Dhasamaskantham–naveena paaniyil–adayayam 29 &30

Posted on Sep 9 2016 - 9:59am by srikainkaryasriadmin

தசமஸ்கந்தம் நவீன பாணியில்—-அத்யாயம் 29&30
—————
சரத்காலம்—ஸ்ரீ கிருஷ்ணனின் வேணுகானம்—
கோபிகைகள் தங்களை மறந்து ,ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஓடுதல்
——————————————————————————————————

இந்த அத்யாயத்தில் இருந்து 33 வது அத்யாயம் முடிய
மிக ஆச்சர்யமான”” ராஸ க்ரீடை”” என்கிற
ராதா பஞ்சாத்யாய விபவங்களைப்
பார்க்கப் போகிறோம்

கோபிகைகள் காத்யாயினி வ்ரதத்தை அனுஷ்டித்ததையும் ,
அப்போது நீ அவர்களுக்கு வாக்குக் கொடுத்ததையும்
இப்போது நீ நினைத்துப் பார்த்தாய். (22வது அத்யாயத்தைப் பார்க்க )
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் பார்த்துக்
காத்து இருந்தாய். அப்படிப்பட்ட காலமான சரத் காலமும் இப்போது வந்தது.

ராத்திரி நேரம்; மல்லிகைப் புஷ்பங்கள் ,மணம் பரப்பிக் கொண்டு இருந்தன;
குமுதமலர்கள் பூத்துக் குலுங்கின; விருந்தாவனம் சந்திர கிரணங்களால் பிரகாசித்தது;
காடு முழுவதும் கோலாஹலம்; எங்கும் பார்க்கப் பார்க்க மனோஹரம்; அதிரஞ்சிதம்;

ஜகன் மோகனனான நீ, உன் புல்லாங்குழலை எடுத்தாய்;
வேணுகானம் செய்யத் தொடங்கினாய்;
வ்ரஜ சுந்தரிகளான கோபிகைகள், வேணுகானத்தைக் கேட்டார்கள்;
வேணுகானம் அவர்களை இழுத்தது;
உன்னால் ஆகர்ஷிக்கப்பட்டனர்;
மனத்தை உன்னிடம்அர்ப்பணித்தனர்;
நீ இருக்குமிடத்துக்கு ஓடி வந்தனர்;
எப்படி ஸதி ஸ்திரீகள் , தங்கள் காந்தர்களிடம் ஓடி வருவார்களோ ,
அப்படி ஓடி வந்தனர்; காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் ,மகிழ்ச்சியால் ஆடின;
பிரகாசித்தன; அவர்களது ஆசையின் தீவிரம்அன்யோன்ய திருஷ்டிக்கு —–
பார்வைக்கு அப்பால் இருந்தது;

உலகத்தையே மயக்கும் உன் வேணு கானத்தைக் கேட்ட,கோபிகைகள்
நிலைமையை ,ஸ்ரீ சுகர் சொல்கிறார்; அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்

சிலர் பசுக்களைக் கறந்து கொண்டு இருந்தனர்;
பால் பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தனர்;
சிலர் , பாலை அடுப்பில் காய்ச்சிக் கொண்டு இருந்தனர்;
அதை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
சிலர் பாயசத்தை அடுப்பில் வைத்து, இருந்தனர்
.இந்த வேணுகானம் கேட்டதும் ,பாயசத்தை மறந்து ஓடி வந்தனர்;
சிலர், குழந்தைகளுக்கு வேலை செய்துகொண்டு இருந்தனர் ;
அவற்றை அப்ப டியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
கணவர்களுக்கு, உணவு இவற்றைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள்
அந்த சுஸ்ருக்ஷையை அப்படியே நிறுத்தி ,உன்னிடம் ஓடி வந்தனர்;
சிலர் வஸ்த்ரங்களைத்தவறுதலாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
சிலர் ஆபரணங்களைத் தாறுமாறாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
கண்களுக்கு அஞ்சனம் இட்டுக் கொண்டு இருந்தவர்கள்
அதை அப்படியே நிறுத்தி விட்டு ஓடி வந்தனர்;
இன்னும் சிலர், பந்துக்கள் தடுத்ததையும் மீறி ஓடி வந்தனர்;
கணவர் தடுத்தபோதும் ,உன்னிடம் மனத்தைப் பறி கொடுத்தவர்களாய்,
தடுத்ததையும் திரஸ்கரித்து விட்டு, உன்னிடம் ஓடி வந்தனர்;

