொல்கிறேன்.
நீ, கோபாலகர்களை நோக்கி, யமுனாதீர உபவனம், மிகவும் நேர்த்தியானதென்றும்,
மணற்பாங்கான திடல் உள்ளதென்றும், விளையாடுவதற்குத் தகுதியான இடம்
என்றும் சொல்லி , யமுனா தீரத்துக்கு அழைத்து வந்தாய். பசுக்களும், கன்றுகளும்
நீர் அருந்திவிட்டு, புற்களை மேயச் சென்றன. மத்யான வேளை.
கோபாலகர்கள் , தாங்கள் கொண்டுவந்த பிரசாதங்களை, முதலில் உனக்கு சமர்ப்பித்துவிட்டு ,
சாப்பிடத் தொடங்கினார்கள். சிலர், அங்குள்ள இலைகளைப் பறித்து,
அதில் சாதத்தை வைத்துச் சாப்பிட்டனர். சிலர், பழங்களைப் பறித்து,
உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டனர். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டும்,
கேலி செய்துகொண்டும் , பகவானாகிய உன்னுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

உன்னைப்பற்றிச் சொல்ல வேணும் ! நீ எப்படி சாப்பிட்டாய் தெரியுமா !
அதை சுகப் பிரம்மம் கூறுகிறார்.
புல்லாங்குழலை இடுப்பில் செருகிக் கொண்டு,
கொம்பு வாத்தியத்தைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு,
இடது திருக்கையில் ஒரு கவளம் சோற்றை வைத்து,
வலது கையில் உள்ள ஊறுகாயைக் கடித்து,
கேலிப் பேச்சு பேசிக்கொண்டே, சாப்பிட்டுக்கொண்டிருந்தாயாம்.
இந்த பரம சௌலப்யம், தேவலோகவாசிகளை ஆச்சர்யப்பட வைத்ததாம்.
இப்படி நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
பசுக்களும், கன்றுகளும் புற்களை மேய்ந்துகொண்டே , வெகு தூரம் சென்று விட்டன.
கோபாலகர்களுக்குக் கவலை, பசுக்களையும் கன்றுகளையும் தேடிக்கொண்டு
எங்கே போவது என்று ?
நீ, அவர்களைப் பார்த்து, “கவலை வேண்டாம்; நான் போய் பசுக்களையும் கன்றுகளையும்
திரும்பவும் விரட்டிக் கொண்டு வருகிறேன் ; இங்கேயே இருங்கள் ” என்று சொல்லி,
ஊறுகாயும், சோறுமாகக் கிளம்பினாய்.
ப்ருஹ்மாவுக்கு, உன்னுடைய லீலைகளைப் பார்க்க ஆவல். என்ன செய்தார் தெரியுமா ?
பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிச் சென்று ஒரு குகையில்
ஒளித்து வைத்தார். உனக்கு, இவைகள் எங்கே போயின என்று தெரியாததால்,
அலைந்து , திரிந்து, மறுபடியும் கோபாலகர்களை விட்டுப் போன இடத்துக்கு வந்தாய்.
அதற்குள், ப்ருஹ்மா , அவர்களையும் மறைத்து வைத்து விட்டார். நீ, உடனே புரிந்து கொண்டாய்,
இது ப்ருஹ்மாவின் கார்யம் என்று. உடனே சங்கல்பித்தாய்.
அதேமாதிரி பசுக்கள், அதேமாதிரி கன்றுகள், அதேமாதிரி அச்சாக கோபாலகர்கள்,
என்று நீயே இப்படி மாறினாய். “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ‘ என்று வேதம் சொல்கிறது.
வேதம் சொல்வது சத்ய வாக்கு அல்லவா ?

கோபாலகர்கள் அப்படி அப்படியே உருவம், உயரம், நடை உடை பாவனை , நிறம் ,
அதேமாதிரி பசுக்கள் அந்தந்த வர்ணங்கள், சுபாவங்கள் மிருதுவான கன்றுகள், , இப்படியே கோக்களாகவும் யும் கன்றுகளாகவும் கோபாலகர்களாகவும் மாறி, நீயும் அப்படியே இருக்க ,இவர்களுடன் எப்போதும் போல, விளையாடிக்கொண்டு,
பிருந்தாவனத்துக்கு வந்து, அவரவர் வீடுகளில் அவரவர்கள் ஸ்வபாவப்படி போக,
பசுக்கள், கன்றுகள் கொட்டில்களில் அடைய, நீயும் யசோதை மைந்தனாக விளங்கினாய்.
ஒவ்வொரு நாள் காலையிலும், கோபிகைகளுக்கு, தங்கள் புத்ரர்களை எழுப்பிப் பால் கொடுக்கும்போது,
அதீத வாத்ஸல்யம். பசுக்களும், கன்றுகளும் பரஸ்பரம் அதீத அன்பைச் செலுத்தின.
இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆயிற்று. ஒரு சமயம், பலராமன்,
உன்னுடனும் கோபாலகர்களுடனும் வனத்துக்கு வந்தார்.
அப்போது, பசுக்கள் தனியாக மேய்ந்து கொண்டிருந்தன.

