dhasamaskantham–naveenapaniyil–adyayam 16

Posted on Sep 7 2016 - 4:51am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம்—-நவீன பாணியில்———- அத்யாயம் 16
———————–
காளியன் விடுபட்டான்—நாக பத்நிகளின் ஸ்துதி
——————–
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார். ஹே. ராஜன்………..பசுக்களும், கன்றுகளும்,
கோபர்களும் கிருஷ்ணனின் அனுக்ரஹத்தால் உயிர் பிழைத்து, எழுந்து,
ஆச்சர்யத்துடன், இது கிருஷ்ணனின் அனுக்ரஹம்தான் என்று எண்ணி சந்தோஷப்பட்டார்கள்.
அப்போது, நீ யோசித்தாய். யமுனை நதி , காளிங்கனால், விஷமாக்கப் பட்டுள்ளது;
இதைச் சுத்தமாக்கி, யாவரும் இந்த ஜலத்தை அருந்தவும், தீர்த்தாமாடவும், —–
இந்த ஜலத்தை மாற்றவேண்டும் என்று எண்ணினாய்.

கிருஷ்ணா, காளிந்தீ என்கிற பெயர்கள், யமுனை நதிக்கு உண்டு.
இந்த நதியில், காளிங்கன் என்கிற கொடிய விஷமுள்ள ஸர்ப்பம் ,
தன் விஷத்தால், ஜலம் முழுவதையும் விஷமாக்கிக் கொண்டும்,
விஷ அக்னியால் யாவரையும் தஹித்துக்கொண்டும் இதில் வசித்துக் கொண்டு இருந்தான்.
பறவைகள், மேலே பறந்து சென்றால், விஷக்காற்று மேலே பட்டு, மடிந்து விழுவது
வழக்கமாக இருந்தது. இந்த விஷக் காற்று பட்ட மரங்கள், செடிகள் யாவும் கருகி,
பட்டுப் போய் மொட்டையாகக் காக்ஷி அளித்தன.
பசுக்களும், மனிதர்களும் யமுனை நதிக்கரைக்குப் போனாலே,
விஷக் காற்று பட்டு ,மடிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்த நீ, அந்த யமுனை மடுவின் ஒரு ஓரத்தில் இருந்த
கதம்ப மரத்தில் ஏறி , வேஷ்டியை இறுகக் கட்டிக் கொண்டு,
தோள் பட்டைகளைத் தட்டிக் கொண்டு, பெரிய சப்தத்துடன் ,
மடுவில் குதித்தாய். விஷம் முழுவதும் உள்ள ஜலம், உயர எழும்பியது.
நான்கு திக்குகளிலும் அலைகள் எழும்பின; பெரிதாகிச் சுழன்றன;
பெரும் சப்தம் உண்டாகியது.

இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்ட,அதாவது காதும் கண்ணும் ஒன்றாக இருக்கும் பாம்பு,
காளிங்கன் என்கிற அந்தக் கொடிய விஷஸர்ப்பம், கோபத்துடன் கிளர்ந்து
எழுந்தது. ஜலத்துக்கு வெளியே வந்தது.
உன்னைப் பார்த்தது. ஸ்ரீ வத்ஸ மருவினால் அலங்கரிக்கப்பட்ட,
உன் சுகுமார—-கோமள—-திவ்ய மேனியைக் கோபத்துடன்
தன் விஷப் பற்களால் கடித்தது ;
உன்னுடைய தாமரைத் தண்டுபோன்ற மெல்லிய கால்களைக் கடித்தது;
உன்னைத் தன்னுடைய வாலால் நன்கு சுற்றிக் கட்டியது;
நசுக்கியது
. உன்னைப் பார்த்த கோபாலகர்கள் கதறி அழுதனர்;
உன்னுடைய ப்ரிய மித்ரர்கள் —-உன்னையே நம்பி வாழும் ப்ரிய சகாக்கள்,
நாங்களும் யமுனையில் குதித்து விடுகிறோம் என்று கத்தினர்.
பசுக்களும், கன்றுகளும் பயத்தால் கத்தி , கண்களில் ஜலம் வழிய நின்றன.
பூமி, ஆகாயம், வ்ரஜவாசிகளின் உடல்கள் இங்கெல்லாம் தாபம் ஏற்பட்டது.