வீட்டை விட்டு, வெளியே வருவதற்கு ,சந்தர்ப்பம் கிடைக்காத சிலர்,
கண்களை மூடிக் கொண்டு அங்கேயே உன் த்யானத்தில் ஈடுபட்டனர்;
இன்னும் சிலர், உன்னுடைய விரஹ தாபத்தால் கொளுத்தப்பட்டு,
அதனால் அவர்கள் பாபங்களும் கொளுத்தப்பட்டு,
த்யானத்தில் உன்னை அணுகி ஆனந்தம் அனுபவித்து,
கர்மபந்தங்களை அறுத்து எறிந்தார்கள்;
இன்னும் சிலர், தங்கள் புத்தியால் உன்னை ஜார புருஷனாகவே
வரித்து, குணமயமான தேகத்தை விட்டவர்களாக ஆகி,
கர்மபந்தங்கள் விலக, சிந்தனையால் உன்னுடன் ஒன்றினார்கள்;

இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராஜா பரீக்ஷித்,
ஸ்ரீ சுகரைக் கேட்டான்

கோபிகைகள், ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா என்று தெரிந்துகொள்ளவில்லை,
அவர்கள் எப்படி சம்சாரகதியை ஒழித்தார்கள் ?
அவர்களுக்கு இத்தகைய கிருஷ்ண பக்தி எப்படி வந்தது ?

ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்.
எதற்கும் தீர்க்க சிந்தனை வேண்டும்; அளவிடமுடியாத மகிமைகளைப் பெற்ற
ஸ்ரீ கிருஷ்ணனை சதா சர்வகாலமும் சிந்தனை செய்தார்கள்;
பிரேமபாவம் ,இவர்களுக்குத் தலை தூக்கி இருந்தது;
எந்த பாவத்துடன் யார் அவரை பூஜிக்கிறார்களோ ,
அவர்கள் சம்சாரத்திலிருந்து விடுபடுகிறார்கள்;
ஸ்ரீ க்ருஷ்ணனை சினேகிதனாக சதா சர்வகாலமும் சிந்தனை செய்பவருக்கு
அவன் சிநேகிதன்;
தந்தையாகச் சிந்தித்தால் தந்தை;
இங்கு இவர்கள் ஆயர்குலப் பெண்கள்; பிரேமை முழுவதையும் பொழிந்து
புருஷனாக சிந்தித்தார்கள்;

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணனை எப்போதும் வெறுத்து,
த்வேஷ புத்தியுடன் வைதுகொண்டே இருந்தான் ;அப்படி வைதபோதிலும்,
அவருடன் மனத்தால் ஒன்றிப்போனான் இதிலிருந்தே உனக்கு உன் கேள்விக்கு
விடை கிடைக்கும் என்றார்

உன் முன்பாக வந்து நின்ற கோபிகைகளைப் பார்த்து ,
அவர்கள் இன்னும் மோஹித்துப் போகும்படி நீ அவர்களுடன் பேசினாய்.

ஹே பெண்களே, உங்களுக்கு ஸ்வாகதம்
இப்படி இரவு நேரத்தில் பயமின்றி இங்கு என் வந்தீர்கள் ?
வ்ருந்தாவனத்தில் ஏதாவது சங்கடமா ?
பயங்கரமான மிருகங்கள் உலாவும் இரவு வேளையில்
இப்படி இந்த இடத்துக்கு வரலாமா ? உங்கள் பெற்றோர், உறவினர்,
கணவர் ,பிள்ளைகள் உங்களைக்காணாமல் பரிதவிப்பார்கள்;
உங்களைத் தேடுவார்கள்; உடனே அவரவர் வீடுகளுக்குத் திரும்புங்கள்;
குழந்தைகளைப் போஷியுங்கள் ; மாதா பிதா பர்த்தா இவர்களுக்கு
சிசுருக்ஷை செய்யுங்கள்;
ஒரு வேளை என்மீதுள்ள ப்ரேமையால் இங்கு வந்து இருந்தால்,
அது சரி என்றாலும், பர்த்தாவுக்கு சிசுருக்ஷை செய்வது பரம தர்மம்;
ஸ்திரீகளுக்குப் பிற புருஷர்களுடன் சேர்வது மஹா பாவம்;
என்னிடம் பிரேமை செலுத்துவது என்பது, என் அருகில் இருந்துகொண்டு,
என் இஷ்டப்படி நடந்து கொள்வது என்பதல்ல ;
என் கதைகளைக் கேட்பது, என்னைத் தியானிப்பது,
என்னைக் கீர்த்தனம் செய்வது இவையே போதுமானவை;
உடல் சேர்க்கை தேவையே இல்லை;
அதனால், உடனே உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள்
என்று சொன்னாய்.