கோவர்த்தன மலையின் உச்சியில் உள்ள புற்களைப் பார்த்து, அங்கு போய்ச் சேர்ந்தன.
கன்றுகள், வேறு இடத்தில் தனியே மேய்ந்து கொண்டிருந்தன. மலையின் உச்சியில் இருந்த பசுக்கள்,
கன்றுகளைப் பார்த்தன. மடியில் பால் கனக்க, கோபாலகர்களின் கட்டுக் காவலையும் மீறி,
கன்றுகளை நோக்கி மலையடி வாரத்துக்குப் பாய்ந்து வந்து, அவைகளுக்குப் பால் கொடுத்தன.
இதைப் பார்த்த கோபர்கள், பசுக்களிடம் கோபப்படவில்லை. கண்களில் அன்பு கனிய இதைப் பார்த்தனர்.
இந்தக் காக்ஷிகளை, பலராமர் பார்த்தார். இந்த அற்புத, அபூர்வ பிரேமபாசம் அடிக்கடி ஏற்படுகிறதே ,
காரணம் என்ன என்று யோசித்தார். இது பகவானுடைய மாயை; இந்த மாயை,
என்னையும் மோஹித்து விடுகிறது என்று எண்ணி, எல்லாப் பசுக்களும், கன்றுகளும், கோபாலகர்களும்
சாக்ஷாத் விஷ்ணுவே என்கிற முடிவுக்கு வந்து, அருகில் இருந்த உன்னைப் பார்த்து,
” கிருஷ்ணா… நீயே இவர்கள் எல்லாருக்குள்ளும் புகுந்து எல்லாவற்றையும் செயற்படுத்துகிறாய்,
இது உன் விளையாட்டு ” என்று சந்தோஷப் பட்டார்.

ப்ருஹ்மாவுக்கு, ஒருநாள் கழிந்தது. பூலோகத்துக்கு வந்தார். தான் ஒளித்து வைத்திருந்த பசுக்கள்
கன்றுகள் கோபாலகர்கள், ஒளித்து வைத்த இடத்தில் அப்படியே இருக்க,
கிருஷ்ணன் , வழக்கம்போல இவர்களுடன் வனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறானே ?
இது எப்படி சாத்யம் ? நான் ஒளித்து வைத்துள்ள பசுக்கள், கன்றுகள், கோபாலகர்கள் நிஜமா ?
அல்லது, இதோ இங்கு கிருஷ்ணனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்களே , இவர்கள் நிஜமா ?
என்று குழம்பினார்.

ஸத்யனான உன்னை ஏமாற்ற , தனது மாயையைப் பிரயோகம் செய்த ப்ருஹ்மா,
தனது மாயையில் தானே சிக்கிக் கொண்டு, தன்னையே ஏமாற்றிக் கொண்டு,
உன்னுடைய விஷ்ணு மாயையால் தாக்கப்பட்டு, ஒன்றும் புரியாமல் கவலையுடன் விழித்து,
சோகத்தின் வசப்பட்டார். தனது லோகமான ப்ரும்ம லோகத்துக்கு வந்தார்.
அங்கே, இன்னொரு ப்ருஹ்மா இருப்பதைப் பார்த்தார். தனக்கே, தான் யார் என்று தெரியாமல்,
மயங்கினார்.

