Dhasamaskantham–naveena paaniyil-adyayam 25 to 28

Posted on Sep 9 2016 - 12:43am by srikainkaryasriadmin

தமஸ்கந்தம் நவீன பாணியில் —-அத்யாயம் —-25
——————————-
கோவர்த்தனகிரிதாரி
——————————
இந்திரனுக்குப் பிரமாதமான கோபம்; தனக்குச் செய்ய வேண்டிய பூஜையை வழக்கம்போலச் ெய்யாமல்,மலைக்குச் செய்ததால் இந்தக் கோபம்.
ஸம்வர்த்தகம் என்கிற மேகக் கூட்டங்களைக் கூப்பிட்டான்;
“”கோபர்களுக்கு மிகவும் மதம் பிடித்து விட்டது;கர்வம் அவர்களுக்கு; கிருஷ்ணன் என்கிற ஒரு சாதாரண மனிதக் குழந்தையின் சொல்லைக் கேட்டு
என்னை அலட்சியம் செய்துவிட்டனர்;
கர்மவசப்பட்ட சாமான்ய மனுஷ்யர்கள்,தங்களைப் பண்டிதர்களாக நினைத்து, சம்சாரத்தைத் தாண்டும் செயல் போல இது இருக்கிறது;
செல்வச் செருக்காலே என்னை அவமதித்து,
அற்ப மானிடப் பையன் —-மூடன்——தன்னைப் பண்டிதன் என்று நினைத்து இறுமாப்புடன் உள்ள இந்தக் கிருஷ்ணனின் பேச்சை நம்பிஎனக்கு அநீதி செய்கிறார்கள்; நீங்கள் கூட்டமாகச் சென்று,பிரளய காலத்தில் எப்படி மழையாகப் பொழிவீர்களோ அப்படி மழையைப் பொழிந்து சர்வ நாசத்தை உண்டாக்குங்கள் “” என்று கட்டளை இட்டான்.

ஹே……கிருஷ்ணா….உன்னை , இன்னாரென்று இந்திரன் அறியவில்லை
. ஸம்வர்த்தகம் என்கிற அந்த மேகக் கூட்டங்கள், இந்திரனின் ஆணைப்படி, அசுர வேகத்துடன் இடியும் மின்னலுமாக தாரை தாரையாக பலத்த காற்றுடன்
ஆலங்கட்டியாக ,கற்களை வர்ஷிப்பதுபோல இடைவிடாமல் மழையைப் பொழிந்தன
. வ்ரஜபூமி முழுவதும் வெள்ளக்காடு ஆகக் காக்ஷி அளித்தது.
கோபர்களும்,கோபியர்களும் , பசுக்களும் நடுநடுங்கினர்;
ஹே கிருஷ்ணா—–ஹே கிருஷ்ணா —உன் பாதங்களைச் சரண் அடைந்தோம்; பக்தவத்சலா —-நீதான் துணை—நீதான் எங்களைக் காக்க வேண்டும் என்று உன்னை அடைக்கலமாக வந்து சரண் அடைந்தனர்;பலத்த காற்று, கல்மழை , வெள்ளப் பெருக்குஇவைகளை நீ பார்த்தாய்.
சரி, இது இந்திரனின் கோபத்தால் விளைந்த செயல் என்று அறிந்தாய். இதற்கு ஒரு மாற்று உபாயம் தேடி ,தங்களை சர்வ லோகங்களுக்கும் அதிபதி
என்று நினைத்து, மூடத்தனத்தினால் எதிர்ப்பவர்களை சிக்ஷிக்கிறேன் என்று சங்கல்பித்தாய்