ஸ்ரீ சுகர் ,கோபிகைகளின் நிலைமையை கூறுகிறார்.

அப்ரியமான வார்த்தைகளை, கோபிகைகள் கேட்டார்கள்;
மனவியாஹூலம் அடைந்தார்கள்; முகம் தரையை நோக்க,
வாய் உலர, கால் நகங்களால் தரையைக் கீறினார்கள்;
மௌனமாக நின்றார்கள்; கண்களிலிருந்து ,கண்ணீர் தாரை தாரையாகப்
பெருக்கெடுத்து மார்பகங்களை நனைத்தது;
கண்மைகள் அழிந்தன;
மானம், ஐஸ்வர்யம், யௌவனம் ,அழகு, பதி, புத்திர ,பந்துக்கள் எல்லாரையும்
க்ருஷ்ணனுக்காகவே பறிகொடுத்தவர்கள் ,தீனமாக அழுதார்கள்;
உன்னை நிமிர்ந்து பார்த்தார்கள்; தொண்டை அடைக்க, தடுமாறும் பேச்சுக்களால்
,உன்னிடம் உள்ள அன்பு குறையாமல் சிறிது கோபத்துடன் உனக்குப் பதில் சொன்னார்கள்

ஹே—பிரபோ—-நாங்கள், சர்வ விஷய சுகங்களையும், மானம், ஐஸ்வர்யம்,
பதி புத்ரன்பந்துக்கள் , வீடு எல்லாவற்றையும் விட்டு விட்டு
உனது திருவடியையே நம்பி வந்திருக்கிறோம்;
நாங்கள் உனது பக்தர்கள்; உன்னால், கைவிடத்தக்கவரல்ல;
நீ, எங்களுக்கு பதி தர்மத்தைப்பர்றிச் சொன்னாய்;
புத்திர புத்ரிகளை போஷிப்பது என்று ஸ்திரீகளின் தர்மத்தைச் சொன்னாய்;
ரொம்ப சரி; இந்த சுஸ்ருக்ஷை யாவும் உமக்கே செய்ய வந்திருக்கிறோம்;
ஏன் என்றால், நீர் சர்வ ரக்ஷகர்; நீரே சர்வ பந்து; நீரே எங்களுக்கு எல்லாம் ஆத்மா—பரமாத்மா;
உம்மிடம் ப்ரியம் கொள்வது, உம்மைப் பூஜிப்பது,
இவைதான் எங்களுக்கு முக்கியம்;
ஹே, ஆத்மந்
உம்மிடம் நித்யமும் ப்ரியம் செலுத்துவது—–,
ஹே, அரவிந்த நேத்ர , —–மரத்தின் வேருக்குத் தண்ணீர் வார்ப்பது போல
பதி,பிள்ளைகள், பந்துக்கள் –இவர்களிடம் ப்ரியம் செலுத்துவதால் என்ன பலன் ?
உம்மிடமே, எங்களின் பக்தி வெகு காலமாக வேரூன்றி இருக்கிறது;
உம்மால், எங்களது ஹ்ருதயம் அபஹரிக்கப் பட்டு இருக்கிறது;
இவற்றைஎல்லாம் இல்லாதபடி செய்து விடாதீர்;
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த எங்களை,
உம்மிடமுள்ள அன்பே ,அவைகளைச் செய்ய விடாமல் தடுத்து விட்டது;
அப்படி இருக்க, எங்களை வீட்டுக்குத் திரும்பிப் போகுங்கள் என்று சொல்வதில்
நியாயமில்லை; உம்முடைய திருவடிகளையே அடைய வேண்டும் என்று
இருப்பவர்களைத் திரும்பவும் வீடுகளுக்குச் செல் என்று நீர் சொல்வது சரியல்ல;
உமது கடாக்ஷ அம்ருதப் பார்வையால் உமது அதரங்களாகிய பூரண குடங்களிளிருந்து,
ஆசையாகிற அம்ருதத்தை எங்கள்மீது தெளிப்பீராக;
உமது சிநேகப் பார்வைகள், உமது வேணுகான கீதங்கள் ,
எங்கள் ஹ்ருதய ஆசைகளைத் தூண்டிவிட்டு,அவை அக்னியைப்போல
உக்ரமாக எரிந்து கொண்டு இருக்கின்றன; உம்மை விட்டுப் பிரிந்தால்,
அந்தத் துக்கமாகிய அக்னியால் கொளுத்தப்பட்டு,
உமது பாதங்களையே நினைத்து, நினைத்து, த்யானயோகத்தால்,
ப்ரியசகிகளைப்போலவும், ப்ரிய தோழர்களைப் போலவும்
உம்மையே திரும்பவும் வந்து அடைவோம்.

