Dhasamaskantham–naveena paaniyil–Adyayam 21 to 24

Posted on Sep 8 2016 - 8:33am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் —நவீன பாணியில்—– அத்யாயம்—21
———————–
ஸ்ரீ கிருஷ்ணனின் வேணுகானம்
—————————–
பிருந்தாவனத்தை அடுத்துள்ள காடு , புஷ்பங்கள் நிறைந்து இருந்தது.
பூச் செடிகள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள், புஷ்பங்களிளிருந்து
தேனை உறிஞ்சி அருந்தின. பூமி முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல ,
பச்சைப்பசேல் என்று இருந்தது. மிகவும் ரம்யமான காக்ஷி.
இந்த வேளையில், நீ, பலராமனுடன் காட்டுக்குள் பிரவேசித்தாய்.
கிளிகள், மயில்கள், குயில்கள், குரங்குகள் என்று மரங்களில் கூட்டம்.
உனக்கு என்ன தோன்றிற்றோ , புல்லாங்குழலைக் கையில் எடுத்து,
கானம் இசைக்கத் தொடங்கினாய். இந்த வேணுகானம், காட்டில்
எங்கும் பரவியது; வ்ரஜபூமியில்—–பிருந்தாவனத்தில், வீடுகள்தோறும் பரவியது;
புஷ்பவதியாக இருந்த கோபிகைகளின் மனஸ்ஸை, வசப்படுத்தியது.
ஹே…..கிருஷ்ணா….நீ எப்படி அலங்கரித்துக் கொண்டிருந்தாய் என்பதை,
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொல்கிறார் . கர்ணீகாரப் பூக்கள்; மயில் தோகை;
இவற்றைத் தலையிலும், காதுகளிலும் வைத்து, அலங்கரித்துக் கொண்டிருந்தாய்.
இடையில், தங்க நிறப் பட்டுப் பீதாம்பரம்; திருமார்பில் வைஜயந்தீ மாலை;
விரல்களால், புல்லாங்குழலின் த்வாரங்களை மூடியும், திறந்தும், உன் திருப்பவள உதடு—–
அம்ருதமயமான உதடு படும்படி, புல்லாங்குழலை வைத்துக் கானம் செய்தாய்.
இந்த வேணுகானம், சர்வபூத மனோஹரமாக இருந்ததாம்.

(ஹே….கிருஷ்ணா…. ஸ்ரீ சுகர், இவைகளைச் சொல்லும்போது,
பரீக்ஷித் ராஜன் பக்கத்தில் அடியேனும் உட்கார்ந்து, உன் வேணுகான
இசை வெள்ளத்தை, அவர் வருணித்தபடியே கேட்க முடியவில்லையே
என்று தாபம் மேலிடுகிறது )

இப்போது, கோபிகைகள் அடைந்த நிலையைச் சொல்கிறார்.அதை உனக்குச் சொல்கிறேன்
“நம் கண்கள், காதுகள், போன்ற இந்த்ரியங்களின் பலனை—-பாக்யத்தை——இன்று அடைந்தோம்…..
ஹே, தோழிகளே…..ஒரு தடவை, ஜகன்மோகன கிருஷ்ண ரூபத்தைப் பார்த்தாலே ,
,மறுபடியும் மறுபடியும் பார்க்கத்தூண்டும் ; புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு,
கள்ளப் பார்வையுடன்—கடாக்ஷ வீக்ஷண்யத்துடன் ,எங்களைப் பார்த்துக் கொண்டு,
பசுக்களை மேய்ப்பதற்காக அவைகளை ஓட்டிக்கொண்டு,
கோபாலகர்களுடன் செல்லும் அந்த சித்திரம் —
படம்போல மனஸ் ஸில் பதிந்து விட்டிருக்கிறது.
எங்கள் மனம், அவரிடம், பேதலித்திப்போய் நிற்கிறது.
ஹே….சகிகளே….கிருஷ்ணன், சில சமயம், மாமரத்தின் இலைகளைப்
பட்டுப் பீதாம்பரத்துடன் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டு, தாமரை மலர்களை,
இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, குமுத மலர்களைக் காதுகளின் ஓரங்களில்
வைத்துக் கொண்டு, கழுத்தில் வைஜயந்தீ மாலையை அணிந்துகொண்டு,
பசுக்களைப் பராமரிக்கும் என்பதான நாடக மேடையிலே,
இவரும், பலராமனும் இரண்டு உத்தம நடிகர்களைப் போலக்
காக்ஷியளிக்கிறார்கள்.

ஹே….சகிகளே……மேலும் கேளுங்கள்……இந்தப் புல்லாங்குழல்
என்ன பாக்யம் செய்திருக்க வேண்டும் !
கிருஷ்ணனின் அதரச் சுவையை சுவாதீனமாக அனுபவிக்கிறதே !
இந்த அதரம், அதரத்தின் அம்ருதம் கோபிகைகளின் சொத்துக்கள் அல்லவா !
புல்லாங்குழல் அனுபவித்தது போக,
மீதி ரஸத்தைதானே நமக்குக் கொடுக்கிறது.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ,இந்த மூங்கிலின் மாதா பிதாவான
மூங்கில் புதர்கள், யமுனைநதிக்கரையில் இருந்து,
அதன் மயிர்க்கால்கள் ஆனந்தத்தால் நிற்க,
அதன் வளைந்த கிளைகளின் முனைகளில் இருக்கும் தண்ணீரில்
வளரும் தாமரைப் புஷ்பங்களைச் சுமந்துகொண்டு,
இந்த மூங்கில் மரங்கள் ஹ்ருதயம் விகசித்து,
ஆனந்த பாஷ்பங்களை உதிர்க்க,
எப்படி ஒரு சத் புத்ரன், பகவானுடைய கிருபையைப்
பெறும்போது, அந்த சத் புத்ரனின் தாய் தந்தையர் ஆனந்தத்தை அடைவார்களோ ,
அந்த ஆனந்தத்தை, இந்த மூங்கில் மரங்கள் அடைந்திருக்கின்றன.

