Dhasamaskantham–naveena paaniyil–Adyayam–15

Posted on Sep 6 2016 - 9:21am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்—நவீன பாணியில்–15 – வது அத்யாயம்
————————————
தேனுகாசுரன் வதம்
————
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்கு மேலும் விவரித்ததை, உனக்குச் சொல்கிறேன்.
உனக்கும், பலராமனுக்கும் குழந்தைப் பருவம் என்பது போய், இப்போது, பையன்களாக, யுவாவாகக் காக்ஷியளித்தீர்கள். அதாவது, பால பருவம் —–குமார தசை.நீங்களே , பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள்.
பிருந்தாவனம் முழுவதும் உங்கள் திருவடிகளால் பாவனமாகியது. கோபர்கள் சூழ, நீ, புல்லாங்குழலை ஊதிக்கொண்டு, பசுக்களை மேய்ப்பதற்காக
ஓட்டிச் சென்றாய். அப்போது, பலராமனைப் பார்த்து, இந்தப் பழங்களால் குலுங்கும் மரங்கள்,
உன்னை வணங்குகின்றன; குயில்கள் கூவுகின்றன; புல், பூண்டுகள்உன்னுடைய பாத ஸ்பர்சத்தால் பாவனமாகியது; மரங்களும், கொடிகளும்,
நீ மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிக்கும்போது, உன் பாத ஸ்பர்சம் பட்டு பாபம் போய் , புனிதமாக ஆகிவிட்டன.
இப்படியெல்லாம், நீ, பலராமனிடம் பேசிக்கொண்டே பிருந்தாவனத்தில் நதி தீரத்திலும், உத்யான வனத்திலும் விளையாடினாய்.
நீ, சில சமயம் ,ஹம்ஸத்தைப் போலக் கத்துவாய்;
மேகத் த்வனியாக கர்ஜிப்பாய்;
சகோர பக்ஷியைப் போலவும்,
கிரௌஞ்ச பக்ஷியைப் போலவும்,
சக்ரவாகப் பக்ஷியைப் போலவும்
பாரத்வாஜ பக்ஷிகளைப் போலவும் கத்துவாய்;
சில சமயம் பலராமனை, ஒரு கோபன் மடியில் படுக்க வைத்து, பலராமனின் காலை வருடி விடுவாய்;
நீ, சில சமயம், கோபன் மடியில் தலையை வைத்து உறங்குவாய்;கோபச் சிறுவர்கள், ஒரு மஹாராஜாவைச் சேவகர்கள் சூழ்வதைப் போல,ஸ்நேஹத்துடன் உன்னைச் சூழ்ந்து, சைத்ய உபசாரங்களை உனக்குச் செய்வார்கள்.

இப்படி, நீயும் பலராமனும், பிருந்தாவனக் காட்டில், பசுக்களை மேய்த்து விளையாடி வரும்போது, ஒரு சமயம், ஸ்ரீ தாமன் என்கிற கோபச் சிறுவனும் ,
இன்னும் சில சிறுவர்களும் உன்னிடம் வந்து, அருகே ஒரு பெரிய காடு இருப்பதாகவும், அதில் பனைமரங்கள் நிறையப் பழுத்து, பழங்கள் கீழே விழுந்து கிடப்பதாகவும்,
ஆனால், அங்குள்ள தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்துடன் ,பந்துக்கள் நண்பர்கள் யாவரையும் அருகே அண்ட விடுவதில்லை என்றும் , அவனுக்குப் பயந்து, ஒருவரும் அங்கு போவதில்லை என்றும்,
பழுத்த பழங்களின் வாஸனை, வெகு தூரத்தில் தங்களுக்கு,பழங்களைச் சாப்பிடும் ஆசையை வளர்த்து உள்ளதாகவும், தங்களைஅந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கோரினார்கள்.

நீ, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பலரானும், நீயும் , கோபர்களுமாகஅங்கு சென்றீர்கள்.
( ஹே, கிருஷ்ணா, இப்போது இந்த இடம், “தர்பாரே—-தால்கி ” என்று அழைக்கப்படுகிறது.)
பலராமன் முதலில் சென்று, ஒரு பெரிய மரத்தை ஆட்டி, பழங்களைக் கீழே விழச் செய்தார்
. பழங்கள் விழும் சப்தத்தைக் கேட்டு, தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்தில் ஓடிவந்தான்.
பலராமனை, முழுவேகத்துடன் தாக்கினான். பூமி அதிர்ந்தது. தன் கால்களால், பலராமனின் மார்பில் உதைத்தான். அங்குமிங்கும் ஓடினான்.
மறுபடியும் வந்து பின்னங்கால்களால் தாக்க,
பலராமன் கோபத்துடன் அவன் முன்னங்கால்களைப் பிடித்து, முழு வேகத்தில் சுழற்றி, பனைமரத்தின் மீது ஓங்கி அடித்தான். புல், பூண்டு அழிவதைப் போல,
பனைமரத்தின் வேர்பாகத்தில் தாக்கப்பட்டு , தேனுகன் மடிந்தான்.
பனை மரத்தின் அடிப்பாகம் பழங்களை உதிர்த்துக் கொண்டே, பக்கத்துப் பனைமரத்தின் மீது சாய, இப்படி நான்கு பனை மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
வேரோடு சாய்ந்தன. பெரிய சுழற்காற்று வீசினால், மரங்கள் எப்படி சாய்ந்து விழுமோ ,அப்படி விழுந்தன. இது, பலராமனுக்கு லீலையாக இருந்தது.
தேனுகாசுரனின் பந்துக்கள் வந்து தாக்க, அவர்களையும் நீங்கள் அழித்தீர்கள்.இந்த அதிசயத்தைப் பார்த்த , வானில் இருந்த வித்யாதரர்கள், உங்கள்மீது,
புஷ்பமாரி பொழிந்தார்கள். தேனுகாசுரன் அழிந்ததும், அந்த வனத்தில் ஜனங்கள் பயமின்றி நடமாடினார்கள். பசுக்களும் பயமின்றி சஞ்சரித்தன.
கோபர்கள் சந்தோஷத்துடன் உங்களைத் துதித்தனர்.