ஹே—அம்புஜாக்ஷ—காத்யாயினி வ்ரத நாளிலிருந்து,
எந்த உமது பாத ஸ்பர்சம் ஏற்பட்டதோ, எந்தப் பாதங்களை
ரமாதேவி மிக்க ச்ரத்தையுடன் ஆச்ரயித்துப் பூஜை செய்கிறாளோ
அந்தப் பாத மூலங்களை —-நாங்கள் சதா பூஜிக்கிறோம்.
நாங்கள், உம்மையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;
உமது ஹ்ருதயத்திலும் இடம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்;
எந்த உமது பாத ரேணுக்களை—-ஸ்ரீ தேவியாகிய மஹாலக்ஷ்மி —-
துளசி தேவியுடன் போட்டி போட்டுக்கொண்டு –அடைந்து இருக்கிறாளோ,
அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி உம்முடைய வக்ஷஸ் தலத்தில் அரைவினாடி கூட
விடாமல் வசித்துக் கொண்டு இருக்கிறாள்.
நாங்கள் உமது திருவடிகளையே பஜிக்கிறோம்; நாங்கள் ப்ரபன்னர்கள்,
உமது திருவடிகளையே ஆச்ரயிப்பவர்கள்.
எங்கள் துக்கங்களை அறவே அழிக்கும்
ஹே–பிரபோ—எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
எங்கள் உபாசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்;
உமது ஸுந்தர ரூபம்—-உமது ஸ்மிதம்—-கள்ளப்பார்வையின் கடாக்ஷம்—
-எங்களைப் பித்தாக்கி இருக்கின்றன;
ஹே,புருஷபூஷண ——உமக்குச் ஸேவை செய்யும் பாக்யத்தை அளிப்பீராக;
உமது திருமுக அழகு—-கம்பீரம்—-மகரகுண்டலங்கள்—-வனமாலை—-
-புஜதண்டயுகம்—–உமது வேணுகானம்—மதுரமான குரல்—-இவைகளால்
மோஹிக்கப்பட்டு விட்டோம் , நாங்கள் மாத்ரமல்ல,
மூன்று லோகங்களும் பசுக்களும்,பட்சிகளும்,மிருகங்களும்,தேவர்களும்,
தேவ ஸ்திரீகளும், யக்ஷ கந்தர்வ ஸ்திரீகளும், ஏன்—ஜடங்களான மரங்களும்
உம்மிடம் மோஹிக்கப்பட்டு இருக்கின்றனர்;
எங்கள் பயங்களைப் போக்கும் பிரபோ—-
ஆதி புருஷா—அமரர்தலைவா—உம்மைவிட்டு நாங்கள் எங்கே போவோம் ?
ஆர்த்தபந்தோ—உமது வேலைகளைச் செய்ய இஷ்டமுள்ள
தாஸ்யர்களான எங்களைஅநுக்ரஹிப்பீ ராகஹே,கிருஷ்ணா

இவ்வாறுப் பலவிதமாக கோபிகைகள் கண்ணீர்மல்கப் பேசியதும்,
நீ ,உன் ப்ரியமான பார்வையால், பற்கள் மல்லிகைப்பூக்களைப் போல மின்ன,
கலவெனச் சிரித்துக்கொண்டு, வைஜயந்தி மாலையை அணிந்தவனாக எல்லா
கோபஸ்த்ரீகளும் உன்னை சூழ்ந்து இருக்க ,காளிந்தி நதியின் கரையில் உள்ள
பச்சைப் பசேலேன்ற மரங்கள் படர்ந்து உள்ள சமவெளிப் பிரதேசத்தில் பிரவேசித்தாய்
. உன் கைகளை நீட்டிக்கொண்டு, அவர்களைப் பற்றி அணைத்துக்கொண்டு,
கேலிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, உனது மோகனப் பார்வையை
அவர்கள் மீது வீசி ,அவர்களைப் பலவிதமாக ஆனந்தப்படுத்தினாய்.