பலராமன் இல்லாமல் நீ தனியாக வந்துள்ளதை அறிந்த நந்தகோபரும் யசோதையும்
மனம் துடி துடித்து , உனக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று பயந்து,
வேதனையுடன், பாலர்கள், வ்ருத்தர்கள், ஸ்திரீகள் தொடர்ந்து வர,
எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு,
உன்னைப் பார்க்க வேண்டும் என்று தீனக் குரலில் கதறி,
யமுனா நதி தீரத்துக்கு ஓடி வந்தனர்.

பலராமனுக்கு, உன்னைப் பற்றி நன்கு தெரியும்.
அதனால், அவன் ஒன்றும் சொல்லவில்லை.
பிருந்தாவனத்தில் உள்ள புழுதியில் , உன்னுடைய திருவடிகளின் அடையாளங்களான
தாமரைத் தண்டுடன் புஷ்பம், அங்குசம், வஜ்ரம், கொடி, சங்கு, சக்ரம் இவற்றால்
நீ சென்ற இடத்தை தெரிந்து கொண்டு ஓடோடி வந்தனர்.
நீ, காளிங்கனால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு, அசைவின்றி இருப்பதை,
வெகு தூரத்தில் வரும்போதே பார்த்தார்கள்.
ஸ்திரீகளும், வ்ருத்தர்களும் வழியிலேயே மூர்ச்சை அடைந்தார்கள்.
கோபிகைகள், கோபர்கள், ஸ்திரீகள், வ்ருத்தர்கள் —-எல்லாருக்கும்
உன்னுடைய நினைவுதான்; வேறு நினைவு இல்லை.
உன்னுடைய புன்னகையுடன் கூடிய திருமுகம்;
உன் ஒவ்வொரு பேச்சு , இவற்றைஎல்லாம் நினைத்தார்கள்.
நீ இல்லாத இந்த உலகம் எங்களுக்கு சூன்யம், என்று சொல்லி
உன்னுடைய கதாம்ருதங்களை ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்கள்.
தாங்களும் மடுவில் குதித்து, கிருஷ்ணனுடன் உயிரை விட்டு விடுவோம் என்று துடிக்க ,
பலராமன் அவர்களைத் தடுத்து, உன் மகிமைகளை எடுத்துச் சொன்னார்.

இவைகளை, இரு முஹூர்த்த நேரம், ( சுமார் ஒரு மணி நேரம் ) பார்த்துக் கொண்டு,
காளிங்கன் கட்டுதலில் இருந்த நீ, உடனே உன்னை மிகச் சிறிய உருவாகஆக்கிக்
கொண்டாய். காளிங்கனின் பந்தத்திலிருந்து விடுபட்டாய்.
உடனே, பெரிய உருவம் எடுத்தாய்.
ஸர்ப்பம், தன் மூச்சுக் காற்றால், விஷத்தைக் கக்கியது ;.
சீறியது;
வாயால் நெருப்புப் பொறிகளைக் கக்கியது.
உன்னை, மறுபடியும் தாக்க முயற்சித்தது.
நீ, விளையாட்டாக, அந்தஸர்ப்பத்தை ஒரு தடவை வலம் வந்து,
கருடன், பாம்பு மீது எப்படிப் பாயுமோ அப்படி ஒரு க்ஷணத்தில்,
அதன் தலைமீது பாய்ந்து, ஏறினாய்.
அதன் தலை மீது நடனம் புரிய ஆசைப் பட்டாய் .
அதன் முகங்களில் ஒளி விடும் ரத்னங்களால்
உன் திவ்ய திருவடிகள் ஜொலிக்க, காளிங்கன் தலைகள் மீது நர்த்தன மாடினாய்.