ஹே, சகிகளே……வேணு கானத்தை கேட்டு, மயில்கள் ஆடுவதைப் பாருங்கள்!
பக்ஷிகள், கோவர்த்தன மலையில் உள்ள பிராணிகள் யாவும்,
எவ்வித சப்தமும் இன்றி, தங்களை மறந்து, இந்தக் கானத்திலே
உன்மத்தமாகிஇருப்பதைப் பாருங்கள் !
இந்தப் பெண்மான்கள், கிருஷ்ணனுடைய விசித்திர வேஷத்தைப் பார்த்தும்,
விசித்திர வேனுகானத்தைக் கேட்டும், தங்கள் பதிகளான ஆண் மான்கள்
அருகில் இருக்கும்போதே, தங்களுடைய கடைக்கண் பார்வையை—
ப்ரணய நோக்கை,கிருஷ்ணனிடம் செலுத்திப் பூஜை செய்கின்றன !

ஹே….சகிகளே……..ஈதென்ன ஆச்சர்யம் !
ஆகாயத்தைப் பாருங்கள்; அப்சரஸ்கள், கந்தர்வ ஸ்திரீகள் கூட்டம்,
கூட்டமாக இருக்கிறார்கள் !கிருஷ்ணனுடைய ரூபத்தையும்,
சீலத்தையும் பார்த்தும் , வேணுவின் கானத்தையும் கேட்டும் ,
மோஹித்துப் போய் மதன வேகத்தால், மனம் பறி கொடுத்தவர்களாக,
புஷ்பங்கள் தலையிலிருந்து நழுவி விழ, வளைகள் கழல,
தலைமயிர் கேசங்கள் அங்குமிங்கும் அலைபாய,
புடவைகள் நழுவுவது கூடத் தெரியாமல், மோஹித்து இருப்பது,
வினோத காக்ஷியாக இருக்கிறதே !

இந்தப் பசுக்களைப் பாருங்கள் ! கன்றுகளுக்குப் பால் கொடுக்க மறந்து,
வாயில் உள்ள புல்லைக்கூடத் தின்னாமல், அப்படியே வழியவிட்டு
தங்கள் காதுகளை நீட்டி, வேணுகானத்தைக் காதுகளால் பருகுகிறதே !
சித்திரங்கள்போல , அப்படியே ஆடாமல், அசையாமல் நிற்கின்றனவே !

ஹே….சகிகளே…. மரங்களில் அமர்ந்து இருக்கும் பக்ஷிகளைப் பாருங்கள் !
மரங்களின் அழகான கிளைகளையும், கொடிகளையும் பாருங்கள்!
இந்தப் பக்ஷிகள், பூர்வ ஜன்மத்தில் ரிஷிகளாக இருந்தவர்களோ!
பழங்களைத் தின்னாமல், தூங்காமல், இயற்கையான ஸ்வபாவமான,
கூவுதலையும் மறந்து, இமைகொட்டாமல் கிருஷ்ணனையே பார்த்து,
வேணுகானத்தைக் கேட்கின்றனவே !
( மரக்கிளை—-வேத சாகை. பழங்களைத் தின்னாமல், கூவாமல் இருப்பது –
பகவானிடம் ஏகாக்ர சிந்தனை )
இந்த மரங்களின் இலைகளைப் பாருங்கள் !கிருஷ்ண தர்சநம் என்கிற
காந்தத்தால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனை ஆசையுடன்
பார்ப்பதுபோல் உள்ளதே !

ஹே….சகிகளே….நதிகளைப் பார்த்தீர்களா !முகுந்த கீதம்—-அதன் ராகம்—-
மதுரமான ஆவர்த்தனம் –மனோபாவம், இவைகளால் ஈர்க்கப்பட்டு,
பிரவாகத்தின் வேகம் தடைப்பட்டு, அப்படியே அமைதியாக நிற்கிறதே !
கிருஷ்ணனுடைய திருவடிகளை ஸ்பர்சித்து, தன்னுடைய பிரவாகத்தில்
பூத்த தாமரைப் புஷ்பங்களை , அவனுடைய திருவடித் தாமரைகளில்
சமர்பித்து, அவனை அணைப்பதைப்போல, அலைகளையும்
ஜலத்தின் வலைகளையும் வாரி வாரி இறைக்கிறதே !

ஹே….சகிகளே….ஆகாயத்தில் இதோ மேகங்களைப் பாருங்கள் !
புஷ்பங்களை வர்ஷித்து, குடைபிடிப்பது போல, கிருஷ்ணனுக்கு
ஸேவை செய்கின்றனவே !