அதனால், அவர்கள், நீ அவர்கள் வசம் ஆகிவிட்டாய் என்று கர்வம் கொண்டனர்;
பூமியில் வாழும் எல்லா ஸ்திரீகளையும் விட தாங்களே உயர்ந்தவர்கள்
என்று இறுமாப்பு கொண்டனர்; இதை அறிந்த நீ, அவர்கள் கர்வத்தை
அடக்கத் திருவுள்ளம் பற்றினாய்அந்த க்ஷணத்திலேயே,
அவ்விடத்தை விட்டு மறைந்தாய்; அந்தர்த்யானம் ஆனாய்.

29 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————————————

தசமஸ்கந்தம்—நவீன பாணியில் —-அத்யாயம் 30
———————–
கோபிகைகளின் விரஹ தாபங்கள்—-பக்தியின் உச்சம்
—————————————————————————————-

மிகவும் சஹ ஜமாக கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நீ,
அவர்கள் கர்வத்தை அடக்க எண்ணித் திடீரென்று மறைந்து போனதும்,
அவர்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, அப்பப்பா, அதை என்னவென்று சொல்ல !
ஆனால், ஸ்ரீ சுகர் இவற்றைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார் .
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆண் யானையைக் காணாமல், எப்படிப் பெண் யானைகள் விரஹத்தால் தவிக்குமோ,
அப்படி , கோப ஸ்திரீகள் தவித்தார்கள்;
உன்னுடைய ஸ்மித முகம் —மந்தஹாச வதனம்—கண்களின் இனியகடாக்ஷம்,
மனத்தை அள்ளும் பேச்சுக்கள், நடை அழகு, இவைகளை நினைத்து, நினைத்துக்
கதறினார்கள்; காட்டில் அங்குமிங்கும் அலைந்தார்கள்;
உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஹே,அஸ்வத்த மரமே , நந்தகோபனின்செல்வனைக் கண்டீர்களா ?
எங்களைப் பிரேமைக் கடலில் மூழ்கடித்து, சிரித்துப் பேசி விளையாடிய
அந்தப் பிரபுவைப் பார்த்தீர்களா ?
ஹே,அசோக,புன்னாக, நாக , சண்பக மரங்களே, பலராமனுடைய தம்பியாகிய
கிருஷ்ணனைக் கண்டீர்களா ?
துளசி,கல்யாணி, கோவிந்த சரணப்ரியே—-உன்னை எப்போதும்
தன்னுடைய வக்ஷஸ் தலத்தில் தரித்துக் கொண்டு, வண்டுகள் மகரந்தத்துக்காக
அலைந்து உன்னைத் தேடி வருவதைப் போல,
ஸ்ரீ கிருஷ்ணனும் உன்னைத் தேடி வந்தாரா , அவரைப் பார்த்தீர்களா ?
ஜாதி யூதிகே (வாஸனை உள்ள ஒருவகைப் பூ ), மல்லிகைக் கொடியே
மாதவியாகிய மஹா லக்ஷ்மியின் மணாளனான மாதவனைப் பார்த்தீர்களா ?
ஹே, மரங்களே, கொடிகளே ! கிருஷ்ணன் இந்தப் பக்கம் வந்திருக்கும்போது
அவரின் கர ஸ்பர்சம் உங்கள்மீது பட்டிருக்குமே ,
அவர் இந்த வழியாகப் போனாரா ? அவரைக் கண்டீர்களா ?
ஹே, மாமரமே, ஹே பலா மரமே, ஹே ஜம்பூ மரமே, ஹே வில்வ மரமே,
ஹே கடம்பமரமே ஹே இங்கு இருக்கும் மரங்களே , கிருஷ்ணனைக் கண்டீர்களா ?
சீக்ரம் சொல்லுங்கள் .
எங்கள் மனம்,எங்களிடம் இல்லை, அவரிடம் பறி போய் விட்டது;
அவர் பாதங்களை அடையும் வழியைச் சொல்வீர்களா ?
ஹே, பூமியே, நீ செய்துள்ள தவத்தை என்னவென்று சொல்வது
!உன் தேகம் எப்படி உண்டாயிற்று ?
உன் உடலில் உள்ள புல், கொடிகள், முளைகள், எல்லாம்
ஸ்ரீ கேசவனுடைய அங்கங்களின் ஸ்பர்சம் பட்டு, அதனால் உன் தேகம் வந்ததா ?
அவர் வாமனாவதாரம் எடுத்து, திருவிக்ரமனாக வளர்ந்து
உன்னை ஆலிங்கனம் செய்ததால் ஏற்பட்டதா ? வராஹஅவதாரம் எடுத்த சமயத்தில்
உன்னைக் கட்டி ஆலிங்கனம் செய்துகொண்டாரே, அதனால் ஏற்பட்டதா ?
ஹே, பெண்மானே, உன் கண்களின் அழகைப் போல —மிருக நயனீயான
பெண் ஒருத்தியுடன் உங்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காக இந்த வழியே சென்றாரா ?
ஹே,மல்லிகைக் கொடியே, அந்தப் பெண்ணை அவர் ஆலிங்கனம் செய்தபோது,
அவளுடைய ஸ்தனங்களில் தடவியுள்ள குங்குமப் பூச்சுக்கள் ,
அவருடைய வக்ஷஸ் தலத்தில் காணப்பட்டு இருக்குமே,
அந்த எங்கள் பிரபுவைப் பார்த்தீர்களா ?