. யோக சக்தியால் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்தாய்.
சரணம் என்று சொன்னவர்களை—–சரணம் என்று வந்தவர்களை——
காப்பாற்றுவது உன் வ்ரதம் அல்லவா !
இப்படி உனக்குள் சங்கல்பித்து, மழையில் தோன்றி இருக்கும் காளானை எடுப்பது போல ஒரு கையால் கோவர்த்தன கிரியை ,அடித் தளத்தோடு பெயர்த்து எடுத்து,உன்னுடைய இடது கையின் சுண்டு விரலால் தாங்கி , உயரத் தூக்கி, உரக்கச் சொன்னாய்
ஹே–கோபர்களே,கோபியர்களே—-வயதானவர்கள், இளம் சிறார்கள் , பசுக்கள், கன்றுகள் எல்லாரும் உங்கள் உடைமைகளுடன் ,இந்தக் குடையின் கீழே வாருங்கள், உங்களுக்கு எந்தப் பயமும் வேண்டாம்,
மலை நழுவி விழுந்து விடுமோ பலத்த காற்று அடித்துக்கொண்டு போய்விடுமோ ,மழைவெள்ளம் உயிரைப் பறித்து விடுமோ என்கிற எந்தப் பயமும் வேண்டாம், சரணம் என்றவர்களைக் காப்பாற்றுவது
என் வ்ரதம், உங்கள் எல்லாருக்கும் அபயம் அளிக்கிறேன் —-“என்றாய்

உடனே, கோபர்கள், கோபியர்கள் வயதான ஸ்திரீ புருஷர்கள் , நந்தகோபன் யசோதை ரோஹிணீ பசுக்கூட்டங்கள் வண்டிகள் இவர்களின் உடைமைகள் என்று எல்லாமே கோவர்த்தன கிரியின்அடியிலே புகுந்தனர். உன்னுடைய தர்சனம், கடாக்ஷ வீக்ஷிண்யம்
இவற்றாலே அவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் பசி இல்லை;தாகம் இல்லை;. மிகவும் சௌகர்யமாக , ஒருநாள், அல்ல,
இருநாட்கள் அல்ல—–ஏழு நாட்கள், கோவர்த்தன மலையின் அடியில் –உன் திருவடி நிழலில் , எவ்வித பாதிப்பும் இன்றி இருந்தனர்.
( ஹே—கிருஷ்ணா—உன் கருணை வெள்ளத்தின் முன்னே ,இந்திரனின் மழை வெள்ளம் என்ன தீங்கு செய்ய இயலும் !
ஹே—கிரிதாரி—-கிரிதரகோபாலா—-உன்னை ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்—இவை போன்ற ஆபத்துக்களில் இருந்து , நீதான் காப்பாற்ற வேண்டும் )

இந்திரன் கலங்கி விட்டான்; பயத்தால் நடுங்கி விட்டான்;
தன்னுடைய தவறுக்கு வருந்தினான்;
மேகங்களைத் திருப்பிப் போகும்படி உத்தரவிட்டான்.
மழை நின்றது ; காற்று அடங்கியது; சூர்யன் தோன்றினான்
நீ, கோபர்கள் எல்லாரிடமும் , இனிமேல் நீங்கள் வ்ரஜ பூமிக்கு—விருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று சொன்னாய்.

யசோதையும் நந்தகோபனும் ரோஹிணியும் வ்ருத்தர்களானகோபர்களும் கோபிகைகளும் உனக்குத் திருஷ்டி கழித்து,அக்ஷதை புஷ்பங்கள் தூவி ஆசீர்வதித்தனர்.
பலராமனும் ஆலிங்கனம் செய்து ஆசீர்வதித்தான்.
இவற்றைக் கண்ட தேவ கணங்கள் ஆகாயத்திலே
வாத்தியங்களை வாசித்தார்கள். உன்மீது புஷ்பமாரி பொழிந்தார்கள். கோபர்கள் அவர்களும் வண்டிகள், உடைமைகள் பசுக்கள் இவைகளுடன் தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.
நீ, அந்த மலையை , பழைய இடத்திலேயே வைத்தாய்;
இந்த அதி மானுஷச் செயலை எல்லாரும் பார்த்தார்கள்;
அடியேனும் இப்போது மனக் கண்ணால் பார்த்தேன்
( குன்றம் ஏந்திக் குளிர் மழையிலிருந்து கோக்களையும்
கோபர்களையும் காத்த கிரிதாரி—–ஆண்டாள் பாசுரம் இயற்றி ஆநிரை காத்தவனே என்று புகழந்த உன்னை—-
மீரா பூஜித்த உன்னை —எத்தனை தடவை நமஸ்கரித்தாலும் —
அடியேனின் ஆத்மா திருப்தி அடையவில்லை )