இப்படியாக, தேனுகாசுரனை வதம் செய்து , வீடுகளுக்குத் திரும்பும் உங்களை,
கோபிகைகள் ஆசை ததும்பப் பார்த்தனர். இதோ….கிருஷ்ணனைப்பார்…. கிருஷ்ணனைப்பார்…
. என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.
ஹா…. எப்படிப்பட்ட ரூபம்……புல்லாங்குழலைத் தரித்திருக்கிறார்;
தலையில் மயில் இறகு; காட்டுப் புஷ்பங்கள்;
கேசத்தில் பல வர்ண மணிகளின் முடிச்சுகள்;
அரவிந்த வதனம்;
புன்சிரிப்பு;
உன் முகம் கோதூளியால் சிவந்து இருக்க,
உன்னுடைய அந்த அரவிந்த முக சாரத்தைப் பருக
க்ஷண காலம் கூடப் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தை விரட்ட,எவருடைய அபாங்க ( கடைக்கண் ) வீக்ஷண்யத்தாலே ,மோக்ஷம் கிடைக்கிறதோ அந்த முகுந்த முக சேவைக்காக, வ்ரஜசுந்தரிகளான இடைச்சிகளான வனிதைகள், இளம் கோபிகைகள், —-ஓடி வந்தார்கள்
. இது, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தொடர்ந்தது. நீயும் பலராமனும் பசுக்களை ஓட்டிக்கொண்டு, மேய்ச்சலுக்காகவனத்துக்குப் போகும்போதும் , சாயந்திரம் திரும்பி வரும் போதும்,
இது, தொடர்ந்தது.
யசோதையும் ரோஹிணியும் இந்த முக தர்ஸனம் செய்வதில் முக்யமானவர்கள்.
புத்திர வாத்சல்யத்தாலே, உங்களைக் குளிப்பாட்டி, நல்ல வஸ்த்ரம் அணிவித்து, ஆபரணங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, வனத்துக்கு அனுப்புவதும்,
திரும்பி வருவதை எதிர்பார்த்து , வீட்டுக்கு வந்தவுடன் உங்களை உச்சி முகந்து ,மறுபடியும் குளிப்பாட்டி, வஸ்த்ரம் ஆகாரம் கொடுத்து, திவ்யமான மஞ்சத்தில் படுக்க வைத்து, கண்ணை இமை காப்பதுபோலக்
காப்பாற்றினார்கள். தினந்தோறும் இப்படியாக,
நீங்கள் ப்ருந்தாவனக்காடுகளில் சஞ்சரித்தீர்கள்.

ஒரு நாள், நீ மாத்ரம், பலராமன் இல்லாமல்,
காளிந்தீ நதியாகிற யமுனை நதிக்கரைக்கு, கோபர்கள் பசுக்கள் கன்றுகளுடன் வந்தாய்.
நல்ல வெய்யில் காலம்; சூர்ய வெப்பம் தாங்க முடியவில்லை; அவர்களுக்குத் தாகம்;
நதியின் மடுவில் இறங்கி , ஜலத்தை எடுத்துப் பருகினார்கள்.அந்த யமுனா ஜலத்தில் காளியன் என்கிற சர்ப்பத்தின் விஷம் கலந்து இருந்ததால்,
மனம் கலங்கி, பிரமித்து, கீழே விழுந்து உயிர் இழந்தார்கள்.
நீ, உடனே, அவர்களைக் கடாக்ஷித்தாய்.
அம்ருத கடாக்ஷ வீக்ஷிண்யம் எல்லோரும் மூர்ச்சை தெளிந்து எழுந்தாற்போல , எழுந்து உட்கார்ந்தார்கள். இறந்தவர்கள்—விஷ ஜலத்தைப்பருகி இறந்தவர்கள்,
உயிர் பெற்று எழுந்து பேசுவது…….கிருஷ்ணா இது உன் அனுக்ரஹத்தால்தான்
( உன் அநுக்ரஹம் பெற்ற கோபர்களையும், பசுக்களையும், கன்றுகளையும் அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

15 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்images--9

About the Author

Leave A Response