ஹே….சகிகளே….இந்த மலைஜாதிப் பெண்களைப் பாருங்கள் !
இவர்களிடம், கிருஷ்ணப் பிரேமை, பரிபூரணமாகத் தெரிகிறதே !
இவர்கள் முகங்களில் உள்ள குங்குமப்பூக்கள், கிருஷ்ண பக்தியின்
தகிப்பால் இளகி, அவர்கள் ஸ்தனங்களில் இந்தப் பூச்சுக்கள்
இறங்கி இருக்கின்றனவே !
கிருஷ்ண தர்சனத்துக்கு தாபப்படுகிறார்களே !
மதன வேகத்தால் துடிக்கிறார்களே !
பிருந்தாவன மேடுகளில் பதிந்துள்ள, ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளையும்,
அதில் உள்ள சிகப்பு வர்ணத்தையும், நினைத்து, நினைத்துப்
புளகாங்கிதம் அடைகிறார்களே ! அவர்களின் மார்புப் பூச்சுகள்;
ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிப் பூச்சுகள் ; இரண்டிலும் உள்ள சிகப்பு நிறம்
ஒத்து இருக்கிறதே !
இவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளை மனஸ்ஸில்
தரித்து இருக்கிறார்கள், ஆச்சர்யம் !

ஹே, சகிகளே !இந்த மலையைப் பாருங்கள் !கிருஷ்ண ப்ரேமையால்,
புதிய ஆனந்தத்தை அடைந்து, புதிய தளிர்களையும்,
புற்களையும் மேனியில் உண்டாக்கி, வாருங்கள்….வாருங்கள்….
.பசுக்கூட்டங்களுடன் வாருங்கள் ! கோபாலகர்களே, இங்கு வந்து
விளையாடுங்கள் ! நிறையப் புல்மேடுகள், நிறையப் பழங்கள்,
நிறைய தீர்த்தம் உள்ளன என்று சொல்லாமல் சொல்லி,
அழைப்பது போல் தெரிகிறதே !

ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம் மேலும் சொல்கிறார்;
இந்த கோபஸ்த்ரீகள், கிருஷ்ணனின் வேணுகானத்தைக் கேட்டு,
மாடுகளைக் கட்ட வேண்டிய கயிற்றை மறந்து, யாத்ரீகர்கள்மாதிரி,
உன்னுடைய பால்ய சேஷ்டிதங்களைத் தங்களுக்குள் மகிழ்ச்சியுடன்
பேசிக்கொண்டு, போகும் வழியில் , புளகாங்கிதம் அடைந்து நிற்கும்
மரங்களைப் பார்த்துக் கொண்டு, புல்லாங்குழல் இசையில் ,
சதா உன்னுடைய சிந்தனையில் ஒன்றிப்போனார்கள். அவர்கள் உடல்தான்
தனிப்பட்டு இருந்தது.

(ஹே….கிருஷ்ணா…. இப்படி எல்லாரையும் உன்மத்தமாக்கிய,
கிறங்கடித்த, தன்வயம் இழக்கச் செய்த, அந்த மனோஹர வேணுகானத்தை
எப்போது கேட்பேன் ?
அந்தக் க்ருஷ்ணப்ரேமிகள், மிகவும் பாக்யசாலிகள் !
அந்தப் பசுக்கள், கோபாலகர்கள், பக்ஷிகள், நதி, மலை யாவும்
பாக்யம் செய்தவை !
அவைகளுக்கு நமஸ்காரங்கள்.
எல்லாவற்றுக்கும் முக்யமாக, க்ருஷ்ணப்ரேமிகளுக்கு,
ஆயிரம் தடவை நமஸ்காரத்தை அர்ப்பணிக்கிறேன்.
அவர்களின் கிருபையால், அடியேனுக்கு உன்னிடம் பக்தி—-கிருஷ்ண பக்தி—
அனவரதமும் வளர்ந்து, அடியேனைக்
க்ருதார்த்தனாக ஆக்கவேண்டும் )

21 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்
——————————————————————————————————————————————–
.
தசமஸ்கந்தம்—நவீன பாணியில்—அத்யாயம் 22
———————-
கோபிகைகளின் காத்யாயினி வ்ரதம்——
ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் வஸ்த்ரங்களை அபகரித்தது—அனுக்ரஹித்தது.
——————————————————————————————————————————————

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.

ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம்செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….
ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
.உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,
மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்துவிட்டு,
யமுனை நதியில்இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.
இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய் .
அதே சமயம், வஸ்த்ரமில்லாமல் நீராடியது பாபமென்றும்,வ்ரதத்துக்குப்
பங்கமென்றும், அதைப்போக்கி அவர்களுக்கு வ்ரதபலனைக் கொடுக்கத் தீர்மானித்தாய்.
யமுனைக் கரைக்கு வந்து, அவர்களுடைய வஸ்த்ரங்களைஎல்லாம்
எடுத்துக் கொண்டு, கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி, அமர்ந்து,
“பெண்களே……நீங்கள் ஒருமாத காலம் வ்ரதம் அனுஷ்டித்துக் களைத்துப்
போய் இருக்கிறீர்கள்….ஒவ்வொருவராக இங்குவந்து, வஸ்த்ரங்களைப்
பெற்றுக் கொள்ளுங்கள்…..”என்றாய்.
கோபிகைகள், லஜ்ஜையினால், கழுத்தளவு ஜலத்தில் நின்றுகொண்டு ,
“ச்யாமசுந்தரா…..எங்களுக்குக் கெடுதல் செய்யாதே…
.நீ, நந்தகோபனின் ப்ரிய புத்ரன்….அவர் எங்கள் வணக்கத்துக்கு உரியவர்….
குளிரில் நடுங்கும் எங்களுக்கு வஸ்த்ரத்தைக்கொடு….
நாங்கள் உன் தாஸர்கள்…அடிமைகள்…
நீ சொல்லும் எல்லாக் கார்யங்களையும் செய்வோம் ..
.வஸ்த்ரங்களைக் கொடுத்துவிடு…..தராதுபோனால்,
நந்தகோபரிடம் சொல்வோம் ….’ என்றார்கள்.
அதற்கு, நீ, “எனக்குத் தாசர்கள்….சேவகர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்…
.இப்போது ஒவ்வொருவராக நதியிலிருந்து மேலே வந்து,
வஸ்த்ரங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள் ….” என்று சொன்னாய்.
கோபிகைகள், குளிரினால் நடுங்கிக்கொண்டு, யமுனை ஜலத்திலிருந்து
மேலே வந்து, வெட்கப் பட்டுக் கொண்டே, தலையைக் குனிந்து கொண்டு,
உன்னருகே வந்தார்கள்.
நீ, அவர்களிடம், “சுத்தமான வ்ரதம் இருந்தீர்கள்;
ஆனால், வஸ்த்ரமில்லாமல் தீர்த்தாமாடியது, தேவதைக்குச் செய்யும் அபசாரம்;
அந்தப் பாபம் போக, கைகளைக் கூப்பியபடி வந்து, வணங்கி,
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் ; அதனால், உங்கள் பாபம் கழியும் …” என்றாய்.
இப்படி, நீ சொன்னதும், கோபிகைகள் வ்ரதத்துக்குப் பங்கம் வந்தது
என்பதை உணர்ந்து, யாருக்காக வ்ரதம் இருந்தார்களோ , அந்தக் கிருஷ்ணனாகிய நீயே
நேரில் வந்து, பாபத்துக்குப் பிராயச் சித்தம் செய்வதால்,
வ்ரதம் பூர்த்தி ஆகிறது என்று மனம் சமாதானம் அடைந்து, தலையைக் குனிந்து,
கைகளைக் கூப்பி, உன்னிடமிருந்து வஸ்த்ரங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
வஸ்த்ரம் இல்லாததால் வெட்கம்; வஸ்த்ரம் கிடைத்ததால் சந்தோஷம் ;
கிருஷ்ணனே நேரில் வந்து அநுக்ரஹித்ததால் மனஸ் நிறைய கிருஷ்ணப் பிரேமை .
நீ , மேலும் கூறினாய். ” ஹே….சாத்விகளே…….உங்கள் சங்கல்பம், நிறைவேறும்….
.என்னிடம் உங்கள் மனஸ் அர்ப்பணிக்கப்பட்டதால், காமபோக ஆசைகள் விலகி,
என்னிடம் பக்தி செய்து, மீண்டும் மறுபிறவி இல்லாமல், என்னையே அடைவீர்கள் … ”
கோபிகைகள், லஜ்ஜையுடன், தங்கள் சங்கல்பம் நிறைவேறியது என்று பூரித்து,
உன்னுடைய திருவடிகளைத் த்யானம் செய்துகொண்டு,தங்கள் தங்கள் வீடுகளுக்குப்
போய்ச் சேர்ந்தார்கள்.
பிறகு, நீ, கோபர்கள் சூழ்ந்து வர, பிருந்தாவனத்திலிருந்து
பசுக்களை ஓட்டிக்கொண்டு, வெகு தூரம் சென்றாய். சூர்யனின் வெப்பம் கடுமையாக இருந்தது.
கோபர்கள் மரங்களின் நிழலில் ஒதுங்கிக் கொண்டே சென்றார்கள்.
மேலே, மரங்களின் கிளைகளும், இலைகளும் குடைகளைப் போலக் கவிந்து,
சூர்ய வெப்பம், உங்களை அதிகமாகத் தாக்காமல் தடுத்தது.

அப்போது, நீ, கோபர்களிடமும், பலராமனிடமும் பேசினாய்.
” இந்த மரங்கள் பிறருக்காக வாழ்கின்றன; காற்று,மழை, வெய்யில், பனி,
இவைகளைச் சகித்துக் கொண்டு, தங்களை அண்டியவர்களைக் காக்கின்றன ;
பசு,பக்ஷி, ராக்ஷசன், யக்ஷன், மிருகம் மனிதன் எல்லாரையும்
இந்த மரங்கள் காக்கின்றன; இலை, பழம், நிழல், அடிமரம்,
( சந்தனம், அகில் போன்றவை )வாஸனை, பால், பஸ்மம், இப்படிப் பலப்பலவாகக்
கொடுத்து, மனிதர்களின் ஆசையைப் பூர்த்தி செய்கிறது;
இதுதான் வாழ்க்கையின் ஸாரம்—-ஜன்ம சாபல்யம் —திரேகம் எடுத்தவை
பிறருக்காக வாழ்ந்து, தன்னை அழித்துக் கொண்டாவது,
பிறருக்கு உதவுவது உயர்ந்த சுப லக்ஷணம் .
தன்னுடைய ஆயுஸ், பணம், வாழ்க்கை ஜீவனம், புத்தி, வாக்கு, ப்ராணன்
இவைகள் பிறருக்கு உபயோகப்பட்டால், அதுவே ஸ்ரேயஸ்….”
இப்படிப் பேசிக்கொண்டே, நீ, பச்சைப் பசேலென்ற புல்வெளிப்
பிரதேசத்தை,அடைந்தாய். கோபர்கள் , யமுனையில்இறங்கி ஜலத்தை
அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அவர்களுக்குப் பசி. உன்னையும்,
பலராமனையும் அணுகி, பசிக்கிறது; ஆகாரம் வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
22 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்.