நீயும் விருந்தாவனத்தை அடைந்தாய் ஆனந்த பரவசர்களான கோபிகைகள்,
உன்னுடைய பெருமைகளைப் பாடி, உன்னை எப்போதும் போல ஹ்ருதயத்தில் தரித்தார்கள்
25 வது அத்யாயம் நிறைவடைந்தது —–சுபம்

—————————————————————————

தசமஸ்கந்தம்——நவீன பாணியில்—-அத்யாயம்—-26
—————-

ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமைகள்—-நந்தகோபன் கொண்டாடுதல்
—————————————————————————————-
(முக்ய விஷயம் :—- சென்ற அத்யாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணனைச் சரணம் என்று அடையாத
பசுக்களும் கன்றுகளும் ,அசேதனப் பொருட்களும் ,ஸ்ரீ கிருஷ்ணனால் காப்பா ற்றப்பட்டன
என்று பார்த்தோம். இது எப்படி என்று கேட்கிறார்கள்.
காலக்ஷேபம் கேட்டவர்களுக்கு, இதற்கு பதில் தெரியும். )
—————————————————————————————————————————————-
கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்; கோப ஸ்திரீகள் வியந்து போனார்கள்;
உன்னுடைய அமானுஷ்ய செயல்கள் அவர்களைப் பிரமிக்க வைத்தது
.நம்முடைய கண்ணனா இப்படி வியப்பான செயல்களைச் செய்வது ?
இவன் எல்லாக் குழந்தைகளைப்போல சாதாரண பாலகன் இல்லை ;
ஆனால், நினைப்பதற்கே வெட்கப்படும் ஏழைகளான நம்மிடையே இவன் இங்கு வந்து பிறந்து , வளர்வதற்குக் காரணம் என்ன ?
ஏழு வயதுகூட நிரம்பாத சின்னஞ்சிறு பாலகன், ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து,
இடதுகை சுண்டுவிரலால் அனாயாசமாக ஏழுநாட்கள் தாங்கிக்கொண்டு ,நம்மையெல்லாம் பாதுகாத்தான்; ஆச்சர்யம்

சின்னஞ்சிறு சிசுவாக இருந்தபோது, மகாபலம் கொண்ட பூதனையை ஸ்தன்யபானம் செய்யும் பாவனையில், பாதிக் கண்களை மூடிக்கொண்டு ,
அவள் உயிரையே உறிஞ்சி அவளை முடித்தான்; ஆச்சர்யம்

மூன்றுமாதக் குழந்தையாக இருந்தபோது, தொட்டிலில் படுத்துக்கொண்டே ,தொட்டிலுக்கு அடியில் வண்டி—-சகடம் உருவில் ,தன்னைக் கொல்ல வந்திருந்த அசுரனை ,திருவடியால் உதைத்து ,
அவனை அழித்தான்;ஆச்சர்யம்

ஒருவயதுகூட நிரம்பாத சமயத்தில், தரையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணனை, சுழற்காற்று ரூபத்தில் வந்து தூக்கிக் கொண்டுபோய்க் கொல்ல முயற்சித்த திருணாவர்த்தன் என்கிற அசுரனை ,
அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டே ,கழுத்தை நெறித்துக்கொன்றான்; ஆச்சர்யம்

யசோதை தாம்புக் கயிற்றால் கிருஷ்ணனை, உரலோடு கட்டியிருந்த சமயத்தில் ,உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டுபோய் இரண்டு மரங்களுக்கு நடுவில் புகுந்து
உரலை அவற்றின் நடுவே இழுத்து, இரண்டு மரங்களையும் வேரோடு சாய்த்தான்;ஆச்சர்யம்

கோபாலகர்களும் ,பலராமனும் சூழ்ந்து இருக்க, ஒரு அசுரன் கொக்கு வடிவத்தில் வந்து இவனைமட்டில் கொத்தி எடுத்துச் செல்ல, கிருஷ்ணன் அந்தக் கொக்கின்
இரு அலகுகளையும் பிளந்து அந்த அசுரனை முடித்தான்; ஆச்சர்யம்