ஒருகையில் தாமரைப் புஷ்பத்துடனும்,
மற்றொரு கையால் பிரியையான ராதையை அணைத்துக் கொண்டும் ,
அவர் அணிந்து இருக்கும் துளசி மாலையில் உள்ள மகரந்தத்தைப் பருக
தேனீக்கள் அவர் பின்னே ஓடிவர அவர் இங்கு சஞ்சரிக்கும் போது அவரைப் பார்த்தீர்களா ?
ஹே மரங்களைச் சுற்றி ஆலிங்கனம் செய்வது போல வளர்ந்து இருக்கும் கொடிகளே,
கிருஷ்ணனின் விரல்களின் ஸ்பர்சம் உங்கள் மீது பட்டிருக்க வேண்டும்
உங்கள் உடலிலே புளகானந்தம் ஓடி வழிகிறதே ,
அந்த சுக ஸ்பர்சம் கிடைத்ததா ? கிருஷ்ணனைப் பார்த்தீர்களா ?

ஸ்ரீ சுக பிரம்மம் , மேலும் பரீக்ஷித்துக்குச் சொல்கிறார்

இப்படி உன்மத்தம் பிடித்த ,விரஹ தாபத்தால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
உன்னையே நினைத்து உன் லீலைகளை அவர்கள் செய்தார்களாம்
ஒருத்தி தான் பூதனை என்று சொல்ல, இன்னொருத்தி தான் கிருஷ்ணன் என்று சொல்லி ,
பூதனை என்று சொன்னவளை ஸ்தன்ய பானம் செய்து அழிப்பதுபோல் பிதற்றினாளாம்

ஒருத்தி தான் ,குழந்தையாகிய கிருஷ்ணன் என்று சொல்லி, இன்னொருத்தியை சகடாசுரன்
என்று சொல்லி உதைத்தாளாம்
ஒரு கோபிகை , இன்னொருத்தியைத் திருணாவர்த்தன் என்கிற அசுரன் என்று சொல்லி
அவனைக் கொல்ல, ஸ்ரீ கிருஷ்ணன் அசுரன் கழுத்தை கட்டிக் கொண்டதுபோலக்
கட்டிக் கொண்டாளாம்
ஒருத்தி நான் பலராமன் என்று சொல்ல, இன்னொருத்தி நான் கிருஷ்ணன்
என்று சொல்லி அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது போலப் பேசினார்களாம்.
ஒருத்தி தான் கிருஷ்ணன் என்று சொல்லி, இன்னொருத்தியை வத்சாசுரன்
என்று சொல்லி அடித்தாளாம்
இன்னொருத்தி , தான் .பகாசுரன் என்று சொல்ல, இன்னொருத்தி
அவளை நான்தான் கிருஷ்ணன் என்று சொல்லி அடித்தாளாம்.
ஒருத்தி, வெகு தூரத்தில் பசுக்கூட்டம் போவதைப் பார்த்து,
அவற்றை கிருஷ்ணன் எப்படிக் கூப்பிடுவாரோ அப்படிக் அழைத்தாளாம்.
இன்னொருத்தி கிருஷ்ணனைப் போல வேணுகானம் செய்வதாக ,
புல்லாங்குழலை எடுத்து ஊதினாளாம்
ஒருத்தி தன் கையை இன்னொருத்தியின் தோள் மீது போட்டு ,
நடந்துகொண்டே , என் நடை அழகு கிருஷ்ணன் நடப்பதைப் போல
இருக்கிறதா என்று கேட்டாளாம்.
ஒரு கோபிகை, இன்னொருத்தியைப் பார்த்து,
பெண்ணே , இந்தப் பேய் மழைக்கும் பேய்க் காற்றுக்கும் பயப்படாதே
உன்னை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லி,அவளுக்கு மேலாக
தன்னுடைய மேல் வஸ்த்ரத்தைக் குடைபோலப் பிடித்து,
கோவர்த்தனகிரியைத்தூக்கிக் கொண்டு இருப்பதாக சொன்னாளாம்.