—————————————————————————————————————————

— தசமஸ்கந்தம் நவீன பாணியில் —– 23 வது அத்யாயம்
—————————
யக்ஜ பத்நிகளுக்கு அருளியது
————————————-
கோபர்களால், பசி என்றும், ஆகாரம் வேண்டும் என்றும்
பிரார்த்திக்கப் பட்டதும், நீ, ஆதுரத்துடன்அவற்றைக் கேட்டு,
கோபர்களிடம் பேசினாய்.
ஹே….மித்ரர்களே…… ப்ரஹ்மவாதிகள்…….ப்ராம்மணர்கள்…..
.ஸ்வர்க்கம் செல்லவேண்டும் என்கிற எண்ணத்துடன், “அங்கிரஸம் ”
என்கிற “ஸத்ர ” யாகத்தை, அதோ தெரியும் பர்ணசாலையில்…….யக்ஜ பூமியில்,
செய்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள், அவர்களிடம்போய்,
நானும், பலராமனும் அனுப்பியதாகச் சொல்லி, “அன்னம் கொடுங்கள் ”
என்று கேளுங்கள் என்று சொன்னாய்.
கோபர்கள், அவ்விதமே செய்கிறோம் என்று உன்னிடம் சொல்லி,
யக்ஜவாடிகைக்குச் சென்று, பிராம்மணர்களை அஞ்சலி செய்து,
பூமியில் விழுந்து எழுந்திருந்து, “ஹே……பூதேவர்களே…..நாங்கள் பசுமாடுகளை
மேய்த்துக் களைத்துப்போய் இருக்கிறோம் எங்களுக்குச் சரியான பசி.
பலராமனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் சரியான பசி.
அவர்களுடைய கட்டளைப்படி, உங்களுக்கு அவர்கள்மீது விசுவாசமும்
ச்ரத்தையும் இருக்கிறதென்றால், சாப்பிடுவதற்கு அன்னம் தந்து உதவுங்கள்
நீங்கள் தர்மம் அறிந்தவர்கள். யாகதீக்ஷையுடன், க்ருஹஸ்தன் ஹோமம் செய்யும்
அன்னத்தைச் சாப்பிடுபவர்களைப் போல , நீங்கள் கொடுக்கும் அன்னம்
தோஷத்தை ஏற்படுத்தாது. இது பகவத் ஆக்ஜை…. என்றார்கள்.

ஆனால்…..ஹே…கிருஷ்ணா….அந்தப் ப்ராம்மணர்கள்,
தங்களைப் பெரும் பண்டிதர்கள் என்று நினைத்து, ஸ்வர்க்கம் செல்வதிலேயே
ஆசையாக, கோபர்களுக்கு அன்னத்தைக் கொடுக்கவில்லை.
அந்தப் பண்டிதப் ப்ராம்மணர்கள்—–மூடர்கள். உன் நிஜ ஸ்வரூபத்தை அறியவில்லை.
உன்னை, சாதாரண மனுஷ்யக் குழந்தையாக நினைத்தார்கள்.
க்ருஷ்ணனான , நீயே—-பகவான் விஷ்ணு.;
நீயே யக்ஜ வபு; நீயே தேசம்; நீயே காலம்;
நீயே பூஜா த்ரவ்யம்; நீயே மந்த்ரம்; நீயே தந்த்ரம்;
நீயே ருத்விக்குகள் உச்சரிக்கும் மந்த்ரம்;
நீயே, ஹவிஸ் செய்யும் பொருள்; எந்தத் தேவதையைக்
குறித்து யாகம் செய்யப்படுகிறதோ, அந்தத் தேவதையின் அந்தராத்மா நீதான்;
நீயே, அந்த யாகத்தை அங்கீகரிக்கிறாய்; நீயே, அதற்கு உரிய பலனைக்
கொடுக்கிறாய்; நீயே ருத்விக்குகள்; நீயே, யாக தீக்ஷத யஜமானன்;
நீயே தர்மம்; நீயே யக்ஜமயம் ; நீயே பரப்ரஹ்மம்; நீயே, பூமியில் ஸ்ரீ கிருஷ்ணனாக
அவதரித்து இருக்கிறாய்; இவையெல்லாம் தெரியாமல், உன்னை,
மனுஷ்ய சிசுவாக நினைத்து, தேக, ஆத்ம, விவேகமில்லாத அந்தப் பண்டிதர்கள்,
உன்னை உபேக்ஷித்தனர். அன்னம் தருகிறேன் என்றோ,
தரமுடியாது என்றோ எந்தப் பதிலையும் கூறாமல் உதாசீனப் படுத்தினர்.
கோபர்கள், நிராசையுடன், ஏமாற்றமடைந்து,
உங்களிடம் வந்து நடந்ததைச் சொன்னார்கள்.