இன்னொரு சமயம் இதேபோல பசுக்களை மேய்க்கும்போது,கன்றுக்குட்டி உருவில் வந்து இவனைக் கொல்ல நெருங்கிய அசுரனின் இருகால்களைப் பிடித்து விளாமரத்தின்மீது வீசி அந்த அசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்

பலராமனும் கிருஷ்ணனும் பனங்காட்டில் ஒருசமயம் விளையாடிக்கொண்டிருந்தபோது,கழுதை உருவில் வந்து கிருஷ்ணனைக் கொல்ல நெருங்கிய
தேனுகாசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்

ஒரு சமயம்,பிரலம்பன் என்கிற அசுரன் பலராமனால் கொல்லப்பட்டான்;கோபாலகர்கள் காட்டுத் தீயால் சூழப்பட்டு நடுங்கிய வேளையில்
கிருஷ்ணன் இவர்களையும் பசுக்களையும் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றினான்; ஆச்சர்யம்

பிறிதொரு சமயம், சர்ப்பராஜனான காளியனை அடக்கி ,
யமுனையிலிருந்து அவனையும் மற்ற சர்ப்பங்களையும் அகற்றி,யமுாதீர்த்தம் பசு பக்ஷி மரம் மனிதர்கள் யாவருக்கும்
உபயோகப்படும்படி செய்தான் ; ஆச்சர்யம்

இப்போது, ஒரு சுண்டு விரலால் மிகப் பெரிய மலையான கோவர்த்தன கிரியை எடுத்துத் தூக்கிப் பிடித்து ஏழுநாட்கள் அதை—அந்த மலையைக்
குடைபோலத் தாங்கி எங்கள் எல்லாரையும் காப்பாற்றினான்; அதி ஆச்சர்யம்

ஹே நந்தகோபா, ஹே யசோதா—–இந்தக் கிருஷ்ணன் ,உங்களுக்குமட்டில் புத்ரன் அல்ல
, எங்கள் புத்ரனைப்போல அன்புடன் அவனை நாங்கள் நேசிக்கிறோம்;
இவன் சாதாரண பாலகன் இல்லை; அதிமானுஷச் செயல்களைச் செய்கிறான்;
இவன் அந்த பகவான்தான் என்று கோபர்கள் கூறினார்கள்.

அதற்கு , நந்தகோபன்
கோபர்களே,கிருஷ்ணனின் சின்னஞ்சிறு வயதிலேயே , கர்க்கரிஷி இங்கு வந்திருந்து,இந்தக் குழந்தை, ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணத்துடன்
பல ரூபங்களில் பிறந்து இருக்கிறான்; கருப்பு வர்ணத்துடன், இவன் வசுதேவருடைய க்ருஹத்தில் பிறந்தான்;இவனுக்குப் பல ரூபங்கள், பல நாமங்கள் உண்டு ;அவைகளை நான் அறிவேன்; மற்றவர்கள் அறியமாட்டார்கள்; இந்தக் குழந்தை உங்களுக்கு, கோகுல வாசிகளுக்கு நன்மை யை அளிப்பான்;
ஆனந்தத்தை அளிப்பான்; இவனால் உங்கள் அனைவர்க்கும் வரும் கஷ்டங்கள் விலகும்;
ஆபத்துக்கள் அகலும்; இவனிடம் அன்பு செலுத்துபவர்கள் பாக்யசாலிகள்;
அவர்களை எந்த எதிரியாலும் வெல்ல முடியாது;
எவனைக் கீர்த்தனம் செய்வதாலும், கதாம்ருதத்தைக் கேட்பதாலும் எல்லாப் பாபங்களும் தொலைந்து நற்கதி ஏற்படுமோ அவனே உனக்குக் குழந்தையாக வந்து இருக்கிறான்
இப்படியாக,ஸ்ரீ கர்க்காசார்யர் என்னிடம் சொன்ன நாளிலிருந்து,கிருஷ்ணனை என் பிள்ளையாகப் பார்ப்பதில்லை;
சாக்ஷாத் ஸ்ரீ நாராயணனின் அம்சமாகவே பார்க்கிறேன் ;
நம் துன்பங்களைப் போக்க வந்த பிரபுவாகக் கருதுகிறேன்என்று நாத்தழுதழுக்க, மெய்சிலிர்க்க விரித்து ரைத்தான் .