மின்மினிப் பூச்சியின் பிரகாசம், சூர்ய ஒளியில் ஒன்றும் இல்லாது ஆவது போல,
உன்னுடைய விஷ்ணு மாயையில், அவரது மாயை ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.
ப்ருஹ்மாவின் மாயா சக்தி அடங்கி ஒடுங்கியது. அதே க்ஷணத்தில், ப்ருஹ்மா கண்ட காக்ஷி
அவரைத் திகைக்க வைத்தது. எல்லா கோபாலகர்களும் அவருக்கு சாக்ஷாத் விஷ்ணுவாகவே
காக்ஷி அளித்தனர். ஒவ்வொருவரும் ச்யாமள நிறம்; அரையில் ( இடுப்பில் ) மஞ்சள் பட்டு பீதாம்பரம்;
சதுர்ப்புஜம்;
திருவாழி
திருச்சங்கு
கதை
திருக்கரத்தில் தாமரை;
சிரஸ்ஸில் ஜ்வலிக்கும் கிரீடம்;
மகர குண்டலங்கள்;
வனமாலை;
ஸ்ரீ வத்ஸ மறு;
திருக்கைகளில் தங்கக் காப்புகள்;
அங்குலீயம்( மோதிரம் )
இடுப்பில் கடிசூத்ரம்;
மார்பில் துளசி மாலை;
மிருதுவான அங்கங்கள்;
திருவடிகளில் நூபுரம்;
உதட்டில் மந்தஹாசம்; ……இப்படிப் ப்ருஹ்மாவுக்கு, ஒவ்வொரு கோபாலகர்களும் விஷ்ணுவாகவே
காக்ஷி கொடுத்தனர். குளிர்ச்சி பொருந்திய கடைக்கண் பார்வை;
எல்லா ஜகத் கார்யங்களும் அணிமா முதலிய சித்திகளும் பிரக்ருதியின் மஹத்
என்பன போன்ற 24 தத்வங்களும் அந்தந்த தேவதா ரூபம் எடுத்துக் கொண்டு,
கோபாலகர்களை , சேவிப்பதைப் பார்த்தார். சேதனாசேதன வர்க்கங்கள்,
காலத்தின் ஸ்வபாவமும் ( அபிமான தேவதை ) , காமங்கள், கர்மாக்கள், அதற்குள்ள முக்குணங்கள் ——
எல்லாம் உருவம் எடுத்து, உனக்கு ஸேவை செய்வதைப் போல,
கோபாலகர்களுக்கும் ஸேவை செய்தன. பேரானந்த மூர்த்தியான உன்னை,
கோபாலகர்கள் உருவில் உபாசிப்பதை, ப்ருஹ்மா பார்த்தார்.
இப்படிப்பட்ட அனுபவத்தை, தத்வ க்ஜாநியான ப்ருஹ்மாவுக்கு, நீ, அளித்தாய்.
அவரது, ஏகாதச இந்த்ரியங்கள் தடைப்பட்டு, கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மையைப்
போல உணர்ந்தார். உன்னை, உபநிஷத்துக்களின் க்ஜானத்தாலேதான், ஒருவாறு அறிய முடியும்.
ப்ருஹ்மா தன்னுடைய நிலைக்கு வரமுடியாமல் திணறினார். தடுமாறினார்.
அப்போது, நீ , அவரை மாயையிலிருந்து விடுவித்தாய்.

இப்போது, பிருந்தாவனம், கோபாலகர்கள், பசுக்கள், கன்றுகள் யாவும் சஹஜமாக
விளையாடிப் பேசுவதைக் கண்டார். ஒளித்து வைப்பதற்கு முன்பு , என்ன சேஷ்டைகள்
செய்து விளையாடினார்களோ, அப்படியே இருந்ததைக் கண்டார்.
உடனே, ப்ருஹ்மாவுக்கு, ஞானோதயம் ஏற்பட்டது.
கிருஷ்ணா ! உன்னை நமஸ்கரித்தார்;
தரையில் விழுந்து சேவித்தார். நான்கு கிரீடங்களும் உன் திருவடியில் படுமாறு சேவித்தார்.
மீண்டும் மீண்டும் சேவித்தார்.
கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்க,
தன் திருஷ்டியை உன் திருவடிகளில் வைத்து,
மறுபடியும் மறுபடியும் சேவித்தார்.
எழுந்து, தலை குனிந்து, கைகளைக் கூப்பிக்கொண்டு,
உன்னை, ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.

( ஹே ….. கிருஷ்ணா……..உனது மட்டற்ற கருணையால், உனது ரூபத்தை ,
ப்ருஹ்மாவுக்குக் காட்டினாய். அந்தக் கருணைக்கு நமஸ்காரங்கள்; அந்த நான்முகனுக்கு
நமஸ்காரங்கள் )

13 வது அத்யாயம் நிறைவு பெற்றது . ஸுபம்
————————————————-

images--7

About the Author

Leave A Response