ஆகாயத்தில், கந்தர்வர்கள், சித்தர்கள், தேவர்கள், அப்சரஸ்கள், எல்லோரும் கூடி,
ஆனந்தத்துடன், உன்னை சேவித்து, ம்ருதங்கங்கள், பேரிகைகள் வாசித்தார்கள்,
என்று ஸ்ரீ சுகர் கூறினார்.
உன் புகழைப் பாடினார்களாம்.
புஷ்பங்களை வாரி, உன்மேல் இறைத்தார் களாம் .
நீ, காளிங்கனின் ஒவ்வொரு தலையிலும் உன் திருவடியை வைத்து,
எந்தத் தலை நிமிர்ந்ததோ, அந்தத் தலையில் உன் திருவடியை வைத்து,
அழுத்தி, நூறு தலைகளிலும் மாறி மாறி நர்த்தனம் செய்தாய்.
எந்தத்தலை வணங்கவில்லையோ, அந்தத் தலையின் மீது ,
உன் திருவடியை வைத்து, நசுக்கினாய்.
உன் திருவடிகளைத் தூக்கியும், மடித்தும் ஆடினாய்.
அதன் தலைகள் குடைபோல் விரிந்தபோது, அவற்றின்மீது ஏறி,
தாண்டவ ந்ருத்யம் செய்தாய். அதற்கு, சக்தி குறைய ஆரம்பித்து,
அதன் ரத்தம், உன் பாத துளிகளை ஸ்பர்சித்தது.
அதன் அங்கங்கள் ஒடிந்து, நசுங்கி,
இனிப் பிழைக்க மாட்டோம் என்கிற நிலையில்
, ஸ்ரீ மன் நாராயணனை மனத்தால் சரண் அடைந்தது.

இதைக்கண்ட காளிங்கனின் பத்னிகள்——நாக பத்னிகள்,
தங்கள் பதிக்கு ஆயுளை வேண்டி, கேசபாசங்களை விரித்துக் கொண்டு,
உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, கைகளைக் கூப்பி,
சாதுக்கள், பதிவ்ரதைகள் எப்படி வேண்டுவார்களோ ,
அவ்விதமாக உன்னிடம் ப்ரார்த்தித்துச் சரணமடைந்தார்கள்.
உன்னைத் துதித்தார்கள்.

( ஹே….பிரபோ….நீ, காளிங்க நர்த்தனம் செய்ததை,
ஆழ்வார்களும், ஆசார்யர்களும், வாக்கேயக்காரர்களும் ,
கபீர்தாஸ், சூர்தாஸ், மீரா போன்றவர்களும் ,
இப்படிப் பல்பல பக்தர்கள், அனுபவித்து இருப்பது கொஞ்ச நஞ்சமல்ல.
அவைகளை எல்லாம் மனஸ்ஸில் நிறுத்தி,
நீ, நர்த்தனம் செய்ததை எண்ணி,ஸதாஸர்வ காலமும்
அந்தத் திருவடிகளைத் துதிக்கிறேன் )

நாக பத்நிகளின் ஸ்துதி
————————————–
ஹே….பிரபோ…..உன் அவதாரம் துஷ்டர்களைத் தண்டிக்க ஏற்பட்டது.
ஆதலால், இந்தத் தண்டனை இவருக்குத் (காளிங்கனுக்குத் ) தகும்.
இந்தத் தண்டனை, அவருக்கு அனுக்ரஹமாகும் .
பாபத்தால், இவருக்கு, இந்த ஸர்ப்ப ஜன்மம் ஏற்பட்டது.
ஆனால், உமது க்ருபா கடாக்ஷத்தைப் பெற, மிகப் பெரிய தவம் செய்திருக்க வேண்டும்.
இவர் அவமானம் அடைந்து, சாகும் நிலையில் இருக்கிறார்.
ஆனால், உமது கிருபையால், புது கௌரவம் கிடைத்து இருக்கிறது.
இவர் செய்த எந்தப் புண்யத்தால், உமது திருவடி சம்பந்தம் இவருக்கு ஏற்பட்டது
என்பது எங்களுக்குத் தெரியாது. எந்தத் திருவடிகளை ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,
மிக்க ஆசையுடன் பிடித்து, லாலனம் செய்வாளோ,
ப்ருஹ்மா, சிவன் போன்ற மகாத்மாக்கள் கடும் தபஸ்ஸை விட்டுவிட்டு ,
எந்தத் திருவடித் தாமரைகளையே த்ருடமாக நினைத்து, ஸேவை செய்வார்களோ,
அந்தத் திருவடி ஸ்பர்சம் , உமது கிருபையால், இவருக்குக் கிடைத்திருக்கிறது.
எங்களுக்கு, உம்முடைய பாதபத்மங்கள் கிடைத்தபிறகு,
நாக ப்ருஷ்டமோ ( சர்ப்பங்களின் உச்ச, ஆதிபத்ய நிலை )
சார்வ பௌமத்வமோ ( சகல லோகங்களையும் ஆளும் அதிகாரம் )
பாரமேஷ்டியமோ ( ப்ருஹ்ம பதவியோ, பரமேஸ்வர பதவியோ )
வேண்டவே வேண்டாம்.