ஹே—-கிருஷ்ணா—-கோபர்கள்
மிக மிக ஆ ச்சர்யப்பட்டார்கள்.
நந்தகோப னையும் யசோதையையும் உன்னையும் மிகவும் கொண்டாடினார்கள்.
உன்னை வேண்டிக்கொண்டார்கள்
ஹே,பிரபோ,எப்போதும் எங்களுக்கு அநுக்ரஹ ம் செய்யவேண்டும்;
இந்திரன் கோபித்து ,இடி மின்னலுடன் பெரிய மழையை உண்டாக்கிஎங்களை அழிக்க முற்பட்டபோது, கோவர்த்தனகிரியை அனாயாசமாகப்
பெயர்த்து எடுத்து ,இடது சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி ஏழுநாட்கள் எங்களுக்கு எவ்வித ஸ்ரமமும் இன்றி எங்களையும் பசுக்களையும்கன்றுகளையும் ரக்ஷித்தீரே
உமக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் என்று கண்ணீர் மல்கஉனக்கு நமஸ்காரங்களைச் செய்தார்கள்

( அந்தக் கோபர்களை அடியேன் நமஸ்கரிக்கிறேன்—–நந்தகோபரையும் யசோதையையும் நமஸ்கரிக்கிறேன்—-அவர்களை முன்னிட்டுஉன்னை ஆயிரமாயிர முறை நமஸ்கரிக்கிறேன் )

26 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————-

தசமஸ்கந்தம்——-நவீன பாணியில்—-அத்யாயம் 27
——————

இந்திரனின் ஸ்துதி—–காமதேனுவின் ஸ்துதி–கோவிந்த பட்டாபிஷேகம்
————————————————————————
வ்ரஜபூமி வாசிகளையும்,பசுக்களையும் , கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து
நீ காப்பாற்றியதைப் பார்த்த காமதேனு என்கிற பசு தேவலோகத்தில் இருந்துஇங்கு உன்னிடம் வந்தது.இந்திரன் யோசித்தான்; தன் செயலுக்கு
மிகவும் வெட்கப்பட்டான்; அவனும் ,நீ தனியாக இருக்கும் சமயத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்து ,தேவ லோகத்தில் இருந்து கீழிறங்கிஉன் இருப்பிடம் வந்தான்.

அவனுடைய தலைக் கிரீடம் பூமியில் படியும்படிகீழே விழுந்துஉன்னை நமஸ்கரித்தான். உன்னை அஞ்சலி செய்தான். ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினான்

ஹே—பிரபோ—–உமது ஸ்வரூபம், விசுத்தஸத்வம்—-
-இந்த உலகம் உம்மிடமிருந்து தோன்றினாலும், அதன் தோஷங்கள் உம்மை அண்டாது;
மனுஷ்யர்களுக்கு ஏற்படும் மறுபிறப்பு, லோபம், தேகத்தையே ஆத்மாவாகக்கண்டு பிரமித்தல் இவை யாவும் சம்சாரிகளுக்கு அடையாளங்கள்;
நீர் பகவான்; உம்மிடம் இந்த தோஷங்கள் கிடையாது;
நீர் சர்வ நியந்தா; தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் சக்தி பெற்றவர்;
நீரே எங்களுக்குப் பிதா;
நீரே எங்களுக்குக் குரு;
நீர்,யாராலாலும் ஜெயிக்கப்பட முடியாதவர்;
உலக க்ஷேமத்துக்காக ,மனுஷ்ய தேகத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்;
நிஜ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறீர்;
மதம்—கர்வம் கொண்ட என்னைப் போன்றவர்களின் கர்வத்தை அழிக்கிறீர்;
நாங்கள்,அற்ப புத்திசாலிகள்; உம்மை அலட்சியப்படுத்தி இருக்கிறோம்;
அதைப் பொருட்படுத்தாமல் ,பிரார்த்திக்கும்போது அபாயத்தை அளிக்கிறீர்;
அதனால்,உம்மிடம் பக்தி மேலோங்குகிறது;
நாங்கள் ஜகத்துக்கு ஈசர்கள் என்கிற அபிமானம் அழிகிறது;
உமது கட்டளையை சிரமேற் கொள்கிறோம்;
கர்வத்தில் மிதந்த எனக்கு, உமது பிரபாவம் எளிதில் புலப்படவில்லை;
அபராதம் செய்துவிட்டேன்;
ஹே—பிரபோ—எங்களை மன்னிப்பீர்களாக ;