நீ சிரித்துக்கொண்டாய். கோபர்களைப் பார்த்து, மறுபடியும் கூறினாய்.
கோபர்களே…..என்னிடம் அன்பைச் செலுத்தி, மனஸ்ஸை அர்பணித்துள்ள
யக்ஜபத்னி களிடம் போய், நானும், சங்கர்ஷணனும் வந்திருக்கிறோம் என்று
சொல்லி, அவர்களிடம் கேளுங்கள்……
கோபர்கள், திரும்பவும் யக்ஜசாலைக்கு வந்தார்கள்;
யக்ஜபத்நிகளைப் பார்த்தார்கள்
“யக்ஜம்செய்யும் ரிஷிகளின் பத்நிகளே…..உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்….
.நாங்கள் பசுக்களை மேய்ப்பவர்கள்; பசுக்களை மேய்த்துக்கொண்டு,
நாங்களும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வளவு தூரம் வந்து விட்டோம்;
எங்களுக்குப் பசிக்கிறது; ஸ்ரீ கிருஷ்ணனாலும், பலராமனாலும் அனுப்பப்பட்டு,
உங்களிடம் அன்னத்தை யாசித்து வந்திருக்கிறோம் ……என்றார்கள்

இந்த வார்த்தைகளைக் கேட்டார்களோ இல்லையோ, அடுத்த க்ஷணம்,
ரிஷிபத்னிகள், உன்னுடைய கதாம்ருதத்தால் மோஹிக்கப்பட்ட
அந்த உத்தம ஸ்திரீகள்,
ருசியானவை,
சூடானவையான நான்கு விதமான அன்னங்கள்,
பக்ஷணங்கள், ஆகியவைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
யாகம் செய்யும் ரிஷிகள் அவர்களைத் தடுத்தார்கள். பந்துக்கள் தடுத்தார்கள்;
சஹோதரர்கள் தடுத்தார்கள் . இப்படிப் பலரும் தடுத்தும்,
ரிஷிபத்னிகள் அவர்களை லக்ஷ்யம் செய்யவில்லை.
உன் கதாம்ருதத்தைப் பருகி, மனசைப் பறி கொடுத்து இருந்த அவர்கள்,
கோபர்கள் பின்னாலேயே அன்னம், பக்ஷணங்களைச் சுமந்துகொண்டு,
ஓடோடி நீ இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்;
அப்போது, நீ, எப்படி இருந்தாய் தெரியுமா !

ச்யாமள நிறம்; தங்கத்தால் ஆன பீதாம்பரத்தை
உடுத்திக் கொண்டிருந்தாய்; மார்பில் வனமாலை; தலையில் மயில் தோகை;
மற்றும் பலப்பல புஷ்பங்கள்; இலைகள்; காது ஓரங்களில் உத்பல புஷ்பங்கள்;
தாமரை வதனம்; அதில் புன்சிரிப்பு; புன்சிரிப்புடன் அவர்களைக் கடாக்ஷித்தாய்.
ஹே….கிருஷ்ணா…
அந்தக் கடாக்ஷ வீக்ஷிண்யத்தாலே ,ரிஷிபத்நிகளின் நெஞ்சம் நிரம்பியது.

ஹே….கிருஷ்ணா… நீ சர்வக்ஜன்….கணவன்மார்கள் தடுத்தபோதும்,
உன்னிடம் உள்ள பக்தியால் உன்னைப் பார்க்கும் ஆசையில்
ஓடோடி வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சொன்னாய்.

உங்களுக்கு நல்வரவு; நீங்கள் என் ஆத்மப் பிரியர்கள்;
உங்களது பிராணன், மனஸ், புத்தி, பதி, தனம் எல்லாவற்றையும்
என்னிடம் அர்ப்பணித்தீர்கள்;
நான் மிகவும் திருப்தி அடைந்தேன்; யக்ஜசாலைக்குத்திரும்புங்கள்;
உங்கள் பதிகள் யக்ஜத்தை நிறைவேற்றட்டும் .

அதற்கு , ரிஷிபத்னிகள், ஹே….பரமாத்மா…..நாங்கள்,
வெகு ஸ்ரமத்துடன் துளசி தாசர்களாக ஆகி இருக்கிறோம்;
உமது பாத பத்மங்களை அடைந்து, அங்குள்ள துளசியை ,
எங்கள் சிரஸ்ஸில் சூட்டிக்கொண்டிருக்கிறோம்;
அதை, உமது கால்களால் உதைத்ததுபோல் இருக்கிறது, உமது பேச்சு;
பந்துக்கள், மித்ரர்கள், பதிகள் இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு,
நீயே கதி என்று வந்து விட்டோம்; இப்போது திரும்பிப்போனால்,
பிதாக்களோ, மாதாக்களோ, பந்துக்களோ ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;
உமது பாதங்களில் விழுந்து சரண் அடைந்த எங்களைக் காப்பாற்று;
உம்மைத்தவிர வேறு கதி இல்லை……..என்றார்கள்.

ஹே….ரிஷிபத்நிகளே…….உங்களுடைய கணவன்மார்களோ,
பந்துக்களோ, மேலே ஆகாசத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தேவர்களோ,
எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள்;
என்னுடன் உங்கள் ஆத்மாவை ஐக்கியப் படுத்தினீர்கள்;
என் பாதஸ்பர்சம் பெற்றதால், உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை
என்று சொல்லி ஆசீர்வதித்தாய்.