நாங்கள் ப்ரபன்னர்கள்.
உமது பாத பத்ம ரஜஸ்ஸை ( திருவடித் தாமரைத் துகள்களை )
அடைந்து விட்டோம்.
வேறு எதுவும் எங்களுக்குப் பெரிது இல்லை.
எவருக்கும் கிடைக்காத, உமது பாதத்துகள்களை ,
நீரே இவருக்குக் கொடுத்து இருக்கிறீர்.
இவர் புண்ய கதி அடைந்திருப்பது, எங்கள் பாக்யமாகும்.
உம்மை, நாங்கள், பல தடவை நமஸ்கரிக்கிறோம்.
நீர், மஹா புருஷர்.
மகாத்மா.
சர்வ பூதங்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்.
நீர், சர்வ பூதங்களுக்கும் மேலான பரமாத்மா.
உம்மை, அநேக ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறோம்

க்ஜானத்துக்கும், விக்ஜானதக்கும் விஷயமாக உள்ள,
பரப்ரஹ்மம் நீர்.
அனந்த சக்தியை உடையவர் நீர்.
அனந்த கல்யாண குணங்களை உடையவர் நீர்.
உமக்கு, இயற்கையாகவே, ஸ்வரூப, ஸ்வபாவ மாறுதல்கள் இல்லை.
நீர் பிரகிருதியை ஆள்பவர்.
ஷாட்குண்ய பரிபூர்ணர்.
நீர் கால ரூபி.
காலத்தை ஆள்பவர்.
காலத்தைத் தாங்குபவர் ( நிமிஷம், மணி, சம்வத்சரம் முதலியவை ).
நீர் சகலத்தையும் நடத்துபவர்.
நீர் சர்வத்துக்கும் சாக்ஷி.
நீர் , உபாதான நிமித்த காரணமாகவும், ஜகத் ஸ்வரூபமாகவும்,
எல்லாப் பொருட்களையும் உண்டாக்குகிற ஆதி பிதா.
ப்ரபிதா பிதாமஹர் .
உமக்குப் பலபல நமஸ்காரங்கள்.

நீரே ஐந்து பூதங்கள் ;
நீரே தன் மாத்ரைகள்;
நீரே ப்ராண, மனஸ், புத்தி, இவைகளின் வ்ருத்திக்குக் காரணம்;
அவற்றின் அபிமான தேவதைகளும் நீரே;
நீரே, அவற்றில் ஊடுருவி, அந்தர்யாமியாக இருக்கிறீர்;
நீர் முக்குணங்களாகவும், அவைகளால் கூட அறிய முடியாத
அதீத, ஆத்மானுபூதியாக இருக்கிறீர்.
நீர், அனந்த நாமம் உள்ளவர்;
சூக்ஷ்மமாகவும், கூடஸ்தராகவும் எல்லாவற்றுக்கும் காரணமாகி ,
ஆனால் நீர் மாறாதபடி இருக்கிறீர்;
விஹார ரஹிதர் நீர்;
ஸத்யஸ்ய ஸத்யர் நீர்;
எல்லாவற்றையும் அறியும் த்ரிகால க்ஜாநி நீர்;
நீர், எல்லாப் பொருள்களாகவும், சப்தங்களாகவும்,
அவற்றால் அறியப்படும் ரஹஸ்யமாகவும் இருக்கிறீர்;
பலவித நாம ரூபங்களாகவும் இருக்கிறீர்;
உமது க்ருபை இருந்தால்தான், உம்மை அறிய இயலும்;
பரமான அதீதர் ( சாஸ்த்ரங்களால் மட்டுமே அறியத்தக்கவராக இருக்கிறீர் )
நீர், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி தர்மங்களுக்கும் நிகமங்களுக்கும்
ஸர்வ ஸுப ஆசரணைகளுக்கும் ஆதாரம்;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.