மீண்டும் அதே குற்றத்தைச் செய்யாதபடி நல்ல புத்தியை அளிப்பீராக;
உம்மைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன்;
வாசுதேவருக்கு நமஸ்காரம்—கிருஷ்ணருக்கு நமஸ்காரம்;
உமது ரூபம் உமது சங்கல்பத்தால், பக்தர்களை அனுக்ரஹிக்க ஏற்பட்டது;
விசுத்த ஞான மூர்த்தியான உமக்குப் பல நமஸ்காரங்கள்
; உமது சர்வஸ்மைக்கு நமஸ்காரம்;
சர்வத்துக்கும் ஆதிபீஜமாக ,உபாதான காரணமாக உள்ள உமக்கு நமஸ்காரம்;
அனைத்து ஆத்மாக்களையும் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு ஆத்மாவாக
விளங்கும் உமக்கு நமஸ்காரம்; என் அஹங்காரச் செயலாகிற
வ்ரஜா பூமியை நாசம் செய்கிறேன் என்கிறகெட்ட புத்தியைப் பொறுத்துக் கொண்டு,
எனக்கு அருள் புரிவீராக;

என் அஹங்காரம் அழிந்தது; கர்வம் தொலைந்தது; நீரே எனக்கு ஈஸ்வரர்;
நீரே எனக்குக் குரு; நீரே பரமாத்மா; உம்மை நான் சரணமடைகிறேன்;
ரக்ஷியுங்கள்; ரக்ஷியுங்கள்.
என்று பலவாறு துதித்து ,இந்திரன் பிரார்த்தித்தான்.

ஹே—கிருஷ்ணா—நீ,அதற்கு என்ன சொன்னாய் என்பதை ஸ்ரீ சுகர் அருளியதை
உனக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்

ஹே,இந்திரா—உனக்கு நல்ல புத்தி ஏற்பட்டு, எப்போதும் என் சிந்தனையோடு நீ இருக்கவேண்டும் என்பதற்காக இந்த லீலை செய்யப்பட்டது;
எவர்கள் ஐஸ்வர்யத்தால் மதம் பிடித்து அலைகிறார்களோ,என்னைப் பக்தி செய்யாமல் இருக்கிறார்களோ
அவர்களின் பதவியைப் பறித்துக் கீழே தள்ளுகிறேன்;
ஐஸ்வர்யத்தை அழிக்கிறேன்;
இதுவும் என்னால் அவர்களுக்குக் காட்டப்படும் அநுக்ரஹம்;உனக்குக் க்ஷேமம் உண்டாகட்டும்; நீ போகலாம்என்று சொன்னாய்.

( ஹே—-கிருஷ்ணா —-அடியேனும் இந்திரனைப்போல கர்வம்கொண்டுஅலைபவன்தான்; அடியேனையும் சதா உன் சிந்தனையிலேயேஇருக்கும்படி அடியேனை ஆக்கி அருள் புரிய வேண்டுகிறேன் )

காமதேனு என்கிற தேவலோகத்துப் பசு இதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவள், உன் அருகில் வந்து உன்னை நமஸ்கரித்தாள்.
தன் மனத்தால் எதையும் செய்யும் வல்லவளான கோமாதா, தன் சந்தானங்களுடன் வந்து உன்னை நமஸ்கரித்து, ஸ்துதி செய்தாள்.