ரிஷிபத்னிகள் ,திருப்தி அடைந்து, யாகசாலைக்குத் திரும்பினார்கள்.
ரிஷிகள் தங்கள் யாகத்தை நிறைவு செய்தார்கள். நீயும், பலராமனும், கோபர்களும் ,
ரிஷிபத்னிகள் கொண்டுவந்து கொடுத்த வைகளைச் சாப்பிட்டீர்கள்.
இப்போது, ரிஷிகளுக்கு, மனவருத்தம் ஏற்பட்டது.
பகவான் கட்டளையால், நம்மிடம் வந்த கோபர்களை உல்லங்கனம் செய்துவிட்டோமே….
ஆனால், இந்த ஸ்திரீகள் பக்தியினால், பகவானைத் தரிசித்து விட்டார்களே……
.நமது ஆத்மா நாசமடைந்து விட்டதே…..வேதங்களை ஓதி என்ன பயன்…
பிராம்மணப்பிறவி, யாகம் எல்லாம் வீணாகி விட்டதே…..
இது பகவான் செய்யும் மாயை என்று அறியாமல் இருந்து விட்டோமே…
.இந்த ஸ்த்ரீகளுக்கு,நம்மைப் போல எந்த சம்ஸ்காரமும் இல்லை;
வித்யை இல்லை; ஆனால், விலை மதிக்க முடியாத கிருஷ்ண பக்தி இருக்கிறது;
அது, நம்மிடம் இல்லாமல் போய் விட்டது…நாம், படித்தும் மூடர்கள்….
நல்லது,கெட்டது தெரியவில்லை…படிப்பு இருந்து என்ன பயன்..
நமது பக்தியினால், பகவானுக்கு என்ன லாபம் ? நமக்கல்லவா லாபம் !
அதை விட்டு விட்டோமே…பசிப்பதற்கு அன்னம் வேண்டுமென்று
பசிப்பவனைப்போல நடித்த , பகவானை
ஏமாற்றிவிட்டோமே….நமக்கு மோக்ஷம் கொடுக்கும் பிரபுவுக்கு,
அன்னம் கொடுக்காமல் இருந்து விட்டோமே…..
நமக்கு, ஹரி இல்லால், வேறு பகவான்இல்லை…
.குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்திப்போம்…..
ஸ்ரீ மஹா லக்ஷ்மி, பகவத் பக்தியைக் கொடுப்பவள்….புருஷகார பூதை….
அவளையும் பூஜிப்போம்…ஸ்ரீ கிருஷ்ணனே விஷ்ணு…..
அவரே, யோகிகளுக்கெல்லாம் மேலானவர்…
அவரே, ஸ்ரீ கிருஷ்ணனாக ,யது குலத்தில் அவதரித்து
இருக்கிறார் என்பதை அறியவில்லையே……
இந்தப் பேரறிவு, பத்நிகளால் அல்லவா வந்தது !
அவர்களைப் பத்நிகளாக அடைய நாம் பாக்யம் பெற்றவர்கள்…
அவர்களுடைய புத்தி, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பூரணமாக
அர்ப்பணிக்கப் பட்டதைப்போல நாமும் அர்ப்பணிப்போம்…..
எங்கள் குற்றங்களை மன்னியுங்கள் என்று பிரார்த்திப்போம்…
.ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை—–
ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்து இருப்பவனை நமஸ்கரிக்கிறோம்…
என்றார்கள்.

( ஹே….கிருஷ்ணா……அடியேனுக்குப் பண்டிதர்களான
பிராம்மணர்கள் வேண்டாம்…..வேதாந்திகள் வேண்டாம்…..யக்ஜ பத்நிகளை
குருவாக வரித்து, உன்னைச் சரண் அடைகிறேன்….
.இதற்கு, ஸ்ரீ சுகரும் பரீக்ஷித் ராஜனும் சாக்ஷி )

இப்படி, ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரித்த பிராம்மணர்கள்,
உனக்குச் செய்த அவமானத்தாலும், கம்சனிடம் உள்ள பயத்தாலும்
, யாகசாலையை விட்டு வெளியே வரவில்லை.
அது அவர்கள் துர்பாக்கியம்

23 வது அத்யாயம் நிறை வடைந்தது. ஸு ப ம்
—————————————————————————————

தசமஸ்கந்தம் நவீன பாணியில்——அத்யாயம் 24
——————-
கோவர்த்தன கிரிக்கு பூஜை
—————————–
இப்படியாக, கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கள் யாவரும்
நீயும், பலராமனும் செய்யும் லீலைகளை அனுபவித்துக்கொண்டு,சந்தோஷமாக
இருந்தார்கள். அப்போது ஒரு நாள்…….

இந்திரனைக் குறித்து யாகம் செய்வதற்காக, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இதை, நீ பார்த்தாய். இந்த யாகம் , யாருக்காக, எதற்காக என்று தெரிந்திருந்தும்,
(நீ பரமாத்மா அல்லவா ) நீ, நந்தகோபனைக் கேட்டாய்; பெரியவர்களைக் கேட்டாய்.
“கோலாகலமாக ஏற்பாடுகள் செய்கிறீர்களே,
யாருக்காக, எந்த பலனை உத்தேசித்து இப்படி ஏற்பாடுகள் செய்கிறீர்கள்?
பண்டிதர்கள், தீர்க்கமாக ஆலோசனை செய்து, கர்மாவைத் தொடங்கி
அதைச் செய்து, ஸித்தியை அடைகிறார்கள்;
அவிவேகிகள், ஆலோசனை செய்யாமல் கர்மாக்களைச் செய்தால்,
அந்தப் பலனை அடைவதில்லை;
ஆதலால், இந்தக் கோலாகலம் எதற்காக ….? ” என்று கேட்டாய்.