ஹே…கிருஷ்ணரே……நீரே பலராமன்; நீரே வசுதேவரின் திருக்குமாரர்
; நீரே பிரத்யும்னர்; நீரே அநிருத்தர்; நீரே சாத்வதர்களுக்குப் பதி;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்;
நீர், உள்ளிருக்கும் குணங்களை வெளிப்படுத்தி, எல்லாவற்றையும் நடத்துபவர்;
நீரே, நான்கு வ்யூஹங்களான மனஸ், புத்தி, தர்க்கம், அஹங்காரம்;
நீர் குணங்களை அறியும்படி செய்கிறீர்;
குணங்களை வ்ருத்தி செய்கிறீர்;
நீரே, ஒன்றிலும் பற்று இல்லாதவர்
; நீரே, மூலப்ரக்ருதியையும் , மாறுதலையும் உண்டாக்குகிறீர்
; நீர், சர்வ வ்யாக்ருத மஹத் ஆதி தத்வத்துக்குக் காரணம்;
நீரே இந்த்ரியங்களை ஆளும் ஹ்ருஷீகேசன்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர், பர, அவர தத்வங்களை அறிந்தவர்;
எல்லாவற்றையும் உள் இருந்து நடத்துபவர்;
நியமன அத்யக்ஷர்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீரே விஸ்வம்;
நீரே விஸ்வாதீதன்;
நீரே அவற்றை நடத்தும் திருஷ்டி; உமக்குப் பல நமஸ்காரங்கள்

உமக்கு சமமாகவும், மேலாகவும் எவரும் இல்லாதவர் நீர்;
சர்வ சர்வேஸ்வரன்; சர்வ ஸ்வதந்த்ரன் நீர்;
நீரே கால சக்தி;
நீரே காலத்தைத் தாங்குபவர்;
இருக்கிற, இல்லாத வஸ்துக்களின் ஸ்வபாவத்தைக் காண்பித்துக் கொண்டு,
ஜீவன்களின் நிலைமைகளில் விளையாடுபவர்;
எல்லா உலகங்களிலும் உள்ள, ஸத்வ, ரஜஸ், தாமஸ, குணங்களுக்கு ஏற்ப,
பலவித சிருஷ்டிகளைச் செய்பவர் நீரே ;
சாதுக்களிடம் பிரியமானவர்;
உமக்கும், உமது பக்தர்களுக்கும் அபராதம் செய்பவர், உமக்குப்
ப்ரியமில்லாதவர்; அவர்களைத் தண்டிக்க அவதாரம் செய்கிறீர்;
எல்லாருக்கும் மஹா அபராதம் செய்த காளிங்கனையும்,
எங்களையும் மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறோம்.
உமது, மகிமைகளை அறியாத எங்களை, க்ஷமிக்கும்படி
வேண்டுகிறோம்.

ஹே….பகவானே……எங்கள் குற்றங்களை மன்னிப்பீராக ;
இந்த ஸர்ப்பம், பிராணனைவிடும் நிலையில் இருக்கிறது;
இவர், எங்களுடைய ப்ராண நாதர்;
இவரிடம் கருணை செய்யுங்கள்;
உயிருடன் விட்டு விடுங்கள்;
நாங்கள், என்ன செய்ய வேண்டும் என்று ஆக்ஜை இடுங்கள் ;
உங்கள் கட்டளைப்படி நடப்பதால், எல்லாப் பாபங்களும் ,
எல்லா ஆபத்துக்களும் நீங்குகிறது
என்று துதித்துப் பிரார்த்தித்தார்கள்.

ஹே….கிருஷ்ணா…..ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம், மேலும் சொன்னார்.
இப்படி மனஸ்ஸை உருக்கும் ஸ்துதிகளால்,
நாக பத்னிகள், உன்னைத் துதித்ததால்,
மூர்ச்சை அடைந்து, தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு,
உன் திருவடிகளால் மிதிக்கப்பட்ட வனான காளிங்கனை நீ,
உயிருடன் விடுவித்தாயாம்.
உன்னுடைய கடாக்ஷத்தால்,
, தன் இந்த்ரிய சுவாதீனத்தை அடைந்த காளிங்கன்,
கைகளைக் கூப்பி அஞ்சலி செய்து, உன்னிடம் ப்ரார்த்தித்தானாம்
அதை இப்போது சொல்கிறேன்.