காமதேனு ஸ்துதி
——————————–
கிருஷ்ண—-கிருஷ்ண—-மஹா யோகின்—-
விஸ்வாத்ம ன்—- விஸ்வ சம்பவ—
அனாதர்களாகிய நாங்கள் உம்மால் காப்பாற்றப்பட்டோம் ;
நீர் எங்களுக்கு நாதர்— சகல லோக நாதர்;
அச்யுதா —உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறோம்—-
சதா எங்களைக் காக்கும்படி வேண்டுகிறோம்;
உம்முடைய க்ருபை, தேவர்கள், சாதுக்கள் கோக்கள் எல்லோருக்கும் கிடைக்கிறது;
அவர்களுடைய க்ஷேமத்துக்காக எங்களுக்கும் க்ருபை செய்வீராக;
நீர்,எங்களுக்கு எப்போதும் பதி;
ப்ரும்மாவினால் கட்டளை இடப்பட்ட நாங்கள், உம்மை,
பசுக்களின் நாயகனாக—-இந்திரனாக வரிக்கிறோம் .
இந்தப்பூவுலகில், நீர் ,எங்களை அனுக்ரஹித்து கோவிந்தனாக இருக்கிறீர்,
பூபாரம் ஒழியப்போகிறது, இதனால், நாங்கள், உம்மை கோவிந்தராக
அபிஷேகம் செய்து வணங்குகிறோம்

இவ்வாறு காமதேனு சொல்லி, தன் பால் அம்ருதவர்ஷத்தால்
உன்னை நன்கு நனைத்தாள். இந்திரன்,ஆகாச கங்கையிலிருந்து,
ஐராவதத்தால் ,புண்ய ஜலத்தை எடுத்து வரச் செய்து,
உன்னை அபிஷேகம் செய்தான்.
தேவமாதாக்களானஅதிதி போன்றவர் உடன் இருக்க,
தேவர்கள் ரிஷிகள் அருகில் இருக்க,
இந்திரன் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான்
.
தும்புரு, நாரதர், வித்யாதரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆடிப் பாடினார்கள்.
கோவிந்தநாமாவைச்சொல்லி ,அடிக்கடிப் பலதடவை சங்கீர்த்தனம் செய்துபுஷ்பங்களால் அர்ச்சித்து அதி சந்தோஷத்துடன் உன் பாதங்களை நமஸ்கரித்தார்கள்.
இந்திரனும், காமதேனுவும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உன்னை அர்ச்சித்து நமஸ்கரித்தார்கள்.

இச்சமயத்தில், மரங்கள் தேனைச் சொரிந்தன; புஷ்பங்களை வர்ஷித்தன;
இவ்விதம் உனக்கு, கிருஷ்ணனாகிய உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது.
உன்னால் அனுமதி கொடுக்கப்பட்டஇந்திரன் மிகுந்த சந்தோஷத்துடன் தேவர்கள் சூழ ,தேவலோகம் சென்றான்.

(ஹே, கிருஷ்ணா —கோவிந்தா—-உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்—-
கோவிந்தா என்று அழைத்த காமதேனுவுக்கு அநேக நமஸ்காரங்கள்—-
பட்டாபிஷேகம் செய்த இந்திரனுக்கு அநேக நமஸ்காரங்கள் )

27 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

————————————————————————————————-

தசமஸ்கந்தம் நவீன பாணியில்—-அத்யாயம் 28
—————————-
ஸ்ரீ கிருஷ்ணன், நந்தகோபரை வருண லோகத்திலிருந்து மீட்டது
—————————————————————————————————-
ஒரு சமயம், நந்தகோபர், வழக்கமான ஏகாதசி வ்ரதமிருந்து, பகவானைப் பூஜித்தார்.
த்வாதசி பாரணைக்காக யமுனா நதியில் தீர்த்தமாடச் சென்றார்.
அவர் ஜலத்தில் இறங்கியதும், வருணனுடைய ஏவலாள் ,நந்தகோபரைஅசுரன் என்று தவறாக நினைத்து, அவரை வருண லோகத்துக்குஇழுத்துச் சென்று விட்டான்,. அசுரர்களின் காலம் இரவு;
இவர் தீர்த்தமாடச் சென்றது பின்னிரவு நேரம்;
இதனை நந்தகோபரும் அறியவில்லை;
நந்தகோபரைக் காணாமல், வ்ரஜ பூமியில் எல்லாரும் கதறினார்கள்.
நீ அந்தக் கதறலைக் கேட்டாய். உடனே உனக்கு, உன் பிதாவருணலோகத்துக்குக்கொண்டுபோகப்பட்டது ,தெரிந்தது.
உடனே, நீ வருண லோகத்துக்குச் சென்றாய்.
உன் விஜயத்தை எதிர்பார்க்காத வருணன்,
உன்னை, மரியாதையுடன் மகத்தான பூஜை செய்து வரவேற்றான்.