ஒருத்தி, இன்னொருத்தியின் சிரசின் மீது ஏறி, நான் பூலோகத்தில்
துஷ்டர்களை அடக்க வந்திருக்கிறேன்; துஷ்ட காளிங்கனே ,
இங்கிருந்து போய்விடு என்றாளாம்.
ஒரு கோபிகை ,மற்றவளிடம் ,
இதோபார் அக்நி, ஜ்வாலையுடன் தாவி வந்துகொண்டிருக்கிறது
கண்களை மூடிக்கொள் காப்பாற்றுகிறேன் என்றாளாம். .
ஒருத்தி ,மலர்மாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு,
,நான் தாமோதரன்; யசோதையாகிய என் அம்மா இடுப்பில் கட்டி இருக்கிறாள்;
இதோபார் ;இந்த இரண்டு மரங்களை வேரோடு சாய்க்கிறேன்
என்று இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்றாளாம்.
இன்னொருத்தி, தாயாகிய அம்மா அடிக்கிறாள் என்று சொல்லி ,
தான் பயப்படுவதைப் போல , இன்னொருத்தியிடம் புலம்பினாளாம்.

இப்படியாக,கோப ஸ்திரீகள் உன்மத்தம் பிடித்து அந்தக் காட்டில்
சஞ்சரிக்கும்போது, அத்ருஷ்டவசமாக , பூமியில்
இரண்டு பாதச் சுவடுகளைக் கண்டார்கள்.
ஆஹா என்று சொல்லி, ஒருத்தி பாதச் சுவடுகளில்
வஜ்ர ரேகை, த்வஜ ரேகை, அங்குச ரேகை இவைகளை அடையாளம் பார்த்து
இந்தப் பாதச் சுவடுகள் க்ருஷ்ணனுடையதுதான் ,
அவர் இந்த வழியேதான் போயிருக்கிறார் என்று சொல்லி,
பாதச் சுவடுகளைத் தொடர்ந்து சென்றார்களாம்.
ஹே—கிருஷ்ணா ! உடனே வருத்தப்பட்டார்களாம்
அந்தப் பாதச் சுவடுகளின் மத்தியிலே, இன்னொரு பெண்ணின் பாதச் சுவடுகளைக்
கண்டார்களாம். ஒரு கையை அவளுடைய தோளின் மீது வைத்துக்கொண்டு,
நீ அவளுடன் நடந்து சென்று இருக்கிறாய் என்று கண்டார்களாம்.

(ஹே–கிருஷ்ணா இந்தக் கோப ஸ்திரீகள் எவ்வளவு பாக்யசாலிகள் !
உன் திருவடிகள் பதிந்த பாதச் சுவடுகளை
அடியேன் கண்களில் ஒற்றிக்கொண்டு,
கோபிகை களுக்கு அனவரதம் நமஸ்காரம் செய்கிறேன் )

ஒரு கோபிகை, ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்ற பெண் யாராக இருக்கும்;
அவள் மிகவும் புண்யம் செய்தவள் , அதனால்தான்
ஸ்ரீ கிருஷ்ணன் அவளால் நன்கு பூஜிக்கப்பட்டு, திருப்தி அடைந்து,
நம் எல்லோரையும் தவிக்க விட்டு, அவளுடன் சென்று இருக்கிறார்;
அந்த அடையாளங்கள்தான் இந்தப் பாதச் சுவடுகள் என்று தீர்மானித்து,
அந்தப் பாதரஜஸ்களை ,இக்கோபிகைத்தன் சிரஸ் ஸில் அணிந்துகொண்டாள்.