ஹே….பகவானே….ஸ்வபாவமாகவே நாங்கள் துஷ்டர்கள்;
கோபக்குணம் உடையவர்கள்;
எங்களுடைய புத்தி , தேகத்தை ஆத்மாவாகக் காணும் ஸ்வபாவமுள்ளது;
கோபத்தையும், பொறாமையையும் இயற்கையாகக் கொண்டவர்கள்;
உமது மாயையை எங்களால் விலக்க இயலவில்லை;
அதில் மோஹப்பட்டு வீழ்ந்து நசித்து விட்டோம்;
நீர் சர்வக்ஜர்; ஜகத்துக்கு எல்லாம் ஈஸ்வரர்;
உமது அபிப்ராயத்தில் , எது அனுக்ரஹமோ அல்லது நிக்ரஹமோ ,
எதைச் செய்ய விரும்புகிறீரோ
அதைத் தெரியப் படுத்தப் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னானாம்.

இதற்கு, நீ சொன்ன பதில் என்ன தெரியுமா ?

ஸர்ப்பமே…..இந்த இடம் நீங்கள் வசிப்பதற்கு யோக்யதை இல்லை;
உன் பரிவாரத்துடன் புறப்பட்டு, காலதாமதம் செய்யாமல்
ஸமுத்ரத்துக்குப் போய்விடு;
மனைவி, புத்ர பந்துக்கள் சஹிதம் போய் விடு;
இந்த யமுனா நதி தீர்த்தம் பசுக்களுக்கும், மனுஷ்யர்களுக்கும்
உபயோகப்பட வேண்டும்

எவன், நான் சொன்னதை ஸ்மரிக்கிறானோ, எவன் இதை காலை, மாலை
இருவேளை யும் படித்துக் கீர்த்தனம் செய்கிறானோ,
அவனுக்கு எந்தஸர்ப்ப பயமும் இல்லை.
எவன், இந்த யமுனா நதி மடுவில் நான் ஜலக்ரீடை செய்த இடத்தில் தீர்த்தமாடி,
தேவரிஷி தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம் செய்கிறானோ
உபவாசம் இருந்து பூஜிக்கிறானோ, அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும்
விடுபடுகிறான். இது என் கட்டளை.
நீ, இங்கிருந்து, சமுத்ரத்தில் உள்ள, ரமணகம் என்கிற தீவை அடைவாயாக;
உன் ஹ்ருதயத்தில் என்னை பூஜிப்பாயாக; எந்தக் கருடனுடைய பயத்தால்,
தப்பிப்பதற்காக இந்த இடத்துக்கு வந்தாயோ,
அந்த பயம் இனி உனக்கு இல்லை;
இதன் காரணம், என் பாத ஸ்பரிசம் உன் தலைகளில் அடையாளமாக இருக்கின்றன;
ஆதலால், உனக்கு, கருடனிடமிருந்து பயமில்லை என்று அருள் புரிந்தாயாம்.

காளியன் உடனே உன்னைப் பூஜித்து, வணங்கினான்.
நாக பத்னிகள், சந்தோஷத்துடன் உன்னைப் பூஜித்தனர்.
காளியன், உனக்கு, திவ்ய வஸ்த்ரங்கள், ரத்னங்கள், உயர்ந்த தாமரை மாலை,
வாஸனை த்ரவ்யங்கள் இவைகளை சமர்ப்பித்து, உன்னைப் பல தடவை
பத்நிகளுடன் பரிக்ரமம் ( ப்ரதக்ஷிணம்) செய்து, புத்ர பந்துக்களுடன்
ரமணத் த்வீபத்துக்குச் சென்றான்.
அதே சமயத்தில் உன் கிருபையால், யமுனா ஜலத்தின் விஷம்
போக்கடிக்கப்பட்டு, அம்ருதத்துக்கு ஒப்பாக ஆயிற்று.

( ஹே….கிருஷ்ணா… இந்த சரிதத்தை, எத்தனை தடவை படித்தாலும்,
எத்தனை தடவை சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும்,
யார் படித்துக் கேட்டாலும், யார் சொல்லிக் கேட்டாலும்,
அலுப்பே ஏற்படுவதில்லை. அம்ருதத்தைப் பருகுவதைப் போல இருக்கிறது.
இதே நிலை அடியேனுக்கு நீடிக்குமாறு உன்னைப் பிரார்த்தித்து,
பல்லாயிரம் தடவை உன்னை நமஸ்கரிக்கிறேன் )

16 வது அத்யாயம் நிறைவு பெற்றது. ஸுபம்

2d7f7b8efa619e1a23990a514686b600krishna-dancing-prem-mandir-vrindavan

About the Author

Leave A Response