“ஹே, பிரபோ—-இன்றுதான் அடியேனின் வாழ்வு சபலம் அடைந்தது; பெரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது; உம்முடைய திருவடிகளைப் பூஜித்து,
சம்சாரக்கடலைத்தாண்டும் பாக்யம் பெற்றேன்;
ஓம் நமோ பகவதே , ப்ருஹ்ம ணே, பரமாத்மனே —–பரமாத்மாவாகிய
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
என்னுடைய சேவகன் ஒரு மூடன்; அகார்யத்தைச் செய்து இருக்கிறான்;
என்னை மன்னியுங்கள், ஹே, பிரபுவே என்னை
அனுக் ரஹியுங்கள் ;
எல்லாவற்றையும் அறிந்த பிரபுவே, கோவிந்த, பித்ரு வத்சல,
உமது பிதாவை அழைத்துச் செல்லலாம் “என்றான்,

ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகர் கூறுகிறார்.
நீ நந்தகோபருடன் திரும்பவும் நந்த க்ருஹம் வந்தாயாம்.
நந்தகோபன் மிக ஆச்சர்யப்பட்டானாம்.
உன்னை, வருண லோகத்தில் வரவேற்ற விவரம் எல்லாவற்றையும்
பந்துக்களிடம் சொல்லி நீ ஈஸ்வரன்தான் என்றானாம்.
அவர்கள் நந்தகோபனிடம் கேட்டார்களாம் இந்தப் பரமாத்மாவாகிய கிருஷ்ணன்,
நம் எல்லாருக்கும் தம்முடைய அழியாத வைகுண்ட ப்ராப்தியை அளிப்பானா ?
தன்னுடைய சங்கல்பத்தாலே நமக்கு நல்ல கதி கிடைக்க அருள்வானா
என்றெல்லாம் கேட்டார்களாம்.

நீ ,உனக்குள் எண்ணமிட்டாயாம்
அவித்யா,காமம், கர்மா இவைகளாலே மனிதன் பலப் பிறவிகள் எடுத்து சம்ஸாரத்தில் மூழ்கி கரையேற வழி இல்லாமல் திண்டாடுகிறான்;
தன்னுடைய சொந்த ஸ்வரூபத்தை உணர்வதில்லை;
இவர்கள் என்னையே நம்பி இருப்பவர்கள் என்று எண்ணி
மஹா கருணையுடன் தமஸ்ஸுக்கு அப்பாற்பட்ட,
உன்னுடைய வைகுண்ட லோகத்தைக் காண்பித்தாயாம்.
எந்த ப்ரஹ்மம் சத்தியமோ க்ஜானமோ, ஆனந்தமோ, அமலமோ,அந்த சனாதனமான பர ப்ரஹ்ம ஜ்யோதிஸ் ஆன நீ,எதனை மஹாயோகிகள் முக்குணங்களைத் தாண்டி —-ஸதா பஸ்யந்தி —-
-ஸதா -பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ —-
அந்த மஹோன்னத ஸ்தானத்தை அவர்களுக்குக் காண்பித்தாய்.
இதனால், அவர்கள் உன்னுடைய பர ப்ருஹ்ம நினைவில் மூழ்கி விட்டார்கள்
.உன்னை நான்கு வேதங்களும் புகழ்ந்து பாடுவதையும்,
தேவர் தானவர்கள் அர்ச்சித்து நமஸ்கரிப்பதையும் பார்த்தார்கள்.
அவர்களை மீண்டும் ஸ்வய நிலையை அடையச் செய்தாய்.

28 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————————————-10501777_699575773443481_3585101567443741460_n

About the Author

Leave A Response