இந்தப் பாத ரஜஸ் ஸின் மகிமை அளவிட முடியாதது;
சொல்லில் அடங்காதது ; ப்ரும்மா, சிவன் இவர்களுக்குக்கூடக் கிடைக்காதது
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எந்தத் திருவடிகளை நித்யம் பூஜிக்கிறாளோ ,
அவைகளைத் தரித்துக் கொள்கிறாளோ, அந்தப் பாதச் சுவடுகள் ஆயிற்றே !
அவற்றுடன் கூடவே மஹா புண்யவதியின் பாதச் சுவடுகளும் தெரிகிறதே;
அவள் ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு பூஜித்து ஏகாந்தமாக பஜித்து இருக்க வேண்டும்;
அதனால்தான் ,அவர் ,நம்மையெல்லாம் தவிக்கவிட்டு அப்புண்யவதியுடன்
சென்று இருக்கிறார்;
அவள் ராதை;
அவள் அச்யுதரின் அதர பானம் செய்து இருக்க வேண்டும்;
அவரை ஏகாந்தமாக அனுபவித்து இருக்க வேண்டும்
இப்படியெல்லாம் புலம்பிக்கொண்டே ,பாதச் சுவடுகளைப் பார்த்துக் கொண்டே
செல்லும்போது, திடீரென்று அந்தப் பெண்ணின் பாத அடையாளங்களைக் காணவில்லை;
ஸ்ரீ கிருஷ்ணனின் பாதச் சுவடுகள் மட்டில் தொடர்ந்து பூமியில் அழுத்தமாகக் காணப்பட்டன;
சரி தான்; ராதையின் கோமள பாத சரணங்களில் முள்ளைப் போல
இந்தப் புல் பூண்டுகள் ஹிம்சித்து இருக்க வேண்டும்; அதனை சஹியாமல்,
ஸ்ரீ கிருஷ்ணன், அவளைத் தோளில் தூக்கிக் கொண்டு ,
தான்மட்டும் நடந்து சென்று இருக்க வேண்டும்;

ஹே–சஹிகளே இதோ பாருங்கள் பூமியை—-நன்கு கவனியுங்கள்—-
ஸ்ரீ கிருஷ்ணரின் பாதச் சுவடுகள் மட்டும்தான் தெரிகின்றன;

இப்போது பாருங்கள், பூமியில் புஷ்பங்கள் சிதறிக் கிடக்கின்றன;
பிரபு , அவள்—ராதையின் தலையை நன்கு வாரி புஷ்பத்தால்
அலங்கரித்து இருக்க வேண்டும் ;
இதோ பாருங்கள் இப்போது பிரபுவின் ஏக பாதம்தான் தெரிகிறது;
இப்போது பாதச் சுவடுகளே தெரியவில்லை
என்று, இப்படியெல்லாம்,
ஹே—கிருஷ்ணா!
கோப ஸ்திரீகள்–ஒருவருக்கு ஒருவர் தாங்கள் கண்டதை,
நினைத்ததைப் பரிமாறிக் கொண்டே காட்டில் சென்றனர்.
அங்கே ஒரு இடத்தில் ராதை மட்டும் அழுதுகொண்டே
இருப்பதைக் கண்டனர். கோப ஸ்திரீகள் அவளை நெருங்கி யதும்,
அவள் ஒ வென்று கதறி, உங்கள் எல்லாரையும் விட நான் மேலானவள்;
என்னிடம் அதிகப் பிரேமை செலுத்துகிறார் என்று கர்வமடைந்து
அவரிடம் என்னால் துளிக்கூட இனிமேல் நடக்க முடியாது;
உம்முடைய தோள்களில் தூக்கிக் கொண்டு செல்வீராக;
நீர் விரும்பிய இடத்துக்கு வருகிறேன் என்று நான் சொன்னதும்
அவர்—ஸ்ரீ கிருஷ்ணர்—சரி, தோளின் மீது ஏறிக்கொள் என்று சொல்ல,
நான் தோளில் ஏற முயற்சிக்கும்போது அந்தர் த்யானம் ஆகிவிட்டார்
என்று சொல்லி அழுதாள்.

அவரிடம் எப்படிப் பிரியத்தைச் சம்பாதித்தாள் என்பதையும்,
தன் அகம்பாவ நடத்தையால் அவரால் விடப்பட்டதையும் ராதை
சொல்லிக் கேட்ட கோபிகைகள், அவரை—-அதாவது உன்னை
அங்குத் தேடும் முயற்சியைக் கைவிட்டு
யமுனா நதி தீரத்துக்கே வந்து சேர்ந்தனர்.
உன்னுடைய நினைவால் உன்னைப் பற்றியே விரஹதாபத்தால்
பிதற்றிக் கொண்டு, பசி—தாகம்—-வீடு—பதி—க்ருஹம் —–புத்ரன்—
இத்யாதிகளை மறந்து, உன் மீது அளவில்லாப் பிரேமையுடன் ,
கோபிகைகள் எல்லாரும் சேர்ந்து கீதம் இசைத்தார்கள்—-
அதுவே கோபிகா கீதம் —அடுத்த அத்யாயத்தில் அனுபவிப்போம்

30 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்


Sarvam Sree Hayagreeva preeyathaam1962720_544953575635012_2059050805949410341_n

About the Author

Leave A Response