இதற்கு, நந்தகோபன் பதில் சொன்னார். “குமாரா…..நானும் மற்றவர்களும்,
இந்திரனை…..மேகங்களுக்கு அதிபதியாக இருப்பவனை….
.பூஜை செய்யப் போகிறோம்; இந்திரன், மழைக்குத் தேவதை;
மேகங்கள் அவனிடமிருந்து உண்டாகின்றன;
அவன் அருளால், மழை வர்ஷிக்கிறது; அதனால், கோக்கள், என்று
எல்லாருக்கும் சுபிக்ஷம் ஏற்படுகிறது;
தொன்றுதொட்டு, இதை நடத்தி வருகிறோம் ” என்றார்.

அதற்கு, நீ, இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக
மனத்துக்குள் தீர்மானித்து, பதில் சொன்னாய்.
” பிதாவே….ஒரு ஜீவன் கர்மாவினால் பிறக்கிறான்;
சுகம், துக்கம், பயம் எல்லாம் கர்மாவினால் ஏற்படுகிறது;
கர்மாவினாலேயே முடிவை அடைகிறான்;
பகவான், அந்தந்தக் கர்மாக்களுக்கு , அதற்கு உரிய பலனை அளிக்கிறார்;
அதனால், அவர்தான் பூஜிக்கப்படவேண்டும்;
இந்திரன், பகவான் அல்ல; கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்;
கர்மாவுக்குக் குரு பகவான்; இந்திரன் அல்ல;
பகவானை விட்டு விட்டு, அந்நிய தேவதையைப் பூஜிபபது சரி அல்ல;
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களே
ஸ்திதி, உற்பத்தி, நாசம் ஆகிய மூன்றுக்கும் காரணம்;
ரஜோ குணத்தால், உலகம் பலவிதமாக விரிவடைகிறது;
உற்பத்திக்குக் காரணம், ரஜஸ்;
இதனால், மேகங்கள் வர்ஷிக்கின்றன; வர்ஷிக்கும் ஜலத்தால்
எல்லாப் பிராணிகளும் சந்தோஷம் அடைகின்றன;
இதில், இந்திரன் செய்வது என்ன இருக்கிறது ?
நாம், நித்யம் வனத்தில் சஞ்சரித்து, காடுகளிலும், மலையிலும்
பசுக்களை ஓட்டிக்கொண்டு திரிகிறோம்;
ஆகவே, ஆராதிக்கப்பட வேண்டியவை பசுக்கள், பிராம்மணர்கள்,
இதோ இந்தக் கோவர்த்தன மலை;
இப்போது சேகரித்து வைத்துள்ள த்ரவ்யங்களால், இந்த மூன்றையும் பூஜிப்போம்;
இந்திரனுக்கு வேண்டாம்; பிதாவே, நீங்கள் யாவரும் சம்மதித்தால்,
இப்படியே செய்வோம்; இதனால், பசுக்கள், பிராம்மணர்கள், கிரி மூவரும்
சந்தோஷித்து, நமது இஷ்டங்களைப் பூர்த்தி செய்வார்கள்;
இது என் அபிப்ராயம் ” என்று சொன்னாய்.

உன்னுடைய, இந்த யோசனையை, நந்தகோபரும், மற்ற கோபர்களும் கேட்டு,
“நல்லது, நல்லது….” என்று சொல்லி, பசுக்கள், பிராம்மணர்கள், கோவர்த்தனகிரி ……..
பூஜையை ஆரம்பித்தார்கள்.
இந்திரனுக்குச் செய்யவேண்டிய யாகத்துக்காக சேமிக்கப்பட்ட த்ரவ்யங்கள்
இவைகளுக்கு உபயோகப்பட்டன. பிராம்மணர்கள், சந்தோஷித்து, ஆசீர்வாதம் செய்தார்கள்.
நீ, பெரிய ரூபமாக எடுத்து, நானே கோவர்த்தன கிரி என்று சொல்லி,
எல்லாவற்றையும் சாப்பிட்டாய். கோபர்கள் நமஸ்கரித்தனர்.
அவர்களுடன் சேர்ந்து, நீயும் பூஜித்து, “பெரிய ரூபத்தைப் பாருங்கள்….நாம் கொடுக்கும்
பூஜை த்ரவ்யங்களை ஏற்று, நம்மை, இந்தக் கோவர்த்தன கிரி அனுக்ரஹிக்கிறது ;
எவர்கள் தன்னை மரியாதை செய்யவில்லையோ அவர்களைக் கொல்கிறது;
நம்முடைய நலன், பசுக்களுடைய நலம் இவற்றுக்காக கோவர்த்தன கிரியைப்
பூஜித்து வணங்குவோம் …..” என்றாய். எல்லோரும், அப்படியே கிரியைப் பூஜித்தனர்
. பிறகு, அவரவர் வீடு திரும்பினர்.

24 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்

Sarvam Sri Hayagreeva Preeyatham-
Sarvam Sree Hayagreeva preeyathaam

Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkaryakrishna-images-7flute

About the Author

Leave A Response